Thursday, November 29, 2007

இலங்கைப்பாராளுமன்றம் தேவையுமில்லை- ஆனால் அங்கு எமக்கு இரங்கல் உரை நிகழ்த்த அனுமதியும் வேண்டும்: புதினத்தின் முரண் வன்மம்

இரங்கல் தெரிவிப்பதிலும் இனப்பாகுபாடு: சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிங்கள பேரினவாத வெறி
[வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 04:21 PM ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களால் படுகொலை செய்யப்படும் தமிழ் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்க மறுத்த சிறிலங்கா நாடாளுமன்றம் கொழும்பு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோருக்கு இன்று இரங்கல் தெரிவித்து தனது பேரினவாத வெறியை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிக்கவே முடியாது சிங்களப் பேரினவாதிகள் நேற்று புதன்கிழமை முட்டுக்கட்டை போட்டிருந்தனர்.

இந்நிலையில் சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வு இன்று வியாழக்கிழமை காலை தொடங்கியது. நுகேகொட குண்டுவெடிப்பில் பலியான சிங்கள மக்களுக்கும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த டக்ளஸ் தேவானாந்தவின் அலுவலகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மாவிலாச்சியில் அண்மையில் உயிரிழந்த நால்வருக்கும் இரங்கல் செலுத்த வேண்டும் என்று ஜே.வி.பியின் விமல் வீரவன்ச கூறினார்.

இதற்கு சபாநாயகர் லொக்கு பண்டார அனுமதி அளித்தார்.

அப்போது, தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு-கிழக்கில் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் சேர்த்து இரங்கல் செலுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார். சபாநாயகரிடம் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றையும் முன்வைத்து உரையாற்ற எழுந்தார்.

சிவாஜிலிங்கம் உரையாற்ற சபாநாயகர் அனுமதி வழங்கினார். அப்போது அரச தரப்பினரும் ஜே.வி.பியினரும் சபாநாயகரை கடுமையாக விமர்சித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் நோக்கி ஆவேசமாகப் பாய்ந்தனர். கைகளைக்காட்டி பெரும் சத்தமிட்டு மிரட்டினர். சிவாஜிலிங்கம் உரையாற்றக்கூடாது என்றும் கத்தினர்.

இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரங்கல் செலுத்துமாறு சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து சிவாஜிலிங்கம் உரையாற்றும் போது கூறியதாவது :

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு இந்த நாடாளுமன்றில் இரங்கல் செலுத்தப்படுவதில்லை. இன்று நாமும் எழுந்து நின்றோம். வன்னியில் வான் குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களுக்கு பலியாகும் தமிழ் மக்களுக்கு இந்த நேரத்தில் இரங்கல் செலுத்தவே நாம் எழுந்து நின்றோம்.

நுகேகொடவில் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

சிவாஜிலிங்கம் இந்த உரையால் சபையில் இருந்த அரச தரப்பு உறுப்பினர்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருந்ததையும் காண முடிந்தது.
puthinam.com

No comments: