Friday, September 21, 2007

இனப்பிரச்சினை தீர்வுச் செயன்முறையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் துறைசார் நிபுணர்கள் கருத்து

இனப்பிரச்சினை தீர்வுச் செயன்முறையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் துறைசார் நிபுணர்கள் கருத்து
22 September 2007

* செய்திகள்

Thaj_Samudra_Hottel.jpgஇனப்பிரச்சினை தீர்வுச் செயன்முறையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர் அல்லது அனுசரணையாளரின் செயற்பாடு இன்றியமையாதது. முரண்பட்டுள்ள தரப்புகள் பொதுவான நடுநிலையான செயற்பாடுகளை முன்னெடுக்க மூன்றாம் தரப்பின் பிரசன்னம் அவசியமானதாகும் என்று துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சமாதான தினத்தையொட்டி முரண்பாட்டுக் கற்கைகளுக்கான பேர்கொப் நிறுவனம் மற்றும் இனக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் என்பன இணைந்து நேற்று கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே நிபுணர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.

இந் நிகழ்வில் பேர்கொப் நிறுவன இயக்குனர் கலாநிதி நோபேட் போப்பஸ், இனக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் இயக்குனர் கலாநிதி ரமாமணி, மூலோபாய கற்கைகளுக்கான பிராந்திய இயக்குனர் கலாநிதி றிபாட் ஹுஸைன், லக்பிம நியூஸ் பிரதம ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்க, அமால் ஜயசிங்க, சாந்தி சச்சிதானந்தன் உள்ளிட்டோர் சமாதான செயற்பாட்டில் மூன்றாந் தரப்பின் செயற்பாடு தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர்.

இன முரண்பாட்டுக்கான தீர்வுச் செயன்முறையின் போது ஒரு தரப்பிடமுள்ள அதிகாரங்கள் மற்றைய தரப்பிடம் பகிர்ந்து வழங்கப்படுவதே இறுதி முடிவாக அமையும்.
உலகில் எந்த தரப்பும் அதிகாரங்களை தாமாகவே முன்வந்து மற்றைய தரப்பிடம் வழங்க முன்வருவதில்லை. பொதுவாக இன முரண்பாடுகளானது அதிகாரப் பரவலின்மை காரணமாகவே உருவாகின்றது.

எனவே இன முரண்பாட்டுக்கு தீர்வு காணும்போது அதிகாரம் பகிரப்படுவது முக்கியமானது. எனவே இச்செயன்முறைக்கு அனுசரணையாளராகவோ அல்லது மத்தியஸ்தராகவோ செயற்படுவதற்கு மூன்றாம் தரப்பின் பங்குபற்றுதல் அவசியமானது.

இனப்பிரச்சினை விடையத்தில் பிரதான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன் அதன் மூலம் உருவான சிறிய முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். ஏனெனில் இச்சிறிய முரண்பாடுகளே சமாதானச் செயற்பாட்டிற்கான சுமூகமான சூழலை உருவாக்குவதற்கு பெரும் தடைக்கல்லாக உள்ளன.

இச் செயன்முறையில் மூன்றாந் தரப்பினால் காத்திரமான மாற்றத்தை உருவாக்க முடியும். எனினும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தரின் நடுநிலைத்தன்மை, வினைத்திறனான செயற்பாடு என்பன முரண்பாட்டு தீர்வு செயன்முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இம் மூன்றாந்தரப்பினர் தமது சுயலாபங்களுக்காகவும், தமது நாட்டின் பிராந்தியத்தின் நலன்களையும் கருத்திற்கொண்டே செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

எனினும் முரண்பட்டுள்ள இரு தரப்பினர் தமக்கிடையிலான பிரச்சினைகளை தம்மால் தீர்க்க முடியாத நிலையிலேயே மூன்றாந் தரப்பு மத்தியஸ்தத்தை நாடுகின்றனர்.
இம் மூன்றாந் தரப்பு தனது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முரண்பட்டுள்ள தரப்புகளின் மீது பொருளாதாரத்தை ஓர் ஆயுதமாக பயன்படுத்தலாம். இதற்கு அவர்கள் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெற்றுக் கொள்ளவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

No comments: