Sunday, December 2, 2007

கிழக்கை கிழக்காக இருக்க விடுங்கள், வடக்கு கிழக்கு இணைப்பை நிராகரிக்கிறார் M.R ஸராலின் –த ஜெயபாலன

நீண்டகாலமாக மாற்று அரசியல் இலக்கியத் தளங்களில் செயற்பட்டுவரும் எம்.ஆர்.ஸ்ராலின் அவர்கள் «எக்ஸில்» சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர். முஸ்லிகள், மற்றும் தலித் அரசியல் குறித்து கூடிய கவனம் செலுத்தி வருபவர். தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் இயங்கு சக்திகளில் ஒருவராகவும் ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணியின் பிரதான செயற்பாட்டாளராகவும் இருந்துவருகிறார். அண்மையில் அவர்குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளை ஒட்டியும் கிழக்கு மாகாண அரசியல் தொடர்பாக அவர் முன்வைத்துவரும் கருத்துக்களை மேலும் புரிந்துகொள்ளும் நோக்கிலும் அவரை தேசம்நெற் சார்பாக அணுகி அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர் அதற்கு அளித்த பதில்கள்

தேசம்நெற்: அண்மைக்காலமாக உங்களுடைய அரசியல் நிலைப்பாடு மிகவும் சர்ச்சைக்குரியதாக அமைந்து உள்ளது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

ஸ்ராலின்: ஒடுக்கப்படும் மக்கள் நலம் சார்ந்த அரசியல் என்பது எப்போதுமே சர்ச்சைக்குரியதாக இருந்து வருவதே வரலாறு. காரணம் மக்கள் நலம் சார்ந்த அரசியலானது எப்போதுமே அதிகார மையங்களுக்கு எதிரானதாகவும் அதிகார மையங்களை நோக்கி கலகம் செய்வதாகவும் அதிகார மையங்களின் நி~ஸ்டையை குலைப்பதற்கு முயற்சிப்பதாகவுமே காணப்படுகிறது. ஆகவே இதுபோன்ற செயற்பாடுகள் அதிகார மையங்களாலும் அதன் துதிபாடிகளாலும் இவர்களது பிரச்சார வழிமுறைகளினாலும் சர்ச்சைக்குரியதொன்றாகவே பார்க்கப்பட்டும். பரப்பப்பட்டும் வருகின்றது.

இதன் வழியில் நிலவுகின்ற எமது சமூகத்தின் அதிகார படிநிலையை அதனை கட்டிக்காக்கும் கருத்தியலை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றவன் நான் எனும் வகையில்தான் எனது அரசியல் பயணிக்கின்றது. இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால் தமிழ் பேசும் சமூகத்தின் ஆதிக்கக் கூறுகள் மதரீதியில் வேறுபட்ட முஸ்லிம்களை ஒடுக்குகின்றது. சாதிய ரீதியில் தாழ்த்தப்பட்ட மக்களை இரண்டாம் பட்சமாக்கியுள்ளது. பிரதேச ரீதியிலான ஏற்றத் தாழ்வுகளை பாதுகாக்கின்றது.

இவை அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருக்கின்ற கருத்தியல் என்னவெனக் கேட்டால் அதுதான் யாழ் - மையவாத - சைவவேளாள கருத்தியலாகும். இக்கருத்தியலில் வழிவந்த தலைமைகளே துரதிஸ்ட வசமாக இதுவரை காலமும் தமிழ் சூழலில் ஆதிக்க சக்திகளாக இருந்து வந்திருக்கிறார்கள் இன்றும் இருக்கிறார்கள். இது அரசியல் ரீதியில் தமிழர் மகாசபையில் தொடங்கி இன்றைய புலிகள் மற்றும் தமிழ் தேசியவாத இயக்கங்கள் வரையிலும் தொடர்கிறது.

இந்த நிலையில் சுமார் 100 வருடங்களாக ஒற்றைத் தடத்தில் சேடம் இழுத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியவாதம் எனும் போலி முகம் கொண்ட அந்த யாழ் அதிகார மையமானது முஸ்லிம்கள் மீதான எனது அக்கறையை தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்காக ஒலிக்கும் எனது குரலை கிழக்குமாகாண மக்களுக்கான எனது தனித்துவப் பார்வையை சர்ச்சைக்குரிய தொன்றாகவே வழிமொழியும், திரிபுபடுத்தும், சேறடிக்கும். இதன் வெளிப்பாடுதான் நீங்கள் கூறுகின்ற சர்ச்சை.

தேசம்நெற்: இலங்கை நடைமுறை அரசியலைப் பொறுத்தவரை உங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன ?

ஸ்ராலின்: முதலாவதாக இலங்கையின் அமைதியை குலைத்து வன்முறைகளுக்கு தூபமிட்டு பயங்காரவாதத்தை உருவாக்கியவர்கள் யார் எனும்போது நம் எல்லோர் பார்வையிலும் சிங்கள இனவாத தலைமைகளையே குற்றம் சுமத்துகின்றோம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இலங்கையில் இனவாதத்தை வளர்த்தெடுத்ததில் சரிசமபங்கு அல்லது அதற்கும் மேலாக கடந்த கால தமிழ் தலைமைகளுக்கே உண்டு என்றே கருதுகின்றேன். இதற்கு இத்தலைமைகளை வழிநடத்திய யாழ் மையவாத கருத்தியலே பெரும் பங்குவகித்தது.

சர்வசன வாக்குரிமை மசோதாவிலும் சுயபாசைகளுக்கான சட்டமூல விவாதங்களின் போதும் இலவசக் கல்வி வழங்க முன்வந்தபோதும் நெற்காணிச்சட்ட மசோதாவிலும் மற்றும் தேசியமயமாக்கல் போன்ற சட்டமூலங்கள் ஏற்படுத்தப்பட்ட வேளைகளிலும் நமது தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் எடுத்த நிலைப்பாடுகள் அப்பட்டமான மக்கள் விரோதிகளின் நிலைப்பாடுகளே. மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பிலும் கூட தமிழ் காங்கிரஸின் தலைமை எடுத்த முடிவுகள் படுகேவலமானவை.

இக்கடந்தகால தலைமைகளை வழிநடத்திய அதே கருத்தியலே இன்று புலிகளை பாஸிட்டுக்களாக்கி அவர்களையும் வழிநடத்துகின்றது. அதனால்தான் பொன். இராமநாதன் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீதான காழ்ப்பு இன்றுவரை தொடர்கின்றது. ஆறுமுகநாவலர் கொண்டிருந்த சாதிவெறி இன்றுவரை தொடர்கிறது.

இந்த நிலையில் இலங்கையில் புலிப்பாசிசம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது அரசியல் வேலைத்திட்டங்களில் முன்னுரிமைக்குரியது. இது வெறும் புலி எதிர்ப்புவாதம் அல்ல. யாழ் மையவாதம் ஆட்சிசெலுத்தும் நூற்றாண்டு காலத் தொடர்ச்சியின் இறுதி உதாரணம் புலிகளோடு முற்றுப்பெற வேண்டும் எனும் கருத்தியல் சார்ந்த நிலைப்பாடு. அதன் பின்னர்தான் வடமாகாணத்திலோ, கிழக்கு மாகாணத்திலோ, இலங்கையின் ஏனைய பிரதேசத்திலோ ஒரு ஜனநாயகச் சூழல் ஏற்பட முடியும்.

இலங்கை வாழ் மக்கள் அரசை நோக்கிய அதிகாரப் பகிர்வுகளையோ பரவலாக்கங்களையோ ஜனநாயக வழிகளில் போராடிப் பெற்றுக்கொள்ளவும் அதற்கு தலைமை ஏற்க ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர்களின் (பன்மைத்துவ) தலைமைகளை உருவாக்கிக் கொள்ளவும் ஏதுவான வழிகள் அப்போதுதான் சாத்தியமாகும். தென்னிலங்கையிலும் புலிகளைக் காட்டி இனவாத உணர்வைத் தக்க வைத்துக்கொண்டு சிங்கள மக்களை ஏமாற்றும் பிழைப்புவாத அரசியல்; தலைமைகளும் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல் குப்பைத் தொட்டிக்குள் சென்றடைய நேரிடும்.

தேசம்நெற்: நீங்கள் மனித உரிமைகள் ஜனநாயகம் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள் ஆனால் கருணா தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) கிழக்கு மாகாண மக்களின் நலன்களோடு ஒத்துப்போகின்ற புள்ளிகளில் கருணா அமைப்பை ஆதரிப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் ரிஎம்.வி.பி உடன் உங்களைத் தொடர்புபடுத்துவதை தவறு என்கிறீர்கள் ?

ஸ்ராலின்: முதலில் கருணாவின் வெளியேற்றத்தை வெறும் புலிக்குள் ஏற்பட்ட பிளவாக மட்டும் பார்க்கின்ற பார்வையானது ஒரு குறுகிய பார்வை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பின்னால் நீண்டகாலமாக தமிழ் சமூகத்தினுள் புரையோடிப்போயிருக்கின்ற யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு என்கின்ற பிரதேச ரீதியிலான வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கின்றது. ஆனால் இந்தப் பிரதேச வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு யாழ் மேலாதிக்கம் பற்றிய கருத்துக்களை கருணா எப்போது தெரிவித்தார் எதற்காக அதனைப் பயன்படுத்தினார் என்பதிலெல்லாம் எனக்கும் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.

ஆனால் பகிரங்கமாக கருணா புலிகளை நோக்கி எழுப்பிய கேள்விகள் கிழக்கு மக்களின் நலன்கள் சார்ந்தவை. 32 துறைச் செயலாளருக்குமான நியமனங்களை புலிகள் வட பகுதிக்குள்ளே சுருட்டிக்கொண்டதென்பது பொய்யானதொரு தகவல் அல்ல. புலிகளது அந்த நியமனங்களில் காலா காலமாக தொடர்ந்து வருகின்ற யாழ் மேலாதிக்கம் இன்னுமொருமுறை பட்டவர்த்தனமானது. அந்த மேலாதிக்கத்திற்கு எதிரான கேள்விகள் கிழக்கு மக்களுடைய ஆழ்மனங்களின் பிரதிபலிப்பாகும்.

அந்த வகையில் கருணாவின் பிளவுடன் வெளிக்கிளம்பிய ரி.எம்.வி.பி. என்பது ஒடுக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் குரல்களில் இருந்து எழும்பிய அரசியல் உருவாக்கமாகும். தனது பிளவின் போது வீரகேசரிக்கு பேட்டி அளித்த கருணா தமிழீழம் எனும் கோதாவில் யாழ்ப்பாணத்தின் 90 வீதமான நலன்களே மறைந்திருந்தன என்றார். இந்த கருத்தாக்கத்தைத்தான் நான் சுமார் 1990 ஆம் ஆண்டுகளில் இருந்தே அடையாளம் கண்டு பேசியும் எழுதியும் வருகின்றேன். நான் இதை எழுத்து, உரையாடல், விவாதம் என்று கருத்தியல் ரீதியில் முன்வைத்து வருபவன். தமிழ் சமூகத்தில் வெளிக்கிளம்புகின்ற அரசியல் போக்குகளை ஒரு சமூகவியல் பார்வையில் ஆராய்ந்து ஒரு கருத்தியல் தளத்தில் செயற்பட்டு வருபவன்.

ஆனால் கருணாவோ இதனை ரீ.எம்.வி.பி.யின் உருவாக்கத்தின் ஊடாக நடைமுறை வேலைத்திட்டம் சார்ந்த களத்தில் முன்னெடுத்தார். இந்த கோட்பாட்டு ரீதியான ஒத்திசைவு என்பது இயல்பானது. இதற்காக என்னை ரி.எம்.வி.பி. எனும் அமைப்புடன் சம்பந்தப்படுத்துவது பொருத்தமற்றது. ஏனென்றால் கிழக்கு மாகாண மக்கள் நலன்சார்ந்து செயற்படுவதற்குரிய உரிமை கருணாவுக்கு மட்டுமோ ரி.எம்.வி.பி. இற்கு மட்டுமோ தாரை வார்க்கப்பட்டு கொடுக்கப்பட்டதொன்றல்ல. அந்த உரிமை எல்லோருக்கும் உண்டு.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி என்பது 2002 இல் கிழக்கு மாகாணத்தில் புலிகளால் பிள்ளைபிடி நிகழ்தப்பட்டுக் கொண்டிருந்த வேளைகளில் எங்களால் அதற்கெதிராக உருவாக்கப்பட்ட ரகசிய பிரச்சார இயக்கமாகும். அப்போது கருணா புலிகளில் இருந்து வெளியேறி இருக்கவில்லை. அதன் அடிப்படையில்தான் எனது செயற்பாடுகள் எனது வழியில் அமைந்திருக்கின்றன.

நீங்கள் இப்படி கேட்கும் போது ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பை புலிகள் தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டுள்ளார்கள் என்கிறார்கள். அதேவேளை எல்லாவிதமான தமிழ் தேசியவாத இயக்கங்களும் இந்த இணைப்பு விடயத்தில் புலிகள் கொண்டுள்ள கொள்கையையே பிரகடனப்படுத்துகிறார்கள். அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்கும் ஈ.பி.டி.பி. யினர் கூட என்றும் பிரியாத வடக்கு கிழக்கு என்று உறுதியாக இருக்கின்றார்கள். இந்த வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் புலிகளின் அரசியலுடன் எல்லா இயக்கங்களுக்கும் இருக்கின்ற ஒற்றுமையை பார்த்தீர்களா?

மேலும் எந்த வித இயக்கங்களையும் சாராது அமைப்புகளுக்கு வெளியே இருக்கக் கூடிய சுதந்திரமான ஊடகவியலாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் ஜனநாயக வாதிகள், அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் போன்ற எல்லோரும் இந்த இயக்கங்களுடன் தமிழ் மக்களின் உரிமை சார்ந்து ஒத்திசைவாகத்தானே செயற்படுகின்றார்கள். அதற்காக இவர்களை எல்லாம் எல்.ரி.ரி.ஈ என்றோ, ஈ.பி.டி.பி. என்றோ, புளொட் என்றோ கட்சி முத்திரை குத்த முடியுமா? அப்படி கட்சிமுத்திரை குத்துவது எவ்வளவு கேலிக்கூத்தானதாக இருக்க முடியும். புலிகளால் முன்வைக்கப்படும் அரசியல் கோரிக்கையுடன் (தமிழ்த்தேசியம்) இவர்களுக்கு எல்லாம் என்ன ஒத்திசைவு உண்டோ அந்த ஒத்திசைவுதான் கிழக்கு மாகாண மக்களின் நலன்களுடன் ரி.எம்.வி.பி. தன்னை அடையாளம் காட்டும் புள்ளிகளில் எனக்கும் உண்டு.

ஆகவேதான் கிழக்கு மக்களின் நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற என்னை ரி.எம்.வி.பி. சாயம் பூசிப்பார்ப்பது உங்கள் பார்வைக் கோளாறு என்கின்றேன். சமூகம் சார்ந்த அரசியல் என்பதை கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் மட்டுமே உரியதாக கருதுகின்ற வெகுளித்தனமான சமூகமாக தமிழ் சமூகம் இன்னும் இருப்பதும் சுதந்திரமான அரசியலாளர்களைக் கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க ஒரு சிவில் சமூகமான தமிழ் சமூகம் இன்னும் வளர்ச்சி அடையாதிருப்பதுமே இப்பார்வை கோளாறுக்கு காரணம் என்பேன். என்ன செய்வது இன்னுமொரு பகுத்தறிவு பெரியாருக்காக எல்லோரும் காத்திருப்போம்.

தேசம்நெற்: இலங்கை அரசின் உளவுத்துறையின் கீழ் இயங்கும் ரி.எம்.வி.பி கிழக்கு மாகாண மக்கள் மீது என்ன அக்கறை கொண்டுள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்கள் ?

ஸ்ராலின்: முதலில் ரி.எம்.வி.பி. இலங்கை அரசின் உளவுத்துறையின் கீழ் இயங்குகிறது எனும் தீர்க்கமான முடிவுகளை கைவசம் வைத்துக்கொண்டே இக்கேள்விகளைக் கேட்கின்றீர்கள். ஆனால் இக்கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அல்லது குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய பல்வேறு அமைப்புகள் தமிழ் சூழலில் ஜனநாயக முகத்துடன் வலம் வருகின்றன. ஆனால் அவர்களை எல்லாம் நோக்கி நீங்கள் எப்போதும் இதுபோன்ற கேள்விகளை எழுப்புவதில்லை.

இலங்கை உளவுத்துறையுடன் மட்டுமல்ல இந்திய உளவுத்துறையுடன் கூட பல இயக்கங்கள் கொண்டுள்ள உறவுகள் அம்பலமானவை. ஏன் புலிகள் கூட தங்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள இத்தகைய அணுகுமுறைகளை கடந்து போனவர்கள் தான் என்பது வரலாறு.

இன்றைய ஜனநாயக வழிக்குத் திரும்பிய தமிழ் தலைவர்களும், அகிம்சாவாதத் தமிழ் தலைவர்களும் அடங்கலாக எல்லா தமிழ் தலைமைகளுக்கும் புலிகளிடம் இருந்து பாதுகாப்பு கொடுப்பது இலங்கை உளவுத்துறைதான். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் இன்று நாலா புறமும் இருந்து ரி.எம்.வி.பி.யை மட்டுமே நோக்கி வருவது யாழ்ப்பாண ஆதிக்க மனோபாவத்துடனான அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை இவ்வேளையில் பகிரங்கப்படுத்த விரும்புகிறேன்.

இதற்கு அப்பால் ரி.எம்.வி.பி. இலங்கை அரசின் உளவுத்துறையின் கீழ் வேலைசெய்கின்றதா? ரி.பி.சி. இலங்கை உளவுத்துறையின் பண உதவியுடன் இயங்குகின்றதா? ஈ.என்.டி.எல்.எவ். இந்திய உளவுத்துறையின் கீழ் இயங்குகின்றதா? என்பது பற்றிய கேள்விகள் அந்தந்த அமைப்புகளின் நடைமுறை, கட்சி வேலைத்திட்டங்களை நோக்கி எழவேண்டியவை.

நான் தமிழ் சூழலில் கட்டுண்டு கிடக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அவற்றை ஆளும் ஆதிக்க கருத்தியல்கள் தமிழ் சமூகத்தின் அசைவியக்கமானது அக்கருத்தியலின் மீது ஏற்படுத்தி வரும் வெடிப்புகள் குறித்து கோட்பாட்டு ரீதியான ஆய்வு வேலைத்திட்டங்களைக் கொண்டவன். கட்சி வாதங்களுக்கும், இயக்க வாதங்களுக்கும் அப்பால் பட்டவன்.

அந்த வகையில் கருணாவினுடைய பிளவும் அதனூடாக உருவாகிய ரி.எம்.வி.பி. யினுடைய அரசியல் உருவாக்கமும் பல்லினச் சூழல் மிகுந்த கிழக்கு மாகாணத்தின் சமூக பொருளாதார அரசியல் காரணிகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக நான் கருதுகின்றேன்.

1) யாழ்ப்பாண ஆதிக்க சக்திகளின் நலன்களில் இருந்து உருவாகிய தமிழ் தேசியம் எனும் பெருங்கொடிய கதையாடலை கிழக்கு மாகாண மக்களிடம் அம்பலப்படுத்தி இருக்கின்றது. இந்த எழுச்சியானது கருத்தியல் ரீதியில் தமிழ் அரசியல் போக்கு அடைந்திருக்கும் வளர்ச்சிக்கட்டம் என நான் கருதுகின்றேன்.

2) ஆயிரமாண்டுகளுக்கு மேலாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே பேணப்பட்டு வந்த சமூக நல்லிணக்கம் குலைக்கப்படுவதற்கு காரணமாய் இருந்தது கிழக்கில் காலடி எடுத்து வைத்த தமிழ் தேசியத்தின் வரவேயாகும். ஆனால் கருணா முன்மொழிந்த கிழக்குத் தேசியமானது இன ஐக்கியத்தையும், பரஸ்பர சகிப்புத் தன்மையையும் வளர்த்தெடுக்க வேண்டிய பல்லினச் சூழலில் யதார்த்த நிலையை புரிய வைக்கத் தொடங்கியுள்ளது.

3) கிழக்கு மாகாண மக்களின் அனுமதியின்றி ஜனநாயக விரோதமான முறையில் 20 வருட காலமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான இணைப்பு நீக்கப்பட்டு உள்ளது. இதனை கிழக்கு மாகாண மக்களின் பறிக்கப்பட்டு இருந்த இறைமையானது மீளக் கையளிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகவே நான் கருதுகின்றேன்.

4) இவை எல்லாவற்றுக்கும் மேலாக எந்தவொரு சக்தியாலும் அசைக்க முடியாத தலைமையெனும் பிரபாகரனின் கீழ் இயங்கிய பாசிசப்படைகள் இன்று கிழக்கு மாகாணத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது வெறும் கேணல் கருணா எனும் இராணுவ வித்தகனுடைய பலத்தினால் மட்டும் சாத்தியமானதல்ல. கருணா முன்வைத்த தமிழ் தேசிய நிராகரிப்பும் கிழக்கின் சுயநிர்ணயம் எனும் புதியதொரு கருத்தாக்கம் கிழக்கு மாகாண மக்களிடையே ஏற்படுத்திய அரசியல் எழுச்சியினாலுமே சாத்தியமானதொன்றாகும்.

இவைகளெல்லாம் கிழக்கு மாகாண மக்களின் அக்கறை சார்ந்த விடயங்கள் இல்லை என நீங்கள் கூற முடியுமா?

தேசம்நெற்: இறுதியாக இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பில் கூட நீங்கள் ரி.எம்.வி..பிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டு சலசலப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே ?

ஸ்ராலின்: இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் வைப்பவர்கள் யார்? அவர்களது மூல நோக்கங்கள் என்ன? முகவரி இல்லாத கேள்விகளை தயவுசெய்து நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். கண்முன்னே நடந்த இலக்கியச் சந்திப்பு பற்றி இதுபோன்ற பொய்களை புழுகுமூட்டைகளை காவித்திரிகின்ற மர்ம நபர்கள் உங்கள் கேள்விகளின் உந்துசக்தியாக இருப்பது உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் மீதான நம்பகத்தன்மையை பாதிக்கின்ற விடயம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தகவல்களை நாலாபுறமும் விசாரித்த பின்னரே அவற்றை குற்றச்சாட்டுகளாக அவைக்கு கொண்டுவர வேண்டும்.

அந்த நிகழ்வை தலைமையேற்று நடத்திய பரா மாஸ்ரர் அவர்களிடமோ அங்கு கலந்துகொண்ட 100ற்கு மேற்பட்ட பார்வையாளர்களில் சில 10 பேர்களிடமோ நீங்கள் விசாரித்திருக்க முடியும். இருந்தாலும் கேள்வி என்று வந்த பின்னர் பதிலிறுக்க வேண்டிய பொறுப்பு எனக்குண்டு என்பதால் அங்கே நடந்த விடயத்தை ஒப்புவிக்கின்றேன்.

இலக்கியச் சந்திப்பில் போடப்பட்ட தலைப்பின்படி தீர்வுத்திட்டம் பற்றிய ஒரு பேச்சு திரு.சிவலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி அவரது பேச்சு திஸ்ஸவிதாரண யோசனைகளின் அடிப்படையில் பல நல்ல அம்சங்கள் தமிழ் மக்களுக்கு இருப்பதை முன்னிறுத்தி அமைந்திருந்தது. அதையொட்டி திஸ்ஸவிதாரண யோசனைகளை இலக்கியச் சந்திப்பு ஆதரித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கின்ற முன்மொழிவை அங்கு சிலர் ஆதரித்தனர்.

இந்த நிலையில் மேற்படி யோசனைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மேலும் சிலர் சுட்டிக்காட்டினர். குறிப்பாக முஸ்லிம்களின் தனித்துவம் பற்றிய சில பார்வைகளை தொட்டுக்காட்டி பசீர் அவர்களும், தலித் மக்களுக்கு விசேட சிறப்புரிமைகள் வழங்க வேண்டிய திருத்தத்தை பிரான்ஸ் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரும், பெண்களின் நிலை தீர்வுத்திட்டங்களில் கவனம் கொள்ளப்படுவதில்லை என்பதால் அதுகுறித்த உபசரத்துக்களை பெண்களின் சார்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உமா அவர்களும் குரல் எழுப்பினர். இதே போன்றுதான் வடக்கு, கிழக்கு இணைப்பு அல்லது பிரிப்பு தொடர்பாக திஸ்ஸவிதாரண யோசனைகளில் கிழக்கில் இருந்து வெளிவரும் எண்ணங்களும், ஆலோசனைகளும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும் என நானும் முன்மொழிந்தேன்.

அதாவது கிழக்கில் இருந்து மூன்று அமைப்புக்கள் இதுவரை தீர்வுத்திட்டம் குறித்த தமது கருத்துக்களை வெளியிட்டு இருப்பதை சுட்டிக்காட்டினேன். ரி.எம்.வி.பி. எனும் அமைப்பினது தீர்வுத்திட்டம் திஸ்ஸவிதாரணவிடம் நேரடியாக கையளிக்கப்பட்டு இருந்தது. கிழக்கு முஸ்லிம் குழுவினது தீர்வுத்திட்டம் ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டது. அதே போன்று ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியினராகிய நாங்கள் கடந்த ஆண்டு ஸ்ருற்காட்டில் கிழக்கின் சுயநிர்ணயம் எனும் விரிவான தலைப்பில் ஆவணப்படுத்திய முடிவுகள் போன்றவை முக்கியமானவையாகும். கிழக்கில் இருந்து வெளியான குரல்கள் எனும் அடிப்படையில் திஸ்ஸவிதாரணவின் தீர்வுகளுடன் இணைந்து கிழக்கு மாகாண இணைப்பு பற்றிய விடயத்தில் முடிவுகளை எடுப்பதில் மேற்படி மூன்று அமைப்புகளினதும் ஆலோசனைகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினேன். இதுதான் நடந்தது.

முஸ்லிம்கள் சார்பிலும், தலித் மக்கள் சார்பிலும், பெண்கள் சார்பிலும், கிழக்கிலங்கை மக்கள் சார்பிலும் சில விசேட கவனங்களை கோருகின்ற எங்களது திருத்தங்கள் திஸ்ஸவிதாரண யோசனைகளை தீர்மானமாக நிறைவேற்ற முயன்றவர்களுக்கு உவப்பளிக்கவில்லை. விவாதங்களை எதிர்கொள்ளாமலும் முன்திட்டமிடப்பட்ட வகையிலும் «திஸ்ஸவிதாரண யோசனைகளை ஏகமனதாக இலக்கியச் சந்திப்பு தீர்மானித்ததென்று» அறிக்கைவிடத் தயாராய் இருந்தவர்கள் எங்கள் கருத்துக்களை முதலில் நிராகரித்தனர். பின்னர் கவனத்தில் கொள்வதாக கூற முயன்றனர். இறுதியில் தீர்மானம் நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட்டு பின்வாங்கினர். இதுதான் நடந்தது.

எங்கேயோ யாராலோ திட்டமிடப்படுகின்ற யாரினதோ அரசியல் அட்டவணைகளுக்காக வேலை செய்கின்ற முன்முடிவுகளுடன் வந்தவர்களுக்கு இலக்கியச் சந்திப்பின் விவாதக் கலாசாரத்திற்கும் பன்முகப் பார்வைகளைக் கொண்ட உரையாடல் பாரம்பரியங்களுக்கும் முகம்கொடுக்க முடியாமல் போனது என்பதுதான் அந்த நிகழ்வுகளின் சாரம். மற்றையோரின் கருத்துகளுக்காக உயிரைக்கொடுக்க வேண்டாம், மற்றையோரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் வேண்டாம், மற்றையோர் கருத்துச் சொல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு எனும் குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயக பண்புகள் கூட அற்ற வக்கிரமான மனப்பான்மையில் இருந்துதான் நான் ரி.எம்.வி..பி. இற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற முயன்றதாக பொய்ப் பிரச்சாரங்கள் முளைத்தெழுகின்றது.

தேசம்நெற்: கருணாவுடைய பிளவின் ஆரம்பத்தில் ரி.பி.சி வானொலி கருணாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. அப்போது நீங்களும் குமாரதுரை போன்றவர்களும் ரி.பி.சிக்கு உங்கள் பங்களிப்பை வழங்கி வந்தீர்கள். பிற்காலங்களில் கருணாவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் தாங்கள் கருணாவில் இருந்து அந்நியமானதாக ராம்ராஜ் கூறுகிறார். ரி.பி.சி உடனான உங்கள் முரண்பாட்டிற்கு என்ன காரணம் ?

ஸ்ராலின்: ரி.பி.சி. என்பது பாசிசத்திற்கெதிரான ஒரு ஜனநாயக குரல்களின் சங்கமிப்பு என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் எங்களின் பங்களிப்பு இருந்தது. இது எந்த ஒரு இயக்கத்தினதோ, கட்சியினதோ கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே நாங்கள் கருதியிருந்தோம். ஆனால் காலப்போக்கில் ரி.பி.சி.யின் பணிப்பாளராகிய ராம்ராஜ் அவர்கள் சார்ந்த கட்சியின் (ஈ.என்.டி.எல்.எவ்) மறைமுகமான கட்டுப்பாட்டுக்குள் ரி.பி.சி. இழுத்து செல்லப்படுவதையும் ரி.பி.சி.யில் பங்கெடுத்து வந்த ஜனநாய சக்திகளின் செல்வாக்கு ஈ.என்.டி.எல்.எவ். இன் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதையும் நாங்கள் அவதானித்தோம்.

அது மட்டுமல்ல ஒரு புறத்தில் ரி.பி.சி. யில் பாசிச எதிர்ப்புப் பிரச்சாரம் பண்ணிக்கொண்டு மறுபுறத்தில் தீப்பொறி என்கின்ற இணையத்தளத்தில் பாசிச எதிர்பாளர்களை கொச்சைப்படுத்தி புலிகளின் நிதர்சனத்தின் தோழமை இணையத்தளமாக சுழியோடும் சுத்துமாத்து அரசியலையும் ரி.பி.சி.யின் பணிப்பாளராய் இருக்கின்ற ராம்ராஜ் அவர்கள் அரங்கேற்றி வருகின்றார். இந்த நிலையில் ரி.பி.சி. ஆனது யாருடைய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இயங்குகின்றது எதைநோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்கின்ற கேள்விகள் இன்று எங்களிடம் மட்டுமல்ல பல தரப்பினரிடமும் எழும்பியுள்ளது. இதன் காரணமாகத்தான் ரி.பி.சி. மீதான பொதுமக்களின் நம்பகத்தன்மையும் இன்று பாரிய சரிவு கண்டிருக்கின்றது.

இந்த நிலையில் நீங்கள் ரி.பி.சி. யினுடைய தொடர்பை நிறுத்திக் கொண்டவர்களாக என்னையும் குமாரதுரை அவர்களையும் மட்டுமே சுட்டிக்காட்டி இருப்பது எங்களது வெளியேற்றத்தை ரி.பி.சி. யுடனான எங்களது முரண்பாட்டை கருணா பிரச்சினையுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கின்ற தவறான பார்வையில் இருந்தே எழுகின்றது. ஆனால் இன்று ரிபி.சி. யின் முதுகெலும்பான அரசியல் விவாதங்களில் பங்கெடுத்து வந்த 90 வீதமானவர்கள் ரி.பி.சி. யுடன் முரண்பட்டு வெளியேறி இருப்பதை இட்டு நீங்கள் கேள்வி கேட்கவேண்டும்.

ரி.பி.சி யில் அரசியல் ஆய்வாளர்களாக கடமையாற்றிய ஜெயதேவன், பசிர், விவேகானந்தன் போன்றோரும், அரசியல் விவாதங்களில் பங்கெடுத்த கார்த்திக், நிமோ, சோலையூரான், ஜெமினி, கவி, யோகரெட்ணம், நவம், மற்றும் விஜி, சுதா …. என்று ஏராளமானோர் விலகிவருவதன் (விழித்துக்கொண்டதன்) காரணங்களை நீங்கள் தேடுங்கள். இவர்களோடெல்லாம் ஏற்பட்ட முரண்பாட்டுக்கு ரி.பி.சி. யின் பணிப்பாளராகிய ராம்ராஜ் அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்?

தேசம்நெற்: நீங்கள் கருணாவினுடைய நிதி பரிமாற்றங்களில் ஈடுபட்டு உள்ளதாகவும் அதிலிருந்து பெறப்பட்ட பணத்தில் வீடு வாங்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது. உங்களுடைய மறுப்பறிக்கையில் நீங்கள் அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. (நீங்கள் வாழும் வீடும் தற்போது வாங்கியதாகச் சொல்லப்பட்ட வீடும்) இக்குற்றச்சாட்டுப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

ஸ்ராலின்: கடந்த மாதம் 20 ஆம் திகதி நீங்கள் பாரிஸ் தலித் மாநாட்டுக்கு வந்திருந்தபோது இக்குற்றச்சாட்டு பற்றிய உங்கள் வினாவலுக்கு எனது தன்னிலை விளக்கத்தை அளித்திருந்தேன். «கருணாவின் வருகைக்கும், நிதி பரிமாற்றங்களுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை.» - ஸ்ராலின் மறுப்பு எனத் தலைப்பிட்டு அந்த செய்தியை தேசம் நெற் இணையத்தளத்தில் பிரசுரித்திருந்தீர்கள். அதன் பின்னரும் மேற்படி குற்றச்சாட்டுகளை முகவரி இல்லாத இணையத்தளங்கள் நிறுத்திக் கொள்ளாததன் காரணமாக ஒரு பகிரங்க மறுப்பை நானே முன்வந்தும் தெரிவித்திருந்தேன். «என்மீதான சேறடிப்புகளையும், குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுக்கிறேன்.» என்ற தலைப்பில் 26 ஒக்டோபர் மாதம் தேனி, விழிப்பு போன்ற இணையத்தளங்களில் அந்த மறுப்பு பிரசுரமாகியிருந்தது. அதனையும் உங்களது இணையத்தளத்தில் நீங்கள் மீள வெளியிட்டிருந்தீர்கள்.

இந்த எனது பகிரங்கமான மறுப்பில் பக்கம் பக்கமாக நான் எழுதியிருந்த விளக்கங்களின் இறுதியில் மீண்டுமொருமுறை எனது மறுப்பை தெளிவுபடுத்தி «என் மீதான இந்த சேறு பூசல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை, அநீதியானவை என்று கூறி இவை அனைத்தையும் கடுமையாக மறுக்கின்றேன்.» என முடித்திருந்தேன்.

இவையனைத்துக்கும் பிறகு இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் எதற்காக என்னை நோக்கி எழுப்புகின்றீர்கள்? மடியிலே கனமில்லாதவன் யாருக்கும் மண்டியிடத் தேவையில்லை என்பதற்கிணங்க அணுவளவு கூட உண்மையற்ற குற்றச்சாட்டுக்களுக்காக இத்தனை மறுப்புகளுக்கும் மேலாக நான் எனது தனிப்பட்ட வாழ்வு பற்றிய சுயவிபரங்களை விபரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை எனது சுயமரியாதைக்கு இழுக்காகக் கருதுகின்றேன்.

மாறாக குற்றச்சாட்டுகளை பரப்புகின்றவர்கள் தங்கள் சொந்த முகங்களுடன் வெளியே வரட்டும். அவர்கள் முகம் அற்;ற மனிதர்களாக அலைவதிலேயே உங்களுக்கு புரியவில்லையா?

இவையெல்லாம் ஆதாரமில்லாத பொறுப்பற்ற சேறடிப்புகள் என்று. இது வெறும் சேறடிப்பு மட்டுமல்ல இதில் மறைந்திருக்கின்ற சூழ்சியை நான் அம்பலப்படுத்தியே ஆக வேண்டும். நான் கொண்டுள்ள அரசியல் கருத்துகளுக்கு முகம் கொடுக்க முடியாத கோழைகள் என் கருத்துக்களை மட்டுமல்ல என்னையும் அழிப்பதற்கான ஒரு சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நேரடியாகச் சொன்னால் இது ஒரு கொலை முயற்சியாகும்.

கருணாவின் மீது புலிகள் கொண்டுள்ள பழி தீர்க்கும் படலத்தை லாவகமாக என்னை நோக்கி திருப்பிவிட்டு புலிகளைக் கொண்டு என்னைக் கொலை செய்வதற்கான ஒரு திட்டமிட்ட சதி அரங்கேறிக்கொண்டிருப்பது என்பதையிட்டு ஒரு பொறுப்பு மிக்க பத்திரிகைத் துறையில் ஈடுபடுபவர்கள் எனும் வகையில் நீங்கள் கவனம் கொள்ள வேண்டும். எனது சொந்த விலாசத்தை எனது முழுப்பெயரை, இலங்கையில், எனது சொந்த முகவரியை, எனது நிழற்படத்தை தயார் செய்து போலிக் குற்றச்சாட்டுக்களுடன் புலிகளின் கொலைக் கருவியான நிதர்சனத்துக்கு அனுப்புபவன் கொலைவெறி கொண்டலைபவன் அன்றி வேறென்ன. இதுபற்றி கள்ள மௌனம் காத்துக்கொண்டிருக்கின்ற புகலிடத்து ஜனநாயக முகங்களையும் நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

ஆகவே இப்போது ஒரு ஊடகம் எனும் வகையில் நான் உங்களுடாக ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். என்மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் என்ன? குற்றங்களைச் சுமத்தியவர்கள் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாட்டில் இருந்து தப்ப முடியாது. அதே போன்று அந்த ஆதாரங்களைப் பெற்று பகிரங்கப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த கேள்விகளுடன் என்னை அணுகியவர்கள் எனும் வகையில் உங்களுக்கும் உரியது.

என்மீது நிதிக்குற்றச்சாட்டு செய்திகளைப் பரப்பிய அந்த முகவரி இல்லாத மர்ம நபர்கள் அதற்குரிய ஆதாரங்களை உடனடியாக வெளியிடுமாறு கோருகின்றேன். ஆதாரங்களை வெளியிட தாமதிக்கின்ற ஒவ்வொரு பொழுதுகளும் அவர்கள் என்மீதான கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்கின்ற எனது குற்றச்சாட்டு வலுவடைந்து கொண்டே இருக்கும். மாறாக தமது அநாகரிகமான செயற்பாடுகளை உணர்ந்து எனக்கு அநீதி இழைத்தமைக்காக இவர்கள் பகிரங்க மன்னிப்பு கோரியே ஆகவேண்டும்.

தேசம்நெற்: உங்கள் மறுப்பறிக்கையில் நீங்கள் ஒரு பிரதேசவாதியல்ல என்று குறிப்பிடுகிறீர்கள். ஆனால் வடக்கு – கிழக்கு இணைப்பை நீங்கள் கடுமையாக எதிர்க்கிறீர்கள். வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். இதில் நீங்;கள் வைக்கும் நியாயம் என்ன ?

ஸ்ராலின்: ஆம் நான் நிட்சயமாக பிரதேசவாதியல்ல. ஒரு பிரதேசத்தின் பெயரால் மற்றொரு பிரதேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முனைவதுதான் பிரதேச வாதம். கிழக்கு மாகாணமானது ஒருபோதும் யாரையும் அடிமை கொண்ட வரலாறோ, மேலாதிக்கம் செலுத்திய வரலாறோ அற்றதொன்றாகும். நாங்கள் எங்கள் பிரதேசத்தின் நிர்வாகம் எங்களிடம் இருக்க வேண்டும் என கோருவது எங்களது பிரதேச நலன் சம்பந்தப்பட்ட விடயம். எங்களது மக்களின் அரசியல் அபிலாசைகள் சம்பந்தப்பட்ட விடயம். அதைத்தாண்டி வேறு ஒரு பிரதேசத்தை தேடி அதை ஆக்கிரமிக்க அதன் மேல் ஆட்சிசெலுத்த முனையும் போதுதான் அது பிரதேசவாதம் ஆகின்றது.

மட்டக்களப்பில் வாழுகின்ற யாழ்ப்பாணத்து வியாபாரிகளை மட்டக்களப்பை விட்டு துரத்த முயன்றால் அது அப்பட்டமான பிரதேசவாதம். தமது பிரதேசத்தில் வாழும் மற்றய பிரதேசத்து மக்களை இரண்டாம் தர பிரசைகளாக நடாத்த முனைவது நிட்சயம் பிரதேச வாதமாகத்தான் இருக்க முடியும்.

அதை விடுத்து நாங்கள் கிழக்குமாகாண மக்கள் தனிமாகாண, தனிநிர்வாக அந்தஸ்துக்குரியவர்கள் என குரலெழுப்புவது எங்களது பிரதேச நலன் சார்ந்த விடயம். இன்று தமிழர் தரப்பு அரசியல் வாதிகள் எல்லோரும் தமிழர்களுக்காக தனிநிர்வாகம் கோருவது என்பது இனவாதமாகுமா? இனத்தின் பெயரில் உரிமை கோருவது என்பதால் அது இனவாதம் ஆகிவிட முடியாது. ஆனால் தமிழர்களின் பெயரில் உரிமை கோரிக்கொண்டு தமிழர்களோடு வாழும் சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் அகற்றிவிட்டு தனித்தமிழ் நிலமாக வடகிழக்கை ஆக்க முனைவதுதான் அப்பட்டமான இனவாதமாகும்.

ஆகவே தமிழர்களது அதிகாரப் பகிர்வு கோரிக்கையில் இருக்கின்ற நியாயங்கள் தமிழர்களது சுயநிர்ணயம் சார்ந்த விடயம் என்கின்றோம் அல்லவா? அதைபோன்றுதான் கிழக்கு மாகாணம் தனித்து இயங்க வேண்டும் என்பதும் கிழக்கு மாகாண மக்களின் சுயநிர்ணயம் சார்ந்த விடயம். இதை யார் மறுக்க முடியும். ஒரு மக்கள் கூட்டம் எதை அடிப்படையாகக் கொண்டு ஒடுக்கப்படுவதாகக் கூறுகின்றதோ அந்த அடையாளத்தை வைத்தே தமது உரிமைகளைக் கோரும். அது மொழியாகவோ, இனமாகவோ, பிரதேசமாகவோ ஏன் சாதியாகவோ கூட இருக்கலாம்.

யாழ்ப்பாணத்து தமிழர்களிடையே காணப்பட்ட சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் 1970 களில் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் ஒரு தனி தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்றதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆகவே தமிழர்களின் உரிமைகளை கேட்கின்றவர்கள் கிழக்கு மக்களின் உரிமைகளைப் பற்றி பேசுகின்ற எங்களை எப்படி பிரதேசவாதி என்று சொல்ல முடியும். தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கின்ற «சிஹல உறுமய» வை சிங்கள இனவாதிகள் என்று சொல்ல முடியும் என்றால் கிழக்கு மக்களின் உரிமைகளை மறுக்கின்ற எல்லாத் தலைமைகளையும் யாழ்ப்பாண பிரதேசவாதிகள் என்று சொல்ல முடியும்.

ஆம் நாங்கள் அல்ல பிரதேச வாதிகள். எங்களை பிரதேசவாதிகள் என்று சுட்டுகின்ற ஒவ்வொருவரும் யாழ்மேலாதிக்க மனோபாவம் கொண்ட பிரதேசவாதிகளேயாகும். கிழக்கு பிரியவேண்டும் என்பதற்கான நியாயங்கள் ஆயிரம் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் ஒற்றைவரிக்குள் அடக்கிவிடலாம். அதுதான் சுயநிர்ணய உரிமை. (கிழக்கின் சுயநிர்ணயம் எனும் பெயரில் ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி சார்பில் வெளியிடப்பட்ட ஆவணக் கையேட்டைப் பார்க்கவும்)

ஆனால் கிழக்கு மாகாணம் தனித்து இயங்குவதற்கு நியாயங்களை முன்வைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நீண்ட நெடிய வரலாறு எங்கும் கிழக்கும் வடக்கும் ஒருபோதும் இணைக்கப்பட்டிருக்கவில்லை. அறியப்பட்ட வரலாறுகளின் அடிப்படையில் உறுகுணை ராச்சியத்தின் (கண்டி) உபபிரிவாகவே கிழக்கு மாகாணம் என இன்று அழைக்கப்படுகின்ற பிரதேசங்கள் அனைத்தும் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தது. முதன் முதலாக மாகாண பிரிப்புகள் வெள்ளையரால் ஏற்படுத்தப்பட்ட போது 1832 ஆண்டு கோல்புறுக் -கமறூன் குழுவினரின் ஆலோசனைகளுக்கு இணங்க மாகாணங்கள் எனும் புதிய புவியியல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டது.

அன்றில் இருந்து 1987 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை அடாத்தாக வடக்குடன் இணைக்கும் வரை இன்னிலை நீடித்தது. அதற்காகத்தான் கிழக்கு மாகாணம் தனித்து இயங்க வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம். வடக்குடன் கிழக்கை இணைக்கக் கோருபவர்கள்தான் அதற்கான நியாயங்களை முன்வைக்க வேண்டும். ஆம் - சவால் விடுகின்றோம், விவாதிக்கத் தயாராயிருக்கின்றோம், வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்பதற்கு என்ன நியாயங்கள் உண்டு என்பதை முன்வையுங்கள். வடக்குடன் இணைவதால் கிழக்கு மாகாணத்துக்கு என்ன நன்மைகள் உண்டு? சேறடிப்புகளையும், கறைபூசல்களையும் விடுத்து நேர்மையான பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள் என அழைக்கிறோம்.

தேசம்நெற்: வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டால் கிழக்குத் தமிழர்கள் சிறுபான்மையினர் ஆவார்கள். அதனால் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அரசியல் லாபம் என்ன ?

ஸ்ராலின்: இது நீங்கள் மட்டுமல்ல பல தேசியவாத இயக்கங்களும் முன்வைக்கும் கேள்வியாகும். நாங்கள் எவ்வளவுதான் ஜனநாயகம் பேசினாலும், எவ்வளவுதான் மனித உரிமைகள் குறித்துப் பேசினாலும், எவ்வளவுதான் இன ஜக்கியம் பேசினாலும் தமிழ் நோக்கில் இருந்து வெளியேவர முடியவில்லை என்பதற்கு ஆதாரம் இக்கேள்விதான். உங்களுக்கு (இக்கேள்விகளுடன் அலைகின்ற எல்லோருக்கும்) தமிழர்களைப் பற்றியே கவலை. கிழக்கு மாகாணத்தின் பல்லின வரலாறு, பாரம்பரியம், சமூகப் பரம்பல் என்ற விடயங்கள் பற்றிய பரிட்சயம் அற்றவர்கள் இப்படித்தான் கேட்க முடியும்.

ஆனால் நாங்கள் தமிழர்கள் என்ற குறுகிய பார்வையுடன் மட்டும் பேசவில்லை. அக்குறுகிய பார்வையுடன் கிழக்கு மாகாணத்தை அணுகுவது சமூகவியல் ரீதியில் பொருத்த மற்றதொன்றாகும். ‘கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு மட்டும் உரிய நிலம் அல்ல. அது தமிழர்களுக்கும் உரிய நிலம்.’ கூடவே முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும், பறங்கியர்களுக்கும், ‘வேடர்கள்’ என்று சொல்லப்படுகின்ற வன சுதந்திர மனிதர்களுக்கும் உரிய நிலம். நாங்கள் கிழக்கு மாகணம் எனக் கூறும் போது வெறும் «தமிழ் நோக்கு அரசியல்» இங்கே பொருத்தமற்றது.

தமிழ் தேசியவாதத்தின் வரவே எங்களிடம் இனப்பகையை மூட்டியது. ஈராயிரம் ஆண்டு கால இன ஒற்றுமையும், சகிப்புத் தன்மையும், கூட்டு வாழ்க்கையும் கொண்டவர்கள் நாங்கள். ஒரு போதும் இனத்தின் பெயரில் ஒரு துளி இரத்தம் சிந்தியதாகக் கூடி வரலாறு இல்லை. இந்த தமிழ் அரசியல், தமிழ் தேசியவாதம் என்பவைகள் என்று கிழக்கில் காலடி எடுத்து வைத்ததோ அன்றில் இருந்துதான் இனங்களிடையே பரஸ்பர சந்தேகமும், இனமுரண்பாடுகளும், இன பகைமையும், கலவரங்களும் அங்கே உருவாகத் தொடங்கின.

ஒரு வரலாற்றுக் குறிப்பை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 27-04-1977 ஆண்டு கனவான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய சாம்பல் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட அன்றுதான் முதன் முதலாக வரலாற்றுப் பெருமைமிக்க கிழக்கு மாகாணத்தின் அமைதி குலைத்தெறியப்பட்டது. மூவினங்களும் சேர்ந்துவாழும் அற்புதமான எங்கள் திருகோணமலை இனக்கலவரத்தை அன்றுதான் கண்டது. அன்று தொடங்கிய இரத்தத் துளிகள் இன்றுவரை தொடர்கிறது.

ஆகவே எங்களை முன்புபோல் வாழ விடுங்கள் என்று கேட்கின்றோம். தமிழ் மண் எனும் ஒற்றை அடையாளம் எங்கள் பல்லினத்தன்மைக்கு எதிரானது. தமிழர்களாகவும், முஸ்லிம்களாகவும், சிங்களவர்களாகவும் எமது தனித்துவங்களுடன் நாங்கள் கிழக்கு மாகாணத்தின் மக்களாக வாழ விரும்புகின்றோம். கிழக்கை கிழக்காக இருக்க விடுங்கள்.

தேசம்நெற்: கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் என்பது உங்களுக்கான அரசியல் அடையாளத்தை தேடும் ஒரு முயற்சியாக நோக்கப்படுகிறது அது பற்றிய உங்கள் கருத்து என்ன ?

ஸ்ராலின்: ஆம் அது எங்களுக்கான அரசியல் அடையாளத்தைத் தேடும் முயற்சியேதான். வடக்கில் இருந்து மொழியின் பெயரால் எம்மீது திணிக்கப்படுகின்ற ஒற்றை அடையாளத்தை நாம் மறுதலிக்கின்றோம். எங்கள் பன்முக அடையாளங்களை தேடியபடி இன்னும் இன்னுமாய் எங்கள் முயற்சி தொடரும்.

குறிப்பு --
முகவரியினையும் முழுப்பெயரினையும் வெளியிட முடியாதவர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதனை ஸ்ராலின் தவிர்த்துக்கொள்வது பொருத்தமானதாகும். அத்துடன் தமிழ்மக்களின் நலனுக்காகவும், தமிழர்தாயக பிரதேசத்திற்காகவும் குரல் கொடுப்பவர்களுக்கு தமிழ் மொழியில் எழுதத்தெரியாமை அவர்களின் மொழியின்மீதான பற்றினையும் ,இனத்தின்மீதான பற்றுறுதியினையும் வெளிக்காட்டும் வேடிக்கையென நான் கருதுகின்றேன். நன்றியுடன் குமாரதுரை

vizhippu.net

No comments: