Wednesday, August 1, 2007

ஹனீபிடம் மன்னிப்பு கேட்க முடியாது அவுஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்ப

ஹனீபிடம் மன்னிப்பு கேட்க முடியாது அவுஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு
[01 - August - 2007] [Font Size - A - A - A]
இந்திய டாக்டர் ஹனீபிடம் மன்னிப்புக் கேட்க முடியாது என்று பிடிவாதமாகக் கூறியுள்ளார் அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹொவார்ட்.

பயங்கரவாதச் சதியில் தொடர்பிருப்பதாக ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டி நீதிமன்றம் பிணை வழங்கிய பின்னரும் தொடர்ந்து சிறை வைக்க குறுக்கு வழியாக விசாவை இரத்துச் செய்து அவுஸ்திரேலிய அரசால் 4 வாரங்களாக அலைக்கழிக்கப்பட்ட இந்திய டாக்டர் ஹனீபிடம் மன்னிப்புக் கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார் ஜோன் ஹொவார்ட்.

பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை அவுஸ்திரேலிய அரசு விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து டாக்டர் ஹனீப் ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்பினார். சுமார் ஒரு மாத கால போராட்டத்துக்குப் பின்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ள ஹனீப் அவுஸ்திரேலிய மத்திய காவல் துறையாலும் அந்நாட்டு அதிகாரிகளாலும் தான் பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய அரசுக்கு ஹனீபிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய கடமை உள்ளது என்று வலியுறுத்தியுள்ளார் அவரது வழக்கறிஞர் பீற்றர் ரூசோ.

ஆனால், அப்பாவியான ஹனீப் அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற கருத்தையே மறுத்துள்ளார் ஹொவார்ட்.

பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும்போது தவறு ஏற்படுவது தவிர்க்க இயலாதது. எனவே, டாக்டர் ஹனீபிடம் அவுஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கேட்காது. மன்னிப்புக் கோருவதை விட இதுபோன்ற பிரச்சினைகளை எச்சரிக்கையாகக் கையாள்வது சிறந்தது.

அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகளால் டாக்டர் ஹனீப் பாதிக்கப்படவில்லை. புதிதாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கையாள்வதில் ஏற்பட்டுள்ள முதல் கோணல் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சர்வதேச அளவில் உள்ள நன்மதிப்பும் பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் ஹொவார்ட்.

டாக்டர் ஹனீப் மீது தொடரப்பட்ட பயங்கரவாதச் சதி உடந்தை வழக்கில் அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிணை வழங்கியவுடன் அவரது விசா இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அனைத்துத் தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த நடவடிக்கையை மனமுவந்து ஆதரிப்பதாக ஜோன் ஹொவார்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

நடத்தை அடிப்படையில் ஹனீபின் விசாவை இரத்துச் செய்யும் முடிவை எடுத்ததற்குக் காரணமான கூடுதல் தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிட உள்ளதாக அவுஸ்திரேலிய குடியமர்வுத் துறை அமைச்சர் கெவின் அண்ட்ரூஸ் திங்கட்கிழமை கூறியுள்ளார். டாக்டர் ஹனீப் விவகாரத்தைக் கையாண்ட முறைக்காக மற்ற அனைவரையும்விட மிகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருப்பவர் அண்ட்ரூஸ்.

விசா இரத்துச் செய்யப்பட்டது தொடர்பாக ஹனீப் தரப்புத் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே அரசே ஆய்வு நடத்தி பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து ஹனீபுக்கு எதிரான வழக்கு பிசுபிசுத்துப் போய்விட்டது. அப்படிப்பட்ட நிலையிலும் ஹனீபுக்கு மீண்டும் விசா வழங்க மறுத்துவிட்டார் அண்ட்ரூஸ்.

நடத்தை அடிப்படையிலேயே ஹனீபின் விசா இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நியாயமான சந்தேகம் எழும் சூழ்நிலையில் சட்டம் வழங்கும் வழிமுறையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தவர்களுடன் தொடர்புகள் வைத்திருப்பதாக ஹனீப் மீது சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத தகவல்கள் தெரியவரும்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சூழ்நிலைகளை மக்களே புரிந்து கொள்வர்.

இந்த விவகாரம் தொடர்பாக எனக்குள்ள சந்தேகங்களை போக்கும்படியாக (தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில்) ஹனீப் எதுவும் கூறிவிடவில்லை என்று கூறியுள்ளார் அண்ட்ரூஸ்.

இதனிடையே ஹனீப் விவகாரத்தில் அளித்து வந்த ஆதரவை எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தற்போது விலக்கிக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து அண்ட்ரூஸுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

ஹனீபுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக அமைச்சர் (அண்ட்ரூஸ்) இன்னும் சந்தேகிக்கும் சூழ்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்ல அனுமதித்தது ஏன் என்ற கேள்வி எழுப்பியுள்ள தொழிலாளர் கட்சி இது தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளது.

No comments: