Monday, January 7, 2008

உலகின் கவனத்தைக் கவரும் ஹிலாரி - ஒபாமா போட்டி





அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதில் உலகின் கவனத்தை இப்போது வெகுவாக ஈர்த்திருப்பது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியும் நியூயோர்க் மாநில செனட்டருமான ஹிலாரி கிளின்டனுக்கும் கறுப்பினத்தவரான இலினோயிஸ் மாநில செனட்டர் பராக் ஒபாமாவுக்கும் இடையே மூண்டிருக்கும் போட்டியாகும். இந்த இருவரில் எவருக்கென்றாலும் ஜனநாயகக் கட்சியின் நியமனம் கிடைத்து எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் அவர் குடியரசுக்கட்சியின் வேட்பாளரைத் தோற்கடிக்கும் பட்சத்தில் அந்நிகழ்வு அமெரிக்க அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமையும் என்பது நிச்சயம்.

வெள்ளை மாளிகையில் ஏற்கெனவே 8 வருடகாலம் கணவருடன் வாழ்ந்த ஹிலாரி தேர்தலில் வெற்றிபெற்று உலகில் அதிவல்லமை கொண்ட நாட்டின் ஜனாதிபதியாக அதே மாளிகைக்குள் பிரவேசிப்பாரேயானால், அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற சாதனையைத் தனதாக்கிக் கொள்வார். கட்சியின் வேட்பாளர் நியமனம் கிடைத்தால் அதிலும் கூட, 60 வயதான ஹிலாரிக்கு ஒரு முதல் அந்தஸ்து இருக்கவே செய்யும். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதலாவது முன்னாள் முதல் பெண்மணி என்பதே அந்த அந்தஸ்தாகும். சட்டத்துறைப் பேராசிரியரான ஒபாமா (வயது 46) ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனம் கிடைத்து தேர்தலில் வெற்றிபெறுவாரேயானால், அவர் அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி என்று வரலாறுபடைப்பார்.

ஜனாதிபதி தேர்தலில் தங்கள் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு போட்டியிடுகின்றவர்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவைக் கண்டறியும் பணிகள் இப்போது ஆரம்பமாகியிருக்கின்றன. வேட்பாளராகுவதற்கான போட்டியில் குதித்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தளவு ஆதரவு இருக்கிறது என்பதைப் பொறுத்தே ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை கட்சிகள் தெரிவு செய்யும். இந்த பூர்வாங்கப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான பிரசாரங்களை, தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் குடியரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களையும் விட வெகுமுன்னதாகவே ஹிலாரியும் ஒபாமாவும் ஆரம்பித்திருந்தனர். இருதடவைகள் நியூயோர்க் மாநில செனட்டராக தெரிவான ஹிலாரி அரசியலில் அனுபவம் கொண்ட கணவரின் ஆலோசனைகளுடன் செல்வாக்குமிக்கதொரு நிலையில் தனது பிரசாரங்களை கடந்தவருட ஆரம்பத்தில் இருந்து முன்னெடுத்துவந்தார். அதேவேளை, பில் கிளின்டனுக்குப் பிறகு ஜன நாயகக் கட்சிக்குள் இருக்கக்கூடிய வல்லமைமிக்க பேச்சாளர் என்று அவதானிகளினால் வர்ணிக்கப்படுகின்ற ஒரேயொரு கறுப்பின செனட்டரான ஒபாமா வின் பிரசாரங்கள் ஆரம்பத்தில் சோர்வான நிலையில் காணப்பட்ட போதிலும், நாளடைவில் சுறுசுறுப்படைந்துவந்ததைக்காணக்கூடியதாக இருந்தது.

வேட்பாளர் நியமனத்தைப் பெற விரும்புபவர்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவைக் கண்டறியும் முதல் போட்டி அயோவா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஒபாமாவுக்கு 37.6 சதவீத ஆதரவும் (2004 ஆம் ஆண்டு தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் உப ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட) ஜோன் எட்வேர்ட்ஸுக்கு 29.8 சதவீத ஆதரவும் கிடைத்திருக்கிறது. 29.5 சதவீத ஆதரவைப் பெற்று ஹிலாரி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். குடியரசுக்கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் (மதப்பிரசாரகராக இருந்து அரசியலுக்கு வந்தவரான) மைக் ஹக்கபீக்கு 34.4 சதவீத ஆதரவும் மிட் றோம்னிக்கு 25.4 சதவீத ஆதரவும் கிடைத்தது. அமெரிக்காவின் சிறிய மாநிலங்களில் ஒன்றான அயோவாவின் ஜனத்தொகையில் 95 சதவீதமானவர்கள் வெள்ளை இனத்தவர்கள். அடுத்த போட்டி நாளை செவ்வாய்க்கிழமை நியூஹம்ஷயர் மாநிலத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தின் ஜனத்தொகையில் 96 சதவீதமானவர்கள் வெள்ளை இனத்தவர்கள். அயோவாவில் செனட்டர் ஒபாமா பெற்ற வெற்றி சர்வதேச அரசியல் அவதானிகளின் மத்தியில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அயோவா முடிவுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஒபாமாவும் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக ஹக்கபீயும் நியமனத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் பெருமளவில் இருக்கிறது என்ற தீர்மானத்துக்கு வரமுடியாது என்ற போதிலும், ஹிலாரி தனது கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதைத் தடுப்பது சாத்தியமானதல்ல என்று பொதுவில் காணப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்பது நிச்சயமானதாகும்.

நியூஹம்ஷயர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் போட்டியை பலத்த நம்பிக்கையுடன் ஒபாமா எதிர்கொள்ளக் கூடிய சூழ்நிலை தோன்றியிருக்கிறது. முன்னாள் முதல் பெண்மணி என்ற செல்வாக்குமிக்க பெயர் அங்கீகாரத்துடனும் பெரும்பண பலத்துடன் கூடிய சக்தி மிக்க பிரசாரக் கட்டமைப்புகளுடனும் இருக்கும் ஹிலாரி தனக்கு முதற் சுற்றில் ஏற்பட்ட தோல்வியை அடுத்த சுற்றில் மாற்றியமைக்க முடியுமா ? கறுப்பினத்தவர் ஒருவர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகுவதற்கு போட்டியிடக் கூடியதாக இருக்கின்ற நிலைமை 1950 களில் காணப்பட்ட இனஒதுக்கல் சர்ச்சைகளுக்குப் பிறகு அமெரிக்க அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற முன்னேற்றத்தை பிரகாசமாகப் பிரதிபலிக்கின்ற போதிலும், கறுப்பர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமா என்ற கேள்வி இயல்பாகவே கிளம்பியிருந்தது. ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யக் கூடிய அளவுக்கு அமெரிக்க வெள்ளையர்கள் மத்தியில் ஜனநாயக தாராளவாதம் செழித்து நிற்கிறதா? வெள்ளை மாளிகைக்கு தெரிவு செய்யப்படும் முதல் கறுப்பினத்தவர் என்று வரலாறு படைக்க வாய்ப்புத்தருமாறு அமெரிக்கர்களிடம் ஒபாமா வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்கவில்லை. ஆனால், 95 சதவீதமான வெள்ளையினத்தவர்களைக் கொண்ட அயோவா மாநிலத்தில் கடந்தவாரம் ஒபாமா கண்ட வெற்றியை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் கறுப்பின வேட்பாளர் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க வெள்ளையர்கள் தயாராகிவிட்டார்கள் என்று அர்த்தப்படுத்த முடியுமா?

No comments: