Monday, August 20, 2007

பெரு நாட்டை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம

பெரு நாட்டின் மத்திய கடலோரப்பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 337 பேர் பலியாயினர்.ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை அந்நாட்டு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது.

பெரு நாட்டில் மையப்பகுதியிலுள்ள சின்சா நகரிலிருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் சுமார் 25 மைல்கள் தொலைவில் கடற்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, சிறிய அளவில் பல நில நடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டில் கெனடே, சின்சா, ஈக்கா ஆகிய நகரங்களில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. நிலநடுக்கத்தை கடலோரப் பகுதியில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாது மலைப்பகுதி மற்றும் உள்நாட்டுப்பகுதியில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்களும் உணர்ந்தனர். சுமார் 2 நிமிடத்திற்கும் மேலாக ஞிடித்த இந்த நிலநடுக்கத்தின் காரணமாக வீடுகளில் ஜன்னல்கள் உடைந்தன. ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.

பெரு தலைநகர் லிமாவிலிருந்து சுமார் 160 மைல் தொலைவிலுள்ள ஃபிஸ்கோ நகரம் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்நகரில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டதாக ராணுவ ஜெனரல் லூயிஸ் பெலோமினோ தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தையடுத்து பெரு தொலைக்காட்சியில் பேசிய அந்நாட்டு அதிபர் ஆலன் கேர்ஸியா, நிலநடுக்கம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிவாரணப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கத்தால் பெரு தலைநகர் லிமாவின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்ததாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. தொலைத்தொடர்பு மற்றும் மொபைல் போன் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பெருவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தையடுத்து, பெரு, சிலி ஈக்வெட்டார், கொலம்பியா, பனாமா, போஸ்டாரிகா, நிகரகுவா, கௌதமாலா, எல்சல்வடா, மெக்சிகோ, கோன்டரஸ் ஆகிய நாடுகளுக்கு பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. ஹவாய் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. எனினும், பின்னர் இந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. பெரு கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி அலைகள் ஏற்பட்டதாகவும், எனினும் சுனாமி அலைகள் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு பெரிய அளவில் ஏற்படவில்லை என்றும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. பெரு மற்றும் தென் அமெரிக்க கடற்பகுதியின் பெரும்பான்மையான பகுதிகள் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளன. இதனால், அப்பகுதிகளில் அவ்வப்போது சிறிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

No comments: