Tuesday, August 28, 2007

சிறிலங்காவின் வரலாற்றில் மகிந்தவே மிகவும் கேவலமான அரச தலைவர்: "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்" - இன்னுமொரு ஊடக உத்தி??????

சிறிலங்காவின் வரலாற்றில் மகிந்தவே மிகவும் கேவலமான அரச தலைவர்: "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்"
[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007, 05:52 ஈழம்] [பி.கெளரி]

அரசியல் அதிகாரங்களின் செறிவாக்கம் ராஜபக்ச குடும்பத்திடமே இருப்பதால், சிறிலங்காவின் வரலாற்றில் இந்த ஜனநாயக நாட்டை ஆட்சி செய்த தலைவர்களில் மகிந்த ராஜபக்சவே மிகவும் கேவலமான தலைவராக இருக்கலாம் என்று "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.

அந்த ஏட்டின் பத்தி எழுத்தாளர் ஹென்றி சூ எழுதிய பத்தியின் தமிழ் வடிவம்:

நாட்டில் உள்ள அத்தனை மக்களினது நடவடிக்கைகளும் ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளாக கிட்டத்தட்ட மாறிவிட்டது. ஏனெனில் அவரது குடும்பமே நாட்டை ஆள்வதுடன், உள்நாட்டுப் போரையும் நடத்தி வருகின்றது.

இதன் நடுவே ராஜபக்சவின் நான்கு சகோதரர்கள் ஜனநாயக வழிகளில் தேர்ந்தெடுக்கப்ட்ட சிறீலங்கா அரசின் மிகவும் அதிகாரம் மிக்க பதவிகளில் உள்ளனர். இவர்களில் எல்லாவற்றிற்கும் நாயகனாக உள்ள அரச தலைவரும் அடங்குவார்.

முக்கிய பதவிகளுக்கு தனது சகோதரர்களை நியமித்ததிற்கு அப்பால், நாட்டின் தேசிய வரவு-செலவு திட்டத்தில் 70 விகிதத்தை தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் மகிந்த உறுதி செய்துள்ளார். இது புருவத்தை விரியச் செய்யும் தொகையாகும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மகிந்தவே அரசின் மிகவும் பெரும் பதவிகளான பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களுக்கு தலைவராக உள்ளார். கடந்த வருடம், நாட்டின் தேசிய செலவீனங்களில் பாதுகாப்பு மட்டும் 19 விகிமாக இருந்தது. போர் நிறுத்தம் முறிவடைந்து அரச படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பமாகியதனால் பாதுகாப்பு இவ்வாறு அதிகரித்துள்ளது.

அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்த மோதல்களுக்கான திட்ட வகுப்பாளர் மிகவும் இராணுவ சிந்தனை உள்ள முன்னாள் இராணுவ அதிகாரியான கோத்தபாய ராஜபக்ச ஆவார். பசில் ராஜபக்ச அரச தலைவரின் மூத்த ஆலோசகர், அதாவது அரச தலைவரின் குரலுக்கு பின் உள்ளவர் என இதனை விபரிக்கலாம்.

மகிந்தவின் நான்காவது சகோதரரான சமல் ராஜபக்சவே மகிந்தவைப் போன்று தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் துறைமுகங்கள் வான் போக்குவரத்து அமைச்சராக உள்ளார். சிறிலங்காவின் அரசியல் யாப்பின் படியும், 24 வருட கொடுமையான போரின் படியும் பாதுகாப்பு அமைச்சை அரச தலைவர் தனது பொறுப்பில் வைத்திருப்பது ஒன்றும் புதியன அல்ல.

இருந்தபோதும், ஏனைய துறைகளில் இருந்து பெரும்பாலான அதிகாரங்களை அரச தலைவரும் அவரது சகோதரர்களும் வைத்திருக்கின்றனர். தற்போதைய அரச தலைவர் இரு வருடங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டவர். அவர் தனது அதிகாரங்களை குடும்ப உறுப்பினர்களுக்காக தன்னிச்சையாக பயன்படுத்தியுள்ளதுடன், விதிகளையும் மீறியுள்ளதாக அரசை விமர்சிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகிந்த போருடன் தொடர்புள்ள அமைச்சுக்களையும், திணைக்களங்களையும் நிர்வகிக்கலாம். ஆனால் நிதியை நிர்வகிக்ககூடாது என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பின் பிரகாரம் அவர் எல்லா அமைச்சுக்களையும் தானே நிர்வகிக்கலாம், அது சட்டத்திற்கு முரணானது அல்ல ஆனால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றும் அல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் பெரும்பாலான அதிகாரங்களை அரச தலைவர் தன்வசம் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மகிந்த நிராகரிக்கவில்லை. ஆனால் அதனைப் புறக்கணிப்பதனை தனது தெரிவாக வைத்திருக்கின்றார். இது தொடர்பான பதிலை அரச தலைவர் செயலகத்திடமும், பிரதமரின் காரியாலத்திடமும் நாம் கேட்ட போதும் அதற்கான பதில்கள் தரப்படவில்லை.

மகிந்தவினதும் அவரது சகோதரர்களினதும் கட்டுப்பாட்டில் அரசு உள்ளதை வெளிக்காட்டுவதற்கான குற்றச்சாட்டுக்கள் பல மாதங்களாக சுமத்தப்பட்டு வருகின்றன. அமைச்சரவையில் ஏற்பட்ட விரக்தியினால் அரசின் அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சர்கள் எதிர்த்தரப்பிற்கு இந்த வருடம் தாவியுள்ளனர். இந்த தரப்பு 50-க்கும் மேற்பட்டவர்களை கொண்டுள்ள போதும் அது மகிந்தவினதை விட குறைந்த வலுவுள்ளது.

சிறிலங்காவின் துரதிர்ஸ்டவசமான எதிர்க்கட்சி பெரும் சவால்களை விடுக்க முடியாத நிலையில் உள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரச தலைவரின் வன்முறையான இராணுவ தாக்குதல்கள் அவரை நாடாளுமன்றத்தில் உள்ள தேசியவாத கட்சிகளிடமும், பெரும்பான்மையான சிங்கள மக்களின் சில பிரிவினரிடமும் பிரபலப்படுத்தியுள்ளது.

எனினும் அரசின் எல்லா மட்டத்திலும் உள்ள ஊழல்கள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களின் அதிகாரங்களை தமது சொந்த நலன்களுக்காக மகிந்தவின் சகோதரர்கள் பயன்படுத்துவது தொடர்பான எந்த குற்றச்சாட்டுக்களும் விசாரணை செய்யப்படவில்லை.

இந்த அதிகாரங்களின் செறிவாக்கம் 1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து சிறிலங்கா சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த ஜனநாயக நாட்டை ஆட்சி செய்த தலைவர்களில் மகிந்தவே மிகவும் கேவலமான தலைவராக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

அரச தலைவரும் அவரது சகோதரர்களும் அதிகாரங்களை கொண்டிருப்பது 100 விகித வரவு-செலவு திட்டமும் அவர்களில் தங்கியுள்ளது போன்றது. எனவே அவர்கள் எதனையும் தடுக்க முடியும். இது ஆரோக்கியமானது அல்ல என தேசிய சமாதான சபையின் தலைவரான ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பொதுமக்களும், வர்த்தக சமூகத்தினரும் இதனை ஏற்கவில்லை, அவர்கள் இது தொடர்பாக தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் அவர்களால் அதனை மட்டும் தான் செய்ய முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்களுக்கு இடையிலான தேவையற்ற விவாதங்களை விடுத்து, பொதுமக்களின் கருத்துக்களை ராஜபக்சாக்களுக்கு எதிராக திருப்பி அரசை முடக்க முயல்கின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற அரசிற்கு எதிரான பேரணியில் பல பத்தாயிரம் மக்கள் தலைநகரான கொழும்பில் திரண்டிருந்தனர்.

எனினும், மேலதிக கட்சித் தாவல்களால் ஆளும் கூட்டணி பாதிக்கப்படும் வரைக்கும் அல்லது மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புவது அதிகரிக்கும் வரைக்கும் மாற்றம் என்பது சாத்தியமில்லை. அந்த நேரம் வரும்வரை சிறிலங்கா அரசின் நடைவடிக்கைகள் குடும்ப அரசியலாகவே இருக்கும் என்று அதில் தெரிவித்துள்ளது.

No comments: