| கிழக்கு இனக்கலவரத்திற்கு மகிந்தவே காரணம்: சோமவன்ச |
| [புதன்கிழமை, 28 மே 2008, 06:13 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] |
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜே.வி.பி. கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஜே.வி.பி. குறித்து இன்று பலரும் பல்வேறு விதமாக செய்திகளை வெளியிடுகின்றனர். ஜே.வி.பி. சவால் நிறைந்த கட்சியாகி விட்டது என்று பலரும் கூறுகின்றனர். இது குறித்து நாம் அலட்ட விரும்பவில்லை. எனினும் எமக்கு தற்போது எந்தவித சவாலும் இல்லை. ஜே.வி.பி. தலைவர் கொல்லப்பட்ட போது மட்டுமே எமது கட்சி சவாலுக்கு முகம் கொடுத்தது. தற்போது கட்சியை மீண்டும் கட்டி எழுப்பினோம். கட்சியின் வளர்ச்சி அதிகரிக்கும் நிலை இன்று உள்ளது. இந்நிலையில் ஜே.வி.பியின் தலைமைப்பதவி குறித்து பலரும் செய்திகளை வெளியிடுகின்றனர். கட்சியின் தலைமைப் பதவி குறித்து நானே அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் இது குறித்து அலட்டித் திரிகின்றனர். அவர்களுக்கு ஏன் இந்த கவலை வந்துள்ளது என்று தெரியவில்லை. ஜே.வி.பி. குறித்தோ அல்லது அதன் தலைவரான என்னைப் பற்றியோ விமர்சிக்கும் தகுதி கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு இல்லை. அதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை. அதேநேரம் தலைமைப்பதவியைத் துறக்கவும் தயாராக உள்ளேன். தலைமைப்பதவியில் தொடர்ந்தும் இருக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. தலைமைப் பதவி பறிபோனால் கட்சியைக் காட்டிக்கொடுக்க மாட்டேன். சாதாரண தொண்டனாக இருந்து கட்சியைக் காப்பாற்றுவேன். அதேபோல் எவருடைய அச்சுறுத்தல்களுக்கும் நான் அடிபணியப்போவதில்லை. அஞ்சப்போவதில்லை. நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் மகிந்த அரசு இன்று மக்கள் மீது அளவு கடந்த சுமைகளை சுமத்தியுள்ளது. எப்படி எல்லாம் சுமைகளை சுமத்த முடியுமோ அப்படி எல்லாம் சுமைகளைச் சுமத்துகின்றனர். அது மட்டுமின்றி கடத்தல் மற்றும் கப்பம் கறக்கும் செயற்பாடுகளிலும் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. மக்களின் ஜனநாயக உரிமைகளை இந்த அரசாங்கம் மதிக்கவில்லை. நிறைவேற்று அதிகாரத்தை மகிந்த தவறாகப் பயன்படுத்துகிறார். அதன் ஒரு வெளிப்பாடாகவே நாடாளுமன்றம் இழுத்து மூடப்பட்டுள்ளது. சேனாதிபதி போன்று செயற்படும் மகிந்த இன்று கிழக்கில் இனக்கலவரத்திற்கு தூபமிட்டுள்ளார். அங்கு ஒரு தேர்தலை நடத்தி தமிழ் - முஸ்லிம் மக்களிடையே இனக்கலவரத்தை தூண்டிய மகிந்த, அதிகாரத்தை தருவதாகக் கூறி மக்களை பலிக்கடவாக்கி வருகிறார். கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது மிஞ்சியிருப்பது நிம்மதியற்ற வாழ்க்கையே ஆகும். இத்தகைய அரசாங்கம் எமது நாட்டுக்கு தேவையில்லை. தேவையான நேரத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர். |
Saturday, May 31, 2008
கிழக்கு இனக்கலவரத்திற்கு மகிந்தவே காரணம்: சோமவன்ச???
58 ஆம் ஆண்டு இனப்படுகொலை- ஒருபக்கப்பார்வையும் ஒரேமாதிரியான புலம்பலும்
| 58 ஆம் ஆண்டு இனப்படுகொலை ஒரு தற்செயல் நிகழ்வல்ல- வரலாற்றின் முரண்பாடே: பா.நடேசன் விளக்கம் |
| [சனிக்கிழமை, 31 மே 2008, 09:58 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] |
"58 இனவெறிக்கு அகவை 50" நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்பு உரை தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக இந்த விடுதலைப் போராட்டத்திற்கு முக்கிய காரணியாக இருக்கின்ற- இருந்து வருகின்ற 1958 ஆம் ஆண்டு இனவெறித் தாக்குதல்கள் தொடர்பான இந்த அரங்க நிகழ்வுகள் உண்மையாக எல்லோரது மனங்களிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. எல்லோரினது உள்ளங்களிலும் இன உணர்வு தூண்டப்பெற்று விடுதலைக்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்ற விடுதலை உணர்வில் உந்தப்படுகின்ற சூழலை உருவாக்குகின்ற நிகழ்வாக இது இருந்தது எனலாம். 1958 ஆம் ஆண்டு இனவெறித்தாக்குதலானது தற்செயலாக நிகழ்ந்த சம்பவம் இல்லை. இலங்கைத்தீவின் வரலாற்றில் எந்த தொல்லியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி, மானிடவியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி, வரலாற்றியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி, அல்லது சமூகவியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற ஒரு முக்கியமான விடயம் இலங்கைத்தீவில் இரண்டு தேசிய இனங்கள், வரலாற்று ரீதியாக இருந்து வருகின்றன என்பதுவே. அந்த இரண்டு தேசிய இனங்களுக்கு இடையில் வரலாற்று ரீதியாக ஒவ்வொரு தேசிய இனமும் வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு பண்பாடுகள், வெவ்வேறு பொருளாதார வாழ்க்கை முறைகள் வெவ்வேறு சமூகக் கட்டமைப்புக்களைக்கொண்ட வெவ்வேறு தேசிய இனங்கள் என்பதை இன்று அனைவருமே உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்கின்றனர். இந்த இரண்டு தேசிய இனங்களுக்கும் வரலாற்று ரீதியாக பல முரண்பாடுகள் காலத்திற்குக் காலம் தோன்றுவது உண்டு. அதன் தொடர்ச்சியாகத் தான் 1958 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்ட இனவெறித்தாக்குதல் நடவடிக்கையாகும். இந்த இனவெறித் தாக்குதல் என்பது சிங்களப் பேரினவாதத்தின் தற்செயலாக, உணர்ச்சிகளாக உந்தப்பட்டு அல்லது ஏதாவதொரு காரணிகளுக்காக ஏற்பட்ட விடயமல்ல. வரலாற்று ரீதியாக சிங்கள ஆட்சியாளர்கள் சிங்களப் பேரினவாதிகள் திட்டமிட்ட ஒரு கொள்கை வகுப்பின் அடிப்படையில் திட்டமிட்டு செயற்படுத்திய ஒரு நிகழ்வாகும். இந்த இலங்கைத்தீவை முற்று முழுதாக சிங்களப் பேரினவாத அல்லது சிங்கள நாடாக மாற்றி அமைப்பதற்காக, எண்ணிக்கையில் குறைந்த தமிழ்த்தேசிய இனத்தை அழிப்பதற்காக- மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் 1958 ஆம் ஆண்டு இனப்படுகொலை. வரலாற்று ரீதியாக ஒரு தேசிய இனத்திற்கு அதன் விழுமியங்கள் முக்கியமானவை. அந்த விழுமியங்களில் மொழி என்பது மிக மிக முக்கியம். மொழி, நிலம், பண்பாடு, அவர்களின் வாழ்க்கை முறை எனப்படும் அந்த தேசிய இனத்திற்கான அடையாளங்களில் முக்கியமானது மொழி. நாம் தமிழ் மொழியைப் பேசுகின்றபடியால் தான் தமிழர்கள்- ஆங்கிலத்தைப் பேசுகின்றவர்கள் ஆங்கிலேயர்கள்- பிரான்சிய மொழியைப் பேசுகின்றவர்கள் பிரான்சியர்கள். எந்த எந்த மொழியை எந்த மக்கள் பேசுகின்றார்களோ அவர்கள் அந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த மொழியோடு சேர்ந்த பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை என்று தொடர்ந்து கொண்டே போகும். அந்த வகையில் இலங்கைத் தீவில் வரலாற்று ரீதியாக தமிழ்த் தேசிய இனத்தவர் வாழ்ந்து வருகின்ற பிரதேசங்களில் அவர்களை அழிப்பதோடு மட்டுமல்லாது அவர்களின் மொழியை அழிப்பதன் ஊடாக சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளலாம் என்ற நீண்டகால கொள்கை வகுப்பின் ஓர் பகுதியாகத்தான் 1956 ஆம் ஆண்டு அரச கரும மொழியாக தனிச்சிங்கள சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். சிங்கள மொழியினை அரச மொழியாக கொண்டு வந்தது அரச அலுவலகங்களில் வேலை பார்ப்பதற்கு மட்டும் அன்று. தனிச் சிங்களச் சட்டம் அதாவது சிங்களம் மட்டுமே இலங்கையின் அரச கரும மொழி என்று கொண்டு வந்தமையானது உன்மையில் தமிழ் மக்களை மொழியியல் ரீதியாக படிப்படியாக மாற்றுவது. மேலும் தமிழ்ப் பிரதேசங்களில் அந்த மொழியைப் புகுத்தி அதன் ஊடாக அங்கே உள்ளவர்கள் சிங்களத்தில் எல்லாவற்றையும் தொடங்கும் பொழுது இயல்பாகவே அந்த இனம் படிப்படிப்படியாக சிங்கள மயப்படுத்தப்படும். வரலாற்றில் பல நாடுகளில் இப்படியான எடுத்துக்காட்டுக்களை நாம் சொல்லலாம். தமிழர் தாயக பூர்வீக பூமியாக இருந்த நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போன்ற பல பிரதேசங்கள் இன்று சிங்களப் பிரதேசமாக மாற்றப்பட்டு தமிழர்களாக வாழ்ந்த எம் மக்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். தமிழ் மக்களை எவ்வாறு சிங்களவர்களாக்கலாம் என்பது நன்றாக சிங்களப் பேரினவாதத்திற்குத் தெரியும். இது பண்டாரநாயக்காவிற்கும் நன்றாகத் தெரியும். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கும் தெரியும். அவர்கள் இதனை நன்றாக தெரிந்து கொண்டுதான் 1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்கினர். தமிழர்களை அரச தொழில்களுக்கு விருப்பம் கொள்ளச் செய்கின்ற ஒரு முறைதான் அந்தப்பிரதேசத்தில் கல்வி ஊடாக இருந்து வருகின்றது. அதன் ஊடாக அங்குள்ள மக்கள் அரச உத்தியோகத்தர்களாகப் போகின்ற போது இயல்பாகவே சிங்களம் படிப்பது மட்டுமல்ல தமிழர்கள் தங்களின் பிள்ளைகளையும் அரச தொழில்களுக்கு சேர்ப்பதற்காக பிள்ளைகளுக்குக் கூட சிங்களம் கற்பிக்க தூண்டலாம் என்ற மிகவும் சூழ்ச்சிகரமான நீண்ட காலத்திட்டம்தான் அடிப்படையிலேயே 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை ஒரு தற்செயலான நிகழ்வாகப் பார்க்கக்கூடாது. வரலாறு எமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. எமது இனத்தின் முக்கிய அடையாளமான மொழி மீது கை வைத்ததனை எதிர்த்து அன்றைய தமிழ்த் தலைவர்கள் அதற்கு எதிரான போராட்டங்களை அகிம்சை முறையில் தொடங்கிய போதுதான் எமது மக்கள் மீது இந்தப் படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அன்றைய அரசியல் தலைவர்கள் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டன. 1958 ஆம் ஆண்டு படுகொலை என்பது அதாவது ஐரோப்பியர்கள் இங்கிருந்து சென்ற பின்னர் முதன் முதலாக சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நன்கு திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட ரீதியில், சிங்கள அரச படைகளின் உதவியுடன் சிங்களக்குண்டர்களால் எமது மக்கள் மீது படுகொலைகளும் காடைத்தனங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன. 1958 ஆம் ஆண்டு இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்த் தாயின் கதையை எமது தேசியத் தலைவர் கேட்டு எவ்வாறு விடுதலை உணர்வைப் பெற்றார்கள் என்பதனை இங்கு நடந்த அரங்க நிகழ்வில் அதனை சுட்டிக்காட்டினார்கள். 1958 ஆம் ஆண்டு இனப்படுகொலை என்பது தமிழ் மக்களின் வரலாற்றில் ஒருவாராலும் மறக்கமுடியாது. ஏனெனில் அரச பயங்கரவாதம் அதாவது சிங்கள அரச பயங்கரவாதம் முதலாவதாக தலைநகரில் இருந்து தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்ற சிங்களப் பிரதேசங்களில் எல்லாம் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது மட்டுமல்ல அவர்களுக்கு போதுமான அளவு பாதுகாப்புக்கூட கொடுக்கப்படவில்லை. தமிழ் மக்கள் கொழும்பில் இருந்து அடித்து விரட்டப்பட்ட போது அனைவரும் ஒரு சரஸ்வதி மண்டபத்திற்கு ஓடிச்சென்றனர். அங்கும் பாதுகாப்பு இல்லை என்று றோயல் கல்லூரிக்குச் சென்றனர். அங்கே உள்ள படித்த தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அன்றைய மகா தேசாதிபதியை சந்தித்த போது இங்கு பாதுகாப்பில்லை நீங்கள் கப்பலால் செல்லுங்கள் என்று அவர் தெரிவித்தார். அப்படியாக அந்த சிங்கள அரசு தனது படைகளை வைத்துக்கொண்டு தமிழ் மக்களை அவர்களின் தாயகப் பிரதேசத்திற்கு கப்பலில் அனுப்பினர். அகதிகளாக எமது மக்கள் வந்தனர். அவர்கள் இன்றும் எமது பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது ஒரு முறையல்ல பல முறை நிகழ்ந்திருக்கிறது. 1958 ஆம் ஆண்டில் மட்டுமல்ல 1981 இலும் 1983 இலும் இனப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன. மலையக மக்களைக் கூட சிங்களவர்கள் அடித்துக் கலைத்தார்கள். மலையகத் தமிழ்மக்கள் தமது இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி மலையகத்தில் உழைத்திருக்கும் வரலாறு இருக்கின்றது. இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகு எலும்பாக இருப்பவர்கள் தமிழர்கள். அவர்கள் அங்கே அடித்து விரட்டப்பட்டார்கள். இத்தகைய செயற்பாடுகளை- படுகொலைகளை நாம் தொடர்ந்து இடம்பெற அனுமதிக்கமுடியாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 1983 படுகொலை நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ளனர். அப்போது சிங்கள அரச படைகள் அனைத்துமாக சிங்கள இராணுவம், சிங்களக் கடற்படை, வான்படை, சிங்களக் காவல்துறை ஆகியன திட்டமிட்டு தமிழர்களின் உயிர்களைப் பலியெடுத்தது. தமிழர்களது உடமைகள் சூறையாடப்பட்டன. சிங்கள அரச படைகள் கொழும்பிலும் மற்றும் தமிழர் வாழிடம் அனைத்துக்கும் சென்று நேரடியாகக் குண்டர்களுடன் சேர்ந்து தமிழர்களின் வீடுகளை அழித்தது மட்டுமல்ல இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகித்த தமிழர்களின் தொழிற்சாலைகள் எல்லாம் எரிக்கப்பட்டன. அன்றைய அரச தலைவராக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தன கூறினார்- "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என்று. ஓர் நாட்டின் அரச தலைவர் அந்த நாட்டில் இருக்கின்ற மற்றொரு தேசிய இனத்திற்கு எதிராக இப்படியான வசனத்தை வானொலி ஊடாகக் கூறினார். இது எதனை எடுத்துக்காட்டுகின்றது என்றால் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது படையெடுக்கின்ற போதும் அதை ஆக்கிரமிக்கின்ற போதும் அந்நாட்டிற்கு எதிராக விடுக்கின்ற அறைகூவல் போன்றதே. சிங்களவர்களின் அடிமன உள்ளக்கிடங்கில் இருந்தது வெளிவந்தது என்னவென்றால் தமிழ்த் தேசிய இனம் வேறு - சிங்களத் தேசிய இனம் வேறு என்பதுதான். தமிழீழம் வேறு சிங்கள நாடு வேறு என்பது தான். இனப் படுகொலையின் ஊடாக எமது மக்களை அழிப்பதுடன் நின்றுவிடாது எமது நிலத்தை ஆக்கிரமிக்கவும் விரும்புகின்றார்கள். தமிழ் மக்களை அழிப்பதற்காக சிங்களப் பேரினவாதம் ஒரு நீண்ட காலத்திட்டத்தினை வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் இனவெறித்தாக்குதல்களை காலத்திற்கு காலம் கட்டவிழ்த்து விடுவது மட்டுமல்ல எமது பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்குக்கூட அவர்களின் திட்டங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஒரு பக்கம் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கத்தில் தென் தமிழீழத்தில் துண்டு துண்டாக எமது நிலம் சிங்களக் குடியேற்றமாக மாற்றப்படுகின்றது. பட்டிப்பளை என்று சொல்லப்படுகின்ற எமது தமிழ்ப்பிரதேசம் இப்பொழுது கல்லோயாவாக மாற்றப்பட்டு முற்று முழுதாக சிங்கள மயப்படுத்தப்பட்டிருக்கிறது. கொல்லன்வெளி எனச் சொல்லப்படுகின்ற இடங்கள் சிங்களப்பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. குடியேற்றம் மட்டுமல்ல தமிழர்கள் குடியேற்றங்களில் மக்களை இராணுவத்தினர் துரத்திவிட்டு இரவோடு இரவாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர். இது எமது கண்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கிற வரலாறு. காலங்காலமாக பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை கந்தளாயில் இருந்து இரவோடு இரவாக சிங்களக் காவல்துறையினர் கலைத்தனர். இதே போல தென்தமிழீழத்தில் ஒவ்வொன்று ஒவ்வொன்றாக சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. அம்பாறையையும் மட்டக்களப்பையும் துண்டு போடுவதும் திருகோணமலையையும் மட்டக்களப்பையும் துண்டு போடுவதும் திருகோணமலையையும் வட தமிழீழத்தையும் துண்டு போடுவதும் என தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள மயமாக்குவதே சிங்களப் பயங்கரவாதத்தின் நீண்ட காலக்கொள்கையாகும். இலங்கையின் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உண்மை நிலை இது தான். மணலாறு சிலோன் தியேட்டரில் பூர்வீகமாக இருந்த மக்கள் சிங்களக் காடையர்களால் அடித்து விரட்டப்பட்டு தற்போது முள்ளியவளையிலும் தண்ணீரூற்றுப் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். சிங்கள இனவாத அரசானது சிங்களக் குடியேற்றங்களை நிறுவி அதற்குப் பாதுகாப்பாக இராணுவ முகாம்களை நிறுவி நீண்ட கால இன அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது. வரலாறு எமக்குப் பாடங்களைக் கற்றுத்தருகின்றது. ஒவ்வொரு இன அழிப்புக்கு எதிராக அன்றைய எமது அரசியல் தலைவர்கள் அகிம்சை வழியில் போராடிய போதும் எதுவித பலனும் கிடைக்கவில்லை. இறுதியாக மக்களிடம் அன்றைய தமிழ்த் தலைவர்கள் கேட்டார்கள், "எமக்கு தமிழீழ தனியரசுதான் தேவை. இதற்கு நீங்கள் சம்மதமா?" என்று. மக்கள் அப்போது நடந்த ஜனநாயகத் தேர்தலின் ஊடாக தமிழீழத் தனி அரசு தான் எமக்கு தேவை என ஆணையைத் தந்தார்கள். அது மட்டுமல்ல தொடர்ந்து நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் ஆணையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள். அதாவது, அகிம்சை வழியில் அபிலாசைகள்- எதிர்ப்பார்ப்புக்களை- சிங்களவர்களிடம் இருந்து ஒருபோதும் பெற முடியாது என்பது கடந்தகால வரலாறு. அதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலின் கீழ் சுதந்திர தமிழீழ தேசத்தினை அமைப்பதற்காக விடுதலைப் போராட்டத்தினை நடத்தி மிகப்பெரிய அர்ப்பணிப்புக்களையும் சாதனைகளையும் செய்கின்றார்கள், தியாகங்களைப் புரிகிறார்கள். தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக சகலவற்றையும் அர்ப்பணிக்கின்ற விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்கிறோம் நாம். இதனை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே யதார்த்தம். புலம்பெயர்ந்த வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களும் இங்கு வாழ்கின்ற மக்களும் தனியரசுதான் வேண்டும் என்று சொல்கிறார்கள். சிறிலங்கா அரசிற்கு எத்தனையோ பெரிய வல்லரசுகள் உதவி செய்கிறது. ஆனாலும் கூட முப்பது வருடங்களாக விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது உள்ளது. சிலவேளைகளில் நாம் சில தந்திரோபாய பின்வாங்குதல்களை மேற்கொண்டு அதன்பின்னர் அதைவிட இரட்டிப்புப் பாய்ச்சல்களை மேற்கொள்வது வழக்கம். இது எமது போரியல் தந்திரோபாயமாகும். எமது இயக்கத்தின் வளர்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும் சிங்கள இராணுவத்திற்கு ஏற்படுகின்ற தோல்வியில் தெரிகிறது. சிங்கள அரசினது திட்டமாக தமிழர் தாயகப்பகுதிகளை முற்று முழுதாக கைப்பற்றி முழு இலங்கைத் தீவினையும் சிங்கள மயப்படுத்துவதேயாகும். இதற்கு எதிராக உலகத்தில் வாழ்கின்ற எட்டுக்கோடி தமிழர்களும் ஒன்றுபட்டு எழ வேண்டும் என்றார் பா. நடேசன். |
Tuesday, May 27, 2008
பால்ராஜ
| இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர் புகழாரம் | ||||||||||||
| [வியாழக்கிழமை, 22 மே 2008, 07:36 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] | ||||||||||||
தமிழீழ தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை: தலைமைச் செயலகம், எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது. பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான். தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன. பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான். "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
|
Saturday, March 1, 2008
இராணுவ முன்நகர்வுகளை நியாப்படுத்தவே 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம்: ஹக்கீம் குற்றச்சாட்டு
| இராணுவ முன்நகர்வுகளை நியாப்படுத்தவே 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம்: ஹக்கீம் குற்றச்சாட்டு |
| [சனிக்கிழமை, 01 மார்ச் 2008, 09:15 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] |
கொழும்பிலிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவத்தின் முக்கிய பகுதிகள்: கிழக்குத் தேர்தலை சுதந்திரமானதும், நியாமானதும் என உங்களால் குறிப்பிட முடியுமா? முஸ்லிம் பகுதிகளில் குறிப்பிட்ட அமைச்சரினால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர வேறு பிரச்சினைகள் இல்லை. எங்களால் சமாளிக்கக்கூடிய நிலையிலேயே உள்ளது. சட்டம், ஒழுங்கு என்ற பொறிமுறை நியாயமானதாக இருப்பதனையே நாம் விரும்புகின்றோம். சில காவல்துறை அதிகாரிகளின் செயற்பாடுகள் சட்டத்திற்கு புறம்பான வகையில் அமைந்துள்ளன. தமிழ்ப் பிரதேசங்களின் இந்த நிலைமை மிகவும் மோசமாகவே அமைந்துள்ளது. குறுகிய காலத்தில் சுமூக நிலைமை என்பது சற்று சாத்தியமில்லாத விடயமாகவே தோன்றுகிறது. தேர்தல் ஒன்றை நடத்துவதன் மூலம் பிரதேசத்தில் சுமூக நிலை திரும்பியுள்ளதாக வெளிக்காட்ட அரசாங்கம் எண்ணினால் அதுவொரு மாயையாக கருதுகின்றேன். நிர்க்கதியான தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் குழம்பிப் போயுள்ளனர். ஆயுதக் குழுவொன்றிற்காகவா? அல்லது வேறும் தரப்பிற்காகவா? என்பதில் குழம்பிப்போயுள்ளனர். மட்டக்களப்பு மாநகர சபை தேர்தல்களுக்காக அரசாங்கம் வெட்கமின்றி பல தமிழ் ஆயுதக் குழுக்களை தமது பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளது. அப்பகுதி மக்கள் அடைந்திருக்கும் ஏமாற்றத்தினை எங்களால் உணரக்கூடியதாக உள்ளது. சட்டம், ஒழுங்கு சீர்குலைவதற்கான அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. மக்களின் அதிருப்தி காரணமாக அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் நிராகரிக்கப்படக்கூடிய அபாயம் நிலவுகிறது. இந்தத் தேர்தல்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் போட்டியிடவிட்டால் தேர்தல்கள் ஒரு அர்த்தமற்ற நடவடிக்கையாக அமையக்கூடிய வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது. மீள்குடியமர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும் 25,000-க்கும் அதிகமானோர் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லை. அரசாங்கம் காவல் நிலையங்கள் போன்றவற்றினை நிறுவுவதன் மூலம் பிரதேசத்தில் வழமை நிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. ஓர் இரவில் ஆயுதக் குழுக்களை மாற்ற முடியாது என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசாங்கம் செயலாற்றுகிறது. இந்த முறையில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுவதை மக்கள் மறுதலிப்பார்கள். மக்கள் அரசாங்கத்தின் மீது பயம் கலந்த வெறுப்புடனே காணப்படுவர். மக்கள் மீது தலைமைத்துவமொன்றை திணிக்க அரசாங்கம் முற்படுகின்றது. அவர்களுக்கு சுதந்திரமாக தமது தலைமைகளை தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. இதுவொரு மிக மோசமான அணுகுமுறையாகும். ஜனநாயக சக்திகளின் செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மக்களின் தீர்மானத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த அரசாங்கத்துடன் இது குறித்து வாதிடுவது முட்டாள்த்தனமான செயலாகும். இந்த விடயம் குறித்து அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்துவது ஒரு அர்த்தமற்ற செயலாகவே நாம் கருதுகின்றோம். தென்பகுதி மக்களை திருப்திபடுத்தும் நோக்கிலேயே அனைத்து கட்சிக் குழு பரிந்துரைகளை இந்த அரசாங்கம் முன்வைத்தது. எனினும் நாட்டின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பவற்றை இணைத்துக் கொள்ளாத இந்த அனைத்து கட்சிக்குழுவின் பயன் என்ன? வடக்கில் அதிக அதிகாரம் கொண்ட அரசியல் சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அனைத்து கட்சிக் குழுவின் பரிந்துரைகளின் இறுதி அறிக்கை தயாரிப்பதற்கு அதன் தலைவர் முயற்சிகள் மேற்கொள்ளும் போது அதற்குள் 13 ஆவது திருத்தத்தை நுழைத்து அனைத்து கட்சிக் குழுவினரை அதனை ஆமோதிக்குமாறு மகிந்த கோரியுள்ளார். இந்த நிலைமைகளின் கீழ் அரசாங்கம் காத்திரமான அரசியல் தீர்வொன்றை நோக்கிச் செல்லும் என்பதில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. இராணுவ முன்நகர்வுகளை நியாப்படுத்தும் ஒரு தற்காலிக முயற்சியாக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை நாம் நோக்குகின்றோம். அனைத்துலக சமூகத்தை அமைதிப்படுத்துவதற்கான கண்துடைப்பே இந்த நடவடிக்கைகள். 13 ஆவது திருத்தம் மற்றும் அதன் அமுலாக்கம் தொடர்பான புதிரை என்னால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு சில பகுதிகளை பிரித்து எடுக்காது அரசியல் சாசன சட்டங்களை முழுமையாக அமுல்படுத்துவது மகிந்தவின் கடமையாகும். மறுபுறத்தில் 17 ஆவது திருத்தம் தொடர்பாக குருட்டுக் கண்களுடன் நோக்குகின்றனர். சில அரசாங்கத்தரப்பு உறுப்பினர்கள் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் சிக்கல்கள் நிலவுவதாக குறிப்பிடுகின்றனர். குறிப்பாக காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அநேகமான சந்தர்ப்பங்களில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இந்த அரசாங்கம் எதிர்மறையாக செயற்பட்டு வருகின்றது. இந்தியாவிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய உண்மையான தேவை தமது அரசாங்கத்திற்கு இருப்பதாக உணர்த்துவதற்காகவே இந்த 13 ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு ஒரு ஊடக பிரசாரமாகவே நாம் நோக்குகின்றோம். அவர்களின் சந்திப்பின் போதான அறிக்கைகளை உன்னிப்பாக நோக்கினால் இணக்கப்பாடுகளைவிட முரண்பாடுகளையே அதிகமாக காணக்கூடியதாக இருக்கும். இரண்டு கட்சிகளும் உண்மையான நோக்கில் இணைந்தால் அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைவோம் ஆனாலும் அவர்கள் தேர்தலை எவ்வாறு வெற்றி கொள்வது என்பதிலேயே அதிக அக்கறை செலுத்துகின்றனர். நாடாளுமன்றத்தில் தமது நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்கே அரசாங்கம் அதிக சிரத்தை காட்டி வருகிறது. ஏனெனில் அரசாங்கத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) முழுமையாக நம்பிச் செயற்பட முடியாது. இதனை தடுப்பதற்காகவே நாம் அரசாங்கத்தில் இணைந்துகொண்டோம். போர் தொடர்பாக பொதுமக்களின் அமைப்புக்களின் அழுத்தம் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவரை மகிந்த அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் மூலம் ஒரு நல்ல ஊடகப் பிரச்சாரத்தை அவர் பெற்றுக்கொண்டார் அவ்வளவுதான், அதனைத் தவிர இதன் மூலம் வேறு எதனையும் நான் விளங்கிக்கொள்ளவில்லை. இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவே அந்த சந்திப்பு நடைபெற்றதாக மக்கள் விடுதலை முன்னணியினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்தியா தொடர்பான முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு என்ன? இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவினால் பாரிய பங்களிப்பு வழங்க முடியும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? அரசியல் தீர்வொன்று தொடர்பாக இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்ற அச்சத்தின் காரணமாகவே மக்கள் விடுதலை முன்னணி இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. ஆனந்தசங்கரியின் பேட்டியொன்றை நான் வாசித்தேன். அதில் அவர் ஏற்கனவே வழங்கிய பங்களிப்புக்கள் பற்றி கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்ள நிறைய விடயங்களை செய்ய வேண்டியிருக்கும். அரசியல் அரங்கில் தம்மை தக்க வைத்துக்கொள்வதற்கான உத்திகளாகவே மக்கள் விடுதலை முன்னணியின் இந்த செயற்பாடுகளை நாம் காண்கிறோம். இந்தியா எப்போதும் உரிமைகளுக்கு மதிப்பளிக்ககூடிய நாடாகும். எனினும், சில வேளைகளில் சுயநலவாத சிந்தனையுடன் சில முன்நகர்வுகளை மேற்கொள்ளும். பொருளாதார உறவுகளின் போது வெளிப்படைத்தன்மை மிக அவசியமாகும். பின் கதவுகள் வழியாக நீங்கள் இவற்றை செய்ய முடியாது. அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினாலும், நாடாளுமன்றத்தில் குறித்த விடயம் பற்றி அறிவிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் கட்சித் தலைவர்களுக்கேனும் இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இதன்மூலம் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படும். அரசாங்கத்தின் மீதான உங்களது குற்றச்சாட்டுகள் தாமதமாகவே முன்வைக்கப்படுகின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் நீங்களும் குறிப்பிட்ட அரசாங்கத்தின் ஓரு அங்கமல்லவா? அவ்வாறு எனின் இவ்வளவு மோசமான அரசாங்கத்தில் ஏன் ஓராண்டு காலம் அங்கம் வகித்தீர்கள்? ஏனெனில் நான் தனித்து நின்று அவர்களை சரியான பாதைக்கு இட்டுச் செல்ல பிரயத்தனம் செய்தேன். அனைத்து விடயங்களிலும் முஸ்லிம்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் நான் மிக உறுதியாக இருந்தேன். போதும் என்று எண்ணியது போதும் என்று நாங்கள் இப்போது உணர்கின்றோம் என்றார் அவர். |
Monday, January 28, 2008
ஈழப்போரும் ஊடக நாட்டியமும்- சில வாசிப்புகளும்
| மக்களின் வரிப்பணத்தில் வடிவமைக்கப்பட்ட நவீன ராடாரை சிறிலங்காவிற்கு வழங்கியது கனடா | ||||
| [செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2008, 04:51 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] | ||||
| சிறிய படகுகளைக் கூட கண்டறியும் நவீன ராடார் சாதனத்தை சிறிலங்காவிற்கு கனடிய அரசாங்கம் வழங்கியுள்ளது. | ||||
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
|
Sunday, January 27, 2008
சில பதிவுகள்
சுதந்திரதினத்திற்கு முன்பு வடக்கில் மாகாண சபை நிர்வாகம்:ஒன்றினை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இந்த மாகாணசபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஐவரடங்கிய நிர்வாகக்கட்டமைப்பும் நியமிக்கப்பட விருக்கிறது. இந்த சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக தேவையேற்படும் பட்சத்தில் அமைச்சர் பதவியை துறப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சபையில் இருக்கும் ஐவரில் மூவர் தமிழர்கள் என்றும் ஏனைய இருவரில் ஒருவர் முஸ்லிம் பிரதிநிதி என்றும் மற்றவர் சிங்கள பிரதிநிதி என்றும் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சபையை நியமிக்கவிருக்கிறார். இந்த மாகாண சபை ஒரு வருடத்திற்கு இயங்கும். அதன்பின்னர் வடக்கிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டிருக் கிறார். அபிவிருத்தி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்து அரசுக்கு ஆலோ சனைகளை வழங்குவதே இந்த மாகாண சபையின் பணியாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய மாகாண சபைகளில் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் போன்றோருக்கு உள்ளது போன்ற அதிகாரங்களை வடக்கு இடைக்கால நிர்வாக சபையினருக்கு இருக்கும். இதேவேளை 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வுத்திட்ட யோசனைகளை அடுத்தவாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவும் ஜனாதிபதி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். எனினும் வடக்கு மாகாணசபைக்கான அங்கீகாரத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும், தேவைப்படின் இது குறித்து நாடாளுமன்றில் ஆராயலாம் என்றும் அரசாங்க உயர் மட்டங்கள் தெரிவித்துள்ளன.
| ஈழவேந்தனுக்கு பதிலாக இஸ்லாமிய சட்டத்தரணி ரசீன் முகம்மது இமாம் நியமனம் | ||||||||
| [வியாழக்கிழமை, 24 சனவரி 2008, 03:48 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] | ||||||||
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இஸ்லாமியத் தமிழரான சட்டத்தரணி ரசீன் முகம்மது இமாம் (வயது 63) நியமிக்கப்பட்டிருக்கின்றார். | ||||||||
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட மா.கா.ஈழவேந்தனின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 5 ஆம் நாள் இவர் அதிகாரபூர்வமாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரசீன் முகம்மது இமாம் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவர் ஆவார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளிலும் அவர் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தார். 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய இவர், கொழும்பில் தங்கியிருந்து சட்டத்தரணி பணியை ஆற்றி வந்தார். 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வேட்பாளராக இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. தேசியப் பட்டியல் வரிசையில் ஈழவேந்தனுக்கு அடுத்த இடத்தில் இருந்த இவரை வெற்றிடாகிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் முடிவு செய்திருந்தது. இது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தேர்தல் ஆணையாளருக்கு நேற்று முன்நாள் அறிவித்திருந்தார். இதனையடுத்து ரசீன் முகம்மது இமாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவிருப்பதான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ளது. BBC....News இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான சூழலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரான ரஜீம் முகமது இமாம் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டப்போது, வடமாகாணங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பம் என்றும் அதற்காக பாடுபடுவேன் என்றும் கூறினார்.
|
Wednesday, January 23, 2008
தற்போதைய அரசியலமைப்பு வரையறைக்குள் மாகாணங்களுக்கு அதிகாரமளிக்க ஒரு குறுகிய கால செயற்றிட்டம்
| ் |
| [24 - January - 2008] [Font Size - A - A - A] |
| *விதாரண குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழு அதன் இடைக்கால அறிக்கையொன்றை நேற்று புதன்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்திருக்கிறது. ஒன்றரை வருடகாலமாக 63 அமர்வுகளை நடத்திய விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அக்குழு அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் `மாகாணங்களுக்கு கூடுதல் பட்ச அதிகாரப் பரவலாக்கல் செய்வதை அனுமதிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளையே,' அந்த அறிக்கையில் முன்மொழிந்திருக்கிறது. இறுதி அறிக்கைக்கு முன்னோடியான ஒரு ஆவணம் என்றே சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழு அதன் இடைக்கால அறிக்கையை வர்ணித்திருக்கிறது. தற்போதைய அரசியலமைப்பின் ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதி பதியினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளே முன்மொழியப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரப் பரவலாக்கல் விவகாரத்தைப் பொறுத்தவரை, அடிப்படைக் கட்டமைப்புகளில் எந்தவித மாற்றமும் இன்றி நிருவாக ரீதியான மாற்றங்களுக்கே யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப் படக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் அங்கு மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று கூறும் சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழு, அண்மைய எதிர் காலத்தில் வடக்கில் தேர்தல் நடத்தப்படக்கூடியதாக நிலைமை இல்லையென்பதால் தற்போதைய அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு இசைவாக அந்த மாகாணத்தில் இடைக்காலசபையொன்றை நிறுவுவதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்க முடியுமென்று விதந்துரைத்திருக்கிறது. புதிய அதிகாரப் பரவலாக்கல் முறைமையொன்றுக்கு வழிவகுக்க கூடிய முற்றிலும் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான யோசனைகள் அடங்கிய தனியான அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் தனது தலைமையிலான குழுவினால் பின்னர் கையளிக்கப்படும் எனறு பேராசிரியர் விதாரண தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி (ஜனநாயகக்குழு) ஜாதிக ஹெல உறுமய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) மலையக மக்கள் முன்னணி, ஷ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி.) தேசிய காங்கிரஸ் மேலக மக்கள் முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய அரசியற் கட்சிகளே சர்வகட்சி மாகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவில் அங்கம் வகிக்கின்றன. இடைக்கால அறிக்கையின் முழு விபரம். 1. அறிமுகம் 1.1. தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படையாக அமையக்கூடிய ஒரு தொகுதி யோசனைகளைத் தயாரிக்குமாறு ஜனாதிபதியினால் சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழுவுக்கு ஆணை வழங்கப்பட்டது. இக்குழு ஒன்றரை வருடகாலமாக 63 அமர்வுகளை நடத்தியபிறகு கருத்தொருமிப்பு ஆவணம் பூர்த்திசெய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் அண்மைய எதிர்காலத்தில் அந்த ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படக்கூடியதாக இருக்க வேண்டும். அதன் பெறுபேறு பொருத்தமான அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு அடிப்படையானதாக அமையும். அதை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களைக் கொண்டு வரவேண்டியிருக்கும். சில பிரிவுகளைப் பொறுத்தவரை சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலமாக மக்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டியிருக்கும். இவற்றைச் செய்வதற்கான உகந்த சூழ்நிலை உருவாக்கப்படுவதற்கு கணிசமான காலம் தேவை. 1.2. இத்தகையதொரு சூழ்நிலையில் சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழு அதன் சொந்த முன்மொழிவுகளை கருத்தில் எடுத்து, குறுகிய கால இடைவெளியில் மாகாணங்களுக்கு கூடுதல் பட்சமானதும் பயனுறுதியுடையதுமான அதிகாரப்பரவலாக்கலைச் செய்வதற்கான செயற்திட்டமொன்றை இனங்கண்டிருக்கிறது. இதன் நோக்கம் தமிழ் பேசும் மக்களின் குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்றவர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்வதேயாகும். தற்போதைய அரசியலமைப்பு (1978 அரசியலமைப்பு) வரையறைக்குள் இந்தச் செயற்திட்டம் அமையும். சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவினால் முன்மொழியப்படுகின்ற இச்செயற்திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும். அத்துடன், வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்படும் மாகாண சபைகள் அமைக்கப்படும் வரை இடைக்கால ஏற்பாடொன்றையும் இத்திட்டம் விதந்துரைக்கிறது. 1.3. 1987 ஜூலையில் இந்திய- இலங்கை சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் 1978 அரசியலமைப்புக்கு 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்திருத்தத்தின் விளைவாக இலங்கைபூராவும் மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்பட்டது. பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் இரு பட்டியல்களின் கீழ் அதாவது மாகாணங்களுக்கான பட்டியல், பொதுப் பட்டியல்- குறித்துரைக்கப்பட்டன. ஏனைய சகல அதிகாரங்களும் ஒரு ஒதுக்கீட்டு பட்டியலின் ஊடாக மத்திய அரசாங்கத்துக்கு ஒதுக்கப்பட்டன. இந்த மூன்று பட்டியல்களிலும் உள்ளட்டக்கப்படாத எந்தவொரு விடயதானமும் அல்லது செயற்பாடும் ஒதுக்கீட்டுப் பட்டியலின் கீழ் வருபவையாகவே கருதப்படும். 1.4. பொதுப்பட்டியலின் ஊடாக மாகாணங்களுக்குப் பரவலாக்கம் செய்யப்பட்ட விடயதானங்களும் செயற்பாடுகளும் எந்த வகையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு சொந்தமானவையாகவே இந்த விடயதானங்களும் செயற்பாடுகளும் கருதப்பட்டு அவற்றை மத்திய அரசாங்கமே அதன் கைகளில் வைத்திருந்தது. 2. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு கூடுதல் பட்ச அதிகாரப் பரவலாக்கலை அனுமதிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் 2.1. சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பொறுத்தவரை தற்போது இருக்கக்கூடிய குறைபாடுகளை இல்லாமல் செய்து அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். 2.2. மாகாணசபைகள் பயனுறுதியுடைய முறையில் செயற்படுவதற்கு வசதியாக போதுமான நிதி அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டும். 2.2.1. மாகாணங்களின் நோக்கெல்லைக்குள் வருகின்ற எந்தவொரு விடயதானத்தைப் பொறுத்தவரையிலும் மத்திய அரசாங்கத்தினால் மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்திட்டங்களுக்கான சகல நிதிகளும் அந்தந்த மாகாண நிருவாகங்களின் ஊடாகவே மத்திய அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டும். 3. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் பட்ச அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்படுவதை அனுமதிப்பதற்கு தேவையான விசேட ஏற்பாடுகள் 3.1. கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை இருப்பதாகவும் அந்தத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழு கருதுகிறது. 3.2. வடமாகாணத்தின் நிலைமை அமைதியானதாக இல்லை. வடக்கில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதென்பது அண்மைய எதிர்காலத்தில் சாத்தியமாகப் போவதில்லை. அதனால், அதிகாரப் பரவலாக்கத்தின் பயன்களை வடமாகாணத்தின் மக்களும் அனுபவிப்பதற்கு வகை செய்ய மாற்று ஏற்பாடு ஒன்று அவசியமாகிறது. 3.3. வடக்கில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பதால், அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் வடமாகாணத்தில் இடைக்காலச் சபையொன்றை நிறுவுவதற்கான உகந்த உத்தரவை ஜனாதிபதியால் பிறப்பிக்க முடியும். அத்தகைய இடைக்கால சபை சட்டங்களை இயற்ற வேண்டிய அவசியமும் இருக்கலாம். 3.4. ஆளுநர் அவருக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை செயற்படுத்தும் விடயத்தில் மாகாணமொன்றின் இடைக்காலச் சபை அவருக்கு உதவியும் ஆலோசனையும் செய்யும். மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் வரை இடைக்கால சபை செயற்படும். 3.4.1 இடைக்கால சபை அந்த மாகாணத்தின் இனத்துவ குணாம்சத்தை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். 3.4.2. எனவே, அரசியல் அனுபவமும் மாகாணத்தினதும் அதன் மக்களினதும் அபிவிருத்தியில் கடப்பாட்டுடன் கூடிய அக்கறையும் கொண்ட மாகாண மக்களினால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நபர்களை உள்ளடக்கியதாக இடைக்காலசபை இருக்கவேண்டும் என்று முன்மொழியப்படுகிறது. 4. அரசியலமைப்பின் அரசகருமமொழிகள் ஏற்பாடுகளின் அமுலாக்கம் 4.1 மொழிகள் தொடர்பிலான அரசியலமைப்பின் 4 ஆவது அத்தியாயத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான சட்டங்களை பாராளுமன்றம் நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் உடனடி நடவக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். 4.2. சட்டவாக்க குணாம்சத்திலும் பார்க்க நிருவாக ரீதியான தன்மைகளை எடுக்கக் கூடிய பரிகாரநடவடிக்கைகளை எடுப்பதற்கான பல கட்டங்கள் இருக்கின்றன. பின்வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் அக்கறையுடன் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும். (அ) வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரமல்ல, நாடு பூராவும் தமிழ் பேசும் மக்கள் பொலிஸ் நிலையங்களில் தங்கள் சொந்தமொழிகளில் தொடர்பாடல்களைச் செய்து அலுவல்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக போதுமான எண்ணிக்கையில் தமிழ் பொலிஸ் அதிகாரிகளை ஆட்திரட்டல் செய்ய வேண்டும்; (ஆ) பொதுமக்கள் தங்களது சொந்த மொழிகளில் அமைச்சுகள், அரசாங்க திணைக்களங்கள், சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுடன் அலுவல்களைச் செய்து கொள்வதற்கு வசதியாக ஊழியர்களை நியமித்தல் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் உட்பட சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்; (இ) மக்களைத் தேடிச் சென்று அதேஇடத்தில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வசதியாக தமிழ் மொழியில் தாராள பரிச்சயமுள்ள அதிகாரிகளைக் கொண்ட நகரும் அலுவலகங்களை கிரமமாக நடத்துவதற்கான ஒழுங்கமைப்புகள் செய்யப்பட வேண்டும்; (4) மேற்கூறப்பட்டவாறு தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்குகின்றவற்றையொத்த பிரச்சினைகளை வடக்கிலும் கிழக்கிலும் வாழும் சிங்களச் சிறுபான்மையினர் எதிர்நோக்குகிறார்கள். அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். |