Saturday, March 1, 2008

இராணுவ முன்நகர்வுகளை நியாப்படுத்தவே 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம்: ஹக்கீம் குற்றச்சாட்டு

இராணுவ முன்நகர்வுகளை நியாப்படுத்தவே 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம்: ஹக்கீம் குற்றச்சாட்டு
[சனிக்கிழமை, 01 மார்ச் 2008, 09:15 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்]
தமது இராணுவ முன்நகர்வுகளை நியாயப்படுத்தவே 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்வைத்துள்ளார் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவத்தின் முக்கிய பகுதிகள்:

கிழக்குத் தேர்தலை சுதந்திரமானதும், நியாமானதும் என உங்களால் குறிப்பிட முடியுமா?

முஸ்லிம் பகுதிகளில் குறிப்பிட்ட அமைச்சரினால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர வேறு பிரச்சினைகள் இல்லை.

எங்களால் சமாளிக்கக்கூடிய நிலையிலேயே உள்ளது. சட்டம், ஒழுங்கு என்ற பொறிமுறை நியாயமானதாக இருப்பதனையே நாம் விரும்புகின்றோம்.

சில காவல்துறை அதிகாரிகளின் செயற்பாடுகள் சட்டத்திற்கு புறம்பான வகையில் அமைந்துள்ளன.

தமிழ்ப் பிரதேசங்களின் இந்த நிலைமை மிகவும் மோசமாகவே அமைந்துள்ளது. குறுகிய காலத்தில் சுமூக நிலைமை என்பது சற்று சாத்தியமில்லாத விடயமாகவே தோன்றுகிறது.

தேர்தல் ஒன்றை நடத்துவதன் மூலம் பிரதேசத்தில் சுமூக நிலை திரும்பியுள்ளதாக வெளிக்காட்ட அரசாங்கம் எண்ணினால் அதுவொரு மாயையாக கருதுகின்றேன்.

நிர்க்கதியான தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் குழம்பிப் போயுள்ளனர்.

ஆயுதக் குழுவொன்றிற்காகவா? அல்லது வேறும் தரப்பிற்காகவா? என்பதில் குழம்பிப்போயுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகர சபை தேர்தல்களுக்காக அரசாங்கம் வெட்கமின்றி பல தமிழ் ஆயுதக் குழுக்களை தமது பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளது.

அப்பகுதி மக்கள் அடைந்திருக்கும் ஏமாற்றத்தினை எங்களால் உணரக்கூடியதாக உள்ளது.

சட்டம், ஒழுங்கு சீர்குலைவதற்கான அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. மக்களின் அதிருப்தி காரணமாக அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் நிராகரிக்கப்படக்கூடிய அபாயம் நிலவுகிறது.

இந்தத் தேர்தல்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் போட்டியிடவிட்டால் தேர்தல்கள் ஒரு அர்த்தமற்ற நடவடிக்கையாக அமையக்கூடிய வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

நீங்கள் சுமூக நிலைமைப் பற்றி கூறினீர்கள். அரசாங்கத்தின் கிழக்குப் புனரமைப்பு பணிகளின் என்ன குற்றங்களை அவதானிக்கின்றீர்கள்?

மீள்குடியமர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும் 25,000-க்கும் அதிகமானோர் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லை.

அரசாங்கம் காவல் நிலையங்கள் போன்றவற்றினை நிறுவுவதன் மூலம் பிரதேசத்தில் வழமை நிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

ஓர் இரவில் ஆயுதக் குழுக்களை மாற்ற முடியாது என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசாங்கம் செயலாற்றுகிறது.

இந்த முறையில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுவதை மக்கள் மறுதலிப்பார்கள். மக்கள் அரசாங்கத்தின் மீது பயம் கலந்த வெறுப்புடனே காணப்படுவர்.

மக்கள் மீது தலைமைத்துவமொன்றை திணிக்க அரசாங்கம் முற்படுகின்றது.

அவர்களுக்கு சுதந்திரமாக தமது தலைமைகளை தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. இதுவொரு மிக மோசமான அணுகுமுறையாகும். ஜனநாயக சக்திகளின் செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மக்களின் தீர்மானத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் முஸ்லிம் மக்களை இந்த அரசாங்கம் புறக்கணித்துள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்களா?

இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களை தனியான மக்கள் பிரிவு என்ற கோணத்தில் பார்ப்பதற்கு தயாராக இல்லை.

இந்த அரசாங்கத்துடன் இது குறித்து வாதிடுவது முட்டாள்த்தனமான செயலாகும். இந்த விடயம் குறித்து அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்துவது ஒரு அர்த்தமற்ற செயலாகவே நாம் கருதுகின்றோம்.

தென்பகுதி மக்களை திருப்திபடுத்தும் நோக்கிலேயே அனைத்து கட்சிக் குழு பரிந்துரைகளை இந்த அரசாங்கம் முன்வைத்தது. எனினும் நாட்டின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பவற்றை இணைத்துக் கொள்ளாத இந்த அனைத்து கட்சிக்குழுவின் பயன் என்ன?

வடக்கில் அதிக அதிகாரம் கொண்ட அரசியல் சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அனைத்து கட்சிக் குழுவின் பரிந்துரைகளின் இறுதி அறிக்கை தயாரிப்பதற்கு அதன் தலைவர் முயற்சிகள் மேற்கொள்ளும் போது அதற்குள் 13 ஆவது திருத்தத்தை நுழைத்து அனைத்து கட்சிக் குழுவினரை அதனை ஆமோதிக்குமாறு மகிந்த கோரியுள்ளார்.

இந்த நிலைமைகளின் கீழ் அரசாங்கம் காத்திரமான அரசியல் தீர்வொன்றை நோக்கிச் செல்லும் என்பதில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை.

இராணுவ முன்நகர்வுகளை நியாப்படுத்தும் ஒரு தற்காலிக முயற்சியாக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை நாம் நோக்குகின்றோம்.

அனைத்துலக சமூகத்தை அமைதிப்படுத்துவதற்கான கண்துடைப்பே இந்த நடவடிக்கைகள்.

மகிந்தவும், ரணிலும் இணைந்து செயற்படுவதன் மூலம் சிறுபான்மை கட்சிகளின் பலம் குறைந்து விடும் என்பது பற்றி நீங்கள் அக்கறை செலுத்துகின்றீர்களா? உதாரணமாக முஸ்லிம் காங்கிரசின் பலம்?

13 ஆவது திருத்தம் மற்றும் அதன் அமுலாக்கம் தொடர்பான புதிரை என்னால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு சில பகுதிகளை பிரித்து எடுக்காது அரசியல் சாசன சட்டங்களை முழுமையாக அமுல்படுத்துவது மகிந்தவின் கடமையாகும்.

மறுபுறத்தில் 17 ஆவது திருத்தம் தொடர்பாக குருட்டுக் கண்களுடன் நோக்குகின்றனர். சில அரசாங்கத்தரப்பு உறுப்பினர்கள் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் சிக்கல்கள் நிலவுவதாக குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அநேகமான சந்தர்ப்பங்களில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இந்த அரசாங்கம் எதிர்மறையாக செயற்பட்டு வருகின்றது.

இந்தியாவிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய உண்மையான தேவை தமது அரசாங்கத்திற்கு இருப்பதாக உணர்த்துவதற்காகவே இந்த 13 ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு ஒரு ஊடக பிரசாரமாகவே நாம் நோக்குகின்றோம். அவர்களின் சந்திப்பின் போதான அறிக்கைகளை உன்னிப்பாக நோக்கினால் இணக்கப்பாடுகளைவிட முரண்பாடுகளையே அதிகமாக காணக்கூடியதாக இருக்கும்.

இரண்டு கட்சிகளும் உண்மையான நோக்கில் இணைந்தால் அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைவோம் ஆனாலும் அவர்கள் தேர்தலை எவ்வாறு வெற்றி கொள்வது என்பதிலேயே அதிக அக்கறை செலுத்துகின்றனர்.

நாடாளுமன்றத்தில் தமது நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்கே அரசாங்கம் அதிக சிரத்தை காட்டி வருகிறது. ஏனெனில் அரசாங்கத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) முழுமையாக நம்பிச் செயற்பட முடியாது. இதனை தடுப்பதற்காகவே நாம் அரசாங்கத்தில் இணைந்துகொண்டோம்.

போர் தொடர்பாக பொதுமக்களின் அமைப்புக்களின் அழுத்தம் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவரை மகிந்த அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் மூலம் ஒரு நல்ல ஊடகப் பிரச்சாரத்தை அவர் பெற்றுக்கொண்டார் அவ்வளவுதான், அதனைத் தவிர இதன் மூலம் வேறு எதனையும் நான் விளங்கிக்கொள்ளவில்லை.

இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவே அந்த சந்திப்பு நடைபெற்றதாக மக்கள் விடுதலை முன்னணியினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்தியா தொடர்பான முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு என்ன? இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவினால் பாரிய பங்களிப்பு வழங்க முடியும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

அரசியல் தீர்வொன்று தொடர்பாக இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்ற அச்சத்தின் காரணமாகவே மக்கள் விடுதலை முன்னணி இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. ஆனந்தசங்கரியின் பேட்டியொன்றை நான் வாசித்தேன். அதில் அவர் ஏற்கனவே வழங்கிய பங்களிப்புக்கள் பற்றி கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்ள நிறைய விடயங்களை செய்ய வேண்டியிருக்கும்.

அரசியல் அரங்கில் தம்மை தக்க வைத்துக்கொள்வதற்கான உத்திகளாகவே மக்கள் விடுதலை முன்னணியின் இந்த செயற்பாடுகளை நாம் காண்கிறோம்.

இந்தியா எப்போதும் உரிமைகளுக்கு மதிப்பளிக்ககூடிய நாடாகும். எனினும், சில வேளைகளில் சுயநலவாத சிந்தனையுடன் சில முன்நகர்வுகளை மேற்கொள்ளும். பொருளாதார உறவுகளின் போது வெளிப்படைத்தன்மை மிக அவசியமாகும். பின் கதவுகள் வழியாக நீங்கள் இவற்றை செய்ய முடியாது.

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினாலும், நாடாளுமன்றத்தில் குறித்த விடயம் பற்றி அறிவிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் கட்சித் தலைவர்களுக்கேனும் இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இதன்மூலம் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படும்.

அரசாங்கத்தின் மீதான உங்களது குற்றச்சாட்டுகள் தாமதமாகவே முன்வைக்கப்படுகின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் நீங்களும் குறிப்பிட்ட அரசாங்கத்தின் ஓரு அங்கமல்லவா? அவ்வாறு எனின் இவ்வளவு மோசமான அரசாங்கத்தில் ஏன் ஓராண்டு காலம் அங்கம் வகித்தீர்கள்?

ஆனாலும், அமைச்சரவையில் கூட நானொரு புரட்சிகரமான உறுப்பினராகவே நோக்கப்பட்டேன். மிக முக்கியமான விடயங்களின் போது குறிப்பாக இனம், ஊடகம் போன்ற பிரச்சினைகளின் போது தனித்து நின்று அரசாங்கத்துடன் போராடினேன். நான் அரசாங்கத்தை மிகக் கடுமையாக விமர்சிப்பவன். இவ்வாறான முரண்பாடுகளுடன் அரசாங்கத்தில் நிலைத்திருப்பது மிகவும் கடினமான காரியமாகவே அமைந்தது. அனேகமான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் நான் விமர்சிக்கப்பட்டேன் அல்லது புறக்கணிக்கப்பட்டேன்.

ஏனெனில் நான் தனித்து நின்று அவர்களை சரியான பாதைக்கு இட்டுச் செல்ல பிரயத்தனம் செய்தேன். அனைத்து விடயங்களிலும் முஸ்லிம்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் நான் மிக உறுதியாக இருந்தேன்.

போதும் என்று எண்ணியது போதும் என்று நாங்கள் இப்போது உணர்கின்றோம் என்றார் அவர்.