Friday, August 3, 2007

இது எப்படி இருக்கு..................

இலங்கையில் மீண்டும் அனைத்துலகத்தின் திருவிளையாடல் தொடக்கம்
[வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 14:54 ஈழம்] [சி.கனகரத்தினம்]

தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய போர் நகர்வுகள் மேற்கொள்வதைத் தடுத்து மீளவும் அமைதிப் பேச்சு என்னும் சதிவலைக்குள் தமிழர் தரப்பை சிக்க வைக்க தனது திருவிளையாடல்களை அனைத்துலக சமூகம் மற்றும் ஒருமுறை இலங்கைத் தீவில் தொடங்கியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் தம்மை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த இரு இளம் மாணவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்யும் நிகழ்வுகள் மீளவும் அரங்கேறியிருக்கும் இதே கால கட்டத்தில்

தென்னிலங்கை அரசியல் களத்திலும் கள நிலைமைகள் மாற்றமும் ஆட்டமும் காணத் தொடங்கியிருக்கிறது.

மகிந்தவின் அரசாங்கத்திலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறிவிட்டது. முஸ்லிம் காங்கிரசும் வெளியேறும் நிலையில் ஆட்சி கவிழவோ அரசாங்கத்தை ரணில் கைப்பற்றவோ சாத்தியங்களும் யூகங்களும் தொடங்கியிருக்கின்றன.

இது வெறும் தென்னிலங்கை அரசியல் சக்திகளினதோ அல்லது மலையகத் தமிழ் அரசியல் சக்திகளினதோ சுய முடிவானதாக நாம் கருதிவிட முடியாது. கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அனைத்துலகத்தின் திருவிளையாடல்கள் மீண்டும் இலங்கைத் தீவினில் அரங்கேற்றப்பட்டிருப்பதகாவும் அதற்கான ரணில் எனும் நாரதர் தலைமையிலே ஒரு அரசியல் கலகம் உருவாக்கப்பட்டிருப்பதாகவுமே கருத முடியும். நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும் என்று "திருவிளையாடல்" வசனம் ஒருபக்கம் கிடக்க- இந்த நாரதர்களின் கலகமானது தமிழர்களுக்கு எச்சரிக்கை மணிதான் அடிக்க முடியும் என்பதற்கு சாட்சிகளாக அந்த "அமைதி"க்கால நாடகங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதனை இந்த கட்டுரையின் இறுதியில் காண்போம்.

சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற காலத்துக்குப் பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஓய்ந்து கிடந்துவிடவில்லை. ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா, சீனா, நோர்வே உள்ளிட்ட பல நாடுகளுக்கும் தொடர்ச்சியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

சிறிலங்காவின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மகிந்தவை விட ரணிலையே நோர்வே உத்தியோகப்பூர்வமாக அழைத்துப் பேசியது.

நோர்வே பயணத்தை நிறைவு செய்த பின்னர் இந்தியாவுக்குச் சென்று நோர்வேக்கும் இந்தியாவுக்கும் இடையே தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவியவர் ரணில்.

இப்படியாக அனைத்துலகத்தின் தெரிவாக ரணில் ஏன் இருக்கிறார்?

மகிந்த ராஜபக்ச போர் நடவடிக்கையை மேற்கொள்ளும் மனோநிலை கொண்டவர். போர் நகர்வுகள் உச்சத்தை அடையும் நிலையில் புலிகளின் பதில் நடவடிக்கையும் தொடங்கும். முப்படைத் தாக்குதல்களுடன் புலிகள் களத்தில் இறங்கும்போது சிறிலங்காவினால் எதிர்கொள்ள இயலாமல் போய் புலிகளின் கை ஓங்கும் என அச்சப்படுகிறது அனைத்துலகம்.

கிழக்கிலிருந்து புலிகள் பின்நகர்ந்த நிலையில் வடக்கு கள முனைகளில் உள்ள புலிகளின் போர் அணிகள் எப்போது வேண்டுமானாலும் முன்னரங்கை விட்டு பாயலாம் என்று அனைத்துலக ஊடகங்களும் சிறிலங்கா ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் புலிகள் இராணுவ ரீதியாக வெற்றி பெற்று விடுவதைத் தடுக்கும் வகையில் அனைத்துலகத்தின் திருவிளையாடல்கள் இப்போது இலங்கைத் தீவில் தொடங்கப்பட்டிருக்கலாம்.

சிறிலங்காவில் ரணில்- சந்திரிகா என்ற முன்னைய பாத்திரங்களைப் போல்

பிரதமராக ரணில்- அரச தலைவராக மகிந்த ராஜபக்ச என்ற அரசியல் அரங்கை உருவாக்க அனைத்துலகம் விரும்பக்கூடும்.

மக்களுக்காக- மக்களின் நலனுக்காக என்று சொல்லப்பட்டு எழுதப்பட்ட "மங்களவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்" குறிப்பிடப்படும் பிரதான அம்சமாக அதாவது "மக்கள் நலன் (?)" அம்சமாக "யார் பிரதமர்? யார் உப பிரதமர்" என்று தீர்மானித்துக் கொண்டார்கள் என்ற சரத்திலிருந்தும் அனைத்துலகத்தின் திருவிளையாடல் போக்கினை நாம் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

இதற்கும் அப்பால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் முடிவானது சுயமானதாக இருப்பதற்கில்லை. இந்திய வெளிவிவகாரத்துறையின் வழிகாட்டுதலுடன் இயங்கி வரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இப்போதும் மகிந்தவை விட்டு வெளியேறுவதற்கான சமிக்ஞையை இந்தியாவிடமிருந்தே பெற்றிருக்கும் என்பதனை மறுப்பதற்கில்லை. ஏனெனில் இலங்கைத் தீவின் போர் வெடித்து புலிகள் கை ஓங்கிவிட்டால் என்ன செய்வது என்ற "காய்ச்சல்" இந்தியாவுக்கு இருக்கலாம்.

அரசியல் கள எதிர்கூறல்கள் ஒருபுறமிக்க- "அமைதி"க்கால நாடகங்களைப் பார்ப்போம்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையுடன் அனைத்துலக ஆதரவுடன் அனைத்துலகத்தின் மீது நம்பிக்கை தமிழர் தரப்பானது, அனைத்துலகத்தின் தெரிவாக இப்போதும் உள்ள ரணிலுடன் "யுத்த நிறுத்த ஒப்பந்தம்" செய்து கொண்டது.

தசாப்த காலங்களாக அவதிப்படும் தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற அனைத்துலகத்தின் மீது நம்பிக்கை வைத்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தமிழர் தரப்பு கைச்சாத்திட்டது.

ஆனால் நடந்தது என்ன?

அந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்பதுடன் அனைத்துலகமும் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்குள்ளே மறைத்து வைத்த சதிகள்தான் எத்தனை எத்தனை...

மீள ஒரு முறை அந்தச் சதிகளை நாம் பார்ப்போம். இதுவும் கூட அதே தென்னிலங்கைச் சக்திகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களே.

"ரணிலின் உருவாக்கமே கருணா குழு- ஐ.தே.க.எம்.பி. நவீன் பெருமிதம்- பிரபா போருக்குத் தயாரானால் எதிர்க்க அமெ.-இந்தியப் படைகள் ஏற்பாடாம்"

-நுவரெலியா தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் திசநாயக்க (காமினி திசநாயக்கவின் மகன்) கூறியதை 2005 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் நாள் "உதயன்" நாளேடு முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து

“Karuna is a product of the peace process for which the UNP had made the bulk of the contributions.”

"கருணா என்பது அமைதி முயற்சிகளின் உருவாக்கம். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பாரிய பங்களிப்பைச் செய்திருக்கிறது"

- 2005ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் கொழும்பிலிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" நாளேட்டின் ஊடகவியலாளர் சம்பிக்க லியனராச்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக அப்போது பதவி வகித்தவரும் தற்போதைய மகிந்த அரசாங்கத்தில் அமைச்சராக உள்ளவருமான "மிலிந்த மொறகொட"தான் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்தார்.

அதேபோல் கருணாவை நாரதர் ரணில் உருவாக்கியது தொடர்பாக "லங்கதீப" வெளியிட்ட செய்தியை "புதினம்" கடந்த பெப்ரவரி 2006 ஆம் நாள் வெளியிட்டது.

"ரணிலின் பயங்கரமான குள்ளநரித்தனத்தினாலேயே பிரபாகரன் கருணாவை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று மாவீரர் நாள் உரையின் போது அன்ரன் பாலசிங்கம் தெரிவித்திருந்தார். பிரபாகரனுக்கும் கருணாவிற்கும் இடையில் பிரச்சினைகள் இருப்பதனை சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 2003 ஆம் ஆண்டிலேயே ரணில் அரசாங்கம் அறிந்திருந்தது. அந்தப் பிரச்சினை உச்சக்கட்டத்தையடைந்து பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் வரையே ரணில் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகள் தயாரித்த இடைக்கால நிர்வாக சபை யோசனை பேச்சுவார்த்தைக்கு எடுக்கப்படும் நேரத்திலேயே இந்தப் பிரச்சனை பேச்சுவார்த்தை மேசைக்கு வரவிருந்தது. வடக்கிற்கும் கிழக்கிற்கும் ஒரு இடைக்கால அதிகாரம் சபை என்பது முடியாது. கிழக்கிற்கென எனக்கு தனியாகவொரு அதிகார சபை தேவை. இதற்கு எனது தலைவர் விரும்பாவிடில் நான் தலைவரிடமிருந்து விலகி கிழக்கிற்குத் தலைமை தாங்குவேன். பேச்சுவார்த்தை மேசையில் இப்படிக் கூறுவதற்காக கருணா காத்திருந்தார். அப்படி நிகழ்ந்திருந்தால் முழு உலகத்தின் முன்பாக பேச்சுவார்த்தை மேசையில் விடுதலைப் புலிகள் இரண்டாக பிளவுப்பட்டிருப்பார்கள்."

-என்று "லங்காதீப" எழுதியது உண்மையில்லாமல் இல்லை.

ஏனெனில்

"ரணிலுக்கு 8 இலட்சம் தமிழ் மக்கள் மட்டும் வாக்களித்திருந்தால் அனைத்துலகத்தின் முன்பாகவே அவர்களின் ஈழக் கனவைத் தகர்த்திருப்போம்" என்று ஜூலை 31, 2007 ஆம் நாள் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல பகிரங்க ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

ஆக அமைதிப் பேச்சுக்கள் என்பது அல்லல்படும் தமிழர்களுக்குத் தீர்வைத் தருவதற்கு அல்ல. அரசியல் சதிகளை அரங்கேற்றும் விளையாட்டுக் களம் போலும்!

தமிழ் மக்களுக்கு தலைமைத்துவமாக உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு அமைதிப் பேச்சுகள் எனும் முட்டுக்கட்டையும் போட்டு அதே தமிழர் தரப்பை எந்தந்த வகையில் பலவீனப்படுத்தலாம் என்பதற்காகவும் ரணில் எனும் துருப்புச் சீட்டை தற்போதும் அனைத்துலகம் கையில் எடுத்துள்ளது.

மனித உரிமைகளுக்காகவும் நீதி நியாயங்களுக்காகவும் கண்ணீர் விட்டு கசிந்துருகும் இந்த அனைத்துலக சமூகமானது, பாதிக்கப்படுகிற மக்கள் விரும்புகிற ஒரு தீர்வை விழுங்கிச் செரிமானிப்பதில்தான் என்ன தயக்கமோ
http://www.eelampage.com/?cn=32865

No comments: