Wednesday, January 23, 2008

தற்போதைய அரசியலமைப்பு வரையறைக்குள் மாகாணங்களுக்கு அதிகாரமளிக்க ஒரு குறுகிய கால செயற்றிட்டம்


[24 - January - 2008] [Font Size - A - A - A]

*விதாரண குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழு அதன் இடைக்கால அறிக்கையொன்றை நேற்று புதன்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்திருக்கிறது.

ஒன்றரை வருடகாலமாக 63 அமர்வுகளை நடத்திய விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அக்குழு அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் `மாகாணங்களுக்கு கூடுதல் பட்ச அதிகாரப் பரவலாக்கல் செய்வதை அனுமதிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளையே,' அந்த அறிக்கையில் முன்மொழிந்திருக்கிறது.

இறுதி அறிக்கைக்கு முன்னோடியான ஒரு ஆவணம் என்றே சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழு அதன் இடைக்கால அறிக்கையை வர்ணித்திருக்கிறது. தற்போதைய அரசியலமைப்பின் ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதி பதியினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளே முன்மொழியப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப் பரவலாக்கல் விவகாரத்தைப் பொறுத்தவரை, அடிப்படைக் கட்டமைப்புகளில் எந்தவித மாற்றமும் இன்றி நிருவாக ரீதியான மாற்றங்களுக்கே யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப் படக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் அங்கு மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று கூறும் சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழு, அண்மைய எதிர் காலத்தில் வடக்கில் தேர்தல் நடத்தப்படக்கூடியதாக நிலைமை இல்லையென்பதால் தற்போதைய அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு இசைவாக அந்த மாகாணத்தில் இடைக்காலசபையொன்றை நிறுவுவதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்க முடியுமென்று விதந்துரைத்திருக்கிறது.

புதிய அதிகாரப் பரவலாக்கல் முறைமையொன்றுக்கு வழிவகுக்க கூடிய முற்றிலும் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான யோசனைகள் அடங்கிய தனியான அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் தனது தலைமையிலான குழுவினால் பின்னர் கையளிக்கப்படும் எனறு பேராசிரியர் விதாரண தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி (ஜனநாயகக்குழு) ஜாதிக ஹெல உறுமய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) மலையக மக்கள் முன்னணி, ஷ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி.) தேசிய காங்கிரஸ் மேலக மக்கள் முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய அரசியற் கட்சிகளே சர்வகட்சி மாகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவில் அங்கம் வகிக்கின்றன.

இடைக்கால அறிக்கையின் முழு விபரம்.

1. அறிமுகம்

1.1. தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படையாக அமையக்கூடிய ஒரு தொகுதி யோசனைகளைத் தயாரிக்குமாறு ஜனாதிபதியினால் சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழுவுக்கு ஆணை வழங்கப்பட்டது. இக்குழு ஒன்றரை வருடகாலமாக 63 அமர்வுகளை நடத்தியபிறகு கருத்தொருமிப்பு ஆவணம் பூர்த்திசெய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் அண்மைய எதிர்காலத்தில் அந்த ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படக்கூடியதாக இருக்க வேண்டும். அதன் பெறுபேறு பொருத்தமான அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு அடிப்படையானதாக அமையும். அதை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களைக் கொண்டு வரவேண்டியிருக்கும். சில பிரிவுகளைப் பொறுத்தவரை சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலமாக மக்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டியிருக்கும். இவற்றைச் செய்வதற்கான உகந்த சூழ்நிலை உருவாக்கப்படுவதற்கு கணிசமான காலம் தேவை.

1.2. இத்தகையதொரு சூழ்நிலையில் சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழு அதன் சொந்த முன்மொழிவுகளை கருத்தில் எடுத்து, குறுகிய கால இடைவெளியில் மாகாணங்களுக்கு கூடுதல் பட்சமானதும் பயனுறுதியுடையதுமான அதிகாரப்பரவலாக்கலைச் செய்வதற்கான செயற்திட்டமொன்றை இனங்கண்டிருக்கிறது. இதன் நோக்கம் தமிழ் பேசும் மக்களின் குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்றவர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்வதேயாகும். தற்போதைய அரசியலமைப்பு (1978 அரசியலமைப்பு) வரையறைக்குள் இந்தச் செயற்திட்டம் அமையும். சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவினால் முன்மொழியப்படுகின்ற இச்செயற்திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும். அத்துடன், வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்படும் மாகாண சபைகள் அமைக்கப்படும் வரை இடைக்கால ஏற்பாடொன்றையும் இத்திட்டம் விதந்துரைக்கிறது.

1.3. 1987 ஜூலையில் இந்திய- இலங்கை சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் 1978 அரசியலமைப்புக்கு 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்திருத்தத்தின் விளைவாக இலங்கைபூராவும் மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்பட்டது. பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் இரு பட்டியல்களின் கீழ் அதாவது மாகாணங்களுக்கான பட்டியல், பொதுப் பட்டியல்- குறித்துரைக்கப்பட்டன. ஏனைய சகல அதிகாரங்களும் ஒரு ஒதுக்கீட்டு பட்டியலின் ஊடாக மத்திய அரசாங்கத்துக்கு ஒதுக்கப்பட்டன. இந்த மூன்று பட்டியல்களிலும் உள்ளட்டக்கப்படாத எந்தவொரு விடயதானமும் அல்லது செயற்பாடும் ஒதுக்கீட்டுப் பட்டியலின் கீழ் வருபவையாகவே கருதப்படும்.

1.4. பொதுப்பட்டியலின் ஊடாக மாகாணங்களுக்குப் பரவலாக்கம் செய்யப்பட்ட விடயதானங்களும் செயற்பாடுகளும் எந்த வகையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு சொந்தமானவையாகவே இந்த விடயதானங்களும் செயற்பாடுகளும் கருதப்பட்டு அவற்றை மத்திய அரசாங்கமே அதன் கைகளில் வைத்திருந்தது.

2. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு கூடுதல் பட்ச அதிகாரப் பரவலாக்கலை அனுமதிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள்

2.1. சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பொறுத்தவரை தற்போது இருக்கக்கூடிய குறைபாடுகளை இல்லாமல் செய்து அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

2.2. மாகாணசபைகள் பயனுறுதியுடைய முறையில் செயற்படுவதற்கு வசதியாக போதுமான நிதி அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டும்.

2.2.1. மாகாணங்களின் நோக்கெல்லைக்குள் வருகின்ற எந்தவொரு விடயதானத்தைப் பொறுத்தவரையிலும் மத்திய அரசாங்கத்தினால் மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்திட்டங்களுக்கான சகல நிதிகளும் அந்தந்த மாகாண நிருவாகங்களின் ஊடாகவே மத்திய அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டும்.

3. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் பட்ச அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்படுவதை அனுமதிப்பதற்கு தேவையான விசேட ஏற்பாடுகள்

3.1. கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை இருப்பதாகவும் அந்தத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழு கருதுகிறது.

3.2. வடமாகாணத்தின் நிலைமை அமைதியானதாக இல்லை. வடக்கில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதென்பது அண்மைய எதிர்காலத்தில் சாத்தியமாகப் போவதில்லை. அதனால், அதிகாரப் பரவலாக்கத்தின் பயன்களை வடமாகாணத்தின் மக்களும் அனுபவிப்பதற்கு வகை செய்ய மாற்று ஏற்பாடு ஒன்று அவசியமாகிறது.

3.3. வடக்கில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பதால், அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் வடமாகாணத்தில் இடைக்காலச் சபையொன்றை நிறுவுவதற்கான உகந்த உத்தரவை ஜனாதிபதியால் பிறப்பிக்க முடியும். அத்தகைய இடைக்கால சபை சட்டங்களை இயற்ற வேண்டிய அவசியமும் இருக்கலாம்.

3.4. ஆளுநர் அவருக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை செயற்படுத்தும் விடயத்தில் மாகாணமொன்றின் இடைக்காலச் சபை அவருக்கு உதவியும் ஆலோசனையும் செய்யும். மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் வரை இடைக்கால சபை செயற்படும்.

3.4.1 இடைக்கால சபை அந்த மாகாணத்தின் இனத்துவ குணாம்சத்தை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும்.

3.4.2. எனவே, அரசியல் அனுபவமும் மாகாணத்தினதும் அதன் மக்களினதும் அபிவிருத்தியில் கடப்பாட்டுடன் கூடிய அக்கறையும் கொண்ட மாகாண மக்களினால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நபர்களை உள்ளடக்கியதாக இடைக்காலசபை இருக்கவேண்டும் என்று முன்மொழியப்படுகிறது.

4. அரசியலமைப்பின் அரசகருமமொழிகள் ஏற்பாடுகளின் அமுலாக்கம்

4.1 மொழிகள் தொடர்பிலான அரசியலமைப்பின் 4 ஆவது அத்தியாயத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான சட்டங்களை பாராளுமன்றம் நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் உடனடி நடவக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

4.2. சட்டவாக்க குணாம்சத்திலும் பார்க்க நிருவாக ரீதியான தன்மைகளை எடுக்கக் கூடிய பரிகாரநடவடிக்கைகளை எடுப்பதற்கான பல கட்டங்கள் இருக்கின்றன. பின்வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் அக்கறையுடன் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

(அ) வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரமல்ல, நாடு பூராவும் தமிழ் பேசும் மக்கள் பொலிஸ் நிலையங்களில் தங்கள் சொந்தமொழிகளில் தொடர்பாடல்களைச் செய்து அலுவல்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக போதுமான எண்ணிக்கையில் தமிழ் பொலிஸ் அதிகாரிகளை ஆட்திரட்டல் செய்ய வேண்டும்;

(ஆ) பொதுமக்கள் தங்களது சொந்த மொழிகளில் அமைச்சுகள், அரசாங்க திணைக்களங்கள், சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுடன் அலுவல்களைச் செய்து கொள்வதற்கு வசதியாக ஊழியர்களை நியமித்தல் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் உட்பட சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்;

(இ) மக்களைத் தேடிச் சென்று அதேஇடத்தில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வசதியாக தமிழ் மொழியில் தாராள பரிச்சயமுள்ள அதிகாரிகளைக் கொண்ட நகரும் அலுவலகங்களை கிரமமாக நடத்துவதற்கான ஒழுங்கமைப்புகள் செய்யப்பட வேண்டும்;

(4) மேற்கூறப்பட்டவாறு தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்குகின்றவற்றையொத்த பிரச்சினைகளை வடக்கிலும் கிழக்கிலும் வாழும் சிங்களச் சிறுபான்மையினர் எதிர்நோக்குகிறார்கள். அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

No comments: