Thursday, July 17, 2008

நிமலன் சவுந்தரநாயகம் கொலைக்கு புலிகள் உரிமைகோரியுள்ளனர்!

நிமலன் சவுந்தரநாயகம் கொலைக்கு புலிகள் உரிமைகோரியுள்ளனர்! . புலிகளின் இணையத்தளம் உண்மையை அம்பலப்படுத்தியிருக்கிறது

- சண்முகபாரதி

2000 ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் நிகழ்ந்த தேர்தலில் நிமலன் சவுந்தரநாயகம் மட்டக்களப்பு மாவட்டத்தில்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அத்தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராசசிங்கம் தோற்றுப்போனார். புலிகளால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நிமலன் சவுந்தரநாயகமும் புலிகளால் தான் நியமிக்கப்பட்டவர். எனினும் ஜோசப் பரராசசிங்கம் புலிகள் வாயால் இடும் உத்தரவை தலையால் நிறைவேற்றக்கூடியவர். எனவே நிமலன் சவுந்தரநாயகம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, தேர்தலில் அவருக்கு அடுத்ததாக வந்த ஜோசப் பரராசசிங்கத்திற்கு வழிவிடும்படி புலிகளால் உத்தரவிடப்பட்டது. ஆனால் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றிருந்த நிமலன் சவுந்தரநாயகம் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த புலிகள் 06.11.2000 இல் நிமலன் சவுந்தரநாயகத்தை தெருவில் வைத்து நாயைச் சுடுவது போல சுட்டுக்கொலைசெய்து ஜோசப் பரராசசிங்கத்தைக் எம்.பியாக்கிவிட்டனர். அந்தக் கொலையை கண்டித்து, நிமலன் சவுந்தரநாயத்திற்கு வாக்களித்த மக்கள் பல ஆர்ப்பாட்டங்களை அந்த நேரத்தில் நடாத்தினர். இதனால் நெருக்கடிக்குள்ளான புலிகள் தாம் அந்தக் கொலையைச் செய்யவில்லையென்றும் இராணுவமே அந்தக் கொலையைச செய்ததென்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு தமது கொலைக்கரங்களை மூடிமறைத்துவிட்டனர். ஆனால் உண்மை ஒருபோதும் உறங்குவதில்லைஎன்று சொல்வார்கள். அதுபோல உண்மை இப்பொழுது வெளிவந்துவிட்டது.

ஜூலை மாதம் 12 ந் திகதி புலிகளின் நிதர்சனம்இணையத்தளம் வெளியிட்ட செய்தியொன்றில் நிமலன் சவுந்தரநாயகத்தை கருணா தான் கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புலிகள் கடந்தகாலங்களில் கிழக்கு மாகாணத்தில் செய்த படுகொலைகள் எல்லாவற்றையும் கருணாவின் தலையில் போட்டு தப்பிக்கொள்ள முற்பட்டு வருகின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே. 2000 ஆண்டில் புலிகள் இயக்கத்தில் கருணா முக்கிய பொறுப்பில் இருந்ததால், புலிகளே நிமலன் சவுந்தரநாயகம் கொலையின் சூத்திரதாரிகள் என்பதை நிதர்சனம்செய்தி இப்பொழுது உறுதிப்படுத்தியுள்ளது. இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. தமது கடந்தகால செயற்பாடுகள் எல்லாம் தவறானவை என்பதை புலிகளே மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள் போலும்! (ஆனால் அண்மையில் மகேஸ்வரி வேலாயுதத்தை கொலை செய்ததுவரை தொடர்ந்தும் புலிகள் அதையேதான் செய்கிறார்கள்) கருணா அவற்றைச் செய்தது தவறு என்றால், அவர்மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த ஸ்தானம் அவருக்கு கொடுத்து வைத்திருந்தது எதற்காக என்ற கேள்வியும் எழுகின்றது. எனவே மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு புலிகளின் சார்பாகவே கருணா பொறுப்பாக இருந்தபடியால் அங்கு கடந்தகாலங்களில் நடைபெற்ற அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் புலிகளின் தலைமையே பொறுப்பேற்க வேண்டும். தலை இருக்க வாலைப்பிடிப்பது போல, மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch) சர்வதேச மன்னிப்புச்சபை (Amnesty International) போன்ற சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் சில உள்ளுர் மனித உரிமை அமைப்புகளும் கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் புலிகள் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு கருணாவை மட்டும் விசாரிக்க வேண்டும் எனக் கோருவதும், அதேவேளையில் புலித் தலைவர்களுக்கு இலங்கை அரசாங்கம் செங்கம்பளம் விரித்து வரவேற்று பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் எனக் கோருவதும் என்ன வகையான மனித உரிமை நடைமுறையோ தெரியவில்லை.

இலங்கையில் கடந்த காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெயரால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களும், நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதன் பெயரால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களும் என அனைத்துவகை மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. குற்றவாளிகளில் தமிழ், சிங்களம், முஸ்லீம் என பார்க்கமுடியாது. அந்தவகையில் கருணாவும் நிச்சயம் விசாரிக்கப்படத்தான் வேண்டும். ஆனால் 4 ஆண்டுனளுக்கு முன்னர்; புலிகளிலிருந்து பிரிந்து ஜனநாயக அரசியலுக்குத் திரும்பிய அவரை விசாரிப்பதற்கு முன்பாக, இன்னமும் தொடர்ந்து பாசிச கொலைவெறிச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் புலித்தலைமையை கைது செய்து விசாரிப்பது முதன்மையான விடயம் என்பதை இந்த மனித உரிமை ஜாம்பவான்கள் புரிந்து கொள்வது அவசியம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நிதர்னத்தில் வெளிவந்த செய்தி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருனாவின் அடுத்த இலக்கா? சிறந்த அரசியல்வாதியென புகழாரம் செய்யும் மர்மம் என்ன?.

ஜ சனிக்கிழமை 12 யூலை 2008 ஸ ஜ -வே.பவான் ஸ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடவே அது உருவாக்கப்பட்டது. துரதிஸ்டவசமாக அவர்கள் தற்பொழுது விடுதலைப் புலிகளின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள்.சம்பந்தன் ஒரு சிறந்த அரசியல்வாதி. எனினும், அச்சம் காரணமாக அவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை விரைவில் மாற்றமடையும் எனவும் கருணா தனது செவ்வியில் கூறினார்.

இலங்கை விடயத்தில் இந்தியாவின் தலையீடு எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் கருணா , இலங்கை, பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவிகளைப் பெற்றுக்கொள்வதை இந்தியா விரும்பவில்லையெனவும் கூறியுள்ளார்.அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு சிறந்தவொரு அரசியல்வாதியாக விளங்கவேண்டுமெனத் தான் விரும்புவதாகவும் அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் கருணா மேலும் தெரிவித்தார். தனது பாராளுமன்றா அரசியல் பயண்த்துக்கு முன்னர் கிழ்க்கில் எஞ்சியுள்ளா ஒரே மூத்த அரசியல்வாதியான சம்பந்தனை திடீரென பல்டியடித்து புகழ்ந்ததில் உள்ள் ரகசியம் என்ன? ஏலவே கிழக்கின் மூத்த அரசியல்வாதிகளான அரியசந்திர நேரு, ஜோசப் பரராஜ்சிங்கம், நிமலன்சவுந்தர நாயகம் முதலானோர் கருனாவின் உத்தரவுக்கு அமைய சுட்டுக்கொல்லப்பட்டது தெரிந்ததே. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி எள்ளளவும் அறிந்திராத கருணா அதன் உருவாக்கத்தில் தன்னையும் சேர்த்துக்கொண்டது வேடிக்கையானது.தமிழீழ் விடுதலை புலிகள் இயக்கத்தை உருவாக்கியது தான் தானென்றூ சொன்னாலும் இனி ஆச்சரியப்படுவதற்கில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------

2000ம் ஆண்டு நிமலன் சவுந்தரநாயகம் கொலை செய்யப்பட்டபின் வெளியான செய்தி.

இலங்கையில் தமிழ் எம்.பி.சுட்டுக்கொலை
புதன்கிழமை நவம்பர் 8 2000

இலங்கையில் தமிழ் எம்.பி. நிமலன் சவுந்தரநாயகம் செவ்வாய்க்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக் கொன்றனர்.சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் மட்டக்களப்பு தொகுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக் கட்சி சார்பில் போட்டியிட்டுவெற்றி பெற்றவர் நிமலன் சவுந்தரநாயகம்.

இவர் கிழக்கு மட்டக்களப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்று கொண்டிருந்த போது அவரை மர்ம மனிதர்கள் 4 பேர்சுட்டுக் கொன்றனர். கொலையாளிகளும் மோட்டார் சைக்கிளில் வந்துதான் தாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.மோட்டார் சைக்கிளில் அமைச்சருடன் சென்ற பாதுகாவலர் காயம் அடைந்தார். அவர் உடனடியாக எரவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குஅவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.துப்பாக்கியால் சுட்ட குற்றவாளிகள் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.

http://theneeweb.de/

(17th July 2008)

No comments: