Wednesday, August 1, 2007

மத்திய கிழக்கு நாடுகளும் இலங்கைப் பணிப் பெண்களும

மத்திய கிழக்கு நாடுகளும் இலங்கைப் பணிப் பெண்களும்
சட்டத்தரணி மரினா மன்சூர்

இன்று நம் நாட்டில் எங்கும் பரவலாகப் பேசப்படும் விடயம் சவூதி அரேபிய நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிசானா நபீலைப் பற்றியதே. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் எனப்படும் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதே நிரம்பிய ரிசானா எனப்படும் இவ்விளம் பெண், இன்று சவூதி அரேபிய மண்ணிலே 4 மாதக் குழந்தையின் மரணத்திற்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறைக் கைதியாகி உள்ளார்.

இப்பெண்ணின் பரிதாபக் கதை இலங்கையை மட்டுமன்றி, சர்வதேச நாடுகளையும் உலுக்கி விட்டிருக்கிறது. இப்பெண்ணை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட அதேவேளை, சர்வதேச அமைப்புகள் பலவும் குரல் கொடுக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக, ஆசிய மனித உரிமைகள் குழுவின் பங்களிப்பு மகத்தானது.

மத்திய கிழக்கு அரபு நாடுகளின் குற்றவியல் சட்டமானது, பிரெஞ்சு சட்டத்தினையும் ஷரிஆ சட்டத்தினையும் அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட குற்றங்கள் போன்வற்றிற்கு அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது குற்றம் சுமத்தப்பட்டவரே குற்றத்தை ஒப்புக்கொண்டாலோ தீர்ப்பானது மரணதண்டனையே. இச்சட்டத்தின் கீழான தீர்ப்பிற்குட்படுவது இலங்கையர்களுக்கு புதிதல்ல. ஏற்கனவே, இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம் சவூதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் மேற்குறிப்பிட்ட தண்டனைக்கு உள்ளானது யாவரும் அறிந்ததே.

இந்நிலையில், ரிசானா நபீலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனைத் தீர்ப்பு இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதென்றால் அதற்குத் காரணங்கள் பல. அவற்றை விரிவாக ஆராய முன் நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தேடிச் செல்லும் எத்தனை ரிசானாக்கள் வெவ்வேறு விதமான துன்பங்களையும் தண்டனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுவே.

ஒவ்வொரு வருடமும் சுமார் இரண்டு இலட்சம் இலங்கையர் மத்திய கிழக்கிற்கு வேலை வாய்ப்புத் தேடிச் செல்கின்றனர். இவர்களில் 60 வீதமானோர் வீட்டுப் பணிப் பெண்கள். இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்பவர்கள் அனைவரும் துன்பம் அனுபவிக்கின்றனர் என்பதல்ல. சிலர் தமது இரண்டு வருட சேவைக்காலத்தின் போது எவ்வித சிரமங்களுக்கோ, துன்புறுத்தலுக்கோ உள்ளாகாது சேவைக்கால சம்பளத்தினையும் மாதா மாதம் பெற்றுக் கொண்டு நலமே நாடு வந்து சேருகின்றனர். இன்னும் சிலர் இரண்டு வருட சேவைக்காலத்திற்குச் சென்றாலும் கூட, தாங்கள் பணிபுரியும் வீட்டுச் சொந்தக்காரர்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற்று பல வருடகாலம் ஒரே வீட்டில் சேவை புரிந்து மிகச் சிறந்த நிலையில் உள்ளனர்.

ஒரு சிலரின் நிலை இவ்வாறிருக்க, மற்றைய சிலரின் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது. மாதக் கணக்காக மாத்திரமன்றி, வருடக் காணக்காக சம்பளம் பெறாதவர்களின் தொகை அதிகம். வீட்டு வேலைகளில் ஏற்படும் சிறு தவறுகளுக்காக வேதனை தரும் தண்டனைகளை வீட்டுச் சொந்தக்காரர்களினால் அனுபவிக்கும் பணிப் பெண்களின் கதை சோகம். இவற்றை எல்லாம் விட பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பெண்களின் நிலையோ சொல்லில் அடங்காதவை.

இவ்வாறான நிலைமைக்கு யார் காரணம்? வறுமையா, அல்லது அவ்வறுமையை விரட்ட வேண்டி திருமணம் முடியாத பெண்களைக்கூட எவ்வித தயக்கமும் இன்றி வேலை தேடி வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் அப்பெண்ணின் குடும்பத்தினரா? அல்லது தங்களின் உழைப்பிற்காக சுயநலமாக செயற்படும் சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களா? அதுவும் இல்லை என்றால், தனது நாட்டுக்கு அதிகளவு வருமானத்தை ஈட்டித்தரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் மூல காரணமான இப்பணியாட்களின் நலனைப் பாதுகாக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசாங்கமா? மேற்கூறப்பட்ட காரணங்கள் அனைத்துமே ஒன்றாக பொறுப்பேற்க வேண்டுமே தவிர, ஒரு தனி நபரையோ, நிறுவனத்தையோ அல்லது அரசாங்கத்தையோ தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்வது முறையல்ல.

மேற்குறிப்பிட்ட காரணங்களில் அடங்குபவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் கடமையை உணர்ந்து அதற்கேற்ப செயற்படுவார்களாயின், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபுரியச் செல்லும் நம் நாட்டுப் பெண்கள் அந்நாடுகளில் முகம் கொடுக்க நேரிடும் பிரச்சினைகள் கணிசமான அளவில் குறைவடையும்.

உதாரணமாக, ஒரு பெண்ணை வெளிநாட்டிற்கு தொழில் புரிய அனுப்பும் போது அப்பெண்ணின் குடும்பத்தினராலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராலும் கருத்திற்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்களில் ஒன்று, அப்பெண்ணின் வயதும் பக்குவத்தன்மையுமாகும். அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வயது இருபத்து இரண்டாக இருந்தாலும் நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை. அறிமுகமே இல்லாத ஒரு தேசத்தில், முன் பின் அறிந்திராத மக்கள் மத்தியில், இதுவரை கேட்டிராத மொழி, பழக்க வழக்கங்களுக்கு நடுவே ஒரு பெண் தொழில்புரியப் போகின்றாள் என்றால் அதற்கு எந்தளவு மனப் பக்குவம் வேண்டும் என்று ஊகிக்க முடியும். இருபத்து இரண்டு வயதில் கூட மனதளவில் பக்குவப்படாத பெண்கள் பலபேர் நம் நாட்டில் இருக்கின்றபோது மிகவும் வயது குறைந்த பெண்களை அவர்களின் வயதைக் கூட்டி பொய்ச் சான்றிதழ் கொடுத்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவைப்பது மிகப் பெரும் தவறாகும். இவ்வாறான மனப்பக்குவத்தைக் கருத்திற்கொண்டுதான் இந்தியா போன்ற நாடுகள் தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் தம் பெண்களின் குறைந்த வயது முப்பத்தைந்து என நிர்ணயித்துள்ளன.

அடுத்ததாக கருத்திற்கொள்ள வேண்டிய விடயம், தொழில் புரியச் செல்லும் நாட்டு மக்களது வாழ்க்கைத் தரம். அபிவிருத்தி அடைந்துவரும் நாடான இலங்கையில் நகரங்களை விட கிராமங்களே அதிகம். இக்கிராமங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து வெளிநாட்டிற்கு வேலை தேடிச் செல்லும் பெண்களில் பலர் கொழும்பிற்கே ஓரிரு தடவைகள் தான் வந்திருப்பர். அது கூட வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்காகவே இருக்கும். இப்படிப்பட்ட ஒரு பெண் மத்திய கிழக்கு நாடுகளின் பல மாடிகளைக் கொண்ட மிக விசாலமான ஆடம்பர இல்லங்களுக்கு பணிபுரியச் சென்றதும் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றாள்.

ஓரிரு வாரங்களிலேயே வேலை செய்ய முடியாமல் சோர்ந்து போகின்றனர். இதன் விளைவு அவ்வீட்டுச் சொந்தக்காரர்களின் கோபத்துக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகுதல். இந்நிலைமையைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஒன்று, அந்நாடுகளைப் பற்றியும் அந்நாட்டு மக்களது வாழ்க்கை முறைகளைப் பற்றியும் அங்கு பணிபுரியச் செல்வோருக்கு தெளிவான விளக்கத்தை அளித்தல்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபுரியப்போகும் பெண்களுக்கான பயிற்சிநெறி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் அளிக்கப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு வழங்கப்படும் இப்பயிற்சிநெறியின் போது சமையல் முறை, நவீன மின் இயக்கக் கருவிகளின் மூலம் மேற்கொள்ளப்படும் வீட்டுப் பணிகள், அன்றாட வாழ்க்கையில் பிரயோகிக்கும் அரபு வார்த்தைகள் போன்றன பிரதானமாக பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்பயிற்சி நெறியானது மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். இரண்டு வருட ஒப்பந்தத்தில் பணிபுரியச் செல்லும் இப்பெண்களுக்கு இரண்டு வாரப் பயிற்சி போதுமானதல்ல. பயிற்சிக்காலத்தைக் கூட்டுவதோடு முக்கியமான சில விடயங்கள் இப்பயிற்சி நெறியில் சேர்த்துககொள்ளப்படல் வேண்டும். அவைகளில் ஒன்று, மேற்கூறப்படட் முறையிலான அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை பற்றிய விளக்கவுரையாகும். இவ்விளக்கமானது திரைக் காட்சிகளின் மூலமான விளக்கமாக இருத்தல் அவசியம். அடுத்ததாக பயிற்சி அளிக்கப்பட வேண்டிய மிக முக்கிய விடயம், தற்பாதுகாப்பினைப் பற்றியதாகும். தொழில்புரிவதற்காகச் செல்லும் நாட்டில் தனது உடலுக்கோ, உயிருக்கோ அல்லது தன் உடைமைகளுக்கோ ஏற்படக்கூடிய தீங்குகள், அவை ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் பற்றிய விரிவான விளக்கமும் அறிவுறுத்தல்களும் பயிற்றுவிக்கப்படல் மிக அவசியமாகும்.

அந்நிய நாட்டில் தனக்கு ஒரு அநீதி இழைக்கப்படும் போது, தான் நாட வேண்டிய ஒரே இடம் அந்நாட்டில் இருக்கும் தனது நாட்டுத் தூதுவராலயம் என்பதனை வெளிநாடு செல்லும் ஒவ்வொருவரும் மனதில் வைத்திருத்தல் வேண்டும்.

அநேகமான மத்திய கிழக்கு நாடுகளில் அங்கு வேலைக்குச் செல்பவர்களின் கடவுச்சீட்டானது அவர்களது தொழில் தருநர்களினால் எடுத்துவைத்துக் கொள்ளப்படுவது வழக்கம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அக்கடவுச்சீட்டின் பிரதி ஒன்றை தன்வசம் வைத்திருப்பது வேலைக்குச் செல்பவர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். கடவுச்சீட்டின் பிரதி மாத்திரமன்றி, தனது தொழில் சம்பந்தமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களின் பிரதிகளையும் தன்வசம் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு மாத்திரமல்லாது, தனக்கு ஏதும் தீங்கு அல்லது அநீதி இழைக்கப்பட்டு அதன் காரணமாக அந்நாட்டிலுள்ள தனது தூதுவராலயத்திற்குப் பாதுகாப்பு தேடிச் செல்கையில், மேற்குறிப்பிட்ட பிரதிகளை தன்வசம் எடுத்துச் செல்லல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத ஆவணங்களாக அமையும்.

தொழில் நிமித்தம் தன் நாடு விட்டு பிறநாடு செல்லும் தொழிலாளியின் நலன்களை அந்நாட்டிலே பாதுகாக்கவென பல சர்வதேச சட்டங்கள் உள்ளன. சர்வதேச தொழிலாளர் ஒன்றியம் (ஐஃ?), சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International)போன்றவை இவற்றிற்காகவே செயற்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பு உயர்சபையின் செயலாளர் நாயகத்தினால் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினெட்டாம் திகதி வரையப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஆவணமானது வெளிநாடுகளுக்கு தொழில்புரியச் செல்பவர்களின் நலனை மாத்திரமல்லாது, அவர்களது குடும்ப அங்கத்தவர் நலனையும் சகல விதத்திலும் பாதுகாப்பதாக அமைந்திருக்கின்றது.

வெளிநாடுகளில் தொழில்புரியும் தன் நாட்டுப் பிரஜைகளுக்கு ஏதேனும் தீங்கு அல்லது அநீதி வேலைபுரியும் நாட்டிலே இழைக்கப்பட்டால் அதற்கெதிராக தன் பிரஜை சார்பில் சட்டரீதியாக பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் வாதாடுவதற்கும் தன் பிரஜையின் உரிமைகள் அல்லது சலுகைகள் மறுக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் தன் பிரஜைக்கு நீதியான பாரபட்சமற்ற தீர்ப்பு அக்குறிப்பிட்ட நாட்டிலே கிடைக்காது என்று கருதுகின்ற பட்சத்தில், குறிப்பிட்ட வழக்கினை சர்வதேச நீதிமன்றத்தில் கேட்டுரைக்கும்படியான சகல விதமான உரிமைகளையும் அனைத்து நாடுகளுக்கும் வழங்கி இருக்கும், வியன்னா சாசனம் எனப்படும் ஆவணம் 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தேடிச் செல்வோருக்கு பாதுகாப்பு அளிக்க பல சட்டங்களும் விதிமுறைகளும் அமுல்படுத்தப்பட்டிருக்கையில், அவற்றைப் பற்றிய அறிவினைப் பெற்று தனிநபர்கள் உட்பட அனைத்துத்துறைகளிலும் உள்ள அதிகாரிகளும் தம் கடமைகளை செவ்வனே செய்வார்களாயின், எதிர்காலத்தில் ரிசானாக்கள் போன்ற அப்பாவிப் பெண்களின் பரிதாப நிலை தொடராமல் தடுக்கலாம்.

No comments: