Monday, October 22, 2007

புலிகள் தரை, ஆகாய மார்க்கத்தில் தாக்குதல்

அநுராதபுர படைத்தளத்தில் 20 புலிகள், 17 படையினர் பலி 3 வானூர்திகள் சேதமடைந்ததாக அரசாங்கம் தெரிவிப்பு

அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது நேற்று திங்கட்கிழமை அதிகாலை விடுதலைப்புலிகள் பாரிய தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் மூன்று வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன், தேடுதல் நடத்தச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்து நொருங்கியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதிலும், தங்களால் எட்டு வானூர்திகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் நகரிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் விமான நிலைய வீதியிலுள்ள விமானப் படைத்தளம் மீதே நேற்று அதிகாலை 3.15 மணியளவில் இந்தப் பாரிய தாக்குதல் இடம்பெற்றது.

தரைவழியாக அதிகாலை 3.15 மணியளவில் விமானப் படைத்தளத்தினுள் புகுந்த கரும்புலிகள் பாரிய தாக்குதலை ஆரம்பித்த அதேவேளை, சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் விடுதலைப்புலிகளின் இரு விமானங்கள் இந்தத் தளத்தின் மீது பலத்த குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவிய கரும்புலிகள் அணி நாலாபுறத்திலிருந்தும் கடும் தாக்குதல் தொடுக்கவே இரு தரப்புக்குமிடையே கடும் மோதல் வெடித்துள்ளது.

கைக்குண்டுகள், ஆர்.பி.ஜி.க்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்கள் சகிதமே புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக விமானப் படையினர் தெரிவிக்கின்றனர்.

கரும் புலிகளின் அணி விமானப்படைத் தளத்தினுள் ஊடுவியதையடுத்து உள்ளே பாரிய வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன. கரும்புலிகள் ஆர்.பி.ஜி.க்களால் தாக்குதல்களை நடத்தியதுடன், கைக்குண்டுகளையும் வீசித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

படைத்தளத்தினுள் முன்னேற முற்பட்ட கரும்புலிகளை படையினர் தடுத்துநிறுத்த முற்பட்டபோது, கடும் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அதிகாலை 4.15 மணியளவில் விமானப்படைத்தளத்திற்கு வந்த புலிகளின் இரு விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளன.இந்தக் குண்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்து பாரிய சத்தத்துடன் வெடித்தபோது, அங்கு பெரும் சேதங்களேற்பட்டன. புலிகளின் இரு விமானங்களும் இரு குண்டுகளையே வீசித் தாக்கியதாக படையினர் கூறுகின்ற போதும், அவை நான்கிற்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலை நடத்திய புலிகளின் இரு விமானங்களும் உடனடியாக அங்கிருந்து அகன்ற அதேநேரம், கரும்புலிகள் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விமானப்படைத்தளத்தின் உட்புறத்தே கடும் தாக்குதலை நடத்தியதாகப் தெரிவிக்கப்படுகிறது.

கடும் நேரடி மோதலாலும் புலிகளின் வான்வழித் தாக்குதல்களாலும் விமானப்படைத் தளத்தினுள் நீண்டநேரம் பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன.

இந்தச் சத்தங்களால் அநுராதபுரம் நகரும் அதனை அண்டிய பல கிலோமீற்றர் தூரமும் நீண்டநேரம் அதிர்ந்து கொண்டிருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

விமானப்படைத்தளத்தினுள் பாரிய மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அநுராதபுரம் இராணுவ படைத்தளத்திலிருந்து பெருமளவு படையினர் விமானப்படைத்தளம் நோக்கி விரைந்து சென்றதுடன், உள்ளே தாக்குதல் நடத்திய புலிகள் தப்பிச் செல்லாதவாறு விமானப்படை முகாமைச் சூழ்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மோதல்கள் மற்றும் புலிகளின் விமானத் தாக்குதல்களையடுத்து அநுராதபுரம் மாவட்டம் முழுவதும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இந்த உக்கிரச் சமர் அதிகாலை 5 மணிவரை நீடித்ததாகவும் அதன் பின்னரும் சில மணிநேரம் முகாமினுள் ஆங்காங்கே பலத்த வெடிச்சத்தங்களும் குண்டுச் சத்தங்களும் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

21 கரும்புலிகள்

மூன்று பெண் கரும்புலிகள் உட்பட 21 கரும்புலிகளைக் கொண்ட படையணியே தரைவழித் தாக்குதலை நடத்தியதாகவும் நேற்றுக் காலை பத்து மணிக்கும் மேலாக இவர்கள் படைத்தளத்தினுள்ளேயிருந்தவாறு தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்ததால் அதன் பின்னரே மேலதிக மீட்புப் படையணிகளால் முகாமினுள் நுழைய முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹெலி வீழ்ந்து நொருங்கியது

முகாம் மீது வான் புலிகள் தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பிச் சென்ற நிலையில், வவுனியா விமானப் படை முகாமிலிருந்து அநுராதபுரம் நோக்கி வந்த விமானப்படையின் பெல்-212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, அநுராதபுரத்துக்கு கிழக்கே சுமார் 13 கிலோமீற்றர் தூரத்தில் மிகிந்தலையின் துரமடலாவ என்ற இடத்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதன் இரு விமானிகளும் இரு துப்பாக்கி சுடுநர்களும் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்தது.

இந்த ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியான போதும், தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அதனைத் தரையிறக்க முற்பட்டபோது அது வீழ்ந்து நொருங்கியதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேநேரம், விமானப்படைத் தளத்தினுள் இடம்பெற்ற தாக்குதலில், வான் புலிகள் வீசிய குண்டுகளால், விமானங்கள் நிறுத்தப்படுமிடத்தில் தரித்து நின்ற இரு எம்.ஐ.-24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்களும் கே-8 ரக (சீனத் தயாரிப்பு) பயிற்சி விமானமொன்றும் பலத்த சேதமடைந்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

2 அதிகாரிகளுட்பட 13 படையினர் பலி

அத்துடன், இரு அதிகாரிகள் உட்பட 13 படையினர் கொல்லப்பட்டதாகவும் 22 படையினர் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பலர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதே விமானப் படைத்தளம் மீதான தாக்குதலில் எட்டு வானூர்திகள் கரும் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில்;

நேற்று அதிகாலை 3.20 மணியளவில் 21 பேர் கொண்ட விசேட கரும்புலி அணி அநுராதபுரம் விமானப்படைத்தளத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து, அதிகாலை 4.30 மணியளவில் புலிகளின் வான் படையினர் விமானத் தளம் மீது குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தினர்.

இத் தாக்குதல்களில் விமானப்படையின் பயிற்சி விமானம் -1, எம்.ஐ-24 ரக ஹெலிகொப்டர்கள்-2, எம்.ஐ.-17 ரக ஹெலிகொப்டர் -1, பி.ரி-6 ரக விமானம் -1, பெல் 212 ரக ஹெலிகொப்டர் -1, உளவு விமானம் - 1, சி.ரி.எச். -74 ரக விமானம்-1 என எட்டு வானூர்திகள் முற்றாக அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. இதைவிட படையினர் பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.

மேலும், வவுனியாவிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற பெல் 212 ரக ஹெலி ஒன்று வீழ்ந்து நொருங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு `ஒபரேஷன் எல்லாளன்' என விடுதலைப்புலிகள் பெயரிட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று முற்பகல் மீண்டும் விமானப் படைத்தளத்தை தங்கள் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த படையினர் விமானப் படைத்தளத்தினுள் பல்வேறு பகுதிகளிலுமிருந்து புலிகளின் 20 உடல்களைக் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்புகள் தெரிவித்தன.

புலிகளின் இந்தத் தாக்குதலில் 12 முதல் 18 வானூர்திகள் பலத்த சேதமடைந்திருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாமெனத் தான் கருதுவதாக பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் `இந்துஸ்தான் ரைம்ஸ்' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

விமானப்படையினரின் கே.-8 பயிற்சி விமானமும் கடற் கண்காணிப்பு வானூர்தியான `பீச் கிராவ்ற்' ரும் அழிக்கப்பட்டதால் கடற்படையினரின் ஆழ்கடல் நடவடிக்கை பாதிக்கப்படலாமெனவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம், படகுகள் மூலம் நுவரவெவ பகுதி ஊடாக வந்த புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாமெனக் கூறப்படுகின்ற போதும் வில்பத்து காட்டினூடாக வந்த புலிகளே தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இத் தாக்குதலையடுத்து அநுராதபுரம், வவுனியா, மணலாறு, வில்பத்து காட்டுப்பகுதியில் படையினர் தீவிர தேடுதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மிகிந்தலை துரமடல்லவ பகுதியில் வீழ்ந்து நொருங்கிய ஹெலிகொப்டரின் சிதைவுகளும் அதில் சென்ற நான்கு விமானப்படையினரின் கருகிய சடலங்களும் நேற்றுக்காலை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டன.

அடையாளம் காண முடியாதளவுக்கு நான்கு சடலங்களும் கருகிப்போன நிலையில் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டன.

வன்னியில் தேடுதல்

வான் புலிகளின் தாக்குதலையடுத்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஆறு மிக் மற்றும் கிபிர் விமானங்கள் வன்னிக்குச் சென்றன.

பராவெளிச்சக் குண்டுகளை வீசி இந்த விமானங்கள் கண்காணிப்பை மேற்கொண்டன. தாக்குதல் எதனையும் நடத்தவில்லை.

20 நிமிடத்திற்கும் மேலாக இந்த ஆறு விமானங்களும் கண்காணிப்பை மேற்கொண்டு விட்டு திரும்பிச் சென்றுவிட்டன.

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு

இந்தத் தாக்குதலையடுத்து அநுராதபுரம் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு பாரிய தேடுதல்கள் ஆரம்பமாகின.

இந்தத் தாக்குதலால் அநுராதபுரம் நகரும் அதனை அண்டிய பகுதிகளும் சுமார் இரண்டு மணிநேரம் அதிர்ந்து கொண்டிருந்தது. தொடர்ச்சியாக பாரிய குண்டுச் சத்தங்கள் பலமைல் தூரத்திற்கு கேட்டுக்கொண்டிருந்தது.

விமானப் படைத்தளம் மீதான தாக்குதல் ஆரம்பமானதையடுத்து படைத்தளத்தை சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெருமளவு மக்கள் வீடு, வாசல்களை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடத் தொடங்கினர்.

இந்தத் தாக்குதல் மற்றும் விமானப் படைத்தளத்தினுள் நீண்டநேரம் இடம்பெற்ற பல குண்டுவெடிப்புகளால் முகாமுக்கு அருகிலிருந்த வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

விமானப் படைத்தளத்திற்குள் பாரிய மோதல் ஆரம்பமானதையடுத்து மேலதிக படைகள் அப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு முகாமைச் சூழ முழுத் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.

விமானப் படைத்தளத்தை அண்டிய பகுதிகளிலும் நகரிலும் புறநகர்ப்பகுதியிலும் உடனடியாக வீதித் தடைகள் போடப்பட்டு தீவிர சோதனைகள் ஆரம்பமாகின.

அநுராதபுரம் நகருக்கு வருவோரும் நகரைவிட்டு வெளியேறுவோரும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டனர். வாகனங்களில் வந்தவர்கள் அனைவரும் அவற்றிலிருந்து இறக்கப்பட்டு விசாரணைகளுக்கும் தீவிர சோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

காலை 8 மணிக்குப் பின்னர் அநுராதபுரம் நகரிலும் புறநகர்ப் பகுதியிலும் பொலிஸ் ஜீப்களில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவு பற்றி அறிவிக்கப்பட்டது. மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலிலிருக்குமெனவும் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறாது வீடுகளினுள் இருக்குமாறும் கேட்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதலால் அநுராதபுரம் நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கடைகள், வர்த்தக நிலையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவையடுத்து காலை 10 மணியுடன் நகரும் புறநகர்ப் பகுதிகளும் முற்றாக வெறிச்சோடிப் போயின.

எனினும், வவுனியாவுக்கான, வெளியிடங்களிலிருந்தான வாகனப் போக்குவரத்துகள் நடைபெற்றன.

தாக்குதலையடுத்து, அநுராதபுரம் ஆஸ்பத்திரி முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கடமையிலிருந்த டாக்டர்களை விட மேலதிக டாக்டர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டதுடன், ஆஸ்பத்திரி வார்ட்டுகளிலிருந்த நோயாளர்களும் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டும் வெளியேற்றப்பட்டும் ஆஸ்பத்திரி முழு அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலால் அநுராதபுரம் முழுவதும் பெரும் அச்சமும் பதற்றமும் நிலவுகிறது. நிலைமையை கட்டுப்படுத்த மேலதிக படைகள் வரவழைக்கப்பட்டு எங்கும் குவிக்கப்பட்டுள்ளன.

No comments: