Monday, July 16, 2007

வடக்கு - கிழக்கு பிரச்சினை???????

வடக்கு - கிழக்கு பிரச்சினை?
[16 - July - 2007] [Font Size - A - A - A]
தென்னிலங்கை அரசியலை இப்போது தொப்பிகல பிரதேசமே ஆக்கிரமித்து நிற்கிறது. இப்பிரதேசத்தை கடந்த வாரம் இராணுவத்தினர் கைப்பற்றியதை அடுத்து கிழக்கு மாகாணம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதாக பிரகடனம் செய்திருக்கும் அரசாங்கம், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு நிகரான வகையில் தேசிய அளவிலான வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. பிரதான வைபவம் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவிருக்கிறது. சுமார் கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போரில் தொப்பிகலவில் சாதித்ததைப் போன்ற மகத்தான வெற்றியை அரசாங்கப் படைகள் இதுவரை கண்டதில்லை என்ற தோரணையிலேயே அரசாங்கமும் அதன் இராணுவ முனைப்புக்கு ஆதரவளிக்கும் தென்னிலங்கைச் சக்திகளும் பேசி மகிழ்ந்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. உலகில் பலம்பொருந்திய - பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவின் படைகளினால் கூட 20 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் சாதிக்க முடியாததை இலங்கைப் படைகள் சாதித்துவிட்டதாகவும் பெருமை பேசப்படுகிறது.

தொப்பிகல கைப்பற்றப்பட்டதன் பிறகு தென்னிலங்கை அரசியலில் வாதப்பிரதிவாதங்களின் திசையும் மாறி யிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற பாரதூரமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை மூடிமறைப்பதற்கும் அந்த நெருக்கடிகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும் அரசாங்கம் தொப்பிகல வெற்றியை பயன்படுத்துவதாக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகிறது. தொப்பிகல வெறும் காட்டுப் பிரதேசம், அதைக் கைப்பற்றியதில் கொண்டாடுவதற்கு எதுவுமேயில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். இவ்வாறு கூறியதன் மூலம் பெரும் தியாகங்களைச் செய்து போரிட்டுக்கொண்டிருக்கின்ற முப்படையினரையும் அவர் அவமதித்து விட்டதாக அரசாங்கத் தரப்பினர் தர்மாவேசம் கொண்டிருக்கிறார்கள். அரசாங்க ஊடகங்களும் விக்கிரமசிங்கவை கடுமையாகச் சாடியிருக்கின்றன. தொப்பிகல மலையுச்சியில் இராணுவத்தினர் தேசியக் கொடியை ஏற்றிய படத்தைக் கொண்ட சுவரொட்டிகள் தென்னிலங்கையெங்கும் ஒட்டப்பட்டு வருகின்றன. கொண்டாட்ட வேகம் இவ்வாரம் உக்கிரமடையக் கூடியதாக அரசாங்க இயந்திரம் முழு மூச்சாக செயற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

தொப்பிகலவில் இராணுவத்தினர் கண்டதாகக் கூறப்படும் `சரித்திர முக்கியத்துவ வெற்றி'க்குப் பிறகு தேசிய இனப்பிரச்சினையின் வரைவிலக்கணத்தைக் கூட மாற்றியமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடக்கு- கிழக்கு பிரச்சினையே பொதுவில் இனநெருக்கடி என்று கூறப்பட்டு வந்திருக்கிறது. இப்போது கிழக்கு மாகாணம் முழுமையாக அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டதாக அரசாங்கம் உரிமை கோருகின்ற நிலையில், இனநெருக்கடியென்பது வடக்கு -கிழக்குப் பிரச்சினையல்ல; வெறுமனே வடக்குப் பிரச்சினைதான் என்று பேரினவாத சக்திகள் புதிய வரைவிலக்கணம் ஒன்றை வகுக்க ஆரம்பித்திருக்கின்றன. நேற்றைய தினம் `சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் முன் பக்கத்தில் பிரதான தலைப்புச் செய்தி `தொப்பிகல கைப்பற்றல் மாயைகளைத் தகர்க்கிறது. வடக்கு- கிழக்குப் பிரச்சினையென்று ஒன்றில்லை - ஜாதிக ஹெல உறுமய கூறுகிறது' என்ற தலைப்பில் அமைந்திருந்தது. தொப்பிகல கைப்பற்றப்பட்ட பிறகு நாட்டில் வடக்கு - கிழக்குப் பிரச்சினை என்று எதுவும் கிடையாது. அதை வடக்குப் பிரச்சினை என்று அழைப்பதே சிறந்தது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிச் செயலாளர் உதய கம்மன் பில் கூறுவதாக அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`கிழக்கு விடுதலை செய்யப்பட்டமை இலங்கையின் அண்மைக்கால சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியாகும். நெருக்கடியுடன் தொடர்புடைய பல மாயைகளை இந்த வெற்றி தகர்த்திருக்கிறது. இன்று இருப்பது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்னர் நாம் கண்ட கிழக்கு அல்ல. விடுதலைப் போராளிகள் என்று கூறப்படுபவர்களிடம் இருந்து வடக்கையும் விடுவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை' என்று கம்மன்பில கூறியிருக்கிறார். இப்போது இருப்பது வடக்கு - கிழக்குப் பிரச்சினையல்ல. வெறுமனே வடக்கு பிரச்சினைதான் என்ற கருத்தை சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான எந்தவொரு அபிலாஷையையும் அங்கீகரிக்கத் தயாரில்லாத ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்கள, பௌத்த பேரினவாத கட்சி மாத்திரம் கூறவில்லை. இத்தகைய கருத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ கூட கடந்த வாரம் தெரிவித்திருந்தார். தெதுறுஓயா பிரதேச விவசாயிகளின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் கடந்த வாரம் சந்தித்த ஜனாதிபதி அங்கு பேசுகையில், ஒரு கட்டத்தில் வடக்கு - கிழக்கு பிரச்சினையென்று கூறிவிட்டு உடனடியாகவே இன்று கிழக்கில் பிரச்சினை இல்லை. வடக்கில் மாத்திரமே பிரச்சினை என்று குறிப்பிட்டதை தொலைக்காட்சி செய்தியின்போது காணக்கூடியதாக இருந்தது.

கிழக்கை முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பிறகு கிழக்கில் பிரச்சினை இல்லை என்று கூறுகின்ற ஜனாதிபதி, அடுத்து வடக்கு மாகாணத்தையும் முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அவரின் நோக்கத்தின் பிரகாரம் முழுமையான வடக்கு மாகாணமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டால், வடக்கிலும் பிரச்சினை இல்லை என்று அல்லவா அவர் கூறப்போகிறார். அதற்குப் பிறகு ஒட்டுமொத்தத்தில் இன நெருக்கடி என்று ஒன்று இலங்கையில் கிடையாது என்றும் அரசாங்கம் உலகிற்கு பிரகடனப்படுத்திவிடக் கூடுமல்லவா? இராணுவ வெற்றிக்குப் பிறகு கிழக்கில் பிரச்சினை இல்லை என்ற கூற்றும் அடுத்து வடக்கையும் முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வையல்ல, இராணுவத் தீர்வையே காண்பது என்ற அரசாங்கத்தின் அடிப்படை நோக்கத்தை எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி அம்பலப்படுத்துகின்றன. உண்மையில் அரசியல் தீர்வு பற்றிய உலக ஒப்பாசாரத்துக்கான பேச்சு எல்லாம் இராணுவத் தீர்வை முழு மூச்சாக முன்னெடுப்பதற்கான கால அவகாசத்தைப் பெறுவதற் கே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

No comments: