Saturday, May 31, 2008

58 ஆம் ஆண்டு இனப்படுகொலை- ஒருபக்கப்பார்வையும் ஒரேமாதிரியான புலம்பலும்

58 ஆம் ஆண்டு இனப்படுகொலை ஒரு தற்செயல் நிகழ்வல்ல- வரலாற்றின் முரண்பாடே: பா.நடேசன் விளக்கம்
[சனிக்கிழமை, 31 மே 2008, 09:58 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
1958 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல- இலங்கைத் தீவின் வரலாறுகளில் தொடரும் முரண்பாடு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கம் அளித்துள்ளார்.

"58 இனவெறிக்கு அகவை 50" நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்பு உரை

தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக இந்த விடுதலைப் போராட்டத்திற்கு முக்கிய காரணியாக இருக்கின்ற- இருந்து வருகின்ற 1958 ஆம் ஆண்டு இனவெறித் தாக்குதல்கள் தொடர்பான இந்த அரங்க நிகழ்வுகள் உண்மையாக எல்லோரது மனங்களிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது.

எல்லோரினது உள்ளங்களிலும் இன உணர்வு தூண்டப்பெற்று விடுதலைக்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்ற விடுதலை உணர்வில் உந்தப்படுகின்ற சூழலை உருவாக்குகின்ற நிகழ்வாக இது இருந்தது எனலாம்.

1958 ஆம் ஆண்டு இனவெறித்தாக்குதலானது தற்செயலாக நிகழ்ந்த சம்பவம் இல்லை.

இலங்கைத்தீவின் வரலாற்றில்

எந்த தொல்லியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி,

மானிடவியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி,

வரலாற்றியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி,

அல்லது சமூகவியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி

அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற ஒரு முக்கியமான விடயம் இலங்கைத்தீவில் இரண்டு தேசிய இனங்கள், வரலாற்று ரீதியாக இருந்து வருகின்றன என்பதுவே.

அந்த இரண்டு தேசிய இனங்களுக்கு இடையில் வரலாற்று ரீதியாக

ஒவ்வொரு தேசிய இனமும்

வெவ்வேறு மொழிகள்,

வெவ்வேறு பண்பாடுகள்,

வெவ்வேறு பொருளாதார வாழ்க்கை முறைகள்

வெவ்வேறு சமூகக் கட்டமைப்புக்களைக்கொண்ட

வெவ்வேறு தேசிய இனங்கள் என்பதை இன்று அனைவருமே உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்கின்றனர்.

இந்த இரண்டு தேசிய இனங்களுக்கும் வரலாற்று ரீதியாக பல முரண்பாடுகள் காலத்திற்குக் காலம் தோன்றுவது உண்டு.

அதன் தொடர்ச்சியாகத் தான் 1958 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்ட இனவெறித்தாக்குதல் நடவடிக்கையாகும்.

இந்த இனவெறித் தாக்குதல் என்பது சிங்களப் பேரினவாதத்தின் தற்செயலாக, உணர்ச்சிகளாக உந்தப்பட்டு அல்லது ஏதாவதொரு காரணிகளுக்காக ஏற்பட்ட விடயமல்ல.

வரலாற்று ரீதியாக சிங்கள ஆட்சியாளர்கள் சிங்களப் பேரினவாதிகள்

திட்டமிட்ட ஒரு கொள்கை வகுப்பின் அடிப்படையில்

திட்டமிட்டு செயற்படுத்திய ஒரு நிகழ்வாகும்.

இந்த இலங்கைத்தீவை முற்று முழுதாக சிங்களப் பேரினவாத அல்லது சிங்கள நாடாக மாற்றி அமைப்பதற்காக, எண்ணிக்கையில் குறைந்த தமிழ்த்தேசிய இனத்தை அழிப்பதற்காக- மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் 1958 ஆம் ஆண்டு இனப்படுகொலை.

வரலாற்று ரீதியாக ஒரு தேசிய இனத்திற்கு அதன் விழுமியங்கள் முக்கியமானவை.

அந்த விழுமியங்களில் மொழி என்பது மிக மிக முக்கியம்.

மொழி, நிலம், பண்பாடு, அவர்களின் வாழ்க்கை முறை எனப்படும் அந்த தேசிய இனத்திற்கான அடையாளங்களில் முக்கியமானது மொழி.

நாம் தமிழ் மொழியைப் பேசுகின்றபடியால் தான் தமிழர்கள்- ஆங்கிலத்தைப் பேசுகின்றவர்கள் ஆங்கிலேயர்கள்- பிரான்சிய மொழியைப் பேசுகின்றவர்கள் பிரான்சியர்கள்.

எந்த எந்த மொழியை எந்த மக்கள் பேசுகின்றார்களோ அவர்கள் அந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த மொழியோடு சேர்ந்த பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை என்று தொடர்ந்து கொண்டே போகும்.

அந்த வகையில் இலங்கைத் தீவில் வரலாற்று ரீதியாக தமிழ்த் தேசிய இனத்தவர் வாழ்ந்து வருகின்ற பிரதேசங்களில் அவர்களை அழிப்பதோடு மட்டுமல்லாது அவர்களின் மொழியை அழிப்பதன் ஊடாக சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளலாம் என்ற நீண்டகால கொள்கை வகுப்பின் ஓர் பகுதியாகத்தான் 1956 ஆம் ஆண்டு அரச கரும மொழியாக தனிச்சிங்கள சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

சிங்கள மொழியினை அரச மொழியாக கொண்டு வந்தது அரச அலுவலகங்களில் வேலை பார்ப்பதற்கு மட்டும் அன்று.

தனிச் சிங்களச் சட்டம் அதாவது சிங்களம் மட்டுமே இலங்கையின் அரச கரும மொழி என்று கொண்டு வந்தமையானது உன்மையில் தமிழ் மக்களை மொழியியல் ரீதியாக படிப்படியாக மாற்றுவது.

மேலும் தமிழ்ப் பிரதேசங்களில் அந்த மொழியைப் புகுத்தி அதன் ஊடாக அங்கே உள்ளவர்கள் சிங்களத்தில் எல்லாவற்றையும் தொடங்கும் பொழுது இயல்பாகவே அந்த இனம் படிப்படிப்படியாக சிங்கள மயப்படுத்தப்படும்.

வரலாற்றில் பல நாடுகளில் இப்படியான எடுத்துக்காட்டுக்களை நாம் சொல்லலாம்.

தமிழர் தாயக பூர்வீக பூமியாக இருந்த நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போன்ற பல பிரதேசங்கள் இன்று சிங்களப் பிரதேசமாக மாற்றப்பட்டு தமிழர்களாக வாழ்ந்த எம் மக்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களை எவ்வாறு சிங்களவர்களாக்கலாம் என்பது நன்றாக சிங்களப் பேரினவாதத்திற்குத் தெரியும்.

இது பண்டாரநாயக்காவிற்கும் நன்றாகத் தெரியும். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கும் தெரியும். அவர்கள் இதனை நன்றாக தெரிந்து கொண்டுதான் 1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்கினர்.

தமிழர்களை அரச தொழில்களுக்கு விருப்பம் கொள்ளச் செய்கின்ற ஒரு முறைதான் அந்தப்பிரதேசத்தில் கல்வி ஊடாக இருந்து வருகின்றது.

அதன் ஊடாக அங்குள்ள மக்கள் அரச உத்தியோகத்தர்களாகப் போகின்ற போது இயல்பாகவே சிங்களம் படிப்பது மட்டுமல்ல தமிழர்கள் தங்களின் பிள்ளைகளையும் அரச தொழில்களுக்கு சேர்ப்பதற்காக பிள்ளைகளுக்குக் கூட சிங்களம் கற்பிக்க தூண்டலாம் என்ற மிகவும் சூழ்ச்சிகரமான நீண்ட காலத்திட்டம்தான் அடிப்படையிலேயே 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதனை ஒரு தற்செயலான நிகழ்வாகப் பார்க்கக்கூடாது. வரலாறு எமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. எமது இனத்தின் முக்கிய அடையாளமான மொழி மீது கை வைத்ததனை எதிர்த்து அன்றைய தமிழ்த் தலைவர்கள் அதற்கு எதிரான போராட்டங்களை அகிம்சை முறையில் தொடங்கிய போதுதான் எமது மக்கள் மீது இந்தப் படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அன்றைய அரசியல் தலைவர்கள் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டன.

1958 ஆம் ஆண்டு படுகொலை என்பது அதாவது ஐரோப்பியர்கள் இங்கிருந்து சென்ற பின்னர் முதன் முதலாக சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நன்கு திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட ரீதியில், சிங்கள அரச படைகளின் உதவியுடன் சிங்களக்குண்டர்களால் எமது மக்கள் மீது படுகொலைகளும் காடைத்தனங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

1958 ஆம் ஆண்டு இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்த் தாயின் கதையை எமது தேசியத் தலைவர் கேட்டு எவ்வாறு விடுதலை உணர்வைப் பெற்றார்கள் என்பதனை இங்கு நடந்த அரங்க நிகழ்வில் அதனை சுட்டிக்காட்டினார்கள்.

1958 ஆம் ஆண்டு இனப்படுகொலை என்பது தமிழ் மக்களின் வரலாற்றில் ஒருவாராலும் மறக்கமுடியாது.

ஏனெனில் அரச பயங்கரவாதம் அதாவது சிங்கள அரச பயங்கரவாதம் முதலாவதாக தலைநகரில் இருந்து தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்ற சிங்களப் பிரதேசங்களில் எல்லாம் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது மட்டுமல்ல அவர்களுக்கு போதுமான அளவு பாதுகாப்புக்கூட கொடுக்கப்படவில்லை.

தமிழ் மக்கள் கொழும்பில் இருந்து அடித்து விரட்டப்பட்ட போது அனைவரும் ஒரு சரஸ்வதி மண்டபத்திற்கு ஓடிச்சென்றனர். அங்கும் பாதுகாப்பு இல்லை என்று றோயல் கல்லூரிக்குச் சென்றனர். அங்கே உள்ள படித்த தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அன்றைய மகா தேசாதிபதியை சந்தித்த போது இங்கு பாதுகாப்பில்லை நீங்கள் கப்பலால் செல்லுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

அப்படியாக அந்த சிங்கள அரசு தனது படைகளை வைத்துக்கொண்டு தமிழ் மக்களை அவர்களின் தாயகப் பிரதேசத்திற்கு கப்பலில் அனுப்பினர்.

அகதிகளாக எமது மக்கள் வந்தனர். அவர்கள் இன்றும் எமது பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது ஒரு முறையல்ல பல முறை நிகழ்ந்திருக்கிறது.

1958 ஆம் ஆண்டில் மட்டுமல்ல 1981 இலும் 1983 இலும் இனப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன.

மலையக மக்களைக் கூட சிங்களவர்கள் அடித்துக் கலைத்தார்கள். மலையகத் தமிழ்மக்கள் தமது இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி மலையகத்தில் உழைத்திருக்கும் வரலாறு இருக்கின்றது.

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகு எலும்பாக இருப்பவர்கள் தமிழர்கள். அவர்கள் அங்கே அடித்து விரட்டப்பட்டார்கள்.

இத்தகைய செயற்பாடுகளை- படுகொலைகளை நாம் தொடர்ந்து இடம்பெற அனுமதிக்கமுடியாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

1983 படுகொலை நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ளனர்.

அப்போது சிங்கள அரச படைகள் அனைத்துமாக சிங்கள இராணுவம், சிங்களக் கடற்படை, வான்படை, சிங்களக் காவல்துறை ஆகியன திட்டமிட்டு தமிழர்களின் உயிர்களைப் பலியெடுத்தது. தமிழர்களது உடமைகள் சூறையாடப்பட்டன.

சிங்கள அரச படைகள் கொழும்பிலும் மற்றும் தமிழர் வாழிடம் அனைத்துக்கும் சென்று நேரடியாகக் குண்டர்களுடன் சேர்ந்து தமிழர்களின் வீடுகளை அழித்தது மட்டுமல்ல இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகித்த தமிழர்களின் தொழிற்சாலைகள் எல்லாம் எரிக்கப்பட்டன.

அன்றைய அரச தலைவராக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தன கூறினார்- "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என்று.

ஓர் நாட்டின் அரச தலைவர் அந்த நாட்டில் இருக்கின்ற மற்றொரு தேசிய இனத்திற்கு எதிராக இப்படியான வசனத்தை வானொலி ஊடாகக் கூறினார். இது எதனை எடுத்துக்காட்டுகின்றது என்றால் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது படையெடுக்கின்ற போதும் அதை ஆக்கிரமிக்கின்ற போதும் அந்நாட்டிற்கு எதிராக விடுக்கின்ற அறைகூவல் போன்றதே.

சிங்களவர்களின் அடிமன உள்ளக்கிடங்கில் இருந்தது வெளிவந்தது என்னவென்றால் தமிழ்த் தேசிய இனம் வேறு - சிங்களத் தேசிய இனம் வேறு என்பதுதான்.

தமிழீழம் வேறு

சிங்கள நாடு வேறு

என்பது தான்.

இனப் படுகொலையின் ஊடாக எமது மக்களை அழிப்பதுடன் நின்றுவிடாது எமது நிலத்தை ஆக்கிரமிக்கவும் விரும்புகின்றார்கள்.

தமிழ் மக்களை அழிப்பதற்காக சிங்களப் பேரினவாதம் ஒரு நீண்ட காலத்திட்டத்தினை வைத்துக்கொண்டிருக்கிறது.

அவர்கள் இனவெறித்தாக்குதல்களை காலத்திற்கு காலம் கட்டவிழ்த்து விடுவது மட்டுமல்ல எமது பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்குக்கூட அவர்களின் திட்டங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

ஒரு பக்கம் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கத்தில் தென் தமிழீழத்தில் துண்டு துண்டாக எமது நிலம் சிங்களக் குடியேற்றமாக மாற்றப்படுகின்றது.

பட்டிப்பளை என்று சொல்லப்படுகின்ற எமது தமிழ்ப்பிரதேசம் இப்பொழுது கல்லோயாவாக மாற்றப்பட்டு முற்று முழுதாக சிங்கள மயப்படுத்தப்பட்டிருக்கிறது.

கொல்லன்வெளி எனச் சொல்லப்படுகின்ற இடங்கள் சிங்களப்பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.

குடியேற்றம் மட்டுமல்ல தமிழர்கள் குடியேற்றங்களில் மக்களை இராணுவத்தினர் துரத்திவிட்டு இரவோடு இரவாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர்.

இது எமது கண்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கிற வரலாறு. காலங்காலமாக பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை கந்தளாயில் இருந்து இரவோடு இரவாக சிங்களக் காவல்துறையினர் கலைத்தனர்.

இதே போல தென்தமிழீழத்தில் ஒவ்வொன்று ஒவ்வொன்றாக சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

அம்பாறையையும் மட்டக்களப்பையும் துண்டு போடுவதும்

திருகோணமலையையும் மட்டக்களப்பையும் துண்டு போடுவதும்

திருகோணமலையையும் வட தமிழீழத்தையும் துண்டு போடுவதும்

என தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள மயமாக்குவதே சிங்களப் பயங்கரவாதத்தின் நீண்ட காலக்கொள்கையாகும்.

இலங்கையின் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உண்மை நிலை இது தான்.

மணலாறு சிலோன் தியேட்டரில் பூர்வீகமாக இருந்த மக்கள் சிங்களக் காடையர்களால் அடித்து விரட்டப்பட்டு தற்போது முள்ளியவளையிலும் தண்ணீரூற்றுப் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

சிங்கள இனவாத அரசானது சிங்களக் குடியேற்றங்களை நிறுவி அதற்குப் பாதுகாப்பாக இராணுவ முகாம்களை நிறுவி நீண்ட கால இன அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது.

வரலாறு எமக்குப் பாடங்களைக் கற்றுத்தருகின்றது. ஒவ்வொரு இன அழிப்புக்கு எதிராக அன்றைய எமது அரசியல் தலைவர்கள் அகிம்சை வழியில் போராடிய போதும் எதுவித பலனும் கிடைக்கவில்லை.

இறுதியாக மக்களிடம் அன்றைய தமிழ்த் தலைவர்கள் கேட்டார்கள், "எமக்கு தமிழீழ தனியரசுதான் தேவை. இதற்கு நீங்கள் சம்மதமா?" என்று.

மக்கள் அப்போது நடந்த ஜனநாயகத் தேர்தலின் ஊடாக தமிழீழத் தனி அரசு தான் எமக்கு தேவை என ஆணையைத் தந்தார்கள்.

அது மட்டுமல்ல தொடர்ந்து நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் ஆணையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.

அதாவது, அகிம்சை வழியில் அபிலாசைகள்- எதிர்ப்பார்ப்புக்களை- சிங்களவர்களிடம் இருந்து ஒருபோதும் பெற முடியாது என்பது கடந்தகால வரலாறு.

அதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலின் கீழ் சுதந்திர தமிழீழ தேசத்தினை அமைப்பதற்காக விடுதலைப் போராட்டத்தினை நடத்தி மிகப்பெரிய அர்ப்பணிப்புக்களையும் சாதனைகளையும் செய்கின்றார்கள், தியாகங்களைப் புரிகிறார்கள்.

தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக சகலவற்றையும் அர்ப்பணிக்கின்ற விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்கிறோம் நாம். இதனை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே யதார்த்தம்.

புலம்பெயர்ந்த வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களும் இங்கு வாழ்கின்ற மக்களும் தனியரசுதான் வேண்டும் என்று சொல்கிறார்கள். சிறிலங்கா அரசிற்கு எத்தனையோ பெரிய வல்லரசுகள் உதவி செய்கிறது.

ஆனாலும் கூட முப்பது வருடங்களாக விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது உள்ளது. சிலவேளைகளில் நாம் சில தந்திரோபாய பின்வாங்குதல்களை மேற்கொண்டு அதன்பின்னர் அதைவிட இரட்டிப்புப் பாய்ச்சல்களை மேற்கொள்வது வழக்கம். இது எமது போரியல் தந்திரோபாயமாகும்.

எமது இயக்கத்தின் வளர்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும் சிங்கள இராணுவத்திற்கு ஏற்படுகின்ற தோல்வியில் தெரிகிறது.

சிங்கள அரசினது திட்டமாக தமிழர் தாயகப்பகுதிகளை முற்று முழுதாக கைப்பற்றி முழு இலங்கைத் தீவினையும் சிங்கள மயப்படுத்துவதேயாகும். இதற்கு எதிராக உலகத்தில் வாழ்கின்ற எட்டுக்கோடி தமிழர்களும் ஒன்றுபட்டு எழ வேண்டும் என்றார் பா. நடேசன்.

No comments: