Monday, September 10, 2007

நவாஸ் ஷரீப் அவர்களின் அரசியல் வாழ்வில் சென்றது முதல் வந்தது வரை...

நவாஸ் ஷரீப் அவர்களின் அரசியல் வாழ்வில் சென்றது முதல் வந்தது வரை...
11 September 2007

* கட்டுரைகள்

Navas_Sarif_1.jpg1949 ஆம் ஆண்டு லாகூரில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(என்) கட்சித் தலைவர் மியான் முகமது நவாஸ் ஷரீப்புக்கு மகனாகப் பிறந்தார் நவாஸ் ஷரீப். இளமையிலேயே அரசியலில் அதிக ஈடுபாடாகத் திகழ்ந்தார். நீண்டகாலம் அரசியல் பணியாற்றினாலும் 1981 ஆம் ஆண்டு தனது 30-வது வயதில்தான் முழு நேர அரசியல் பணியில் நவாஸ் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் அவர் தேசிய அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. மாகாண அரசியலில்தான் தீவிரம்காட்டினார்.

அந்தவகையில், பஞ்சாப் மாகாணத்தின் நிதி அமைச்சராக முதலில் பதவி வகித்தார். பின்னர் அம்மாகாணத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து, தேசிய அரசியலில் குதிக்க முடிவு செய்த அவர், தேர்தலில் போட்டியிட்டு 1990 ஆம் ஆண்டு நவம்பர் 1-ல் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றார் மூன்றாண்டுகள் வெற்றிகரமான பிரதமராக பணியாற்றிய நவாஸ் ஷரீப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது தெரியவில்லை.

1993 ஆம் ஆண்டு ஜூலை 18-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றம் அப்போதைய அதிபர் குலாம் இசாக்கினால் களைக்கப்பட்டது. இதனால் தனது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யாமல் ராஜிநாமா செய்யவேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்கு நவாஸ் ஷரீப் தள்ளப்பட்டார்.

இதையடுத்து, இரண்டாவது தடவையாக 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி நவாஸ் ஷரீப் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். ஆனால் இந்தத் தடவையும் அவரால் தனது பதவிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யமுடியவில்லை. 1999-ம் ஆண்டு அக்டோபர் 12-ல் முஷாரபினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் நாடு கடத்தப்பட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் முதன் முறையாக நாடுகடத்தப்பட்டு, தற்போது பாகிஸ்தான் திரும்பியது வரை அவர் தனது வாழ்வில் ஏராளமான இன்னல்களையும், திருப்புமுனைகளையும் சந்தித்துள்ளார்.

அவை வருமாறு:

அக்டோபர் 12, 1999: ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த முஷாரபை பிரதமராக இருந்த நவாஸ் ஷரீப் பதவி நீக்கம் செய்ய முயற்சித்தார். இதையறிந்த முஷாரப் சுதாகரித்துக் கொண்டு ராணுவ பலத்தின் மூலம் நவாஸ் ஷரீப்பை பதவியை விட்டுத் தூக்கியெறிந்தார். உடனடியாக நாட்டை தன் கட்டுப் பாட்டுக்குள்ளும் கொண்டுவந்தார்.

அக்டோபர் 15, 1999: பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ராணுவத் தலைமைத் தளபதியான முஷாரப், நாட்டின் அதிபராகவும் தனக்குத்தானே முடிசூடிக் கொண்டார்.

நவம்பர் 10, 1999: தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக நவாஸ் ஷரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

நவம்பர் 18, 1999: நவாஸ் ஷரீப் முறைப்படி கைது செய்யப்பட்டு கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஜனவரி 19, 2000: நவாஸ் ஷரீப், அவரது சகோதரர் ஷபாஸ் உள்பட 7 பேர் மீது பயங்கரவாதம், கடத்தல், கொலை முயற்சி ஆகிய செயல்களில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டது

ஏப்ரல் 6, 2000: நவாஸ் ஷரீப்புக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது சொத்துக்கள் முழுவதையும் முடக்க அரசு உத்தரவிட்டது.

மே 12, 2000: ஊழல் விசாரணை நீதிமன்றத்தில் நவாஸ் ஷரீப் மீதான ஊழல் வழக்கு விசாரணை தொடங்கியது.

ஜூன் 2, 2000: நவாஸ் ஷரீப்புக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்தல், வருமான வருவரி காட்டாமல் ஏமாற்றியது ஆகிய குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.

ஜூலை 22, 2000: ஊழல் குற்றச்சாட்டு நிருபணமானதையடுத்து, 21 ஆண்டுகள் எந்த ஒரு அரசியல் பதவியையும் நவாஸ் ஷரீப் வகிக்கக் கூடாது என நீதிமன்றம் தடைவிதித்தது. அத்துடன் ரூ.17 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

டிசம்பர் 10, 2000: நவாஸ் ஷரீப் தான் செய்த அனைத்து குற்றங்களுக்காவும் மன்னிக்கப்பட்டார். குடும்பத்துடன் சவூதி அரேபியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.

பிப்ரவரி 12, 2001: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நவாஸ் ஷரீப்பிடம் சவூதி அரேபிய அரசு கேட்டுக்கொண்டது.

ஜூலை 7, 2005: முஷாரபுடன் ரகசிய உடன்பாடு ஏற்படுத்தியுள்ளதாக எழுந்தக குற்றச்சாட்டை நவாஸ் ஷரீப் திட்டவட்டமாக மறுத்தார்.

ஜூலை 29, 2005: நவாஸ் ஷரீப்பின் சகோதரர் ஷபாஸ் நாட்டைவிட்டுச் செல்ல பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டது.

நவம்பர் 7, 2006: நோய்வாய்ப்பட்ட தனது மகனுடன் லண்டனுக்குச் செல்ல நவாஸ் ஷரீப்புக்கு பாகிஸ்தான் அரசு பாஸ்போர்ட் வழங்கியது.

ஜூலை 20, 2007: முஷாரபினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முகமது இப்திகாரின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன் அவரை மீண்டும் தலைமை நீதிபதியாக நியமித்தது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்.

ஆகஸ்ட் 3, 2007: தான் மீண்டும் தாயகம் திரும்புவதற்காக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உதவியை நவாஸ் ஷரீப் நாடினார்.

ஆகஸ்ட் 23, 2007: நவாஸ் ஷரீப் தாயகம் திரும்ப உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆகஸ்ட் 30, 2007: தான் செப்டம்பர் 10 ஆம் தேதி பாகிஸ்தான் திரும்பப் போவதாக நவாஸ் ஷரீப் வெளிப்படையாக அறிவித்தார்.

செப்டம்பர் 7, 2007: ஷபாஸ கொலை குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நவாஸ் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கக் கோரி அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

செப்டம்பர் 10, 2007: நவாஸ் ஷரீப் தான் முன்னதாக அறிவித்திருந்தபடி, லண்டனில் இருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் வந்தடைந்தார். விமான நிலையத்தில் வந்திறங்கியதுமே, அவர் கைது செய்யப்பட்டு ஜெட்டாவுக்கு மீண்டும் நாடு கடத்தப்பட்டார்.

நவாஸ் ஷெரீப் மீண்டும் நாடு கடத்தப்பட்டார்

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் சென்ற அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரிப் அவர்கள் சில மணி நேரத்திலேயே, மீண்டும் நாடு கடத்தப்பட்டார்.

1999 இல் இராணுவ புரட்சியின் மூலம் தன்னைப் பதவி விலக்கிய, தற்போதைய பாகிஸ்தானிய அதிபர் பர்வேஸ் முஷாரப் அவர்களை எதிர்கொள்வதற்காக, அவருக்கு ஒரு சாவாலாகவே பாகிஸ்தானுக்குத் திரும்பும் முடியை நவாஸ் எடுத்திருந்தார். எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அவர் நாடு திரும்பலாம் என்று பாகிஸ்தானிய உச்ச நீதிமன்றம் அறிவித்த சில வாரங்களின் பின்னர் அவர் லண்டனில் இருந்து பாகிஸ்தான் சென்றார்.


இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இறங்கிய தருணத்தில்
இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இறங்கிய தருணத்தில்
பாகிஸ்தானுக்கு தான் திரும்பிச் செல்லும் இந்த முயற்சியை சர்வாதிகாரத்துக்கு எதிரான ஒரு ஜனநாயக முயற்சியாக அவர் வர்ணித்திருந்தார்.

இருந்த போதிலும் தான் அங்கு சென்று இறங்கும் போது கைது செய்யப்படலாம் என்பதை நவாஸ் ஷெரீப் அறிந்தே இருந்தார்.

அவரது நாடு கடத்தலை அடுத்து அவரது ஆதரவாளர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடபட பொலிஸார் அவர்களை கலைத்தனர்.

இப்படியான ஆர்ப்பாட்டங்கள் இஸ்லாமாபாத்திலும், ராவல்பின்டியிலும், அட்டாக்கிலும் கூட நடந்ததாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் கூட நடந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

இன்று மாத்திரமல்லாமல் கடந்த 5 நாட்களாக நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியின் பல தலைவர்கள் உட்பட சுமார் மூவாயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக அந்தக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் முஷாரப்புக்கு ஒரு அச்சுறுத்தலாக திகழ்வார் என்ற காரணத்தினாலே நவாஸ் ஷெரீப் அவர்கள் மீண்டும் நாடுகடத்தப்பட்டதாக முஸ்லீம் லீக் கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறாகள். ஆனால் பாகிஸ்தானின் மதவிவகார அமைச்சர் இஜாஸ் அல் ஹக் அதனை மறுக்கிறார்.


நவாஸ் ஷெரீப்பின் ஆதர்வாளர்களை பொலிசார் கலைத்தனர்
நவாஸ் ஷெரீப்பின் ஆதர்வாளர்களை பொலிசார் கலைத்தனர்
எப்படியிருந்த போதிலும் நவாஸ் ஷெரீப் நாடுகடத்தப்பட்டதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

அவரை நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்தமையானது, நீதிமன்றத்தை அவமதிக்கும் நடவடிக்கை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

அது மாத்திரமன்றி அவர் இவ்வாறு நாடுகடத்தப்பட்டதன் மூலம் பல அரசியல் லாபங்களையும் அவரது கட்சி பெறமுயலக்கூடும். அவரை ஒரு அரசியல் மாவீரராக அவரது கட்சியினர் முன்னிலைப்படுத்த முனையலாம்.

ஆகவே நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தியமை இந்தப் பிரச்சினையின் முடிவாக இருக்கப்போவதில்லை, சட்ட ரீதியாகக் கூட அதிபர் முஸாரப் பலவீனமாக இருப்பதாகவே தென்படுகிறது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

அத்தோடு அதிபர் முஸாரப்புக்கு எதிரான நவாஸ் ஷெரீப்பின் போராட்டமும் நாட்டுக்கு வெளியே இருந்த வண்ணம் தொடரத்தான் போகிறது.

No comments: