Wednesday, October 24, 2007

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேற பிரபாகரன் அனுமதிக்க வேண்டும்- பாஸிஸத்திடம் பாசம்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேற பிரபாகரன் அனுமதிக்க வேண்டும்
[24 - October - 2007] [Font Size - A - A - A]
* அமைச்சர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள்

டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் கடந்த 17 வருடங்களுக்கு அதிகமாக புத்தளத்தில் அகதி முகாம்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில், அம்மக்கள் மீண்டும் வடக்கில் குடியேற பிரபாகரன் அனுமதி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கும் மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அம்மக்கள் குடியேற இடமொன்றை ஒதுக்கி தந்து தொந்தரவுகள் எதுவும் வராதென உறுதியளித்தால் மட்டும் போதும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கான உள்ளூராட்சி மன்ற விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும்போதே அமைச்சர் பதியுதீன் இவ்வாறு கூறினார்:

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

இந்த பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சிகள் எப்போதும் அரசாங்கத்துக்கு எதிராக பேசும் சூழ்நிலையே நிலவுகிறது. நாட்டின் பிரச்சினைக்கு உண்மையாக முடிவு காண வேண்டுமென இரு தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தால் இது இவ்வளவு தூரம் பெருத்திருக்காது.

ஆனால், இரு தரப்பினரும் பிரச்சினையை இருவேறு கோணங்களில் நோக்கும் நிலைமை இங்கு இன்னும் காணப்படுகிறது. இதனால் பிரச்சினையும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

மக்களின் அகதிமுகாம் வாழ்க்கையென்பது மிக கொடுமையானது. இந்த நிலைமை மாற வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. அகதி முகாம்களிலுள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது அம்மக்கள் அடையும் சந்தோஷம் கொஞ்சநஞ்சமல்ல.

இந்தப் பிரச்சினையை ஒருபோதும் யுத்தம் மூலம் தீர்க்க முடியாதென்பதே அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தெளிவான நிலைப்பாடாக இருக்கிறது. இம்மாதிரியான பிரச்சினைகள் யுத்தத்தின்மூலம் தீர்க்கப்பட்டதாக வரலாறு கிடையாது. ஆனால், இங்கு ஒவ்வொரு கட்சிகளும் தங்களது சுயநலத்துக்காக சிங்கள பேரினவாதத்தை தூண்டி அதன்மூலம் மக்களை ஒன்றுபடுத்திப் பார்க்கிறது.

எனவே, இவ்வாறான குறுகிய நோக்கங்களை விடுத்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர அனைவரும் ஒன்றுபட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதை செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு இங்குள்ள அனைத்து கட்சிகளுக்கும் உண்டு.

இதேநேரம், வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் கடந்த 17 வருடங்களாக புத்தளத்தில் இன்னும் அகதிமுகாம்களிலேயே தங்கியிருக்கின்றனர். அம்மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை சிலர் அப்பிரதேசத்தை ஆக்கிரமிக்க வந்ததுபோல் தவறான கோணத்தில் கண்ணாடிபோட்டு பார்க்கின்றனர்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் புத்தளத்தில் 17 வருடங்கள் முடிவடைந்து 18 ஆவது வருடமாக அகதிமுகாம் வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இதுபோதாதென்று "வந்தா வரத்தான்", "வந்து குடியேற்றிவர்கள்" என்றும் அம்மக்கள் சிலரால் நிந்திக்கப்படுகின்றனர்.

எனவே, இவ்வளவு இன்னல்களை சந்திக்கும் அம்மக்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியேற விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோ அல்லது அவர்களின் சமாதான செயலகமோ ஆவன செய்ய வேண்டும். எமது சொந்த மண்ணில் குடியேற இடமளிக்குமாறு நாம் கேட்கிறோம். ஏனெனில், புலிகளும் மண்ணுக்காக தான் போராடுகின்றனர். இதில் நாம் ஒருபோதும் தமிழ் மக்களை தவறாக நினைக்கவில்லை.

வடக்கில் ஏதாவதொரு பகுதியை எமது மக்கள் குடியேறுவதற்காக ஒதுக்கித் தருமாறு கேட்கிறோம். விடுதலைப் புலிகளோ அல்லது அவர்களின் சமாதான செயலகமோ அவ்வாறானதொரு இடத்தை ஒதுக்கித் தந்து எந்தத் தொந்தரவும் இருக்காது என்று கூறினால் போதும்.

அத்துடன், இவ்வளவு காலம் எம்மக்களுக்காக பல உதவிகளை புரிந்த புத்தளம் மக்களுக்கும் புத்தளம் அரசியல்வாதிகளுக்கும் சமூகத்தினருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

No comments: