Friday, November 30, 2007

குறிக்கோளுக்காக போராடும் புலிகளை கண்மூடித்தனமாக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் அமைப்புக்களுடன் ஒப்பிடுவது பொருந்தாது: உருத்திரகுமாரன்



[சனிக்கிழமை, 01 டிசெம்பர் 2007, 08:09 AM ஈழம்] [புதினம் நிருபர்]
குறிக்கோளுக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளை கண்மூடித்தனமாக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் அமைப்புக்களுடன் ஒப்பிடுவது பொருந்தாது என்று விடுதலைப் புலிகளின் அனைத்துலக சட்ட ஆலோசகர் வி.உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
சுவிசில் கடந்த செவ்வாய்க்கிழமை (27.11.07) நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் அவர் பேசியதாவது:

தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு செயல் உரம் மற்றும் செயல் உருவம் கொடுப்பதற்காகவும்

தமிழ்த் தேசிய இனத்தின் பாரம்பரிய நிலப்பரப்பின் ஆட்புல ஒருமைப்பாட்டை பேணுவதற்காகவும்

தமிழ்த் தேசியத்தின் இறைமையை பிரயோகிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்காகவும்

தமிழ்த் தேசியத்தின் அரசியல் நகர்வுகளுக்கு அடிப்படையான தளங்களாக அமைந்தவர்களாகவும்

தமிழ்த் தேசிய இனத்தின் சமாதான முன்னெடுப்புக்கும் சமரசப் பேச்சுவார்த்தைக்கும் அத்தியாவசியமான சமபல நிலையை உருவாக்குவதற்கு தம் உயிர்களை ஈந்த மாவீரர்களை வணங்க இங்கு கூடியிருக்கிறோம்.

தாயகத்தின் விடியலுக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களை உலகெங்கும் வாழும் தமிழினம் என்றும் மறவாது.

இந்த மாவீரர்கள் எந்த அரசியல் கொள்கைகளுக்காக தமது உயிர்களை ஈகம் செய்தார்களோ, அந்த அரசியல் கொள்கைகளுக்கு நாமும் எம்மை அர்ப்பணித்து, அவர்களின் தியாகங்களை வலுப்படுத்தி அவர்கள் காட்டிய வழியில் சுதந்திர விடியலுக்கு எம்மை அர்ப்பணிப்போம் என்று நாம் இன்று திடசங்கற்பம் பூணுவோம்.

சமாதான காலம்

பேராசிரியர் லிபியின் கூற்றின்படி "ஒரு சமரச அரசியலுக்கு, ஒரு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சம பலநிலை அவசியம்."

தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டது போல்- அக்கினிச்சுவாலையின் மூலம் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வினைக் காண முடியாது என்ற கசப்பான உண்மையை சிங்களப் பேரினவாதத்திற்கு எடுத்துக்காட்டினோம்.

பின்னர் சமபல நிலையில் இருந்துகொண்டு தமிழ் இனத்தின் எழுச்சி வடிவமான- தமிழ் இனத்தின் உணர்ச்சியின் பிரதிபலிப்பான- தமிழீழ விடுதலைப் புலிகள்,

சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்குமாறு,

இராஜதந்திரத்துக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்குமாறு,

போரினால் சிதையுண்ட தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்குமாறு,

போரினால் அகதிகளாக்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்த ஒரு சந்தர்ப்பம் அளிக்குமாறு,

அங்கு ஒரு அபிவிருத்தியைக் கொண்டு வருவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு

2001 ஆம் ஆண்டு ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்து சமரச அறைகூவல் விடுத்தனர்.

அந்த சமரச அறைகூவல், அந்த ஒரு தலைப்பட்சமான போர்நிறுத்தம்- அனைத்துலக சமூகத்தின் அனுசரணையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமாக பரிணமித்தது.

ஏழு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்ததையும் நாம் அறிவோம்.

ஒரு தீவில்- எந்தவொரு அரசியல் சமுதாயத்திலும் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமாயின் அங்கு ஒரு அரசியல் சமுதாயம் இருக்க வேண்டும். ஆனால் சிறிலங்காத் தீவில் ஒன்றுபட்ட சமுதாயம் இல்லை. அங்கு தமிழ்ச் சமுதாயம், சிங்கள சமுதாயம் என இரண்டு வேறுபட்ட சமுதாயங்கள்தான் இருக்கின்றன. ஒன்றுபட்ட ஒரு சமுதாயம் அங்கு இல்லாத காரணத்தினால் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை உடனடியாகக் கொண்டுவர முடியாது என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் உணர்ந்தார்கள்.

ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு அத்தியாவசியமான அந்த ஒன்றுபட்ட சமுதாயத்தை ஒரே இரவில் கட்டி எழுப்ப முடியாது என்பதையும் உணர்ந்தனர்.

அத்தகைய ஒன்றுபட்ட சமுதாயத்தை பரஸ்பர நல்லெண்ணத்தின் மூலமும் பரஸ்பர நம்பிக்கையின் மூலமும்தான் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றுகூறி தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக பேச்சுவார்த்தையின் உடனடிக் குறிக்கோள் இடைக்கால நிர்வாகம்தான் என்பதை அறிவித்தனர்.

சூடானின் "மெக்காக்கா" உடன்படிக்கையானாலும் சரி,

"போகன்வெல்லா" உடன்படிக்கையானாலும் சரி,

வட அயர்லாந்து "குட் பிறைடே" ஒப்பந்தமானாலும் சரி

இந்த அடிப்படையில் ஒரு இடைக்காலத் தீர்வை முன்னிறுத்தியே சமாதான உடன்படிக்கைகளாக எழுப்பப்பட்டன.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிங்களத்தரப்பு வடக்கு-கிழக்கில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது எனக்கூறி தேர்தலில் வெற்றி பெற்றது. பேச்சுவார்த்தைக்கும் வந்தார்கள். பேச்சுவார்த்தைக்கு வந்த பின்னர் தாங்கள் இடைக்கால நிர்வாகம் குறித்து பேசினால் அரச தலைவர் தமது ஆட்சியைக்கலைத்து பேச்சுவார்த்தையையும் குழப்பி விடுவார் என்றார்கள்.

அந்த நிலையிலேயே பேச்சுவார்த்தை குலைந்து விடக்கூடாது என்ற ஓரே காரணத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் நெகிழ்வுதன்மை காட்டி இடைக்கால நிர்வாகத்தை வலியுறுத்தாமல் பெருந்தன்மையாக இருந்தார்கள்.

தமிழர் தாயத்தில் இயல்பு நிலையை தோற்றுவிப்பதற்கு இடைக்கால நிர்வாகத்தை அமைக்க முடியாமல் போனதையடுத்து அதனை மாற்று வழிகளில் அமைத்துக்கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்தனர். இந்த அடிப்படையில்தான் உப குழுக்கள் அமைக்கப்பட்டன. தமிழர் தாயகத்தின், தமிழர் பாரம்பரிய பிரதேசங்களின் அபிவிருத்திக்காவும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்காகவும்தான் இந்த உப குழுக்கள் அமைக்கப்பட்டன.

ஆயினும் இந்த உபகுழுக்களில் சிறிலங்கா அரசையும்- சிங்களத்தரப்பையும்- சம பங்காளர்களாக ஏற்று, இந்த குழுக்களில் அவர்களுக்கும் சம பங்களிப்பு கொடுத்து தமிழர்களின் அலுவல்களில் அவர்களுக்கு "வீட்டோ பவர்" கொடுத்ததையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிங்களத்தரப்பிற்கு சம பங்களிப்பு கொடுக்கப்பட்டு தமிழர்களின் அலுவல்களில், தமிழர்களின் அபிவிருத்தியில் அவர்களுக்கு "வீட்டோ பவர்" கொடுக்கப்பட்டதன் காரணமாக அங்கு எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை.

எடுக்கப்பட்ட முடிவுகளைக்கூட ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் காரணம் காட்டி சிங்களத்தரப்பு அமுல்படுத்தவில்லை.

இப்படி முடிவுகள் எடுக்கப்படாததாலும், எடுக்கப்பட்ட முடிவுகள் அமுல்ப்படுத்தப்படாமையினாலும் உருவாக்கப்பட்ட அந்த குழுக்கள் செயலிழந்து போயின.

இடைக்கால தன்னாட்சி அதிகார சபை

இதனால் தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியையும் மீள்குடியேற்ற புனரமைப்பு வேலைகளையும் செய்வதற்கான புதிய வழியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையின் மூலம் முன்வைத்தார்கள்.

இந்த காலத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்ட முக்கியமான சரத்துக்களை சிங்கள இராணுவம் அமுல்படுத்தவில்லை.

நடந்து முடிந்த சமாதானப் பேச்சுக்களில் எடுத்த முடிவுகளை சிங்களத்தரப்பு அமுல்படுத்தவில்லை.

எனவே போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துங்கள்,

எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்

என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையை அன்று இடைநிறுத்தினார்கள்.

பேச்சுவார்த்தையை இடைநிறுத்தினாலும் சமாதான வழியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் விலகவில்லை. போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து அவர்கள் விலகவில்லை.

2003 ஆம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் 31 ஆம் நாள், இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்குரிய பிரேரணையை தமிழீழ விடுதலைப் புலிகள் சமர்ப்பித்தார்கள். அது சமர்ப்பிக்கப்பட்தைத் தொடர்ந்து அமைச்சுக்களின் பதவிகளை சிறிலங்கா அரச தலைவர் பறித்து ஆட்சியைக் குலைத்து பேச்சுவார்த்தையையும் குலைத்ததை நாம் அறிவோம்.

கடந்த ஏழாண்டுகளாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் நோர்வேத் தரப்பினர் ஒரேயொரு முறைதான் தங்களது பணியை இடைநிறுத்தினார்கள். சிங்கள ஆட்சியாளர்கள் ஒத்துழைக்காமையே அவர்கள் தமது பணியை இடைநிறுத்துவதற்கு காரணமாகும்.

தமிழர் தரப்பில் பழியைப்போட்டு அவர்கள் தமது பணியை இடைநிறுத்தவில்லை. வெளிப்படையாகவே சிங்களத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு எந்தவொரு அக்கறையையும் காட்டவில்லை, பேச்சுவார்த்தைக்கு தேவையான எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை, முடிவை எடுக்கக்கூடிய நிலையிலும் என்ற அடிப்படையில் நோர்வே தனது பங்களிப்பை நிறுத்தியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை முன்வைத்தபோது கூட அந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையில் தமிழர் பிரதேசத்தை பற்றியதாக இருந்தாலும்கூட அதிலும் சிறிலங்கா அரசிற்கு- சிங்களத்தரப்பிற்கு- தமிழீழ விடுதலைப் புலிகள் பெருந்தன்மையாக அங்கத்துவம் வழங்கினர்.

ஆனாலும் உப குழுக்களில் சிங்களத்தரப்பிற்கு சம உரிமை கொடுத்ததன் காரணமாக அவை முடங்கியதால் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அறுதிப்பெரும்பான்மை கேட்டனர். இந்த அறுதிப் பெரும்பான்மையைக்கூட நிரந்தரமாக அவர்கள் கேட்கவில்லை. ஐந்து வருடங்களுக்கு மட்டும்தான் கேட்டார்கள். அந்த ஐந்து வருடங்களின் பின்னர் தேர்தல் மூலம் அங்கு ஒரு புதிய நிர்வாகத்தை அமைப்பதற்கு அவர்கள் வழிசமைத்தார்கள்.

சந்திரிகா பதவியில் இருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பத்து ஆண்டுகளுக்கு நிர்வாகம் தருவேன் என்று கூறியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே அறுதிப்பெரும்பான்மை கோரினார்கள்.

பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டு, பேச்சுவார்த்தை என்ற மாயையைக் காட்டிக்கொண்டு சிங்களத்தரப்பு தனது இராணுவப் பலத்தை அதிகரித்து வந்தது.

அதுமட்டுமல்ல, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் 2003 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்கள் தாக்கியழிக்கப்பட்டு 26 புலிகள் கொல்லப்பட்டனர்.

பேச்சுவார்த்தை குலைந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அந்த நேரத்திலும் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுமையைக் கடைப்பிடித்து சமரச வழிமுறைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டனர்.

அந்த கப்பல்கள் ஆயுதங்களைக் கொண்டு வந்தன என்று சிங்கள அரசால் நியாயம் கூறப்பட்டது. அந்த நியாயம் உண்மையாக இருந்தாலும் சரி, அந்த நியாயம் உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும் சரி, போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தமோ அல்லது எந்தவொரு சமாதான ஒப்பந்தங்களோ ஆயுதங்களைக் கொண்டுவரக்கூடாது என்று கூறவில்லை. அந்த வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் அந்த நியாயம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரண்பட்டதாகும்.

மகாபாரத கண்ணனை விட பெருந்தன்மையான புலிகள்

இந்த நிலையில்தான் புதிய அரசு பதவிக்கு வந்தது. புதிய அரசு பதவிக்கு வந்த பின்னர் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கள் அறிந்தவையே. எனினும் புலிகளையும் சிங்கள அரச தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு போகுமாறு அனைத்துலக சமூகம் மீண்டும் அழுத்தம் கொடுத்தது.

கடைசியாக ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பாரதத்தில் கண்ணன்

முதலில் பாதி இராச்சியம் கேட்டான்,

பாதி இராச்சியம் கிடைக்காவிடில் ஐந்து ஊர்கள் கேட்டான்,

ஐந்து ஊர்கள் கிடைக்காவிடில் ஐந்து வீடுகள் கேட்டான்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணனிலும் பார்க்க பெருந்தன்மையாக நடந்தார்கள்.

கடந்த ஜெனீவா சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது போர்நிறுத்த விதிகளை அமுல்படுத்துங்கள் என்று சிங்களத் தரப்பிடம் தமிழர்கள் கேட்கவில்லை.

போர் நிறுத்தங்களுக்கு முரணாகவுள்ள இராணுவ வலயங்களை அகற்றுங்கள் என்று சிங்களத் தரப்பிடம் கேட்கவில்லை.

போர் நிறுத்தங்களுக்கு முரணான துணைக்குழுக்களின் ஆயுதங்களைக் களையுங்கள் என்று சிங்களத் தரப்பிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரவில்லை.

போர் நிறுத்தத்திற்கு முரணான சம்பூர் ஆக்கரமிப்பை விட்டு விலகுங்கள் என்று சிங்களத் தரப்பிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரவில்லை.

ஆக என்ன கேட்டார்கள்?

நடமாடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக-

வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் பிரிந்திருக்கும் உறவுகளை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்காக,

தலைவர் கூறியதைப் போல- யாழ். குடாநாடு ஒரு திறந்த சிறைச்சாலையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக,

ஆறாண்டுகால சமாதான வழிப்பூக்களில் தமிழ் மக்ளுக்கு கிடைத்த ஒரேயொரு சமாதான பலனான அந்த

ஏ-9 பாதையை திறவுங்கள்

என்றுதான் கேட்டார்கள்.

அந்த ஏ-9 பாதையைக்கூட திறப்பதற்கு சிங்களத்தரப்பு மறுத்து விட்டது.


மாவீரர் துயிலும் இல்லங்கள்
ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது சிங்களத்தரப்பு நோர்வேக்கு அழுத்தம் கொடுத்து உடனடி மனிதாபிமான தேவைகள் மட்டுமல்ல அரசியல் பேச்சும் கதைக்கப்பட வேண்டுமெனக் கோரினார்கள்.

பேச்சுவார்த்தை குலைந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகள், மனிதாபிமான விடயங்களுடன் அரசியல் குறித்தும் பேசுவதற்கும் நாங்கள் தயார் என்று கூறினார்கள்.

அரசியல் விடயம் குறித்து பேசுவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கூறியவுடன் சிங்களத் தரப்பு தம்மிடம் அரசியல் பொதி இல்லை என்றது.

அனைத்துக்கட்சி மாநாடு அமைத்துள்ளோம், 2006 ஆம் ஆண்டு இறுதிக்குள் அந்த அரசியல் பொதி வந்துவிடும், பொதி வந்தவுடன் நாங்கள் அதனைப்பற்றி பேசுவோம் என்றார்கள்.

2007 ஆம் ஆண்டு கடைசிக்கட்டத்தில் நாங்கள் இன்று நின்று கொண்டிருக்கிறோம். இன்றும் சிங்கள அரசிடமிருந்து ஒரு பொதியும் வரவில்லை.

தலைவர் குறிப்பிட்டது போல "சிங்கள இனம் கடந்த ஆறு தசாப்தங்களாக எந்தவொரு பொதியையுமே முன்வைக்கவில்லை" என்பது தமிழ்த் தேசியத்திற்கு நன்கு தெரியும்.

சிறிலங்காத் தீவில் இன்று இனப்பிரச்சினை தொடர்ந்து நடப்பதற்கு முக்கிய காரணம் சிங்கள இனத்திடம் தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பாக ஒரு ஒருமித்த கருத்து இல்லை என்பதே ஆகும்.

அதன் காரணத்தினால்தான் இன்று பேச்சுவார்த்தையை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல முடியாமல் இருக்கின்றது.

எனவே இந்த அடிப்படையால்தான் சுயநிர்ணய உரிமையின் படி எங்கள் உரிமையைக் கேட்டோம்.

தற்போதைய அரசு

இன அழிப்பில் ஈடுபட்டு,

போர்க் குற்றங்களில் ஈடுபட்டு,

மனிதாபிமானக் குற்றங்களில் ஈடுபட்டு,

மனித அடிப்படை உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபட்டு

அதன் கரங்களில்கூட கறை படிந்திருந்தாலும்

ஒரு விடயத்திற்காக இந்த அரசுக்கு நாம் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.

தென்னிலங்கை அரசியல் சக்திகள்

தமிழர் நிலைப்பாடு தொடர்பாக, தமிழர் தேசியப்பிரச்சினை தொடர்பாக தங்கள் நிலைப்பாடு என்னவென்பதில் இந்த அரசு வெளிப்படையாகவே இருந்து வருகிறது. எந்தவொரு தீர்வும் ஒற்றையாட்சியின் கீழ்தான் அமைக்கப்பட வேண்டுமென திரும்பத் திரும்ப இந்த அரசு கூறி வருகிறது.

டட்லி- செல்வா, பண்டா- செல்வா, இந்தோ-சிறிலங்கா உடன்படிக்கைகளில் அங்கீகரிக்கப்பட்ட தமிழர் தாயகம், வடக்கு-கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பூமி என்ற கோட்பாட்டை மீறி தமிழர் தாயத்தை இரண்டாக்கி இன்று கிழக்குப் பிராந்தியத்தில்-தலைவர் தன்னுடைய பேச்சிலே குறிப்பிட்டது போல் "அபிவிருத்தி வலயம், உயர்பாதுகாப்பு வலயம் எனக்கூறி, நான்காவது ஜெனீவா போர்ச் சட்டங்களுக்கு முரணாக சிங்கள மயமாக்கல் நிகழ்வதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

அது மட்டுமல்ல தமிழ்த் தேசிய இனத்தின் சமாதானப் புறாவான, தமிழ்த் தேசிய இனத்தின் பேச்சுவார்த்தையின் தலைவனான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை தமது கொலைப் பட்டியலில் முதன்மைப்படுத்தி வைத்திருந்தனர் என மார்தட்டிக்கூறி வருகின்றனர்.

சிங்களப் பேரினவாதம் தமிழ் இனத்திற்கும் அனைத்துலக சமுதாயத்திற்கும் கொடுக்கும் செய்திதான் என்ன என்பதனை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சிங்கள சமுதாயத்தில் தமிழீழ தேசியப் பிரச்சினை தொடர்பாக எவ்வாறானதொரு தீர்வை எந்த மாதிரியான அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்பதில் கூட அங்கு ஒரு கருத்தொற்றுமை இல்லை. கடந்த தேர்தலில் பேச்சுவார்த்தைக்கு எதிராகப் போட்டியிட்ட அமைச்சருக்கு அதாவது தற்போதைய அரச தலைவருக்கு ஐம்பது விழுக்காட்டுக்கும் மேலான சிங்கள மக்கள் வாக்களித்திருந்ததை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதாவது ஐம்பது விழுக்காட்டுக்கும் மேலான சிங்கள மக்கள் பேச்சுவார்த்தை மூலம் தமிழ்த் தேசியப் பிரச்சினையை தீர்க்க வேண்டாம் என்றுதான் கூறியிருக்கிறார்கள்.

கடந்த பொதுத்தேர்தலை புறக்கணித்ததை கடுமையாக விமர்சித்து வரும் அனைத்துலக சமுதாயம் இந்த கசப்பான உண்மையை கண்டும் காணாமலும் இருக்கின்றது.

ஆழிப்பேரலைக் கட்டமைப்பு

அதுமட்டுமல்ல ஆழிப்பேரலை ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையானவர்கள் வடக்கு-கிழக்கைச் சேர்ந்தவர்கள்.

அந்த ஆழிப்பேரலையைத் தொடர்ந்து அனைத்துலக சமுதாயம் ஆழிப்பேரலைப் பொதுக்கட்டமைப்பை அங்கு முன்வைத்தது. இது எந்தவொரு அதிகாரமும் அற்ற ஒரு பொதுக்கட்டமைப்பாகும்.

ஆயினும் இந்த பொதுக்கட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றார்கள். தமிழ்ச் சமுதாயமும் சிங்கள சமுதாயமும் ஒன்றாகச் சேர்ந்து இயங்கி பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல இந்த சந்தர்ப்பம் வாய்ப்பாக அமையும் என்பதனாலேயே இந்த பொதுக்கட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டார்கள். அதிகாரமற்ற இந்த ஆழிப்பேரலை பொதுக் கட்டமைப்பைக்கூட சிங்களப் பேரினவாதம் நிராகரித்து விட்டது.

சிறிலங்காவுக்கான அனைத்துலகத்தின் உதவி

இனி அடுத்து என்ன செய்வது என்பது தமிழ்ச் சமுதாயத்தின் கரங்களிலும் அனைத்துலக சமுதாயத்தின் கரங்களிலுமே உள்ளது.

சிறிலங்கா அரசாங்கம்- சிங்களத்தரப்பு- இன அழிப்பு படுகொலையை மேற்கொள்வதற்கு அனைத்துலக சமூகம் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்து வருகிறது.

அனைத்துலக மட்டங்களில் இதற்கு பல நியாயங்கள் சொல்லப்படுகின்றன.

பேச்சுக்காக ஆயுதமா?

பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்காகத்தான் சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் கொடுக்கின்றோம் என்று ஒரு நியாயம் கூறுகின்றார்கள்.

அப்படியானால் தமிழர் தரப்பை பலவீனப்படுத்தியா பேச்சுவார்த்தையை முன்னெடுக்கப் போகின்றனர்?

தமிழர் தரப்பை பலவீனப்படுத்தினால் எந்த அடிப்படையில் நாங்கள் தமிழர்களின் உரிமைகளைப் பற்றி பேசுவது?

அகிம்சையின் பால், அறத்தின்பால், தர்மத்தின்பால் 1956 ஆம் ஆண்டு தொடங்கி 1983 ஆம் ஆண்டுவரை தமிழர் தலைமைகள் நடத்திய புறக்கணிப்புக்கள், சத்தியாக்கிரகங்களுக்கு என்ன நடந்தன?

பேச்சுவார்த்தைக்கு அழைப்பே வரவில்லை.

தமிழர் தரப்பை பலவீனப்படுத்திய பின்னர் தமிழர் தரப்பு என்ன அடிப்படையிலேயே தமது நியாயமான உரிமைகளை பேச்சுவார்த்தை மேசையிலே வென்றெடுக்க முடியும்?

பயங்கரவாதத்துக்கு எதிரான உதவிகளா?

அனைத்துலக மட்டத்தில் இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.

தங்களின் உதவிகள் பயங்கரவாதத்திற்கு எதிரான உதவிகள் என்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு விடுதலை அமைப்பு. அனைத்துலகச் சட்டங்களின் கீழ் விடுதலை அமைப்பாக கருதப்பட வேண்டியதொரு அமைப்பு.

தலைவர் குறிப்பிட்டது போல "தரைப்படை, கடற்படை, வான்படை" என்று ஒரு இராணுவம் கொண்டதொரு அமைப்பு.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு நிகழ்வுபூர்வமான அரசை நடத்தி வருகின்றார்கள்.


நிகழ்வில் கலந்து கொண்ட மக்களில் ஒருபகுதியினர்
ஒரு குறிக்கோளுக்காக அவர்கள் போராடி வருகின்றார்கள்.

குறிக்கோளுக்காக போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளை அர்த்தமற்ற முறையில், கண்மூடித்தனமாக,

வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் ஏனைய அமைப்புகளுடன் ஒப்பிட்டு அதை பயங்கரவாதம் என்று கூறுவது ஒருவிதத்திலும் பொருந்தாது.

சிறிலங்கா உண்மையான ஜனநாயக அரசா?

அடுத்ததாக சிறிலங்கா அரசு ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசு என்பதால் நாம் அதற்கு உதவி செய்கிறோம் என்று அனைத்துலக மட்டத்தில் இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.

முதலில் ஜனநாயகம் என்றால் என்ன என்பதனை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

மில்க் கூறியது போல ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் ஏகாதிபத்தியம் அல்ல. ஜனநாயகம் என்பது இன்று சிறுபான்மையாக உள்ள ஒருவர் அல்லது இன்று சிறுபான்மையாக உள்ள இனம் பின்னர் காலச் சக்கரத்தில் ஒரு பெரும்பான்மையாக வந்து தன்னுடைய அரசியல் கருத்துக்களை வெல்வதற்கு வாய்ப்பளிப்பதுதான் ஜனநாயகத்தின் சாராம்சம்.

ஆனால் சிறிலங்காத் தீவில் இனவாதம் வேரோடியிருப்பதால் அங்கு எண்ணிக்கையில் குறைந்த சிறுபான்மையாக உள்ள தமிழினம் என்றுமே நிரந்தர சிறுபான்மையாகத்தான் உள்ளது. அமெரிக்கப் பேராசிரியர்கள் இது குறித்து பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். இலங்கைத் தீவில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலும் தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகத்தான் நடக்கின்றன என்பதே அவர்களுடைய ஒருமித்த கருத்தாகும்.

சிறிலங்காவில் நடைபெற்று வரும் ஜனநாயகம் என்று கூறப்படும் இந்தவிதமான ஜனநாயகத்தில் தமிழர்களுக்கு எந்தவிதமான உரிமையுமில்லை. இப்படியான ஒரு சட்ட ரீதியற்ற ஜனநாயகத்தை காரணமாகக் காட்டிக்கொண்டு அதற்காகத்தான் நாங்கள் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்குவதாக கூறுவது அனைத்துலக சமுதாயம் செய்யும் மிகப்பெரிய பிழையாகும்.

தென்னாசிய நிலைத்தன்மைக்கான உதவிகளா?

தலைவர் இன்று குறிப்பிட்டது போல் ஆசியா இந்த 21 ஆம் நூற்றாண்டில் மிக முக்கியமான பிராந்தியமாக வந்து கொண்டிருக்கிறது. இங்கு பல நாடுகள் தமது கேந்திர நலன்களுக்கான இடங்களை தேடுகின்றன.

இந்த அடிப்படையில் அனைத்துலகம் அடுத்ததாக கூறும் மற்றுமொரு காரணம்- தென்னாசியாவில் ஒரு நிலைத்தன்மையைக் கொண்டுவர வேண்டுமாம். அதற்காகத்தான் சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்குகின்றோம் என்று கூறுகின்றார்கள்.

எந்த அடிப்படையில் அந்த நிலைத்தன்மையை கொண்டுவரப் போகின்றனர்?

சிறிலங்காத் தீவில் இன்னொரு டார்பூரா?

சிறிலங்காத் தீவில் இன்னொரு சரபென்சாவா?

சிறிலங்காத் தீவில் இன்னொரு ருவாண்டாவா?

இந்த அடிப்படையிலா இங்கு ஒரு நிலைத்தன்மையைக் கொண்டுவரப் போகின்றனர்?

நிலைத்தன்மையைப் பற்றி பேசுவதற்கு முன்னர் எந்த சூழ்நிலையில் தென்னாசியாவில் ஒரு அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டுவர முடியும்?

தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டது போல அனைத்துலக சமுதாயம் இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்துள்ளது.

என்னதான் கேந்திர அரசியல் நலன்கள் இருந்தாலும், என்னதான் சுயநலன் இருந்தாலும் பூமிப்பந்து இன்னும் தர்மம் என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கின்றது. உண்மை

தோற்றதாக வரலாறு இல்லை. சத்தியம் சாய்ந்ததாக சரித்திரம் இல்லை. "தர்மம் தனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்" என்றார் உருத்திரகுமாரன

No comments: