Friday, November 30, 2007

குறிக்கோளுக்காக போராடும் புலிகளை கண்மூடித்தனமாக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் அமைப்புக்களுடன் ஒப்பிடுவது பொருந்தாது: உருத்திரகுமாரன்



[சனிக்கிழமை, 01 டிசெம்பர் 2007, 08:09 AM ஈழம்] [புதினம் நிருபர்]
குறிக்கோளுக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளை கண்மூடித்தனமாக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் அமைப்புக்களுடன் ஒப்பிடுவது பொருந்தாது என்று விடுதலைப் புலிகளின் அனைத்துலக சட்ட ஆலோசகர் வி.உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
சுவிசில் கடந்த செவ்வாய்க்கிழமை (27.11.07) நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் அவர் பேசியதாவது:

தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு செயல் உரம் மற்றும் செயல் உருவம் கொடுப்பதற்காகவும்

தமிழ்த் தேசிய இனத்தின் பாரம்பரிய நிலப்பரப்பின் ஆட்புல ஒருமைப்பாட்டை பேணுவதற்காகவும்

தமிழ்த் தேசியத்தின் இறைமையை பிரயோகிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்காகவும்

தமிழ்த் தேசியத்தின் அரசியல் நகர்வுகளுக்கு அடிப்படையான தளங்களாக அமைந்தவர்களாகவும்

தமிழ்த் தேசிய இனத்தின் சமாதான முன்னெடுப்புக்கும் சமரசப் பேச்சுவார்த்தைக்கும் அத்தியாவசியமான சமபல நிலையை உருவாக்குவதற்கு தம் உயிர்களை ஈந்த மாவீரர்களை வணங்க இங்கு கூடியிருக்கிறோம்.

தாயகத்தின் விடியலுக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களை உலகெங்கும் வாழும் தமிழினம் என்றும் மறவாது.

இந்த மாவீரர்கள் எந்த அரசியல் கொள்கைகளுக்காக தமது உயிர்களை ஈகம் செய்தார்களோ, அந்த அரசியல் கொள்கைகளுக்கு நாமும் எம்மை அர்ப்பணித்து, அவர்களின் தியாகங்களை வலுப்படுத்தி அவர்கள் காட்டிய வழியில் சுதந்திர விடியலுக்கு எம்மை அர்ப்பணிப்போம் என்று நாம் இன்று திடசங்கற்பம் பூணுவோம்.

சமாதான காலம்

பேராசிரியர் லிபியின் கூற்றின்படி "ஒரு சமரச அரசியலுக்கு, ஒரு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சம பலநிலை அவசியம்."

தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டது போல்- அக்கினிச்சுவாலையின் மூலம் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வினைக் காண முடியாது என்ற கசப்பான உண்மையை சிங்களப் பேரினவாதத்திற்கு எடுத்துக்காட்டினோம்.

பின்னர் சமபல நிலையில் இருந்துகொண்டு தமிழ் இனத்தின் எழுச்சி வடிவமான- தமிழ் இனத்தின் உணர்ச்சியின் பிரதிபலிப்பான- தமிழீழ விடுதலைப் புலிகள்,

சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்குமாறு,

இராஜதந்திரத்துக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்குமாறு,

போரினால் சிதையுண்ட தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்குமாறு,

போரினால் அகதிகளாக்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்த ஒரு சந்தர்ப்பம் அளிக்குமாறு,

அங்கு ஒரு அபிவிருத்தியைக் கொண்டு வருவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு

2001 ஆம் ஆண்டு ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்து சமரச அறைகூவல் விடுத்தனர்.

அந்த சமரச அறைகூவல், அந்த ஒரு தலைப்பட்சமான போர்நிறுத்தம்- அனைத்துலக சமூகத்தின் அனுசரணையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமாக பரிணமித்தது.

ஏழு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்ததையும் நாம் அறிவோம்.

ஒரு தீவில்- எந்தவொரு அரசியல் சமுதாயத்திலும் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமாயின் அங்கு ஒரு அரசியல் சமுதாயம் இருக்க வேண்டும். ஆனால் சிறிலங்காத் தீவில் ஒன்றுபட்ட சமுதாயம் இல்லை. அங்கு தமிழ்ச் சமுதாயம், சிங்கள சமுதாயம் என இரண்டு வேறுபட்ட சமுதாயங்கள்தான் இருக்கின்றன. ஒன்றுபட்ட ஒரு சமுதாயம் அங்கு இல்லாத காரணத்தினால் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை உடனடியாகக் கொண்டுவர முடியாது என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் உணர்ந்தார்கள்.

ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு அத்தியாவசியமான அந்த ஒன்றுபட்ட சமுதாயத்தை ஒரே இரவில் கட்டி எழுப்ப முடியாது என்பதையும் உணர்ந்தனர்.

அத்தகைய ஒன்றுபட்ட சமுதாயத்தை பரஸ்பர நல்லெண்ணத்தின் மூலமும் பரஸ்பர நம்பிக்கையின் மூலமும்தான் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றுகூறி தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக பேச்சுவார்த்தையின் உடனடிக் குறிக்கோள் இடைக்கால நிர்வாகம்தான் என்பதை அறிவித்தனர்.

சூடானின் "மெக்காக்கா" உடன்படிக்கையானாலும் சரி,

"போகன்வெல்லா" உடன்படிக்கையானாலும் சரி,

வட அயர்லாந்து "குட் பிறைடே" ஒப்பந்தமானாலும் சரி

இந்த அடிப்படையில் ஒரு இடைக்காலத் தீர்வை முன்னிறுத்தியே சமாதான உடன்படிக்கைகளாக எழுப்பப்பட்டன.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிங்களத்தரப்பு வடக்கு-கிழக்கில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது எனக்கூறி தேர்தலில் வெற்றி பெற்றது. பேச்சுவார்த்தைக்கும் வந்தார்கள். பேச்சுவார்த்தைக்கு வந்த பின்னர் தாங்கள் இடைக்கால நிர்வாகம் குறித்து பேசினால் அரச தலைவர் தமது ஆட்சியைக்கலைத்து பேச்சுவார்த்தையையும் குழப்பி விடுவார் என்றார்கள்.

அந்த நிலையிலேயே பேச்சுவார்த்தை குலைந்து விடக்கூடாது என்ற ஓரே காரணத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் நெகிழ்வுதன்மை காட்டி இடைக்கால நிர்வாகத்தை வலியுறுத்தாமல் பெருந்தன்மையாக இருந்தார்கள்.

தமிழர் தாயத்தில் இயல்பு நிலையை தோற்றுவிப்பதற்கு இடைக்கால நிர்வாகத்தை அமைக்க முடியாமல் போனதையடுத்து அதனை மாற்று வழிகளில் அமைத்துக்கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்தனர். இந்த அடிப்படையில்தான் உப குழுக்கள் அமைக்கப்பட்டன. தமிழர் தாயகத்தின், தமிழர் பாரம்பரிய பிரதேசங்களின் அபிவிருத்திக்காவும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்காகவும்தான் இந்த உப குழுக்கள் அமைக்கப்பட்டன.

ஆயினும் இந்த உபகுழுக்களில் சிறிலங்கா அரசையும்- சிங்களத்தரப்பையும்- சம பங்காளர்களாக ஏற்று, இந்த குழுக்களில் அவர்களுக்கும் சம பங்களிப்பு கொடுத்து தமிழர்களின் அலுவல்களில் அவர்களுக்கு "வீட்டோ பவர்" கொடுத்ததையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிங்களத்தரப்பிற்கு சம பங்களிப்பு கொடுக்கப்பட்டு தமிழர்களின் அலுவல்களில், தமிழர்களின் அபிவிருத்தியில் அவர்களுக்கு "வீட்டோ பவர்" கொடுக்கப்பட்டதன் காரணமாக அங்கு எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை.

எடுக்கப்பட்ட முடிவுகளைக்கூட ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் காரணம் காட்டி சிங்களத்தரப்பு அமுல்படுத்தவில்லை.

இப்படி முடிவுகள் எடுக்கப்படாததாலும், எடுக்கப்பட்ட முடிவுகள் அமுல்ப்படுத்தப்படாமையினாலும் உருவாக்கப்பட்ட அந்த குழுக்கள் செயலிழந்து போயின.

இடைக்கால தன்னாட்சி அதிகார சபை

இதனால் தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியையும் மீள்குடியேற்ற புனரமைப்பு வேலைகளையும் செய்வதற்கான புதிய வழியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையின் மூலம் முன்வைத்தார்கள்.

இந்த காலத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்ட முக்கியமான சரத்துக்களை சிங்கள இராணுவம் அமுல்படுத்தவில்லை.

நடந்து முடிந்த சமாதானப் பேச்சுக்களில் எடுத்த முடிவுகளை சிங்களத்தரப்பு அமுல்படுத்தவில்லை.

எனவே போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துங்கள்,

எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்

என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையை அன்று இடைநிறுத்தினார்கள்.

பேச்சுவார்த்தையை இடைநிறுத்தினாலும் சமாதான வழியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் விலகவில்லை. போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து அவர்கள் விலகவில்லை.

2003 ஆம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் 31 ஆம் நாள், இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்குரிய பிரேரணையை தமிழீழ விடுதலைப் புலிகள் சமர்ப்பித்தார்கள். அது சமர்ப்பிக்கப்பட்தைத் தொடர்ந்து அமைச்சுக்களின் பதவிகளை சிறிலங்கா அரச தலைவர் பறித்து ஆட்சியைக் குலைத்து பேச்சுவார்த்தையையும் குலைத்ததை நாம் அறிவோம்.

கடந்த ஏழாண்டுகளாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் நோர்வேத் தரப்பினர் ஒரேயொரு முறைதான் தங்களது பணியை இடைநிறுத்தினார்கள். சிங்கள ஆட்சியாளர்கள் ஒத்துழைக்காமையே அவர்கள் தமது பணியை இடைநிறுத்துவதற்கு காரணமாகும்.

தமிழர் தரப்பில் பழியைப்போட்டு அவர்கள் தமது பணியை இடைநிறுத்தவில்லை. வெளிப்படையாகவே சிங்களத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு எந்தவொரு அக்கறையையும் காட்டவில்லை, பேச்சுவார்த்தைக்கு தேவையான எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை, முடிவை எடுக்கக்கூடிய நிலையிலும் என்ற அடிப்படையில் நோர்வே தனது பங்களிப்பை நிறுத்தியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை முன்வைத்தபோது கூட அந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையில் தமிழர் பிரதேசத்தை பற்றியதாக இருந்தாலும்கூட அதிலும் சிறிலங்கா அரசிற்கு- சிங்களத்தரப்பிற்கு- தமிழீழ விடுதலைப் புலிகள் பெருந்தன்மையாக அங்கத்துவம் வழங்கினர்.

ஆனாலும் உப குழுக்களில் சிங்களத்தரப்பிற்கு சம உரிமை கொடுத்ததன் காரணமாக அவை முடங்கியதால் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அறுதிப்பெரும்பான்மை கேட்டனர். இந்த அறுதிப் பெரும்பான்மையைக்கூட நிரந்தரமாக அவர்கள் கேட்கவில்லை. ஐந்து வருடங்களுக்கு மட்டும்தான் கேட்டார்கள். அந்த ஐந்து வருடங்களின் பின்னர் தேர்தல் மூலம் அங்கு ஒரு புதிய நிர்வாகத்தை அமைப்பதற்கு அவர்கள் வழிசமைத்தார்கள்.

சந்திரிகா பதவியில் இருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பத்து ஆண்டுகளுக்கு நிர்வாகம் தருவேன் என்று கூறியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே அறுதிப்பெரும்பான்மை கோரினார்கள்.

பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டு, பேச்சுவார்த்தை என்ற மாயையைக் காட்டிக்கொண்டு சிங்களத்தரப்பு தனது இராணுவப் பலத்தை அதிகரித்து வந்தது.

அதுமட்டுமல்ல, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் 2003 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்கள் தாக்கியழிக்கப்பட்டு 26 புலிகள் கொல்லப்பட்டனர்.

பேச்சுவார்த்தை குலைந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அந்த நேரத்திலும் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுமையைக் கடைப்பிடித்து சமரச வழிமுறைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டனர்.

அந்த கப்பல்கள் ஆயுதங்களைக் கொண்டு வந்தன என்று சிங்கள அரசால் நியாயம் கூறப்பட்டது. அந்த நியாயம் உண்மையாக இருந்தாலும் சரி, அந்த நியாயம் உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும் சரி, போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தமோ அல்லது எந்தவொரு சமாதான ஒப்பந்தங்களோ ஆயுதங்களைக் கொண்டுவரக்கூடாது என்று கூறவில்லை. அந்த வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் அந்த நியாயம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரண்பட்டதாகும்.

மகாபாரத கண்ணனை விட பெருந்தன்மையான புலிகள்

இந்த நிலையில்தான் புதிய அரசு பதவிக்கு வந்தது. புதிய அரசு பதவிக்கு வந்த பின்னர் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கள் அறிந்தவையே. எனினும் புலிகளையும் சிங்கள அரச தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு போகுமாறு அனைத்துலக சமூகம் மீண்டும் அழுத்தம் கொடுத்தது.

கடைசியாக ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பாரதத்தில் கண்ணன்

முதலில் பாதி இராச்சியம் கேட்டான்,

பாதி இராச்சியம் கிடைக்காவிடில் ஐந்து ஊர்கள் கேட்டான்,

ஐந்து ஊர்கள் கிடைக்காவிடில் ஐந்து வீடுகள் கேட்டான்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணனிலும் பார்க்க பெருந்தன்மையாக நடந்தார்கள்.

கடந்த ஜெனீவா சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது போர்நிறுத்த விதிகளை அமுல்படுத்துங்கள் என்று சிங்களத் தரப்பிடம் தமிழர்கள் கேட்கவில்லை.

போர் நிறுத்தங்களுக்கு முரணாகவுள்ள இராணுவ வலயங்களை அகற்றுங்கள் என்று சிங்களத் தரப்பிடம் கேட்கவில்லை.

போர் நிறுத்தங்களுக்கு முரணான துணைக்குழுக்களின் ஆயுதங்களைக் களையுங்கள் என்று சிங்களத் தரப்பிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரவில்லை.

போர் நிறுத்தத்திற்கு முரணான சம்பூர் ஆக்கரமிப்பை விட்டு விலகுங்கள் என்று சிங்களத் தரப்பிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரவில்லை.

ஆக என்ன கேட்டார்கள்?

நடமாடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக-

வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் பிரிந்திருக்கும் உறவுகளை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்காக,

தலைவர் கூறியதைப் போல- யாழ். குடாநாடு ஒரு திறந்த சிறைச்சாலையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக,

ஆறாண்டுகால சமாதான வழிப்பூக்களில் தமிழ் மக்ளுக்கு கிடைத்த ஒரேயொரு சமாதான பலனான அந்த

ஏ-9 பாதையை திறவுங்கள்

என்றுதான் கேட்டார்கள்.

அந்த ஏ-9 பாதையைக்கூட திறப்பதற்கு சிங்களத்தரப்பு மறுத்து விட்டது.


மாவீரர் துயிலும் இல்லங்கள்
ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது சிங்களத்தரப்பு நோர்வேக்கு அழுத்தம் கொடுத்து உடனடி மனிதாபிமான தேவைகள் மட்டுமல்ல அரசியல் பேச்சும் கதைக்கப்பட வேண்டுமெனக் கோரினார்கள்.

பேச்சுவார்த்தை குலைந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகள், மனிதாபிமான விடயங்களுடன் அரசியல் குறித்தும் பேசுவதற்கும் நாங்கள் தயார் என்று கூறினார்கள்.

அரசியல் விடயம் குறித்து பேசுவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கூறியவுடன் சிங்களத் தரப்பு தம்மிடம் அரசியல் பொதி இல்லை என்றது.

அனைத்துக்கட்சி மாநாடு அமைத்துள்ளோம், 2006 ஆம் ஆண்டு இறுதிக்குள் அந்த அரசியல் பொதி வந்துவிடும், பொதி வந்தவுடன் நாங்கள் அதனைப்பற்றி பேசுவோம் என்றார்கள்.

2007 ஆம் ஆண்டு கடைசிக்கட்டத்தில் நாங்கள் இன்று நின்று கொண்டிருக்கிறோம். இன்றும் சிங்கள அரசிடமிருந்து ஒரு பொதியும் வரவில்லை.

தலைவர் குறிப்பிட்டது போல "சிங்கள இனம் கடந்த ஆறு தசாப்தங்களாக எந்தவொரு பொதியையுமே முன்வைக்கவில்லை" என்பது தமிழ்த் தேசியத்திற்கு நன்கு தெரியும்.

சிறிலங்காத் தீவில் இன்று இனப்பிரச்சினை தொடர்ந்து நடப்பதற்கு முக்கிய காரணம் சிங்கள இனத்திடம் தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பாக ஒரு ஒருமித்த கருத்து இல்லை என்பதே ஆகும்.

அதன் காரணத்தினால்தான் இன்று பேச்சுவார்த்தையை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல முடியாமல் இருக்கின்றது.

எனவே இந்த அடிப்படையால்தான் சுயநிர்ணய உரிமையின் படி எங்கள் உரிமையைக் கேட்டோம்.

தற்போதைய அரசு

இன அழிப்பில் ஈடுபட்டு,

போர்க் குற்றங்களில் ஈடுபட்டு,

மனிதாபிமானக் குற்றங்களில் ஈடுபட்டு,

மனித அடிப்படை உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபட்டு

அதன் கரங்களில்கூட கறை படிந்திருந்தாலும்

ஒரு விடயத்திற்காக இந்த அரசுக்கு நாம் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.

தென்னிலங்கை அரசியல் சக்திகள்

தமிழர் நிலைப்பாடு தொடர்பாக, தமிழர் தேசியப்பிரச்சினை தொடர்பாக தங்கள் நிலைப்பாடு என்னவென்பதில் இந்த அரசு வெளிப்படையாகவே இருந்து வருகிறது. எந்தவொரு தீர்வும் ஒற்றையாட்சியின் கீழ்தான் அமைக்கப்பட வேண்டுமென திரும்பத் திரும்ப இந்த அரசு கூறி வருகிறது.

டட்லி- செல்வா, பண்டா- செல்வா, இந்தோ-சிறிலங்கா உடன்படிக்கைகளில் அங்கீகரிக்கப்பட்ட தமிழர் தாயகம், வடக்கு-கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பூமி என்ற கோட்பாட்டை மீறி தமிழர் தாயத்தை இரண்டாக்கி இன்று கிழக்குப் பிராந்தியத்தில்-தலைவர் தன்னுடைய பேச்சிலே குறிப்பிட்டது போல் "அபிவிருத்தி வலயம், உயர்பாதுகாப்பு வலயம் எனக்கூறி, நான்காவது ஜெனீவா போர்ச் சட்டங்களுக்கு முரணாக சிங்கள மயமாக்கல் நிகழ்வதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

அது மட்டுமல்ல தமிழ்த் தேசிய இனத்தின் சமாதானப் புறாவான, தமிழ்த் தேசிய இனத்தின் பேச்சுவார்த்தையின் தலைவனான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை தமது கொலைப் பட்டியலில் முதன்மைப்படுத்தி வைத்திருந்தனர் என மார்தட்டிக்கூறி வருகின்றனர்.

சிங்களப் பேரினவாதம் தமிழ் இனத்திற்கும் அனைத்துலக சமுதாயத்திற்கும் கொடுக்கும் செய்திதான் என்ன என்பதனை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சிங்கள சமுதாயத்தில் தமிழீழ தேசியப் பிரச்சினை தொடர்பாக எவ்வாறானதொரு தீர்வை எந்த மாதிரியான அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்பதில் கூட அங்கு ஒரு கருத்தொற்றுமை இல்லை. கடந்த தேர்தலில் பேச்சுவார்த்தைக்கு எதிராகப் போட்டியிட்ட அமைச்சருக்கு அதாவது தற்போதைய அரச தலைவருக்கு ஐம்பது விழுக்காட்டுக்கும் மேலான சிங்கள மக்கள் வாக்களித்திருந்ததை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதாவது ஐம்பது விழுக்காட்டுக்கும் மேலான சிங்கள மக்கள் பேச்சுவார்த்தை மூலம் தமிழ்த் தேசியப் பிரச்சினையை தீர்க்க வேண்டாம் என்றுதான் கூறியிருக்கிறார்கள்.

கடந்த பொதுத்தேர்தலை புறக்கணித்ததை கடுமையாக விமர்சித்து வரும் அனைத்துலக சமுதாயம் இந்த கசப்பான உண்மையை கண்டும் காணாமலும் இருக்கின்றது.

ஆழிப்பேரலைக் கட்டமைப்பு

அதுமட்டுமல்ல ஆழிப்பேரலை ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையானவர்கள் வடக்கு-கிழக்கைச் சேர்ந்தவர்கள்.

அந்த ஆழிப்பேரலையைத் தொடர்ந்து அனைத்துலக சமுதாயம் ஆழிப்பேரலைப் பொதுக்கட்டமைப்பை அங்கு முன்வைத்தது. இது எந்தவொரு அதிகாரமும் அற்ற ஒரு பொதுக்கட்டமைப்பாகும்.

ஆயினும் இந்த பொதுக்கட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றார்கள். தமிழ்ச் சமுதாயமும் சிங்கள சமுதாயமும் ஒன்றாகச் சேர்ந்து இயங்கி பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல இந்த சந்தர்ப்பம் வாய்ப்பாக அமையும் என்பதனாலேயே இந்த பொதுக்கட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டார்கள். அதிகாரமற்ற இந்த ஆழிப்பேரலை பொதுக் கட்டமைப்பைக்கூட சிங்களப் பேரினவாதம் நிராகரித்து விட்டது.

சிறிலங்காவுக்கான அனைத்துலகத்தின் உதவி

இனி அடுத்து என்ன செய்வது என்பது தமிழ்ச் சமுதாயத்தின் கரங்களிலும் அனைத்துலக சமுதாயத்தின் கரங்களிலுமே உள்ளது.

சிறிலங்கா அரசாங்கம்- சிங்களத்தரப்பு- இன அழிப்பு படுகொலையை மேற்கொள்வதற்கு அனைத்துலக சமூகம் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்து வருகிறது.

அனைத்துலக மட்டங்களில் இதற்கு பல நியாயங்கள் சொல்லப்படுகின்றன.

பேச்சுக்காக ஆயுதமா?

பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்காகத்தான் சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் கொடுக்கின்றோம் என்று ஒரு நியாயம் கூறுகின்றார்கள்.

அப்படியானால் தமிழர் தரப்பை பலவீனப்படுத்தியா பேச்சுவார்த்தையை முன்னெடுக்கப் போகின்றனர்?

தமிழர் தரப்பை பலவீனப்படுத்தினால் எந்த அடிப்படையில் நாங்கள் தமிழர்களின் உரிமைகளைப் பற்றி பேசுவது?

அகிம்சையின் பால், அறத்தின்பால், தர்மத்தின்பால் 1956 ஆம் ஆண்டு தொடங்கி 1983 ஆம் ஆண்டுவரை தமிழர் தலைமைகள் நடத்திய புறக்கணிப்புக்கள், சத்தியாக்கிரகங்களுக்கு என்ன நடந்தன?

பேச்சுவார்த்தைக்கு அழைப்பே வரவில்லை.

தமிழர் தரப்பை பலவீனப்படுத்திய பின்னர் தமிழர் தரப்பு என்ன அடிப்படையிலேயே தமது நியாயமான உரிமைகளை பேச்சுவார்த்தை மேசையிலே வென்றெடுக்க முடியும்?

பயங்கரவாதத்துக்கு எதிரான உதவிகளா?

அனைத்துலக மட்டத்தில் இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.

தங்களின் உதவிகள் பயங்கரவாதத்திற்கு எதிரான உதவிகள் என்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு விடுதலை அமைப்பு. அனைத்துலகச் சட்டங்களின் கீழ் விடுதலை அமைப்பாக கருதப்பட வேண்டியதொரு அமைப்பு.

தலைவர் குறிப்பிட்டது போல "தரைப்படை, கடற்படை, வான்படை" என்று ஒரு இராணுவம் கொண்டதொரு அமைப்பு.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு நிகழ்வுபூர்வமான அரசை நடத்தி வருகின்றார்கள்.


நிகழ்வில் கலந்து கொண்ட மக்களில் ஒருபகுதியினர்
ஒரு குறிக்கோளுக்காக அவர்கள் போராடி வருகின்றார்கள்.

குறிக்கோளுக்காக போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளை அர்த்தமற்ற முறையில், கண்மூடித்தனமாக,

வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் ஏனைய அமைப்புகளுடன் ஒப்பிட்டு அதை பயங்கரவாதம் என்று கூறுவது ஒருவிதத்திலும் பொருந்தாது.

சிறிலங்கா உண்மையான ஜனநாயக அரசா?

அடுத்ததாக சிறிலங்கா அரசு ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசு என்பதால் நாம் அதற்கு உதவி செய்கிறோம் என்று அனைத்துலக மட்டத்தில் இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.

முதலில் ஜனநாயகம் என்றால் என்ன என்பதனை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

மில்க் கூறியது போல ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் ஏகாதிபத்தியம் அல்ல. ஜனநாயகம் என்பது இன்று சிறுபான்மையாக உள்ள ஒருவர் அல்லது இன்று சிறுபான்மையாக உள்ள இனம் பின்னர் காலச் சக்கரத்தில் ஒரு பெரும்பான்மையாக வந்து தன்னுடைய அரசியல் கருத்துக்களை வெல்வதற்கு வாய்ப்பளிப்பதுதான் ஜனநாயகத்தின் சாராம்சம்.

ஆனால் சிறிலங்காத் தீவில் இனவாதம் வேரோடியிருப்பதால் அங்கு எண்ணிக்கையில் குறைந்த சிறுபான்மையாக உள்ள தமிழினம் என்றுமே நிரந்தர சிறுபான்மையாகத்தான் உள்ளது. அமெரிக்கப் பேராசிரியர்கள் இது குறித்து பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். இலங்கைத் தீவில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலும் தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகத்தான் நடக்கின்றன என்பதே அவர்களுடைய ஒருமித்த கருத்தாகும்.

சிறிலங்காவில் நடைபெற்று வரும் ஜனநாயகம் என்று கூறப்படும் இந்தவிதமான ஜனநாயகத்தில் தமிழர்களுக்கு எந்தவிதமான உரிமையுமில்லை. இப்படியான ஒரு சட்ட ரீதியற்ற ஜனநாயகத்தை காரணமாகக் காட்டிக்கொண்டு அதற்காகத்தான் நாங்கள் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்குவதாக கூறுவது அனைத்துலக சமுதாயம் செய்யும் மிகப்பெரிய பிழையாகும்.

தென்னாசிய நிலைத்தன்மைக்கான உதவிகளா?

தலைவர் இன்று குறிப்பிட்டது போல் ஆசியா இந்த 21 ஆம் நூற்றாண்டில் மிக முக்கியமான பிராந்தியமாக வந்து கொண்டிருக்கிறது. இங்கு பல நாடுகள் தமது கேந்திர நலன்களுக்கான இடங்களை தேடுகின்றன.

இந்த அடிப்படையில் அனைத்துலகம் அடுத்ததாக கூறும் மற்றுமொரு காரணம்- தென்னாசியாவில் ஒரு நிலைத்தன்மையைக் கொண்டுவர வேண்டுமாம். அதற்காகத்தான் சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்குகின்றோம் என்று கூறுகின்றார்கள்.

எந்த அடிப்படையில் அந்த நிலைத்தன்மையை கொண்டுவரப் போகின்றனர்?

சிறிலங்காத் தீவில் இன்னொரு டார்பூரா?

சிறிலங்காத் தீவில் இன்னொரு சரபென்சாவா?

சிறிலங்காத் தீவில் இன்னொரு ருவாண்டாவா?

இந்த அடிப்படையிலா இங்கு ஒரு நிலைத்தன்மையைக் கொண்டுவரப் போகின்றனர்?

நிலைத்தன்மையைப் பற்றி பேசுவதற்கு முன்னர் எந்த சூழ்நிலையில் தென்னாசியாவில் ஒரு அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டுவர முடியும்?

தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டது போல அனைத்துலக சமுதாயம் இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்துள்ளது.

என்னதான் கேந்திர அரசியல் நலன்கள் இருந்தாலும், என்னதான் சுயநலன் இருந்தாலும் பூமிப்பந்து இன்னும் தர்மம் என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கின்றது. உண்மை

தோற்றதாக வரலாறு இல்லை. சத்தியம் சாய்ந்ததாக சரித்திரம் இல்லை. "தர்மம் தனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்" என்றார் உருத்திரகுமாரன

Thursday, November 29, 2007

இலங்கைப்பாராளுமன்றம் தேவையுமில்லை- ஆனால் அங்கு எமக்கு இரங்கல் உரை நிகழ்த்த அனுமதியும் வேண்டும்: புதினத்தின் முரண் வன்மம்

இரங்கல் தெரிவிப்பதிலும் இனப்பாகுபாடு: சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிங்கள பேரினவாத வெறி
[வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 04:21 PM ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களால் படுகொலை செய்யப்படும் தமிழ் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்க மறுத்த சிறிலங்கா நாடாளுமன்றம் கொழும்பு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோருக்கு இன்று இரங்கல் தெரிவித்து தனது பேரினவாத வெறியை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிக்கவே முடியாது சிங்களப் பேரினவாதிகள் நேற்று புதன்கிழமை முட்டுக்கட்டை போட்டிருந்தனர்.

இந்நிலையில் சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வு இன்று வியாழக்கிழமை காலை தொடங்கியது. நுகேகொட குண்டுவெடிப்பில் பலியான சிங்கள மக்களுக்கும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த டக்ளஸ் தேவானாந்தவின் அலுவலகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மாவிலாச்சியில் அண்மையில் உயிரிழந்த நால்வருக்கும் இரங்கல் செலுத்த வேண்டும் என்று ஜே.வி.பியின் விமல் வீரவன்ச கூறினார்.

இதற்கு சபாநாயகர் லொக்கு பண்டார அனுமதி அளித்தார்.

அப்போது, தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு-கிழக்கில் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் சேர்த்து இரங்கல் செலுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார். சபாநாயகரிடம் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றையும் முன்வைத்து உரையாற்ற எழுந்தார்.

சிவாஜிலிங்கம் உரையாற்ற சபாநாயகர் அனுமதி வழங்கினார். அப்போது அரச தரப்பினரும் ஜே.வி.பியினரும் சபாநாயகரை கடுமையாக விமர்சித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் நோக்கி ஆவேசமாகப் பாய்ந்தனர். கைகளைக்காட்டி பெரும் சத்தமிட்டு மிரட்டினர். சிவாஜிலிங்கம் உரையாற்றக்கூடாது என்றும் கத்தினர்.

இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரங்கல் செலுத்துமாறு சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து சிவாஜிலிங்கம் உரையாற்றும் போது கூறியதாவது :

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு இந்த நாடாளுமன்றில் இரங்கல் செலுத்தப்படுவதில்லை. இன்று நாமும் எழுந்து நின்றோம். வன்னியில் வான் குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களுக்கு பலியாகும் தமிழ் மக்களுக்கு இந்த நேரத்தில் இரங்கல் செலுத்தவே நாம் எழுந்து நின்றோம்.

நுகேகொடவில் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

சிவாஜிலிங்கம் இந்த உரையால் சபையில் இருந்த அரச தரப்பு உறுப்பினர்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருந்ததையும் காண முடிந்தது.
puthinam.com

வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கு 10 கட்டளை! * மாணவர்களுக்கு அப்துல் கலாம் யோசனை

இந்தியாவை வளர்ந்த நாடாக மாறுவதற்கு, பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் தேவை. இந்த குறிக்கோளை அடைந்தால், இந்தியா வளர்ந்த நாடாக மாறும்," என்று தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவுரை கூறினார்.

முன்னேற்றத்திற்கு 10 கட்டளைகளைப் பின்பற்றலாம் என்று யோசனையும் கூறினார். சென்னை மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கான தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. சென்னை மாநகரில் உள்ள 36 மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் ஐந்தாயிரம் பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில், தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தினமலர்' வெளியீட்டாளர் இரா.லட்சுமிபதி, தினமலர்' பங்குதாரர் இரா.ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:

தினமலர்' நடத்தும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, மிகவும் நல்ல நிகழ்ச்சி. உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதற்காக தினமலர்' குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்; மாணவர்களையும் வாழ்த்துகிறேன். இன்றைய நிகழ்ச்சியில், இன்றைய இளைய சமுதாயம் வருங்காலத்தைப் பற்றி பயமே இல்லாமல் வாழ வேண்டும்' என்பதே என் கருத்து மூலமாகும். உங்களை காணும் போது பல காட்சிகளைப் பார்த்தேன். ஒரு காட்சியில் 20 வயதிற்குள்ளே இருக்கும் அனைத்து இளைஞர்களையும் பார்க்கிறேன். உங்களுடைய மலர்ந்த முகங்களைப் பார்க்கிறேன். உங்களுக்கு கொடுக்கப்பட்ட கல்வியினால், கல்விப் பயனால் உங்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவர்களாக திகழ, பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளாக திகழ, நாட்டிற்கு நல்ல குடிமகனாக திகழ வாழ்த்துகிறேன். இந்தியா 2020ல் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே நம் நாட்டின் குறிக்கோள்.

வளமான நாடு என்றால், பொருளாதாரம் வளமிக்க, நூறு கோடி மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே நாட்டின் லட்சியம். வேலை இல்லை என்ற நிலை மாறி, நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி, நல்ல இளைஞர்கள் இந்த நாட்டிற்கு தேவை. இளைய சமுதாயம், எண்ண எழுச்சியுள்ள இளைய சமுதாயம் நாட்டின் அரும் பெரும் செல்வமாகும். 2020ல் எப்படி இந்தியா ஒரு வளமான நாடாக மாற வேண்டும் என்ற எண்ணத்தை சமீபத்தில் நான் பாராளுமன்றத்தில் பேசும் போது தெரிவித்திருந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் சிந்தனை ஒன்றுபட்டால், செயல் ஒன்றுபட்டால் லட்சியம் நிறைவேறும். 10 கட்டளைகளைப் பின்பற்றினால் லட்சியம் நிறைவேறும்.

கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக, பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லாருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப் பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

பண்பாடு நிறைந்த தரமான கல்வி, சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

விஞ்ஞானிகளும், அறிவார்ந்த வல்லுனர்களும், தொழில் முதலீட்டாளர்களுக்கும் உகந்த நாடாக, ஏற்ற ஒரு இடமாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் தரமான மருத்துவ வசதி கிடைக்கக்கூடிய நாடாக மாற்ற வேண்டும்.

ஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை களையப்பட்டு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும் நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த அமைதியான, சுகாதாரமான, வளமிக்க, வளர்ச்சி பாதையை நோக்கி பீறுநடை போடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்தி செல்லக் கூடிய தலைவர்களை பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும். மன எழுச்சி அடைந்துள்ள 54 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க, நமது இளைய தலைமுறை எழுச்சி பெற வேண்டும். கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால், அது மாணவர்களின் படைப்புத் திறனையும், ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

சிறுவனாக இருந்த போது நானும் பயந்தேன்!: விழாவில் கலாம் பேசும் போது குறிப்பிட்டதாவது: உங்களைப் போல் நான் சிறுவனாக இருக்கும் போது, என் மனதில் பல பயங்கள் தோன்றின. எனது கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் படிக்கும் போது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற கேள்வி எழுந்தது. நான் ராமநாதபுரம் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற போது, அங்கு மாணவர்கள் அருமையான உடைகளை அணிந்து, ஆங்கிலத்தில் பேசியதைக் கண்டேன். அவர்கள் குழுவில் என்னை சேர்ப்பார்களா என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.

ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்ததும் நல்ல மதிப்பெண்கள் கிடைக்குமா, இன்ஜினியரிங் கல்லூரியில் சேர முடியுமா? என்ற எண்ணங்கள் என்னை வாட்டி எடுத்தன. பத்தாம் வகுப்பில் சென்றவுடன், இந்த எண்ணங்கள் என்னை விட்டு மறைந்து விட்டன. காரணம், எனக்கு கிடைத்த அருமையான பொக்கிஷம் என் ஆசிரியர். அந்த ஆசிரியர், நல்ல லட்சியத்தைக் கொடுத்தார்; நல்ல லட்சியத்தைக் கற்பித்தார். எனது புதிய லட்சியம் ஆரம்பித்தது. இவ்வாறு கலாம் குறிப்பிட்டார்.

இப்படியும் நல்ல மனிதர்கள்: பழைய நிகழ்ச்சி ஒன்றை நினைவு கூர்ந்து கலாம் பேசியதாவது:

தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியை பார்த்ததும் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நான் ஜனாதிபதியாக இருந்தபோது, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்தேன். நான் பயணித்த விமானத்தில், பத்திரிகையாளர்களும் வந்தனர். இரா.கிருஷ்ணமூர்த்தியும் வந்திருந்தார். விமானத்தில் நான் பேட்டி கொடுத்தேன். பத்திரிகையாளர்கள் மிகவும் கடினமான கேள்விகளை எல்லாம் கேட்டனர். எப்போதாவது நல்ல மனிதர்களை பார்த்திருக்கிறீர்களா?' என்று கிருஷ்ணமூர்த்தி என்னிடம் கேள்வி கேட்டார். அதற்கு, அப்போது என்னால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக வந்தபோது, ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அதை பதிலாக கூறுகிறேன்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் அப்போது மூர் மார்க்கெட் இருந்தது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பழைய புத்தகங்களை வாங்குவதற்காக நான் அங்கு செல்வேன். ஒரு நாள் திடீரென்று நீ ராமேஸ்வரம் வர வேண்டும் என்று தகவல் வந்தது. அப்போது, அங்கு புயல் வீசிக் கொண்டிருந்தது. ராமேஸ்வரம் செல்வதற்கு கையில் என்னிடம் பணம் இல்லை. அப்போது நான் எம்.ஐ.டி.,யில் படித்துக் கொண்டிருந்தேன். எம்.ஐ.டி., தலைவர் மற்றும் துணைவேந்தராக லட்சுமணசாமி முதலியார் இருந்தார். அவர் எனக்கு பரிசாக கொடுத்த ஒரு புத்தகத்தை (ஸ்ட்ரென்த் ஆப் மெட்டீரியல்) வைத்திருந்தேன். அதன் விலை 200 ரூபாய்.அந்த புத்தகத்தை மூர் மார்க்கெட்டில் உள்ள கடையில் கொடுத்து, விவரத்தை கூறி, பணம் கிடைக்குமா என்று கேட்டேன். கடைக்காரரும் புத்தகத்தை வாங்கிக் கொண்டு நுாறு ரூபாய் கொடுத்தார். புத்தகத்தை கூர்ந்து பார்த்த கடைக்காரர், துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியார் கையெழுத்து இருக்கிறதே! இது மிகவும் நல்ல புத்தகம். அதை உனக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். எனவே, புத்தகத்தை விற்க மாட்டேன். உனக்கு எப்போது கல்வி உதவித் தொகை கிடைக்கிறதோ, அப்போது வந்து பணத்தை திருப்பி கொடுத்து விட்டு புத்தகத்தை வாங்கிச் செல்' என்றார்.

அவர் பெயர் தட்சிணாமூர்த்தி; மிகவும் நல்ல மனிதர். பிறகு மூன்று மாதம் கழித்து நூறு ரூபாயை கொடுத்து விட்டு மீண்டும் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். இப்படியும் நல்ல மனிதர் இருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டேன். தேவை ஏற்படும்போது உதவி செய்வது தான் நல்ல குணம்.

Tuesday, November 27, 2007

மாவீரர் நாள் உரை- வே பிரபாகரன்(27/11/2007)




தமிழர் சுயநிர்ணய உரிமையையும் இறைமையையும் சர்வதேசம் ஏற்க வேண்டும்- உலகத் தமிழர்கள் கிளந்தெழ வேண்டும்- தொடர்ந்து போராடுவோம்: தமிழீழ தேசியத் தலைவர்
[செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2007, 06:04 PM ஈழம்] [புதினம் நிருபர்]
சர்வதேச சமூகம் எமது சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழீழ விடுதலைக்காக உலகத் தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழ வேண்டும் சாவைச் சந்தித்துச் சரித்திரமாவதற்கு ஆயிரமாயிரம் வீரர்கள் அணிவகுத்து நிற்பதால் தொடர்ந்து போராடுவோம் என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரையில் சூளுரைத்துள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் இன்று செவ்வாய்க்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2007.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூய நாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.

எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனித மலைகளாக, மனிதக் கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்து நிற்கின்றனர்.

ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.

மனித வரலாற்றுச் சக்கரம், காலங்களைக் கடந்து, யுகங்களை விழுங்கி, முடிவில்லாமற் சுழல்கிறது. இந்த முடிவில்லாத இயக்கத்தில், உலகத்து மனிதன் நிறையவே மாறிவிட்டான்.

அவனிடத்தில் எத்தனையோ புதிய சிந்தனைகள் தோன்றியிருக்கின்றன எத்தனையோ புதிய கருத்தோட்டங்கள் பிறந்திருக்கின்றன. எத்தனையோ புதிய எண்ணங்கள் அவன் மனதிலே தெறித்திருக்கின்றன. இந்தச் சிந்தனைத் தெறிப்பிலே, சுதந்திரமும் சமத்துவமும் கூடிக்குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டுகொண்டான். சாதி, சமய, பேதங்கள் ஒழிந்த, அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற, சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய, கொந்தளிப்புக்களும் நெருக்கடிகளும் அகன்ற ஓர் உன்னத வாழ்வைக் கற்பிதம் செய்தான். இந்தக் கற்பிதத்திலிருந்து தோன்றிய கருத்துருவம்தான் சுதந்திரம். இந்த உன்னதமான கருத்துருவை வாழ்வின் உயரிய இலட்சியமாக வரித்து, மனிதன் போராடப் புயலாகப் புறப்பட்டான்.

ஓயாது வீசும் இந்த விடுதலைப் புயல் இன்று எமது தேசத்திலே மையம்கொண்டு நிற்கிறது.

சுழன்றடிக்கும் சூறாவளியாக,

குமுறும் எரிமலையாக,

ஆர்ப்பரித்தெழும் அலைகடலாக

எமது மக்கள் வரலாற்றிலே என்றுமில்லாதவாறு ஒரே தேசமாக, ஒரே மக்களாக ஒரே அணியில் ஒன்றுதிரண்டு நிற்கின்றனர்.

ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாக, ஒன்றுபட்ட இனமாகத் தமக்கு முன்னால் எழுந்த எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்து நிற்கின்றனர்.

எல்லைக்காப்புப் படைகளாக, துணைப்படைகளாக, விசேட அதிரடிப்படைகளாக எழுந்து நிற்கின்றனர்.

போர்க்கோலம் கொண்டு, மூச்சோடும் வீச்சோடும் போராடப் புறப்பட்டு நிற்கின்றனர்.

முப்பத்தைந்து ஆண்டுகளாக ஓய்வில்லாமல் வீசும் எமது வீர விடுதலை வரலாற்றில் நாம் என்றுமில்லாதவாறு தரைப்படை, கடற்படை, வான்படையென முப்படைகளும் ஒன்றுசேர ஒரு பெரும் படையாக எழுந்து, நிமிர்ந்து நிற்கிறோம்.

நீண்ட கொடிய சமர்களிற் களமாடி அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற முன்னணிப் படையணிகளோடும் பன்முகத் தாக்குதல்களையும் நிகழ்த்தவல்ல சிறப்புப் பயிற்சிபெற்ற சிறப்புப் படையணிகளோடும் நவீன படைக்கலச் சக்திகளுடனும் பெரும் போராயுதங்களுடனும் ஆட்பலம், ஆயுதபலம், ஆன்ம பலம் எனச் சகல பலத்துடனும் நவீன இராணுவமாக வளர்ந்து நிற்கிறோம்.

நீண்டகாலம் பெரும் சமர்களை எதிர்கொண்டு, மூர்க்கமாகப் போர் புரிந்து பெற்றெடுத்த பட்டறிவாலும் கற்றறிந்த பாடங்களாலும் கட்டப்பட்டுச் செழுமைபெற்ற புதிய போர் மூலோபாயங்களோடும் புதிய போர்முறைத் திட்டங்களோடும் நவீன போரியல் உத்திகளோடும் எதையும் எதிர்கொள்ளத் தயாராக நிற்கிறோம்.

இந்த மலையான நிமிர்விற்கு, இந்தப் பூகம்ப மாற்றத்திற்கு ஆதாரமாக நிற்பவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் இங்குப் பெருமிதத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எனது அன்பார்ந்த மக்களே!

நாம் வாழும் உலகிலே புதிய பூகம்ப மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. உலகமே ஆசியாவை நோக்கித் திரும்பியிருக்கிறது.

இருபத்தோராம் நூற்றாண்டும் ஆசியாவின் சகாப்தமாக ஆரம்பித்திருக்கிறது. எமது பிராந்தியத்தைச் சேர்ந்த, எமது கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் சமூக, பொருளாதார, விஞ்ஞானத்துறைகளிலே பெருவளர்ச்சியீட்டி முன்னேறி வருகின்றன.

அண்டவெளி ஆராய்ச்சிகள், சந்திரமண்டல ஆய்வுகள், அணுக்கருப் பரிசோதனைகளெனப் புதிய பாதையிலே பயணிக்கின்றன. மனித சமுதாயம் முன்னெப்போதும் காணாத புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து, இயற்கையின் எண்ணற்ற புதிர்களுக்கு விடைகள் காணவும் தீராத வியாதிகளுக்குத் தீர்வுகள் தேடவும் புதிய பயணத்திலே இறங்கியிருக்கிறது.

அரிய உயிரினங்களையும் தாவர வகைகளையுங்கூடக் காத்து, பூகோள முழுமையையும் பாதுகாக்கின்ற புனித முயற்சியிலே காலடி எடுத்து வைத்திருக்கிறது. ஆனால், சிங்களத் தேசம் மாத்திரம் நேரெதிர்த் திசையிலே, அழிவு நோக்கிய பாதையிலே சென்றுகொண்டிருக்கிறது. தன்னையும் அழித்து, தமிழினத்தையும் அழித்து வருகிறது. இதனால், அழகிய இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்கிறது.

பௌத்தம் ஓர் ஆழமான ஆன்மீகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அகன்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மீகத் தத்துவம். இந்தத் தார்மீக நெறியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் சிங்களம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே இனவாத விசத்தினுள் மூழ்கிக்கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமான வன்முறையாகக் கோரத்தாண்டவமாடுகிறது. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை அகன்ற அகிம்சை வழியிலும், ஆயுதவழியிலும் தமிழர் நீதி கேட்டபோதும் சிங்கள உலகிலே சிறிதளவும் மனமாற்றம் நிகழவில்லை. எத்தனையோ இழப்புக்கள், எத்தனையோ அழிவுகள், எண்ணற்ற உயிர்ப்பலிகள் நிகழ்ந்த போதும் சிங்களத் தேசம் மனந்திருந்தவில்லை. தொடர்ந்தும், அது வன்முறைப் பாதையிலேயே பயணிக்கிறது. அடக்குமுறையாலும் ஆயுதப்பலத்தாலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவே அது விரும்புகிறது. அமைதி முயற்சிகளுக்கு ஆப்பு வைத்துவிட்டு, தனது இராணுவ நிகழ்ச்சித்திட்டத்தைத் துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதற்குச் சர்வதேசச் சமூகத்தினது பொருளாதார, இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டு கொடுப்புக்களும் ஒரு பக்கச்சார்பான தலையீடுகளுந்தான் காரணம்.

எமது பிராந்தியத்திலே உலகப் பெரு வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம்.

இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடி நிலை நீங்கி, சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலக நாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது.

போலியான, பொய்யான பரப்புரைகள் வாயிலாக உலக நாடுகளைத் தமது வஞ்சக வலைக்குள் வீழ்த்தி, தமிழரது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திருப்பி விடுகின்ற கைங்கரியத்தைச் செய்து வருகிறது.

சிங்கள அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலக நாடுகள் எமது பிரச்சினையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும் எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

இப்படியான அநீதியில் அமைந்த அந்நியத் தலையீடுகள், காலங்களை விழுங்கி நீண்டுசெல்லும் எமது போராட்டத்திற்குப் புதியவை அல்ல.

இந்தியா இழைத்த தவறும் சர்வதேசமும்

அன்று இந்தியா தனது தெற்கு நோக்கிய வல்லாதிக்க விரிவாக்கமாக எமது தேசியப் பிரச்சினையிலே தலையீடு செய்தது. தமிழரது சம்மதமோ ஒப்புதலோ இன்றி, சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்தது.

அடிப்படையில் அந்த ஒப்பந்தம் தமிழரது நலனுக்காகவோ நல்வாழ்விற்காகவோ செய்யப்பட்டதன்று.

தீர்வு என்ற பெயரில் ஐம்பத்தேழிற் கைச்சாத்தான பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இருந்த அதிகாரங்களைக்கூடக் கொண்டிராத எலும்புத்துண்டு போன்ற ஒரு அரைகுறைத் தீர்வை இந்தியா அன்று எம்மக்கள் மீது கட்டிவிட முயற்சித்தது.

ஓர் இலட்சம் இராணுவத்தினரின் பக்கபலத்தோடும் இரண்டு அரசுகளின் உடன்பாட்டு வலிமையோடும் எட்டப்பர் குழுக்களின் ஒத்துழைப்போடும் அந்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்தி விட இந்தியா தீவிரமாக முயற்சித்தது.

தமிழரது தேசியப் பிரச்சினையின் அடிப்படைகள் எதையும் தொட்டு நிற்காத, தமிழரின் அரசியல் அபிலாசைகள் எதையும் பூர்த்திசெய்யாத அந்த அரைகுறைத் தீர்வைக்கூடச் செயற்படச் சிங்களப் பேரினவாதிகள் அன்று அனுமதிக்கவில்லை.

சிங்களத் தேசம் பற்றியும் அதன் நயவஞ்சக அரசியல் பற்றியும் நாம் நன்கு அறிவோம். எமக்கு அது பற்றிய நீண்ட பட்டறிவும் கசப்பான வரலாறும் இருக்கின்றன.

எனவேதான், நாம் அன்று இந்தியாவுடன் பல்வேறு தடவைகள் பல்வேறு இடங்களிற் பல்வேறு மட்டங்களில் நடந்த பேச்சுக்களின்போது, சிங்களப் பேரினவாதம் பற்றி அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக்கூறினோம்.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, தமிழர் தேசத்தில் அமைதியைக் கொண்டுவருவது சிங்கள அரசின் நோக்கமன்று,

தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து, தமிழரின் வளங்களை அழித்து, தமிழரை அடிமைகொண்டு, அழித்தொழிப்பதுதான் சிங்கள அரசின் நோக்கம் என்பதை அன்று இந்தியாவிற்கு எடுத்துரைத்தோம்.

இந்தியா இணங்க மறுத்தது.

இதனால், தமிழ் மக்கள் தமது மண்ணிலேயே பெரும் அழிவுகளையும் அனர்த்தங்களையும் சந்தித்தனர்.

அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது. சிங்கள அரசின் சாதுரியமான, சாணக்கியமான, பரப்புரைகளுக்குப் பலியாகி, சமாதான முயற்சிகளுக்குப் பாதுகாவலனாக நின்ற நாடுகளே, எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டிருக்கின்றன. இதில் வேதனையான, ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்னவென்றால் ஒரு காலத்தில் எம்மைப் போன்று தமது சுதந்திரத்திற்காகப் போராடிய தேசங்களும் எம்மைப் பயங்கரவாதிகளாகப் பட்டஞ்சூட்டியமைதான்.

புலம்பெயர் நாடுகளில் கைதுகள்

இவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம் பொருந்திய சக்தியாக நின்று, தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டி வருவதையும் சிங்களத் தேசத்தாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குட் சிக்கி, எம்மக்கள் அழிந்து வருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க, புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தாற் சகிக்கமுடியவில்லை.

எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடச் சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன.

எம்மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டி வருகின்றன.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன.

நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.

இத்தகைய நடுநிலை தவறிய ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகள் சர்வதேசச் சமூகம் மீது எம்மக்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கைகளை மோசமாகப் பாதித்திருப்பதோடு அமைதி முயற்சிகளுக்கும் ஆப்பு வைத்திருக்கின்றன.

சமாதானப் பேச்சுக்களிற் பங்குகொண்ட இருதரப்பினரது சமநிலை உறவைப் பாதித்து, அமைதி ஒப்பந்தமும் முறிந்துபோக வழி செய்திருக்கின்றன.

அத்தோடு, இந்நாடுகள் வழங்கி வரும் தாராளப் பொருளாதார இராணுவ உதவிகளும் இரகசியமான இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் சிங்கள இனவாத அரசை மேலும், மேலும் இராணுவப் பாதையிலேயே தள்ளிவிட்டிருக்கிறன.

அராஜகமான ஆக்கிரமிப்புப் போரை திருமிருடன் நடத்தும் மகிந்த அரசு

இதனால்தான், மகிந்த அரசு அநீதியான, அராஜகமான ஆக்கிரமிப்புப் போரை எமது மண்ணிலே துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்து வருகிறது.

இராணுவப் பலத்தைக்கொண்டு, தமிழரின் சுதந்திர இயக்கத்தை அழித்து விடலாம் என்ற மமதையில் மகிந்த அரசு சமாதானத்திற்கான கதவுகளை இறுகச்சாத்தியது.

தமிழ் மண்ணை ஆக்கிரமித்து, தமிழரை அடக்கியொடுக்கி ஆளவேண்டும் என்ற ஆசை என்றுமில்லாதவாறு தீவிரம்பெற்றது. முழு உலகமும் முண்டுகொடுத்து நிற்க, போர் நிறுத்தத்தைக் கவசமாக வைத்து, சமாதானச் சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, மகிந்த அரசு ஆக்கிரமிப்புப் போரை அரங்கேற்றியது.

போர்நிறுத்தத்தைக் கண்காணித்த கண்காணிப்புக்குழு கண்களை மூடிக்கொண்டும் கைகளைக் கட்டிக்கொண்டும் கொழும்பிலே படுத்துறங்கியது.

அனுசரணையாளரான நோர்வே நாட்டினர் அலுத்துப்போய் அமைதியாக இருந்தார்கள்.

எமக்குச் சமாதானம் போதித்த உலக நாடுகள் மௌனித்துப் பேசமறுத்தன.

மகிந்த அரசின் போரின் விளைவுகள்

"சமாதானத்திற்கான போர்" என்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை" என்றும் "தமிழரின் விடுதலைக்காக, விமோசனத்திற்காக நடாத்தப்படும் போர்" என்றும் சிங்கள அரசு தமிழின அழிப்பை நியாயப்படுத்திப் போரைத் தொடர்கிறது.

மகிந்த அரசு தனது முழுப் படைப்பலச்சக்தியையும் அழிவாயுதங்களையும் ஒன்றுதிரட்டி எமது தாயகத்தின் தெற்குப் பிராந்தியம் மீது பெரும் போரைக் கட்டவிழ்த்துவிட்டது.

ஓயாத மழையாகப் பொழிந்த அகோரக் குண்டுவீச்சுக்களாலும் எறிகணைகளாலும் எமது பண்டைய நாகரிகம் புதைந்த வரலாற்றுமண் மயான பூமியாக மாறியது.

சரித்திரப் பிரசித்தி பெற்ற தமிழரின் தலைநகரான திருமலை சிதைக்கப்பட்டது.

தமிழரின் பண்டைய பண்பாட்டு நகரான மட்டக்களப்பு அகதிகளின் நகரானது.

வடக்கில் தமிழரின் கலாச்சார மையமான யாழ்ப்பாணம் வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.

மொத்தத்தில்,

சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போர்

தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து,

தமிழரை அகதிகளாக்கி,

தமிழரின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீரழித்து,

தமிழருக்கு என்றுமில்லாத பேரவலத்தைக் கொடுத்திருக்கிறது.

எமது தாய்நிலம், ஒருபுறம் சிங்கள இராணுவப் பேயாட்சிக்குட் சிக்கிச்சீரழிய,

மறுபுறம் உயர்பாதுகாப்பு வலயங்கள், விசேட பொருளாதார வலயங்கள் என்ற பெயரில் வேகமாகச் சிங்களமயப்படுத்தப்படுகிறது.

சிங்கக் கொடிகளை ஏற்றியும் சித்தார்த்தன் சிலைகளை நாட்டியும்

வீதிகளுக்குச் சிங்களப் பெயர்களை மாற்றியும்

பௌத்த விகாரைகளைக் கட்டியும் சிங்களமயமாக்கல் கடுகதி வேகத்திலே தொடர்கிறது.

இதன் உச்சமாக,

தமிழீழத்தின் தென் மாநிலம் முழுவதிலும் சிங்களக் குடியேற்றங்கள் காளான்கள் போன்று அசுர வேகத்திலே முளைத்து வருகின்றன.

அநீதியான யுத்தம் ஒன்றை நடாத்தி,

பொருளாதாரத் தடைகளை விதித்து,

போக்குவரத்துச் சுதந்திரத்தை மறுத்து,

தமிழரைக் கொன்று குவித்து,

இலட்சக்கணக்கில் இடம்பெயரவைத்து விட்டு,

தமிழின ஆன்மாவை ஆழமாகப் பாதித்த

இந்தச் சோகமான நிகழ்வைச் சிங்களத் தேசம் வெற்றிவிழாவாகக் கொண்டாடி மகிழ்கிறது.

தமிழரைப் போரில் வென்றுவிட்டதாகப் பட்டாசு கொழுத்தி, வாண வேடிக்கைகள் காட்டி ஆர்ப்பரிக்கிறது.

கிழக்கு மீதான முற்றுகை வலயம் முற்றுப்பெற்று விட்டதாகவும்

யாழ்ப்பாணத்தின் கழுத்தைச் சுற்றி முள்வேலியை இறுக்கி விட்டதாகவும்

சிங்கள இராணுவத் தலைமை எண்ணிக்கொண்டது.

பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரை, கிழக்குக் கரையோரம் முழுமைக்கும் விலங்கிட்டு விட்டதாகச் சிங்களப் பேரினவாதம் திமிர்கொண்டது.

புலிகளுக்கு எதிரான போரிற் பெருவெற்றி ஈட்டிவிட்டதாகச் சிங்கள ஆட்சிப்பீடம் திருப்திகொண்டது.

நில அபகரிப்பு பொறியும் பாரதூரமான விளைவுகளும்

எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது.

பூகோள அமைப்பையும் புறநிலை உண்மைகளையும் மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு, எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் சரியாக எடைபோட்டு, எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்து, இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த்திட்டங்களைச் செயற்படுத்துகிறோம்.

எதிரியின் யுத்த நோக்குகளையும் உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்க தரிசனமாக அனுமானித்தறிந்தே, எமது போர்த்திட்டங்களை வகுக்கிறோம்.

இப்படித்தான் கிழக்கிலும் எமது போர்த்திட்டங்களை வகுத்தோம். தற்காப்புத் தாக்குதல்களை நடாத்தியவாறு தந்திரோபாயமாகப் பின்வாங்கினோம்.

புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும் நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் "ஜெயசிக்குறு" சமரிற் கற்றறிந்திருக்கலாம்.

ஆனால், சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து, பெருந்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சிபுரிகிறது.

நில அபகரிப்பு என்ற பொறியிற் சிங்களம் மீளமுடியாதவாறு மீளவும் விழுந்திருக்கிறது. இதன் பாரதூரமான விளைவுகளை அது விரைவிற் சந்தித்தே ஆகவேண்டி வரும்.

வரலாற்றிலே முதல்தடவையாக எமது கரும்புலி அணியினரும் வான்புலிகளும் கூட்டாக நடாத்திய "எல்லாளன்" நடவடிக்கை சிங்கள இராணுவப்பூதத்தின் உச்சந்தலையிலே ஆப்பாக இறங்கியிருக்கிறது.

இந்த மண்டை அடி சிங்களம் கட்டிய கற்பனைகள் கண்டுவந்த கனவுகள் அத்தனையையும் அடியோடு கலைத்திருக்கிறது.

அநுராதபுர மண்ணில் எம்மினிய வீரர்கள் ஏற்படுத்திய இந்தப் பேரதிர்விலிருந்து சிங்களத் தேசம் இன்னும் மீண்டெழவில்லை.

ஈகத்தின் எல்லையைத் தொட்டுவிட்ட இந்த வீரர்களின் உயர்ந்த உன்னதமான அர்ப்பணிப்பு சிங்களத் தேசத்திற்கு ஒரு செய்தியைச் சொல்கிறது.

அதாவது, தமிழனை அழிக்க நினைப்போருக்கு அழிவு நிச்சியம் என்பதோடு, இந்த மாவீரர்கள் பற்றவைத்துள்ள விடுதலைத்தீயின் எரிநாக்குகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கிருந்தாலும் தப்பிவிடமுடியாது என்பதுதான் அது.

இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம் தமிழரின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது என்பதை மகிந்த அரசு இனியும் உணர்ந்துகொள்ளப்போவதில்லை.

இராணுவ மேலாதிக்கத்தை எட்டிப்பிடிக்கவேண்டும், தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துச் சிங்களமயமாக்கி விடவேண்டும் என்ற ஆதிக்கவெறியும் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து அகன்றுவிடப்போவதில்லை.

தொடர்ந்தும் கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டி, உலகெங்கிலிருந்தும் அழிவாயுதங்களையும் போராயுதங்களையும் தருவிக்கவே மகிந்த அரசு முனைப்புடன் செயற்படுகிறது.

எனவே, மகிந்த அரசு தனது தமிழின அழிப்புப்போரைக் கைவிடப்போவதில்லை.

தனது பாரிய இராணுவத் திட்டத்தையும் அதன் விளைவாகத் தமிழீழ மண்ணில் ஏற்பட்டுவரும் பேரவலங்களையும் மூடிமறைத்து,

உலகத்தின் கவனத்தைத் திசைதிருப்பி, உலக நாடுகளின் உதவியையும் பேராதரவையும் பெற்றுக்கொள்ளவே மகிந்த அரசு அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அமைத்தது.

இதனைக் கடந்த மாவீரர் நினைவுரையில் நான் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தேன்.

தென்னிலங்கைக் கட்சிகள்

வருடக்கணக்கிற் காலத்தை இழுத்தடித்து, எந்தவிதமான தீர்வையும் முன்வைக்க முடியாது, இறுதியில் இரண்டு மாத விடுப்பிற் பிரதிநிதிகள் குழுவினர் சென்றிருப்பது இதனையே காட்டி நிற்கிறது.

தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.

தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும்

தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும்

தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து குத்துக்கரணம் அடித்து, அரசின் போர் நடவடிக்கைக்கும் ஆதரவு, சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவு எனப் பிரதான எதிர்க்கட்சி எதையும் தெளிவாகக் கூறாது இழுவல் மொழியில் நழுவிக் கண்ணாம்பூச்சி விளையாடுவதும் இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன.

இதன்மூலம் சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து யாரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.

சிங்களப் படைகளின் "அக்கினிக்கீல" என்ற பாரிய படை நடவடிக்கையைத் தவிடுபொடியாக்கி, போரிற் புலிகளை வெற்றிகொள்ளமுடியாது என்பதைச் சிங்களத் தேசத்திற்கு இடித்துரைத்தபோதுதான் அன்று சிங்களம் அமைதி முயற்சிக்கு ஆர்வம் காட்டியது.

எமது உயரிய போராற்றலை வெளிப்படுத்தி, இராணுவ மேலாதிக்க நிலையில் நின்றபோதுதான் சிங்களத் தேசம் அமைதி ஒப்பந்தத்திற் கைச்சாத்திட்டது.

உலக நாடுகளிலிருந்து பெற்ற தாராள நிதியுதவிகளையும் ஆயுத உதவிகளையுங் கொண்டு தனது சிதைந்துபோன இராணுவ இயந்திரத்தைச் செப்பனிட்டு, தனது இராணுவ அரக்கனைப் போரிற்குத் தயார்ப்படுத்திச் சிங்களத் தேசம் சமாதான வழியிலிருந்தும் சமரசப் பாதையிலிருந்தும் விலகித் தனது பழைய இராணுவப்பாதையிற் பயணிக்கிறது.

மகிந்த அரசும் அனைத்துலகமும்

மகிந்த அரசு ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை முறித்து, தமிழர் தாயகத்தின் புவியியல் ஒருமைப்பாட்டையும் தனித்துவத்தையும் அழித்தொழிக்கும் இராணுவச் செயற்றிட்டத்தை இன்று ஈவிரக்கமின்றிச் செயற்படுத்தி வருகிறது.

ஆயிரக்கணக்கில் எம்மக்களைக் கொன்றுகுவித்து, கடத்திப் புதைகுழிகளுக்குட் புதைத்து, பெரும் மனித அவலத்தை எம்மண்ணில் நிகழ்த்தி வருகிறது.

அனுசரணையாளரான நோர்வேயை அதட்டி அடக்கி வருகிறது.

கண்காணிப்புக்குழுவைக் காரசாரமாக விமர்சித்து வருகிறது.

தனது பயங்கரவாதத்தை மூடிமறைக்க ஐ.நாவின் உயர் அதிகாரிகளைக்கூடப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கிறது.

செய்தியாளர்களோ தொண்டு நிறுவனங்களோ செயற்பட முடியாதவாறு தமிழர் தாயகத்திற் பதற்றத்தையும் பயப்பீதியையும் உருவாக்கி, உண்மை நிலைவரத்தை உலகிற்கு மறைத்து வருகிறது.

உலக நாடுகள் தமது சொந்தப் பொருளாதாரக் கேந்திர நலன்களை முன்னெடுக்கின்ற போதும் மனித உரிமைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மதிப்புக்கொடுக்கத் தவறுவதில்லை.

இந்தப் பிரபஞ்சமும் சரி, மனித வாழ்வியக்கமும் சரி, உலக உறவுகளும் சரி தர்மத்தின் சக்கரத்திலேயே இன்னமும் சுழல்கின்றன.

தமிழ்ச்செல்வன் படுகொலை

இதனால்தான், விடுதலைக்காகப் போராடிய கிழக்குத்தீமோர், மொன்ரிநீக்ரோ போன்ற தேசங்கள் சர்வதேசத்தின் ஆதரவோடும் அனுசரணையோடும் புதிய தேசங்களாக அடிமை விலங்கை உடைத்தெறிந்துகொண்டு விடுதலை பெற்றன.

கொசோவோ போன்ற தேசங்களின் விடுதலைக்காகவும் சர்வதேசம் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டுவருகிறது.

இருப்பினும், எமது தேசியப் பிரச்சினையிற் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எம்மக்களுக்குத் திருப்தி தருவனவாக அமையவில்லை.

இந்நாடுகள் மீது எம்மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று தகர்ந்துபோயிருக்கிறது. இந்நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டிலே இன்று பெரும் கேள்விக்குறி எழுந்திருக்கிறது.

சமாதானத்திற்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ்ச்செல்வனைச் சர்வதேசம் சமாதானம் பேசியே சாகடித்திருக்கிறது.

அமைதிப் பாதையில் இயங்கிய எமது விடுதலை இயக்கத்தின் இதயத்துடிப்பை வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தியிருக்கிறது.

எமது இதயங்களில் இலட்சிய நெருப்பை மூட்டி, மறைந்த மாவீரருக்கு ஆண்டுதோறும் விளக்கேற்றும்போது எப்போதும் என்னருகிருந்த எனது அன்புத்தம்பி தமிழ்ச்செல்வனுக்கும் சேர்த்து இம்முறை என்கையால் ஈகச்சுடரேற்றும் நிலைமையைச் சர்வதேசம் உருவாக்கியிருக்கிறது.

உலகத் தமிழினத்தையே கண்ணீரிற் கரைத்து, கலங்கியழ வைத்திருக்கிறது.

சிங்களத் தேசத்தின் சமாதான விரோதப்போக்கை, போர்வெறியை உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்திருந்தால், தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான்.

சமாதானத்திற்கு இப்படியொரு பேரிடி விழுந்திருக்காது.

சமாதானத்தின் காவலர்களாக வீற்றிருக்கும் இணைத்தலைமை நாடுகளும் இந்தப் பெரும் பொறுப்பிலிருந்து தவறியிருக்கின்றன.

சமாதானத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் தார்மீகக் கடமைப்பாடும் இந்த இணைத்தலைமை நாடுகளுக்கு இல்லையென்றால் காலத்திற்குக்காலம் இடத்திற்கிடம் அவர்கள் மாநாடு கூட்டுவதன் அர்த்தம்தான் என்ன?

சிங்கள அரசிற்குச் சீர்வரிசை செய்து,

ஆயுத உதவிகள் அளித்து,

தமிழரை அழித்துக்கட்டத் துணைபோவதுதான் இந்த நாடுகளின் உள்ளார்ந்த நோக்கமா?

இத்தனை கேள்விகள் இன்று எம்மக்களது மனங்களிலே எழுந்திருக்கின்றன.

எனவே, சர்வதேச சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இன அழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி,

சர்வதேசச் சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்கும் என எமது மக்கள் இன்றைய புனிதநாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்.

உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள்

எனது அன்பார்ந்த மக்களே!

நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்புவாய்ந்த இனம் மிகவும் தொன்மை வாய்ந்த இனம் தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழுகின்ற ஓர் இனம்.

நீண்ட காலமாக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக, விடிவு தேடி, விடுதலை வேண்டிப் போராடி வருகிறோம்.

நாம் காலங்காலமாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எமது சொந்த மண்ணில் எமக்கேயுரித்தான வரலாற்று மண்ணில் அந்நியரிடம் பறிகொடுத்த ஆட்சியுரிமையை மீள நிலைநாட்டுவதற்காகவே போராடி வருகிறோம்.

இழந்துவிட்ட எமது இறையாண்மையை மீளநிறுவி, எமது சுதந்திரத் தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காகவே நாம் போராடி வருகிறோம்.

எமது மக்களின் இந்த நீதியான, நியாயமான, நாகரிகமான போராட்டத்தைச் சிங்களத் தேசம் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது.

மாறாக, எம்மண் மீதும் மக்கள் மீதும் பெரும் இன அழிப்புப் போரை, ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

போர் என்ற போர்வையில் மாபெரும் மனித அவலத்தை ஏற்படுத்தி வருகிறது.

அறுபது ஆண்டுக்காலமாக

அநீதி இழைக்கப்பட்டு,

அடக்குமுறைக்கு ஆட்பட்டு,

சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும்

குடிபெயர்ந்த அகதி வாழ்வுமாக

எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, எந்தவோர் அமைப்போ குரல் கொடுக்கவில்லை.

ஆதரவோ அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணை மூடிக்கொண்டு, பாராமுகமாகச் செயற்படுகிறது.

பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்து வாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம்.

எனவே, எமது மாவீரர்களை நினைவு கூரும் இன்றைய எழுச்சி நாளில்

உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அறிவுவளம், செயல்வளம், பொருள்வளம், பணவளம் என உங்களிடம் நிறைந்து கிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்களுக்கும் உதவிகளுக்கும் இச்சந்தர்ப்பத்திலே எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோன்று வருங்காலத்திலும் நிறைந்த பங்களிப்பை வழங்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத்திற்காகச் சாவைச் சந்தித்துச் சரித்திரமாவதற்கு ஆயிரமாயிரம் வீரர்கள் எமது விடுதலை இயக்கத்தில் அணிவகுத்து நிற்கும் வரை, எமக்கு முன்னால் எழுகின்ற எல்லாத் தடைகளையும் நாம் உடைத்தெறிந்து போராடுவோம்.

எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது வீரர்கள் சமராடும் வரை,

எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்.

புனித இலட்சியத்திற்காகத் தம்மையே ஆகுதியாக்கிக்கொண்ட எமது மாவீரரை நினைவுகூரும் இன்றைய நாளில்

நாம் ஒவ்வொருவரும் அந்த மாவீரரின் இலட்சியக் கனவை எமது நெஞ்சங்களிலே சுமந்து,

அந்த மாவீரரின் இறுதி இலட்சியம் நிறைவுபெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Sunday, November 11, 2007

படையினரின் இலக்கு பளையா? பூநகரியா?

படையினரின் இலக்கு பளையா? பூநகரியா?
[11 - November - 2007] [Font Size - A - A - A]
-விதுரன்-

வடக்கில் பாரிய வெற்றியொன்றைப் பெற்றுவிட அரசு துடிக்கிறது. வன்னியில் இது உடனடியாகச் சாத்தியப்படாதென்றநிலையில் யாழ். குடாநாட்டிலாவது இந்த வெற்றியை பெற்றுவிட முடியுமா என அரசு முனைந்து பார்க்கிறது. ஆனாலும், கள நிலை இதற்கு சாதகமற்றிருப்பதை ஒவ்வொரு தாக்குதலிலும் அரசும் படைத்தரப்பும் உணர்கின்றன.

வடக்கில் புலிகளின் பலமறியாது அரசு, அவசர வெற்றிகளுக்காக படைகளை நகர்த்துகிறது. வன்னியில் முன்னரங்க காவல் நிலைகளிலும் சரி யாழ். குடாநாட்டில் கிளாலி - முகமாலை - நாகர்கோவிலிலும் சரி ஒவ்வொரு பாரிய படைநகர்வும் படையினருக்கு பெருந்தோல்வியாகவே முடிவடைகிறது.

வன்னியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, வவுனியா முதல் மன்னார் வரையான முன்னரங்க நிலைகளில் தினமும் கடும் மோதல்கள் நடைபெறுகிறது. புலிகளின் முன்னரங்க நிலைகளை ஊடறுத்துக் கொண்டு அவர்களின் பகுதிக்குள் நுழைந்துவிட படையினர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் புலிகளால் முறியடிக்கப்பட்டுவிட்டன.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் மடுவை கைப்பற்றிவிட பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளையும் புலிகள் மிக இலகுவாக முறியடித்து விட்டனர். ஒவ்வொரு தடவையும் படையினரை ஒவ்வொரு விதமாகத் தாக்கி பலத்த இழப்புகளுடன் பின் வாங்கச் செய்தனர்.

மடுவைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியடையவே, மன்னாரிலிருந்து கரையோரமாகவும் கிளிநொச்சி ஊடாகவும் பூநகரிக்குச் சென்று மன்னாருக்கும் யாழ்.குடா நாட்டுக்குமிடையில் தரைவழிப் பாதையை திறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், விடத்தல் தீவு நோக்கிய பாரிய படைநகர்வு முயற்சி புலிகளால் முறியடிக்கப்பட்டது. பல தடவைகள் இதற்காக பாரிய நகர்வுகளை மேற்கொண்டும் ஒவ்வொரு தடவையும் பலத்த இழப்புகளுடன் படையினர் பின்வாங்கினர்.

கிழக்கில் திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையான பெரும் பிரதேசங்களில் பாரிய படை நகர்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது புலிகள் கள நிலைமைக்கேற்ப தந்திரமாகப் பின்வாங்கி படையினரை அகலக் கால் வைக்கச் செய்து அவர்களை எங்கும் பரந்துபடச் செய்தனர். இதனால், தேவையற்ற பெரும் பகுதிகள் உட்பட பெரும் பிரதேசங்களில் படையினர் பெருமளவில் நிலைகொள்ள தற்போது அவர்களுக்கு பெரும் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கிழக்கைப் போன்றே வடக்கிலும் பெரு வெற்றிகளைப் பெற்றுவிடலாமென அரசு கருதுகிறது. கிழக்கில் களநிலை மரபுவழிச் சமருக்கு சாதகமில்லையென்பதையும் கிழக்கின் அனைத்துப் பகுதிகளையும் தங்கள் வசப்படுத்தும் நோக்கிலேயே அங்கு படையினர் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்துவதையும் உணர்ந்த புலிகள், தங்கள் ஆட்களுக்கும் ஆயுதங்களுக்கும் சேதங்களேற்படுவதை தவிர்த்தனர்.

ஆட்களையும் ஆயுதங்களையும் வன்னிக்கு பாதுகாப்பாக நகர்த்துவதற்காக அவர்கள் அங்கு தற்காப்புச் சமரில் ஈடுபட வேண்டியிருந்தது. ஆனால் அரசோ, கிழக்கை தக்கவைக்க புலிகள் கடுமையாகப் போரிடுவதாகக் கருதியது. இந்தக் காலப்பகுதியில் தற்காப்புச் சமரைத் தொடர்ந்தவாறு கனரக ஆயுதங்கள் அனைத்தையும் மிகவும் பாதுகாப்பாக அவர்கள் வன்னிக்கு நகர்த்தியதுடன், அதிக சேதமின்றி ஆட்களையும் அங்கு நகர்த்தியிருந்தனர்.

இதனை உணராத அரசு கிழக்கைப் போல் வடக்கையும் விரைவில் கைப்பற்றிவிடுவோமென தொடர்ந்தும் சூளுரைத்தவாறு அங்கு பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் பலத்த சேதங்களைச் சந்திக்கின்றதே தவிர, படை நகர்ந்ததாகத் தெரியவில்லை.

கிழக்கில் பாரிய படை நடவடிக்கைகள் இடம்பெற்ற போது வடக்கிலும் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டுவோமென அரசு கூறிவந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முகமாலை மற்றும் பளையை முழுமையாகக் கைப்பற்றிவிடும் நோக்கில் மிகப்பெரும் படையெடுப்பை மேற்கொண்டது. ஆனால், இந்தப் படை நடவடிக்கை ஆரம்பமான செய்தி வெளியுலகிற்கு தெரிய முன்னரே அந்தப் படை நடவடிக்கை பெரும் தோல்வியைச் சந்தித்தது.

முகமாலையில் தங்கள் முன்னரங்க காவல் நிலைகளை தகர்த்துக் கொண்டு முன்னேறிய படையினருக்கு புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டவில்லை. ஆனாலும், படையினர் சந்தேகப்படாதளவிற்கு கடும் மோதலில் ஈடுபடுவது போல் பாசாங்கு செய்த புலிகள், குறிப்பிட்ட சில கிலோமீற்றர் தூரம் வரை பின்வாங்கவே டாங்கிகள் சகிதம் படையினர் பெருமெடுப்பில் முன்னேறினர்.

இதன் மூலம் பெரும் பொறியொன்றுக்குள் பெருமளவு படையினரைச் சிக்கவைத்த புலிகள் அதன் பின் நடத்திய அகோர தாக்குதலில் படையினர் அதிர்ந்து போயினர். சில நிமிட நேரத்தில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டனர். மிக அதிகமானோர் படுகாயமடைந்தனர். டாங்கிகள் மற்றும் கனரக வாகனங்களை கைவிட்டு விட்டு பின்வாங்கத் தொடங்கினர்.

தாங்கள் பெரும் பொறியொன்றுக்குள் சிக்குண்டதை சில மணிநேரத்தில் உணர்ந்து கொண்டனர். ஆனால், அதற்கிடையில் 175 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட, 400 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைய, இரண்டிற்கும் மேற்பட்ட யுத்த டாங்கிகளும் கனரக வாகனங்களும் புலிகள் வசம் செல்ல, படையினர் பழைய நிலைகளுக்கு திரும்பிவிட்டனர்.

முகமாலையில் விடுதலைப்புலிகள், பாரிய தாக்குதல் முறியடிப்புத் திட்டத்துடன் எவ்வேளையிலும் மிகவும் தயாராயிருப்பதை பலத்த அடியின் பின்னர் படைத்தரப்பு உணர்ந்து கொண்டது. பாரிய போர்முனைகளில் முன்னணியில் செயற்பட மிக விஷேட பயிற்சிகளைப் பெற்ற கமாண்டோ படையணியின் பெரும் பகுதி இந்தச் சமரில் அழிக்கப்பட்டது. சில மணிநேரத்தில் மிகப் பேரிழப்பென்பதுடன், அரைவாசிக்கும் மேற்பட்ட பட்டாலியன் மீண்டும் களமுனைக்குத் திரும்ப முடியாதளவுக்கு படுகாயமடைந்தது.

இந்தப் பெருந்தோல்வி முகமாலை பகுதியில் மற்றொரு பாரிய படை நகர்விற்கு படையினரை இட்டுச் செல்லவில்லை. எனினும், இந்தப் பெருந்தோல்வியைச் சந்தித்த ஒரு வருடத்தின் பின் கடந்தவாரம் படையினர் இந்தப் பிரதேசத்தில் மீண்டுமொரு முறை பெருந் தாக்குதலொன்றை நடத்தினர். முகமாலையை முழுமையாகக் கைப்பற்றுவதே இந்தப் பாரிய படைநகர்வின் நோக்கமாகும்.

இதன்மூலம் புலிகளுக்கு பெரும் உயிர்ச்சேதத்தையும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்துவதுடன், முன்னரங்க நிலைகளில் பெரும் மாற்றம் ஏற்படும்போது புலிகளால் அந்தப் பிரதேசத்தில் உடனடியாக பெருந்தாக்குதலை ஆரம்பிக்க முடியாதவாறு செய்வதும் அவர்களது எண்ணமாயிருந்தது.

குடாநாட்டின் மீது புலிகள் எவ்வேளையிலும் பாரிய தாக்குதலைத் தொடுக்கவிருந்ததால் அதனை முறியடிக்கும் நோக்கில் முன்கூட்டிய தாக்குதலை மேற்கொண்டு புலிகளின் பாரிய தாக்குதல் திட்டத்தை முறியடித்து விட்டதாக படைத்தரப்பு கூறியது. கடந்தவருடம் முகமாலையில் ஏற்பட்ட பெருந்தோல்வியை கருத்தில் கொண்டு இந்தத் தடவை படைத்தரப்பு தாக்குதல் திட்டமொன்றைத் தீட்டி அதற்கேற்ப மிகவும் எச்சரிக்கையாக நகர்ந்தது.

தங்கள் பிரதேசத்திற்குள் நுழைந்த படையினரை குறிப்பிட்டளவு தூரம் முன்னேற அனுமதித்தே புலிகள், அதன் பின் பதில் தாக்குதலை ஆரம்பித்தனர். புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பல அழிக்கப்பட்டதால் அவர்களது கனரக ஆயுதங்களின் தாக்குதல் கடுமையாக இருக்காதென எண்ணிய படைத்தரப்புக்கு புலிகளின் கடும் தாக்குதல் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஷெல்களும் மோட்டார்க்குண்டுகளும் மழைபோல் பொழியவே படையினர் தடுமாறிவிட்டனர்.

கண்ணிவெடிகள், மிதிவெடிகளை மிக நுட்பமாக புதைத்திருந்த புலிகள், முதலில் அவற்றை வெடிக்கச் செய்யவில்லை. முன்னேறி வந்த படையினரை நீண்ட தூரம் நகரவிட்டு அதன் பின் அவர்கள் மீது ஒரே நேரத்தில் பலத்த ஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் மழைபோல் நடத்தவே படையினர் பின்வாங்கி ஓடத்தொடங்கினர்.

படையினர் பின்வாங்கிச் செல்லத் தொடங்கியபோது ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதலை தீவிரப்படுத்திய புலிகள், கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகளை வெடிக்கச் செய்யவே, அதில் பெருமளவு படையினர் சிக்கி படுகாயமடைந்தனர். பின்வாங்கிய படையினர், படுகாயமடைந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக பின்னர் புலிகளுடன் கடும் சமர் புரிய வேண்டியிருந்தது.

அதிகாலை 5 மணியளவில் கிளாலி மற்றும் முகமாலை பகுதியிலிருந்து முன்னேறிய படையினர் புலிகளின் கடும் எதிர்ப்பால் பலத்த இழப்புகளுடன் காலை 8 மணியளவில் பழைய நிலைகளுக்குத் திரும்பிவிட்டனர். கடந்த வருடம் ஏற்பட்ட பேரிழப்புகளின் அனுபவத்தால் இம்முறை இழப்புகளை சற்று குறைத்துள்ளனர். 11 படையினர் கொல்லப்பட்டும் 103 பேர் படுகாயமடைந்ததாகவும் படைத்தரப்பு கூறுகிறது.

ஆனால், 68 படையினர் கொல்லப்பட்டும் 200 பேர் காயமடைந்ததுடன், 60 படையினர் காணாமல் போயுள்ளதாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் முன்னாள் அமைச்சர் ஷ்ரீபதி சூரியாராச்சி தெரிவித்துள்ளார். புலிகளின் பலம் தெரியாது மேற்கொள்ளப்பட்ட தவறான படைநகர்வென ஐக்கிய தேசியக்கட்சியும் பலத்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமை எதேச்சையான ஒன்று. ஆனாலும், அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலால் ஏற்பட்ட பேரிழப்பை மறைத்து படையினரதும் தென்பகுதி மக்களதும் மனோபலத்தை அதிகரிக்க அரசு மிகப்பெரும் பிரசாரத்திலீடுபட வேண்டிய கட்டாய சூழ்நிலையேற்பட்டது.

அதேநேரம், அநுராதபுரம் தாக்குதலுக்கு பதிலாக வடக்கில் எங்கேயாவது பாரிய படைநகர்வொன்றை மேற்கொண்டு பெருவெற்றிபெற்று படையினரின் ஆற்றலை நிரூபிக்க முயன்ற அரசு, மீண்டும் முகமாலையில் பெருந்தோல்வியைத் தழுவியதன் மூலம் புலிகளின் ஆற்றலை நிரூபிக்க இடமளித்துவிட்டது. இதில் படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்பானது வடக்கே உடனடியாக பாரிய படைநகர்வுகளை மேற்கொள்ள முடியாத நிலைக்கு படையினரைத் தள்ளியுள்ளது.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்துப்போன்ற இந்தச் சிறிய நிலப்பரப்பினூடாக புலிகளை முகமாலையிலிருந்து பின்நகர்த்துவதென்பது சாத்தியப்படாததொன்றென படையினர் உணரத்தொடங்கியுள்ளனர். முகமாலையில் இந்தப் பாரிய படைநகர்வு மேற்கொள்ளப்பட்ட போது, அது வெற்றிகரமாகத் தொடர்ந்தால் யாழ். கடலேரியூடாக நகர்ந்து பூநகரிக்குள் தரையிறங்கவும் படையினர் திட்டமிட்டிருந்தனர்.

ஒருபுறம் முகமாலையூடாக பளைக்கு முன்னேறும் அதேநேரம், மறுபுறத்தே அதற்குச் சமாந்திரமாக கடல்வழியால் பூநகரிக்குள் பெருமெடுப்பில் தரையிறங்குவதும் படையினரின் திட்டமாயிருந்தது. புலிகளின் ஆட்லறிகளும் மோட்டார்களும், முகமாலையிலிருந்து முன்னேறும் படையினரையே குறிவைத்திருக்குமென்பதால், அவ்வேளையில் பூநகரி நோக்கி மிக உக்கிரமாக ஆட்லறி ஷெல்களையும் பல்குழல் ரொக்கட்டுகளையும் மோட்டார் குண்டுகளையும் பொழிந்தவாறு தென்மராட்சி கரையோரத்திலிருந்து சிறிய படகுகள் மூலம் பூநகரிக்குள் தரையிறங்கிவிட படையினர் திட்டமிட்டிருந்தனர்.

புலிகள் வசம் குறிப்பிட்டளவு ஆட்லறிகளும் அதற்குரிய ஷெல்களுமே இருப்பதாகக் கருதி படைத்தரப்பு இவ்வாறு பலமுனைத் தாக்குதல் திட்டத்தை வகுத்திருந்தது. ஒருவேளை, முகமாலை மற்றும் கிளாலியிலிருந்து புறப்பட்ட படையணிகள் புலிகளின் பகுதிக்குள் வெற்றிகரமாக முன்னேறியிருந்தால் பூநகரிக்குள் தரையிறங்க படையினர் நிச்சயம் முயன்றிருப்பர். எனினும், முகமாலை முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டதால் பூநகரி நோக்கிய படைநகர்வு குறித்து படையினர் சிந்திக்கவில்லை.

Tuesday, November 6, 2007

ஊடக விபசாரம்பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலையைக் கண்டித்து சென்னையில் வைகோ, திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலையைக் கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று முற்பகல் 11:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் பிரிகேடியர் தமிழ்ச்செலவனின் பெரிய திருவுருவப் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்வின் தொடக்கத்தில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு 2 நிமிட நேரம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மறுமலர்ச்சி தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களின் செயலாளர்கள், இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பசீர் முகமது வட தென் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் கடலூர் வேலூர் விழுப்புரம் செயலாளர்கள் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஜெயலலிதாவுக்கு இன்னமும் வால் பிடிப்பது குறித்து உலகத் தமிழருக்கு வைகோ பதில் கூற வேண்டும்: "உதயன்" நாளேடு

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழக முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்ததை கொச்சைப்படுத்தும் ஜெயலலிதாவுக்கு இன்னமும் வால் பிடிப்பது ஏன் என்று உலகத் தமிழர் சமூகத்துக்கு மறுலமர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ பதில் தருவது தவிர்க்க முடியாத கட்டாயமாகும் என்று "உதயன்" நாளேடு வலியுறுத்தியுள்ளது.


யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளேட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (06.11.07) வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்:

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சமரச முயற்சிகளில் சர்வதேசம் எங்கும் சமாதானப் புறாவாகப் பறந்து சென்று அமைதி எத்தனங்களில் ஈடுபட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், கொடூர வான் வல்லூறுகளால் கோரமாகச் கொல்லப்பட்டு விட்டார்.

இனத்தாலும், மொழியாலும், உணர்வாலும் ஈழத் தமிழர்களோடு தாய், சேய் போன்று தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தமிழகம், இந்தக் கொடூரம் கண்டு கிளர்ந்து நிற்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் பட்டி-தொட்டி எங்கும் ஈழத் தமிழர் ஆதரவு உணர்வலைகளை மீண்டும் பெரியளவில் இச்சம்பவம் தட்டி எழுப்பி விட்டிருக்கின்றது.

இந்த எழுச்சி கண்டு துவண்டுபோன ஈழத் தமிழர் விரோத சக்திகள் அந்த எழுச்சியை அடக்கவும், அதன் ஊடாகத் தமக்கு அரசியல் லாபம் தேடவும் கங்கணம் கட்டிச் செயற்பட ஆரம்பித்துவிட்டன.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி, கோமாளிப் பத்திரிகையாளர் சோ. ராமஸ்வாமி என்ற ஒரு சிறு கூட்டம், தமிழகத்தில் மீண்டும் கிளர்ந்துள்ள ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சியை முளையிலேயே கிள்ளும் சதித் திட்டத்துடன் திரும்பவும் ஒன்று சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டன.

வழமைபோல வட இந்திய ஆரியப் போக்குப் பின்புல ஊடகங்கள் இதற்கு ஒத்து ஊதி, இந்த எதிர்ப்பைப் பூதாகரப்படுத்திக் காட்டவும் முழு மூச்சில் தயாராகி நிற்கின்றன.

தமிழ்ச்செல்வனின் குரூரப் படுகொலையால் உலகத் தமிழினமே அதிர்ச்சியில் உறைந்துபோய்க் கிடக்கின்றது.

தமிழ்ச்செல்வன் மறைவை ஒட்டி இரங்கல் செய்தி ஒன்றைத் தமக்கேயுரிய கவிதைப் பாணியில் தமிழக முதல்வர் வெளியிட்டு, இவ்விடயத்தில் உலகத் தமிழினத்தின் உணர்வலைகளோடு தாமும் சேர்ந்து நிற்கின்றார் என்பதை உலகுக்கு அடையாளப்படுத்திக் கொண்டார்.

அவ்வளவுதான். இந்த இரங்கல் செய்தியை ஒரு பெரிய விவகாரமாக்கி, ஊதிப் பெருப்பித்து, அதன்மூலம் அரசியல் குழப்பத்தை உருவாக்கத் தயாராகிவிட்டது "ஜெயலலிதா அன்ட் கொம்பனி".

ஈழத் தமிழரின் அரசியல் தலைவர் ஒருவரின் படுகொலையில் குறுகிய அரசியல் லாபம் தேடும் அற்பத்தனத்தில் அந்த அணி குதித்திருக்கின்றது.

இந்த இரங்கல் செய்தி வெளிப்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் இருந்த இரகசியத் தொடர்பு அம்பலமாகிவிட்டது என்றும் இந்திய அரசமைப்புக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் விசுவாசமாகச் செயற்படுவதற்கு உறுதியளித்து, சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்ற கலைஞரின் அரசு, இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் பிரமுகர் ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்ததன் மூலம், தேசிய பாதுகாப்புக்கு விரோதமாகச் செயற்பட்டதால் ஆட்சியிலிருந்து அகற்றப்படவேண்டிய தகுதி இழப்பு நிலைக்குச் சென்றுவிட்டது என்றும் கூக்குரலிட்டு, ஒப்பாரி வைக்கத் தொடங்கியுள்ளது ஜெயலலிதா அணி.

"உலக நாடுகள் அனைத்தும் சமாதான முயற்சிகளுக்காக அழைத்துப் பேசியது தமிழ்ச்செல்வனைத்தான். பச்சைத் தமிழரான தமிழக முதல்வர் மனித நேயத்தோடு மட்டுமல்ல, தன் இனத்து மாவீரன் ஒருவன் இப்படி அநியாயமாகக் குருத்தோலையாக வளர்ந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டானே என்று எண்ணிக் கண்ணீர் சிந்துவதற்கும் அவருக்கு உரிமை இல்லையா?" என்று ஜெயலலிதா அணியைப் பார்த்து நியாயம் கேட்டிருக்கின்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

"தானாடாவிட்டாலும் தசையாடும்" என்பார்கள். அப்படியேதான் கலைஞர் கருணாநிதியின் மனமும், இந்தக் கொடூரக் கொலையால் கொஞ்சம் அசைந்து கொடுத்திருக்கின்றது.அந்த உணர்வைக் கொச்சைப்படுத்துகின்றார் ஜெயலலிதா.

ஈழத் தமிழர்களுக்கும், அவர்தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்தகைய ஈழத் தமிழர் விரோதப் போக்குடைய ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்து அவருக்கு வால் பிடிப்பதாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்? உலகத் தமிழர் சமூகத்துக்கு அவர் உரிய பதில் தருவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத கட்டாயமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.puthinam.com/full.php?202Wr420eqgZE2eaiB7B3bdB8B04dcd0k4cc4Zrz2d43qSE2a03TKE3e

Sunday, November 4, 2007

வான் குண்டுத்தாக்குதலில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவு



[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 01:21 PM ஈழம்] [தாயக செய்தியாளர்]
சிறிலங்கா வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
கிளிநொச்சி
2007.11.02

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு

இன்று காலை ஆறு மணியளவில் எமது அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், மேஜர் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் ஆகியோரும் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தனர் என்பதை தமிழீழ மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சோ.சீரன்,
செயலர்,
தலைமைச் செயலகம்

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு முதல்...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.



தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.

1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.



1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்

1992 இல் சிறிலங்கா படையினரின் "பலவேகய - 02" எதிர்ச்சமரிலும்

முதன்மையானதாக இருந்தது.

மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்

காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்

ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.

ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண்பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான "தவளை நடவடிக்கை"யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண்பட்டார்.

"ஒயாத அலைகள் - 03" நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.

தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.

மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.