Tuesday, July 31, 2007

அதிகாரப்பரவலாக்கல் மூலமான தீர்வை முன்வைத்தால் போராட்டம் வெடிக்கும்

இனப்பிரச்சினை தீர்வுக்கு அதிகாரப் பரவலாக்கம் மூலமான தீர்வை சர்வ கட்சி குழு முன்வைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும். இலங்கையில் சர்வதேசம் சதித் திட்டங்களை அரங்கேற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஜே.வி.பியின்
முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம் சர்வதேச சதித் திட்டத்தின் ஓர் அங்கமேயாகும். அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான எமது போராட்டம் தொடரும். ஆனால் ஐ.தே.க. வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியமைக்கவும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம் சர்வதேச சதித் திட்டத்தின் ஒரு அங்கமேயாகும். சர்வதேச சதித் திட்டத்துக்கான தேசிய முகவராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மக்களை ஏமாற்றி விட்டது. இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஜே.வி.பி. நடவடிக்கை எடுக்கும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் ஆட்சியினை கைப்பற்றுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். தேசிய சக்திகளைக் கொண்ட மாற்று அரசாங்கமொன்றே நாட்டில் உருவாக வேண்டும். அதற்கான முயற்சியிலேயே ஜே.வி.பி. ஈடுபட்டுள்ளது. இலங்கையில் சர்வதேசம் சதித் திட்டங்களை அமுல்படுத்த நாம் அனுமதிக்க மாட்டோம்.

அரசாங்கத்துக்கு எதிராக ஐ.தே.க. மேற்கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணியும் சர்வதேச சதித் திட்டத்தின் ஓர் அங்கமேயாகும். சர்வதேச சமூகம் ஐ.தே.க. வினை வைத்து இலங்கையினை ஆட்டிப் படைக்க நினைகின்றது. இதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம்.

இன்று நாட்டில் உண்மையான எதிர்க்கட்சியாக ஜே.வி.பியே. செயற்படுகின்றது. எதிர்க்கட்சித்தலைவராக எமது பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்சவே செயற்படுகின்றார். மக்களுக்கான கட்சியாக ஜே.வி.பி.யே திகழ்கின்றது. ஐ.தே.க. வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக செயற்படவில்லை.

இனப்பிரச்சினை தீர்வுக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வுகாண அரசாங்கம் முயன்றால் ஜே.வி.பி. வீதிக்கு இறங்கிப் போராடும். சர்வகட்சி குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தீர்வுத் திட்டமொன்றினை தயாரித்து வருவதாக கூறி வருகின்றார்.

சர்வகட்சி குழு அதிகாரப் பகிர்வின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முற்பட்டால் அதற்கான தீர்வுத் திட்டத்தினை முன்வைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும். இதனை உணர்ந்து அரசாங்கம் செயற்பட வேண்டும். அரசாங்கம் மக்கள் மீது சுமைகளை சுமத்தி வருகின்றது. எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. இத்தகைய நிலை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.

No comments: