Tuesday, January 8, 2008

வன்னிப் பெருஞ்சமர் தொடங்கும் நிலையில் புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றுக் கடமை என்ன?: முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம்

வன்னிப் பெருஞ்சமர் தொடங்கும் நிலையில் புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றுக் கடமை என்ன?: முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம்
[வியாழக்கிழமை, 03 சனவரி 2008, 04:26 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்]
வன்னிப் பெருஞ்சமர் தொடங்கும் நிலையில் புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றுக் கடமை என்ன? என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம் அளித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் 29.12.07 ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணல்:

கேள்வி: விடுதலைப் புலிகள் ஏடு என்ன நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது? அது தனது பணியை எந்த வகையில் முன்னெடுத்துச் செல்கிறது?

பதில்: விடுதலைப் புலிகள் ஏடு எங்களின் தேசியத் தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. எங்களின் ஏடு தொடங்கப்பட்ட போது, எங்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய கருத்துக்களை அரசியல் ரீதியாகவோ அல்லது இராணுவ ரீதியாகவோ அதன் உண்மை நிலவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கம் அன்று இருந்தது.

ஏனைய ஏடுகள் பெரும்பாலும் எங்களின் போராட்டச் செய்திகளை தெளிவாகப் போடாத காலகட்டம் அது. அந்தக்கால கட்டத்தில்தான் எங்கள் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வையும், எங்கள் போராட்டத்தின் தன்மைகளையும் எடுத்தியம்ப வேண்டும் என்கிற நோக்கில் தலைவர் அவர்களால் விடுதலைப் புலிகள் ஏடு தொடங்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் ஏடு தமிழ்நாட்டில் வைத்தே தொடங்கப்பட்டது. அங்கிருந்துதான் சில இதழ்கள் வெளிவந்தன. பின்னர் 1990 ஆம் ஆண்டிலிருந்து எங்களின் தாயக நிலப்பரப்பிலிருந்துதான் இன்று வரை வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

எங்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தில் இங்கு எத்தனையோ அற்புதமான வீரங்கள், தியாகங்கள் வெளிப்படுத்தப்படுத்திய படி இருக்கின்றன.

எங்களின் ஈழத் தமிழ் இனத்திற்கு இது முன் அனுபவம் இல்லாத ஒரு விடயம்.

போராட்டத்தின் தொடக்க கட்டங்களில் வீர- தீரமாக, தியாகங்கள் நிறைந்த படி, ஏன் அழிவுகளையும் சந்தித்த படி போராட்டத்தை முன்னெடுக்க முடியுமா? என்கிற மயக்கமெல்லாம் எங்களின் மக்களிடம் இருந்தது.

ஆனால், அந்த மயக்கங்களை எல்லாம் தலைவர் அவர்கள் தன்னுடைய தெளிவான, தீர்க்கதரிசனமான நடவடிக்கைகள் மூலமாகவும் படிப்படியான இராணுவ கட்டமைப்புக்கள் மூலமாகவும் வெற்றிகண்டு, இன்று எங்களின் போராளிகளை ஒரு பெரிய உன்னதமான மரபுப் போர் ஆற்றல் வாய்ந்த போர் வீரர்களாக வளர்த்தெடுத்து விட்டுள்ளார்.

களமுனை வீரமும், தியாகமும் நிறைந்ததுடன் அழிவுகளும் சேர்ந்ததுதான். இத்தகைய களமுனை யதார்த்தம் ஒன்று போர் இலக்கியமாக படைக்கப்பட வேண்டும் என்கின்ற அவா தலைவரிடம் இருந்தது. அத்தகைய ஓரு போர் இலக்கியம் படைக்கும் பணியையும் விடுதலைப் புலிகள் செய்ய வேண்டும் என்றும் தொடக்க கட்டத்தில் தலைவர் எங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கு அமைவாக இன்றுவரை எங்களின் அரசியல்- இராணுவ முன்னெடுப்புக்கள், அவை தொடர்பான விளக்கங்கள் என்பனவற்றுடன் போர் இலக்கியம் என்கிற விடயமும் உள்ளடக்கப்பட்டதாக, எங்களின் ஒட்டுமொத்தமான தமிழீழ மக்களின் ஒரு விடுதலைக் குரலாக இன்றுவரை விடுதலைப் புலிகள் ஏடு வெளிவந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: விடுதலைப் புலிகள் ஏடு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியோடு போட்டியிட்டு எந்த வகையில் தனக்குள் இணைத்துக் கொண்டு செல்கிறது?

பதில்: விடுதலைப் புலிகள் பத்திரிகையைப் பொறுத்தவரையில் போட்டி என்பதற்கு இடமில்லை. அது தனித்துவமான ஒரு ஏடு.

2001 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்கான போர் நிறுத்த உடன்படிக்கை வரும்வரை "லெற்றர் பிறஸ்" என்று சொல்லப்படுகின்ற எழுத்து வடிவு என்கின்ற பழைமையான அச்சுக்கலை மூலமாகத் தான் எங்களின் ஏட்டை வெளிக்கொணர்ந்தோம்.

மேற்குலக நாடுகளில் வசிப்பவர்களுக்கு அது கண்களைவிட்டு அகன்ற விடயமாகக்கூட இருக்கும். இப்பொழுதும் பழைய இதழ்களைப் பார்த்தால் அவற்றில் ஒரு அச்சுக்கலை நேர்த்தி ஒன்று கடைப்பிடிக்கப்பட்டிருப்பது தெரியும். அதன் பின்னர் எங்களின் மண்ணில் ஏற்பட்ட சமாதான சூழலைப் பயன்படுத்தி நாங்கள் தொழில்நுட்பக் கருவிகளையும் அதற்குள் இணைத்து புதிய நவீன ரகமான அச்சு இயந்திரங்களையும் அதற்குள் உள்வாங்கி விடுதலைப் புலிகள் ஏட்டை வெளியிட்டு வருகிறோம். எங்களின் ஏடு இணையத்தளத்திலும் வெளியிடப்படுகிறது.

தற்போது போர் நெருக்கடி ஏற்பட்டிருகிறது. இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் நாங்கள் நின்று நிலைத்து விடுதலைப் புலிகள் ஏட்டை இன்று வரைக்கும் நவீன அச்சுக்கலையுடன் இணைத்தே வெளியிட்டு வருகிறோம். ஆனால், மிக நீண்டகால நெருக்கடிகள் என வரும்போது நாங்கள் புதிய அச்சுக்கலை வடிவமைப்பை விட்டு பழைய அச்சுக்கலையை நாட வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் எது எப்படியிருந்தாலும் தொடர்ச்சியாக அந்த ஏட்டை வெளியிடுவதில் உறுதியாக இருக்கிறோம்.

கேள்வி: இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கிழக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதனைப் போன்று வடக்கில் குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது. எஞ்சியிருக்கும் வன்னிப்பெருநிலப்பரப்பை மிக விரைவில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் போவதாக அரசாங்கத் தரப்பு கூறுகிறது. சிறிலங்கா இராணுவத்தளபதி பகிரங்கமாகவே அடுத்த வருட நடுப்பகுதிக்குள் வன்னியை தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து புலிகளை முற்றாக ஒழித்துவிடுவோம் என சூளுரைத்திருக்கிறார். இதனை நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?

பதில்: கிழக்கில் அவர்கள் நில ஆக்கிரமிப்பில் வெற்றி பெற்றது, யாழ். குடாநாட்டை கணிசமான காலம் கையகப்படுத்தி வைத்திருப்பது என்கிற அடிப்படையில் அவர்கள் ஒரு வெற்றி பெருமித அறிக்கையை விட்டவண்ணம்தான் உள்ளனர்.

வரலாற்றை சற்றுப் பின்நோக்கித் திரும்பிப் பார்த்தால், 1979 ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய வார்த்தை வீரங்களை சிங்களத் தலைவர்களிடமிருந்து அல்லது தளபதிகளிடமிருந்து நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். அன்றிலிருந்து இன்றுவரை 20 வருடங்களை தாண்டிய அல்லது எட்டியபடியும் இன்றும் எங்களின் போராட்டம் வளர்ந்தபடிதான் இருக்கின்றது.

சிங்கள அரசியல்வாதிகளும் சரி, சிங்களத் தளபதிகளும் சரி, மேல்நாட்டு இராணுவ விற்பன்னர்களும் சரி எங்களின் விடுதலைப் போராட்டத்தை இராணுவ பரிமாணத்துடன் அலசி ஆராயும் போது ஒரு தவறு இழைக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது அவர்கள் ஒரு மரபுவழி அரச இராணுவத்தை எங்களுடன் ஒப்பிட்டுக் கதைப்பது போன்றே தெரிகிறது.

மரபு வழி அரச இராணுவம் ஒன்றைப் பொறுத்தவரை அந்த இராணுவத்திற்கு போரிடும் ஆற்றல், அதனுடைய தாக்குப் பிடிக்கும் திறன் என்பவை வேறுபட்டவை. அது அரசுகளுக்கிடையிலானது. அரசினுடைய பொருண்மிய அல்லது அரசினுடைய கட்சி அரசியல் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் உள்ளடங்கியிருப்பதால் ஒரு அரசினுடைய மரபு வழி இராணுவம் மிக நீண்டகாலமாகப் போரை முன்னெடுக்க முடியாது என்பது ஒரு யதார்த்தமாக இருக்கிறது.

இதற்கு சிறந்த உதாரணங்களாக முதலாம் உலக மகா யுத்தம், இரண்டாம் உலக மகா யுத்தங்களை நாங்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த உலக மகாயுத்தங்கள் என்னதான் மிகப் பெரிய, பிரமாண்டமான, இராணுவப் பரிமாணத்துடன் நடைபெற்றாலும் கூட, ஒரு குறிக்கப்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கே வெற்றி- தோல்வி என்பது நிர்ணயிக்கப்பட்டன.

ஆனால், விடுதலைப் போராட்டம் என்பது அப்படியல்ல. விடுதலைப் போராட்டம் என்பது கெரில்லா யுத்திகளை அடித்தளமாகக் கொண்டு மெது மெதுவாக வளர்ந்து அந்த போராட்டத்தினது வளர்ச்சியில் ஒரு அரை மரபுவழி பின்னர் முழு மரபுவழி படையாக அது மாற்றம் கண்டு வரும்.

அதேவேளை, ஒரு விடுதலை இயக்கம் தன்னுடைய தாயக நிலப்பரப்பில் பல்வேறு இராணுவப் பரிமாணங்களையுடைய போர்க்களத்தையும் வைத்திருக்கும். உதாரணத்திற்கு ஒரு விடுதலை இயக்கம் மரபுவழிப் போர் புரியும் தளங்களையும் வைத்திருக்கும். அதேவேளை கெரில்லாப் பாணியில் தாக்குதல்களை நடத்துகின்ற தளங்களையும் வைத்திருக்கும்.

இப்படியாக பல்வேறு விதமான இராணுவ பரிமாணங்களுடன் ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்தும் இயக்கத்தின் தாயக நிலப்பகுதி விளங்கும்.

இதனை தமிழீழத்திற்கும் ஒப்பிட்டு பார்க்கலாம். தமிழீழத்திலும் ஒரு மரபு வழிச் சமர் நடைபெறுகின்ற தளப் பிராந்தியமும் இருக்கின்றது. கெரில்லாப் போர் நடவடிக்கைகள் நடைபெறுகின்ற தளப் பிராந்தியமும் இருக்கின்றது. வன்னி மாநிலம் என்பது எங்களின் முழுமையான கட்டுப்பாட்டை உள்ளடக்கி ஒரு மரபுவழிச் சமர் அரங்காக காட்சியளிக்கிறது.

ஒரு புறத்தில் வட போர் அரங்கு என்ற பெயரில் நாகர்கோவில், கிளாலி, முகமாலை என்கிற சமர் அரங்கைக் கொண்டிருக்க இன்னொரு புறத்தில் மன்னார், வவுனியா, மணலாறு என்கிற சமர் அரங்குகளைக் கொண்டதாக நீண்ட பெரும் சமர் அரங்கொன்று இங்கே காணப்படுகின்றது.

ஒட்டு மொத்தத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பில் எங்களின் இயக்கம் மரபுவழிச் சமரைத்தான் இன்றுவரை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், கிழக்கையும், யாழ்ப்பாணத்தையும் இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னர் அது கெரில்லாப் போர் வடிவத்தில் நடைபெறுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.

கிழக்கு மாகாணத்தில் எங்களின் கட்டுப்பாட்டிற்குள் சில பகுதிகள் இருந்த போதிலும் எங்களின் சில இராணுவ இயலுமைகள் அல்லது எங்களின் இராணுவ யதார்த்தம் என்பது பின்தளம்.

உதாரணத்திற்கு மரபுப் போர்ப் படையொன்று ஒரு பிரதேசத்தில் நிலைகொண்டிருக்க வேண்டுமானால் நிச்சயமாக அதற்கு பலமான பின்தளமொன்று இருக்க வேண்டும். அந்தப் பின்தளத்தினுடைய இருப்புத்தான் ஓர் மரபு போர் சமர் அரங்கை நீட்டி நிலங்களை மீட்கவோ அல்லது நிலங்களை விடுவிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தும்.

ஆனால், தற்போதைய நிலையின்படி கிழக்கு மாகாணத்தில் சில கட்டுப்பாட்டுப் பகுதிகளை நாங்கள் வைத்திருந்தாலும், அங்கே நாங்கள் ஒரு அளவிற்கான வரையறுக்கப்பட்ட மரபுவழிச் சமரையே நடத்த முடியும். அதேவேளை கெரில்லாப் போரை ஒட்டு-மொத்தமாக எல்லா இடங்களிலும் நடத்த முடியும்.

இத்தகைய ஒரு இராணுவப் பின்புலத்தில் அல்லது இராணுவ உண்மை நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது தமிழீழத்தின் இராணுவ யதார்த்தத்தை பார்க்கலாம். அதேவேளை சிங்கள அரசு அல்லது சிங்களத் தளபதிகள் வெளியிடுகின்ற ஒட்டுமொத்த வெற்றிச் செய்திகளின் இராணுவ உண்மைத் தன்மைகளைப் பற்றியும் நாங்கள் ஆய்வு செய்ய முடியும்.

சிங்களத் தளபதிகளும் சரி, சிங்கள அரசும் சரி ஒட்டுமொத்த மரபுவழிப்படை அல்லது மரபுவழி முறையிலே சமர் நடைபெறுகின்றது என்ற ஒரு கண்ணோட்டத்திலேயே அவர்கள் தமது கருத்துக்களைக் கூறுகின்றனர்.

அதேவேளை, இங்கே நடக்கின்ற சண்டைகளில் புலிகள் இயக்கத்தை வெல்ல முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு பேச்சுவார்த்தைக் கட்டங்களின் போதும் ஒவ்வொரு அரச தலைவர்களும் தளபதிகளும் இதே கருத்தைத்தான் சொல்லியிருக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், ஒவ்வொரு இராணுவத்தளபதியும் பதவியிலிருந்து ஒய்வு பெற்றுச் சென்ற பின்னர் இவ்விதமான கருத்துக்களைத்தான் அதாவது புலிகளை இராணுவ ரீதியில் ஒடுக்க முடியாது என்ற உண்மையைத்தான் அவர்கள் சொல்லிவிட்டுச் செல்கின்றனர்.

பதவியிலிருக்கும்போது அரசியல் காரணங்களுக்காக அல்லது பதவி நிலைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இவ்விதமாகப் பொய் கூறுவது வழமைதான். அதேபோன்றுதான் நாங்கள் இப்போதும் பார்க்க முடியும்.

கிழக்கு மாகாணத்தை அவர்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர். அது உண்மை தான்.

யாழ். குடாநாடு நீண்டகாலமாக அவர்களின் கட்டுப்பாட்டிலிருக்கின்றது என்பதும் உண்மைதான்.

இன்று வன்னிப் போர் அரங்கில் மிகப்பெரிய மரபுவழிச் சமர் அரங்கொன்று திறக்கப்பட்டிருக்கிறது. இந்த சமர் அரங்கில் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்து போர் தொடங்கி ஒரு வருட காலத்திற்கும் மேலாகி விட்டது. ஆனால், சிங்களப் படைகளினால் வன்னிப் பெருநிலப்பரப்பில் இன்னமும் நில அபகரிப்பை செய்ய முடியாத நிலைதான் இருக்கின்றது.

தொடர்ச்சியான எத்தனையோ வலிந்த தாக்குதல்களை மேற்குறிப்பிட்ட மாதிரி வன்னியின் சகல முனைகளிலும் செய்து பார்த்துத் தான் இருக்கின்றனர். அனைத்து நடவடிக்கைகளிலும் அவர்கள் படுதோல்வியைத்தான் கண்டிருக்கின்றனர்.

இனிமேலும் தொடர இருக்கின்ற வன்னிப் பெருஞ்சமர் என்பது சிங்களம் எதிர்வு கூறுவது போல் அல்லது சிங்களத் தலைவர்கள் கர்ச்சிப்பது போல எதிர்வரும் ஆண்டு என்பது போர் ஆண்டாகத் தான் இருக்கப் போகின்றது.

அந்தப் போர் ஆண்டில் அவர்கள் மிகப்பெரிய வலிந்த தாக்குதல்களை வன்னிப்பெரு நிலப்பரபின் மீது தொடுக்கலாம். அது எல்லோருக்கும் தெரிந்த ஊகம் தான்.

அவ்விதமாக அவர்கள் பெரிய சமரைத் தொடுக்கும் போதுதான் வன்னிக் களத்தின் உண்மை நிலையை அவர்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். ஏற்கனவே பாரிய சமரொன்றை வன்னிப் பெருநிலப்பரபில் நடத்தி படுதோல்வி கண்டிருக்கின்றனர். அது அவர்களுக்கே தெரியும்.

வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட அந்த "ஜெயசிக்குறு" சண்டை தொடங்கும் போதும் இதே மாதிரியான கர்ச்சிப்புகளைத்தான் முன்னாள் இராணுவ அமைச்சராக இருந்த அனுருத்த ரத்வத்தையும் வெளியிட்டிருந்தார்.

வவுனியாவிலிருந்து நகர்ந்த "ஜெயசிக்குறு" படையணிகள் எங்கள் வன்னி பெரு நிலப்பரப்பின் மையம் என்று சொல்லப்படுகின்ற மாங்குளம் வரை கூட வந்திருந்தன என்பது உண்மைதான்.

பெருமெடுப்பில் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு, சிங்களப் படைகள் அகலக்கால் வைக்கும் போது அத்தகைய இராணுவ புறச்சூழலை எங்களது இயக்கம் மிகத்திறமையாகக் கையாண்டிருக்கின்றது. அதனை எங்களின் மாவீரர் நாள் அறிக்கையிலும் தலைவர் அவர்கள் வெகு சிறப்பாக குறிப்பிட்டிருந்தார்.

சிங்களம் தன்னுடைய படை நடவடிக்கை மூலமாக அகலக் கால் வைக்கும் போது அது பேரழிவுகளைச் சந்தித்திருக்கின்றது என்பதுதான் உண்மை. "ஜெயசிக்குறு" படை நடவடிக்கை ஒன்றரை வருடங்களாக மிகத் தீவிரமாக நடந்த ஒரு நடவடிக்கை.

இறுதியில் "ஜெயசிக்குறு" சண்டைகள் மூலமாக விழுங்கிய அந்த நிலங்களை மூன்று நாள் சமரில் எங்களின் இயக்கம் கைப்பற்றியிருந்ததுடன் ஒரு இராணுவ நிலையிலும் சிங்களப் படைகளை விட மேல்நிலைக்கு எங்களின் இயக்கம் வந்தது என்பது வரலாற்று உண்மை.

அந்த வரலாற்று வெற்றியின் விளைவாக எங்களுக்கு முன்னால் உள்ள ஆவணமாக சிங்களப்படைகள், சிங்கள அரசுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ளது.

"ஜெயசிக்குறு" இராணுவக் களத்தில் நாங்கள் பெற்ற அபரிதமான வெற்றியின் ஒரு அரசியல் வடிவமாகத்தான் அந்த போர்நிறுத்த ஒப்பந்தம் இருக்கின்றது.

சிங்களத்தின் மிரட்டல் அல்லது அவர்களின் ஆசை வன்னிப் பெருநிலப்பரப்பைக் கைப்பற்றி, புலிகள் இயக்கத்தை ஒட்டு மொத்தமாக ஒழித்து, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி, இலங்கைத் தீவு முழுவதுமே சிங்களப் பௌத்த பூமியாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும். அதற்கான பேரினவாதக் கனவின் வெளிப்பாடாகத்தான் அவர்கள் அந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே அல்லாமல் உண்மை, யதார்த்தம் என்பது இங்கே வேறாகத்தான் இருக்கின்றது.

நாங்கள் ஒரு விடுதலை இயக்கம். இற்றைக்கு 25-30 வருடங்களாக எங்களின் இயக்கத்தை இராணுவ ரீதியில் தலைவர் அவர்கள் மிகத் திறமையான முறையில் கட்டி அமைத்துக்கொண்டு வருகிறார். நாங்கள் நிலங்களை மீட்டு வைத்திருந்த நேரத்திலும் சரி அல்லது நாங்கள் வைத்திருந்த நிலங்கள் சிலவற்றை இழந்த போதும் சரி எங்களுடைய பலம் எங்கள் படைக் கட்டமைப்பினுடைய அந்த வலு அன்றிலிருந்து இன்றுவரை வளர்ந்து செல்கிறது என்றுதான் கூறவேண்டும்.

நாங்கள் யாழ். குடாநாட்டிலிருந்து வெளியேறி வன்னிப் பெருநிலப்பரப்பை எங்களின் பிரதான தளமாகக் கொண்ட பின்னர்தான் எங்களின் இயக்கத்தில் எத்தனையோ புதிய படையணிகள் தோற்றம் பெற்றன. அதில் குறிப்பாக வான் படையைச் சொல்லலாம். இந்த புதிய படையணிகள் வன்னிக் களத்தில் ஆற்றிய பல்வேறு இராணுவச் சாதனைகள் சிங்களப் படைகளுக்கு, சிங்கள அரசிற்கு பெரிய நெருக்கடிகளைக் கொடுத்தன என்பது தெரியும்.

புலிகள் இயக்கத்தின் இராணுவ ஆற்றலை சர்வதேச வல்லுநர்களே புகழ்ந்து போற்றுமளவிற்கு வன்னியில் அனைத்துமே சிறப்பாக இடம்பெற்றன.

எனவே நிலங்களை இழப்பது என்பது எங்களின் இயக்கத்தைப் பொறுத்தளவில் போராட்டத்தின் தோல்வியாக அல்லது சிங்களப் படைகள் சொல்வது போல ஒரு போராட்டத்தின் தோல்வியாக புலிகளின் அழிவாகக் கொள்ள முடியாது. எங்களின் விடுதலை இயக்கம் இப்போதும் இராணுவ ரீதியில் பலம்பெற்ற நிலையில்தான் இருக்கின்றது. எங்களின் பேராட்டம் உண்மையில் இன்று ஒரு உயர்நிலைக்குச் சென்று விட்டது.

எனவே இனி வருங்காலத்தில் நடக்கவிருக்கின்ற தனித்த ஒரு சமரே திடீரென மிகப்பெரிய வெற்றியை அதுவும் இராணுவ வரலாற்றைப் பொறுத்தவரை மிகப்பெரிய இராணுவப் பிரளயத்தையே ஏற்படுத்தக்கூடிய அளவிற்குத் தான் வெற்றிகள் அமையும். அந்தளவிற்குத்தான் இப்பொழுது இராணுவப் பரிமாணம் இருக்கின்றது.

உண்மையில் உலக விடுதலைப் போராட்டங்களின் இறுதி வெற்றி என்பது இவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது என்பது உலக விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். விடுதலைப் போராட்டத்தில் மெது மெதுவாக அப்படியே படிப்படியாக முன்னேறிச் சென்று விடுதலையைப் பெற்ற நாடுகள் என்பது குறைவாகத்தான் இருக்கும். அந்த விடுதலைப் பேராட்டங்கள் அழிந்து கொண்டிருக்கின்றது அல்லது செயலிழந்து கொண்டிருக்கின்றது அல்லது செல்லாக்காசாகிக் கொண்டிருக்கின்றது என்ற வர்ணனைகள் உலகில் வந்து கொண்டிருக்கின்ற நேரங்களில்தான் பல விடுதலைப் போராட்டங்கள் அதன் முழுமையான பிரதான வெற்றியை அடைந்த வரலாற்றை நாங்கள் பார்க்கலாம்.

இதற்கு வியட்நாமை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். அல்லது கடைசியாக விடுதலையடைந்த எரித்திரிய விடுதலைப் போராட்டத்தைச் சொல்லலாம்.

எரித்திரிய விடுதலைப் போராட்டத்திலும் அவ்வாறுதான் தலைநகர் அஸ்மரா உட்பட எரித்திரிய பிரதேசங்கள் எத்தியோப்பியப் படைகளால் விழுங்கப்பட்டுக் கொண்டிருந்தன. எரித்திரிய விடுதலைப் போராட்டத்தின் சாவு என்பது எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற நேரத்தில் உலக ஊடகங்கள் கூட எரித்திரிய விடுதலைப் போராட்டத்தின் வெற்றி பற்றிய நம்பிக்கையெல்லாம் இழந்து அது பற்றிய செய்திகளைக்கூட ஒலி- ஒளி பரப்பாத சூழ்நிலையில், திடீரென ஒரு நாள் அங்கே பெரும் சமர் ஒன்று வெடித்து மிகக்குறுகிய காலத்தில் எரித்திரிய சேனை தங்களது தாயகத்தை மீட்டெடுத்து ஒரு தனிநாடு அமைத்தது என்பது ஒரு வரலாற்று உண்மை.

இது உண்மையில் விடுதலைப் போராட்டங்கள் எல்லாவற்றிற்கும் பொருந்தும். அது எங்களின் இயக்கத்திற்கும் பொருந்தும். சிங்கள அரசு அல்லது சிங்கள இராணுவத் தளபதிகள் கூறுவது போல் உண்மையில் அவ்வாறான இராணுவ நிலவரம் இங்கு இல்லை.

புத்தாண்டில் சிங்கள அரசு தொடுக்க இருக்கும் பெரும் போரின் முடிவு என்பது உண்மையில் சிங்களத்திற்கு அதன் இராணுவ பலம் என்ன அல்லது புலிகளைத் தாங்கள் ஒழிக்கலாமா என்கின்ற செய்தியை நிச்சயமாக வன்னிக் களத்தில் வைத்துச் சொல்வதாகவே இருக்கும்.

கேள்வி: மன்னார், வவுனியாப் பகுதிகளில் ஒரு பாரிய களமுனைகளை திறக்க இராணுவத்தினர் முயற்சி மேற்கொள்கின்றனர். அதேவேளை மணலாறு மற்றும் முகமாலையிலும் பாரிய வலிந்த தாக்குதல்களை இராணுவத்தினர் நடத்தி வருகின்றனர். நீங்கள் கூறியதன் அடிப்படையில் இவற்றை ஒரு பாரிய தாக்குதல் முன்னெடுப்பாகக் கருத முடியாதா?

பதில்: இந்த சமரின் இராணுவ பரிமாணத்தைப் பார்க்கும் இடத்து இதனைப் மிகப்பெரிய சமர் எனக்கொள்ள முடியாது. ஆனால் மிகப்பெரிய சமர் ஒன்றுக்கு முன்னரான ஒரு ஒத்திகைத் தாக்குதல்களாகவே இவை உள்ளன. ஆனால் இந்த தாக்குதல்களும் ஒரு வலிந்த தாக்குதல்கள்தான். சரதாரணமாக அல்லாது டாங்கிகளின் உதவியுடனும், வானூர்திகளின் உதவியுடனும், மோட்டார் பலங்களையும் பயன்படுத்தி, கனரக ஆயுதங்களின் துணையுடன் இந்த ஒத்திகைத் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

ஒரு பெரும் சமர் நடக்காமல் சாதாரணமான மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று நாங்கள் சொல்வதில் ஒரு ஒப்பீடு ஒன்று உள்ளது.

அதாவது மன்னார் சமர்முனையிலோ அல்லது வடபோர் அரங்கிலோ சிங்களம் நடத்துகின்ற வலிந்த தாக்குதல் என்பது உண்மையில் பிரமாண்டமானதுதான். அது சாதாரணமானது அல்ல.

ஆனால், நாங்கள் எதிர்பார்க்கின்ற அல்லது உலகம் எதிர்பார்க்கின்ற "ஜெயசிக்குறு" போன்ற ஒரு மாபெரும் பரிமாணத்துடன் , மிகப் பெருமெடுப்பில் சிங்களத்தின் ஒட்டுமொத்தப் படைகளும் ஒன்றுதிரண்டு நடத்துகின்ற பெரும் சமருடன் ஒப்பிடுகின்ற போதுதான் இதனை சாதாரண மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்று நாங்கள் கூறுகின்றோம்.

உண்மையில் இராணுவப் பரிமாணத்தில் தற்போது நடப்பவை கணிசமான அளவிற்கு, ஒரு எல்லைக்கு மேற்பட்ட பெரிய வலிந்த தாக்குதல்களாகத்தான் இருக்கின்றன. அந்த தாக்குதல்களில் எதிரி பயன்படுத்தும் இராணுவ உபகரணங்கள் மற்றும் தாக்குதலின் விளைவாக எதிரிக்கு நேரும் சேதங்கள் சாவோ அல்லது எதிரியின் காயப்படுத்தல் தன்மைகளோ கணிசமான அளவு வலிந்த தாக்குதலைத் தான் சொல்கின்றது.

ஆனால் ஒட்டுமொத்தமாக பாரிய வலிந்த தாக்குதல்களை இந்த ஒரு வருடத்தில் சிங்கள அரசு நடத்தவில்லை என்றுதான் கூறலாம். இனி வரும் காலத்தில் அத்தகைய ஒரு சமரை நடத்துவதற்கான ஒரு ஒத்திகைத் தாக்குதல்களைத்தான் தற்போது அனைத்து முனைகளிலும் அவர்கள் நடத்தி வருகின்றனர். அது தான் உண்மை.

2008 ஆம் ஆண்டைத்தான் சிங்கள தேசம் பாரிய போராண்டாக பிரகடனப்படுத்துகின்றது. 2008 ஆம் ஆண்டில்தான் அவர்கள் ஒரு காலக்கெடுவை விதித்து சிங்கள மக்களுக்கு ஒரு ஆசையை ஊட்டியிருக்கின்றனர். 2008 ஆம் ஆண்டை மனதில் வைத்தே வன்னிப் பெருநிலப்பரப்பை பிடித்து புலிகள் இயக்கத்திற்கு இறுதியாகச் சமாதி கட்டுவதாக அவர்கள் வாய்ச்சவாடல்களை விடுத்துள்ளனர்.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை நீண்ட மௌனத்தை காத்து வந்தனர். தாமாக தாக்குதல்களை மேற்கொள்ளாமல் இராணுவத்தினர் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளும் பட்சத்தில் வலிந்த தாக்குதல்களுக்கு ஒரு பதிலடியை மட்டுமே கொடுத்து வந்தார்கள். எனினும் அனுராதபுரத்தில் நடைபெற்ற தாக்குதல் மூலம் பாரிய அடி ஒன்றை இராணுவத்தினருக்கு புலிகள் கொடுத்திருந்தனர். இந்த நிலையிலும் புலிகள் தொடர்ந்தும் மௌனம் காத்து வருவது ஏன் என்ற ஒரு கேள்வி எழுகின்றது. போராட்டத்தின் ஒரு வடிவமாக இதனைப் பார்த்தாலும் இந்தளவு நீண்ட மௌனம் தேவைதானா என்ற ஒரு கேள்வி எழுகிறது அல்லவா?

பதில்: எங்கள் தலைவரின் இராணுவ தந்திரோபாயங்களில், இராணுவ வியூகங்களில் இருக்கின்ற ஒரு அம்சமாகவே இந்த மௌனத்தை பார்க்க வேண்டியிருக்கின்றது.

இந்த மௌனம் எதிர்காலத்தில் ஒரு இராணுவ ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு, புலிகள் இயக்கத்தின் ஆற்றலை அளவிடும் கருவியாக அல்லது போரில் ஒரு விடுதலை இயக்கம் தன்னுடைய இறுதியான பெரிய ஒரு மரபுவழிச் சமர்களில் காட்டுகின்ற புதுமையான இராணுவ வடிவங்களை சிலவேளைகளில் இந்த மௌனம் தொட்டுச் செல்லலாம்.

உண்மையில் எங்களின் இயக்கம் மிகப்பெரிய சமரை எதிர்பார்த்தபடியே இருக்கின்றது. அதேநேரம் சிங்கள அரசு நடத்துகின்ற வலிந்த தாக்குதல்கள் அனைத்தையும் முறியடித்தபடி இன்று நாங்கள் ஒரு முன்னிலையில்தான் இருக்கின்றோம்.

அநுராதபுரம் போன்று இலக்குகள் சில கணிக்கப்பட்டு அதன் மீது ஒரு மாபெரும் அதிரடித் தாக்குதல்களை நிகழ்த்தி பெரிய இராணுவ வெற்றிகளை நாங்கள் பெற்று வருகிறோம். அதன் வாயிலாக சிங்கள இராணுவத்தினுடைய உளவுரன்கள் சிதைக்கப்படுவதுடன் எங்களின் மக்களுக்கும், போராளிகளுக்கும் உளவுரன்கள் அதிகரிக்கின்ற செயற்பாடு என்று ஒரு படிமுறையான திட்டமிட்ட இராணுவத் திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கைகள் அமைகின்றன.

அது நீண்ட மௌனமாக இருந்தால் என்ன அல்லது எங்களது எல்லை கடந்து நடக்கின்ற தாக்குதல்களாக இருந்தால் என்ன ஒரு நீண்ட இராணுவத் திட்டமிட்ட அம்சங்களாகவே அது நகர்ந்து கொண்டிருக்கின்றன.

நாங்கள், எங்களின் விடுதலைப் போரை ஆயுதப்போராக முன்னெடுத்துக் கொண்டிருந்தாலும், நாங்கள் அரசியல் காரணிகளையும் கவனத்தில் எடுக்கத்தான் வேண்டும்.

குறிப்பாக சர்வதேச அரசியல் சூழல்கள், சர்வதேச அரசியல் காரணிகள் என்பனவற்றையும் நாங்கள் கவனத்தில் எடுக்கத்தான் வேண்டும். ஏனெனில் கடந்த நான்கு ஐந்து வருடங்களாக நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்துடன் எங்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசமயமாகி விட்டது.

எனவே சர்வதேசமயப்பட்ட அந்த சூழலுக்கேற்பு உடையதாகவே எங்களின் சில நடவடிக்கைகளும் இருக்க வேண்டும். நாங்கள் அடுத்த கட்டத்தை தாண்டி தனியரசை அமைக்கின்ற போது எங்களின் இயக்கத்திற்கு அல்லது அமையவிருக்கும் எங்களின் அரசிற்கு சர்வதேச உறவுகள் எங்களுக்குத் தேவை.

இன்றைய உலக ஒழுங்கில் உலக அரசுகளுக்கிடையிலான உறவுகள் எங்களுக்குத் தேவை என்ற அந்த அடிப்படையில்தான் எங்களின் ஒவ்வொரு இராணுவ நடவடிக்கையையும் தலைவர் அவர்கள் திட்டமிட்டு அதனை நடைமுறைப்படுத்தும் போது, அது வெறுமனே இராணுவ அம்சங்களுடன் மட்டும் நின்றுவிடாமல் அது அரசியல், இராணுவ அம்சங்கள் கலந்த ஒரு படை நடவடிக்கையாகத்தான் இதுவரை காலமும் நடைபெற்று வந்திருக்கின்றது.

அதனால்தான் இன்று இவ்வளவு தூரத்திற்கு, அதுவும் இன்றைய உலக ஒழுங்கில் இவ்வளவு தூரத்திற்கு, புலிகள் இயக்கம் வளர்ச்சி பெற்றிருக்கிறது. அது இராணுவ ரீதியாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அரசியல் ரீதியாக சர்வதேசத்தின் குறிப்பிட்ட சில நாடுகள் எங்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முலாம் பூசி கொச்சைப்படுத்த முற்பட்டாலும், எங்களின் விடுதலைப் போராட்டத்துடன் காலத்திற்கு காலம் சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம், அரசியல் உறவுகளை எங்களின் விடுதலை இயக்கத்துடன் வைத்துக்கொள்வதில் அவர்கள் பின்நிற்பதில்லை.

மேற்குலகில் சில இயக்கங்களுக்கு பயங்கரவாதப் பட்டம் சூட்டப்பட்டது போல் அல்லது அந்த பயங்கரவாதப் பட்டம் சூட்டப்பட்ட பின்னர் அவர்களை நடாத்துவது போல் மேலைத்தேய நாடுகள் எங்களின் விடுதலை இயக்கத்தை நடத்தவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றும் எங்களுக்கும் தெரியும். அது உண்மையில் அரசுகளுக்கு இடையிலான நலன்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாக இருக்கின்றது.

அந்த விடயங்களையும் கருத்தில் எடுத்துத்தான் எங்களின் விடுதலைப் போராட்டப் பாதையில் அரசியல், இராணுவக் காய் நகர்த்தல்களை தலைவர் அவர்கள் வெகு திறமையாக செய்து வருகிறார்.

கடந்த ஒரு வருட காலமாக இங்கு ஒரு பெரிய போர் நடக்கின்றது என்பது உண்மைதான். அந்தப் போரில் எங்களின் மக்கள் படுகின்ற சொல்லெணாத் துயரங்கள் என்பதும் உலகறிந்த உண்மைதான். அதேவேளை சிங்களம் ஆக்கிரமித்த மண்ணிலும் சரி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பில் வான் வழியாக வந்தோ அல்லது வேறு விதமாகவோ எங்களின் மக்களுக்கு ஏற்படுத்தும் மாபெரும் அழிப்புக்கள், மனித உரிமை மீறல்கள் என்ற பல்வேறு விடயங்களில் சிங்கள அரசிற்கு எதிரான சர்வதேச மனித உரிமை அமைப்புகளினுடைய குற்றச்சாட்டு என்பதும் உண்மையில் மறுதலிக்க முடியாத ஒரு விடயமாகத்தான் இருக்கின்றது.

உண்மை என்னவெனில், ஒரு புறத்தில் உலக அரசுகள் சிங்கள அரசுடன் கூடிக்குழாவி அவர்களுக்கு அரசியல் ரீதியாகவோ இராணுவ ரீதியாகவோ முண்டு கொடுத்தபடி நிற்க,

மறுபுறத்தில் மனித தர்மங்களை மதிக்கின்ற அல்லது மானிட நேயங்களை காக்க முயல்கின்ற உலக அமைப்புக்கள் அதாவது அரசு சாராத உலக அமைப்புக்களினுடைய கருத்துக்கள் இன்று உலக அரசுகளினுடைய கருத்துகளுடன் உடன்படுகின்ற வகையில் இல்லை.

அதனைப் பல்லேறு இடங்களில் நாங்கள் வெளிக்காணரக் கூடியதாகத்தான் இருக்கின்றது.

அத்தகைய அரசு சாராத அமைப்புக்கள் இன்றும் இந்த மண்ணில்தான் வேலை செய்து கொண்டிருக்கின்றன. அவர்கள் இங்கே நடக்கின்ற அன்றாட நடப்புக்களைப் பார்த்தபடிதான் இருக்கின்றனர். எங்களின் விடுதலை இயக்கத்தினுடனும் அவர்கள் தொடர்புகள் வைத்திருகின்றனர்.

சிங்கள அரசுடனும் அவர்களுக்கு வேலை ரீதியான தொடர்புகள் இருக்கின்றன.

இந்தத் தொடர்புகளை வைத்துக்கொண்டு அவர்கள் சிங்கள அரசினுடைய நிர்வாக அணுகுமுறை, மனிதாபிமான நடவடிக்கைகள் என்பனவற்றை எங்களின் விடுதலை இயக்கத்துடன் இணைத்துப் பார்த்து எங்களின் இயக்கத்தை சிங்கள அரசை விட எவ்வளவோ சிறப்பாக மனித தர்மங்களை மதித்து அல்லது உலக மனிதர்களினுடைய மன ஓட்டங்களுக்கு ஏற்றவாறு செயற்படும் இயக்கமாக புகழாரம் சூட்டியபடிதான் இருக்கின்றனர்.

எனினும் சிங்கள அரசிற்கு மேலைத்தேய அரசுகள் இராணுவப் பொருண்மிய உதவிகளை நல்கி அதனுடைய சிங்களப் போர் இயந்திரத்தை வலுவூட்டி வருவது என்பது ஒரு கசப்பான உண்மையாகும். அது தமிழ் மக்களையும் கவலை கொள்ளச் செய்கின்ற விடயம்தான். இந்த விடயம் தொடர்பாக தலைவர் அவர்களும் மாவீரர் நாள் உரையில் பகிரங்கமாகவே சிங்களத்திற்கு முண்டு கொடுக்கும் சர்வதேச அரசுகளை குற்றம் சாட்டியிருந்தார்.

தலைவருடைய அறிக்கைக்குப் பின்னர் சர்வதேச அரசுகள் என்ன செய்கின்றன என்பதனை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், எங்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை அவர்கள் இந்த சமாதான காலகட்டத்தில்தான் உணர்ந்து கொண்டு அதன் வழியாக குறிப்பிட்ட சில அறிக்கைகளை விட்டது உண்மையான நிகழ்வு.

இன்று குறிப்பிட்ட அந்த அரசுகள் ஒருபுறத்தில் மௌனம் காத்துக்கொண்டு மறுபுறத்தில் சிங்களத்திற்கு இராணுவப் பொருண்மிய உதவிகளை நல்குவது என்பது உண்மையில் ஒரு வேதனையான விடயம்தான்.

கேள்வி: ஒரு இனம் ஒடுக்கப்படுகின்றது. அந்த இனத்தின் விடிவு தொடர்பாக ஓரு விடுதலைப் போராட்டம் நடைபெறுகின்ற போது அது நீதியான, நேர்மையான விடுதலைப் போராட்டமா என்பதனைப் பார்க்காமல் சர்வதேச நாடுகள் தங்களின் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார, இராணுவக் கொள்கைகளைத்தான் கவனத்தில் எடுத்து ஒரு விடுதலை அமைப்பிற்கு ஆதரவு கொடுப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கின்றனர். அப்படியிருக்கும்போது தமிழ் மக்களின் இந்த விடுதலைப் போராட்டம் நியாயமாகவே நடைபெறுகின்றது என்பதனை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி சர்வதேச நாடுகளை நாங்கள் தொடர்ச்சியாக நம்பியிருப்பது ஒரு சரியான முடிவா?

பதில்: எங்களின் விடுதலைப் போராட்டம் யாரையும் சாராமல், யாரையும் நம்பாமல் அன்றிலிருந்து இன்றுவரை நடந்து வருகின்றது என்பதுதான் உண்மை. அதேவேளை எங்களின் விடுதலைப் பேராட்டம் மிக உச்சநிலையை அடைந்து அது ஒரு தனியரசை அமைத்து, இந்த பூமிப் பந்தில் ஒரு புதிய நாடாக உருவாகின்ற அந்த சூழலில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டிய ஒரு கடப்பாடு ஒன்றும் உள்ளது. எந்த நாடாயினும் அத்தகைய கடப்பாட்டைக் கொண்டு இருக்கும்.

எந்தவொரு சர்வதேச அரசுகளையோ அல்லது மாற்றாரையோ நம்பி அவர்களின் தயவில் இந்த விடுதலைப் பேராட்டத்தை நடத்தாமல் ஒரு மிகப்பெரிய வெற்றியை நோக்கி எங்களின் விடுதலைப்பேராட்டத்தை தலைவர் அவர்கள் இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கின்றார்.

ஆனாலும் விடுதலைப் போராட்டத்தின் ஒரு உச்சநிலையில், சர்வதேசத்தின் பெரும்பாலான அரசுகள் சிங்கள அரசிற்கு முண்டு கொடுக்கின்ற நிலையில், எங்களுடைய கருத்துக்களையும் சர்வதேச அரசுகளுக்குக் கூறி சர்வதேச மக்களினது நல் அபிப்பிராயத்தை திரட்ட வேண்டிய ஒரு தேவை எங்கள் முன் உள்ளது.

அதனடிப்படையில்தான் காலத்திற்கு காலம் குறிப்பிட்ட அரசுகளுக்கு எங்களின் கருத்துக்களை, எங்கள் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மைகளை நாங்கள் தெரிவித்து வருகின்றோம்.

இந்த முறை தலைவர் வெளியிட்ட மாவீரர் நாள் அறிக்கையில் கிட்டத்தட்ட புலிகள் இயக்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை என்று சொல்லக்கூடிய ஒரளவு வரையறுக்கப்பட்ட கட்டம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டிருகின்றது என்றுதான் நான் கருதுகின்றேன்.

அது என்னவெனில், ஏற்கனவே சிங்கள அரசு, இலங்கைத் தீவு அமைந்திருக்கின்ற இந்த பிராந்தியத்தின் நலன்கள் சிலவற்றை ஒரு தூண்டிலாகப் பயன்படுத்தி, சர்வதேச பெருவல்லரசுகளுக்கு தூண்டில் போட்டு, அவர்களின் பொருண்மிய இராணுவ உதவிகளைப் பெற்று, எங்களின் விடுதலைப் போராட்ட இயக்கத்தை அழிப்பதற்கு ஒரு சதித்திட்டமொன்றைத் தீட்டி வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்தப் பிராந்தியத்தில் இருக்கின்ற பெருவல்லரசுகளின் நலன்களுக்கு விடுதலைப் புலிகள் எதிரானவர்கள் என்கின்ற ஒரு கருத்தைப் பரப்பி அதன் வாயிலாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிற ஒரு கருத்தை வெற்றிகரமாகப் புகுத்தி, அதன் அடிப்படையில்தான் சிங்கள அரசு தனக்கு தேவையான பொருண்மிய, இராணுவ உதவிகளைப் பெற்று வருகின்றது.

இந்த முறை தலைவர் அவர்கள் பெருவல்லரசுகள், எங்களின் பிராந்தியத்தில் வைத்திருக்கின்ற நலன் பற்றி மேலோட்டமாக அதில் கூறியிருக்கிறார். அதன் அர்த்தம் என்னவெனில், பெருவல்லரசுகள் நினைப்பதுபோல், அதாவது சிங்களம் கூறியபடி, எங்களின் தமிழீழ விடுதலை என்பது அல்லது தமிழீழத் தனியரசு என்பது அந்த பெருவல்லரசுகளின் பிராந்திய நலனுக்கு ஏதாவது குந்தகம் விளைவிக்கும் என்றோ அல்லது பிராந்தியத்தின் உறுதித்தன்மையை, அரசியல் உறுதிப்பாட்டுத் தன்மையை சீர்குலைக்கும் என்றோ நம்புவது பொய் என்பதனையே தலைவரின் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எங்களின் பிராந்தியத்தின் நலன் என்பதற்கு அப்பால் எங்கள் மக்களின் விடுதலை அதாவது, தமிழீழ மக்களின் தேசிய நலன் என்பது எங்களுக்கு முதன்மையானது. அந்த தேசிய நலனுக்கு அனுசரணையாகச் செயற்படுகின்ற அந்த நாடுகள் தொடர்பாக எங்களின் விடுதலை இயக்கத்திற்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. எனவேதான் இந்த பிராந்தியத்தின் நலனைப் பேண விரும்புகின்றவர்கள் அல்லது இந்தப் பிராந்தியத்தில் உறுதித்தன்மை ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக தங்களின் நலன்களை அடைந்து கொள்ள விரும்புகின்ற அந்தப் பெரு வல்லரசுகள் எங்களின் விடுதலைப் போராட்டத்தை தங்களின் தடைக்கல்லாக எடுக்கக்கூடாது என்கிற செய்திதான் எங்களின் தலைவரின் மாவீரர் நாள் அறிக்கையில் வெளிவந்திருந்தது.

அந்த அறிக்கை நிச்சயமாக சர்வதேச நாடுகளை அல்லது குறிப்பிட்ட வல்லரசு நாடுகளை சிந்திக்க வைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

சிங்களத்தின் ஒரு சதி நடவடிக்கைக்கு அதாவது சிங்கள அரசியல்வாதிகள் வெகு கெட்டித்தனமாக சர்வதேச அரசுகளை தம்வசப்படுத்தி, அவர்களின் உதவிகளைப் பெற்று, ஒரு இரவல் பொருளாதாரத்தில் தங்களின் போர் இயந்திரங்களைக் கட்டியெழுப்பி, அந்தப் பாரிய போரில் இயந்திரங்களை எங்கள் மக்கள் மீது ஏவிவிட்டு, ஒரு பெரிய இன அழிப்பைச் செய்து, ஒரு மனிதத்துயரை இந்த மண்ணில் விதைத்து, அவர்கள் தங்களின் மிக மோசமான குறுகிய தேசிய நலனை அடைவதற்காக எடுக்கின்ற முயற்சிக்கு சர்வதேச நாடுகள் உதவுகின்றன.

என்றோ ஒரு நாள் சர்வதேச நாடுகள் இதை உணர்ந்து கொள்ளத்தான் போகின்றன. அல்லது எதிர்கால தமிழ்ச் சந்ததியின் சுட்டுவிரல் நீட்டுக் குற்றச்சாட்டுக்கு முன்பாக குறித்த சர்வதேச நாடுகள் உட்படத்தான் போகின்றன. அத்தகைய ஒரு அரசியல் சூழலுக்குள் அவர்கள் சிக்காமல் இப்போது நடக்கின்ற விடுதலைப் போராட்டத்தின் தன்மையை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். எங்களின் விடுதலை இயக்கத்தின் தலைமைத்துவப் பாத்திரம் அது ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற பெரிய விடுதலைப் போர் என்பவற்றை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எங்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அவர்கள் ஆதரவு தர வேண்டும் என்பதுதான் எங்களின் இயக்கத்தினது ஒரு எதிர்பார்ப்பு.

ஆகக் குறைந்தது அந்த ஆதரவு என்ற நிலை இல்லாவிட்டாலும் கூட சிங்களத்தின் போர் இயந்திரத்திற்கு முண்டு கொடுக்கின்ற இந்த மிக மோசமான நடவடிக்கையை குறித்த சர்வதேச நாடுகள் கைவிடுவது என்பதே எங்கள் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான விடயமாக இருக்கும்.

கேள்வி: சர்வதேச விடுதலை அமைப்புக்களின் வரலாற்றுடன் ஒப்பிடுமிடத்து அடக்கி ஒடுக்கப்படும் ஒரு இனம், சுதந்திரத்திற்காகப் போராடும் ஒரு அமைப்பு எந்தச் சந்தர்ப்பத்தில், எந்தக் கட்டத்தில் ஒரு தனியரசுப் பிரகடனத்தை வெளியிட முடியும்?

பதில்: உலக விடுதலை அமைப்புக்கள் சில தங்களின் மண்ணை முழுமையாக மீட்டெடுத்து, அங்கே தங்களின் அரசாங்கத்தை அமைக்க முன்னர் தங்களின் விடுதலைப் பிரகடனங்களை செய்திருக்கின்றன என்பது உண்மை.

விடுதலைப் போராட்டம் நடக்கின்ற தங்களின் தாயக மண்ணில் ஒரு அங்குல நிலத்தையேனும் தங்களின் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காமல் வெளிநாடுகளில் தங்களின் தலைமையங்களை நிறுவிக் கொண்டிருந்த படி தங்களுக்கு என ஒரு நாட்டைப் பிரகடனப்படுத்தியதையும் பார்த்திருக்கிறோம்.

எனவே இத்தகைய சுதந்திரப் பிரகடனங்கள் விடுப்பு தொடர்பாக எங்களிடம் கருத்து இல்லை. அவர்களின் விடுதலைப் போராட்டங்கள் அல்லது அந்தந்த விடுதலைப் போராட்டங்களை நடத்துகின்ற தலைமைகளின் விருப்பு-வெறுப்புக்கு உட்பட்டது அந்த விடயம்.

எங்களின் விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் அந்த சுதந்திரப் பிரகடனம் என்பது அது சில பேர் குறிப்பிடுவது போல ஏன் அந்த பிரகடனம் இன்னமும் வரவில்லை?

அல்லது

எப்போது அந்தப் பிரகடனம் வரும் என்ற கேள்விகள் எழுந்தபடிதான் இருக்கின்றன.

வெறும் பிரகடனம் என்பது பெருமெடுப்பில் எங்களுக்கு நன்மைகளைப் பெற்றுத்தரும் என நாங்கள் நினைக்கவில்லை.

எந்தக் கட்டத்தில் எங்களின் புதிய சுதந்திர தேசம் பற்றிய பிரகடனத்தை விடுவது என்பது எங்களின் தேசியத் தலைவரினது முடிவு.

புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது தாயகத்து உறவுகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு விடுதலைப் போராட்டம் இவ்விதமான சுதந்திர பிரகடனத்தை விடுத்தது என்றால் அதேவழியில்தான் எங்களின் பிரகடனத்தையும் எங்களது இயக்கம் விடுக்க வேண்டும், அதனடிப்படையில்தான் எங்களின் வெற்றின் படியை மெது மெதுவாக நகர்ந்து தொடலாம் என்பது போன்ற கருத்து உண்மையில் யதார்த்த பூர்வமான கருத்தல்ல.

இலங்கைத் தீவில் சிங்கள அரசுடனான அரசியல், இராணுவப்புறச் சூழல்களை வைத்துப் பார்த்தால்

எங்களின் விடுதலை என்பது தமிழ் மக்களினுடைய பலம் அதிகரிப்பின் பின்னரே குறிப்பாக ஒட்டுமொத்த பலம் அதிகரிப்பின் வெளிப்பாடாகத்தான் எமது விடுதலை நடைபெறுவது சாத்தியம்.

எனவே எங்களின் மண்ணை மீட்டெடுப்பதுதான் எங்கள் இயக்கத்தின் முதல் வேலையாக இருக்கும்.

அவ்விதமாக மீட்டெடுத்தபடி நடக்கின்ற உண்மையான பிரகடனம் என்பது நில மீட்பின் இறுதிக்கட்டத்தில் நடைபெறக்கூடிய ஒரு விடயமாகத்தான் உள்ளது.

எனவே, ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புக்களுடன் இணைத்து அல்லது ஒப்பிட்டு எங்கள் விடுதலையின் பிரகடனம் பற்றி எதிர்பார்ப்பது அரசியல் ரீதியில் விவேகமான ஒரு எதிர்பார்ப்பாக இருப்பது போல் தெரியவில்லை.

கேள்வி: வன்னிப்பெருநிலப்பரப்பின் மீதான வான்குண்டு வீச்சுகள் அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படுகின்றன. இத்தகைய தாக்குதல் ஒன்றில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனைக்கூட இழந்துள்ளோம். தொடர்ச்சியாக சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய தாக்குதல்களுக்கு எதிரான தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் மேற்கொள்ளவில்லை என்கிற ஒரு ஆதங்கம் மக்களிடையே எழுந்துள்ளமை குறித்து?

பதில்: ஒரு ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தில் எங்களின் போராட்டம் போன்ற ஒரு மிகத்தீவிரமான அதுவும் எந்தவிதமான அரசியல் முன்னெடுப்புகளுக்கும் இடமளிக்காத கடும்போக்கு அரசுடன், இன அழிப்பையே நோக்காகக்கொண்ட ஒரு ஆக்கிரமிப்பு அரசுடன் தீவிரமான போர் ஒன்றில் நாங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.

சர்வதேச நாடுகள் சிலவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளும் நவீன ரக ஆயுதங்களின் துணையுடன்தான் இவ்விதமான பெரும் போரை எங்களின் விடுதலை இயக்கம் மீதும் எங்கள் மக்கள் மீதும் சிங்களப் படைகள் நடத்தி வருகின்றன.

இந்த நேரத்தில் எங்களின் விடுதலைப் போராளிகளின் இழப்புக்கள் என்பது அதாவது தளபதிகளினதோ அல்லது போராளிகளினதோ இழப்புக்கள் என்பது தவிர்க்கமுடியாத இராணுவ யதார்த்தமாகத்தான் இருக்கின்றது.

புலம்பெயர்ந்து வாழும் எங்களின் மக்கள் ஒருவிடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

எங்கள் போராளிகளினது பாதுகாப்புத் தொடர்பாக எங்கள் இயக்கம் மிகவும் அக்கறையாக, அதற்கான முன்னேற்பாடுகள், தயார்படுத்தல்கள் போன்றவற்றை செய்தபடிதான் இதுவரை காலமும் செயற்படுகிறது.

எங்கள் வாழ்வின் அங்கமாகவே அது மாறிவிட்டது. ஆனாலும் இந்தப் பெரும் போரில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழல் ஒன்று இருப்பதனை எவரும் நிராகரிக்க முடியாது.

தமிழ்ச்செல்வனின் அந்த வீரச்சாவும் அத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் நடந்தது. சிங்களத்தின் மிக நவீனமான வான்கலங்களின் உதவியுடன் நடத்தப்பட்டது அந்தத் தாக்குதல். அந்த நவீன வான்கலங்களால் எங்கள் மக்கள் இன்று சொல்லெணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்பது உண்மைதான்.

ஆனால் ஒவ்வொரு ஆயுதத்திற்கும் பதில் ஆயுதம் ஒன்று இருக்கின்றது. அல்லது ஒவ்வொரு ஆயுதப் பயன்பாட்டிற்கும் எதிரான தந்திரோபாயமான செயற்பாடுகள் என்பன இருக்கின்றன என்பது எல்லோருக்குமே தெரியும்

அத்தகைய ஒரு கட்டத்தில் சிங்களத்தின் அதி நவீன ஆயுதங்களை மீறியபடி எங்களின் விடுதலையை முன்னெடுக்கின்ற அந்த நிகழ்வை எல்லோரும் பார்க்கத்தான் போகின்றனர்.

தற்போது மட்டும்தான் சிங்கள அரசு அதிநவீன இராணுவ உபகரணங்களுடன் எங்களுடன் போர் புரிகின்றது என்று இல்லை.

காலத்திற்கு காலம் அதாவது ஒவ்வொரு பாரிய படுதோல்விகளைச் சந்தித்த பிறகும் ஒரு மிகப்பெரிய இராணுவ வளர்ச்சியுடன் வந்தபடிதான் எங்களுடனான போரை நடத்துகின்றது. நாங்கள் அடிக்கடி குற்றம்சாட்டுவது போல அந்த அமைதிக் காலத்தை அரசு தன்னுடைய இராணுவத்தை நவீனமயப்படுத்தி தயார்படுத்தும். அத்தகைய கைங்கரியங்களில் ஈடுபட்டு தன்னுடைய இராணுவத் தயார்படுத்தல்களை முடித்த பின்னர் ஏதோ ஒரு சாட்டுகளைக் கூறிக்கொண்டு போரைத் தொடர்வதும் நீண்ட வரலாற்றைக் கொண்ட விடயமாகத்தான் இருக்கின்றது.

தற்போதும் அப்படித்தான் நடக்கின்றது.

கடந்த ஐந்து ஆண்டு அமைதிக்காலத்தில், கால அவகாசத்தில், அது தன்னுடைய படையை நவீனமயப்படுத்தியது.

மேலைத்தேய அரசுகள் மனிதாபிமானத்தை, தர்மத்தை மதிப்பதாக எங்கள் மக்கள் நம்புகின்றனர்.

ஆனால் அந்த மேலைத்தேய அரசுகள் ஒரு ஆக்கிரமிப்பு அரசுக்கு தங்களின் நவீன ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கின்றன.

அத்தகைய ஆயுதங்களை வாங்குவதற்கான பொருண்மிய உதவிகளைச் செய்கின்றன. அந்த அழிவு ஆயுதங்களைக் கொண்டு எங்கள் மக்கள் கொலை செய்யப்படும்போது அது ஏதோ ஒரு இராணுவ நடவடிக்கை போல வாளாவிருப்பது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

சிங்களத்தின் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் அதனுடைய பாரிய படைக்கல சக்திகள் என்பவற்றையெல்லாம் மீறியபடி எங்களின் விடுதலைப் போராட்டத்தை எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் முன்னெடுத்துச் சென்றபடிதான் இருக்கின்றார்.

இப்போதும் இராணுவ ரீதியிலும் சரி, அரசியல் ரீதியிலும் சரி அடுத்த கட்டத்தில் பாரிய வளர்ச்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய இராணுவ வலிமையுடன்தான் எங்கள் விடுதலை இயக்கத்தை தலைவர் வைத்திருக்கின்றார்.

கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழர்கள் மத்தியிலிருக்கும் ஊடகங்களுக்கு நீங்கள் என்ன விடயத்தைக் கூற விரும்புகிறீர்கள் ?

பதில்: ஒரு விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர் வாழ் சமூகத்தின் பங்களிப்பு என்பது உண்மையில் பிரமாண்டமானது. எங்களின் விடுதலைப் போராட்டத்தை மட்டும் நான் சொல்லவில்லை. உதாரணத்திற்கு எரித்திரிய விடுதலைப் போராட்டத்திற்கு புலம்பெயர்ந்த எரித்திரிய சமூகம் ஆற்றிய பங்கு குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம்.

புலம்பெயர்ந்து வாழ்ந்த எரித்திரிய புத்திஜீவிகளும் சரி அல்லது அந்த மண்ணின் மைந்தர்களும் சரி ஒன்றுதிரண்டு தங்களின் ஒரு பிரதான கடமையாக அந்த விடுதலைப் போரை வெல்வதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்தார்கள்.

தங்களின் வளங்களைக் கொடுப்பதில் இருந்து தங்களின் உழைப்பை நல்குவதிலிருந்து எதனைச் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் ஒன்றுதிரண்டு செய்து எரித்திரிய விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கு பாரிய வலுச்சேர்த்து அந்தப் போராட்டத்தை வெற்றியில் முடிக்க உதவினார்கள்;.

அதேபோல புலம்பெயர்ந்து வாழ்கின்ற எங்கள் ஈழத்தமிழர்களும் ஒரு பிரமாண்டமான சக்தி என்பதில் எள்ளளவும் எங்களுக்கு சந்தேகம் இல்லை. இதனை நாங்கள் எங்கள் வார்த்தைகளில் சொல்வதனைவிட சிங்களத்தின் முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் வார்த்தையில் சொல்ல வேண்டும்.

"தனக்கு தன்னுடைய பலம் தெரியாது, மற்றவனுக்குத்தான் இன்னொருவனுடைய பலம் தெரியும்" என்பது பொதுவான மனித சுபாவம். புலம்பெயர்ந்து ஏராளமான நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஈழத்தமிழர்களைப் பார்த்து சுமார் இருபது வருடங்களுக்கு முன்னரே ஜே.ஆர்.ஜயவர்த்தன ஒரு விடயத்தை கூறியிருந்தார்.

"இது ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச சிறுபான்மை இனம்" என்ற வார்த்தைப் பிரயோகத்தை அன்று அவர் கூறியிருந்தார்.

அந்த வார்த்தைப் பிரயோகத்தை அவர் யூத மக்களுடன் ஒப்பிட்டே அன்று கூறியிருந்தார்.

உண்மையில் அந்த ஒப்பீட்டை அன்று அவர் கூறும்போது அதனுடைய சரியான பரிமாணத்தை எங்கள் மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று கூறமுடியாது.

ஆனால் அது இன்று மிகப்பெரிய உண்மையாக மாறியிருக்கிறது.

எங்களின் புலம்பெயர்ந்த தமிழர்கள் அத்தகைய பலம் வாய்ந்த ஒரு சக்தியாக உலக நாடுகளில் பரவி வாழ்கின்றனர்.

அவர்களின் பலம்தான், தாங்களாகவே வழங்குகின்ற பலத்தின் அடிப்படைதான், எமது விடுதலைப் போராட்டத்தின் மிகப் பெரிய வளர்ச்சிக்கு காரணியாக அமைந்திருக்கின்றது.

இன்று நவீன போர் ஆயுதங்களுடன் எதிரி எங்கள் மண்ணை ஆக்கிரமித்து, எங்கள் இனத்தை அழித்தொழிக்க முயல்கின்ற இந்த நேரத்தில் அந்த நவீன ஆயுதங்களுக்கு எதிராக எங்களின் எதிர்ச்சமர் என்பதும் நவீனமயப்படுத்தப்பட்ட, முன்னேறிய தொழில்நுட்பத்துடன் கூடிய, ஒரு போர் முறையாகத்தான் அமைய வேண்டும்.

என்னதான் சொன்னாலும் சிங்களப்படையின் தனி ஆள்திறன் அல்லது அவர்களின் வீரம் அல்லது அந்த படை நடவடிக்கையில் அவர்கள் செய்கின்ற தியாகம், அர்ப்பண உணர்வு எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்தால் சிங்களப் படையை விட எத்தனையோ மடங்கான வீரத்தை, தியாகத்தை, அர்ப்பண உணர்வை, உழைப்பை , எங்கள் போராளிகள் நல்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

மனிதனின் ஆற்றல் என்பதை அளவிட முடியாது.

எல்லைகள் அற்றது என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் அந்த மனிதனைச் செயற்படுத்துகின்ற மனிதனில் இருக்கின்ற திறமைகள் அதாவது எங்கள் தலைமைப்பீடம் அல்லது தலைமைப்பீட ஆளுமையின் சிறப்பால் ஒரு மனிதனுடைய செயல்வீச்சு எங்கேயோ எல்லை கடந்து விரிந்து செல்கின்றது.

தமிழீழத் தேசியத் தலைவரின் தலைமைத்துவ ஆளுமையினால் எங்கள் போராளிகள் அளப்பரிய வீரத்தை களமுனையில் காட்டி, அந்த வீரத்தால், தியாகத்தால் ஒரு உயரிய இராணுவச் சாதனையை படைத்து, இந்த ஆட்பலத்தை அதிகரித்து, இந்த ஆட்பலத்திலும், அதிநவீன உபகரணங்களிலும் முன்னணி வகிக்கும் சிங்களப்படையை விட இந்தப் போரில் பெரிய திருப்பு முனைகளையும், முன்னேற்றங்களையும் காட்டியபடி இருக்கின்றனர்.

இத்தகைய மனித வலுவுடன், மனித ஆற்றலுடன் கருவிகளும் இணையும் போதுதான் எங்களின் போர் என்பது இறுதி வெற்றியைக் காணமுடியம். அந்த கருவிகளினுடைய வளர்ச்சி என்பது வளத்துடனும் பொருண்மியத்துடனும் சம்பந்தப்பட்டுள்ளது.

அத்தகைய வளத்தை எங்கள் விடுதலை இயக்கத்திற்கு நல்கக்கூடிய நிலையில் தாயகத்தில் வாழும் மக்கள் இல்லை. கொடிய போருக்குள் சிக்கிக்கொண்டு அவர்கள் நீண்டகாலமாகவே இந்த மண்ணிலேயே வாழ்கின்றனர்.

இந்த போராட்டத்திற்கு நேரடியாக முகம்கொடுத்து எத்தனையோ அர்ப்பண உணர்வுகளைச் செய்து மிகவும் சகிப்புத்தன்மையுடன் அவர்கள் உள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து வரும் பத்திரிகையாளர்கள் வியக்கும் அளவுக்குக்கூட, இவ்வளவுக்கு நின்று பிடித்து, தமது சகிப்புத் தன்மையை வெளிப்படுத்தி, எங்கள் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

சர்வதேச பத்திரிகையாளர்கள் பாராட்டும் அளவுக்கு தாயக மக்களின் நேரடிப் பங்களிப்பு இருக்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழ்மக்களும் அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி எங்கள் விடுதலை இயக்கத்திற்கு மிகப்பெரிய பலத்தைச் சேர்க்க வேண்டும்.

தலைவர் அவர்கள் மாவீரர்தின உரையில் கூறியிருந்தது போல், புலம்பெயர்ந்த மக்களிடம் மற்றைய ஒட்டுமொத்த மக்களையும் எங்களின் போராட்டத்தின்பால் திருப்பிவிடக்கூடிய சக்தி இருக்கின்றது.

புலம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த நாடுகளில் உள்ள மனித நேயம் மிக்கவர்கள், உண்மையான விடுதலைப் பற்றாளர்கள் என்பவர்களிடம் எங்களின் விடுதலைப் போராட்டத் தியாகங்களைக் எடுத்துரைக்கின்ற அளவுக்கு எங்கள் மொழி சார்ந்த திறமையுடன் அங்கு இன்று எமது இரண்டாவது, மூன்றாவது சந்ததி உருவாகியிருக்கிறது.

அந்த நாட்டு மொழிகளில் அவர்களுடன் உரையாடி சிங்களத்தினுடைய பொய்ப்பிரசாரத்தை முறியடிக்க, எங்கள் விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை சொல்லிலும் செயலிலும் எழுத்திலும் அவர்களுக்கு எங்கள் புலம்பெயர் தமிழர்கள் தெரியப்படுத்த வேண்டும்.

எங்களின் போராட்டத்திற்கு ஒரு சர்வதேச ஆதரவு , அது தார்மீக ஆதரவு என்று சொன்னாலும்கூட, அத்தகைய ஆதரவுத்தளம் ஒன்று உருவாகும்போது அந்த குறித்த அரசுகள் அதாவது சிங்கள அரசிற்கு இன்று முண்டு கொடுத்துக்கொண்டிருக்கின்ற அரசுகள், தங்கள் மக்களிடம் இருந்து எழுகின்ற கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய ஒர் நிர்ப்பந்தத்திற்குள் உள்ளாகும்.

சில வேளைகளில் சிங்களத்திற்கு பொருண்மிய, இராணுவ உதவிகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றலும் வளரலாம்.

அப்படியெல்லாம் வளரும்போது இராணுவ ரீதியாக எங்கள் விடுதலைப் போராட்டதிற்கு ஒரு சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

எனவே புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் வளம் சார்ந்த நேரடிப் பங்களிப்பை எங்கள் விடுதலைப் போராட்டம் கோருவதுடன் அந்தந்த நாட்டு ஊடகங்கள் அல்லது கருத்து தெரிவிப்போருடன் நல்லுறவை வளர்த்து, அவர்களுக்கு ஊடாக எங்களின் நியாயப்பாடுகளை வெளிப்படுத்தி, எங்கள் விடுதலை இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுக் கடமை புலம்பெயர்ந்துள்ள எங்கள் மக்களுக்கு இருக்கின்றது.

அந்த வரலாற்றுக் கடமையை எங்கள் மக்கள் நெஞ்சிலிருத்தி அதனை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

எங்கள் தாயகத்தில் நாங்கள் வசித்துக் கொண்டிருந்தாலும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் அளித்து வருகின்ற போராட்டப் பங்களிப்பு குறித்து தாயகத்தில் வசிக்கும் மக்களுக்கும் கூட்டங்கள் வாயிலாக அல்லது எங்கள் பத்திரிகைகள் வாயிலாக வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம்.

இன்று நடைபெறும் எங்களின் போராட்ட அல்லது இயக்க நிகழ்வுகள் தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற நிகழ்ச்சிகள், அவை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் எங்களின் மக்களுக்கும் தெரியப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம்.

அந்த வகையில் புலம்பெயர்ந்துள்ள எமது உறவுகள் முழுநேர ஈடுபாட்டுடன் எங்கள் விடுதலை இயக்கத்திற்கு ஒரு பின்புலம் சேர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடுதான் தாயக மக்களிடம் இருக்கின்றது. எங்கள் இயக்கத்தின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருக்கின்றது.

அத்தகைய வேலைகளை எங்கள் புலம்பெயர் மக்கள் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்காக அவர்களுக்கு பாராட்டுக்கள்.

அதேவேளையில் இறுதிக்கட்ட அல்லது மிகவும் ஒரு தீவிரமான போருக்கு நாங்கள் முகம்கொடுத்து ஒரு வெற்றியை பெற்றுக்கொள்கின்ற காலம்தான் இனிவரும் காலம். அந்தக் காலத்தில் எங்களின் விடுதலை இயக்கம் பலம்பெற்ற சக்தியாக இருந்து புதிய திருப்பு முனைகளை ஏற்படுத்துவதற்கு புலம்பெயர்ந்த மக்களும் தங்களின் பங்களிப்புக்களை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.

No comments: