Sunday, December 23, 2007

பட்ஜெட்டை ஜே.வி.பி.எதிர்த்திருந்தால் விமல் வீரவன்ஸ 8 உறுப்பினர்களுடன் அரசு பக்கம் சென்றிருப்பார்'

[23 - December - 2007] [Font Size - A - A - A]
அரசின் வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்தை ஜே.வி.பி. எதிர்த்தால் 8 உறுப்பினர்களுடன் அரச பக்கம் தாவி விட அக்கட்சியின் விமல்வீரவன்ஸ தீர்மானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக `இருதின' சிங்கள வார இதழில் தெரிவிக்கப்பட்ள்ளதாவது;

`வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக பாராளுமன்றக் கட்டிடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பசில் ராஜபக்‌ஷவிற்கும் விமல்வீரவன்ஸவிற்கும் இடையே இரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது என்று ஜே.வி.பி.முன்னர் எடுத்திருந்த தீர்மானம் இறுதி நேரத்தில் மாறியுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் மகிந்த ராஜபக்‌ஷவின் செயலகத்துக்குள் இச்சந்திப்பு நடைபெற்றது. அடுத்த ஒரு மணித்தியாலயத்தில் நிச்சயமாக அரசாங்கத்திலிருந்து சுமார் 16 பேர் எதிர்க்கட்சிக்குச் செல்ல தீர்மானித்திருந்தனர்.

அதனால், அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் ஜே.வி.பி. குறைந்த பட்சம் வாக்களிப்பிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்று விமல் வீரவன்ஸவிடம் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார். அந்த தீர்மானத்திற்கு கட்சியினரை இணங்கச் செய்யுமாறும் விமல் வீரவன்ஸவை பசில் கேட்டுள்ளார். இதற்கமைய எவ்வித கோரிக்கையோ நிபந்தனையோ இன்றி ஆதரவுத் தீர்மானத்தை மேற்கொள்வோம் என்று பசில் ராஜபக்‌ஷவிடம் வீரவன்ஸ கூறியுள்ளார்.

அதேநேரத்தில், வாக்களிப்பிலிருந்து விலகியிருந்து அரசாங்கத்தை பாதுகாக்க கட்சியை சேர்ந்தவர்கள் விரும்பாவிடில் தான் ஏழு அல்லது எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரச பக்கம் வருவேன் என்று பசில் ராஜபக்ஷவிற்கு விமல் வீரவன்ஸ உறுதியளித்தார்.

மேலும், பசில் ராஜபக்‌ஷவின் வேண்டுகோளை ஏற்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானைச் சந்தித்த விமல் வீரவன்ஸ, தமது கட்சி வரவு- செலவுத் திட்ட வாக்களிப்பிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதால் எதிர்க்கட்சிக்குச் சென்று அமைச்சுப் பதவிகளை இழக்க வேண்டாமென்று தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்‌ஷவின் மற்றுமொரு வேண்டுகோளுக்கமைய அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுடன் ஆளும் கட்சியினர் இருந்த இடத்திற்கு அருகே சென்ற விமல் வீரவன்ஸ, ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குச் செல்வர்கள் எனச் சந்தேகிக்கும் உறுப்பினர்களுக்கு அருகே சென்று தமது கட்சியின் தீர்மானம் குறித்து அவர்களுக்குக் கேட்கக்கூடியவாறு சத்தமாகக் கூறி அவர்களின் கட்சித் தாவலையும் தடுத்துள்ளார்.

No comments: