Friday, July 13, 2007

பொருளாதார, இராணுவ நிலைகளை தாக்கப்போவதாக புலிகள் எச்சரிக்கை

பொருளாதார, இராணுவ நிலைகளை தாக்கப்போவதாக புலிகள் எச்சரிக்கை
[13 - July - 2007] [Font Size - A - A - A]
இலங்கை ஜனாதிபதியுடன் சமாதானமென்பது சாத்தியப்படாதென்பதால் இலங்கையின் பொருளாதார நிலைகள் மீதும் இராணுவ நிலைகள் மீதும் பாரிய தாக்குதல்களைத் தொடுக்கப்போவதாக விடுதலைப்புலிகள் எச்சரித்துள்ளனர்.

மட்டக்களப்பில் குடும்பிலை (தொப்பிகல) பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் கிழக்கு மாகாணத்தைக் விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக இலங்கை அரசு அறிவித்த 24 மணிநேரத்திலேயே விடுதலைப் புலிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் `ராய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்;

இலங்கை இனப் பிரச்சினைக்கு சமாதான வழிகளில் தீர்வொன்றைக் காண முடியுமென்ற சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீரழித்துள்ளார்.

இதனால் எமது எதிர்கால இலக்குகளாக இலங்கை அரசின் மிகப்பெரும் இராணுவ மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளும் இருக்கும். இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கும் இராணுவ ஆட்சிக்கும் இவை உதவியாயிருந்ததாலேயே அவை இலக்குகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. எண்ணெய்க்குதம் மீதான எமது தாக்குதலானது இதற்கொரு உதாரணமாகும்.

இவ்வாறான இலக்குகள் மீதான தாக்குதல்களானது இலங்கையின் பொருளாதார மற்றும் இராணுவ ஆற்றல்களை முடக்குமென்பதால் அதுதான் எமது தாக்குதல் தந்திரமெனவும் அவர் தெரிவித்தார்.

No comments: