Wednesday, October 15, 2008

WAR

இராணுவத்திற்கு ஆதரவு, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு - சஜித் பிரேமதாஸ
புதன், 15 அக்டோபர் 2008, 08:04 மணி தமிழீழம் [கொழும்பு நிருபர் மயூரன்]
நாட்டை கூறுபோடும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எமது பாதுகாப்புப் படையினர் பாரிய பதிலடி கொடுத்த வண்ணமுள்ளனர். நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்து யுத்த களத்தில் போரிடும் முப்படையினருக்கு எமது ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் எப்போதுமே உண்டு. 

ஆனால் யுத்தத்துக்கு தூபம் போட்டு அதன் மூலம் பிழைப்பு நடத்த நினைக்கும் இந்த அரசாங்கத்தின் கபட நாடகத்துக்கு நாம் ஒரு போதும் இடங்கொடுக்க மாட்டோம், இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 

ஹிரியால தேர்தல் தொகுதியில் செயற்படுத்தப்படவுள்ள "ஜன சுவய'' அபிவிருத்தித் திட்டம் குறித்து அப்பகுதி மக்களுக்கு தெளிவுறுத்தும் கூட்டம் ஒன்று இப்பாகமுவ நகரில் அண்மையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,இன்று சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவற்றை உவமைகளாக காட்டி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளே சிறி லங்காவில் காணப்படுகின்றனர். 

அவர்களுக்கு தேவைப்படுவது மக்களை முட்டாள்களாக்கி அரச பதவிகளில் அமருவதாகும். ஆனால் நானோ உண்மையை பேசி நேரிய அரசியல் பாதை வழியாக செல்லவே விரும்புகின்றேன். மக்களுக்கு பசப்பு வார்த்தைகளையும் பொய்யான உறுதி மொழிகளையும் வழங்கி அவர்களை ஏமாற்றுகின்ற அரசியல் அதிகாரமே இப்போது எமது நாட்டில் மேலோங்கியுள்ளது. 

ஆனால் எமது மக்கள் தற்போது இவ்வாறான போலியான அரசியல்வாதிகளை இனங்கண்டுள்ளார்கள். மக்களை ஒவ்வொரு நாளும் ஏமாற்றுவதென்பது முடியாத காரியம். நாட்டின் பாதுகாப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதைக்கின்றனர். எனினும் எமது இராணுவ வீரர்கள் தமது மனைவி, பிள்ளைகள், பெற்றோர்களிடமிருந்து விடைபெற்று யுத்த களத்தில் போர் புரிகின்றனர். எனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் இரு யுத்தங்கள் இடம்பெற்றன. 

ஆயினும் அவர் மக்களுக்கான உதவி செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்களை கைவிட வில்லை. ஒருபுறம் யுத்தத்தை நடத்திக்கொண்டு மறுபுறம் மக்களுக்கு வீடு, வாசல், தொழில் வாய்ப்புக்கள், பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை ஆகியவற்றை தாராளமாக பெற்றுக் கொடுத்தார். 

நகரங்களின் தொழிற்றுறைகளை கிராமங்களுக்கும் உள்வாங்கினார். இரண்டு யுத்தங்கள் அன்று இடம்பெற்ற பொழுதும் அவர் மக்களை நட்டாற்றில் நிர்க்கதியாக்காமல் நாட்டையும் மக்களையும் காப்பாற்றினார். ஆனால் இன்றைய மகிந்தவின் ஆட்சியில் நடப்பதோ அவற்றுக்கு நேர் மாறானது என்பதை நான் கூறித்தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை. நாட்டின் யதார்த்த நிலையை எமது மக்கள் நன்கறிவார்கள் என்றார்.

எந்த நாட்டின் அளுத்தங்களுக்கும் உட்படாமல் யுத்தத்தை தொடரவேண்டும் - விமல்
புதன், 15 அக்டோபர் 2008, 08:07 மணி தமிழீழம் [கொழும்பு நிருபர் மயூரன்]

தமிழீழ விடுதலைப் புலிகளை தோல்வியிலிருந்து பாதுகாப்பதற்கு இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் சிறி லங்காப் பிரச்சினையில் தலையிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவினதோ, வோஷிங்டனினதோ அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை யுத்தத்தை நிறுத்த அரசாங்கம் முயலக்கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு யுத்தம் செய்யவே மக்கள் ஆணை வழங்கினார்கள். எனவே அதனை மீறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அவர் கூறினார். பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவதுகடந்த காலங்களைப் போன்று இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளை தோல்வியிலிருந்து பாதுகாப்பதற்காக இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கருணாநிதி உட்பட விடுதலைப்புலிகள் சார்பான அரசியல் கட்சிகள் சிறி லங்காவின் யுத்தத்தை நிறுத்த வேண்டுமென போராட்டங்களை நடத்தி மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்தியாவிலுள்ள சிறி லங்காத் தூதுவரை பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆலோசகர் கே. ஏ.நாராயணன் அழைத்து யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வை முன்வைக்குமாறும், தமிழ் சிவிலியன்களை பாதுகாக்குமாறும் தெரிவித்துள்ளார். 

இந்தியா அல்ல எந்த நாடு அழுத்தம் கொடுத்தாலும் யுத்தத்தை ஜனாதிபதியால் நிறுத்த முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்கவே மக்கள் ஆணை வழங்கினர். இதனை மீறுவது மக்களின் சுயாதிபத்தியத்தை மீறும் செயலாகும். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சிகள், பணம் வழங்கி இந்தியாவே போஷித்தது. இறுதியில் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்தனர். 

எனவே இந்தியா விடுதலைப்புலிகளை பாதுகாக்க முனைவதென்பது மீண்டும் வரலாற்றுத் தவறுகளையே புரிவதாக அமையும். முன்னோக்கிச் செல்லும் யுத்தத்தை பின்னோக்கி முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளல் ஆகாது. இந்திய அரசாங்கம் இங்கு யுத்தத்தை நிறுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிட வேண்டும். விடுதலைப் புலிப்பயங்கரவாதத்தை அழித்த பின்னரே அனைத்து தரப்பினரதும் கருத்துகளை செவிமடுத்து தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும். அதை விடுத்து இப்போதே தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென்பதெல்லாம் சாத்தியப்படாத விடயங்களாகும். 

இந்தியாவை சந்தோஷப்படுத்துவதற்காக சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி அரசியல் தீர்வுத்திட்டம் என ஜனாதிபதி தெரிவித்திருக்கலாம். ஆனால், அதிகாரப் பரவலாக்கலை எல்லாம் முன்னெடுக்க இடமளிக்கமாட்டோம். யுத்தமும் அரசியல் தீர்வின் ஓர் அங்கமே ஆகும். எனவே வெற்றியுடன் அது நிறைவு பெற வேண்டும். 1987 இல் ஜே.ஆர்.ஜயவர்த்தன நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டிருந்தார். 

ஆனால், மக்கள் ஆணையைப் பெற்றிருக்கவில்லை. எனவே அன்று இந்தியாவின் நிபந்தனைக்கு அடிபணிந்து யுத்தம் நிறுத்தப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால், இன்று அந்த நிலைமையில்லை. பயங்கரவாதத்தை அழிக்கும் யுத்தத்தை முன்னெடுக்கவே மக்கள் ஜனாதிபதிக்கு ஆணை வழங்கினார்கள். எனவே அதனை மீற முடியாது. 

யுத்தம் நிறுத்தப்படுமானால் மக்கள் போராட்டம் வெடிக்கும். தொலைக்காட்சி நாடகத்தொடரைப் போன்று யுத்தக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி மக்களை ஏமாற்ற அரசு முனைந்தால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அச்சல ஜாகொட, ஜயந்த சமரசிங்க, மொஹமட் முஸம்மில் மற்றும் தேசிய அமைப்பாளர் சமல் தேசப்பிரிய ஆகியோர் கலந்து கொண்டனர்


நாட்டை சீரழிக்கும் யுத்தத்தை நிறுத்தி அரசியல்த்தீர்வை முன்வையுங்கள் - மங்கள சமரவீர

புதன், 15 அக்டோபர் 2008, 08:13 மணி தமிழீழம் [கொழும்பு நிருபர் மயூரன்]

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் என்ற மூவினங்களுக்கும் பொதுவான இந்நாட்டை மேலும் மேலும் இரத்தக் களமாக மாற்றிக் கொண்டிருக்காது உடனடியாக யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வினை முன்வைக்க வேண்டும் என்று சிறி லங்கா சுதந்திரக் கட்சிமக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்தியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச ஆதரவினைப் பெற்றுக் கொள்ளவே சர்வகட்சிக் குழு கூட்டப்படுகின்றது. உண்மையில் இதன் மூலம் நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகள் எட்டப்படப் போவதில்லை என்றும் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் சர்வகட்சிக் குழு கூடியது. 

இதில் ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என பிரதான எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்னவெனில், 13 ஆவது திருத்தச் சட்டம் என்பதும் அதனை அமுல்படுத்துவதற்கான சர்வகட்சிக் குழுவின் யோசனைகள் என்பதும் கண்துடைப்பு நடவடிக்கைகள் என்பதே ஆகும். மேலும் சர்வ கட்சிக் குழு நடவடிக்கைகள் ஒரு மாயை என்றே அந்தக் கட்சி ஆரம்பத்திலிருந்து நிராகரித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் வருகின்றது. 

இன்றைய நிலையில் சர்வகட்சிக் குழுவின் நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியக் கட்சியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றது. இவ்வாறானதொரு நெருக்கடி மிக்க தருணத்தில் ஜனாதிபதி தலைமையில் கூடிய சர்வகட்சிக் குழு மாநாட்டில் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சரியான பாதையாக அமையாது என்றும் அரசியல் தீர்வுகளிலேயே தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். 

இராணுவத் தீர்வில் நம்பிக்கையில்லை எனக் கூறுகின்ற ஜனாதிபதி இதுவரையில் யுத்தப் போக்கை கைவிட்டதாகக் தெரியவில்லை. அரசியல் தீர்வு என்ற பெயரில் கூட்டப்படுகின்ற சர்வகட்சிக் குழுவின் நடவடிக்கைகளில் அர்த்தமில்லை என்பது தெளிவு. சிறி லங்காவில் இன்றைய யுத்த நிலைவரம் தொடர்பில் தமிழ்நாட்டில் எழுச்சிப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உத்வேகமடைந்திருக்கின்றன. 

இதனுடைய வெளிப்பாடு பிரதமர் மன்மோகன் சிங்கின் மத்திய அரசாங்கத்தை சிறி லங்காப் பிரச்சினையில் தலையிட வைப்பதற்கான அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசாங்கம் ஓர் உறுதியான நிலைப்பாட்டுக்கு வர வேண்டிய கட்டம் ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் தீர்வு என்றும் இராணுவத் தீர்வு என்றும் இரண்டும் கெட்ட நிலையில் சிந்திப்பதை தவிர்த்து மூவின மக்களும் இணைந்து வாழ்கின்ற நாட்டை மேலும் மேலும் இரத்தக் களமாக மாற்றாது தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வே முன்வைக்கப்பட வேண்டும். 

சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைந்த ஏற்றுக்கொள்ள முடியாத யோசனைகளை தவிர்த்துக் கொண்டு உடனடியாக யுத்தத்தையும் நிறுத்த வேண்டும் என்பதுடன் அரசியல் தீர்வினை முன்வைக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் இன்னும் கடந்து விடவில்லை என்பதையும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு வலியுறுத்தி நிற்கிறது. 

ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கூட்டப்பட்டு வருகின்ற சர்வகட்சிக் குழுவில் ஆக்கபூர்வமான அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்மானங்கள் எதுவுமே எட்டப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: