Tuesday, July 3, 2007

எந்த முகத்துடன் பேச வந்தீர்கள்

தமிழ், முஸ்லிம் தலைமைகள் கைகோர்த்து ஒரே குரலில் பேசினால் மாத்திரமே பேரினவாதிகளின் கண்கள் திறக்கும்
[03 - July - 2007] [Font Size - A - A - A]

* ``முதலில், அவர்கள் "கம்யூனிஸ்ட்களை தேடி வந்தனர். நான் ஒரு "கம்யூனிஸ்ட் அல்ல என்பதால் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அடுத்து, அவர்கள் யூதர்களைத் தேடி வந்தனர். நான் ஒரு யூதன் அல்ல என்பதால் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. பின்னர், அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடி வந்தனர். நான் ஒரு புரட்டஸ்தாந்து மதத்தவன் என்பதால் நான் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. கடைசியில்,அவர்கள் என்னைத் தேடி வந்தனர். அப்போது எனக்காக குரல் கொடுப்பதற்கு யாருமே இருக்கவில்லை". - MARTIN NIEMOLLER

திருகோணமலை மாவட்டம் சிங்களமயமாக்கும் நீண்டகாலத் திட்டத்தின் தொடர்ச்சியாக அண்மையில் சம்பூர் மற்றும் மூதூர் கிழக்குப் பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியது பற்றியும் அதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தது பற்றியும் முன்பு குறிப்பிட்டிருந்தேன். பிந்திய செய்தியின் படி அது ஒரு அடிப்படை மீறல் நடவடிக்கையென ஆட்சேபித்து அந்தப் பிரகடனத்தினை இரத்துச் செய்யுமாறு மாற்றுக் கொள்கை நிலையத்தின் (CPA) பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அறியக்கிடக்கிறது.

திருகோணமலை மாவட்ட சிங்கள மயமாக்கல் படலத்தின் முஸ்லிம்களின் காணிகளும் பேரினவாத சக்திகளினால் அபகரிக்கப்படுவதால் அதற்கு எதிராக போராடுவதற்குத் தயாராக இருக்க வேண்டுமென குறிப்பாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ரி. ஹசன் அலி (உப பயிர்ச்செய்கை அபிவிருத்தி பிரதியமைச்சர்), பைசல் காசிம் (விஞ்ஞான தொழில் நுட்பப் பிரதியமைச்சர்) இரண்டு மாதங்களிற்கு முன் சாய்ந்தமருதுவில் அறைகூவல் விடுத்திருந்தமை ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது. இப்பிரச்சினையானது ஒட்டுமொத்தமாக முஸ்லிம் மற்றும் தமிழ் இரு சமூகங்களையும் மிக மோசமாக பாதிக்கின்றது என்ற வகையில் இரு சமூகங்களின் தலைமைகளும் இணைந்து விடாப்பிடியாக போராட வேண்டிய அவசர அவசியத்தையும் நாம் எடுத்துக்கூறியிருந்தோம். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், எவ்வித அநீதிகளையும் கைகட்டிப்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எந்த ஒரு கட்சியிடமும் தாம் அடகு வைப்பவர்களோ, தட்டிக்கேட்காமல் துதிபாடுபவர்களோ அல்ல என்று சூளுரைத்திருந்தார்.

பின்னர் மே மாத இறுதியில் ஜனாதிபதி விடுத்த உத்தரவின் பேரில் சம்பூர் மற்றும் கிழக்கு மூதூர் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டன. அங்கிருந்து இடம்பெயர்ந்த பல்லாயிரம் தமிழர்களுக்கு மீளக் குடியமரும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் கிழக்கு மாகாணம் முழுவதும் அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக எதிர்த்துள்ளது. பல்லாயிரம் தமிழர்கள் இடம்பெயர்ந்தும் ஏறத்தாழ, 15,000 பேர்வரை இந்தியாவிற்கும் ஓடியுள்ள நிலையில் தேர்தல் என்ற பேச்சுக்கு இடமிருக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பிரதியமைச்சருமான ரி.எம். ஹசன் அலி உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தலை வரவேற்பதாகவும் முஸ்லிம் சுயாட்சி கோரிக்கையை முன்வைத்து தேர்தலுக்கு முகம் கொடுப்பது பயனளிக்கும் எனவும் கூறியுள்ளார். இது ஒரு தப்புக்கணக்கு என்று கூறலாம்.

தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒரு குரலில் பேசி கைகோர்த்து நின்றால் தான் சிங்கள பேரினவாதிகளின் கண்கள் திறக்கும். மாறாக, பிரித்தாளும் பேரினவாத ஆட்சியாளர் விரிக்கும் வலையில், வீழ்ந்து விட்டால் விளையப்போவது பாரிய தீமையே தவிர வேறொன்றல்ல. எனவே, திருகோணமலை சிங்களமயமாக்கப்படுகிறது என காலங்காலமாக வெறுமனே தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பதை விட்டு தமிழ், முஸ்லிம் தலைமைகள் உடனடியாக மக்களை அணிதிரட்டி போராட்டத்தில் குதிப்பது தட்டிக்கழிக்கக் கூடியதல்ல " செய் அல்லது செத்துமடி" எனும் நிலை நிச்சயமாக வந்துவிட்டது.

அன்று ஜேர்மனியில் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் நாசிப் படையினர் நரவேட்டையாடிய காலத்தில் பெற்ற அனுபவத்தினை மாட்டின் நீ மொல்லர் பாதிரியார் கூறிவைத்தது இக்கட்டுரையின் மத்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதனை அட்டூழியங்களுக்கு ஆளாக்கப்படும் மக்கள் என்றும் சிரமேற்கொண்டு செயற்பட்டால் தான் உய்வு உண்டு.

இணைத்தலைமை நாடுகளின் ஒஸ்லோ சந்திப்பு

25.06.07 திகதி ஒஸ்லோவில் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை நிலைமை தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தினர் அல்லவா? வழமையான கூட்டறிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையாயினும், யுத்த முனைப்பைக் கைவிட்டு நம்பகத் தன்மையானதொரு அரசியல் தீர்வுத் திட்டத்தினை முன்வைத்துப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது. குறிப்பாக, அமெரிக்க பிரதிநிதி றிச்சட் பௌச்சர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் யுத்தமுனையில் கிடைக்கும் தற்காலிக வெற்றிகள் இனப் பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டுவராது, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் தம் விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை தமிழர்களுக்கு உண்டு என எடுத்துக்கூறியுள்ளார்.

மறுபுறத்தில், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்த வரை 25 வருடங்களுக்கு முன் தமிழரால் நிராகரிக்கப்பட்டதான மாவட்ட சபை திட்டத்தினை முன்வைத்து, ஒற்றையாட்சி முறைமையில் மாற்றமில்லை என்பதில் அழுங்குப்பிடியாய் உள்ளது. விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவருவதற்கு யுத்தம் தொடர்ந்து நடத்தியாக வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றது.

இத்தகைய பின்புலத்தில் வாஷிங்டனுக்கு ஒருவார விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளதைப் பார்ப்போம். இலங்கை அரசாங்கம் இராணுவ பலத்துடனேயே தமிழ் மக்களுடன் இணக்கப்பாட்டிற்கு வரமுடியும், சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டியிருப்பதால் கடுமையான இராணுவ நடவடிக்கை அவசியமாகிறது. இந்த நிலையில் தான் யுத்தம் தொடர்கிறதே ஒழிய இதற்கும் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்கும் இடையில் முரண்பாடு இல்லையென அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார். இது ஒரு கேலிக்கூத்தான வாதம் என்பதை வாஷிங்டன் தரப்பினர் புரிந்துள்ளனர் எனலாம். ஏனென்றால், மேற்கு நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்குவதை நிறுத்துவது "துன்பமான தவறு", பயங்கரவாதத்திற்கு உற்சாகமளிக்கவல்லது, இலங்கை அரசாங்கம் இதயசுத்தியாக செயற்படுகிறது என்றெல்லாம் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கிற்கு அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளது எதுவும் கணக்கெடுக்கப்படவில்லை என்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக, இலங்கையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் நிறுத்தப்பட்டு பொதுமக்களின் மனித உரிமைகள் உரிய முறையில் பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்க குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டையும் சேர்ந்த 50 காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதி புஷ்ஷிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர் பீரிஸ் அன்று சந்திரிகா அரசாங்கத்தில் அங்கம் வகித்தபோது 1995 இல் ஜனாதிபதி சந்திரிகா முன் வைத்த "பிராந்தியங்களின் ஒன்றியம்" என்ற அடிப்படையிலான தீர்வுத் திட்டத்தினை தேயச் செய்வதில் பிரதான பாத்திரம் வகித்தவர். ஆனால், தான் அரசியல் அமைப்பு அமைச்சராக இருந்து தமிழருக்காக பாடுபட்டதன் காரணமாக சிங்களவர்கள் தன் மீது வெறுப்புக் கொண்டிருந்தமையால் அடுத்த தேர்தலில் தமிழர் தான் தனது வெற்றிக்குக் கைகொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தவர். பின்பு பதவி ஆசை காரணமாக ஐ.தே.கட்சிக்குத் தாவியவர் ஐ.தே.க.வும் ஷ்ரீ.ல.சு.க. வும் 2006 அக்டோபரில் புரிந்துணர்வு பதவி ஒப்பந்தம் செய்து கொண்ட கையோடு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சர் பதவி பெற்றுக் கொள்வதற்கு முண்டியடித்து முதலாவதாக நின்றவர் தான் ஜீ.எல். பீரிஸ். தமிழரின் வாக்குப்பலத்தில் அன்று வெற்றிகொண்டவர் இன்று யுத்தம் கடுமையாக நடத்தப்படுவதற்கும், தமிழரைக் கொழும்பிலிருந்து வெளியேற்றப்படுவதற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.

தமிழர் தமக்காக குரல் கொடுப்பவர்களின் கையைப் பலப்படுத்த வேண்டுமென்று சிந்திக்காமல் பச்சோந்திகள் மற்றும் பசுத்தோல் போர்த்த பேரினவாதிகளையும் நம்பிக் கெட்டது போதும்.

சமஷ்டி ஆட்சி முறைமையில் தலைசிறந்த நிபுணர் எனக் கருதப்படுபவராகிய கலாநிதி ஜோன் கின்செட் சென்றவாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அதன் பொருட்டு கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையத்தில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் அரசியல் விஞ்ஞான பேராசிரியர் ஒருவர், வணிகத்துறை முக்கியஸ்தர் ஒருவர் அடங்கலாக சிலர் பங்கு பற்றியிருந்தனர். அழைப்பு ஒன்றினை ஏற்று நானும் பங்குபற்றினேன்.

சமஷ்டி முறைமையிலான அரசியல் தீர்வொன்றினை தமிழர் தரப்பினர் 1950 கள் முதல் வேண்டி நின்றபோதும், அது பிரிவினை நஞ்சு என தென்னிலங்கையில் சிங்களவர் அழுங்குப்பிடிவாத பிரசாரம் செய்து எதிர்த்து வந்தமையால் இன்று 25 வருட கால யுத்த அழிவிற்குப் பின்னரும் அதே நிலைப்பாடு தான் காணப்படுகிறது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென கூறுபவர்கள் அதற்கு வித்திட்ட அரச பயங்கரவாதம் பற்றிப் பேசுவது கிடையாது. மூன்று தசாப்த காலமாக தாம் உண்டு தமது கல்வியுண்டு என எண்ணி அமைதி காத்துவந்த தமிழ் இளைஞர் பொறுத்தது போதும் என்ற நிலையிலேயே ஆயுதம் ஏந்திப் போராட தலைப்பட்டனர். அதனை முறியடிக்கும் முயற்சியில் தான் கடந்த 25 வருட காலமாக எல்லா அரசாங்கங்களும் ஈடுபட்டு வந்துள்ளனவே தவிர அடிப்படை பிரச்சினையாகிய தேசிய இனப்பிரச்சினைக்கு நீதியானதொரு தீர்வைக்கண்டு நாட்டை முன்னேற்றுவதற்கு எந்தவொரு அரசாங்கமும் உழைத்தது கிடையாது என நான் கின்செட்டுக்கு விளக்கினேன். சர்வகட்சி பிரதிநிகள் குழு (APRC) தலைவர் அமைச்சர் பேராசிரியர், வித்தாரணவையும் தான் சந்தித்ததாக கின்செட் கூறினார். சந்திப்பு வரவேற்கத்தக்கதாயினும் APRC யில் யாரும் நம்பிக்கை வைப்பதில் பிரயோசனமில்லை என அவரிடம் எடுத்துக் கூறினேன். ஆனால், தமது தரப்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருப்பது அவசியம் என்பதை வலியுறுத்தினேன்.

No comments: