Friday, September 7, 2007

சிலாவத்துறை சிறிலங்கா இராணுவத்தினர் சுதந்திரமாக நடமாடிய பகுத-சிலாவத்துறைப் பிரதேசத்தில் ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கவில்லை. ???பூசசாண்டி


சிலாவத்துறை சிறிலங்கா இராணுவத்தினர் சுதந்திரமாக நடமாடிய பகுதி: கொழும்பு ஆங்கில நாளேடு
[வெள்ளிக்கிழமை, 7 செப்ரெம்பர் 2007, 08:35 ஈழம்] [பி.கெளரி]

சிலாவத்துறை சிறிலங்கா இராணுவத்தினரின் சுதந்திர நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனினும் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்து படையினர் தமது சுற்றுக்காவல் பணிகளை நிறுத்தியிருந்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த அந்த நாளேட்டின் முக்கிய பகுதிகள்:

மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறை, அரிப்புப் பகுதிகளை கடந்த புதன்கிழமை (05.09.07) இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதற்கான திட்டம் வவுனியா, மன்னார் தளங்களில் பல வாரங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதிகளால் விவாதிக்கப்பட்டிருந்தது.

சிலாவத்துறை மீது மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தாக்குதல் திட்டத்தை படையினரின் சிறப்புப் படை பிரிகேட்டின் கட்டளை தளபதியான கேணல் நிர்மல் தர்மரட்ன 9 ஆவது கெமுனுவோச், 8 ஆவது சிங்க றெஜிமென்ட் போன்றவற்றின் கட்டளை அதிகாரிகள் உட்பட ஏனைய அதிகாரிகளுக்கும் கடந்த ஓகஸ்ட் 31 ஆம் நாள் விளக்கி கூறியிருந்தார்.

மறுநாள் அதிகாலை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் எம்.ஐ-17 உலங்குவானூர்தி வவுனியா இராணுவத் தலமையகத்தில் தரையிறங்கியது. அவர் வன்னி இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் பாலசூரியவினால் வரவேற்கப்பட்டார். படை நடவடிக்கைக்கான இறுதித் திட்டங்களை வகுப்பதற்கே தளபதி அங்கு வந்திருந்தார்.

அதற்கு முன்னர் இரு வாரங்களாக விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்கு அண்மையாக ஊடுருவிய இராணுவத்தின் சிறப்பு படையணிகள், கொமோண்டோக்கள் அங்குள்ள விடுதலைப் புலிகளின் நடமாட்டங்கள் குறித்த தகவல்களை வவுனியா கட்டளை மையத்திற்கு தெரிவித்திருந்தனர்.

பின்னர், கடந்த சனிக்கிழமை (01.09.07) அன்று இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. சிறப்புப படையணிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குழுவினர் முருங்கன் இராணுவ முகாமில் இருந்து சிலாவத்துறை நோக்கி முன்னேறினர்.

விடுதலைப் புலிகளின் எதிர்ப்புக்கள் அங்கு இருக்கவில்லை. சிலாவத்துறையில் இருந்து இராணுவத்தினர் சில கிலோமீற்றர் தொலைவில் உள்ள அறிவுப் பாலத்தை அடைந்த 30 நிமிடத்தில் விடுதலைப் புலிகள் 122 மி.மீ ரக எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

பாலத்திற்கு அண்மையில் வீழ்ந்து வெடித்த எறிகணைகளால் முன்னேறிய சிறப்புப் படையினர் பாதுகாப்பு தேடி ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. மடுப்பகுதியில் இருந்து மன்னார்-வவுனியா வீதிக்கு மேலாக 20 எறிகணைகளை விடுதலைப் புலிகள் ஏவியிருந்தனர்.

இதேசமயம் 8 ஆவது சிங்க றெஜிமென்ட் அணியைச் சேர்ந்த பல இராணுவ குழுக்கள் அதன் கட்டளைத் தளபதியான லெப். கேணல் ரமேஸ் பெர்ணான்டோ தலைமையில் அனுராதபுர வானூர்தி நிலையத்தில் இந்த நடவடிக்கையில் சேர்ந்து கொள்வதற்காக காந்திருந்தனர். அவர்கள் குடும்பிமலையில் இருந்து அனுராதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தனர்.

சிறிலங்கா வன்படையின் எம்ஐ-17 ரக ஐந்து போக்குவரத்து உலங்குவானூர்திகள் இவர்களை சிலாவத்துறையின் கிழக்குப் பகுதியில் தரையிறக்கியது. இந்த பகுதி அதற்கு முன்னதாக சிறப்புப் படையினராலும், கொமோண்டோக்களினாலும் சுத்திகரிக்கப்பட்டிருந்தது. முதலில் அவர்கள் கடலினூடாக சிலாவத்துறையில் தரையிறங்குவதாகவே திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் பின்னர் திட்டம் மாற்றப்பட்டடு அவர்கள் வான்வழி மூலம் நகர்த்தப்பட்டனர். சிலாவத்துறை - முருங்கன் வீதி, சிலாவத்துறை, கொண்டச்சி வீதிகளை பாதுகாப்பதே அவர்களின் பிரதான நோக்கம்.

தரையிறங்கிய 8 ஆவது சிங்க றெஜிமென்ட் படையினர் முருங்கனில் இருந்து முன்நகர்ந்த சிறப்புப் படையினருடன் ஒரு மணிநேரத்தில் இணைந்து கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது சிறப்புப் படையினர் தப்பிச் செல்லும் விடுதலைப் புலிகளின் வழிகள் எனக் கருதும் பாதைகளில் தடுப்புக்களை ஏற்படுத்திய போதும் அங்கு விடுதலைப் புலிகளை அவர்களால் காண முடியவில்லை.

நடவடிக்கை ஆரம்பித்த போதே அவர்கள் கடல் மற்றும், தரை வழிகளால் வெளியேறி விட்டனர். விடுதலைப் புலிகளின் சில பிரிவினர் பறையனாலங்குளம் பகுதிக்கும் சென்று விட்டனர். அது மன்னர் - வவுனியா வீதிக்கு அண்மையான பகுதியாகும். அதன் ஊடாக மடுவை கடந்துவிடலாம்.

முதல் நாள் நடவடிக்கையில் இராணுவத்தினர் சிலாவத்துறை, அரிப்பு, கொண்டைச்சி ஆகிய பகுதிகளை கைப்பற்றினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சிலாவத்துறை மற்றும் அரிப்பு பகுதிகளை அண்டிய பகுதிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அங்கு எந்த விதமான எதிர்ப்பையும் விடுதலைப் புலிகள் காண்பிக்கவில்லை. அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை அந்த பகுதிகளை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இராணுவத்தினர் கொண்டுவந்த பின்னர் இராணுவத்தினரின் வாகனங்களும், காலாட் படையினரும் அப்பகுதிக்கு நகர்ந்தனர்.

அந்தப் பகுதியில் வாழ்ந்த 6,000-7,000 பொதுமக்கள் படை நடவடிக்கை ஆரம்பமாகியதும் அங்கிருந்து வெளியேறி முருங்கன், நானாட்டான் நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்திருந்தனர். அவர்களில் சிலர் தமது உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருப்பதாக நானாட்டான் பிரதேச செயலாளர் நடராஜா திருஞானசம்பந்தர் தெரிவித்துள்ளார். அவர்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் வேலைகள் அடுத்த சில வாரங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை இராணுவத்தினர் பலப்படுத்தி வருவதுடன், குதிரைமலை முனைப்பகுதிக்கும் அவர்கள் பிரவேசிக்கக்கூடியதாக உள்ளதாக மூத்த படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னாரின் தெற்குப் பகுதியை கைப்பற்றியது வவுனியா - மன்னார் வீதியின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் கடல் வழி ஊடாக ஆயுதங்களை தருவிப்பதையும் தடுத்துள்ளது.

இந்த பகுதியில் இருந்தே விடுதலைப் புலிகள் கொழும்பு துறைமுகம் மீது மூன்று தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இந்த தாக்குதல்களுக்கான வழங்கல் தளங்களாக சிலாவத்துறை, குதிரைமலை ஆகிய பகுதிகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருந்தனர்.

கற்பிட்டியில் உள்ள விஜயா கடற்படைத் தளத்தை தவிர மன்னாருக்கும் கொழும்பு துறைமுகத்திற்கும் இடையில் பிரதான கடற்படைத் தளம் எதுவும் இல்லை. கடற்படையினர் கரைக்கு அண்மையாகவும் சுற்றுக்காவல்களிலும் ஈடுபடுவதில்லை, ஏனெனில் அந்த பகுதியின் கடலின் ஆழம் கடற்படை கப்பல்கள் பயணிப்பதற்கு ஏற்றதல்ல.

அங்கு ஒரு பிரிக்கேட் படையினரை நிலைநிறுத்துவதுடன், மன்னார் தொடக்கம் புத்தளம் வரையிலும் கடற்படைத் தளம் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

சிலாவத்துறையின் இராணுவ சரித்திரம்

1991 ஆம் ஆண்டு சிலாவத்துறை மற்றும் கொக்குப்படையான் பகுதிகள் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருந்தன. இந்த இரு பகுதிகளிலும் இராணுவத்தினர் பெரும் முகாம்களை கொண்டிருந்தனர்.

எனினும் 1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் நாள் விடுதலைப் புலிகள் கடல் மற்றும் தரை வழியாக பெரும் அதிர்ச்சிகரமான தாக்குதலை சிலாவத்துறை தளம் மீது தொடுத்திருந்தனர். அப்போது அங்கு 6 ஆவது கஜபா றெஜிமென்ட் நிலைகொண்டிருந்தது. அந்தக் காலப்பகுதியில் முன்னாள் இராணுவத் தளபதியான சிறிலால் வீரசூர்ய அந்தப் பகுதிக்கான பிரிகேட் தளபதியாகவும் பணியாற்றி இருந்தார்.

அதேசமயம் விடுதலைப் புலிகள் கொக்குப்படையான் இராணுவத் தளத்தின் மீதும் தாக்குதலை தொடுத்திருந்தனர். விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த சிலாவத்துறை மற்றும் கொக்குப்படையான் தளங்களை மீட்பதற்காக காலம் சென்ற மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் வழிநடத்தலில் மேஜர் பராக்கிரம பன்னிப்பிட்டியவின் தலைமையில் (தற்போது இவர் மேஜர் ஜெனரல் தரத்தில் உள்ளதுடன், கிழக்கு மாகாண இராணுவத் தளபதியாக கடைமையாற்றி வருகின்றார்) "புலி அலை" எனும் பெயரிடப்பட்ட இராணுவ நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நான்கு நாள் சமரின் பின்னர் விடுதலைப் புலிகள் சமரை நிறுத்தியிருந்தனர். இந்த மோதல்களில் 80 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதன் பின்னர் அங்கிருந்த படையினர் படை நடவடிக்கைகளுக்காக வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டதனால் அங்கு இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட்டிருந்தது. எனவே அங்கு விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.

எனினும் படையினர் தமது சுதந்திர நடமாட்டங்களை அந்தப் பகுதிகளில் பேணி வந்திருந்தனர்.

2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்து விடுதலைப் புலிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ சிலாவத்துறை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த படையினரின் சுற்றுக்காவல் பணிகளை நிறுத்தியிருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: