Sunday, August 12, 2007

உலகமே கைவிட்ட மிக்-27




உலகமே கைவிட்ட மிக்-27 ரக வானூர்தி கொள்வனவில் கோத்தபாயவின் மில்லியன் டொலர் கொள்ளை: "சண்டே லீடர்"
[செவ்வாய்க்கிழமை, 7 ஓகஸ்ட் 2007, 14:56 ஈழம்] [பி.கெளரி]

உலக நாடுகளால் கைவிடப்பட்ட மிக்-27 ரக வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்ததில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச பெருந்தொகையான மில்லியன் டொலரை கொள்ளையடித்தது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஆய்வு அறிக்கையை கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏடு வெளியிட்டுள்ளது.

அதன் தமிழாக்கம்:

கடந்த வருடம் ஒவ்வொன்றும் 2.462 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 4 மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை பாதுகாப்பு அமைச்சு கொள்வனவு செய்திருந்தது.

எனினும் இந்த கொள்வனவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா மில்லியன் டொலர் பணத்தை ஊழல் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தனர். கொள்வனவு செய்யப்பட்ட இந்த வானூர்திகள் பல காலம் சந்தையில் விற்பனை செய்யப்படாது இருந்ததாகவும், அவற்றின் பாவனைக்காலம் முடிவடைந்து விட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா, கசகஸ்த்தான், சிறிலங்கா நாடுகளை தவிர உலகில் ஏனைய நாடுகள் மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை பயன்படுத்துவதில்லை எனவும் இது தொடர்பில் ஆய்வை மேற்கொண்ட ஐ.தே.கவின் தொழில்நுட்பக் குழு தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிறிலங்கா அரசின் சார்பில் 4 மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை கொள்வனவு செய்யவும், ஏற்கனவே உள்ள 4 மிக்-27 ரக வானூர்திகளை மறுசீரமைப்பு செய்யவும் உக்ரேய்ன் நிறுவனம் ஒன்றுடன் உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது.


இந்திய மிக் - 27 ரக வானூர்தி

தரைத் தாக்குதல் தேவைகளுக்கான தகுதிகளை மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி கொண்டிருப்பதாக அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஐ.தே.கவின் இந்த அறிக்கையானது தேசியத்தின் நன்மை கருதி

- தற்போதைய போர்ச்சூழலில் நாட்டின் அவசர படைத்துறை தேவைகளை ஆய்வு செய்தல்

- மிக்-27 வானூர்திக் கொள்வனவில் கடைப்பிடிக்கப்பட்ட முறைகேடுகள், பரிந்துரைகளை ஆய்வு செய்தல்

- சிறிலங்காவின் மக்களுக்கு தவறான தகவல்களை வழங்கி பாதுகாப்பு அமைச்சு போரை தவறாக நடத்துகின்றதா என்பதை ஆராய்தல்

ஆகியவற்றை ஆய்வு செய்தது.

"2006 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 4 மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளும் 1991 ஆம் ஆண்டில் இருந்து நீண்டகாலம் சந்தையில் இருந்தன. இயங்க முடியாது இருந்த அந்த வானூர்திகளை லெவிவ் ஸ்ரேற் வானூர்தி பழுது பார்க்கும் நிறுவனம் திருத்தியமைத்து சிறிலங்காவுக்கு விற்பனை செய்ததாக" 31.12.2006 ஆம் நாள் வெளிவந்த கட்டுரையில் சண்டே ரைம்ஸ் தெரிவித்திருந்தது.

2000 ஆம் ஆண்டு கூட இரு சந்தர்ப்பங்களில் இந்த வானூர்திகளை சிறிலங்கா வான்படையினர் நிராகரித்திருந்தனர்.

2000 ஆம் ஆண்டு மே 25 ஆம் நாள் சிறிலங்கா வான்படையினர் 4 மிக்-27 ரக வானூர்திகளை ஒவ்வொன்றும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிக்கு கொள்வனவு செய்திருந்தனர்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மேலும் இரு மிக்-27 தாக்குதல் வானூர்திகளை ஒவ்வொன்றும் 1.6 மில்லியன் டொலர் பெறுமதிக்கு கொள்வனவு செய்திருந்தனர்.

இந்த சந்தர்ப்பங்களின் போது நிராகரிக்கப்பட்ட அதே வானூர்திகளை 2006 ஆம் ஆண்டு ஒவ்வொன்றும் 2.462 மில்லியன் டொலர்கள் பெறுமதிக்கு சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.

2000 ஆண்டு மிக்-29 UB பயிற்சி வானூர்தி 900,000 டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு அதனை மறுசீரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது, 1.1 மில்லியன் டொலர்களுக்கு மறுசீரமைப்பு பணிக்கான உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது கொள்வனவு விலையை விட அதிகமாகும்.

எனவே தான்,

- ஏன் கடந்த காலத்தில் இருமுறை நிராகரிக்கப்பட்ட வானூர்திகளை வான்படை கொள்வனவு செய்துள்ளது.?

- ஏன் மிக்-29 UB பயிற்சி வானூர்தியின் மறுசீரமைப்பு செலவுகள் கொள்வனவு விலையை விட அதிகமாக உள்ளது.?

- 2000 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டவைகளை விட பழமையான வானூர்திகளுக்கு ஏன் 2006 ஆம் ஆண்டை விட அதிக விலை செலுத்தப்பட்டுள்ளது.?

போன்ற கேள்விகளை முன்வைத்து ஊழல் தடுப்புப்பிரிவு ஆணைக்குழுவிடம் மங்கள, சிறீபதி ஆகியோர் முறைப்பாடு செய்திருந்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் பொய்யான அறிக்கை

இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் மிக்-27 இன் உள்வீட்டுக் கதை என்னும் தகவல் மார்ச் 22 ஆம் நாள் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் அதில் அமைச்சர்களின் முதல் இரு கேள்விகளுக்கும் மௌனமே பதிலாக இருந்தது.

மேலும் அதில் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் பல பொய்யானவை.

"மிக்-27 வானூர்திகள் முன்னாள் சோவியத் நாடுகள், இந்தியா ஆகிய நாடுகளின் பிரதான வான் தாக்குதல் ஆயுதம்

மிக்-27 Flogger M வகை வானூர்திகள் தற்போதும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன"

அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவை நிலையான மற்றும் நகரும் இலக்குகளையும், கடினமான இலக்குகளையும் தாக்குவதே பிரதான நோக்கம் என்றும்

http://www.globalsecurity.org/military/world/russia/mig-27.htm,

http://www.airforce-technology.com/projects/mig27

ஆகிய இணையத்தளங்களின் தகவல்களை திரித்து வெளியிடப்பட்டிருந்தது.

அதாவது இந்தியா முன்னர் தயாரித்தது என்ற சொல் மாற்றப்பட்டு தற்போதும் தயாரித்து வருகின்றது என்ற சொல் புகுத்தப்பட்டுள்ளது.


சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்தி

ஆனால் இந்த வகை வானூர்திகளை சோவியத்து ஒன்றியமே தயாரித்து வந்தது. எனினும் அதன் உற்பத்தி 1980 களில் நிறுத்தப்பட்டு விட்டது. சோவியத்தின் அனுமதியுடன் "ஹிந்துஸ்தான்" வானூர்தி நிறுவனம் மிக்-27 ரக வானூர்திகளை தயாரித்து வந்தது. தற்போது அதுவும் உற்பத்தியை நிறுத்திவிட்டது.

எனவே உலகில் யாரும் தற்போது மிக்-27 ரக வானூர்திகளை உற்பத்தி செய்வதில்லை.

மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி தரைத் தாக்குதலுக்கு என வடிவமைக்கப்பட்டது. அதாவது மரபுவழி தாக்குதல்களுக்கு ஏற்றது.
ஆப்கானிஸ்த்தான் போரின் போது சோவியத் படைகள் அதனை பயன்படுத்தியிருந்தது. ஆனால் சோவியத் படைகளின் நடைவடிக்கையில் மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி செயற்திறனற்றது என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது ரசியாவின் வான்படை அதனை பின்னிணைப்பு வானூர்தியாகவே பயன்படுத்தி வருகின்றது.

2000 ஆம் ஆண்டில் உலகின் பல நாடுகள் மிக்-27 ரக போர் வானூர்திகளை சேவையில் இருந்து ஒதுக்கியுள்ளன.

இந்தியா, கசகஸ்தான், சிறிலங்கா ஆகிய நாடுகளே இதனை தற்போது பயன்படுத்துகின்றன. எனினும் இந்திய வான்படையிலும் இது நீண்டகாலம் நிலைக்கப்போவதில்லை.

தனது உள்ளுர் தயாரிப்புக்களை அறிமுகம் செய்ததும் இந்தியா மிக் 27 ரக வானூர்திகளை ஒதுக்கிவிடும்.

விடுதலைப் புலிகளினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுக்குழு தனது அறிக்கையை 2006 ஆம் ஆண்டு பெப்ரவரியில் வெளியிட்டிருந்தது.

அதன்படி 4 மேலதிக மிக்-27 ரக வானூர்திகளை கொள்வனவு செய்யும் படியும், தற்போது உள்ளவற்றை மறுசீரமைப்பு செய்யும் படியும் பரிந்துரை செய்தியப்பட்டிருந்தது.

தற்போதைய போரில் தரைத்தாக்குதலுக்கு என சிறப்பான தாக்குதல் வானூர்திகள் தேவை எனவும், அவை தாழ்வாக பறக்கக் கூடியவையாகவும், குறைந்த மற்றும் உயர் வேகங்களில் பறக்கக்கூடியனவாகவும் இருத்தல் வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

ஆனால் சிறிலங்கா ஆயுதப் படைகளின் படைவலு தகமைகளை ஆய்வு செய்ய உதவுமாறு ஐ.தே.க அரசு 2001-2004 காலப்பகுதியில் அமெரிக்க அரசை கேட்டிருந்தது.

அதன் போது அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மேலதிக மிக்-27 ரக வானூர்திகளை கொள்வனவு செய்வதை நிறுத்தும் படியும், அது வான்படையின் வளங்களை வீணடித்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தற்போது உள்ள வானூர்திகளை நவீனமயப்படுத்தும் படியும் குறிப்பாக கிபீர் ரக வானூர்திகளின் ஆயுத மற்றும் பராமரிப்பு பணிகளை மேம்படுத்தும் படியும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

மேலும் இரவு பறப்புக்களை மேம்படுத்துதல், வழிகாட்டிகள் மூலம் இயங்கும் குண்டுகளை பொருத்துதல் போன்ற ஆலோசனைகளும் வழங்கியிருந்தன.

எனவே இந்த பரிந்துரைகளை மீறி ஏன் மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகள் கொள்வனவு செய்யப்பட்டது என்பதற்கு பாதுகாப்பு அமைச்சு பதிலளிக்கவில்லை.

கிபீர் ரக வானூர்தி ஒரு பல்நோக்கு தாக்குதல் வானூர்தி. அது வானில் இருந்து தரைக்கு பாயும் ஏவுகணைகள், கிளஸ்ரர் குண்டுகள், வழிகாட்டிகள் மூலம் இயங்கும் குண்டுகள் என்பவற்றை கொண்டுள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்களுக்கு அது சிறப்பானது.

2006 ஆம் ஆண்டு மிக்-27 ரக வானூர்திகளை கொள்வனவு செய்த போது

வான்படையிடம் 11 கிபீர்,

4 மிக்-27,

1 எஃப்-7 ஆகியன இருந்தன.

பாதுகாப்பு அமைச்சின் தொழில்நுட்ப ஆய்வுக்குழுவில்

ஏயர் மார்சல் றொசான் குணதிலக்க (தலைவர்)

எயர் கொமோடர் ஈ.ஜி.ஜே.பி. டி சில்வா (வானூர்தி பொறியியலாளர்)

கலாநிதி டி.பி.ரி. நாணயக்கார (சிரேஸ்ட்ட விரிவுரையாளர், மொறட்டுவ பல்கலைக்கழகம்)

எச்.டி.வீரசிறீ ( பாதுகாப்பு அமைச்சு கணக்காளர்)

வி.ஜே. பிரேமரத்தின (பொது வானூர்தி சேவை அதிகாரி)

கே.டி.ஆர். ஒல்கா (தேசிய வரவுசெலவுத் திட்ட கணக்காளர்)

ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் யாரும் தாக்குதல் வானூர்திகளின் வானோடிகள் அல்ல. ஒருவர் மட்டுமே உலங்குவானூர்தி ஓட்டுபவர் ஆவார்.

4 பொதுமக்களின் பிரதிநிதிகளுக்கும் வான்படையின் தேவைகள் பற்றிய அறிவு இல்லை.

மூன்றாம் தலைமுறை வானூர்தி கொள்வனவு செய்த ஒரே நாடு

மிக்-29, மிக்-35 ரக வானூர்திகள் பல்நோக்கு தாக்குதல் வலிமை கொண்டவையாக இருந்த போதும் அவை விலை கூடியவை. அதன் தொழில்நுட்பங்கள் தற்போதைய போருக்கு உகந்தது அல்ல.

எனினும் 21 ஆம் நூற்றாண்டில் மிக்-27 ரக வானூர்திகளை கொள்முதல் செய்த ஒரே வான்படை சிறிலங்கா வான்படையாகவே இருக்க முடியும்.

2000 ஆம் ஆண்டு வான்படை 12 கிபீர் வானூர்திகளை வாங்கத் திட்டமிட்டது. எனினும் அவற்றை விநியோகிப்பதில் ஏற்பட்ட கால தாமதம், யாழ். குடாநாட்டில் எழுந்த நெருக்கடிகள் என்பன மிக்-27 ரக வானூர்திகளை கொள்வனவு செய்யும் நிலையை ஏற்படுத்தியிருந்தது.


சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்தி

மிக்-27 ரக வானூர்தி முன்றாவது தலைமுறை வானூர்தியாகும். தற்போது ஐந்தாவது தலைமுறை வானூர்திகளும் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன.

மூன்றாவது தலைமுறை வானூர்திகள் உலக வான்படைகளின் கோப்புக்களில் இருந்து பெரும்பாலும் நீக்கப்பட்டு விட்டன.

இரண்டாம் பாவனை வானூர்திகளுக்கும் உலகில் பெறுமதியில்லை. உக்கிரேய்ன் தன்வசம் உள்ள அவற்றை விற்பனை செய்ய முடியாது விட்டால் அழிப்பது தான் அதற்கு ஒரே வழியாக இருந்திருக்கும்.

ஒரு வானூர்தியின் பாவனைக்காலம் இயந்திரம், இயக்கக்கட்டுப்பாட்டுத் தொகுதி, அதன் கட்டமைப்பு தொகுதி ஆகியவற்றை கொண்டு கணிக்கப்படுவது வழமை.

மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளின் மொத்த வாழ்வுக்காலம் 25 வருடங்களாகும். அதன் பின்னர் அது இறந்தது அல்லது பயனற்றதாகி விடும்.

இந்த வாழ்வுக் காலத்தின் மேலதிக நீடிப்புக்காலம் 30 வருடங்களே ஆகும். இந்த நீடிப்புக்காலம் 25 வருடங்களுக்கு முன்னர் பொறியியலாளர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

"இறந்து" போன வானூர்திகளும் கோத்தபாயவின் ஊழலும்

2000 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் கொள்வனவு செய்யப்பட்ட மிக்-27 வானூர்திகளின் விபரங்கள் வருமாறு:

Aircraft
Serial Nos.

Year of
Manufacture

Age at time
of Purchase (Yrs)

Year of
Purchase
3712531385

1982

18

2000
83712534657

1983

17

2000
83712534709

1983

17

2000
8371253877

1984

16

2000
83712520013

1981

19

2000
83712545237

1984

16

2000
MIG 23 trainer






SN 49065315

1984

16

2000

Aircraft
Serial Nos.

Year of
Manufacture

Age at time
of Purchase (Yrs)

Year of
Purchase
93712534688

1983

23

2006
83712518044

1981

25

2006
83712518022

1980

26

2000
83712518009

1980

26

2000

இந்த வானூர்திகள் 25 வருடங்கள் பழமையானவை. எனவே நாம் அவற்றை அதன் வாழ்வுக்காலம் முடிந்த பின்னரே கொள்வனவு செய்துள்ளோம்.

அதன் வாழ்தகவு நீடிப்பை பொறியியலாளர்களின் மேற்பார்வையில் மேற்கொண்டதற்கான எந்த ஒரு தரவுகளும் ஆவணங்களில் இல்லை.

2006 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டவற்றில் இரு வானூர்திகள் செயலற்ற நிலையில் தரையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதன் கொள்முதல் உறுதி காலத்திலும் அவைகள் சேவையில் ஈடுபட முடியாதவையாக இருந்தன. எனவே அரசு 10.078 மில்லியன் டொலர்களை இறந்த வானூர்திகளுக்கு செலவிட்டுள்ளது.

பூச்சியம் பெறுமதியான இந்த வானூர்திகள் பழைய இரும்புக்கே உகந்தவை.

உக்ரேய்ன் நாடு மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை தயாரிப்பது இல்லை. அதனை ரசியாவின் நிறுவனமே தயாரித்து வருகின்றது.

1991 ஆம் ஆண்டு சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உக்ரேய்ன் நாடளுமன்ற திட்டத்தின் படி பெருமளவான வானூர்திகள் உக்ரேய்னுக்கு கொண்டு வரப்பட்டன.

எனினும் உக்ரேய்ன் வான்படையில் அவை சேர்க்கப்படவில்லை. அவை பயனற்றவையாக கொள்ளப்பட்டதுடன் அவர்கள் மிக்-29 ரக வகை வானூர்திகளையே பயன்படுத்தி வந்தனர்.

மேலும் தன்னிடம் அதிகளவில் இருந்த மிக்-27 வானூர்திகளை காலத்திற்கு காலம் உக்ரேய்ன் அழித்து வந்ததுடன் ஏனைய நாடுகளுக்கு விற்பனையும் செய்யப்பட்டது.

அரசுகளுக்கு இடையிலான கொள்வனவுகளில் பணமானது அரசின் வங்கிக் கணக்குகளில் அல்லது அரச நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தப்படுவது வழமை.

ஆனால் மிக்-27 ரக வானூர்திகளை கொள்வனவு செய்த பணத்தை உக்ரேய்ன் நாட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவில்லை. அது பிரித்தானியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

உக்ரேய்ன் நிறுவனத்தின் பிரதிநிதியாக பிரித்தானியா நிறுவனத்தின் பேரில் மிக்-27 ரக வானூர்திகளின் கொள்வனவுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் அதற்கான பணமானது உக்ரேய்ன் நிறுவனம் சார்பாகவே செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த ஊழலை மறைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்ட வகையில் பொய் சொல்லி மக்களை ஏமாற்றியுள்ளது. பிரித்தானியாவின் நிறுவனம் அங்கு பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அல்ல.

அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள், முதலீடுகள், கணக்குகள் எல்லாம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த உடன்படிக்கையின் பிரதான சூத்திரதாரியான கோத்தபாயா ராஜபக்சவுக்கும் உக்ரேய்னுக்கான சிறிலங்காவின் தூதுவரான உதயங்க வீரதுங்கவிற்கும் இடையில் நெருக்கமான உறவுகளும் உள்ளது.

உக்ரேய்னில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக திட்டமிட்ட வகையில் அவர் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்.

எனவே சிறிலங்கா அரசு பாவனைக்காலம் முடிவடைந்த மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை கொள்முதல் செய்ததனால் 10.078 மில்லியன் டொலர்களை இழந்துள்ளது. சிறிலங்கா வான்படை வானோடிகளின் உயிர்களையும் ஏனையோரின் உயிர்களையும் புறக்கணித்து பாதுகாப்பு அமைச்சு போரை அழிவுப்பாதையில் இட்டுச் சென்றுள்ளது பெரும் குற்றமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: