Saturday, May 31, 2008

கிழக்கு இனக்கலவரத்திற்கு மகிந்தவே காரணம்: சோமவன்ச???

கிழக்கு இனக்கலவரத்திற்கு மகிந்தவே காரணம்: சோமவன்ச
[புதன்கிழமை, 28 மே 2008, 06:13 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
நிறைவேற்று அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ள அரச தலைவர் மகந்த ராஜபக்ச, கிழக்கில் இனக்கலவரத்திற்கு தூபமிட்டு மக்களை பலிக்கடாக்களாக்கியுள்ளார் என்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜே.வி.பி. கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஜே.வி.பி. குறித்து இன்று பலரும் பல்வேறு விதமாக செய்திகளை வெளியிடுகின்றனர். ஜே.வி.பி. சவால் நிறைந்த கட்சியாகி விட்டது என்று பலரும் கூறுகின்றனர். இது குறித்து நாம் அலட்ட விரும்பவில்லை.

எனினும் எமக்கு தற்போது எந்தவித சவாலும் இல்லை. ஜே.வி.பி. தலைவர் கொல்லப்பட்ட போது மட்டுமே எமது கட்சி சவாலுக்கு முகம் கொடுத்தது.

தற்போது கட்சியை மீண்டும் கட்டி எழுப்பினோம். கட்சியின் வளர்ச்சி அதிகரிக்கும் நிலை இன்று உள்ளது.

இந்நிலையில் ஜே.வி.பியின் தலைமைப்பதவி குறித்து பலரும் செய்திகளை வெளியிடுகின்றனர். கட்சியின் தலைமைப் பதவி குறித்து நானே அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் இது குறித்து அலட்டித் திரிகின்றனர். அவர்களுக்கு ஏன் இந்த கவலை வந்துள்ளது என்று தெரியவில்லை.

ஜே.வி.பி. குறித்தோ அல்லது அதன் தலைவரான என்னைப் பற்றியோ விமர்சிக்கும் தகுதி கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு இல்லை. அதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை. அதேநேரம் தலைமைப்பதவியைத் துறக்கவும் தயாராக உள்ளேன்.

தலைமைப்பதவியில் தொடர்ந்தும் இருக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. தலைமைப் பதவி பறிபோனால் கட்சியைக் காட்டிக்கொடுக்க மாட்டேன். சாதாரண தொண்டனாக இருந்து கட்சியைக் காப்பாற்றுவேன்.

அதேபோல் எவருடைய அச்சுறுத்தல்களுக்கும் நான் அடிபணியப்போவதில்லை. அஞ்சப்போவதில்லை. நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் மகிந்த அரசு இன்று மக்கள் மீது அளவு கடந்த சுமைகளை சுமத்தியுள்ளது. எப்படி எல்லாம் சுமைகளை சுமத்த முடியுமோ அப்படி எல்லாம் சுமைகளைச் சுமத்துகின்றனர்.

அது மட்டுமின்றி கடத்தல் மற்றும் கப்பம் கறக்கும் செயற்பாடுகளிலும் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. மக்களின் ஜனநாயக உரிமைகளை இந்த அரசாங்கம் மதிக்கவில்லை. நிறைவேற்று அதிகாரத்தை மகிந்த தவறாகப் பயன்படுத்துகிறார். அதன் ஒரு வெளிப்பாடாகவே நாடாளுமன்றம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

சேனாதிபதி போன்று செயற்படும் மகிந்த இன்று கிழக்கில் இனக்கலவரத்திற்கு தூபமிட்டுள்ளார். அங்கு ஒரு தேர்தலை நடத்தி தமிழ் - முஸ்லிம் மக்களிடையே இனக்கலவரத்தை தூண்டிய மகிந்த, அதிகாரத்தை தருவதாகக் கூறி மக்களை பலிக்கடவாக்கி வருகிறார்.

கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது மிஞ்சியிருப்பது நிம்மதியற்ற வாழ்க்கையே ஆகும். இத்தகைய அரசாங்கம் எமது நாட்டுக்கு தேவையில்லை. தேவையான நேரத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.

58 ஆம் ஆண்டு இனப்படுகொலை- ஒருபக்கப்பார்வையும் ஒரேமாதிரியான புலம்பலும்

58 ஆம் ஆண்டு இனப்படுகொலை ஒரு தற்செயல் நிகழ்வல்ல- வரலாற்றின் முரண்பாடே: பா.நடேசன் விளக்கம்
[சனிக்கிழமை, 31 மே 2008, 09:58 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
1958 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல- இலங்கைத் தீவின் வரலாறுகளில் தொடரும் முரண்பாடு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கம் அளித்துள்ளார்.

"58 இனவெறிக்கு அகவை 50" நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்பு உரை

தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக இந்த விடுதலைப் போராட்டத்திற்கு முக்கிய காரணியாக இருக்கின்ற- இருந்து வருகின்ற 1958 ஆம் ஆண்டு இனவெறித் தாக்குதல்கள் தொடர்பான இந்த அரங்க நிகழ்வுகள் உண்மையாக எல்லோரது மனங்களிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது.

எல்லோரினது உள்ளங்களிலும் இன உணர்வு தூண்டப்பெற்று விடுதலைக்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்ற விடுதலை உணர்வில் உந்தப்படுகின்ற சூழலை உருவாக்குகின்ற நிகழ்வாக இது இருந்தது எனலாம்.

1958 ஆம் ஆண்டு இனவெறித்தாக்குதலானது தற்செயலாக நிகழ்ந்த சம்பவம் இல்லை.

இலங்கைத்தீவின் வரலாற்றில்

எந்த தொல்லியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி,

மானிடவியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி,

வரலாற்றியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி,

அல்லது சமூகவியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி

அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற ஒரு முக்கியமான விடயம் இலங்கைத்தீவில் இரண்டு தேசிய இனங்கள், வரலாற்று ரீதியாக இருந்து வருகின்றன என்பதுவே.

அந்த இரண்டு தேசிய இனங்களுக்கு இடையில் வரலாற்று ரீதியாக

ஒவ்வொரு தேசிய இனமும்

வெவ்வேறு மொழிகள்,

வெவ்வேறு பண்பாடுகள்,

வெவ்வேறு பொருளாதார வாழ்க்கை முறைகள்

வெவ்வேறு சமூகக் கட்டமைப்புக்களைக்கொண்ட

வெவ்வேறு தேசிய இனங்கள் என்பதை இன்று அனைவருமே உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்கின்றனர்.

இந்த இரண்டு தேசிய இனங்களுக்கும் வரலாற்று ரீதியாக பல முரண்பாடுகள் காலத்திற்குக் காலம் தோன்றுவது உண்டு.

அதன் தொடர்ச்சியாகத் தான் 1958 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்ட இனவெறித்தாக்குதல் நடவடிக்கையாகும்.

இந்த இனவெறித் தாக்குதல் என்பது சிங்களப் பேரினவாதத்தின் தற்செயலாக, உணர்ச்சிகளாக உந்தப்பட்டு அல்லது ஏதாவதொரு காரணிகளுக்காக ஏற்பட்ட விடயமல்ல.

வரலாற்று ரீதியாக சிங்கள ஆட்சியாளர்கள் சிங்களப் பேரினவாதிகள்

திட்டமிட்ட ஒரு கொள்கை வகுப்பின் அடிப்படையில்

திட்டமிட்டு செயற்படுத்திய ஒரு நிகழ்வாகும்.

இந்த இலங்கைத்தீவை முற்று முழுதாக சிங்களப் பேரினவாத அல்லது சிங்கள நாடாக மாற்றி அமைப்பதற்காக, எண்ணிக்கையில் குறைந்த தமிழ்த்தேசிய இனத்தை அழிப்பதற்காக- மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் 1958 ஆம் ஆண்டு இனப்படுகொலை.

வரலாற்று ரீதியாக ஒரு தேசிய இனத்திற்கு அதன் விழுமியங்கள் முக்கியமானவை.

அந்த விழுமியங்களில் மொழி என்பது மிக மிக முக்கியம்.

மொழி, நிலம், பண்பாடு, அவர்களின் வாழ்க்கை முறை எனப்படும் அந்த தேசிய இனத்திற்கான அடையாளங்களில் முக்கியமானது மொழி.

நாம் தமிழ் மொழியைப் பேசுகின்றபடியால் தான் தமிழர்கள்- ஆங்கிலத்தைப் பேசுகின்றவர்கள் ஆங்கிலேயர்கள்- பிரான்சிய மொழியைப் பேசுகின்றவர்கள் பிரான்சியர்கள்.

எந்த எந்த மொழியை எந்த மக்கள் பேசுகின்றார்களோ அவர்கள் அந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த மொழியோடு சேர்ந்த பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை என்று தொடர்ந்து கொண்டே போகும்.

அந்த வகையில் இலங்கைத் தீவில் வரலாற்று ரீதியாக தமிழ்த் தேசிய இனத்தவர் வாழ்ந்து வருகின்ற பிரதேசங்களில் அவர்களை அழிப்பதோடு மட்டுமல்லாது அவர்களின் மொழியை அழிப்பதன் ஊடாக சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளலாம் என்ற நீண்டகால கொள்கை வகுப்பின் ஓர் பகுதியாகத்தான் 1956 ஆம் ஆண்டு அரச கரும மொழியாக தனிச்சிங்கள சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

சிங்கள மொழியினை அரச மொழியாக கொண்டு வந்தது அரச அலுவலகங்களில் வேலை பார்ப்பதற்கு மட்டும் அன்று.

தனிச் சிங்களச் சட்டம் அதாவது சிங்களம் மட்டுமே இலங்கையின் அரச கரும மொழி என்று கொண்டு வந்தமையானது உன்மையில் தமிழ் மக்களை மொழியியல் ரீதியாக படிப்படியாக மாற்றுவது.

மேலும் தமிழ்ப் பிரதேசங்களில் அந்த மொழியைப் புகுத்தி அதன் ஊடாக அங்கே உள்ளவர்கள் சிங்களத்தில் எல்லாவற்றையும் தொடங்கும் பொழுது இயல்பாகவே அந்த இனம் படிப்படிப்படியாக சிங்கள மயப்படுத்தப்படும்.

வரலாற்றில் பல நாடுகளில் இப்படியான எடுத்துக்காட்டுக்களை நாம் சொல்லலாம்.

தமிழர் தாயக பூர்வீக பூமியாக இருந்த நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போன்ற பல பிரதேசங்கள் இன்று சிங்களப் பிரதேசமாக மாற்றப்பட்டு தமிழர்களாக வாழ்ந்த எம் மக்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களை எவ்வாறு சிங்களவர்களாக்கலாம் என்பது நன்றாக சிங்களப் பேரினவாதத்திற்குத் தெரியும்.

இது பண்டாரநாயக்காவிற்கும் நன்றாகத் தெரியும். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கும் தெரியும். அவர்கள் இதனை நன்றாக தெரிந்து கொண்டுதான் 1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்கினர்.

தமிழர்களை அரச தொழில்களுக்கு விருப்பம் கொள்ளச் செய்கின்ற ஒரு முறைதான் அந்தப்பிரதேசத்தில் கல்வி ஊடாக இருந்து வருகின்றது.

அதன் ஊடாக அங்குள்ள மக்கள் அரச உத்தியோகத்தர்களாகப் போகின்ற போது இயல்பாகவே சிங்களம் படிப்பது மட்டுமல்ல தமிழர்கள் தங்களின் பிள்ளைகளையும் அரச தொழில்களுக்கு சேர்ப்பதற்காக பிள்ளைகளுக்குக் கூட சிங்களம் கற்பிக்க தூண்டலாம் என்ற மிகவும் சூழ்ச்சிகரமான நீண்ட காலத்திட்டம்தான் அடிப்படையிலேயே 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதனை ஒரு தற்செயலான நிகழ்வாகப் பார்க்கக்கூடாது. வரலாறு எமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. எமது இனத்தின் முக்கிய அடையாளமான மொழி மீது கை வைத்ததனை எதிர்த்து அன்றைய தமிழ்த் தலைவர்கள் அதற்கு எதிரான போராட்டங்களை அகிம்சை முறையில் தொடங்கிய போதுதான் எமது மக்கள் மீது இந்தப் படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அன்றைய அரசியல் தலைவர்கள் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டன.

1958 ஆம் ஆண்டு படுகொலை என்பது அதாவது ஐரோப்பியர்கள் இங்கிருந்து சென்ற பின்னர் முதன் முதலாக சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நன்கு திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட ரீதியில், சிங்கள அரச படைகளின் உதவியுடன் சிங்களக்குண்டர்களால் எமது மக்கள் மீது படுகொலைகளும் காடைத்தனங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

1958 ஆம் ஆண்டு இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்த் தாயின் கதையை எமது தேசியத் தலைவர் கேட்டு எவ்வாறு விடுதலை உணர்வைப் பெற்றார்கள் என்பதனை இங்கு நடந்த அரங்க நிகழ்வில் அதனை சுட்டிக்காட்டினார்கள்.

1958 ஆம் ஆண்டு இனப்படுகொலை என்பது தமிழ் மக்களின் வரலாற்றில் ஒருவாராலும் மறக்கமுடியாது.

ஏனெனில் அரச பயங்கரவாதம் அதாவது சிங்கள அரச பயங்கரவாதம் முதலாவதாக தலைநகரில் இருந்து தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்ற சிங்களப் பிரதேசங்களில் எல்லாம் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது மட்டுமல்ல அவர்களுக்கு போதுமான அளவு பாதுகாப்புக்கூட கொடுக்கப்படவில்லை.

தமிழ் மக்கள் கொழும்பில் இருந்து அடித்து விரட்டப்பட்ட போது அனைவரும் ஒரு சரஸ்வதி மண்டபத்திற்கு ஓடிச்சென்றனர். அங்கும் பாதுகாப்பு இல்லை என்று றோயல் கல்லூரிக்குச் சென்றனர். அங்கே உள்ள படித்த தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அன்றைய மகா தேசாதிபதியை சந்தித்த போது இங்கு பாதுகாப்பில்லை நீங்கள் கப்பலால் செல்லுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

அப்படியாக அந்த சிங்கள அரசு தனது படைகளை வைத்துக்கொண்டு தமிழ் மக்களை அவர்களின் தாயகப் பிரதேசத்திற்கு கப்பலில் அனுப்பினர்.

அகதிகளாக எமது மக்கள் வந்தனர். அவர்கள் இன்றும் எமது பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது ஒரு முறையல்ல பல முறை நிகழ்ந்திருக்கிறது.

1958 ஆம் ஆண்டில் மட்டுமல்ல 1981 இலும் 1983 இலும் இனப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன.

மலையக மக்களைக் கூட சிங்களவர்கள் அடித்துக் கலைத்தார்கள். மலையகத் தமிழ்மக்கள் தமது இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி மலையகத்தில் உழைத்திருக்கும் வரலாறு இருக்கின்றது.

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகு எலும்பாக இருப்பவர்கள் தமிழர்கள். அவர்கள் அங்கே அடித்து விரட்டப்பட்டார்கள்.

இத்தகைய செயற்பாடுகளை- படுகொலைகளை நாம் தொடர்ந்து இடம்பெற அனுமதிக்கமுடியாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

1983 படுகொலை நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ளனர்.

அப்போது சிங்கள அரச படைகள் அனைத்துமாக சிங்கள இராணுவம், சிங்களக் கடற்படை, வான்படை, சிங்களக் காவல்துறை ஆகியன திட்டமிட்டு தமிழர்களின் உயிர்களைப் பலியெடுத்தது. தமிழர்களது உடமைகள் சூறையாடப்பட்டன.

சிங்கள அரச படைகள் கொழும்பிலும் மற்றும் தமிழர் வாழிடம் அனைத்துக்கும் சென்று நேரடியாகக் குண்டர்களுடன் சேர்ந்து தமிழர்களின் வீடுகளை அழித்தது மட்டுமல்ல இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகித்த தமிழர்களின் தொழிற்சாலைகள் எல்லாம் எரிக்கப்பட்டன.

அன்றைய அரச தலைவராக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தன கூறினார்- "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என்று.

ஓர் நாட்டின் அரச தலைவர் அந்த நாட்டில் இருக்கின்ற மற்றொரு தேசிய இனத்திற்கு எதிராக இப்படியான வசனத்தை வானொலி ஊடாகக் கூறினார். இது எதனை எடுத்துக்காட்டுகின்றது என்றால் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது படையெடுக்கின்ற போதும் அதை ஆக்கிரமிக்கின்ற போதும் அந்நாட்டிற்கு எதிராக விடுக்கின்ற அறைகூவல் போன்றதே.

சிங்களவர்களின் அடிமன உள்ளக்கிடங்கில் இருந்தது வெளிவந்தது என்னவென்றால் தமிழ்த் தேசிய இனம் வேறு - சிங்களத் தேசிய இனம் வேறு என்பதுதான்.

தமிழீழம் வேறு

சிங்கள நாடு வேறு

என்பது தான்.

இனப் படுகொலையின் ஊடாக எமது மக்களை அழிப்பதுடன் நின்றுவிடாது எமது நிலத்தை ஆக்கிரமிக்கவும் விரும்புகின்றார்கள்.

தமிழ் மக்களை அழிப்பதற்காக சிங்களப் பேரினவாதம் ஒரு நீண்ட காலத்திட்டத்தினை வைத்துக்கொண்டிருக்கிறது.

அவர்கள் இனவெறித்தாக்குதல்களை காலத்திற்கு காலம் கட்டவிழ்த்து விடுவது மட்டுமல்ல எமது பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்குக்கூட அவர்களின் திட்டங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

ஒரு பக்கம் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கத்தில் தென் தமிழீழத்தில் துண்டு துண்டாக எமது நிலம் சிங்களக் குடியேற்றமாக மாற்றப்படுகின்றது.

பட்டிப்பளை என்று சொல்லப்படுகின்ற எமது தமிழ்ப்பிரதேசம் இப்பொழுது கல்லோயாவாக மாற்றப்பட்டு முற்று முழுதாக சிங்கள மயப்படுத்தப்பட்டிருக்கிறது.

கொல்லன்வெளி எனச் சொல்லப்படுகின்ற இடங்கள் சிங்களப்பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.

குடியேற்றம் மட்டுமல்ல தமிழர்கள் குடியேற்றங்களில் மக்களை இராணுவத்தினர் துரத்திவிட்டு இரவோடு இரவாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர்.

இது எமது கண்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கிற வரலாறு. காலங்காலமாக பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை கந்தளாயில் இருந்து இரவோடு இரவாக சிங்களக் காவல்துறையினர் கலைத்தனர்.

இதே போல தென்தமிழீழத்தில் ஒவ்வொன்று ஒவ்வொன்றாக சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

அம்பாறையையும் மட்டக்களப்பையும் துண்டு போடுவதும்

திருகோணமலையையும் மட்டக்களப்பையும் துண்டு போடுவதும்

திருகோணமலையையும் வட தமிழீழத்தையும் துண்டு போடுவதும்

என தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள மயமாக்குவதே சிங்களப் பயங்கரவாதத்தின் நீண்ட காலக்கொள்கையாகும்.

இலங்கையின் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உண்மை நிலை இது தான்.

மணலாறு சிலோன் தியேட்டரில் பூர்வீகமாக இருந்த மக்கள் சிங்களக் காடையர்களால் அடித்து விரட்டப்பட்டு தற்போது முள்ளியவளையிலும் தண்ணீரூற்றுப் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

சிங்கள இனவாத அரசானது சிங்களக் குடியேற்றங்களை நிறுவி அதற்குப் பாதுகாப்பாக இராணுவ முகாம்களை நிறுவி நீண்ட கால இன அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது.

வரலாறு எமக்குப் பாடங்களைக் கற்றுத்தருகின்றது. ஒவ்வொரு இன அழிப்புக்கு எதிராக அன்றைய எமது அரசியல் தலைவர்கள் அகிம்சை வழியில் போராடிய போதும் எதுவித பலனும் கிடைக்கவில்லை.

இறுதியாக மக்களிடம் அன்றைய தமிழ்த் தலைவர்கள் கேட்டார்கள், "எமக்கு தமிழீழ தனியரசுதான் தேவை. இதற்கு நீங்கள் சம்மதமா?" என்று.

மக்கள் அப்போது நடந்த ஜனநாயகத் தேர்தலின் ஊடாக தமிழீழத் தனி அரசு தான் எமக்கு தேவை என ஆணையைத் தந்தார்கள்.

அது மட்டுமல்ல தொடர்ந்து நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் ஆணையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.

அதாவது, அகிம்சை வழியில் அபிலாசைகள்- எதிர்ப்பார்ப்புக்களை- சிங்களவர்களிடம் இருந்து ஒருபோதும் பெற முடியாது என்பது கடந்தகால வரலாறு.

அதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலின் கீழ் சுதந்திர தமிழீழ தேசத்தினை அமைப்பதற்காக விடுதலைப் போராட்டத்தினை நடத்தி மிகப்பெரிய அர்ப்பணிப்புக்களையும் சாதனைகளையும் செய்கின்றார்கள், தியாகங்களைப் புரிகிறார்கள்.

தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக சகலவற்றையும் அர்ப்பணிக்கின்ற விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்கிறோம் நாம். இதனை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே யதார்த்தம்.

புலம்பெயர்ந்த வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களும் இங்கு வாழ்கின்ற மக்களும் தனியரசுதான் வேண்டும் என்று சொல்கிறார்கள். சிறிலங்கா அரசிற்கு எத்தனையோ பெரிய வல்லரசுகள் உதவி செய்கிறது.

ஆனாலும் கூட முப்பது வருடங்களாக விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது உள்ளது. சிலவேளைகளில் நாம் சில தந்திரோபாய பின்வாங்குதல்களை மேற்கொண்டு அதன்பின்னர் அதைவிட இரட்டிப்புப் பாய்ச்சல்களை மேற்கொள்வது வழக்கம். இது எமது போரியல் தந்திரோபாயமாகும்.

எமது இயக்கத்தின் வளர்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும் சிங்கள இராணுவத்திற்கு ஏற்படுகின்ற தோல்வியில் தெரிகிறது.

சிங்கள அரசினது திட்டமாக தமிழர் தாயகப்பகுதிகளை முற்று முழுதாக கைப்பற்றி முழு இலங்கைத் தீவினையும் சிங்கள மயப்படுத்துவதேயாகும். இதற்கு எதிராக உலகத்தில் வாழ்கின்ற எட்டுக்கோடி தமிழர்களும் ஒன்றுபட்டு எழ வேண்டும் என்றார் பா. நடேசன்.

Tuesday, May 27, 2008

பால்ராஜ

இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர் புகழாரம்
[வியாழக்கிழமை, 22 மே 2008, 07:36 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
மே 21, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,

விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது.

பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.

தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.

பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
………………
(வே.பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.



நிகழ்கால வீரத்தின் குறியீடு பிரிகேடியர் பால்ராஜ்: யோகி
[புதன்கிழமை, 21 மே 2008, 07:13 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்கால வீரத்தின் குறியீடாக விளங்குகின்றார் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்.

யோ.செ.யோகி வழங்கிய நினைவுப் பகிர்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் போராட்டத்தில் காலத்துக்கு காலம் வீரத்தின் குறியீடாக ஒவ்வொருவர் விளங்குவர். எத்தனை வீரர் இருந்தாலும் குறியீடாக ஒரு சிலரே விளங்குவர்.

இன்றைய காலத்தில் தமிழீழ வீரத்தின் குறியீடாக பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் விளங்குகின்றார். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை எண்ணுவதனை களத்தில் செய்து முடிப்பவராக பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் விளங்கினார்.

வன்னி-முல்லைத்தீவு-மணலாறு களங்களில் மேஜர் பசீலன் அவர்களுடன் இணைந்து எதிரிக்கு எதிராக களமாடிய பால்ராஜின் திறன்களை இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் மணலாறு காட்டுக்குச் சென்ற தமிழீழத் தேசியத் தலைவர் அடையாளம் காண்கின்றார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் உயர்நிலைத் தளபதிகள் எல்லோரும் வியந்து ஏற்கும் திறன் கொண்டவராக செயற்பட்டார்.

தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் எண்ணுவதனை களத்தில் செயற்படுத்துபவராக பிரிகேடியர் பால்ராஜ் விளங்குகின்றார்.

தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நிகழ்கால வீரத்தின் குறியீடாக அவர் விளங்குகின்றார் என்றார் அவர்.


அதியுச்ச உழைப்பு முழுவதையும் விடுதலைப் போராட்டத்துக்கு அளித்த பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ்: கேணல் தீபன்
[வியாழக்கிழமை, 22 மே 2008, 07:58 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ் என்று வட போர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் புகழாரம் சூட்டினார்.

கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் கேணல் தீபன் ஆற்றிய வீரவணக்க உரை:

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் இந்த விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ்.

பிரிகேடியர் பால்ராஜ் களத்தில் நிற்கின்றார் என்றால் சிங்களப் படையினர் ஒவ்வொருவனுக்கும் குருதி உறையும். எதிரிகளுக்கு நடுங்கும். எதிரியை கலங்கவைத்து எதிரியை சிதறடித்து இந்த விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனைகளுக்கு காரணமாக இருந்த முதன்மைத் தளபதியாக தளபதி பால்ராஜ் விளங்குகின்றார்.





தளபதி பால்ராஜ் என்றால் ஒவ்வொரு சிங்களப்படைக்கும் தெரியும். அந்தளவுக்கு எதிரிக்கு சிம்ம சொர்ப்பனமாக தளபதி பால்ராஜ் விளங்கினார்.

ஒவ்வொரு போராளிகளையும் உணர்வூட்டி அவர்களை எந்த எதிரிக்கும் எதிராக கிறங்காது பதற்றம் இல்லாமல் நின்று சண்டையிட வைப்பார். அந்தளவுக்கு போராளிகளுக்கு உறுதியையும் உற்சாகத்தையும் கொடுத்து தானும் களத்தில் உறுதியாகவும் உற்சாகமாகவும் நின்று வெற்றிகளுக்காக உழைப்பார்.

சண்டைக்களங்களில் அவரின் உறுதி- வீரம்- துணிச்சல்- ஆளுமை எல்லாவற்றையும் பார்க்கலாம்.

சாள்ஸ் அன்ரனி படையணியை உருவாக்கும் பொறுப்பு தேசியத் தலைவரால் அவருக்கு வழங்கப்பட்ட போது அதனை உருவாக்க முழுதாக உழைத்தார்.

இன்று எதிரிக்கு சிம்ம சொர்ப்பனமாக சாள்ஸ் அன்ரனி படையணி இருக்கின்றது எனில் அதற்கு தளபதி பால்ராஜ்தான் பின்னணியில் இருக்கின்றார்.





ஆனையிறவு வெற்றிகொள்ளப்பட குடாரப்பில் தரையிறங்கி எதிரியின் வியூகத்துக்குள் 34 நாட்கள் உறுதியாக நின்று வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

34 நாட்களும் அவர் எதிரியின் உச்சபலத்துக்குள் உறுதியாக நின்று எதிரி நியமித்த 5 தளபதிகளையும் தோற்கடித்தார்.

பால்ராஜின் வரலாறு அழிக்கப்பட முடியாதது. ஆழமாக முத்திரையை அவர் பதித்துள்ளார்.

வீரம் என்றால் தளபதி பால்ராஜ் வீரத்துக்கு மறுபெயர்- துணிவுக்கு மறுபெயர் தன்னம்பிக்கைக்கு மறுபெயர்.

அவரின் வரலாறு அவரது வீரம் நம் எல்லோரிடமும் இருக்கவேண்டும்.

"நாம் எப்போதும் வீழ்ந்திடலாம். நம் போராட்டத்தின் வீச்சு- வேகம் ஒவ்வொருவரின் இழப்புக்களிற்குள்ளாகவும் வரவேண்டும்" என்பார் பால்ராஜ்.





போராட்டம் என்றால் இழப்புக்கள் ஏற்படும். இழப்புக்கள் இல்லாமல் போராட்டத்தை வெல்ல முடியாது. தளபதிகள் பலர் தம்மை அர்ப்பணித்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரதும் இழப்புக்களும் எமது போராட்டத்தை வீச்சாக்கித்தான் இருக்கின்றது.

அவர்கள் தமது வீரத்தையும் வரலாற்றையும் தந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

அதனை நாம் உள்ளத்தில் நிறுத்த வேண்டும்.

பிரிகேடியர் பால்ராஜின் கனவு அவரது எதிர்பார்ப்பு எதற்காக அவர் தன்னை ஈய்ந்தாரோ அதனை நாம் உறுதியாக நிறைவேற்றுவோம்.

அவரது வீரத்தையும் வரலாற்றையும் உழைப்பையும் நம் உள்ளத்தில் எடுத்துக்கொண்டு அவரது எண்ணங்களை கனவுகளை நாம் நிறைவேற்ற உழைப்போம். அதற்கு எல்லோரும் தயாராவோம் என்றார் கேணல் தீபன்.

கிளிநொச்சியில் பிரிகேடியர் பால்ராஜின் வீரவணக்க நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பணிமுதல்வர் பொன். தியாகம் ஏற்றினார்.

வித்துடலுக்கான ஈகச்சுடர்களை பிரிகேடியர் பால்ராஜின் உடன்பிறப்புக்களான சந்திரசேகரம், ஞானசேகரம் ஆகியோர் ஏற்றி மலர்மாலைகளைச் சூட்டினர்.

வட போர்முனை கட்டளைத்தளபதி கேணல் தீபன், போர்ப்பயிற்சி ஆசிரியர் தினேஸ், தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலன், நீதி- நிர்வாகப் பிரிவுப் பொறுப்பாளர் பரா, அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன், தளபதி வசந்தன், தளபதி குமணன், தளபதி வீமன், சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணித் துணைத் தளபதி அமுதாப், தளபதி முகுந்தன், மருத்துவப் பிரிவைச் சேர்ந்த தேவா உள்ளிட்டோர் மலர்மாலைகளைச் சூட்டினர்.

மாங்குளம்

பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மல்லாவியிலும் மாங்குளத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு உணர்வுபூர்வமாக வீரவணக்கம் செலுத்தினர்.

பிரிகேடியர் பால்ராஜின் வீரவணக்கக் கூட்டம் மல்லாவி மாவீரர் மண்டபத்தில் மல்லாவிக் கோட்டப் பொறுப்பாளர் செம்மணன் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்சுடரினை வட போர்முனைத் தளபதிகளில் ஒருவரான ஜெரி ஏற்ற, ஈகைச்சுடரேற்றி மலர்மாலையை உடன்பிறப்பு சந்திரன் சூட்டினார்.

அவரைத் தொடர்ந்து மலர்மாலையை உடன்பிறப்பு ஞானம், மருமகன் சதீஸ், தளபதி கேணல் றமேஸ் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன், தளபதி குமரனின் துணைவியார், சாள்ஸ் அன்ரனி துணைத்தளபதி அமுதாப், திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதி வசந்தன், மல்லாவி மத்திய கல்லூரி அதிபர் யேசுதானந்தன், யோகபுரம் மகாவித்தியாலய முதல்வர் யோகானந்தர், பாலிநகர் பாடசாலை முதல்வர் கிருஸ்ணபிள்ளை, மல்லாவி வட்ட தேசியப் பணிக்குழுச் செயலாளர் சுந்தரலிங்கம், கனகராயன்குள கோட்டப் பொறுப்பாளர் ஞானவேல், ஆலங்குள மாவீரர் துயிலும் இல்லப் பொறுப்பாளர் இளம்பிறை ஆகியோர் சூட்டினர்.

வீரவணக்க உரையை தளபதி றமேஸ் ஆற்றினார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.

வித்துடல் மாங்குளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.


சமர்க்களங்களின் சரித்திர நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
[புதன்கிழமை, 21 மே 2008, 05:56 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.

இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.



இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

1990 ஆம் ஆண்டில் கொக்காவில் - மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.

முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் "கடற்காற்று" எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.



வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "வன்னிவிக்கிரம" நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான "ஆகாய- கடல்வெளி"ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.

மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "மின்னல்" நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.

இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.



யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட "யாழ்தேவி" நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.

1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட "முன்னேறிப்பாய்தல்" முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.

யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த "சூரியக்கதிர்" நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.


வாகரையில் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பிரிகேடியர் பால்ராஜ்

வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த "ஜெயசிக்குறு" நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட "ஓயாத அலைகள் - 02" நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.

தொடர்ந்து "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.

2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட "தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.

போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார்.

பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.