Sunday, December 23, 2007

இந்திய பிரதமரின் வருகையுடன் இனநெருக்கடிக்கான தீர்வுப்பொதியை தொடர்புபடுத்துவது எதற்காக?

[23 - December - 2007] [Font Size - A - A - A]
*டக்ளஸிடம் ஸ்ரீகாந்தா கேள்வி

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கை அரசால் முன்வைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் தீர்வுப் பொதியானது, ஏன் இந்தியப் பிரதமரின் அடுத்த வருட இலங்கை விஜயத்துடன் தொடர்புபட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.என். ஷ்ரீகாந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீகாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்;

"எதிர்வரும் மாசிமாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருவதற்கு முன்னர் மாகாண மட்ட அதிகாரப் பரவலாக்கலை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டம் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டு விடும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கின்றார்.

இலங்கையின் அரசியல் சாசனத்தின் பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை அதிகளவில் விரிபடுத்தும் விதத்தில் இந்தத் தீர்வுத் திட்டம் அமையும் என்ற செய்தியையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் வட,கிழக்கு மாகாணங்களுக்கான ஓர் இடைக்கால நிர்வாகத்திற்கு தலைமை தாங்கும் தனது ஆவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் முதலில் ஒரு விடயத்தை புரிந்து கொள்வதற்கு இனி மேலாவது முயற்சிக்க வேண்டும்.

இலங்கைத் தீவின் அதிகார மையம் என்பது முற்று முழுதாக இலங்கை அரசாங்கத்தின் கையில், கொழும்பில் வைத்திருக்கப்பட வழி வகுத்திருக்கும் இன்றைய ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அதிகாரப் பரவலாக்கலும் அர்த்தபுஷ்டி கொண்டதாகவும் முழுமையானதாகவும் ஒரு போதும் அமையவே முடியாது என்பது தான் அந்த விடயம்.

ஆணைப் பெண் ஆக்கவும் பெண்ணை ஆண் ஆக்கவும் தவிர, சகலதையும் சாதிக்கும் அதிகாரம் கொண்டது என வர்ணிக்கப்படும் நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் அதிகாரப் பரவலாக்கல் என்பது, தலைக்கு மேலே கூரிய கொடுவாள் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும் நிச்சயமற்ற நிலையின் மத்தியிலேயே நீடிக்கவும் வேண்டியிருக்கும்!

கொடூர யுத்தற்கு அடி கோலி கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நீதியானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வே இன்றைய அவசரத் தேவை.

கட்டம் கட்டமாக, `தங்கு மடங்கள்' கொண்ட, ஓர் அரசியல் யாத்திரையை `அரசியல் தீர்வு' விடயத்தில் அறிவு படைத்த மனிதர் எவரும் சிந்திக்க முடியாது.

அரசியல் தீர்வுக்கான முதற்படியாக, `ஒற்றையாட்சி' மீது சிங்கள அரசியல் அதிகார சக்திகள் அனைத்தும் கொண்டிருக்கும், `பிடிவாதம் நிறைந்த - அதீத அபிமானத்தை', அவை கைவிட வேண்டும்.

இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் `வரலாற்று ரீதியான வாழ்விடம்' வட கிழக்கு மாகாணங்கள் என்பதை ஏற்றுக் கொண்டு, இலங்கையின் அரசியல் சாசனத்தின் `ஒற்றையாட்சி' தன்மையையும், பௌத்த மதத்திற்கு முதலிடமும் முன்னுரிமையும் வழங்கும் மதச்சார்புத் தன்மையையும் நீக்கி, `நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி' முறையை அகற்றி, பூரணமானதோர், சுயாட்சியை தமிழ் பேசும் மக்களின் தாயகத்திற்கு உறுதிப்படுத்தும் ஓர் தீர்வுத் திட்டத்தையே தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக் கொள்ள முடியும்.

இத்தகைய தீர்வே போருக்கு முடிவு கட்டி நிரந்தர அமைதிக்கு வழி வகுக்கும்.

இந்த யதார்த்த பூர்வமான நிலைமையினை அமைச்சர் டக்ளஸும் அவரைப் போன்றவர்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இதைவிடுத்து என்றைக்கோ தோல்வி கண்டு விட்ட மாகாண சபைகள் திட்டத்திற்கு வெள்ளையடித்து, அலங்கரித்து, அழகு பார்ப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் எவரும் ஓரடி கூட முன்னேற முடியாது.

மேலும் `இடைக்கால நிர்வாகம்' என்ற பெயரில் வட- கிழக்கில் ஓர் `பொம்மை' ஆட்சிக்கு தலைமை தாங்குவதன் மூலம் இப்பொழுது யாழ்ப்பாணக் குடாநாட்டில் அரங்கேற்றிக் கொண்டிரக்கும் படுகொலைக் கலாச்சாரத்திற்கு சட்டபூர்வ அந்தஸ்த்தை பெற்றுக் கொள்ள முடியுமேயன்றி வேறு எதையும் சாதிக்க முடியாது.

இறுதியாக ஒரு சந்தேகம்! அமைச்சர் டக்ளஸ் `இதோ வருகிறது' என அறிவிப்பு வெளியிட்டிருக்கம் `தீர்வுப் பொதி' இந்தியப் பிரதமரின் உத்தேச இலங்கை விஜயத்துடன் இணைத்துப் பிரஸ்தாபிக்கப்படுகின்றதே...! என்ன காரணம்?" என்றும் கேள்வி யெழுப்பியுள்ளார்.

No comments: