Thursday, January 3, 2008

விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வ முன்னறிவிப்பு

யுத்த நிறுத்தத்திலிருந்து விலகுகிறது அரசாங்கம்
[03 - January - 2008] [Font Size - A - A - A]

-டிட்டோகுகன்- Thinakural

விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையானது செல்லுபடியற்றதென உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்துவதென அரசாங்கம் நேற்றுப் புதன்கிழமை முடிவுசெய்துள்ளது.

இதனைப் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெலவும் தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நோர்வேயின் அனுசரணையுடன் 22 பெப்ரவரி 2002 இல் அச்சமயம் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இந்தப் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இந்த உடன்படிக்கை வலுவிழந்து விட்டதால் விடுதலைப் புலிகளுடன் மேலுமொரு உடன்படிக்கையொன்றை மேற்கொள்வதில்லையென அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்திருப்பதாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றும் ஆதலால் பயங்கரவாத அமைப்புடன் இணக்கப்பாட்டிற்கு வருவதில் எந்தவித அர்த்தமும் இல்லையென அரசாங்கம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யுத்த நிறுத்தத்திலிருந்து வாபஸ் பெறுவதென அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல ராய்ட்டருக்கு தெரிவித்திருக்கிறார்.

`இன்று (நேற்று) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவது தொடர்பாக மற்றைய தரப்பிற்கு அரசாங்கம் அறிவித்தல் கொடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 14 நாட்களுக்கு முன்னர் நாங்கள் இது தொடர்பாக அறிவித்தல் கொடுக்க வேண்டுமென்ற சரத்து ஒப்பந்தத்தில் உள்ளது.'என்றும் ஹுலுகல்ல கூறியிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்‌ஷவும் போர் நிறுத்த உடன்படிக்கை ரத்துச்செய்யப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

போர் நிறுத்த உடன்படிக்கை முடிவிற்கு வருவதாயின் அந்த உடன்படிக்கையில் 4.4 ஆம் சரத்தின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் அல்லது விடுதலைப் புலிகள் அனுசரணையாளரான நோர்வே அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டும். முடிவடையும் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னராக இந்த அறிவித்தலை வழங்க வேண்டும்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக கொள்கையளவில் முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் இனிமேல் வெளிவிவகார அமைச்சும் அரச சமாதான செயலகமும் கலந்தாராய்ந்து உரிய நடைமுறைகளின் பிரகாரம் செயற்படவுள்ளதாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறினார்.

இதேவேளை, யுத்த நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக ரத்துச்செய்வதற்கான யோசனையை நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சமர்ப்பித்ததாகவும் அதற்கு ஏகமனதாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அநுரபிரியதர்சன யாப்பா ஏபி செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாதெனவும் இது தொடர்பாக தமக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் நோர்வேயும் சர்வதேச போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவும் தெரிவித்தன.

BBC.

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்பிரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வமாக 14-நாள் முன்னறிவிப்பினை வழங்கியிருக்கிறது.

போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள இந்த 14-நாள் முன்னறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முடிவிற்குவரும் என்று தெரிவித்திருக்கிறது.

அத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2002ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி உருவாக்கப்பெற்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளும் முடிவிற்குவரும் என வெளிநாட்டமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, பல்லாயிரக்கணக்கான தடவைகள் புலிகள் அமைப்பினரால் மீறப்பட்டு செயலற்றுப்போயுள்ள ஒரு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவது பயனற்றது என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, எதிர்காலத்தில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புலிகள் ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு பேச்சுகளிற்குத் தயார் என்று கூறினால் அது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அதேவேளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசின் இந்த பாரதூரமான முடிவு தமக்குக் கவலையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத்தூதுவர் எரிக் சொல்க்ஹெய்ம், வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மேலும் வன்முறைகள் அதிகரிக்கவே வழிகோலும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் அறிவிப்பு குறித்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் கருத்து எதையும் வெளியடவில்லை. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணநாயக அவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நார்வே அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகுதான் தங்களது கட்சி இது குறித்து கருத்து வெளியிட முடியுமென்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - கண்டனம்

இரா.சம்பந்தர்
அரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்திலிருந்து விலகியதாக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறிவந்துள்ளது என்று தெரிவித்தார்.

இராணுவ ரீதியில் ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை இந்த போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்டதுதான் தாங்கள் இங்கே வலியுறுத்துகின்ற விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


PUTHINAM
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் ஆறு வருடங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை கைவிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.

நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற சிறிலங்காவின் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பிலான சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியடப்படும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முடிவு போர் தீவிரமடையப்போவதற்கான முன்னறிவித்தலாகவே இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க இது தொடர்பலான யோசனை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றினார். அவருடைய யோசனையை அமைச்சரவை அங்கீகரித்ததாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரச தலைவரும், முப்படைகளின் தளபதியுமான மகிந்த ராஜபக்சவும் இதற்கான அங்கீகாரத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பிலான நடைமுறைகளைக் கவனிப்பதற்கான அமைச்சரவையின் உப குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது.

போர் நிறுத்தத்திலிருந்து விலகிக்கொள்வது என்ற அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் தொடர்பாக போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அனுசரணை வகித்த நோர்வேக்கு இன்று சிறிலங்கா அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும் எனவும் அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கும் விளக்கமளிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரான கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்படி, அதிலிருந்து விலகிக்கொள்வதாக இருந்தால் 14 நாட்களுக்கு முன்னர் அது தொடர்பாக நோர்வே அரசாங்கத்துக்கு முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும்.

அதன்படி இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் இன்று தமது முடிவை நோர்வேக்குத் தெரிவிக்கவிருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த முடிவு விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களுக்கான சாத்தியக்கூறுகள் இனிமேல் இல்லை என்பதைத்தான் உணர்த்துவதாக இருக்கின்றது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கள நிலைமைகளின் அடிப்படையிலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த கேகலிய ரம்புக்வெல, தற்போதைய நிலைமையில் போர் நிறுத்த உடன்படிக்கை எழுத்தில் மட்டுமே இருக்கின்றது எனவும், அதன் மூலமாக எந்தவிதமான பலனும் இல்லை எனவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் நிறுத்த மீறல்களைக் கவனத்திற் கொண்டும், தேசத்தின் பாதுகாப்பைக் கருதியுமே இந்தத் தீர்மானத்தை அரசாங்கம் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த உடன்படிக்கையை அரசாங்கம் கிழித்தெறிய வேண்டும் என சிங்களப் பேரினவாத அமைப்புக்களான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய என்பன நீண்ட காலமாகவே அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்திருக்கின்றன.

மகிந்த ராஜபக்சவும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் போது தான் பதவிக்கு வந்தால் போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறியப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அரசாங்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ச போர் நிறுத்த உடன்படிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அரசாங்கத்தைக் கைப்பற்றி பிரதமர் பொறுப்பை ஏற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க, 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 இல் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

பலத்த சவால்களுக்கு மத்தியில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், 2005 இல் மகிந்த ராஜபக்ச அரச தலைவராகத் தெரிவான பின்னர் போர் தீவிரமடைந்த நிலையில் போர் நிறுத்த உடன்படிக்கை கைவிடப்பட்ட நிலையே காணப்பட்டது.

இந்த நிலையிலிலேயே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து முழுமையாக விலகிக்கொள்வதென்ற நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் இப்போது எடுத்திருக்கின்றது.

No comments: