Tuesday, June 3, 2008

கிழக்கில் வளர்ந்து வரும் வாகாபிசமும் அதன் பின்னணியும்: "லக்பிம"

கிழக்கில் வளர்ந்து வரும் வாகாபிசமும் அதன் பின்னணியும்: "லக்பிம"
[செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 08:27 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்]
கிழக்கு இலங்கையில் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் உருவாகி வருவது தொடர்பான ஆதாரங்களையும் அதன் பின்னணி தொடர்பான தகவல்களையும் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" வெளியிட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய பகுதிகள்:

வாகாபிசம் கிழக்கில் தலைதூக்குகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வதில் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.

ஆனால் அதன் யதார்த்தம் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.

அண்மையில் காத்தான்குடி, ஏறாவூர், ஆரையம்பதி ஆகிய பகுதிகளில் முஸ்லிம் - தமிழ் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்கள் இரு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் போட்டியாகும். துணைப் படைக்குழுவின் பிள்ளையானுக்கும் - ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் ஏற்பட்ட பதவிப் போட்டியே அது.

இரு சமூகங்களுக்கும் இடையிலான உறவுகளுக்கும் மத்தியில் அரசியல் வேறுபாடுகள், மற்றும் ஆயுதக்குழுக்களின் பிரசன்னங்களும் அங்கு தோன்றியிருந்தன.

இந்தப் பதற்றமான உறவுகள், பிள்ளையான் குழுவைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து மேலும் அதிகரித்திருந்தது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பிள்ளையான் குழுவின் முக்கிய உறுப்பினர் சாந்தன்.

அவர்கள் இருவரும் நகரத்தின் மத்தியில் ரி-56 ரக துப்பாக்கியினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் பிள்ளையான் குழுவினர் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

ஏறாவூரில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்களால் இரு முஸ்லிம்கள் கடத்தப்பட்டதனைத் தொடர்ந்து நடந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் இந்த வன்முறைகள் மேலும் 3 நாட்களுக்கு நீடித்திருந்தன.

கடந்த திங்கட்கிழமை முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் தம்மை நோக்கிச் சுட்டதாக அதிரடிப்படையினர் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவங்களை தொடர்ந்து ஏறாவூர் பகுதியிலும் அதனை அண்டிய தமிழ்ப் பகுதிகளிலும் இருந்து 300 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்கி வருகின்றதா? என்பதே தற்போதைய விவாதம்.

புலனாய்வுத்துறை அறிக்கைகளின் படி வாகாபிசம் சவூதி அரேபியாவில் இருந்தே இங்கு பரவி வருவதுடன், சவூதி ஆரேபியாவின் நிதி உதவிகள் மூலம் அது வளர்ந்தும் வருகின்றது.

இது காத்தான்குடியிலேயே அதிகம் முனைப்பு பெற்று வருகின்றது.

காத்தான்குடியில் பிறந்த ஒரு முஸ்லிம் தலைவர் தற்போது சவூதிஅரேபியாவில் உள்ள கிங் ஹாலிட் அபா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றார்.

அவரே உள்ளுர் வாகாபிசத்துடனும், அதற்கான அனைத்துலக கொடையாளிகளுடனும் தொடர்புகளை பேணி வருகின்றார். சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பும் அதிக எண்ணிக்கையான இளைஞர்கள் இந்த மதவாதத்தை போதித்து வருகின்றனர்.

இந்த தீவிர மதவாதத்தையும், ஆயுதக்குழுவையும் எதிர்த்த ஒட்டமாவடியைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவரான கேணல் லற்றீஃப் என்பவர் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் மதவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்தப் படுகொலை தொடர்பாக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

சுபைர் எனப்படும் முஸ்லிம் பிரிவினரின் அனைத்து இலங்கை தறீகதுள் முஃப்லிஹீன் எனப்படும் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் வாகாபிசவாதிகளால் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருகின்றனர்.

2004 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 4 ஆம் நாள் சுபைர் பிரிவு முஸ்லிம் மக்களின் மசூதி ஒன்றிற்கு தீ வைக்கப்பட்டது. இந்த மசூதி அதன் மதத்தலைவர் காலம் சென்ற சியாகூல் முபைஹீன் அப்துல்லாவின் தலைமையின் கீழ் இருந்து வந்தது. அவரைப் பயில்வான் என அழைப்பதுண்டு.

பயில்வான் வாகாபிசத்தை எதிர்த்தவர். இதனைத் தொடர்ந்து சுபைர் பிரிவை சேர்ந்தவர்கள் ஒர்தோடொக்ஸ் பிரிவினாரின் மசூதி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது வாகாபிசவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சுபைர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என சுபைர் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காத்தான்குடியில் மேலும் ஒரு வன்முறை வெடித்தது. அந்தச் சம்பவத்தில் ஒர்தோடொக்ஸ் பிரிவினர் சுபைர் பிரிவினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். பயில்வான் மரணமடைந்ததைத் தொடர்ந்து வன்முறை வெடித்திருந்தது. பயில்வானின் சடலம் புதைக்கப்பட்ட மயானத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என மதவாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்தச் சம்பவத்தில் காவல்துறையினருடன் நடைபெற்ற மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்திருந்தனர். வாகாபிசவாதிகள் சுபைர் பிரிவினரின் நூற்றுக்கணக்கான வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் தீயிட்டுக்கொளுத்தியிருந்தனர். அதன் இழப்பு 600 மில்லியன் ரூபாய்களாகும்.

காத்தான்குடியில் இருந்து சுபைர் பிரிவைச் சேர்ந்த 400 குடும்பங்கள் விரட்டியடிக்கப்பட்டன. சிறிலங்கா தலைமை நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அவர்களின் மீள் வரவை வாகாபிசவாதிகள் தடுத்திருந்தனர்.

அமைச்சரான அமீர் அலி என்பவர் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் தெரிவாகி இருந்தாலும் பின்னர் அரசின் சலுகைகளினால் அதன் பக்கம் தாவியிருந்தார். அவரே முஸ்லிம் ஆயுதக்குழு ஒன்றின் உருவாக்கத்திற்கான முக்கிய நபராக இருப்பதாக உள்ளுர்வாசிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

முஸ்லிம் ஆயுதக்குழுவினர் எம்மால் உருவாக்கப்படவில்லை, தாமாகவே உருவாகியவை என தனது பெயரை குறிப்பிட விரும்பாத மற்றுமொரு தமிழ் பொதுமகன் கருத்து தெரிவித்துள்ளார்.

அமீர் அலி தனது ஆயுதக்குழுக்களை முஸ்லிம் காங்கிரசை மிரட்டுவதற்கும், கறுவாக்கேணி பகுதியில் கருணா குழுவுடன் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றார்.

எனினும் அமீர் அலிக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் துணைப்படையின் தயவுகள் ஏன் தேவை என்பது முக்கியமான கேள்வி.

மற்றுமொரு தேர்தலில் அரசு தப்பிப் பிழைப்பதற்கு ஆயுதக்குழுக்கள் தேவை.

அவை சிறுபான்மை மக்களின் வாக்குகளை வன்முறையான வழிகளில் பெற்றுக்கொடுக்கக் கூடியவை.

பிள்ளையானுடன் அரசு கூட்டுச் சேர்ந்துள்ளது. ஒரு நேர்மையான தேர்தலுக்கான சந்தர்ப்பத்தை அறவே இல்லாமல் செய்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: