Wednesday, December 26, 2007

பிரபாகரனுக்கு பின்னால் ்புலிகள் அமைப்பு என்ன ஆகும்? (உளவியல் போர்)

கடந்த பல வருடங்களாக இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள், தமிழ் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவர்களை புலிகள் கொன்று குவித்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் புலிகளின் கை தான் ஓங்கி வந்தது. படு பயங்கர சர்வாதிகார அமைப்பாக மாறியுள்ள புலிகள் அமைப்பை எதிர்த்து குரல் கொடுக்க யாருமே இல்லை. புலிகளை ஒடுக்க போராடி வந்த இலங்கை ராணுவமும் பலத்த பின்னடைவை சந்தித்து வந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த வீரர்கள், முக்கிய பொறுப்பில் உள்ள பலர், இலங்கை ராணுவத்தினரால் தொடர்ச்சியாக கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். வேட்டையாடி வந்த புலிகள் இப்போது பதுங்கு குழியில் பதுங்க ஆரம்பித்து விட்டனர். பாலசிங்கம், தமிழ் செல்வன் ஆகியோர் மறைந்து விட்டனர். முக்கிய தளபதிகள் பலர் காணாமல் போய் விட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபாகரன் உயிருக்கு இலங்கை ராணுவம் குறி வைத்து விட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டால் புலிகளின் அடுத்த தலைவர் யார்? புலிகளின் எதிர்காலம் என்ன?

இலங்கை மட்டுமின்றி இந்தியா குறிப்பாக தமிழக அரசியலிலும் விளைவுகளை ஏற்படுத்தி வரும் புலிகள் அமைப்பை ஒடுக்க இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் உட்பட பல நாடுகளில் இருந்து வாங்கி குவித்துள்ள அதிநவீன உளவுக்கருவிகள், வேவு விமானங்கள், ரேடார்கள், துல்லியமாக குண்டு வீசும் விமானங்கள்மூலம் புலிகளின் பதுங்கு குழிகளை இலங்கை ராணுவத்தினர் தாக்கி வருகின்றனர். இப்படிப்பட்ட தாக்குதல் ஒன்றின் மூலம்தான் தமிழ் செல்வனை இலங்கை விமானப்படை தாக்கி அழித்தது.

பிரபாகரன் தங்கியிருக்கும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு, அவரை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த நவ., 2ம் திகதி இலங்கையின் கிளிநொச்சியில் உள்ள திருவையாற்றில் ராணுவம் நடத்திய தாக்குதலில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் கொல்லப்பட்டார். இது புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. புலிகளின் கோட்டையாக கருதப்பட்ட வன்னிப் பகுதியில் புலிகளின் ஆதிக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த நவ., 28ம் திகதி இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜெயந்தி நகர் என்ற இடத்தில் வான்படை தாக்குதலில் புலிகள் தலைவர் பிரபாகரன் காயமடைந்ததாக செய்திகள் வெளியாயின. இதற்கு இரண்டு நாட்கள் முன்னர் தான், ஜெயந்தி நகரில் உள்ள புலிகள் பதுங்கு குழிகள் மீது ராணுவத்தினர் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து புலிகள் இணையதளம் "தமிழ்நெட்' கூறுகையில், ""இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை'' என்று தெரிவித்துள்ளது.

கொழும்பில் வெளிவரும் ஆங்கில வார இதழ் "நேஷனல்' கடந்த டிச., 16ம் திகதி வெளியிட்டுள்ள செய்தியில், "கடந்த நவ., 28ம் திகதி ஜெயந்தி நகரில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் புலிகளின் பதுங்கு குழிகள் நோக்கி குண்டுகள் வீசப்பட்டன. இதில் புலிகள் தலைவன் பிரபாகரனின் தோள் பட்டை மற்றும் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்' என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை பிரதமர் ராஜபக்ஸ தெரிவிக்கையில், "புலிகளின் மறைவிடத்தில் இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை தான். ஆனால், அதில் பிரபாகரன் காயமடைந்தார் என்ற செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை' என்றார்.

கடந்த 19ம் திகதி ராணுவ அமைச்சகம் இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது. கடந்த நவ., 28ம் திகதி ஜெயந்தி நகரில் நடந்த தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்துள்ளார். இவர் நவ., 26ம் திகதியே வான்படை தாக்குதலில் காயமடைந்துள்ளார். எனினும், இதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை. தற்போது தான் இது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

வழக்கம் போல் புலிகள் அமைப்பு இந்த செய்தியையும் மறுத்துள்ளது. புலிகள் செய்தி தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில், ""பிரபாகரன் காயமடைந்துள்ளார் என்று இலங்கை அரசு வேண்டுமென்றே பொய்யான செய்தியை வெளியிட்டது. புலிகள் அமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தலைவரின் பாதுகாவலர்கள் 116 பேர் இறந்து விட்டதாகவும், பிரபாகரன் சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லப்பட்டதாகவும், பல வதந்திகளை பரப்பி வருகிறது. எல்லாமே தவறானவை'' என்று கூறியுள்ளார். பிரபாகரன் பற்றி வெளியாகும் தகவல்கள் நம்ப முடியாததாக இருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். இலங்கை ராணுவத்தின் குறிப்பாக விமானப்படையின் கை ஓங்கி வருவது கண்கூடாக தெரிகிறது. புலிகள் பின்வாங்கி ஓடுவதும் உறுதியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டால் அடுத்து அந்த இயக்கத்தின் தலைவராக யார் வருவார் என்பதுதான் அது?

இலங்கைப் பிரதமர் ராஜபக்ஸவின் சகோதரரும், ராணுவ அமைச்சருமான கோதபாயா ராஜபக்ஸ கூறுகையில், "நாங்கள் புலிகள் தலைவர் பிரபாகரனை குறிவைத்து விட்டோம். விரைவில் வீழ்ச்சி உறுதி'.

கட்டுக்கோப்பான இயக்கமாக இருந்த புலிகள் அமைப்பில் இப்போது அதிருப்தி தலை தூக்க துவங்கியுள்ளது. புலிகள் மீது அதிருப்தி அடைந்துள்ள உள்ளூர் மக்கள், புலிகளின் நடமாட்டம் குறித்து உளவுப்படையினருக்கு தகவல்களை கொடுத்து வருகின்றனர். வலுக்கட்டாயமாக புலிகள் அமைப்பில் இளைஞர்களை அதிக அளவு சேர்த்து வருவதால் புலிகள் அமைப்பு மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது, பிரபாகரன் காயமடைந்தது ஆகியவைகளை வைத்து பார்க்கும் போது, புலிகள் அமைப்புக்கு அடுத்த கட்டத் தலைவரை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவாகி வருவது தெளிவாகிறது.

பிரபாகரனுக்கு அடுத்தபடியாக உள்ள புலிகளின் மூத்த தலைவர் "பேபி' சுப்ரமணியன். இவர் தற்போது, புலிகளின் கல்வித் துறை தலைவராக செயல்பட்டு வருகிறார். இவரது உண்மையான பெயர் இளங்குமரன். இவரைப் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் புலிகளின் ஆரம்ப கட்ட தலைவர்களில் ஒருவர். காங்கேசன் துறை பகுதியைச் சேர்ந்தவர். இவர் தான் பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். உறுதியாக நம்பும் ஒரே தலைவர். இவர் மூத்த தலைவராக இருந்தபோதிலும், போர்க்களத்தில் இறங்கி போரிட்டவர் அல்ல. இவர் கடந்த 1991ம் ஆண்டு வரை இந்தியாவில் தான் இருந்தார். இவர் புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களை இழுத்தார். புலிகளுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர்., செயல்பட மிகவும் முக்கிய பங்காற்றினார். மூத்த தலைவர்கள் அடிப்படையில் இவர் தான் புலிகளின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க வாய்ப்பு உண்டு.

மிதவாத தலைவரான பேபி சுப்ரமணியத்தால் சர்வாதிகார அமைப்பான புலிகள் இயக்கத்தை கட்டி காப்பாற்ற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே அவர் தலைமை பொறுப்பை ஏற்றாலும் விரைவில் மற்ற தலைவர்களால் அவர் பொம்மை தலைவராக மாறி விடுவார். மிகவும் ஆக்ரோஷமான புலிகள் அமைப்பை மிதவாத தலைவரால் கட்டி காப்பாற்ற முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அடுத்தபடியாக புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் முன்னிலையில் உள்ளார். மிகவும் கடுமையானவர். இவரைத்தொடர்ந்து உள்ள சூசை, பானு, சொர்ணம், ஜெயம், தீபன், பால்ராஜ், மற்றும் நடேசன் ஆகியோர் கடந்த 1983ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் தான் புலிகள் அமைப்பில் சேர்ந்தனர். பொட்டு அம்மன் புலிகளின் உளவுப் பிரிவில் இருப்பதால், புலிகள் அமைப்பில் செல்வாக்கானவர். பிரபாகரனுக்கு அடுத்த படியாக அதிக அதிகாரம் இவரிடம் தான் குவிந்து உள்ளது. புலிகளிடம் இவரின் ஆதரவாளர்களே அதிகம். அதனால் தலைமை பொறுப்புக்கு வர இவருக்கே அதிக வாய்ப்பு உள்ளது. இப்போதே இவர் துணைத்தலைவர் போல் தான் செயல்பட்டு வருகிறார்.

இவருக்கு போட்டியாக களத்தில் இருந்தவர் அம்பாறை, மட்டக்களப்பு முன்னாள் தலைவர் வினாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா. கருணாவை ஏற்கனவே துரோகி பட்டம் கொடுத்து ஓரம் கட்டி விட்டார் பொட்டு அம்மன்.

இந்தியா போன்ற தெற்கு ஆசிய நாடுகளில் இப்போதெல்லாம் அரசியல்வாதிகளின் வாரிசுகள் தான் பதவிக்கு வருகின்றனர். இலங்கையும் இதில் விதிவிலக்கல்ல. புலிகள் அமைப்பிலும் வாரிசுகள் பொறுப்புக்கு வரவும் வாய்ப்பு உள்ளது.

புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனிக்கு புலிகள் மத்தியில் மதிப்பு உள்ளது. சமீபகாலமாக இவர் புலிகள் இயக்க நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். அவரது புகைப்படங்களை புலிகள் அமைப்பே வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட முதியவர்களுக்கான இல்லத்தை துவக்கி வைத்தார். இவருக்கு வெளிநாடுகளில் உள்ள புலிகள் அமைப்பு இடையேயும் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால், அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பிரபாகரனின் தீவிர ஆதரவாளர்கள் இவரது பெயரையும் குறிப்பிட வாய்ப்பு உள்ளது.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோனி. இவரும் அடுத்த தலைமை பொறுப்புக்கு வர வாய்ப்பு உள்ளது. புலிகள் போர் நடவடிக்கையில் இவர் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார். விமான ஓட்டிக்கான முறையான பைலட் லைசென்ஸ் பெற்றுள்ளார். புலிகளின் வான்படை தாக்குதலில் மிக முக்கிய பொறுப்பு வகிக்கிறார். தலைமை பொறுப்புக்கு பிரபாகரன் குடும்பத்தில் இருந்து போட்டி வரும் சூழ்நிலையில் பொட்டு அம்மன் போட்டியில் இருந்து விலகிக் கொள்வார். ஆனால், பின்னணியில் பொட்டு அம்மனுக்கு பெரும் பங்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பிரபாகரன் குடும்பத்தினர் மற்றும் புலிகளின் முக்கிய புள்ளிகள் அடங்கிய கூட்டு தலைமை பொறுப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதை தவிர வேறு இரண்டு வாய்ப்புகளும் உள்ளது. இளங்குமரன் தலைமையில் தலைமைக்குழு செயல்படும் என்றும் அல்லது பொட்டு அம்மனும், இளங்குமரனும் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது.

பிரபாகரனைப்போலவே பொட்டு அம்மனும் ராஜிவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. பிரபாகரனுக்குப் பின்னால் பொட்டு அம்மன் பொறுப்புக்கு வந்தாலும் புலிகள் அமைப்பு குறித்த கருத்துக்களில் இந்திய அரசில் எந்த மாற்றமும் இருக்காது.

பிரபாகரனுக்குப் பின்னால் யார் தலைமைப் பொறுப்புக்கு வந்தாலும் புலிகள் அமைப்பு பழையபடியே கொடூரமான, சர்வாதிகார அமைப்பாக செயல்பட முடியுமா என்பது கேள்விக்குறிதான். பிரபாகரன் இல்லாவிடில் புலிகள் அமைப்பு உடனடியாக முடங்கி விடாது. ஆனால் அதன் வீழ்ச்சி ஆரம்பமாகிவிடும் என்பது உண்மை. அதற்கு காரணமும் பிரபாகரனாகத்தான் இருப்பார். அந்த அளவுக்கு தன்னைச் சுற்றி மட்டுமே இயக்கத்தை கட்டி வளர்த்துள்ளார். தனி நபர் துதி பாடும் வகையில் உருவாகியுள்ள இந்த அமைப்பு தனி நபர் தலைவருக்குப் பின் நீடிப்பது சந்தேகம் தான். உலக அரசியல் வரலாறு இதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

ஈழத்தமிழர்களின் ஒரே ஒப்பற்ற தலைவர் தான் மட்டுமே என்ற மாயையை பிரபாகரன் ஏற்படுத்தி வைத்துள்ளார். மாற்று ஏற்பாடு எதையும் செய்யாததால் அவருக்கு பின்னால் புலிகள் அமைப்பில் பிரச்சினை ஏற்படுவது உறுதி.

பிரபாகரன் இல்லையென்று ஆகிவிட்டால், தமிழர்கள் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று அர்த்தம் இல்லை. புலிகள் அமைப்பு வேண்டுமானால் சிதையலாம். இலங்கை அரசு சுலபத்தில் தமிழர் பிரச்சினையில் இருந்து விடுபட்டு விடமுடியாது. நீதி, சமத்துவம் அடிப்படையில் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ஒன்று பட்ட இலங்கை அமைப்பிற்குள் தமிழர்களின் உண்மையான பிரச்னைக்கும், அபிலாஷைகளுக்கும் தீர்வு காணப்படும் வரை இலங்கையில் தமிழர் பிரச்னை நீடிப்பது மட்டும் உறுதி.

No comments: