Wednesday, July 25, 2007

வன்னி மக்களே விழித்தெழுங்கள்! வன்னிவாழ் மக்களுக்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அறைகூவல்

அன்பார்ந்த வன்னி வாழ் மக்களே!

கிழக்கு மாகாணத்தில் இன்று பயங்கரவாதம் வேரறுக்கப்பட்டு மக்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் வடக்கு வாழ் மக்களும் பிரபாகரன் தலைமையிலான புலிப்பயங்கரவாத அடக்குமுறைக்குள் இருந்து விடுபட்டு சுதந்திரக்காற்றை சுவாசிக்கவேண்டும் என்பதே எமது அவா. ஆரம்பகாலங்களில் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்காகவும் தொடங்கப்பட்ட போராட்டம் காலப்போக்கில் பிரபாகரனின் சுயலாபநோக்கிற்காக தனிமனித அதிகாரத்திற்கான போரட்டமாக மாற்றப்பட்ட வரலாறு யாவரும் அறிந்ததே.

இன்று பிரபாகரன் கிழக்கு மாகாணத்தை முற்றாக இழந்த நிலையில் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு ஈழம் என்ற மாயையைக்காட்டி 6.000 அப்பாவிகளை பலிக்களத்திற்கு அனுப்புவதற்கு திரட்டும் முகமாக வன்னியில் உள்ள அப்பாவிப்பொதுமக்களை எல்லைப்படை என்ற பெயரில் பலிக்கடாக்களாக்கும் சதி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றான். இதேபோன்றே கிழக்கில் வாகரை மக்களையும்மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி பல அப்பாவி உயிர்களை பலி கொடுத்தது பிரபாகுழு.

பிரபாகரனின் பாசிசப்போக்கை வெறுத்து எமது ரி.எம்.வி.பி என்னும் கட்சியின் தலைவர் கருணா அம்மானின் தலைமையில் நாம் 2004 இல் வெளியேறியபோது எம்மைத்தட்டிக்கொடுத்து வரவேற்ற ஆயிரக்கணக்கான ஜனநாயக விரும்பிகளில் வன்னிவாழ் மக்களாகிய நீங்களும் அடங்குகின்றீர்கள் என்பதனை நன்றியுடன் நினைவுகூறுகின்றோம்.

அவ்வேளையில் வன்னிப்பிரதேச மக்களால் “எமது தலைவிதியை நிர்ணயிப்பது யார்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றின் சில வரிகளை இங்கு நினைவுகூற விரும்புகின்றோம்.

இதோ உங்களால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தின் வரிகள்:

“யாழ்ப்பாணத்தை விட்டு புலிகள் வெளியேற சிந்திக்கும்போதுதான் வன்னி பற்றிய கரிசனை அவர்களுக்கு வருகின்றது. அதுவரை கோட்டைக்கும், பலாலிக்கும் என்று சண்டையிட்டுக்கொண்டிருந்தவர்கள் பூநகரி, மாங்குளம், முல்லைத்தீவு என்று தமது சண்டையைத் திசைதிருப்பினார்கள்”. வன்னியைத் தமது பாதுகாப்புத்தளமாக மாற்றினார்கள். மாங்குளத்தைத் தமிழ் ஈழத்தின் தலைநகர் என்று காதில் பூச்சுற்றி தமது மக்களை ஏமாற்றினார்கள்.(ஏற்கனவே திருகோணமலையை தலைநகர் எனப் பிதற்றினார்கள்) மக்களும் தமது மண் என்ற கனவில் ஏமாந்துகொண்டிருக்கின்றார்கள். ஒரு காலத்தில் நமது இளைஞர்களைக்கொண்டு தலைமைதாங்கிய மாத்தையாவின் இழப்பு எவ்வாறு நடந்தேறியது என்பதை யாவரும் மறந்திருக்கமாட்டார்கள். பிரபாத்தலைமைப் புலிகள் வன்னிப்பிரதேசத்தில் இருப்பது தமது பாதுகாப்பிற்கு மட்டுமேயன்றி வேறொன்றிற்கும் இல்லை. அவர்களுக்கு வன்னி மீது எவ்வித அக்கறையும் இல்லை. இது தானே வரலாறு. மட்டக்களப்பு மக்களை புலிகள் எப்படிப்பயன்படுத்தினார்கள் என்று கருணா அம்மான் விளங்கியிருப்பதுபோலவே வன்னி மக்களையும் புலிகள் பயன்படுத்துகின்றார்கள். வன்னியில் எவ்வித அபிவிருத்தியும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. தமக்கான இருப்பிடங்களை அவர்கள் விசாலிப்பதற்கு இருக்கும் அக்கறை எமது மக்கள் மீது இருப்பதில்லை. நாமும் உங்களைப்போல் காலாகாலமாகப் போராட்டத்தின்பேரில் ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம். எமது நிலையைத்தெரியப்படுத்த வேண்டிய நேரம் இது. துரோகி என்றும், மாவீரர் என்று பிரபாத்தலைமைப்புலிகள் நமது வீரர்களைக் கொன்றுகுவித்துவிட்டது. கருணா அம்மானுக்கு நமது மனப்பூர்வமான ஆதரவையும் அன்பையும் தெரிவித்துக்கொள்ளும் இதேநேரம் நமது இளைஞர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்” (இதுவே அத்துண்டுப்பிரசுரத்தின் வரிகள்)

ஆம் மக்களே! நிச்சயமாக நீங்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்றுமே வீண்போகாது. சில நாசகார சக்திகள் கூறுவது போல் நாம் பிரதேசவாதம் பேசுபவர்களல்ல. எமது சேவை கிழக்கு மாகாணம் என்ற வட்டத்திற்குள் மட்டுமே குறுகிவிடவில்லை. மாறாக அது ஒட்டு மொத்த தமிழர்களுக்குமானது.

உங்களது தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை இரண்டு வருடங்களுக்கு முன்பே எங்களிடம் ஒப்படைத்துவிட்டீர்கள். உங்கள் பாதுகாப்பிலும் நலன்களிலும் அக்கறை செலுத்தவேண்டிய பாரிய பொறுப்பு இன்று எம்மிடம் உள்ளது. தான் பதுங்கு குழிக்குள் சொகுசாக இருந்து கொண்டு எல்லைப்படை என்ற பெயரில் உங்களைக் களப்பலியாக்க பிரபாகரன் முனைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தாமதியாது அங்கிருந்து வெளியேறி பாதுகாப்புப்பிரதேசத்தை நோக்கி விரையுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

பிரபாகரனின் ஏகாதிபத்தியத்தால் எமது வரலாறு கண்ட வடுக்கள் ஏராளம். எமது சந்ததியாவது நிம்மதியாக வாழட்டுமே.

வன்னி மக்களே விழித்தெழுங்கள்!
ஒலிப்பதிவுகள்

No comments: