Friday, July 6, 2007

பிரிட்டன் விமான நிலையம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியரா?


Londom_12-06.jpgஅவுஸ்திரேலியாவில் கைதான டாக்டரிடம் பெண் போலீஸ் அதிகாரி விசாரணை மெல்போர்ன்: பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதல் முயற்சி தொடர்பாக அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய டாக்டர் முகமது அனீப்பிடம் பிரிட்டன் பெண் போலீஸ் அதிகாரி மற்றும் அவுஸ்திரேலிய போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். முகமது அனீப்பை இந்திய தூதரக அதிகாரியும் சந்தித்து பேசியுள்ளார்.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையம் மீது நடந்த தாக்குதல் ஆகிய சம்பவங்கள் தொடர்பாக பிரிட்டனில் ஏழு பேரும், ஆஸ்திரேலியாவில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் விவரம் வருமாறு:

1. பிலால் தலால் அப்துல் சமது அப்துல்லா(ஈராக்கில் டாக்டர் பட்டம் பெற்றவர், விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடந்த வந்த ஜீப்பில் பயணம் செய்தவர்.)

2. காலித் அகமது( ஜீப்பை ஓட்டி வந்தவர். 90 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்தவர். முதலில், இவர் ஒரு டாக்டர், லெபனானை சேர்ந்தவர் என்று கூறப்பட்டது.)

3. முகமது ஜமீல் அப்துல் காதிர் ஆஷா(ஜோர்டானைச் சேர்ந்தவர். பிரிட்டனில் டாக்டராக பணி புரிகிறார்.)

4. ஆஷா மனைவி மார்வாஸ் ஆஷா(மருத்துவ உதவியாளர்.)

5. சபீல் அகமது(இந்தியாவில் பெங்களூரில் டாக்டர் பட்டம் பெற்றவர். பிரிட்டனில் பணியாற்றி வந்துள்ளார்.)

இது தவிர மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் டாக்டர். மற்றொருவர் மருத்துவ மாணவர். மேலும், அவுஸ்திரேலியாவில் பணியாற்றி வந்த இந்திய டாக்டர் முகமது அனீப் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட எட்டு பேரும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை அமைப்புடன் தொடர்பு உடையவர்கள். பிரிட்டனில் தங்கிய போது தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள். இவர்களில் சபீல் அகமது, முகமது அனீப் ஆகியோர் பெங்களூரில் உள்ள ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கார் மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்கள். இதில் முகமது அனீப் ஒரு ஆண்டு சீனியர். சபீல் அகமதுவின் தந்தை முஷ்டாக் அகமது, தாய் ஜாகியா அகமது ஆகியோரும் டாக்டர்களே. தற்போது பெங்களூரில் தங்கியுள்ளனர். பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். மகன் சபீல் அகமது குறித்து ஜாகியா அகமது கூறுகையில், "" எனது மகன் சமூக சேவையில் நாட்டம் கொண்டவன். பிரிட்டனில் தங்கியுள்ள இந்தியர்களிடம் நல்ல தொடர்பு கொண்டவன். அப்பாவி. இப்பிரச்னையில் இருந்து மீண்டு வருவான்,'' என்றார். இது தவிர சபீல் அகமதுவும், அவுஸ்திரேலியாவில் கைதாகியுள்ள முகமது ஹனீப்பும் உறவினர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் முக்கிய பகுதியில் குண்டுகள் பொருத்தப்பட்ட இரண்டு கார்களை நிறுத்தியது பிலால் அப்துல்லா மற்றும் காலித் அகமது. பின்னர் இவரும் ஒரு ஜீப்பில் ஸ்காட்லாந்துக்கு சென்றனர். அங்குள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது ஜீப்பை மோதி பெரும் விபத்தை ஏற்படுத்த முயன்றனர். இதில் இருவரும் சிக்கி விட்டனர்.

இந்தியரான சபீல் அகமதுவுக்கும், பிலால் அப்துல்லாவுக்கும் நேரடி தொடர்பு உண்டு. கிளாஸ்கோ நகரில் உள்ள ராயல் அலெக்சாண்டரியா மருத்துவமனையில் பிலால் அப்துல்லாவும், முகமது ஜமீல் ஆஷாவும் பணியாற்றியுள்ளனர். முகமது அனீப் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் முன் தனது சிம் கார்டை சபீல் அகமதுவிடம் கொடுத்து சென்றுள்ளார். இதுதவிர கபீல் அகமது என்ற இன்ஜினியர் ஒருவரை போலீசார் தேடி வந்தனர். இவர் சபீல் அகமதுவுக்கு சகோதரர் என்றும் தகவல்கள் வெளியாகின. இவருக்கும் பயங்கரவாத தாக்குதல் முயற்சிக்கும் தொடர்பு உள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. ஆனால், இந்த தகவலை பெங்களூரில் உள்ள சபீல் அகமதுவின் உறவினர்கள் மறுத்தனர். சபீல் அகமதுவுக்கு கபீல் அகமது என்ற பெயரில் ஒரு சகோதரர் உண்டு. ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை என்று சபீல் அகமதுவின் உறவினர்கள் மறுத்தனர். அவர் எங்கிருக்கிறார் என்று பிரிட்டன் போலீசார் விசாரித்த போது ஐஸ்லாந்து நாட்டுக்கு விடுமுறைக்கு சென்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தொடர்ந்து நடந்த விசாரணையில் பல உண்மைகள் வெளியாகின. விமான நிலையம் மீது ஜீப்பை மோதி, கடுமையான தீக்காயம் அடைந்தவர் தான் கபீல் அகமது. முதலில் அவரது பெயர் காலித் அகமது என்று தவறாக கூறப்பட்டது. கபீல் அகமதுவும் இந்தியாவை சேர்ந்தவர் தான். இவர் இந்திய டாக்டர் சபீல் அகமதுவின் சகோதரர் என்பதை உறுதி செய்யும் பணியில் பிரிட்டன் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவர் மருத்துவமனையில் இருந்த போது குண்டுகள் பொருத்தப்பட்ட பெல்ட் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது என்று பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட முகமது அனீப்பிடம் விசாரணை நடத்த பிரிட்டன் போலீசில் பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி, லண்டனில் இருந்து சிங்கப்பூர் வழியாக நேற்று அதிகாலை பிரிஸ்பேன் சென்றுள்ளார். முகமது அனீப்புக்கு 48 மணி நேர காவல் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவுடன் அந்த கெடு முடிவடையும் நிலை காணப்பட்டதால், பிரிட்டன் போலீஸ் அதிகாரி விசாரணையை உடனே துவக்க முடிவு செய்தார். அதன்படி ரகசிய இடத்தில் முகமது அனீப்பை அவரும், அவஸ்திரேலிய போலீசாரும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இத்துடன் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் முகமது அனீப்பை சந்தித்து பேசினார். இதை இந்திய தூதரக துணை ஹை கமிஷனர் வினோத் குமார் உறுதி செய்துள்ளார்.

No comments: