Saturday, August 11, 2007

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளி

நான்கு நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளி
[11 - August - 2007] [Font Size - A - A - A]
-எம்.எம்.ஏ. முஹியித்தீன்-

சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் கி.பி. 1600 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களின் முதல் குடியேற்றம் அக்கரைப்பற்றில் நிகழ்ந்துள்ளது. குடியேற்றம் நடைபெற்ற உடனேயே அம்மக்கள் தங்களது வணக்க வழிபாடுகளுக்காக கம்புகளையும், கிடுகுகளையும் கொண்டு ஒரு பள்ளியை தமது வசிப்பிடங்களுக்கு மத்தியில் அமைத்தார்கள் அதுவே இன்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகின்றது.

குடியேற்றம் நடந்ததிலிருந்து சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக இப்பள்ளிவாசல் ஒன்றே இவ்வூர் முஸ்லிம் மக்களின் வணக்க வழிபாடுகளுக்கும் சமூக நடவடிக்கைகளுக்குமான மத்திய நிலையமாக இருந்து வந்துள்ளது. இவ்வூர் முஸ்லிம் மக்களின் சமய, சமூக, தொழில் மற்றும் வாழ்வியல் சம்பந்தமான அனைத்து விவகாரங்களும் இப்பள்ளிவாசல் நிர்வாகத்தின் தீர்மானங்களுக்கமையவே மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக மக்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்றுமை இறைபக்தி என்பன மிகவும மேலோங்கிக் காணப்பட்டன.

இப்பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பெரியார் சங்கைக்குரிய செய்னுலாப்தீன் பலியுல்லாஹ் (ஃபீஸபஃபீல் அவ்லியா) அவர்களது மகத்துவமும், கறாமத்துகளும் இவ்வூர் மக்களிடையேயும். இவ்வூரைச் சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களிலுள்ள மக்களிடையேயும் நீண்ட காலமாக பெரிதும் மதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலஞ் செல்லச்செல்ல ஊரின் குடிப்பரம்பல் அதிகரித்து கொண்டு சென்றது. மக்கள் குடியிருப்புகளின் எல்லைகள் விஸ்தரித்துக் கொண்டு சென்றன. விஸ்தரிப்பின் கடைசி எல்லையிலிருந்து மக்களின் நாளாந்த வணக்க வழிபாட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இப்பள்ளிவாசல் தொலைப்பட்டுப் போய்விட்டது என்று உணரப்பட்டபோது, கணிசமான கால இடைவெளிகளில் மேலும் இரு பள்ளிவாசல்கள் கருத்தொற்றுமையின் அடிப்படையில் அமைக்கப்பட்டன. என்றாலும் வாராந்த ஒன்றுகூடலுக்காக ஜும்ஆ தொழுகை மிகமிக நீண்ட காலமாக இப்பள்ளிவாசலில் மட்டுமே நடைபெற்று வந்துள்ளது. கிராமத்தின் தொன்மையான பள்ளிவாசல் ஒன்றுக்கு அக்கிராமத்தில் வதியும், ஒழுக்க விழுமியங்களிலும் இறை பக்தியிலும் சிறந்து விளங்கிய கண்ணியமிக்க மக்கள் கூட்டத்தினரால் வழங்கப்பட்ட தனித்துவம் நிரம்பிய கௌரவமாக இது கருதப்பட்டது.

ஊர் மக்களிடையே ஏற்படும் முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் சமரசமாகவும் சமாதானமாகவும் தீர்த்துவைக்கக்கூடிய ஊர்ப்பெரியார்கள் அங்கம் வகிக்கும் நீதிச்சபைகள் பள்ளிவாசல் நிர்வாக கட்டமைப்பின் ஓர் அங்கமாக மிக நீண்ட காலம் தொட்டே இருந்து வருகின்றன.

இப்பிரதேசத்திலுள்ள நீதிமன்றங்களினால் தீர்த்து வைக்கப்பட முடியாத பல நூறு கொடுக்கல் வாங்கல் வழக்குகள் சத்தியம் கேட்பதற்காக இப்பள்ளிவாசலுக்கு அனுப்பப்படுவதும், அவை சத்தியம் கேட்காமலேயே சமரசமாகத் தீர்த்து வைக்கப்படுவதும் இன்றுவரையும் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிகழ்வுகளாகும்.

இப்பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் மார்க்க சம்பந்தமான அனைத்து விவகாரங்களிலும் இவ்வூரில் செயற்படும் ஜம்இய்யத்துல் உலமா சபை பள்ளிவாயலுடன் இணைந்து செயற்படுவது ஒரு சிறப்பான அம்சமாகும். எந்த ஒரு விவகாரத்திலாயினும் உலமா சபையும் பள்ளிவாசல் நிர்வாகமும் முரண்பட்ட வரலாறு கிடையாது.

இதற்கு ஓர் உதாரணமாக கடந்த 50 வருடங்களாக ஸஹீஹுல் புஹாரி மஜ்லிஸை அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபையே பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக நடாத்தி வருவதைக் குறிப்பிடலாம். இப்பிரதேசம் சம்பந்தப்பட்ட பல்வேறு அரசியல் நிலைவரங்களிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் மத்திய கேந்திரமாக இப்பள்ளிவாசல் வளாகம் செயலாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வூரில் வாழும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடையே இன ஐக்கியமும் சகஜ நிலையும் பேணக்கூடிய சூழ்நிலைகளைப் பேணிப்பாதுகாத்து வருவதில் இப்பள்ளிவாசல் நிர்வாகம் என்றுமே தன்னை அர்ப்பணித்து வந்துள்ளது. இங்கு முஸ்லிம் மக்கள் குடியேறிய அதே காலப்பகுதியிலேயே தமிழ் மக்களும் இங்கு குடியேறினார்கள் என்பதும், இப்பள்ளிவாசல் கட்டுவதற்கும் தமிழ் மக்களின் சித்தி விநாயகர் ஆலயத்தை கட்டுவதற்குமான வேலை ஒரே நாளிலேயே ஆரம்பிக்கப்பட்டது என்பதும், தமிழ் மக்களின் விழாக்களில் முஸ்லிம் மக்களும் பள்ளிவாசல் கந்தூரி வைபவங்களில் தமிழ் மக்களும் நேசபாவத்துடன் கலந்து சிறப்பித்தார்கள் என்பதும், பள்ளிவாசலில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள `தம்பிக்கண்டுவின் புத்தகம்' என்னும் வரலாற்று ஏட்டின் மூலமாகத் தெரியவரும் செய்திகளாகும். இன்றும் கூட இப்பள்ளிவாசல் நிர்வாகம் முஸ்லிம்- தமிழ் மக்களிடையே நல்லுறவு நிலவக்கூடிய ஆக்கபூர்வமான நட வடிக்கைகளில் அயராது ஈடுபட்டு வருகின்றது என்பதைத் துணிந்து கூறமுடியும்.

சாமான்ய மனிதன் இவ்வுலகில் எவ்வளவுதான் சீரும் சிறப்பும் பெற்றாலும், செல்வ வளத்தை அடைந்தாலும், அவனைப் படைத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தித் தனது அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதற்கான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஒரு வழிபாட்டுத்தலம் அவசியமாகின்றது. அன்றாட வாழ்க்கையின் அவலங்களுக்கும், அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்து, அவதிக்குள்ளான மனிதன் சற்று நேரம் ஆறுதல் பெற்று, மன ஓர்மையுடன், கூடிய இறை வணக்கத்தில் ஒன்றிப் போவதற்கு, அமைதியும், கம்பீர்யமும், பாரம்பரியத்தொன்மைச் சிறப்பும் மிக்க ஒரு பள்ளிவாசலாக அது அமையவும் வேண்டும்.

அந்த வகையில் மிகமிக விசாலமான அமைதி மிக்க ஒரு நிலப்பரப்பிலும், ஓங்கி உயர்ந்த தென்னை மரங்களாற் சூழப்பட்ட நிழற்பரப்பிலும், அமைந்து தொன்மைச் சிறப்புடன் கம்பீரமாகக் காட்சிதரும். அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கடந்த பல நூறு வருடங்களாக இவ்வூரின் ஆத்மீகத் தலைமையகமாகத் திகழ்ந்து வருவதுடன் இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் எண்ணிறைந்த காலங்களுக்கும் இவ்வாறே திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரியப் பிரார்த்திப்போம்.

No comments: