Sunday, December 23, 2007

தீவிர வன்முறையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ள அரசியல்

-கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்-
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசியலில் காணப்பட்டிருந்த பிரதானமான பிரச்சினைகளில் ஒன்று அதன் "நிச்சயமற்ற தன்மை" ஆகும். நாட்டின் பொதுவான போக்கு கீழ்நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்பது தெளிவானதாக இருந்தபோதும் குறிப்பாக இன மோதல் மட்டத்தில் அதிலும் குறிப்பாக யுத்தகள நிலைமைகள் தெளிவற்றதாகவே காணப்பட்டிருந்தன. துரதிஷ்டவசமாக இவ்விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுபோல் தோன்றுகின்றது. கடந்த சில வாரங்களில் பல அபிவிருத்திகள் மிக விரைவாகவே நடந்தேறத் தொடங்கிவிட்டன. இவை காணப்பட்டிருந்த தெளிவின்மையை இல்லாமற் செய்துவிட்டுள்ளது.

அவ்வகையில் மூன்று பிரதானமான அபிவிருத்திகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
1. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமை
2. புலிகளின் தலைவரின் மாவீரர் தின உரை
3. தொடரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள். இக்கட்டுரை தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் பற்றி ஆய்வு செய்கின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் கடுமையான போக்கு ஒன்றைக் கையாண்டிருந்த அதேசமயம் பயங்கரவாதத்தை முழுமையாக அழித்துவிடப் போகின்றோம் என்று கூறிவந்த போதிலும் இச் "சிந்தனை" முழுமையானதாகவும் அதேசமயம் தெளிவானதாகவும் இருந்தது எனக் கூறமுடியாது. ஏனெனில் அவ்வப்போது அதேசமயம் தொடர்ச்சியான வகையில் "நாம் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகவே இருக்கின்றோம்" என்று கூறப்பட்டது. அதேசமயம் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான சர்வகட்சி செயன்முறையையும் இடை இடையே கையிலெடுத்து வந்துள்ளது. இப்போக்கிற்கு சர்வதேச சமூகத்தைக் கையாள்வதற்கான தந்திரோபாய ரீதியான காரணம் ஒன்று இருந்தபோதும் தேவை ஏற்படுகின்ற போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இவ்வரசாங்கம் தயங்கப்போவதில்லை என்ற ஒரு அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

உண்மையில் ஆளும்கட்சி மட்டத்தில் இவ்வகையான மெல்லியதான ஒரு விருப்பம் காணப்பட்டிருந்திருக்கலாம். உதாரணமாக ஜே.வி.பி. போன்ற கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்தியிலும் அரசாங்கம் இன்றும் புலிகளை சட்ட ரீதியாகத் தடை செய்ய முன்வந்திருக்கவில்லை. காரணம் அவர்கள் கருதுவது போன்று தற்செயலாக பயங்கரவாதத்தை முழுமையாக அழிக்கும் தந்திரோபாயம் வெற்றியளிக்காவிடின் கடைசியில் தஞ்சம் புகுவதற்கான ஒரே ஒரு புகலிடமாக சமாதானப் பேச்சுவார்த்தை என்பது அமைந்துவிடக்கூடும். எனினும் கடந்த கால அனுபவம் கற்றுத்தந்த பாடம் என்னவெனில் தடை செய்யப்பட்ட நிலையில் புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவது இல்லை என்பதாகும். எனவே ஒரு தற்பாதுகாப்பு காரணியாக அரசாங்கம் தடை என்கின்ற ஆயுதத்தை இன்றும் கையிலெடுக்கவில்லை. இருப்பினும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற கடும்போக்கு வாக்கு வேட்டைக்கு போதுமானதல்ல என்ற நிலை ஏற்படுகின்றபோது இந்நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படமாட்டாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பது வேறு விடயம்.

எவ்வாறாயினும் இக்கட்டான ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையை ஒரு தற்பாதுகாப்புக் காரணியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு அபிப்பிராயம் மெல்லிய ஒரு மட்டத்திலாயினும் இருந்திருக்குமாயின்இ தமிழ்ச்செல்வனின் கொலையுடன் அது இல்லாமற் செய்யப்பட்டது என்றே கூற வேண்டும். அவ்வகையில் பேச்சுவார்த்தை என்பதற்கான சாத்தியம் அண்மைய எதிர்காலத்தில் முழுமையாக இல்லாமற் செய்யப்பட்டுள்ளது என்று கருதப்பட வேண்டும். இதற்குப் பல காரணங்கள் காணப்படுகின்றன. தமிழ்ச்செல்வன் இராணுவ மற்றும் அரசியல் ரீதியான பின்னணியில் இருந்து தோற்றம் பெற்றிருந்த போதும் அண்மைய கடந்த காலத்தில் அவரது அரசியற் செயற்பாடுகளே பிரதானமானவையாக அமைந்திருந்தன. அவர் கடைசிக் காலத்திலும் கூட இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என்று கூறப்பட்டிருந்தபோதும்இ புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் என்பதே முக்கியமானதாய் அமைந்திருந்தது.

இதன் காரணமாகவே அவரது பாதுகாப்பு பலவீனமாக இருந்துள்ளது. இது இரண்டு முக்கியமான விடயங்களைச் சுட்டிக்காட்டுகின்றது. ஒன்று அவரது பாதுகாப்பு பற்றி (தவறான) உயர் நம்பிக்கை காணப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவது தெற்கின் இராணுவஃ அரசியல் சிந்தனைப் போக்குப் பற்றிய சரியான புரிந்துணர்வு காணப்படாதிருந்திருக்கலாம். அதாவது அரசியல் மட்டத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று கருதப்பட்டிருக்கலாம்.

அதேசமயம் அரசாங்கமும் கூட தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் அதிஷ்டவசமாக இடம்பெற்றது ஒன்று அல்ல திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று தெளிவாகக் கூறியுள்ளது. எனவே இத்தாக்குதலின் பாரதூரமான தன்மையினையோ அல்லது நோக்கத்தையோ மூடிமறைக்க அரசாங்கம் முயலவில்லை. எவ்வாறாயினும் புலிகளின் இரண்டாவது உயர்மட்டத் தலைவர் என்று கருதப்பட்ட தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல் நடத்துவதற்கான இரண்டு முக்கியமான தேவைகள் காணப்பட்டிருந்திருக்கலாம். ஒன்று அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து இராணுவ ரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் கூட அரசாங்கத்திற்குப் பாரிய ஒரு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இப்பின்னடைவை சமன் செய்து கொள்வதற்கு அல்லது அதில் இருந்து பொது அபிப்பிராயத்தைத் திசை திருப்புவதற்கு தமிழ்ச்செல்வன் போன்றதொரு பாரிய இலக்கு அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டிருந்தது. எனவேதான் தமிழ்ச்செல்வனின் கொலை ஒரு "பொது உறவு சதிப்புரட்சி" என்று ஆங்கில செய்திகளில் வர்ணிக்கப்பட்டிருந்தது.

உண்மையில் இத்தாக்குதலுக்கு பெரிதும் கவனிக்கப்படாத அரசியல் ரீதியான காரணி ஒன்றும்கூட இருந்திருக்கலாம். புலிகளுக்கு எதிரான செயற்திட்டத்தில் அவர்களை பயங்கரவாதிகள் என்ற கட்டமைப்பினுள் சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்துவது முக்கியமானதொரு நோக்கமாக இருந்தது என்பது வெளிப்படையானது. இந்நோக்கத்திற்குத் தமிழ்ச்செல்வன் பாரிய ஒரு தடையாக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு வெளி உலகுடன் அதிலும் குறிப்பாக மேற்குலக இராஜதந்திரிகளுடன் இருந்த தொடர்புகள் குறைத்து மதிப்பிடக்கூடியவை அல்ல. அத்துடன் புலிகளின் அரசியல் துறைக்கு சர்வதேச ரீதியான ஒரு முக்கியத்துவத்தை அவரது இருப்பு ஏற்படுத்தியிருந்தது. இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது யாதெனில் இரு தரப்புகளுக்கும் இடையிலான வன்முறையும் நெருக்குதல்களும் தீவிரமடைந்ததன் பின்னரும் அண்மையில் மேற்குலக இராஜதந்திரிகள் அவரைச் சந்தித்தமை ஆகும். அதேசமயம் பயங்கரவாதிகள் எனக் கருதப்படும் குழுக்களுடன் எத்தகைய தொடர்பையும் வைத்திருக்க விரும்பாத நிலையிலும் கூட பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அவரை அழைப்பது தொடர்பிலான ஒரு வாதப்பிரதிவாதமும் கூட காணப்பட்டிருந்தது. இவை காணப்படுகின்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட புலிகளின் அரசியல் ரீதியான முக்கியத்துவத்தின் சான்றுகளாகவே அமைந்திருந்தன. எனவே புலிகளை பயங்கரவாதிகள் எனத் தனிமைப்படுத்துவதில் அவரது இருப்பு ஒரு பிரச்சினையாகவே காணப்பட்டிருந்தது. அவ்வகையில் இப்பிரச்சினையை நீக்கியதன் மூலம் புலிகளை சர்வதேச ரீதியாகத் தனிமைப்படுத்துவதில் அரசாங்கம் ஒருபடி முன்னேறியுள்ளது என்று கூற வேண்டும்.

எனினும் அரசியல் போக்கு தொடர்பில் முக்கியமானது தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டதன் விளைவுகளே ஆகும். ஒன்று தற்போது புலிகளின் அரசியற்துறை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களது அரசியல் ரீதியான சிந்தனை செயற்பாடுகள் முன்னைய அளவிற்கு கூர்மையாக இருக்குமா என்பது சந்தேகத்திற்கிடமானதே. புதிய அரசியற் துறைப் பொறுப்பாளர் நடேசன் அடிப்படையில் இராணுவ ரீதியான (பொலிஸ்) பின்னணியில் இருந்து தோற்றம் பெற்றவர் என்பதனால் இராணுவ ரீதியான சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிர்காலத்தில் முக்கியத்துவமளிக்கப்படலாம். புலிகள் ஒரு அரசியல் ரீதியான இயக்கமாக மாற வேண்டியது அவசியம் என்ற கோரிக்கை சர்வதேச ரீதியாகவும் தென்னிலங்கையிலும் பலமாக இருக்கின்ற நிலையில் இது ஒரு பின்னடைவாகவே கருதப்பட வேண்டும்.

அதேசமயம் அன்ரன் பாலசிங்கம் இல்லாதிருக்கின்ற நிலையில் தமிழ்ச்செல்வனின் மறைவு எதிர்காலத்தில் ஒரு பேச்சுவார்த்தை ஏற்படுமாக இருப்பின் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியிருக்கும். அப்படியான ஒரு நிலை ஏற்படுகின்ற பட்சத்தில் தென்னிலங்கை பேச்சுவார்த்தை மேசையில்கூட இராணுவ ரீதியான தலைவர்களுக்கும் கடும்போக்காளர்களுக்கும் முகம் கெடுக்க வேண்டி ஏற்படலாம். இது பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வது என்ற எதிர்பார்ப்பிற்கு உற்சாகமளிக்கக் கூடியது அல்ல. எனவே தமிழ்ச்செல்வனின் இழப்பு குறுகிய காலத்திற்குரியது அல்ல. மாறாக நீண்ட காலத்திலானது.

அதேசமயம் முக்கியமான பரிமாணம் உளவியல் ரீதியானது. தமிழ்ச்செல்வன் மறைவு தென்னிலங்கையில் பாரிய ஒரு உற்சாகத்தையும் மனத்திடத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இராணுவ மட்டத்தில் முக்கியமானதொரு இலக்கு அழிக்கப்பட்டமையினால் இம்மனநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்ந்து யுத்தம் செய்வதற்கான மனோநிலையை தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருந்தது. அதேசமயம் சமூக மட்டத்திலும் கூட ஒரு ஆரவாரம் ஏற்பட்டிருந்தது. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து கொழும்பு பங்குச் சந்தையில் உயர்வு ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இது தவறான புரிந்துணர்வினால் ஏற்பட்டிருக்கலாம். இது புலிகளைப் பலவீனப்படுத்தியிருப்பதாக தென்னிலங்கையில் கருதப்பட்டது. ஆனால் பலவீனப்படுத்தப்பட்டது அரசியல் பரிமாணம் மட்டுமே என்பதுடன் கொலையைத் தொடர்ந்து தீவிர யுத்தத்திற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது என்பதும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கவில்லை.

அதேசமயம் சுட்டிக்காட்டப்பட வேண்டிய இன்னுமொரு பரிமாணம் யாதெனில் தென்னிலங்கையின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் பொதுவாக வடக்கிலும் குறிப்பாக புலிகள் அமைப்பினுள்ளும் தொடர்ந்து யுத்தம் செய்வதற்கான உளவியலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச்செல்வன் கொலைக்கான பதிலடி என்ன என்று பொதுவாகக் கேட்கப்பட்ட நிலையில் புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைவதற்கான சாத்தியங்களே அதிகம் காணப்படுகின்றன. ஆகக் குறைந்தது இந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாயினும் அது கடினமாகியுள்ளது. அதேசமயம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீதான தாக்குதல்களையும் அது நியாயப்படுத்திவிடக் கூடும். எனவே துரதிஷ்டவசமாகஇ நாம் மேலதிக வன்முறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம் என்பது தெளிவானது.

No comments: