Monday, July 7, 2008

ஜூலை 10 புறக்கணிப்பில் தமிழர்களும் பங்கேற்க வேண்டும

ஜூலை 10 புறக்கணிப்பில் தமிழர்களும் பங்கேற்க வேண்டும்: த.தே.கூ. அழைப்பு
[திங்கட்கிழமை, 07 யூலை 2008, 06:30 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 10 ஆம் நாள் மேற்கொள்ளப்படவிருக்கும் பாரிய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த பணிப்புறக்கணிப்பில் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜூலை மாதம் 10 ஆம் நாள் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தவிருக்கும் வேலை நிறுத்தமானது ஏழைத் தொழிலாளர்களின், சாதராண பொதுமக்களின் விரக்தியை, வெறுப்பை, அவர்களின் கஸ்டங்களை, துன்பங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு போராட்டமாகும்.

அந்த வகையில் சகல தொழிற்சங்கங்களும், எந்தவித வேறுபாடும் இன்றி இதில் கலந்துகொள்ள வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுவதுடன், தமிழ் மக்களின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொள்கின்றது.

சிறிலங்கா அரசின் பிழையான கொள்கைகள் எமது நாட்டைத் தோல்வி கண்ட நாடாக்கியுள்ளதுடன், ஏழை மக்களைப் பிச்சா பாத்திரம் ஏந்தும் நிலைக்கும் தள்ளியுள்ளது.

எனவே இன, மத பேதமில்லாமல், கட்சி வேறுபாடுகள் இல்லாமல் சகல தொழிற்சங்கங்களுமே இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு இதனை வெற்றியடையச் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோருகின்றது.

அரசாங்கத்தால் நடத்தப்படும் போரின் பின்னணியில் அரசு தனது பல தவறுகளை மூடி மறைப்பதற்கு முயற்சிக்கின்றது.

இந்த நாட்டில் நீண்ட காலமாக வேரூன்றி வந்திருக்கும் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசால் இற்றை வரையில் ஒரு நியாயமான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை.

அரசால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளையே அரசு முறியடித்து 1988 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டு, அந்த நேரத்திலேயே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது அரசியல் சாசனத்தை ஒரு தீர்வாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இதன் மூலம் ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அரசின் விருப்பமின்றி தெளிவாக எடுத்துக் காட்டப்படுகின்றது. இக் காரணத்தின் நிமித்தமே அரசு தேசியப் பிரச்சினயைத் தீர்ப்பதற்கு இராணுவ நடவடிக்கையைக் கையாள்கின்றது.

ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என நீண்ட காலமாக அனைத்துலக சமூகம் சிறப்பாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இணைத்தலைமை நாடுகள் போன்றவை வலியுறுத்தி வந்திருக்கின்றன.

அவ்விதமான ஒரு நியாயமான தீர்வை முன்வைப்பதாக அரசாங்கத்தால் வாக்குறுதி கொடுக்கப்பட்ட போதிலும், வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் அரசு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு, இராணுவத் தீர்வின் மீதே தனது முழு நம்பிக்கையை வைத்துச் செயற்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அடக்கி ஒடுக்கினால் ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன்வைக்கும் பொறுப்பிலிருந்து தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று அரசாங்கம் நினைக்கின்றது.

நியாயமான அரசியல் தீர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமானால் போருக்காக தற்போது செலவு செய்யப்படும் பாரிய தொகையை அரசு மக்களின் வேறு நியாயமான தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியும்.

போரை நடத்துவதனால் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் நடைபெறும் பாரிய ஊழல்கள் மக்களுக்குத் தெரிந்த விடயமே. போரின் காரணமாக தமிழ், சிங்கள, முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்டுகிறார்கள். பல இளைஞர்கள், படையினரோ அல்லது இயக்கத்தினரோ கொல்லப்படுகிறார்கள். பொது மக்களின் சொத்துக்களுக்குப் பாரிய இழப்புக்கள் ஏற்படுகின்றன. பல இலட்சக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்து அகதிகளாகப் பலவிதமான கஸ்டங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

இவற்றை எல்லாம் உணர்ந்து ஓர் அரசியல் தீர்வைக் கண்டு, போரை நிறுத்தி, போர்ச் செலவீனத்தைக் குறைக்க வேண்டியது அரசின் முதற் கடமை.

அனைத்துலக சந்தையில் மசகு எண்ணெய் விலையேற்றம், அரிசி விலையேற்றம் போன்றவை தான் இலங்கைகயில் ஏற்படும் விலையேற்றத்துக்கும் காரணம் என்று அரசு கூறுகின்றது. அனைத்துலக சந்தையில் விலை அதிகரிப்பு என்பது உண்மை தான். ஆனால், இலங்கையில் எரிபொருள் விலை 20 ரூபா, 30 ரூபாவால் அதிகரிக்கின்ற போதிலும், உதாரணமாக இந்தியாவில் எரிபொருள் ஆக 2 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கின்றது.

எமது நாட்டில் ஏற்படும் விலை உயர்வு வளர்ச்சியடைந்த நாடுகளில் நிலவும் விலைக்குச் சமனாகவே உள்ளது. அவ்வாறான நாடுகளின் தொழிலாளிகள் பெறும் சம்பளம் மிக உயர்ந்ததாகவே உள்ளது. எமது நாட்டில் ஒரு தொழிலாளி பெறும் சம்பளம் அவனது உணவுக்கே போதுமானதாக இல்லை.

மேலும், அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள், ஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் ஜனநாயக விரோதச் செயல்கள் போன்றவை அரசினால் நடத்தப்படும் போரின் பெயராலேயே மேற்கொள்ளப்டுகின்றது.

இச் செயல்கள் மக்களின் சுதந்திரத்தைப் பறித்து பீதியும், பயமும் நிறைந்த ஒரு சூழலில் வாழ்வதற்கு மக்களை நிர்ப்பந்திக்கின்றது.

அனைத்துலகச் சந்தையில் விலையேற்றத்தைச் சாட்டாகக் கூறும் அரசு, நூற்றுக்கும் அதிகமான அமைச்சர்களையும், பிரதி அமைச்சர்களையும், அளவற்ற அரச தலைவர் ஆலோசகர்ளையும் நியமனம் செய்து, இவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காக மக்களின் பெருந்தொகைப் பணத்தை வீண் விரயம் செய்கின்றது என்பதை அரசு இன்னும் உணரவில்லை.

எனவே, மேற்குறிப்பிட்ட தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: