Saturday, September 8, 2007

நோர்வே அரசியலில் தமிழ்ப் பெண்கள் பிரவேசம்- நோர்வேயின் அணுசரனையின் பின்புலம்-





நோர்வே அரசியலில் தமிழ்ப் பெண்கள் பிரவேசம்
[வெள்ளிக்கிழமை, 7 செப்ரெம்பர் 2007, 17:29 ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்]

நோர்வேயில் எதிர்வரும் திங்கட்கிழமை (10.09.07) நடைபெறவுள்ள நகர சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்ப் பெண்கள் முதற்தடவையாக போட்டியிடுவதன் மூலம் நோர்வே அரசியலில் பிரவேசிக்கின்றனர்.

நோர்வேத் தமிழ்ச் சமூகத்தின் 2 ஆம் தலைமுறையைச் சேர்ந்த

ஹம்சாய்னி குணரட்ணம் ஒஸ்லோ நகரசபைக்காகவும்

துஸ்யந்தி கணேசந்திரா ஒஸ்லோவின் 15 உள்ளுராட்சி சபைகளில் ஒன்றான Grorud உள்ளுராட்சி சபைக்காகவும்

சுமதி விஜயராஜ் Stovner உள்ளுராட்சி சபைக்காகவும்

திலகவதி சண்முகநாதன் ஒஸ்லோவை அடுத்துள்ள லோறன்ஸ்கூ நகரசபைக்காகவும்

வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

தொழிற்கட்சி சார்பில் போட்டியிடும் இந்த நால்வரும் சமூகப் பொறுப்புணர்வுடைய ஆளுமை மிக்க பெண்கள். தமது சமூகச் செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்கள்.


ஹம்சாய்னி குணரட்ணம்


துஸ்யந்தி கணேசந்திரா

நோர்வே வாழ் தமிழ் மக்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்பதோடு தாயக உணர்வினைத் தாங்கியவர்களாக செயற்படுபவர்கள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழர்களின் புகலிட அரசியல் வரலாற்றில் இந்த நான்கு பெண்களின் அரசியல் பிரவேசம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற முற்போக்கான நிகழ்வாகவும் அமைகின்றது.

ஏனைய புலம்பெயர் நாடுகளின் தமிழ் மக்களின் சமூக-அரசியல் ஈடுபாட்டுக்கு உந்துதலாக அமைகின்ற விடயமாகவும் நோக்கப்படுகின்றது.

இவர்களைத் தவிர ஒஸ்லோவிலும், ஏனைய நகரங்களிலும் வெவ்வேறு கட்சிகளின் சார்பிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தமாக நோர்வேயின் 6 நகர சபைகளில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 6 பேர் பெண்கள் என்பதோடு இவர்களில் நான்கு பெண்கள் 2 ஆம் தலைமுறையைச் சேர்ந்த இளையோர்கள் என்பதும் இங்கே பதிவு செய்யப்படத்தக்கதாகும்.

நீண்டகால அடிப்படையில் புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் இருப்பின் வேர்கள் பதியம் போடப்படவுள்ளது என்ற யதார்த்தப் புறநிலையில் நோர்வே அரசியலில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகின்றது.

2003 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகர சபைகளுக்கான தேர்தலில் ஒஸ்லோ நகர சபையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக யோகராஜா பாலசிங்கம் (பாஸ்கரன்) போட்டியிட்டார். இவர் ஓஸ்லோ வாழ் தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டி, அரசியல் தளத்தில் நின்று செயலாற்றியமை பலரும் அறிந்ததே.

இந்த முறை இவர் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆன போதும், நான்கு பெண்களின், குறிப்பாக இளைய தலைமுறையினரின் அரசியல் பிரவேசத்திற்கான காத்திரமான பணியினை ஆற்றியுள்ளார்.


சுமதி விஜயராஜ்


திலகவதி சண்முகநாதன்

நோர்வே தேர்தல் நடைமுறை

நோர்வே நாட்டில் 2 தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலும், 4 ஆண்டுகளுக்கொரு முறை நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நடத்தப்படுகின்றன.

இறுதியாக செப்ரெம்பர் மாதம் 2005 ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலின் பின்னர் தொழிற்கட்சி, சோசலிச இடதுசாரிக் கட்சி மற்றும் மத்திய கட்சி ஆகியன இணைந்த இடதுசாரிக் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நோர்வே நாடாளுமன்றம் 169 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. நோர்வேயில் 434 மாநகர சபைகளும் அவற்றின் கீழ் உள்ளூராட்சி சபைகளும் உள்ளன.

இன்னொரு வகையில் கூறுவது எனில் 2 ஆண்டுகளுக்கொரு முறை நோர்வே மக்கள் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர் எனலாம்.

வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்டவர்களின் அரசியல் பங்கேற்பு

ஐரோப்பிய நாடுகள் பலவற்றைப் போல் நோர்வேயும் ஒரு பல்லின மக்களைக் கொண்ட நாடாக இருப்பதால் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட மக்கள் சமூகங்களின் அரசியல் பங்கேற்பு என்பது இன்றியமையாத ஒன்றாகவே நோக்கப்படுகின்றது. குறிப்பாக ஒஸ்லோவின் மொத்த மக்கட் தொகையில் 20 விழுக்காடு வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்டவர்கள் ஆவர்.

வெளிநாட்டுச் சமூகங்கள் அரசியலில் பங்கேற்பதன் மூலமே இணைவாக்கத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சிறந்த முறையில் வழிவகுக்க முடியும் என்பதோடு வாய்ப்புக்களையும், நலன்களையும் உரியமுறையில் பேண முடியும். அரசியல், சமூக, பொருளாதார, வாழ்வியல் விடயங்கள் சார்ந்த முக்கிய முடிவுகளிலும் தீர்மானங்களிலும், காத்திரமான கருத்துக்களை முன்வைக்க முடியும் என்பதும் யதார்த்தமாகும்.

No comments: