Sunday, January 27, 2008

சில பதிவுகள்

சுதந்திரதினத்திற்கு முன்பு வடக்கில் மாகாண சபை நிர்வாகம்:

சுதந்திரதினத்திற்கு முன்பு வடக்கில் மாகாண சபை நிர்வாகம்:ஒன்றினை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இந்த மாகாணசபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஐவரடங்கிய நிர்வாகக்கட்டமைப்பும் நியமிக்கப்பட விருக்கிறது. இந்த சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக தேவையேற்படும் பட்சத்தில் அமைச்சர் பதவியை துறப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சபையில் இருக்கும் ஐவரில் மூவர் தமிழர்கள் என்றும் ஏனைய இருவரில் ஒருவர் முஸ்லிம் பிரதிநிதி என்றும் மற்றவர் சிங்கள பிரதிநிதி என்றும் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சபையை நியமிக்கவிருக்கிறார். இந்த மாகாண சபை ஒரு வருடத்திற்கு இயங்கும். அதன்பின்னர் வடக்கிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டிருக் கிறார். அபிவிருத்தி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்து அரசுக்கு ஆலோ சனைகளை வழங்குவதே இந்த மாகாண சபையின் பணியாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய மாகாண சபைகளில் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் போன்றோருக்கு உள்ளது போன்ற அதிகாரங்களை வடக்கு இடைக்கால நிர்வாக சபையினருக்கு இருக்கும். இதேவேளை 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வுத்திட்ட யோசனைகளை அடுத்தவாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவும் ஜனாதிபதி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். எனினும் வடக்கு மாகாணசபைக்கான அங்கீகாரத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும், தேவைப்படின் இது குறித்து நாடாளுமன்றில் ஆராயலாம் என்றும் அரசாங்க உயர் மட்டங்கள் தெரிவித்துள்ளன.

ஈழவேந்தனுக்கு பதிலாக இஸ்லாமிய சட்டத்தரணி ரசீன் முகம்மது இமாம் நியமனம்
[வியாழக்கிழமை, 24 சனவரி 2008, 03:48 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இஸ்லாமியத் தமிழரான சட்டத்தரணி ரசீன் முகம்மது இமாம் (வயது 63) நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட மா.கா.ஈழவேந்தனின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 5 ஆம் நாள் இவர் அதிகாரபூர்வமாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரசீன் முகம்மது இமாம் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவர் ஆவார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளிலும் அவர் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தார்.

1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய இவர், கொழும்பில் தங்கியிருந்து சட்டத்தரணி பணியை ஆற்றி வந்தார். 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வேட்பாளராக இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது.

தேசியப் பட்டியல் வரிசையில் ஈழவேந்தனுக்கு அடுத்த இடத்தில் இருந்த இவரை வெற்றிடாகிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் முடிவு செய்திருந்தது.

இது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தேர்தல் ஆணையாளருக்கு நேற்று முன்நாள் அறிவித்திருந்தார். இதனையடுத்து ரசீன் முகம்மது இமாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவிருப்பதான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ளது.


BBC....News

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான சூழலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரான ரஜீம் முகமது இமாம் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டப்போது, வடமாகாணங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பம் என்றும் அதற்காக பாடுபடுவேன் என்றும் கூறினார்.


சிறிலங்கா அரசுதான் போலிக் கடவுச்சீட்டை வழங்கியது: கருணா
[சனிக்கிழமை, 26 சனவரி 2008, 03:36 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்]
பிரித்தானியாவுக்கு தான் தப்பிச் செல்வதற்கு தேவையான போலியான கடவுச்சீட்டை சிறிலங்கா அரசும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சவும்தான் தனக்கு வழங்கியதாக சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த கருணா பிரித்தானியா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்று பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பி.பி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவில் இருந்து இராஜதந்திரிகளுக்கு உரிய போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைந்ததை கருணா ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பிரித்தானியாவின் ஐல்ஸ்வெத் நீதிமன்றம் அவருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டணையை வழங்கியுள்ளது.

இந்த விசாரணைகளின் போது தனக்கு இராஜதந்திரிகளுக்கு உரிய கடவுச்சீட்டை சிறிலங்கா அரசும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சவுமே வழங்கியதாக கருணா தெரிவித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்குள் நுழைந்த கருணா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரித்தானியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பிரித்தானிய சிறையில் கருணா மீது தாக்குதல்: "த நேசன்"
[ஞாயிற்றுக்கிழமை, 27 சனவரி 2008, 05:27 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]
போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடிய சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுக்களின் முன்னாள் தலைவரான கருணாவுக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

9 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள கருணா மீது சிறையில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகம் உள்ள சிறையிலேயே கருணா அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் அரசியல் கைதியாகவே வைக்கப்பட்டுள்ளார். அந்தச் சிறையில் இரு தமிழ்க் கைதிகளும் உள்ளனர். அவர்கள் வேறு குற்றங்களுக்காக அங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள தமிழ்க் கைதிகள் கருணா மீது வெந்நீரைக் கொட்டியதுடன், ஆயுதங்கள் கொண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கருணாவுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே கருணா தனது சிறைவாசத்தை நிறைவு செய்த பின்னர் அவர்மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

கருணா தனது சிறைவாசத்தை அங்கு கழித்த பின்னர் அவர் சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட வேண்டும். ஆனால் அவர் மீதான போர்க்குற்றங்களை பிரித்தானியாவில் விசாரணை செய்யுமாறு அனைத்துலக மன்னிப்புசபை, மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன பிரித்தானியா அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.

சித்திரவதைகள், சிறார் படைச்சேர்ப்பு, கடத்தல், படுகொலைகள் போன்ற அவர் மீதான போர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கருணா மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: