Tuesday, January 1, 2008

மகேஸ்வரன் படுகொலையும்- முரண்பட்ட தகவல்களும் சொல்லும் செய்தி என்ன??


புதினம் (புலிகளின் உத்தியோகப்பற்றற்ற செய்தித்தளம்)
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவருட நாளினை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டார்.



பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரி ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார்.

இதில் மகேஸ்வரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 2 பேரும், 7 பொதுமக்களும் காயமடைந்தனர். மகேஸ்வரனின் குடும்பத்தினருக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மகேஸ்வரனையும் அவரது மெய்ப்பாதுகாவலர்களையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த பொதுமக்களை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அங்கு அவர்கள் அனுமதிக்கப்படாததால் அவர்களையும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனைக்கு மகேஸ்வரன் கொண்டு செல்லப்படும் போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சில நிமிடங்களில் சுமார் முற்பகல் 10.15 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மகேஸ்வரன் உயிரிழந்ததை கொழும்பு மருத்துவமனைப் பேச்சாளர் சொய்சா உறுதிப்படுத்தினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

மகேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையிலேயே இங்கு கொண்டு வரப்பட்டார். அவரின் நெஞ்சுப்பகுதியில் பல குண்டுகள் துளைத்திருந்தன. அவரது தலைப்பகுதியையும் குண்டுகள் துளைத்திருந்தன. அவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் அது பலனளிக்காது அவர் உயிரிழந்தார் என்றார்.

மகேஸ்வரன் உயிரிழந்த சிறிது நேரத்தில் காயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலரான காவல்துறையைச் சேர்ந்தவரும் உயிரிழந்ததாக மருத்துவமனை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்களில் இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாகக் கண்டித்திருக்கின்றது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில்,

மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் குறைத்துக் கொண்டது அரசாங்கம். அதன் தொடர்ச்சியாகவே மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்.

நாடாளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்ததன் விளைவாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். கொலைச் சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அரசாங்கம்தான் அவரைப் படுகொலை செய்யும் உத்தரவை வழங்கியுள்ளது என்றார்.



சம்பவம் இடம்பெற்ற போது அங்கு வழிபாட்டில் நின்ற பொதுமக்கள் அல்லோலகல்லோலப்பட்டு சிதறி ஓடினர். மகேஸ்வரன் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்திய நபரை நோக்கி அவரது மெய்ப்பாதுகாவலர்களும் துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர் என்று கூறப்படுகின்றது. தற்போது பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை "சக்தி" தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "மின்னல்" நிகழ்ச்சயில் கலந்துகொண்ட மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் படுகொலைகளுக்கு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பியே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிற்கான பிரசாரத்தின் போதும் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் பிரபல வரத்தகரான இவர், யாழ்ப்பாணம் காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்டவர். இவருக்கு வயது 42.

இலங்கையில் பெயர் குறிப்பிடத்தக்க வர்த்தகர்களுள் மகேஸ்வரனும் அடங்குவார். அவருக்குச் சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுட்டு வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு இருந்தபோது யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி இந்து கலாச்சார அமைச்சர் பதவியையும் மகேஸ்வரன் வகித்திருந்தார்.

இவரது நெருங்கிய சகாவான பேபியன் எனப்படும் முத்துக்குமார் சிவபாலன் கடந்த வருடம் டிசம்வர் மாதம் 21 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் நவம்பரில் கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மகேஸ்வரன், பாதிக்கப்பட்ட மக்களை திரட்டிக் கொண்டு பூசா தடுப்பு முகாமுக்கு சென்றதுடன் அரச தலைவரின் அலுவலகத்தை நோக்கி பேரணியாகவும் சென்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மகேஸ்வரனை நோக்கி துப்பாக்கிச் சூட்டினை நடத்திய நபரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருபக்பதாக தகவல்கள் தெரிவிக்கன்றன. எனினும் இதனை மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதிப்படுத்த மறுக்கின்றனர்.

மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இச்சம்பவத்தின் சூத்திரதாரி படுகாயமடைந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

விழிப்பு (அரச மற்றும் கருணா அணிசார் செய்தித்தளம்)

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் இந்து கலாசார அமைச்சரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தியாகராஜா மகேஸ்வரன் இன்று காலை கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். புது வருடப் பிறப்பை முன்னிட்டு இன்று காலை 9.15 மணியளவில் கொழும்பு-13, கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த போதே அவர் மீது இனம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி;ச் சூட்டுச் சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகாயமடைந்ததோடு, அவரது மெய்ப்பாதுகாவலர்களி;ல் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.மேலும் சம்பவத்தின் போது கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் ஆறு பேரும் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்;கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மகேஸ்வரன் மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும், மருத்துவர்களின் தீவிர போராட்டம் பலனின்றிப்போய் முற்பகல் 10.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
தியாகராஜா மகேஸ்வரன் கடந்த 2001ம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.அப்போதைய தேர்தலில் அதிகாரத்துக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இந்துக் கலாசார அமைச்சராகவும் பதவி வகித்தார். அவர் இந்துக் கலாசார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் அன்றைய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிய நெருங்கிய நட்பின் காரணமாக பல சந்தர்ப்பங்களில் அவர் நாடாளுமன்றத்தின் உள்ளேயே தான் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டிருந்தார். தனது கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவையே பல தடவைகள் பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.

2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது புலிகள் அமைப்பினர் எதிர்ப்புக் காட்டியதன் காரணமாக யாழ். மாவட்டத்தை விட்டு கொழும்பில் போட்டியிட முன்வந்தார். எனினும் ஏற்கெனவே கொழும்பு தமிழர்களின் வாக்குப் பலத்தை தன் வசம் வைத்திருந்த மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் மகேஸ்வரனுக்கும் இடையில் பகிரங்க மோதல் வலுப்பெற்றது. அதன் காரணமாக தேர்தல் காலத்தில் மனோ கணேசன் எம்.பி.யின் கோட்;டை என்று வர்ணிக்கப்படும் கொட்டாஞ்சேனையின் ஜிந்துப்பிட்டிப் பகுதியில் வைத்து மகேஸ்வரன் மீது கொலை முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அச்சம்பவத்தில் கழுத்துப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்து, ஒருவாறு தப்பிப் பிழைத்தார். மேலக மக்கள் முன்னணியே தம்மைக் கொலை செய்ய முயற்சித்தாக மகேஸ்வரன் குற்றம் சாட்டியிருந்த போதும், அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் அதனை மறுத்திருந்ததுடன், மகேஸ்வரனைக் கண்டபடி தாக்கி அறிக்கையும் விட்டிருந்தார். அது முதலே அவர்கள் இருவரும் அரசியலில் எதிர்த்துருவங்களாகவே விளங்கியிருந்தனர். இம்முறை அவர் படுகொலை செய்யப்படக் காரணமாக அமைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற கோவிலும் கொட்டாஞ்சேனைப் பகுதியிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கட்சி தாவி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பி;னர் மகேஸ்வரனும் அரசாங்கத் தரப்புக்குத் தாவப் போவதாக பல சந்தர்ப்பங்களில் பலமான ஊகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.கடந்த வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போதும் கூட அவர் அரசாங்கத் தரப்புக்கு மாறப் போவதாக பலமான கதை அடிபட்டது. அதே போல இந்த ஜனவரியில் அரசாங்கத் தரப்புக்கு கட்சி மாறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மகேஸ்வரனும் உள்ளடங்கியி;ருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்திருந்தது. ஜனாதிபதிக்கும் மகேஸ்வரனுக்கும் இடையில் நிலவும் நெருங்கிய நட்பின் அடிப்படையிலேயே அவர் கட்சி தாவ தீர்மானித்திருந்ததாகவும் தெரிவி;க்கப்பட்டது. இவ்வாறான சம்பவங்களின் பின்புலத்திலேயே அவர் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாக மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈபிடிபி செய்தித்தளம்

இன்று மலர்ந்திருக்கும் புத்தாண்டு, நாட்டில் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அதற்காக இன மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களும் வழிபாடுகள் செய்துகொண்டிருக்கையில் நண்பர் தி.மகேஸ்வரன் அவர்கள் சுட்டுக் கொலை செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரது சில கருத்துக்கள் ஏற்புடையதற்றதாக இருந்திருக்கலாம், ஆனால் அவர் விரும்பிய கருத்தைக் கூறுகின்ற உரிமை அவருக்கு உண்டு. அத்தகைய உரிமையை மதிக்கின்றோம். கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்வதை நாம் ஆயுதப் போராட்ட காலத்திலிருந்து ஒரு கொள்கையாகவே பின்பற்றி வருகின்றோம். இதையே நீண்ட காலமாக வலியுறுத்தியும் வருகின்றோம்.

துரதிர்ஷ்டவசமாக கருத்துக்களை கருவி கொண்டு அழிக்கின்ற சூழல் தொடர்ந்து கொண்டே வருகின்றது. அதற்கு இன்று நண்பர் மகேஸ்வரனும் பலியாகியிருக்கின்றார். அரசை விமர்சிப்பவர்களையும், தமது இழுப்புக்களுக்கு இழுபட மறுப்பவர்களையும் புலிகள் கொலை செய்துவிட்டு பழியை எதிர் தரப்புகளின் மீது விழச் செய்யும் செயலில் ஈடுபட்டுள்ளனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் விழுத்தும் தந்திரமாகவே புலிகள் தொடர்ந்தும் இவ்வாறு கொலைகளைச் செய்து வருகின்றனர்.

ஏனெனின் ஏற்கனவே மகேஸ்வரன் அவர்களை தேர்தலில் போட்டியிட வேண்டாமென்று புலிகள் தடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியபோதும், கொழும்பில் தேர்தலில் போட்டியிட்டார். அவ்வேளையில் புலிகள் அவரை சுட்டனர். அச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் மகேஸ்வரன் உயிர் தப்பினார்.

ஈ.பி.டி.பி யாகிய நாம் அனைத்துக் கொலைகளையும் கண்டிக்கின்றோம். அனைத்துக் கொலைகளும் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் அச்சுறுத்தலற்று இயல்புச் சூழலில் வாழவேண்டும். கொலைகளுக்கூடாக கருத்துக்களை அழிக்கவோ தமிழ் மக்களுக்கு தீர்வையோ பெற்றுக் கொடுக்க முடியாது. கடந்த கால வரலாறும் இதையே உணர்த்தியுள்ளது.
அமரர் மகேஸ்வரனின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தாருடன் நாமும் எமது ஆழ்ந்த துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.


ஊடகச் செயலாளர்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி
01.01.2008

-------------------------------------------------------------------------------------------------------

தமிழர் உரிமைப்போராட்டம்- தனது பிரிவினை இலக்கிலிருந்தும் தனது தவறான பாதையிலிருந்தும் விடுபட்டு ஒரு தெளிவானதும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான ஒரு பாதையை நோக்கி மீளாதவரை இத்தகைய படுகொலைக்கலாசாரம் முடிவுக்கு வரப்போவதில்லை.

No comments: