Thursday, November 29, 2007

வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கு 10 கட்டளை! * மாணவர்களுக்கு அப்துல் கலாம் யோசனை

இந்தியாவை வளர்ந்த நாடாக மாறுவதற்கு, பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் தேவை. இந்த குறிக்கோளை அடைந்தால், இந்தியா வளர்ந்த நாடாக மாறும்," என்று தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவுரை கூறினார்.

முன்னேற்றத்திற்கு 10 கட்டளைகளைப் பின்பற்றலாம் என்று யோசனையும் கூறினார். சென்னை மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கான தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. சென்னை மாநகரில் உள்ள 36 மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் ஐந்தாயிரம் பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில், தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தினமலர்' வெளியீட்டாளர் இரா.லட்சுமிபதி, தினமலர்' பங்குதாரர் இரா.ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:

தினமலர்' நடத்தும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, மிகவும் நல்ல நிகழ்ச்சி. உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதற்காக தினமலர்' குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்; மாணவர்களையும் வாழ்த்துகிறேன். இன்றைய நிகழ்ச்சியில், இன்றைய இளைய சமுதாயம் வருங்காலத்தைப் பற்றி பயமே இல்லாமல் வாழ வேண்டும்' என்பதே என் கருத்து மூலமாகும். உங்களை காணும் போது பல காட்சிகளைப் பார்த்தேன். ஒரு காட்சியில் 20 வயதிற்குள்ளே இருக்கும் அனைத்து இளைஞர்களையும் பார்க்கிறேன். உங்களுடைய மலர்ந்த முகங்களைப் பார்க்கிறேன். உங்களுக்கு கொடுக்கப்பட்ட கல்வியினால், கல்விப் பயனால் உங்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவர்களாக திகழ, பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளாக திகழ, நாட்டிற்கு நல்ல குடிமகனாக திகழ வாழ்த்துகிறேன். இந்தியா 2020ல் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே நம் நாட்டின் குறிக்கோள்.

வளமான நாடு என்றால், பொருளாதாரம் வளமிக்க, நூறு கோடி மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே நாட்டின் லட்சியம். வேலை இல்லை என்ற நிலை மாறி, நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி, நல்ல இளைஞர்கள் இந்த நாட்டிற்கு தேவை. இளைய சமுதாயம், எண்ண எழுச்சியுள்ள இளைய சமுதாயம் நாட்டின் அரும் பெரும் செல்வமாகும். 2020ல் எப்படி இந்தியா ஒரு வளமான நாடாக மாற வேண்டும் என்ற எண்ணத்தை சமீபத்தில் நான் பாராளுமன்றத்தில் பேசும் போது தெரிவித்திருந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் சிந்தனை ஒன்றுபட்டால், செயல் ஒன்றுபட்டால் லட்சியம் நிறைவேறும். 10 கட்டளைகளைப் பின்பற்றினால் லட்சியம் நிறைவேறும்.

கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக, பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லாருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப் பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

பண்பாடு நிறைந்த தரமான கல்வி, சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

விஞ்ஞானிகளும், அறிவார்ந்த வல்லுனர்களும், தொழில் முதலீட்டாளர்களுக்கும் உகந்த நாடாக, ஏற்ற ஒரு இடமாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் தரமான மருத்துவ வசதி கிடைக்கக்கூடிய நாடாக மாற்ற வேண்டும்.

ஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை களையப்பட்டு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும் நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த அமைதியான, சுகாதாரமான, வளமிக்க, வளர்ச்சி பாதையை நோக்கி பீறுநடை போடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்தி செல்லக் கூடிய தலைவர்களை பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும். மன எழுச்சி அடைந்துள்ள 54 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க, நமது இளைய தலைமுறை எழுச்சி பெற வேண்டும். கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால், அது மாணவர்களின் படைப்புத் திறனையும், ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

சிறுவனாக இருந்த போது நானும் பயந்தேன்!: விழாவில் கலாம் பேசும் போது குறிப்பிட்டதாவது: உங்களைப் போல் நான் சிறுவனாக இருக்கும் போது, என் மனதில் பல பயங்கள் தோன்றின. எனது கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் படிக்கும் போது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற கேள்வி எழுந்தது. நான் ராமநாதபுரம் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற போது, அங்கு மாணவர்கள் அருமையான உடைகளை அணிந்து, ஆங்கிலத்தில் பேசியதைக் கண்டேன். அவர்கள் குழுவில் என்னை சேர்ப்பார்களா என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.

ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்ததும் நல்ல மதிப்பெண்கள் கிடைக்குமா, இன்ஜினியரிங் கல்லூரியில் சேர முடியுமா? என்ற எண்ணங்கள் என்னை வாட்டி எடுத்தன. பத்தாம் வகுப்பில் சென்றவுடன், இந்த எண்ணங்கள் என்னை விட்டு மறைந்து விட்டன. காரணம், எனக்கு கிடைத்த அருமையான பொக்கிஷம் என் ஆசிரியர். அந்த ஆசிரியர், நல்ல லட்சியத்தைக் கொடுத்தார்; நல்ல லட்சியத்தைக் கற்பித்தார். எனது புதிய லட்சியம் ஆரம்பித்தது. இவ்வாறு கலாம் குறிப்பிட்டார்.

இப்படியும் நல்ல மனிதர்கள்: பழைய நிகழ்ச்சி ஒன்றை நினைவு கூர்ந்து கலாம் பேசியதாவது:

தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியை பார்த்ததும் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நான் ஜனாதிபதியாக இருந்தபோது, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்தேன். நான் பயணித்த விமானத்தில், பத்திரிகையாளர்களும் வந்தனர். இரா.கிருஷ்ணமூர்த்தியும் வந்திருந்தார். விமானத்தில் நான் பேட்டி கொடுத்தேன். பத்திரிகையாளர்கள் மிகவும் கடினமான கேள்விகளை எல்லாம் கேட்டனர். எப்போதாவது நல்ல மனிதர்களை பார்த்திருக்கிறீர்களா?' என்று கிருஷ்ணமூர்த்தி என்னிடம் கேள்வி கேட்டார். அதற்கு, அப்போது என்னால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக வந்தபோது, ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அதை பதிலாக கூறுகிறேன்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் அப்போது மூர் மார்க்கெட் இருந்தது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பழைய புத்தகங்களை வாங்குவதற்காக நான் அங்கு செல்வேன். ஒரு நாள் திடீரென்று நீ ராமேஸ்வரம் வர வேண்டும் என்று தகவல் வந்தது. அப்போது, அங்கு புயல் வீசிக் கொண்டிருந்தது. ராமேஸ்வரம் செல்வதற்கு கையில் என்னிடம் பணம் இல்லை. அப்போது நான் எம்.ஐ.டி.,யில் படித்துக் கொண்டிருந்தேன். எம்.ஐ.டி., தலைவர் மற்றும் துணைவேந்தராக லட்சுமணசாமி முதலியார் இருந்தார். அவர் எனக்கு பரிசாக கொடுத்த ஒரு புத்தகத்தை (ஸ்ட்ரென்த் ஆப் மெட்டீரியல்) வைத்திருந்தேன். அதன் விலை 200 ரூபாய்.அந்த புத்தகத்தை மூர் மார்க்கெட்டில் உள்ள கடையில் கொடுத்து, விவரத்தை கூறி, பணம் கிடைக்குமா என்று கேட்டேன். கடைக்காரரும் புத்தகத்தை வாங்கிக் கொண்டு நுாறு ரூபாய் கொடுத்தார். புத்தகத்தை கூர்ந்து பார்த்த கடைக்காரர், துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியார் கையெழுத்து இருக்கிறதே! இது மிகவும் நல்ல புத்தகம். அதை உனக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். எனவே, புத்தகத்தை விற்க மாட்டேன். உனக்கு எப்போது கல்வி உதவித் தொகை கிடைக்கிறதோ, அப்போது வந்து பணத்தை திருப்பி கொடுத்து விட்டு புத்தகத்தை வாங்கிச் செல்' என்றார்.

அவர் பெயர் தட்சிணாமூர்த்தி; மிகவும் நல்ல மனிதர். பிறகு மூன்று மாதம் கழித்து நூறு ரூபாயை கொடுத்து விட்டு மீண்டும் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். இப்படியும் நல்ல மனிதர் இருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டேன். தேவை ஏற்படும்போது உதவி செய்வது தான் நல்ல குணம்.

No comments: