Sunday, July 8, 2007

இலங்கையின் மறுத்தான் அரசியலை சர்வதேசம் இனியும் சகிக்குமா? -(தேசியன்)
[08 - July - 2007] [Font Size - A - A - A]
சர்வதேச சமூகத்தால் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை சீர்தூக்கிப் பாராது குற்றம் சுமத்துவோரில் குற்றங்காணும் இலங்கை அரசின் போக்கானது உலக அரங்கில் எவ்வளவு காலத்துக்கு எடுபடப்போகின்றதென்பதே இன்றைய முக்கிய கேள்வியாக மேற்கிளம்பி நிற்கின்றது.

ஜூன் போனால் ஜூலைக் காற்றுத்தான் வீசும். ஆனால் இலங்கைத் தீவில் தமது இருப்புக்காக போராடும் தமிழினத்தைப் பொறுத்தமட்டில் ஜூலைக் காற்று என்பது பிண வாடையை கொண்டுவரும் அடக்குமுறைக் காற்றாகவே வீசியுள்ளது - வீசுகின்றது.

இலங்கையில் தமிழர்கள் ஏராளமாக கொன்று குவிக்கப்பட்டமையும் அடித்துத் துரத்தப்பட்டு வீடு வாசல்களை இழந்தமையும் இந்த மாதத்தில் தான் என்பதை வரலாற்றின் பதிவுகள் கோடிட்டுக் காட்டி நிற்கின்றன.

ஆயினும் பல தசாப்தங்களாக கூடு கலைந்த வாழ்வுக்குச் சொந்தக்காரர்களாகவுள்ள ஈழத் தமிழர்களுக்கு எல்லா மாதங்களும் எதுவுமற்றவையாகவேயுள்ளன. தம்மீது மேற்கொள்ளப்படும் பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் தமிழ் மக்கள், தமது நியாயமான இடித்துரைப்புகளுக்கு உலகம் காட்டும் கடும் போக்கு நிலையையிட்டு மனமுடைந்தே நிற்கின்றனர்.

உள்ளூரில் இலங்கை அரச படைகளால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அராஜகங்கள் உலகுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்துவிட்ட பொழுதும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது உலகம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பதானது வேதனைக்குரிய விடயமாகும்.

மாறாக இலங்கை அரசின் ஏமாற்று வித்தைகளுக்கும் பொய்ப் பிரசாரங்களுக்குள்ளும் சர்வதேசம் விரும்பியும் விரும்பாமலும் தன்னை உட்படுத்திக் கொண்டுள்ளது. தமிழர் படுகொலையை விசாரிப்பதற்கென இலங்கையில் எண்ணுக்கணக்கற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எவையும் எந்த முடிவையும் காணவில்லை. தற்பொழுது குறிப்பிட்ட சில மனிதவுரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்கவென இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைத்தார். இந்த விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளை கண்காணிக்கவென சர்வதேச பிரபல்யம் வாய்ந்ததோரைக் கொண்ட சுயாதீனக் குழு (International Independant Group of eminent persons - IIGEP) என்ற சர்வதேச நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது.

பகவதி - சட்டமா அதிபர் கருத்து மோதல்

இக் குழு தனது முதலாவது இடைக்கால அறிக்கையினை கடந்த ஜூன் முதலாம் திகதி இலங்கை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது. இக் குழுவின் தலைவர் முன்னாள் இந்திய பிரதம நீதியரசர் பகவதி, இவ் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியமளிப்போரை பாதுகாக்கவில்லையெனவும் கால இழுத்தடிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் தனது முதலாவது அறிக்கையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, கடந்த ஜூன் 15 இல் தனது இரண்டாவது அறிக்கையை வெளியிட்ட சர்வதேச நிபுணர் குழு ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் தோல்விப் பாதையில் செல்வதாகவும் அது பக்கச்சார்பானதெனவும் தெரிவித்திருந்தது.

இக் குழுவின் முதல் அறிக்கையை பார்த்துவிட்டு அதை கவனமாக படித்துவருவதாக கூறிய இலங்கை அரசாங்கம், இரண்டாவது அறிக்கையில் பொறுமை இழந்துவிட்டது. வழமைபோல் சர்வதேச சமூகத்தின் வாயை அடைக்க பயன்படுத்தும் தனது `மறுத்தான் அரசியலை' பயன்படுத்த தொடங்கியது.

நிபுணர்கள் குழுவின் அறிக்கையானது, இலங்கை அரசாங்கம் தனது பெறுமதிமிக்க புதல்வர்கள், புதல்விகள் என பெருமையுடன் கருதும் கௌரவம் மிக்க ஆணையாளர்களை நேரடியாக அவமதிப்பதாக கூறியுள்ள இலங்கையின் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா நிபுணர் குழு அடுத்தடுத்துவிடுத்த இரு அறிக்கைகளால் ஜெனீவாவில் ஐ.நா.வின் மனிதவுரிமைகள் குறித்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்த இலங்கைக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டதாகவும் பகவதிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் இந்த கடிதத்துக்கு பதிலளித்துள்ள முன்னாள் இந்திய பிரதம நீதியரசர் பகவதி, இலங்கையின் சட்டமா அதிபர் அவசரப்பட்டு கருத்துக்களை தெரிவிப்பதாகவும் விமர்சனங்களை கௌரவமான மொழியில் முன்வைக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

"இலங்கை சட்டமா அதிபர் `சர்வதேச நிபுணர் குழு'வை விமர்சிப்பது குறித்து நான் கவலையடையவில்லை. நானும் அந்தக் குழுவைச் சேர்ந்தவன் தான். ஆனால் நாங்கள் தெரிவிப்பது பிழையெனக் கருதினால் அவர் அதனை முறையான கௌரவமான மொழியில் குறிப்பிட வேண்டும். அது தூற்றுவதாக அமைந்தால் தவறாகும்" என பகவதி தெரிவித்துள்ளார். இந்த கருத்து மோதலைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிபுணர் குழுவின் தலைவர் பகவதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் 11 பேர் கொண்ட நிபுணர் குழுவில் ஒருவராவது விசாரணைகளின் போது பிரசன்னமாகியிருக்க வேண்டுமென கோரியுள்ளார்.

நிபுணர் குழுவுக்கு அரசாங்கம் ஒரு புறத்தில் மறுத்தான் அடித்துக் கொண்டிருக்க மறுபுறத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கை சூட்டோடு சூடாக மறுத்தான் அடித்துவிட்டது. இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவின் ஆயுதங்களை களையவேண்டுமென அமெரிக்கா விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ள ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, அமெரிக்கா விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை களையச் சொல்லுமா? என கேள்வியெழுப்புயுள்ளார்.

இலங்கையின் மறுத்தான் அரசியல் இன்றைக்கு வந்ததல்ல. இலங்கையில் போர் நிறுத்தத்தை கண்காணிக்க வந்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இந்த மறுத்தானுக்கு முகம் கொடுக்க முடியாமல் அறிக்கைகளை திருத்தி மீள வெளியிட்ட வரலாறும் இங்குண்டு.

இது இவ்வாறிருக்க, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹோகன்ன, மேற்குலகின் உதவி நிறுத்தத்தால் இலங்கை வங்குரோத்து நிலையை அடையாதெனவும் தமக்கு இந்தியா, சீனா, ஜப்பான் ஆகியவை உதவி தருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்விதமாக இலங்கை சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களை வாயால் வெட்டி வீழ்த்தியே வருகின்றது.

ஆயினும் சர்வதேச சமூகம் இதை தனக்கேற்படும் கௌரவக் குறைச்சலாக பார்த்து ஒதுங்கிக் கொள்ளுமா என்பது சந்தேகமே.

இராஜதந்திர தளத்தில் இவ்வாறான மறுத்தான்களை முகம்கொடுக்கும் மேற்குலகால் இலங்கைக்கு பாடம் புகட்ட முடியுமா? பகவதி போன்ற தனிநபர்கள் தமக்கு இலங்கையின் செயற்பாடுகள் கௌரவக் குறைச்சலை ஏற்படுத்துவதாக கூறுகின்ற போதும் நாடுகள் இவ்வாறு கூறுவதற்கு தடையாகவிருப்பது தனிப்பட்ட தமது நாட்டு நலன்களேயாகும்.

எது எப்படியிருந்த பொழுதும், இலங்கையின் மறுத்தான் அரசியல் எவ்வளவு தூரம் வேலை செய்யும் என்பதை காலம் விரைவில் பதில் சொல்லும்.

No comments: