Friday, June 15, 2007

அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடு- சில சுமையான பதிவுகள்

அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டு இலங்கை ஒருங்கிணைப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு
[15 - June - 2007] [Font Size - A - A - A]

* சென்னையிலிருந்து இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச் செயலாளர் ஹிதாயத்துல்லா அறிக்கை

சென்னையில் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டுக்கு இலங்கை பேராளர்களை அழைத்து வருவதற்குச் செயற்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முறையாகச் செயற்படத் தவறி விட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மீது பழி சுமத்தியிருப்பதையிட்டு கடும் விசனத்தை வெளியிட்டிருக்கும் அதன் செயலாளர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா `இலங்கை பிரதிநிதிகள் சிலர் தங்கள் நாட்டு அரசியல் மாச்சரியங்களையும், சச்சரவுகளையும் எங்கள் தலையில் போட்டு எம்மை மனச் சங்கடங்களுக்குள் தள்ளிவிட்டனர்' எனவும் வேதனைப்பட்டிருக்கின்றார்.

மாநாட்டுக்கு முன்னரும், பின்னரும் இலங்கையிலும் தமிழகத்திலும் இலங்கைப் பேராளர்களை அழைத்து வரநியமிக்கப்பட்டிருந்த ஒருங்கிணைப்பாளர்கள் நடந்து கொண்ட முரண்பாடுகள் தான் பேராளர்களை நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிட்டதாகவும் ஹிதாயத்துல்லா விடுத்திருக்கும் விரிவான அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றார்.

அந்த அறிக்கை விபரம் வருமாறு:

சென்னையில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கிய மாநாடு நடப்பதற்கு முன்னதாக இலங்கையில் ஒருங்கிணைப்பாளர்களை நியமித்திருந்தோம். அவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து தாங்களாகவே இலங்கை பத்திரிகைகளில் தனித்தனி அறிக்கைகள் வெளியிட்டிருந்தனர். இச்செய்தியை அறிந்தவுடன் எங்கள் மாநாட்டின் குழு சார்பாக இலங்கை சென்று அங்கு செயல்பட்ட இரு அமைப்புகளையும் சந்தித்து சமாதானம் செய்து ஒற்றுமை ஏற்படுத்திவிட்டு, நடைபெறவிருக்கும் அகில உலக இஸ்லாமிய மாநாட்டிற்கு ஒற்றுமையாக முழு அளவில் ஒத்துழைப்புத் தருமாறு கூறிவிட்டு தமிழகம் திரும்பினோம். அதேவேளையில் அங்கு இருசாராரும் தங்களைப் பெரிதுபடுத்தி தனித்தனியே பத்திரிகைகளில் செய்தி வெளியிட்ட விபரம் இலங்கையில் யாவரும் அறிந்த விஷயமாகும்.

மாநாட்டின் முந்தைய நாள் நாங்களும் இலங்கைப் பேராளர்கள் ஒற்றுமையாக மாநாட்டிற்கு வருவார்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பேராளர்கள் விபரப்பட்டியல்களை ஒன்றாகவே தருவார்கள் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையாக எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அவர்கள் பிரிவினைப் பிரச்சினை தொடர்ந்தது.

ஒரு குழுவினர் 75 நபர்களின் பெயர்ப்பட்டியலை மட்டும் எங்களுக்கு அனுப்பியிருந்தனர். அடுத்த பிரிவினர் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் பேராளர்களின் பெயர்ப்பட்டியலை எங்களுக்கு அனுப்பவில்லை.

பட்டியல் கிடைக்கப் பெற்ற முதல் குழுவினர் சென்னை வந்தவுடன் நாங்கள் அவர்கள் தங்குவதற்கான அறைகளை ஒதுக்கியிருந்தோம். அந்த நேரம் அவர்கள் பேராளர்களிடம் வசூலித்த பணத்தை எங்கள் மாநாட்டின் நிர்வாகிகள் கேட்டும் தரவில்லை. பதிவும் செய்யவில்லை. தொடர்ந்து மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலும் அவர்கள் பதிவு செய்யவில்லை. அதனால் அவர்களுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய பேட்ஜ், உணவுப் பொருள் கூப்பனைத் தொடர்ந்து வழங்க முடியாத சூழ்நிலைக்கு எங்களை ஆளாக்கினார்கள்.

அவர்கள் வெளிநாட்டு விருந்தினர்கள் என்பதால் உணவு கூப்பன்கள் இல்லாமலேயே அவர்கள் தங்கியிருந்த அறைகளுக்கும் காலைச் சிற்றுண்டிகளை நேராக அனுப்பி வைத்தோம். மாநாடு நடைபெற்ற இடங்களில் இவர்கள் பதிவு செய்யாததால் கூப்பன் இல்லாத உணவு வரிசைகளை உருவாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். இதன் காரணமாக உள்ளூர் பொதுமக்களும் கூப்பன் இல்லாமல் உணவு அருந்தும் நிலைமையை உருவாக்கினார்கள்.

மேலும், இரண்டாம் நாள் மதியம் உணவு வழங்கும் புதுக்கல்லூரி விடுதியில் சிலரின் பொறுமையின்மை காரணமாகப் பிரச்சினைகளை ஏற்படுத்தினர். அனைத்து நேரங்களிலும் அற்புதமான உணவுகள் வழங்கப்பட்டதாக மாநாட்டிற்கு வந்த அனைவரும் தெரிவித்த நிலைமையில், இவர்களில் சிலர் தொடர்ந்து பிரச்சினை பண்ணிக் கொண்டேயிருந்தனர்.

மாநாடு முடிந்த மறுநாள் பரிசுப் பொருட்களைப் பெறுவதற்காக வேறு வழியின்றி இவர்கள் வசூலித்த மாநாட்டிற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலையேற்பட்டது. அப்பொழுதும் இரண்டு இடங்களில் மாநாட்டின் பரிசுப் பொருட்களைப் பெறுவதற்கு முயற்சி செய்தனர்.

எங்களுக்கு இலங்கைப் பேராளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காத நிலையிலும் பேராளர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் செய்து வந்தோம். மேலும் இலங்கைப் பேராளர்கள் தங்களை அழைத்து வந்த மேற்கண்ட குழுவினர் தங்களிடம் அதிகமாகப் பணம் வசூலித்து ஏமாற்றி விட்டதாக எங்களிடம் முறையிட்டனர். அதில் குறிப்பாக கண்டி, மௌலான சலாவூதின் அவர்கள் எங்களிடம் மிகவும் வேதனையாக குழுத் தலைவர் மீது தனது புகாரினை கூறிவிட்டு எங்களிடம் ஒரு கடிதத்தையும் அளித்து விட்டு சென்று விட்டார். தேவைப்பட்டால் அவரிடமும் விசாரித்துக் கொள்ளலாம் (அவருடைய கடிதத்தின் நகல் இத்துடன் இணைத்துள்ளோம்).

அடுத்ததாக 40 பேரை அழைத்து வந்த குழுவினர்களில் நிலாம் தலைமையில் வந்த 15 நபர்கள் சரியான முறையில் கட்ட வேண்டிய பேராளர்களுக்குரிய கட்டணத்தைச் செலுத்தி பேட்ஜ் மற்றும் உணவுப் கூப்பன்களைப் பெற்று முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அவர்கள் உண்மையான பேராளர்களாக நடந்து கொண்டனர். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

மீதம் 25 பேராளர்களை அழைத்து வந்தவர் தான் வசூலித்த பேராளருக்குரிய கட்டணத்தை மாநாடு இறுதியாக முடியும் வரையிலும் செலுத்தவில்லை. எனினும் அவர்களுக்கு தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கினோம்.

மேலும், தமிழகத்தில் இம்மாநாட்டிற்கு எதிர்ப்பாக இருந்து செயற்பட்ட சிலரின் தூண்டுதலின் பேரில் மாநாடு நடைபெற்ற மூன்று தினங்களும் இலங்கைப் பேராளர்களை அழைத்து வந்த குழுத் தலைவர் இடையூறுகளைச் செய்து கொண்டேயிருந்தார். காவல்துறை அவரைக் கண்காணிக்கும் நிலையை அவரே ஏற்படுத்தினார். மாநாடு முடிந்த மறுநாள் வேறு வழியின்றி பத்து நபருக்கு உரிய கட்டணத்தை மட்டும் செலுத்தி விட்டு இருபத்தைந்து பேராளர்களுக்குரிய பரிசுப் பொருட்களை அலுவலர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பெற்றுச் சென்றார்.

இலங்கைப் போராளர்களை அழைத்து வந்தவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், இவை பயனளிக்காது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதேவேளையில் இலங்கை அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் உண்மையான போராளர்களும் மிகவும் கண்ணியமான முறையில் நடந்து எங்களது மனக் குறையை முற்றிலும் நீங்கினர்.

முக்கியமாக மாநாட்டிற்கு அழைத்துவரப்பட்டவர்களில் பலர் குடும்பத்தோடு தமிழகச் சுற்றுலா வந்தவர்கள் என்றும் அவர்களிடம் பேராளர்களுக்குரிய விமானக் கட்டணத்தை கூடுதலாகப் பெற்றுத் தமிழகத்தில் பல வசதிகள் செய்து தருவோம் என்று அழைத்து வந்து அவர்களைக் குழுத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டனர் என்றும் பின்னர் நாங்கள் தெரிந்து கொண்டோம். தங்கள் தவறுகளை மறைக்க எங்களைப் பொறுப்பாளர்களாக ஆக்கமுயன்று எங்கள் மீது குற்றம் சுமத்தினார்கள் என்பதுதான் உண்மை. மேலும் இதைப்பற்றி இலங்கைப் பத்திரிகைகளில் தங்களை நடுத்தெருவில் மாநாட்டினர் நிறுத்திவிட்டனர் எனக் கூறி தங்களைத் தாங்களே தங்கள் நாட்டில் அசிங்கப்படுத்தியது வெட்கப்பட வேண்டியதாகும். ஜின்னா ஷரிபுதீனுக்கு பாராட்டு வழங்க ஏற்பாடு செய்திருந்தும் அவர் அதைப் புறக்கணித்தன் மூலம் அவர் தான் மாநாட்டை அவமதித்தார். அவருக்குப் பொற்கிழி வழங்குவதாக யாரும் வாக்களிக்கவில்லை. வசதியற்றவர்களுக்கும், சக சமயச் சகோதரர்களுக்கும் மட்டுமே பொற்கிழி வழங்க வேண்டுமென்றும் உயர்மட்டக் குழு முடிவு செய்தது.

இலங்கை அமைச்சர்களை நாங்கள் அழைத்தபோது அவர்கள் இருவருமே மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிரும்புவதாகவே கூறினர். எனவே அவர்களை முதல் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்தோம்.

தமிழக முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அவருக்கு விருது வழங்குவது மட்டுமே நோக்கமாக அழைக்கப்பட்டது. அதில் விருது வழங்கும் தமிழக ஆளுநர், மாநிலங்களவை துணைத்தலைவர் தவிர வேறு யாரும் பேச்சாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பில்லை. உடல்நிலை காரணமாக தமிழக முதல்வரை விரைவில் அனுப்பிவைத்து விடவேண்டும் என்பது எமக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை. இலங்கை அமைச்சர்கள் யாரும் தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இடம்பெறவேண்டுமென்று எங்களைக் கேட்கவும் இல்லை. மேலும் இதில் பாதுகாப்புப் பிரச்சினைகளும் உண்டு. அப்படியிருக்க நாங்கள் வேண்டுமென்று முதல்வர் நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர்களை இடம்பெறச் செய்யவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய்.

இலங்கைப் பிரதிநிதிகளில் சிலர் தங்கள் நாட்டு அரசியல் மாச்சரியங்களையும், சச்சரவுகளையும் எங்கள் தலையில் கொண்டு வந்து வைத்து எங்களை மிகவும் மனச் சங்கடங்களுக்கு ஆளாக்கினார்கள் என்பது தான் உண்மை.

No comments: