Friday, August 10, 2007

தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது- இதில் முரண்கருத்து இல்லை என்பது போல : புலிகள் மட்டும் தனித்து முன்னெடுக்க முடியாது;

தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது- இதில் எத்தகைய முரண்கருத்து இல்லை என்பது போல : புலிகள் மட்டும் தனித்து முன்னெடுக்க முடியாத என்பதும் சொல்லப்பட வேண்டும்..........

தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது: பேராசிரியர் சுமணசிறி லியனகே
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 07:16 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

இலங்கைத் தீவில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டமானது நீதியான, ஜனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது என்று சிறிலங்காவின் பேராதனைப் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் சுமணசிறி லியனகே கூறியுள்ளார்.

சுவிசின் பேர்ண் பல்கலைக்கழக அரசியல் விவகார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "மறக்கப்பட்ட முரண்பாடு- சிறிலங்கா யுத்தத்தை நோக்கி" என்ற தலைப்பில் உரையாற்ற அண்மையில் சுவிஸ் சென்றிருந்த பேராசிரியரான சுமணசிறி லியனகே, சுவிசிலிருந்து வெளியாகும் மாதமிருமுறை இதழான "நிலவரம்" (ஓகஸ்ட் 10) ஏட்டுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் முதல் பகுதி:

கேள்வி: ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரம் முன்னெப்போதையும் விட அனைத்துலக மயப்பட்டு நிற்கின்றது. இந்நிலையிலும் கூட சிறிலங்கா அரசானது, நாட்டில் இனப்பிரச்சினை என எதுவுமே இல்லை அது வெறுமனே பயங்கரவாதப் பிரச்சினை எனக் கூறி வருகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: உண்மையில் தமிழர் பிரச்சினை என்பது சிறிலங்கா அரசால், குறிப்பாக கூறுவதானால், காலனித்துவத்திற்கு பிந்திய சிறிலங்கா அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. சமூகத்திலிலுள்ள பல்லினத் தன்மையைப் புரிந்து கொண்டு நடக்காமல் விட்டதனால் ஏற்பட்ட விளைவே இது எனலாம். ஏனெனில் இலங்கை என்பது சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள், மலேயர்கள் என பல இனங்கள் வாழுகின்ற நாடு.

இத்தகைய பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டிலே மற்றொரு இனத்தை ஓரங்கட்டும் பெரும்பான்மையின ஆட்சி வெற்றியைத் தராது. மேற்கு இந்திய நாடுகளில் பிறந்து இங்கிலாந்திலே விரிவுரையாளராகப் பணியாற்றிய பிரபல பொருளியலாளரான ஆர்தர் லூயிஸ் பின்வருமாறு கூறினார் "பெரும்பான்மை ஐனநாயகம் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. அது மட்டுமன்றி அநீதியான ஒன்றுமாகும்." இந்த அடிப்படையில் பார்த்தால் காலனித்துவத்திற்குப் பிந்திய சிறிலங்கா அரசு நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை நீண்ட காலமாகத் தொடரும் யுத்தம் நிருபிக்கின்றது. அதுமட்டுமல்ல அது அநீதியானதும் கூட. ஏனெனில் அங்கு சகவாழ்வு என்பதற்கான அடிப்படை கூட இல்லை.

எனவே தமிழர் போராட்டம் என்பது நியாயமான காரணங்களுக்காக நடைபெறுகின்ற ஒன்று. தேசிய அபிலாசைகளின் அடிப்படையில் நடைபெறும் அப்போராட்டத்துக்கு நியாயமான தேவை இருக்கின்றது. ஆனால் அது நடைபெறுகின்ற வழிமுறை சரியா என்பது கேள்விக்குரியது. ஆனால், அடிப்படையில் தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டுள்ளது.

கேள்வி: உங்கள் கருத்தின்படி சிங்கள அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தமிழ் மக்களுக்கு நியாயமான காரணங்களுண்டு. அண்மைய உலகப் போக்குகளை கருத்தில் எடுக்கும்போது, உலகெங்குமுள்ள விடுதலைப் போராட்டங்கள் ஜோர்ஜ் புஷ்ஷின் ~பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற கருத்தின் கீழ் நசுக்கப்பட்டு வருவதனைக் காண்கின்றோம். சிறிலங்கா அரசு கூட இதனையே முன்னிலைப்படுத்துகின்றது. இந்த நிலைப்பாடு சரியா?

பதில்: ஜோர்ஜ் புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற கருதுகோள் பைத்தியக்காரத்தனமானது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கின்றேன். சில தீவிரவாத அமைப்புக்களைப் பயங்கரவாத அமைப்புக்கள் எனக்கூறும் அவர் அமெரிக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட அல்லது அமெரிக்க நலன்களைப் பேணுகின்ற அதுபோன்ற அமைப்புக்களைப் வளர்த்து வருகின்றார். அமெரிக்க நலன்கள் எனும்போது அது அமெரிக்க ஏகபோகத்தை குறிக்கின்றது. உதாரணமாகக் கூறுவதானால் சதாம் உசைன் மீது எனக்கு அனுதாபம் கிடையாது. ஆனால, ஈராக் தலையீடு என்பது ஈராக் மக்களுக்கு ஐனநாயகச் சூழலை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அல்ல. மாறாக மொபைல் உட்பட ஏனைய பல்தேசிய எண்ணெய்க் கொம்பனிகளை திருப்திப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

எனவே பல்வேறு சமூக இனங்களையும் பற்றி பேசும்போது ஜோர்ஜ் புஷ்ஷின் கருத்தின் அடிப்படையில் அவற்றைப் பார்ப்பது தவறு. ஏனெனில் புஷ்ஷின் வரையறை என்பது விஞ்ஞான அடிப்படையிலேயோ விழுமியங்களின் அடிப்படையிலேயோ மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. அது அடிப்படையில், அமெரிக்காவின் சாதாரண மக்களின் நலனையன்றி அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகர்களின் நலன் சார்ந்தது என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கின்றதோ எங்கெல்லாம் அடக்குமுறை நிலவுகின்றதோ எங்கெல்லாம் ஓரங்கட்டல் நடக்கின்றதோ எங்கெல்லாம் பாரபட்சம் காட்டப்படுகின்றதோ அங்கெல்லாம் மக்கள் முன்வந்து அதனை எதிர்க்கவே செய்வர். தமது கோரிக்கைகளை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கவே செய்வர். இது இயற்கையானது.

ஆகவே புஷ்ஷின் கொள்கையின் அடிப்படையில் கதைப்பதை விட்டுவிட்டு பேராசிரியர் எட்வேர்ட் டாசனின் கருத்தை அடிப்படையாகக்கொண்டு பேச விரும்புகின்றேன். அமெரிக்க - மேரிலான்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இவர் முரண்பாட்டுத் தீர்வு விவகாரத்தில் பிரசித்தி பெற்றவர்.

சிறிலங்காவில் நிலவுவது போன்ற முரண்பாடுகள், நீடித்த சமூக முரண்பாடுகள இவை நான்கு விடயங்களின் அடிப்படையில் உருவாகின்றன.

அவற்றுள் முதலாவது, காலனித்துவக் கொள்கைகள். சிறிலங்காவின் நிலைமையைப் பின்நோக்கிப் பார்ப்போமானால் காலனித்துவக் கொள்கைகள் சிறிலங்காவின் நீடித்த சமூக முரண்பாட்டிற்கு ஓரளவு பங்களித்திருப்பதைக் காண முடியும்.

இரண்டாவதாக, நாட்டின் சமூகக் கட்டுமானத்தைக் குறிப்பிடமுடியும். இதை அடிப்படையாகக் கொண்டே சிறிலங்காவில் பல தேசிய இனங்கள் வாழுவதாக முன்னர் நான் கூறினேன். பல தேசிய இனங்கள் இருக்கும்போது, பல்வேறு கலாச்சாரங்கள் இருக்கும்போது, பல்வேறு மதங்கள் இருக்கும்போது முரண்பாடுகள் வருவது இயற்கையே.

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர் உண்மையிலேயே என்ன நடைபெற்றது என்றால், சிறிலங்கா அரசானது காலனித்துவ ஆட்சியாளர்கள் எத்தகைய கொள்கைகளைக் கடைப்படித்தார்களோ அதனையே கடைப்படித்து வந்தது. எனவே, அது ஒரு பெரும்பான்மை ஜனநாயகம். கடந்த காலத்தை எடுத்து நோக்கினால் எப்பொழுதெல்லாம் பெரும்பான்மை ஜனநாயகம் செயற்படுகின்றதோ அப்போதெல்லாம் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு வந்தள்ளனர்.

உதாரணமாக, 1940 இன் இறுதிப்பகுதியில் குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டு கண்டித் தமிழர்களான இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மையானோரின் குடியுரிமைமை பறிக்கப்பட்டது. தேசியக் கொடி பற்றித் தீர்மானிக்கப்பட்ட போது அது சிறிலங்காவின் பல்லினத்தன்மையைப் பிரதிபலிப்பதாக அன்றி, சிங்கள தேசத்தின் மேலாதிக்கத்தை மாத்திரம் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது.

1956 இல் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்க்கட்சிகளின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் தனிச்சிங்களச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. இவை சுதந்திரத்திற்குப் பின்னான காலப் பகுதியில் அரச கொள்கைகள் எத்திசையில் பயணித்ததன என்பதனைக் காட்டுகின்றன. இதுவே யதார்த்தமாக இருக்கையில் ஏனையோரின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாது விடும்போது, பாரபட்சமாக நடத்தப்படும் போது, ஓரங்கட்டப்படும் போது அவர்கள் எதிர்ப்பை வெளிக்காட்டுவது இயல்பானதே. எனவே தமிழர் அரசியலில் 50, 60 மற்றும் 70 களில் அகிம்சை ரீதியில் நடைபெற்ற விடயங்கள் இயல்பானதே.

இத்தகைய எதிர்ப்புக்களை அடக்கிவிடவே அரசு முயற்சித்தது. எதிர்ப்புக்கள் உருவாகும் போதெல்லாம் அரசுகள் ஒடுக்குமுறைகளையும், அடக்குமுறைகளையும், பாரபட்சத்தையும், ஓரங்கட்டுதலையும் முன்னரை விடத் தீவிரமாக மேற்கொள்ளுகின்றன. ஆனால் சில நாடுகள் வித்தியாசமான கொள்கைகளை கடைப்பிடிக்கின்றன.

உதாரணமாக இந்தியாவைக் குறிப்படலாம்.

இதனைத் தெளிவாகக் குறிப்பிடுவதானால் இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தி ஆட்சிமொழியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டதும் அதற்குக் கடும் எதிர்ப்புக்கள் உருவாகின.

குறிப்பாக, தெற்கே தமிழ்நாட்டில் சுயாட்சிக் கோரிக்கை கூட முன்வைக்கப்பட்டது. ஆனால் 50 களில் ஐவகர்லால் நேரு இந்தி ஆட்சிமொழி என்ற சட்டத்தை நீக்கி மும்மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கமைய ஒவ்வொரு இந்தியனும் தனது மாநில மொழியை முதன் மொழியாக கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது தமிழ்நாட்டவர் தமிழையும் ஆந்திர மாநிலத்தவர் தெலுங்கையும் கன்னட மாநிலத்தவர் கன்னடத்தையும் கேரள மாநிலத்தவர் மலையாளத்தையும் கற்றுக் கொள்ளுமாறு கேட்கப்பட்டனர்.

இரண்டாவது மொழி அனைத்துலக மொழியான ஆங்கிலமாக இருந்தது. மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்றுக் கொள்ளுமாறு அவர் கூறவில்லை. மாறாக தத்தம் மாநிலத்தில் இல்லாத வேறு ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளுமாறு கோரினார். இதன்மூலம் இந்தியாவில் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.

ஆகவே 50களில் இந்தியைக் கற்றுக்கொள்ளுவதை எதிர்த்து வந்த மக்களில் பலர் இந்தியை தாமாகவே கற்றுக்கொள்ள முன்வந்தனர். ஏனெனில் அதனால் பல நன்மைகள் விளைந்தன.

50 களில் யாழ்ப்பாணப் பாடசாலைகளில் கூட சிங்களத்தைக் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏனெனில் சிங்களம் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு தபாலதிபராகப் பணியாற்ற அரச திணைக்களங்களில் எழுதுவினைஞராகப் பணியாற்ற என பல்வேறு விடயங்களுக்கு அவசியமாக இருந்தது.

இந்தியா ஒரு மொழிக்கொள்கையிலிருந்து மும்மொழிக் கொள்கைக்கு மாறிய போது சிறிலங்கா அதற்கு முற்றிலும் எதிர்மாறான கொள்கையைக் கடைப்பிடித்தது. சிறிலங்கா அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் எவ்வாறு சிறிலங்காவின் பல்லினத் தன்மைகளைப் புறந்தள்ளி தமது முடிவுகளை எடுத்தார்கள் என்பதனை இது புலப்படுத்துகின்றது.

இதுவே, நீடித்த சமூக முரண்பாட்டிற்கு வழிவகுக்கும் காரணிகளில் ஒன்றாக சமூகக் கட்டுமானத்தை டாசன் மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் தமிழ் மக்களின் போராட்டம் என்பது அவர்களின் துயரங்களுக்கு வழிதேடும் வகையிலான நீதியிலான ஒரு போராட்டம் என நான் கூறுகிறேன். எனவே தமிழ் மக்களின் போராட்டம் பயங்கரவாதம் என்ற கருத்து இங்கு பொருத்தமற்றது.

இன்றைய உலகச் சூழலில் நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, துருவமயப்பட்டுள்ள உலகில் அமெரிக்காவின் கொள்கையே பல நாடுகளின் கொள்கையினைத் தீர்மானிப்பதாக உள்ளது. பிரித்தானியா அமெரிக்காவைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. முழுமையாக இல்லாது விட்டாலும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏனைய பல நாடுகளும் இம்முடிவினையே பின்பற்றுகின்றன. இந்தக் கொள்கை சரியென்பதற்காக அல்ல, மாறாக பலமுள்ளவனின் கொள்கை என்பதற்காகவே அது பின்பற்றப்படுகின்றது.

இந்தக் கொள்கையைக் கடுமையாக எதிர்த்துவரும் சிமோன் செர்க்னொவ்ஸ்கி இது ஒரு முட்டாள்த்தனமான கொள்கை என வாதிடுகிறார்.

எனவே அமெரிக்கா கூறுவதை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்காமல், ஆய்வு அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும்.

இப்போது நீங்கள், "நீதியான காரணம் இருக்குமாக இருந்தால் எந்தவொரு நடவடிக்கையையும் நியாயப்படுத்திவிட முடியுமா?" என்றொரு கேள்வியைக் கேட்கலாம். இங்கு ஒரு வித்தியாசம் இருக்கிறது.

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் சுபாஸ் சந்திரபோஸ் போன்றோர் வேறுவிதமான அணுகுமுறைகளைக் கைக்கொண்டனர். இரண்டு காரணங்களுக்காக காந்தி இதனை எதிர்த்தார். முதலாவதாக விளைவுகள் நல்லவை என்பதற்காக அதனை அடைகின்ற வழிமுறைகள் எத்தகையதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது. சிலவேளை இது குறுகிய காலத்தில் மிகச் சிறந்ததாகத் தென்படமுடியும்.

இது மாத்திரமல்ல, இலக்கை அடையும் வழிமுறையைத் தெரிவுசெய்ய வேண்டும் என்றார். இதுவே காந்தி அறிமுகம் செய்த அகிம்சை - இதனையே அமெரிக்க சிவில் இயக்கம் உட்பட பல அமைப்புக்கள் ஏற்றுக்கொண்டன.

ஏனெனில், நீங்கள் இலக்கை எட்டாத போதிலும் நீங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கேயே இருக்க முடியும். உங்களுக்கு ஆதரவு கிட்டுமே ஒழிய, பாதிப்பு எதுவும் வந்துவிடாது. இது ஒரு விடயம்.

இரண்டாவது விடயம் உங்கள் வழிமுறை நியாயப்பூர்வமானதாக இருத்தல் ஆகும். நான் இதனையே பின்பற்றுகிறேன். ஒரு வேலைத்திட்டத்தை வரையறை செய்துகொண்டு அதற்குள்ளாக ஒரு சமரசப் பேச்சுக்களினூடே இலக்கை அடைதலே அதுவாகும். இது நிச்சயமான வழி.

சிறிலங்கா விவகாரத்தை எடுத்துக்கொண்டால் இதுவரை 65,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தத் தொகையில் அரைவாசிக்கும் குறைவானோரே இரண்டு தரப்பையும் சேர்ந்த ஆயுதப்படைகளில் உயிரிழந்தோர் ஆவார். சகல யுத்தங்களையும் போல முதலாம் உலக யுத்தமாயினும், 2 ஆம் உலக யுத்தமாயினும், ஏனைய யுத்தங்களாயினும் - குடிமக்களே யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர்.

துல்லியமாக இல்லாவிட்டாலும் எனக்குத் தெரிந்தளவில், யுத்தத்தில் இறப்போரில் 60 வீதமானோர் குடிமக்களே. அதில் பெரும்பான்மையானோர் சிறுவர்களும் பெண்களும் ஆவார். எனவே, இவ்வாறு நாம் தொடர்ந்து செல்ல முடியுமா? அரசாங்கத்தின் மீது நாம் குறை கூறுவதானாலும் கூட நாம் இவ்வாறு தொடர்ந்து செல்லப் போகின்றோமா எனச் சிந்திக்க வேண்டும்.

இது நான் முன்வைக்க விரும்பும் கேள்வி - இதே கேள்வியையே காந்தியும் முன்வைத்தார். அதனை (வன்முறையை) நீங்கள் ஆரம்பித்து வைத்தால், அதற்கு முடிவே இருக்காது காந்தி கூறினார்.

இந்த அடிப்படையில் நான் ஒரு தமிழ்த் தேசியவாதி எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு நான் கூறும்போது நளின் டீ சில்வா போன்றோர் என்னை விமர்சிக்கிறார்கள். நீ ஒரு சிங்களவனாய் இருந்து கொண்டு தமிழ்த் தேசியவாதியாய் இருக்கிறாய் என்கிறார்கள். நீங்கள் கூறுவதைப் போன்று தமிழர்களில் கூட சிலர் சிங்களத் தேசியவாதிகளாய் இருக்கிறார்கள்தானே?

தேசியவாதம் என்பது படுமோசமான ஒரு விடயம் எனப் பலர் கூறுகிறார்கள். தேசியவாதம் தொடர்பாக பிரபலமான புலமையாளரான பெனடிக்ற் அண்டர்சன் கூறுவதுபோல தேசியவாதம் என்பது ஒரு இயல்பான விடயம். நான் கூட ஒரு முறை "மார்க்சிசம், லெனினிசம், என்பவற்றைவிட தேசியவாதம் மிகவும் துல்லியமான ஒரு தத்துவம்" என எழுதியிருந்தேன். ஏனெனில், தேசியவாதம் என்பது மார்க்சிசம், லெனினிசத்தை விட அதிக பரப்பெல்லையைக் கொண்டது. இது வேறு விடயம்.

நான் கூற விரும்புவது என்னவெனில், தேசியவாதி என்பவரை எவ்வாறு வரையறுப்பது? "நீங்கள் உங்கள் நாட்டுக்கு அவமானமாக விளங்குவீர்களானால் நீங்கள் ஒரு தேசியவாதி"

என பெனடிக்ற் அன்டர்சன் கூறுகிறார். நான் என்னைச் சிறிலங்காத் தேசியவாதி எனக் கூறிக்கொள்கிறேன். ஏனெனில் நான் சிறிலங்காவின் கடந்த கால வரலாற்றையிட்டு வெட்கப்படுகின்றேன். இந்த அடிப்படையில் நான் ஒரு தேசியவாதி.

உண்மையில் பெனடிக்ற் அன்டர்சன் ஒரு சந்தர்ப்பத்திலே தான் பிறந்த நாடான பிரித்தானியாவின் அவமானமாக மாறியதாகக் கூறினார். 1956 காலப் பகுதியில் தனது மாணவர்கள் சிலர் சிறிலங்கா மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோது தாக்கிய விவகாரத்தின் போதே இவ்வாறு கூறினார்.

ஜேர்மன் பேராசிரியரான கான்ட், தனது கட்டுரையில் பின்வருமாறு கூறினார். "மற்றைய தரப்பினரை நீங்கள் மோசமாக நடத்தவில்லையானால் நீங்கள் ஒரு சரியான குடிமகன் அல்ல."

தேசியவாதம் வேறு, தேசியவாதி வேறு. இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும் - வன்முறையையும் தேசியவாதத்தையும் நீங்கள் இணைக்கமுடியாது. ஏனெனில், பல இடங்களில் அது வெற்றிபெறவில்லை. உதாரணமாக சல்வடோர், நிக்கரகுவா போன்ற நாடுகளைக் கூற முடியும்.

இது இன்றைய உலகச் சூழ்நிலையிலும் ஓரளவு தங்கியுள்ளது. இன்றைய நிலையில் ஐக்கிய நாடுகள் சபை தேசங்களின் கூட்டமைப்பாக இல்லாமல் அரசாங்கங்களின் கூட்டமைப்பாகவே உள்ளது. ஏனெனில், உலகில் சுமார் 6,000 தேசிய இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிலர் 12,000 தேசிய இனங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

ஐ.நா. சபையில் எத்தனை நாடுகள் இருக்கின்றன. 200 நாடுகள் என வைத்துக்கொண்டால் சராசரியாக 30 தேசிய இனங்கள் ஒரு நாட்டில் இருப்பதாகக் கொள்ள வேண்டும். இதனால் யப்பானிலோ, ஐஸ்லாந்திலோ 30 தேசிய இனங்கள் இருப்பதாகக் கொள்ள முடியாது. ஆனால் இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் உள்ளன.

எனவே, இன்றைய சூழலில் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடுகள் தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிவிட முடியாது. எனவே நாம் தேசியம் என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டும்.

மறுபுறம், தேசிய விடுதலைப் போராட்டமொன்று ஆரம்பமாகும்போது அந்த தேசிய இனமானது மரபு ரீதியாக, சிந்திக்க ஆரம்பிக்கின்றது எனப் புரிந்து கொள்ளலாம். ஒரு வகையில் பார்த்தால் அவர்கள் முரண்படுகிறார்கள். நாட்டின் தேசியம் என்ற கருதுகோளுக்கு எதிராகப் போராடும் அவர்கள் அதேவேளையில் அந்த நாட்டிற்குள்ளேயே போராட்டத்தை நடாத்துகிறார்கள்.

இதுவே இங்குள்ள பிரதான முரண்பாடு.

எனவே, என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான விடுதலைப் போராட்டங்கள் வித்தியாசமாகச் சிந்திக்க வேண்டும். அவர்கள் தேசியத்துக்காக என்றில்லாமல் வேறுவிதமான அமைப்பொன்றை அமைக்கப் போராடுவதாக நினைக்க வேண்டும்.

இதுவே ஈழத்தமிழர் விவகாரத்திலும், சிறிலங்கா முஸ்லிம்கள் விடயத்திலும், ஈராக்கில் குர்திஷ் மக்களின் போராட்டத்திலும் பிரச்சினையாக உள்ள விடயம் என நான் நினைக்கிறேன்.

காஷ்மீர், நாகலாந்து ஆகிய இடங்களிலும் இதுவே பிரச்சினை. அவர்கள் அனைவரும் தத்தம் தேசியத்தின் அடிப்படையிலேயே சிந்திக்கின்றனர். அது இயல்பானது. ஏனெனில் இது முழுமையாக தத்துவ அடிப்படையிலானது. மார்க்சிச சிந்தாந்தத்தின் வீழ்ச்சியின் பின்னரே இந்த நிலை உருவானது. இது ஒரு சுதந்திரமான அல்லது சிலவேளைகளில் சுதந்திரமற்ற பூர்ஷ்வா சித்தாந்தம். ஒரு முதலாளித்துவச் சித்தாந்தம். தேசியம் என்பதும் இந்த முதலாளித்துவச் சித்தாந்தத்தின் ஒரு பகுதியே.

தத்துவ அடிப்படையிலான பிரச்சினைக்கு விவாதித்து முடிவு காணாவிடில் தீர்வை எட்டமுடியாது. நீடித்த சமூக முரண்பாட்டுக்கு சரியான தொடக்கப் புள்ளியும் இல்லை சரியான முடிவும் இருக்காது. அது முடிவில்லாமல் நீடித்தவண்ணமே இருக்கும். கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்து எதிர்காலத்தையும் எதிர்வு கூறுவதாக இருந்தால், சிறிலங்கா முரண்பாடு முடிவுக்கு வராதெனவே நினைக்கிறேன். எதிர்வரும் 20 வருடங்களுக்கு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என நான் நினைக்கவில்லை.

சிறிலங்கா அரசால் இந்த யுத்தத்தைச் சமாளிக்க முடியுமெனவே கருதுகிறேன். மேலும் மேலும் அது வளங்களைத் தேடிக் கொள்கின்றது. கடந்த 1999 - 2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிறிலங்கா அரசு 55 பில்லியன் ரூபாய்களை யுத்தச் செலவீனமாகக் கொண்டிருந்தது. அமெரிக்க ராண்ட் நிறுவனத்தின் கணிப்பின்படி இக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் 39 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளனர். இந்த இரண்டு செலவினங்களுமே கிட்டத்தட்டச் சமமானவை. ஏனெனில் விடுதலைப் புலிகள் சம்பளம் வழங்க வேண்டியதில்லை.

அவர்களது பணியில் அநேகம் தொண்டு அடிப்படையிலானவை. இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகின்றது. இரண்டு தரப்பினருமே ஆகக் குறைந்தது 100 பில்லியன் ரூபாவை வருடாந்தம் செலவிடக்கூடிய வல்லமையோடிருக்கின்றார்கள். இது மிகப் பெரிய தொகை மிகப் பெரிய வளம். எனவே இரண்டு தரப்புக்குமே, யுத்தத்தைத் தொடரக்கூடிய வல்லமை இருக்கிறது. சிலவேளை 2001 போல் ஒரு சலிப்பு நிலை தோன்றலாம் - எனினும் 2, 3 வருடங்களில் மீண்டும் யுத்தம் ஆரம்பித்துவிடும்.

எனவேதான், இந்த முரண்பாடு தொடர்ந்து நீடிக்கும் எனக்கூறுகிறேன். சமூகம் மேலும் வன்முறை மிக்கதாக மாறும் நிலையே உள்ளது. எனவே நாம் வித்தியாசமாகச் சிந்திக்க வேண்டும். முழுவதையுமே தலை கீழாக மாற்றியமைக்க வேண்டும்.

கனடாவைப் பொறுத்தவரை இத்தகைய மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தியா கூட மேலும் ஜனநாயகத்தை நோக்கியும் அதிகாரப் பகிர்வை நோக்கியும் சென்று கொண்டிருக்கின்றது. உலகத்தை ஒட்டு மொத்தமாக நோக்கினால் சுமார் 60 வீதமான மக்கள் அதிகாரத்தை பகிர்ந்துகொண்டு அதிகாரம் மத்தியில் குவிக்கப்பட்டிராத நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இன்னும் 50 வருடங்களில் இதுவே உலகின் நியதியாக இருக்கும்.

தமிழர் பிரச்சினையின் துயரங்கள் வித்தியாசமான நிலைப்பாட்டுடன் கூறப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். அவ்வாறு இருந்தால் மாத்திரமே இவ் விவகாரம் மிகவும் நியாயப்படுத்தப்படக்கூடியதாக, அதிக மனோபலம் உடையதாக மாறும். தமிழ் மக்களுக்காகப் போராடுவதாகப் பொதுவில் கூறமுடியும். ஆனால், அப்படிக் கூறும்போது பல கேள்விகள் எழும் வாய்ப்புள்ளது. இவ்விடயத்தில் சரியான தீர்வைக் காணாது விட்டால், அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெறுவது கடினமாகி விடும். நீங்கள் நியாயமான ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டால் மாத்திரமே சிறிலங்கா அரசு அநீதியின் அடிப்படையில் செயற்படுகிறதெனக் கூறமுடியும். இதுவே அனைத்துலக சமூகத்தின் ஆதரவை விடுதலைப் புலிகளுக்கும் பெற்றுத் தரும்.

ஒரு பலமான அரசுடன் போரிடும் போது ஜனநாயக மனித உரிமைக் கொள்கைகளை எவ்வாறு பேணமுடியும் என என்னிடம் வினவப்பட்டது. இது சரியெனத் தோன்றுகிறது. ஆனால் கோத்தபாய ராஜபக்சவும் இதையேதான் கேட்கிறார். எனவே, இந்த வாக்கியத்துக்கு எம்மை எவ்வாறு தகவமைத்துக் கொள்வது? அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்குக் கட்டுப்பட்டுள்ள அனைத்துலக சக்திகள் நிச்சயம், அரசாங்கம் என்ற கோதாவில் சிறிலங்கா அரசுக்கு உதவுவர். இது ஒரு நியாய அடிப்படையிலான கேள்வி. எனவே, தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் சரியான நியாயாத்தின் அடிப்படையைக் கொண்டிராவிடில் அனைத்துலகத்தின் ஆதரவைப் பெறுவதென்பது கடினம்.

எனவே, நிலைமையில் மாற்றம் தேவை. அதற்காக ஒரே நாளில் 180 பாகை திரும்பிவிட முடியாது. எனவே, படிப்படியாக மாற்றத்தைக் காட்டவேண்டும். ஏனெனில், விடுதலைப் புலிகளின் சில நடவடிக்கைகள் போராட்டத்துக்கு அவசியமில்லாதவை. அவற்றுக்குச் சில காரணங்கள் இருந்தாலும் கூட அவை தவிர்க்கப்படக்கூடியவை என்பதே எனது கருத்து என்றார் அவர்.

No comments: