Saturday, December 8, 2007

இந்தியர்களின் தூண்டுதலே காரணம்: டத்தோ சாமிவேலு குற்றச்சாட்டு

மலேசியாவில் அண்மையில் ஏற்பட்ட பேரணி, வன்முறைச் சம்பவங்களுக்கு இந்தியாவில் உள்ள சில குழுக்களின் தூண்டுதலே காரணம் என்று பொதுப்பணித் துறை அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான டத்தோ சாமிவேலு குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் கூறியது: மலேசியாவில் பேரணி நடத்த அரசு தடை விதித்திருந்த போதிலும் கடந்த வாரம் இந்திய வம்சாவளியினர் நடத்திய பேரணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தடையை மீறி பேரணி நடத்தப்பட்டது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதன்மூலம் மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு அவப் பெயர் ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு 10 லட்சம் டாலர் கிடைக்கும் என்று உறுதி அளித்திருந்ததால் தடை விதிக்கப்பட்ட இந்தப் பேரணியில் பெருமளவில் மக்கள் பங்கேற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்து உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் 7 பேரும் வழக்கறிஞர்கள். அரசாங்கமே தங்கள் கையில் இருப்பதாக இவர்கள் நினைத்து செயல்பட்டுள்ளனர். இந்து உரிமைக் குழுவுக்கு மலேசியாவில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு உள்ளது. அதிலும் குறிப்பாக மலேசியாவின் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிமும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மற்றொரு எதிர்க்கட்சியும் பேரணியை ஆதரித்துள்ளது.

மலேசியா குறித்த அபிப்பிராயத்தை சர்வதேச அளவில் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்து உரிமை அமைப்பினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

மலேசியாவில் வேலை வாய்ப்பில் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படுவது தவறான தகவலாகும். மலேசியாவில் வேலையின்றி யாரேனும் இருக்கிறார்கள் என்றால், ஒன்று அவர்கள் குறிப்பிட்ட வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற பிடிவாதத்தோடு இருக்க வேண்டும் அல்லது சோம்பேறிகளாக இருக்க வேண்டும். மலேசியாவில் மட்டும் 8 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ. 38,101. ஆனால் மலேசியாவின் தேசிய சராசரி வருவாய் ரூ. 35,807 ஆகும். இந்துக் கோவில்கள் இடிக்கப்படுவதாகக் கூறப்படுவதும் தவறான தகவலாகவும். 1980-ம் ஆண்டு மலேசியாவில் மொத்தம் 17,760 கோவில்கள் இருந்தன. தற்போது 20 ஆயிரம் கோவில்கள் உள்ளன.

சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட 150 சிறிய கோவில்கள்தான் இடித்துத் தள்ளப்பட்டன. இவ்விதம் இடிக்கப்பட்ட கோவில்களை வேறு இடங்களில் கட்டுவதற்கு நிலமும் வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் இந்தியாவிலிருந்து குடியேறியவர்களாவர். மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியில் 6,40,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு மொத்தம் வாக்குரிமை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 8,20,000.

இந்த பேரணி சம்பவத்தால் தேர்தலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உண்மை என்னவென்று நாட்டு மக்களுக்கு நாங்கள் எடுத்துச் சொல்வோம்.

இங்குள்ள மக்களிடையே இன துவேஷம் கிடையாது. எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது. ஒற்றுமையே எங்களது பலம் என்றார் சாமிவேலு.

No comments: