Tuesday, July 10, 2007

லண்டன் விமான நிலைய தாக்குதல்: ஒரே சமயத்தில் 30 இடங்களை குண்டு வைத்து தகர்க்க திட்டம்- உலகை உலுக்கும் பயங்கர சதி அம்பலம்??????

லண்டன் விமான நிலைய தாக்குதல்: ஒரே சமயத்தில் 30 இடங்களை குண்டு வைத்து தகர்க்க திட்டம்- உலகை உலுக்கும் பயங்கர சதி அம்பலம்
9 July 2007

* வெளிநாட்டுச் செய்திகள்

Glasgo_2.jpgஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மார்க்கெட் மற்றும் பூங்கா பகுதியில் கடந்த 29-ந்திகதி சில வெடிகுண்டு கார்களை போலீசார் தக்க சமயத்தில் கண்டுபிடித்தனர். இதற்கு மறுநாள் 30-ந் திகதி கிளாஸ்கோ விமான நிலையத்தை தகர்க்கும் முயற்சி நடந்தது. இதையும் போலீசார் சமயோசிதமாக முறியடித்தனர்.

இந்தசம்பவத்தில் எரியும் நிலையில் விமான தளத்திற்குள் ஜீப்பினை ஓட்டிவந்த கபீல் அகமது என்பவனை போலீசார் அமுக்கிப் பிடித்து உயிருடன் மீட்டனர். கபீல் அகமது உடலில் தீக்காயங்களுடன் அங்குள்ள ராயல் அலெக்சாண்ட்ரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

கபீல் அகமது பெங்களூரை சேர்ந்தவன். இந்த சம்பவத்தில் கபீலின் உற்ற நண்பன் பிலால் அப்துல்லா,கபீலின் சகோதரர் சபீல் அகமது, தந்தை மக்பூல் அகமது, டாக்டர் முகமது அனீப் உள்பட 7 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் ஏராளமான திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இவர்களில் கபீல் அகமதுவுக்கும், பிலால் அப்துல்லாவுக்கும் அல்கொய்தா அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஈராக்கை சேர்ந்த பிலால் அப்துல்லா, பின்லேடனின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளான். கபீல் அகமதுவின் குடும்பத்தினர் அனைவருமே தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளனர். கபீல் குடும்பத்தினர் அனைவருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

மேற்கண்ட தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்கள் ஈமெயில் மூலம் சதித் திட்டங்களை பரிமாறி உள்ளனர். இவர்கள் எதற்காக இந்த சதி திட்டத்தை தீட்டினார்கள் என்பது பற்றிய தகவலும் தெரியவந்துள்ளது.

ஈராக் மீது தாக்குதல் நடத்தியதற்காக இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரொனிபிளேயருக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும் என்று சதிக்கும்பல் முடிவெடுத்துள்ளது. ஈராக் தாக்குதலின் போது பிலால் அப்துல்லாவின் வீடு தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கார் வெடிகுண்டு தவிர, விஷவாயு தாக்குதல் உள்பட பல நூதன திட்டங்களையும் அவர்கள் வகுத்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக ரொனி பிளேயரை கொல்லவும் அவர்கள் சதி செய்துள்ளனர்., இதனை செயல்படுத்துவதற்கு அப்பாவி இளைஞர்களையும் அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

இதற்காக கபீல் அகமது ஏராளமான நண்பர்களிடம் "வெளிநாட்டு வேலை இருக்கிறது. கைநிறைய பணம் கிடைக்கும்'' என்று கூறி வந்துள்ளான்.இதுபற்றி அவனது நண்பர்கள் பலர் போலீசாரிடம் தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.

இன்டர்நெட் மூலமாகவும் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களை தொடர்பு கொண்டுள்ளனர். இதற்கிடையே உலகையே தங்கள் பக்கம் திரும்பிபார்க்கும் வகையில் இங்கிலாந்தை ஒட்டுமொத்தமாக தகர்க்கும் சதி திட்டம் பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒரே சமயத்தில் கார் வெடிகுண்டு, விஷவாயு தாக்குதல்கள் நடத்தி 30 முக்கிய இடங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக 1700 தீவிர வாதிகள் 200 வழிகளில் `நெட்வொர்க்' மூலம் இணைந்து திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இங்கிலாந்து முழுவதும் புலனாய்வு போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இதுபற்றிய தகவலால் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளின் அனைத்து விமான நிலையங்களும் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

பிராங்பர்ட், முனீச், ஹாம்பர்க் உள்பட முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.இதற்கிடையே கபீல் அகமது தங்கி இருந்த வீட்டில் இருந்து போலீசார் ஒரு முக்கிய கடிதத்தை கைப்பற்றி உள்ளனர்.

அந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்து கொள்வதாக கபீல் அகமது எழுதிவைத்துள்ளான். இந்த கடிதம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கபீலின் பெங்களூர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கிருந்து மதம் சம்பந்தமான பல சி.டி.ககளை கைப்பற்றி உள்ளனர். இன்டர்நெட்டில் இருந்து `வெடிகுண்டு மாதிரி'யை அவன் `டவுன் லோட்' செய்து இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

இதற்கிடையே முக்கிய முதல் குற்றவாளியான கபீல் அகமது சாகும் தறுவாயில் உள்ளான். அவனது உடலில் 90 சதவீதம் கருகிவிட்டது. பெரிய அளவிலான "மொபைல் போன்'' ஒன்று உருகிப்போன நிலையில் அவனது உடல் முழுவதும் ஒட்டியுள்ளது.

கபீலின் மரணம் எந்த நேரத்திலும் நிகழலாம் என்ற நிலையில் உள்ளது. அவனை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். தொடர்ந்து தீவிரவாத கும்பல்கள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தவண்ணம் உள்ளன

No comments: