Thursday, June 5, 2008

ஓர் இலட்சியப்பெண்ணின் காலடித்தடங்கள்…….

கணவர் ஒரு கண்,காது,மூக்கு அறுவைச்சிகிச்சை நிபுணர் மென்மையான புன்னகை. கண்ணை உறுத்தாத வர்ணத்தில் ஹிஜாப் உடை. ஆர்பாட்டமில்லாத அழகிய இலங்கை ஜமா அதே இஸ்லாமி பெண்கள் அணியைச் சந்திப்பதற்காக தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு,தன் துணைவருடன் இலங்கை வந்திருந்த Dr மாரியா மஹ்மூத் அவர்களை மெல்லியதாக பனிதூவும் இளங்காலைப்பொழுதொன்றில் மாவனல்லையில் சந்தித்தோம்.


சகோதரி மாரியா அவர்கள் PAS எனப்படும்Islamic party of Malaysia வின் மத்திய சபை உறுப்பினர். மலேசியப்பாராளுமன்ற அங்கத்தவர். IMWU எனப்படும் சர்வதேச முஸ்லிம் பெண்கள் ஒன்றியத்தின் பிரதி பொதுச்செயலாளர். தொழிலால் ஒரு மருத்துவர்,ஆறு பிள்ளைகளின் தாய் ,இவரது ஆங்கிலம் தெளிவும் தீர்க்கமும் மிக்க கருத்துக்கள். காண்போரை ஒரே வினாடிக்குள் ஈர்த்துக்கொள்ளும் ஆளுமை. இது தான் டொக்டர் மாரியா மஹ்மூத். ஒரு மனிதனை வடிவமைப்பதில் குழந்தைப்பருவத்தின் பங்களிப்பு மகத்தானது. எவ்வாறான ஒரு குழந்தைப்பருவம் உங்களுக்குக்கிடைத்தது என்பதை அறிய ஆவலாயிருக்கிறோம்.

நான் ஒரு பிடிவாதமான குழந்தை(சிரிக்கிறார்) எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எனது பெற்றோர் பாஸ் கட்சியின் தீவிர அங்கத்தவர்கள்.
தந்தை ஓர் ஆசிரியர், எனது தாய் மிக கண்டிப்பானவர்.முழுமையான இஸ்லாமிய சூழலில் வளர்க்கப்படோம். எனது அன்னை அந்தக்காலத்திலேயே முழுவதும் மூடிய ஹிஜாப் அணிவார். அவர் என்னை ஹிஜாப் அணியுமாறு சொல்லும் போதெல்லாம் நாம் பிடிவாதமாய்மறுப்பேன்.நான் தொழுவது வழக்கம்.ஏனென்றால் என் தாய் கூறுவார்அல்லாஹ்விடம் எதையாவது கேட்க வேண்டுமென்றால் தொழுது கேட்டால் தான் கிடைக்குமென்று.எனக்கு அதிகமான விடயங்கள் தேவைப்பட்டதனாலேயே நான் தொழுகையைத் தொடர்ந்தேன்.

இஸ்லாத்தை நோக்கிய திருப்பம் எவ்வாறு நிகழ்ந்தது?

15,16 வயதாகும் போது ஒரு கோடைகால முகாமிற்கு(summer camp ) செல்லக்கூடிய வாய்ப்புக்கிடைத்தது.அதை ஏற்பாடு செய்த அமைப்பில் அன்வர் இப்ராஹீம் அவர்களும், இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.என் வாழ்வில் மகத்தான் திருப்புமுனை அது தான்(உணர்ச்சிவசப்படுகிறார்)யான இஸ்லாம் என்றால் என்ன?நான் யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்தது அங்கு தான்.தொழுகையில் ஓதும் தூய வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்ததும் அப்போது தான். ஒவ்வொரு முறை நான் தொழும் போதும் நான் அழுகிறேன்.(சில மணித்துளிகள் உடைந்து அழுகிறார்……….) இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம்(இறைவா நேரான பாதையைக்காட்டுவாயாக)என்ற வாசகத்தை என் நாக்கு உச்சரிக்கும் போதெல்லாம் அழுகையை என்னால் அடக்க முடிவதில்லை.
பெண்கள் பாடசாலையில் தான் படித்தேன் என்றாலும் அல்லாஹ்வின் மீது கொண்ட அச்சம் காரணமாக ஹிஜாப் அணிந்து சென்றேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
நாங்கள் இரண்டே பேர் தான் ஹிஜாப் …(திரும்பவும் விழியில் நீர் ததும்பத்தொடங்குகிறது)


மற்ற மாணவிகள் எங்களைக் கேலி செய்தார்கள்சிரித்தார்கள் நான் தைரியத்தை இழக்கவில்லை.அது மிகவும் கஷ்டமான காலம்,ஆனால் நான் சந்தோசமாயிருந்தேன். பின்னர் சாதாரணதர பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப்பெற்றேன்.அல்ஹம்துலில்லாஹ்.
எகிப்தின் கெய்ரோ பல்கலைக்கழகத்திற்கு ம்ருத்துவம் பயிலச்செல்வதற்கான புலமைப்பரிசில் அப்போதே என்னை வந்தடைந்தது.

பல்கலைக்கழக வாழ்வு உங்களை செதுக்கியதா அல்லது சிதைத்ததா?

கெய்ரோ பழமையும் புதுமையும் கலந்த ஒரு நகரம்.பல்கலைக்கழகத்தில் பலநாடுகளைச்சேர்ந்தவர்கள் ருந்தார்கள்.இஸ்லாத்தை பின்பற்ற தடைகள் இருக்கவில்லை.அப்போது தான் என் கணவர் என்னை சந்தித்தார்.என்னைக் குறித்த அவரின் விருப்பத்தைத் தெரிவித்தார். எனக்கு அப்போது வெறும் 18 வயது தான்.அவருக்கு 19 வயது.அவர் மற்ற ஆண்களை விட கொஞ்சம் நல்லவராக எனக்குத் தெரிந்தார்.என் மனதில் காதல் என்ற ஒன்றே கிடையாது. நான் சரி ,ஆனால் எனது கல்வி முடியும் வரை உங்களை சந்திக்கவோ உங்களோடு பேசவோ முடியாதுஎன்று கூறினேன்.நாங்கள் வீடு சென்று பெற்றோருடன் பேசுவோம்என்று அவர் அபிப்பிராயப்பட்டார்.எனது தந்தை மிகவும் கண்டிப்பானவர் ஆனால் திறந்த மனதுடையவர். விடயம் கேள்விப்பட்டதும் எனது பெற்றோர் நாங்கள் உடனடியாகத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.இஸ்லாம் மிக இலகுவானது.அல்லாஹ்வின் திருப்தியே எல்லாவற்றினதும் பின்னணி என்பதை என் தந்தை எனக்குப் புரிய வைத்தார்.
பல்கலைக்கழக மூன்றாவது ஆண்டில் எனது மகள் பிறந்தாள்.அடுத்த ஆண்டு இன்னுமொரு மகன். வாழ்க்கை மிகவும் ஓய்வின்றிக் கழிந்தது.
பல்கலைக்கழகத்தில் கல்விக்குப் புறம்பாக எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட என்னால் முடியாமல் போனது, குழந்தைகளுக்கு கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டதால் மருத்துவராக அல்லாது மருத்துவக்கல்லூரியொன்றில் 8 மணி முதல் 4 மணி வரை விரிவுரையாளராக பணியாற்றினேன்.

உங்கள் அரசியல் நுழைவு திட்டமிடப்பட்டதொன்றா அல்லது தற்செயலானதா?

PAS இரண்டு தளங்களில் செயற்படுகிறது.

1தஃவா
2
அரசியல்
பாஸின் முஸ்லிமா அமைப்பிற்கு(Muslimah wing) என்னாலான பங்களிப்பைச் செய்வதற்காகத்தான் கட்சிக்குள் நுழைந்தேன். தலைமைத்துவத்தில் நான் இருக்கவுமில்லை. அரசியல் பற்றி எதுவுமே அறிந்திருக்கவுமில்லை.அதைப் பற்றிய ஆர்வம் கூடக்கிடையாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நான் நிறைய நிர்வாகப்பயிற்சிகளைப்பெற்றிருந்ததும் நிறுவனரீதியான திறன்களோடிருந்ததும்
முஸ்லிமா பெண்களின் திறன் விருத்தி பயிற்றுவிப்பாளராக இருந்ததும் பின்னாளில் அரசியலுக்கு கட்சி மேல்மட்டம் என்னை உந்துவதற்கு வாய்ப்பளித்திருக்கலாம்.
எது எப்படியாயினும் தலைமைத்துவம் ஒரு பணியைக் கட்டளையிட்டால் எம்மால் அதைச் செய்ய முடியாது என்று மறுக்க முடியாது.இப்படித் தான் என் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.

உங்கள் அரசியல் நகர்வை உங்களது துணைவர் எப்படி எடுத்துக்கொண்டார்?

எனது கடைசிக்குழந்தையும் பாடசாலை சென்ற பின்னரே அரசியலுக்குள் நான் காலடி வைத்தேன். தொழிலையும் ராஜிநாமா செய்து விட்டு முழு நேர இஸ்லாமியப்பணியில் என்னை இணைத்துக்கொண்டேன். எனது கணவரின் உற்ற தோழி நான் தான்.அவருக்கு என்னைத் தவிர வேறு நெருங்கிய நண்பர்கள் கிடையாது. அவர் முழுமையாக என்னில் தங்கியிருந்தார்.அவர் வீட்டை முற்றாக சார்ந்த ஓர் ஆளுமை.கணவரின் அனைத்து வேலைகளையும் நானே என் கைப்படக் கவனிப்பேன். அவரது குடும்ப வியாபாரத்திலும் நான் முழுமையாக கைகொடுத்து வந்தேன். நான் ஜமா ஆவில் இணைந்ததும் அவரின் ஆதரவு இருந்தது. எனினும் எல்லாவற்றிக்கும் நான் இல்லாத குறை அவரை மிகவும் பாதித்தது. சொகுசுகளை இழக்க வேண்டியும் சில விடயங்களிற்கு இயைந்து போக வேண்டிய நிர்பந்தமும் அவருக்கு ஏற்பட்டது. எனினும் கடந்த இரு வருடங்களாக மிகவும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்கிறார் ,அல்ஹம்துலில்லாஹ்.

இலங்கைக்கு வந்திருப்பது இது தான் முதல் முறையா?

ஆம்

இலங்கையைப்பற்றி உங்களுடைய உள்ளம் என்ன சொல்கிறது? இலங்கையின் காலநிலை மலேசியாவுடையது போலவே இருக்கிறது.மழை அதிகமாக பொழிகிறது.
பழங்களின் வகைகளைப்பார்க்கும் போது பிரமித்துப்போய் விடுகிறேன்.வாழைப்பழத்தில் மட்டுமே எத்தனை வகை?மாவனல்லை மிக அழகான இடம்,எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இலங்கைப்பெண்களை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

உண்மையில் எனக்கு அதிகமான இலங்கைப்பெண்களை சந்திக்கக்கிடைக்கவில்லை.
இலங்கை ஜமா அதே இஸ்லாமி பெண்கள் அணியைச் சார்ந்த சகோதரிகளையே நான் அதிகம் சந்திக்க நேர்ந்தது, வித்தியாசமான பெண்களின் அறிமுகத்தைப்பெற்றுக்கொண்டேன்.
அவர்கள் அதிர்ந்து பேசாத மென்மையான இயல்பைக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் ஒரு பெரிய குழுவினராக இருக்கிறோம்,நீங்கள் ஒரு சிறிய குழுவினராக இருந்து கொண்டு செய்யும் பணிகளை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.


வரலாறு நெடுகிலும் பெண்கள் மென்மையானவர்களாகவும் இளகிய சுபாவம் உடையவர்களுமாகவே நோக்கப்பட்டு வந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
அரசியல் என்பது அதிகாரமும் உறுதியும் தேவைப்படுகின்ற ஒரு துறை.
இதை நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள்.

இந்தக்கருத்தை நான் ஏற்க மாட்டேன். பெண்கள் எப்போதும் மென்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. இஸ்லாத்தைப் பிழையாக விளங்கியதால் வந்த விளைவு இது. வாழ்க்கையை நோக்கினால் ஒருபெண்ணுக்கு மென்மையாக நடந்து கொள்ள வேண்டிய கட்டங்கள் போலவே கடுமையாக் நடந்து கொள்ள வேண்டிய தருணங்களும் வருகின்றன. முக்கியமாக அந்திய ஆண்களுடன் மென்மையாக நடந்து கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை.வயதானவர்களிடமும்,குழந்தைகளிடமும் மிக மென்மையாகப் பழக வேண்டும்.ஆனால் சில இடங்களில் நாம் உறுதியுடனும் ,உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருப்பது அவசியம். எனது மென்மையை நான் என் கணவருக்காக ஒதுக்கியுள்ளேன்.அவருடன் நான் இருக்கும் போது மிக மென்மையான பெண். ஆனால் நான் ஒரு சபையில் இருக்கும் போது நான் உறுதியாக இருந்து என் கருத்துக்களை தைரியமாக வெளியிடுவேன்.

எல்லாப் பெண்களும் பொருளாதார ரீதியான சுதந்திரம் பெற்றிருக்க வேண்டுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

ஆம்,நிச்சயமாக.


இஸ்லாத்தில் பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு ஆணைச்சார்ந்தது என்பது உண்மை தான்.எனினும் இன்றைய உலகில் அவ்வாறு நடப்பதில்லை என்பதும் அதை விட உண்மை. எல்லாப்பெண்களும் வெளியில் போய் வேலை பார்க்க வேண்டும் என நான் கூறவில்லை.ஆனால் அவளுக்கான பொருளாதார வாழ்வாதாரம் வேண்டும்.தன்னுடைய சொந்தக்கால்களில் சுயமாக நிற்கக்கூடிய துணிவு அவசியம். உங்களுடைய கணவர் உங்களை விட்டு பிரிவது அல்லாஹ்வின் நாட்டமாயிருக்கலாம்;அல்லதுஅவரது மனம் மாறலாம்.எதிர்காலத்தைப்பற்றி ஒன்றும் எம்மால்கூறமுடியாது. இப்படியான இக்கட்டான கட்டங்களில் யாரிடமும் தங்கி நில்லாது குடும்பத்தை கொண்டு செல்லக்கூடிய பொருளாதார பலமும் மனோ வலிமையும் பெண்ணுக்குத்தேவை. வெளியில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தே வியாபாரத்தில் ஈடுபடலாம். நாங்கள் அனைவரும் எங்கள் உரிமைகள் என்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


உங்களிடம் உள்ளவை அனைத்தும் உங்களுக்கானவை,உங்கள் துணைவரிடம் உள்ளவை அனைத்தும் உங்களுக்கும் அவருக்கும் சொந்தமானவை.உரிமைகள் பொறுப்புக்களோடு சார்ந்தவை என்பதையும் நாம்மறக்கக்கூடாது. பொருளாதார சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு அத்தியாவசியம் என நான் நினைக்கிறேன்.காலம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்ற ஒரு யுகத்தில் நாம் இருக்கிறோம். அதிகமான பெண்கள் மன அழுத்தம்(stress )பற்றி முறையிடுகிறார்கள்.


ஒரு அன்பான மனைவியாக,அணைக்கின்ற தாயாக,உடல் நலம் பேணும்
மருத்துவராக ,பாரளுமன்ற அங்கத்தவராக நீங்கள் பலபாத்திரங்களை ஏற்று திறம்பட நிர்வகிக்கும் ஒரு பெண்மணி.உங்கள் வாழ்க்கையில் மனஅழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

முதலில் உங்கள் மனதில் உள்ளதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க தயங்கக்கூடாது.
மனதுக்குள் குமையும் எண்ணங்களை உள்ளுக்குள் அடக்கி வைப்பதால் இரத்த அழுத்தம் எகிறுகிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது.மனதுள் நினைப்பதை அப்படியே தெரிவித்து விடுங்கள். நான் என் வாழ்வில் முதலில்அதைத் தான் செய்கிறேன்.திட்டமிட்டு ஒழுங்குபடுத்தல் முன்னுரிமைப்படுத்தல் இவை இரண்டின் அடிப்படையிலும் என் பணிகளை மேற்கொள்கிறேன்,அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாமிய ஆட்சியை நோக்கிய பயணத்தில்( Mass media)தொடர்பூடகங்களின் பங்களிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

மிக முக்கியமானது.மீடியா ஒரு சக்தி.நாங்கள் இதனை கவனமாகவும்,மிகுந்த பொறுப்புணர்வுடனும் வினைத்திறனுடனும் கையாள வேண்டும்.பொது உரை அல்லது ஒரு நேர்காணலை வழங்கும் நாம் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து நடக்க வேண்டும். மீடியாவின் நவீன போக்குகளுக்கு ஈடுகொடுக்க கூடிய வகையில் நாங்கள் எங்களைத் தயார்படுத்திக்கொள்ளவதும் எங்களுக்கான தனி மீடியாக்களை உருவாக்குவதும் நாம் செய்ய வேண்டிய பணிகளாகும்.

உங்களைப் போன்ற வெளிநாட்டு பெண் ஆளுமைகளை வரவேற்று சிலாகிக்கின்றஎமது அதே ஆண் சமூகம் தமது பெண்களின் ஆளுமையையும் வெளிப்பிரவேசத்தையும் வரவேற்க இன்னும் பூரணமாகத் தயாராகவில்லை.இதுபற்றி….

இது மிகவும் நிதர்சனமான கருத்து.பாரம்பரிய பழைமைவாத சிந்தனையிலிருந்து ஆண்களும் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.எமது சமூகத்தில் 50% ஆனவர்கள் பெண்கள்.அல்லாஹ்வின் முன்னிலையில் ஆண்களும் பெண்களும் சமமானவர்கள்.
ஆனால் ஆண்கள் தாம் சமூகப்பணிகளில் துடிப்போடு செயற்படுவதையும் அதற்கு ஒத்துழைப்பதே மனைவியரின் கடமை என்றும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
ஆண்களைப்போலவே பெண்களிலும் தலைவர்கள் உண்டு.எனினும் ஆண்கள் எப்போதும் பெண்களை வழிநடாத்துபவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள்.பெண்களின் திறமையை ஏற்றுக்கொண்டாலும் அவர்களை இரண்டாந்தரமாகப்பார்க்கும் போக்கு காணப்படுகிறது.

இந்தப்போக்கு மாற்றமுற வேண்டுமாயின் எவ்வாறான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்?

ஆண்கள் அதிலும் குறிப்பாக அழைப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோர்,பெண்களை தங்களுக்கு சமனாக மதிக்க வேண்டும் பெண்களுடைய விடயங்களை ஓரக்கண்கொண்டு பார்க்காது நடுநிலையுடன் அணுக வேண்டும். சிலர் நாங்கள் பெண்களை பயிற்றுவிக்கிறோம் என்று இன்னும் கூறிக்கொண்டிருக்கிறார்கள், பயிற்றுவிக்கக்கூடிய திறமையுள்ள பெண்கள் இருப்பதையே மறந்து. இலங்கையிலுள்ள எந்த இஸ்லாமிய இயக்கத்திலும் அதிஉயர்மட்ட முடிவெடுக்கும் குழுவில் பெண்கள் இல்லை.இதனை நான் ஒரு பெரும் குறையாகக்காண்கிறேன்.இது நிறுவனத்தின் சமநிலையைப் பாதிப்பதாகும்.
ஆண்கள் தவறு செய்தால் பெண்களிடம் மன்னிப்புக்கேட்கத் தயங்கக்கூடாது..
இது ரசூலுல்லாஹ்வின் வழிமுறை.சில பெண்கள் ஆண்களை விட அழகான கருத்துடையவர்களாக,திறமையான நிர்வாகிகளாக இருக்கலாம்.இஸ்லாமிய இயக்கம் இதை விளங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் ஈகோ பார்ப்பது இஸ்லாமல்ல.

உங்களுடைய இயக்கத்திலும் இந்த நிலை காணப்படுகிறதா?

நான் ஒரு வட்ட மேஜையில் கலந்துரையாடலுக்காக உட்காரும் போது என்னை கருத்து வெளியிடக்கூடிய நபராகவே பார்க்கிறேன்.,ஒரு பெண்ணாகவல்ல.
எமது அமைப்பிலும் சில வருடங்களுக்கு முன்னர் இதே நிலை காணப்பட்டது.எமது ஆண்கள் எதிர்கட்சி தலைவியுடன் ஒரே மேசையில் உட்கார்ந்து பேசுவார்கள்,எமது பெண்கள் ஒரமாக வைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது.அல்ஹம்துலில்லாஹ் இப்போது அந்நிலை மாறியிருக்கிறது.எமது அதியுயர் மட்ட சூறாவில் பெண்களும் அங்கத்துவம் வகிக்கிறார்கள்.


இறுதியாக எமது முஸ்லிம் பெண்களுக்கு என்ன கூறவிரும்புகிறீர்கள்?


உங்களது அறிவையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.பொறுப்புக்களை எடுக்கக்கூடிய தகுதியையும் ஆளுமையையும் உங்களில் ஏற்படுத்துங்கள்.உங்கள் குடும்பத்தைப் பற்றி எல்லை மீறிக்கவலைப்பட வேண்டாம்.நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் பயணிக்கும் போது அல்லாஹ் எமது குடும்பத்தைக்கவனித்துக்கொள்வான்.


சகோதரி மாரியா இஸ்லாமியப்பெண்கள் ஹிஜாபுடன் நடத்தும் நெறிப்போராட்டத்துக்கு சிறந்த ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன் பிரிய மனமின்றி நமது நாளைய நகர்வை நோக்கிய சிந்தனைகளுடன்
விடைபெற்றோம்.
நேர் கண்டவர் சமீலா யூசுப் அலி

மீள் பதிப்பு அ.அஸ்மின்

Tuesday, June 3, 2008

கிழக்கில் வளர்ந்து வரும் வாகாபிசமும் அதன் பின்னணியும்: "லக்பிம"

கிழக்கில் வளர்ந்து வரும் வாகாபிசமும் அதன் பின்னணியும்: "லக்பிம"
[செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 08:27 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்]
கிழக்கு இலங்கையில் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் உருவாகி வருவது தொடர்பான ஆதாரங்களையும் அதன் பின்னணி தொடர்பான தகவல்களையும் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" வெளியிட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய பகுதிகள்:

வாகாபிசம் கிழக்கில் தலைதூக்குகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வதில் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.

ஆனால் அதன் யதார்த்தம் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.

அண்மையில் காத்தான்குடி, ஏறாவூர், ஆரையம்பதி ஆகிய பகுதிகளில் முஸ்லிம் - தமிழ் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்கள் இரு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் போட்டியாகும். துணைப் படைக்குழுவின் பிள்ளையானுக்கும் - ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் ஏற்பட்ட பதவிப் போட்டியே அது.

இரு சமூகங்களுக்கும் இடையிலான உறவுகளுக்கும் மத்தியில் அரசியல் வேறுபாடுகள், மற்றும் ஆயுதக்குழுக்களின் பிரசன்னங்களும் அங்கு தோன்றியிருந்தன.

இந்தப் பதற்றமான உறவுகள், பிள்ளையான் குழுவைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து மேலும் அதிகரித்திருந்தது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பிள்ளையான் குழுவின் முக்கிய உறுப்பினர் சாந்தன்.

அவர்கள் இருவரும் நகரத்தின் மத்தியில் ரி-56 ரக துப்பாக்கியினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் பிள்ளையான் குழுவினர் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

ஏறாவூரில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்களால் இரு முஸ்லிம்கள் கடத்தப்பட்டதனைத் தொடர்ந்து நடந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் இந்த வன்முறைகள் மேலும் 3 நாட்களுக்கு நீடித்திருந்தன.

கடந்த திங்கட்கிழமை முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் தம்மை நோக்கிச் சுட்டதாக அதிரடிப்படையினர் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவங்களை தொடர்ந்து ஏறாவூர் பகுதியிலும் அதனை அண்டிய தமிழ்ப் பகுதிகளிலும் இருந்து 300 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்கி வருகின்றதா? என்பதே தற்போதைய விவாதம்.

புலனாய்வுத்துறை அறிக்கைகளின் படி வாகாபிசம் சவூதி அரேபியாவில் இருந்தே இங்கு பரவி வருவதுடன், சவூதி ஆரேபியாவின் நிதி உதவிகள் மூலம் அது வளர்ந்தும் வருகின்றது.

இது காத்தான்குடியிலேயே அதிகம் முனைப்பு பெற்று வருகின்றது.

காத்தான்குடியில் பிறந்த ஒரு முஸ்லிம் தலைவர் தற்போது சவூதிஅரேபியாவில் உள்ள கிங் ஹாலிட் அபா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றார்.

அவரே உள்ளுர் வாகாபிசத்துடனும், அதற்கான அனைத்துலக கொடையாளிகளுடனும் தொடர்புகளை பேணி வருகின்றார். சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பும் அதிக எண்ணிக்கையான இளைஞர்கள் இந்த மதவாதத்தை போதித்து வருகின்றனர்.

இந்த தீவிர மதவாதத்தையும், ஆயுதக்குழுவையும் எதிர்த்த ஒட்டமாவடியைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவரான கேணல் லற்றீஃப் என்பவர் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் மதவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்தப் படுகொலை தொடர்பாக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

சுபைர் எனப்படும் முஸ்லிம் பிரிவினரின் அனைத்து இலங்கை தறீகதுள் முஃப்லிஹீன் எனப்படும் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் வாகாபிசவாதிகளால் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருகின்றனர்.

2004 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 4 ஆம் நாள் சுபைர் பிரிவு முஸ்லிம் மக்களின் மசூதி ஒன்றிற்கு தீ வைக்கப்பட்டது. இந்த மசூதி அதன் மதத்தலைவர் காலம் சென்ற சியாகூல் முபைஹீன் அப்துல்லாவின் தலைமையின் கீழ் இருந்து வந்தது. அவரைப் பயில்வான் என அழைப்பதுண்டு.

பயில்வான் வாகாபிசத்தை எதிர்த்தவர். இதனைத் தொடர்ந்து சுபைர் பிரிவை சேர்ந்தவர்கள் ஒர்தோடொக்ஸ் பிரிவினாரின் மசூதி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது வாகாபிசவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சுபைர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என சுபைர் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காத்தான்குடியில் மேலும் ஒரு வன்முறை வெடித்தது. அந்தச் சம்பவத்தில் ஒர்தோடொக்ஸ் பிரிவினர் சுபைர் பிரிவினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். பயில்வான் மரணமடைந்ததைத் தொடர்ந்து வன்முறை வெடித்திருந்தது. பயில்வானின் சடலம் புதைக்கப்பட்ட மயானத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என மதவாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்தச் சம்பவத்தில் காவல்துறையினருடன் நடைபெற்ற மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்திருந்தனர். வாகாபிசவாதிகள் சுபைர் பிரிவினரின் நூற்றுக்கணக்கான வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் தீயிட்டுக்கொளுத்தியிருந்தனர். அதன் இழப்பு 600 மில்லியன் ரூபாய்களாகும்.

காத்தான்குடியில் இருந்து சுபைர் பிரிவைச் சேர்ந்த 400 குடும்பங்கள் விரட்டியடிக்கப்பட்டன. சிறிலங்கா தலைமை நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அவர்களின் மீள் வரவை வாகாபிசவாதிகள் தடுத்திருந்தனர்.

அமைச்சரான அமீர் அலி என்பவர் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் தெரிவாகி இருந்தாலும் பின்னர் அரசின் சலுகைகளினால் அதன் பக்கம் தாவியிருந்தார். அவரே முஸ்லிம் ஆயுதக்குழு ஒன்றின் உருவாக்கத்திற்கான முக்கிய நபராக இருப்பதாக உள்ளுர்வாசிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

முஸ்லிம் ஆயுதக்குழுவினர் எம்மால் உருவாக்கப்படவில்லை, தாமாகவே உருவாகியவை என தனது பெயரை குறிப்பிட விரும்பாத மற்றுமொரு தமிழ் பொதுமகன் கருத்து தெரிவித்துள்ளார்.

அமீர் அலி தனது ஆயுதக்குழுக்களை முஸ்லிம் காங்கிரசை மிரட்டுவதற்கும், கறுவாக்கேணி பகுதியில் கருணா குழுவுடன் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றார்.

எனினும் அமீர் அலிக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் துணைப்படையின் தயவுகள் ஏன் தேவை என்பது முக்கியமான கேள்வி.

மற்றுமொரு தேர்தலில் அரசு தப்பிப் பிழைப்பதற்கு ஆயுதக்குழுக்கள் தேவை.

அவை சிறுபான்மை மக்களின் வாக்குகளை வன்முறையான வழிகளில் பெற்றுக்கொடுக்கக் கூடியவை.

பிள்ளையானுடன் அரசு கூட்டுச் சேர்ந்துள்ளது. ஒரு நேர்மையான தேர்தலுக்கான சந்தர்ப்பத்தை அறவே இல்லாமல் செய்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 1, 2008

துணைப்படை டக்ளசின் நீண்டகால தமிழின விரோத நடவடிக்கைகள் என்ன?:

துணைப்படை டக்ளசின் நீண்டகால தமிழின விரோத நடவடிக்கைகள் என்ன?: பட்டியலை வெளியிட்டார் ஆனந்தசங்கரி
[ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 01:20 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் டக்ளஸ் குழுவின் நீண்டகால தமிழின விரோத நடவடிக்கைகள் என்ன என்பதனை சிறிலங்கா அரசாங்கத்தின் மற்றொரு ஆதரவாளரான வீ.ஆனந்தசங்கரி அம்பலப்படுத்தி பட்டியல் வெளியிட்டுள்ளார்.

தமிழர் தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் வடக்கு - கிழக்கைப் பிரித்த மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள இருவரும் சிங்களவரிடம் விசுவாசமாக இருந்தமைக்காக "அதிகாரம்" தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் மோதிக்கொண்டு வருகின்றனர்.

இம் மோதலின் ஒரு பகுதியாக டக்ளசின் தமிழின விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டு அவரிடம் அதிகாரத்தைக் கையளிக்காதீர்கள் என்றும் 75 வயதான தனியாளாக நிற்கின்ற தன்னிடமே அதிகாரத்தைக் கையளிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதங்களை வீ.ஆனந்தசங்கரி அனுப்பியுள்ளார்.

அதிகார வெறிக்காக தமிழர்களை விலை பேசும் இருவரின் உண்மை முகத்தை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆனந்தசங்கரி எழுதிய கடிதத்தை அப்படியே நாம் வெளியிடுகின்றோம்.

அக்கடிதங்கள்:

26.05.2008

மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள்
அலரி மாளிகை
கொழும்பு-03

வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழு

பாகம் -01

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழுவை அமைத்தமைக்கு தங்களுக்குரிய கௌரவத்தை கொடுத்து எனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறேன். அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டிய உரிமையும், நாட்டின் நலன் கருதிய கடமைப்பாடும் எனக்குண்டு.

அவ்வாறு செய்வதற்கு நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் பல என்னிடம் உண்டு. எனது ஆட்சேபனை தாமதமாகியமைக்கு கிழக்கு மாகாண பிரச்சினைகளில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தமையும் எனது ஆட்சேபனைக்குரிய ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் முக்கிய உறுப்பினராகிய செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் படுகொலையும் காரணங்களாகும்.

எதிர்காலத்தில் மீண்டும் ஒரு போராட்டத்தை தொடர இடமளிக்காது எமது இனப்பிரச்சனைக்கு ஓர் நிரந்தர தீர்வே எமக்கு வேண்டும்.

50 ஆண்டுகளுக்கு மேல் ஒற்றையாட்சியின் கீழ் காண முடியாத ஓர் தீர்வு இத்தனை உயிரழிவுகளுக்கும், சொத்தழிவுகளுக்கும் பின் காண முடியும் என நான் திடமாக நம்பவில்லை.

இதன் காரணமாகவே நான் சமஷ்டி முறையிலான ஓர் தீர்வை ஆதரிப்பதோடு அதற்கு மாறாக இந்திய முறையிலான தீர்வை மட்டும் ஆதரித்து வருவது தாங்கள் அறிந்ததே.

கடந்த நான்கு ஆண்டுகளாக பல தரப்பட்டவர்களுடன் எனது பிரேரணையை விவாதித்த போது அதிகமானவர்களுக்கு அது ஏற்புடையதாக இருந்ததை அறிந்து கொண்டேன். இதைத் தவிர நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தையும், சமாதானத்தையும், சகஜ வாழ்க்கையையும் ஏற்படுத்துவதோடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் பல்லின மக்கள் மத்தியில் சமத்துவத்தையும், நல்லெண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்குண்டு.

நம் நாட்டின் முதல் தேவைகள் இவையே. இதுவே மக்களினதும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும். ஆனால் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாடு வேறுபட்டதும், வட பகுதி மக்களுக்கு ஏற்புடையதல்ல என்பதோடு ஏனைய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வேறுபட்ட கருத்திருக்க முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

மேலும் அவரும் அவரின் சகாக்களும் 1990 ம் ஆண்டு முற்பகுதியில் தீவகத்தை தம் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட காலத்திலிருந்து அவர்களின் செயற்பாடுகள் சர்வாதிகாரப் போக்குக் கொண்டிருந்தமையால் வட பகுதி மக்களை மீட்டெடுக்கும் பணியை அவர்களிடம் விட்டுவிட முடியாது.

மாற்றுக் கட்சியினரை தேர்தல் காலத்தில் ஆதரவு தேடும் உரிமையை மறுத்தும், பெருமளவில் ஆள் மாறாட்டம் செய்தும் பாராளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் புதிய ஓர் கலாச்சாரத்தை நம் நாட்டில் ஏற்படுத்தியவர்கள் அவர்களே. ஜனநாயக பாராம்பரியத்துக்கு அவர்கள் ஏற்படுத்திய பாதிப்பு விடுதலைப் புலிகளினால் ஏற்பட்டதிலும் பார்க்கக் கூடியதாகும்.

ஜனநாயக கோட்பாடுகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் மதிப்பு கொடுத்து வந்தது. பொதுஜன வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தின் காலத்தை 1983 ஆம் ஆண்டு அரசு நீடித்த போது தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த 17 பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் எவ்வாறு அதை ஆட்சேபித்து எமது பதவிகளைத் துறந்தோம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

உலக யுத்த காலம் தவிர்ந்த வேறு எந்தக் காலத்திலும், எந்த ஜனநாயக நாட்டிலும் இவ்வாறு செய்யும் வழக்கம் இல்லை. இவ்வாறு பதவி துறந்த எங்கள் 17 பேரையும் அரசியல் சாசனத்தில் ஆறாவது திருத்தத்தைக் கொண்டு வந்து வேண்டுமென்றே எம்மை பாராளுமன்றம் செல்ல விடாது தடுத்து, மிதவாதிகளிடமிருந்த தமிழ் மக்களின் தலைமையை பறித்தெடுத்து ஆயுதக் குழுக்களிடம் கையளித்தார் கௌரவ ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள்.

எதிர்கட்சியினர் 6 வருடங்களின் பின் மக்களிடம் ஆணை பெறும் உரிமையை மறுத்து நியாயமற்ற முறையில் மக்களின் புதிய ஆணையை பெறாது மேலும் 6 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். 6 ஆண்டுகள் மட்டும் ஆளும் மக்கள் ஆணை பெற்ற ஓர் கட்சி நியாயமற்ற முறையில் 12 ஆண்டுகள் ஆட்சி நடாத்தியது. நாடளாவிய ரீதியில் சுதந்திரமானதும், நியாயமானதுமான ஒரு தேர்தல் 1977 ஆம் ஆண்டின் பின் இன்று வரை இலங்கையில் நடைபெறவில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைய இந்த நிலைமை பெருமளவு உருவாக காரணமாக இருந்தது வடக்கு கிழக்கு என்பதோடு அதற்குப் பெரும் பங்களிப்புச் செய்தது கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களே.

இந்தக் குழுவினர் 1994ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டு 9 ஆசனங்களை பெற்றனர்.

அத்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட

இக் குழுவைச் சேர்ந்த 13 வேட்பாளர்களும் 10 தேர்தல் தொகுதிகளில் மொத்தமாக பெற்ற வாக்குகள் 175 மட்டுமே.

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் அவர்கள் மாற்றுக்கட்சியினர் எவரையும் நியமனத் திகதியிலிருந்தே அத்தொகுதியில் கால் வைக்க விடாது மிக மோசமான முறையில் ஆள் மாறாட்டம் செய்து 8,638 வாக்குகளை மட்டும் பெற்றிருந்தனர்.

இவர்கள் அத்தேர்தல் மாவட்டத்தில் 596,366 வாக்காளர்கள் இருந்தும் மிகப் பிழையான முறையில் மிகக்குறைந்த வாக்குகளை பெற்றபோது அரசு அரசியல் சாசனத்தையோ அன்றி தேர்தல் சட்டத்தையோ மாற்றம் செய்து பரிகாரம் செய்யும் என்று எதிர்பார்த்திருந்தேன்.

இதற்குரிய பரிகாரத்தை அரசு அன்று செய்திருந்தால் இன்று பொதுமக்களை அன்றி விடுதலைப் புலிகளை மட்டும் பாராராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் 22 த.தே.கூ உறுப்பினர்கள் தெரிவாகியிருக்க மாட்டார்கள். அடுத்தடுத்து ஆட்சியை கைப்பற்றிய கட்சிகள் இவ்வாறு தெரிவாகும் தமிழ் சிறுபான்மை கட்சி உறுப்பினர்களை தமது தேவைகளுக்கு உபயோகித்து ஆட்சியை பிடிக்க அல்லது நீடிக்க செய்தமை துரதிர்ஷ்டவசமானதே.

கடந்த காலத்தில் சில சுயநலமிக்க தலைவர்கள் நாட்டுப்பற்று இன்றி செய்த பாவத்தினாலேயே நம் முழு நாடும் இன்று இவ்வாறு அல்லல்படுகின்றது.

இந்த நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற த.வி.கூ ஆற்றிய பெரும் பங்களிப்பை முழு உலகும் மிகவும் பாராட்டியது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தத் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் இப்போது இல்லை. அவர்களில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் மரணித்து விட்டனர். மற்றும் சிலர் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டனர்.

அத்தகைய பழைய தலைவர்களில் இன்றும் அரசியலில் ஈடுபாட்டுடன் இருக்கும் இருவரில் ஒருவர் த.வி.கூ. உருவாக்கிய நற்பெயரை அழித்துவிட்டு, என்னை மட்டும் தன்னந்தனியாக எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வைத்துவிட்டு, தான் மோசடி மூலம் பாராளுமன்றம் சென்று விட்டார்.

எம் தலைவர்கள் காட்டிய வழியிலிருந்து நான் தவறவில்லை.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் எதிர்நோக்கிய தர்ம சங்கடமான நிலைமையும் அவமானங்களும் சொல்லில் அடங்கா.

உலகளாவிய ரீதியில் பிரசுரமாகும் விடுதலைப் புலிகள் சார்பான பல கையடக்கப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் எனக்குக் கொடுத்து எழுதும் அடைமொழிகள் கீழத்தரமானவையும், அவதூறானவையுமாகும்.

அவர்கள் பாவிக்கும் வார்த்தைகள் என் மனதை மிகவும் புண்பட வைத்தன. நான் யாருக்கும் அடிவருடியாக செயல்பட்டவன் அல்ல.

கறுப்பை கறுப்பு என தயங்காது கூறுபவன். எப்போதும் நடுநிலைமையை வகிப்பவன். இருப்பினும் இத்தகைய அவமானங்களை சகிப்பதற்குக் காரணம் நான் என் நாட்டை மிகவும் நேசிப்பதோடு நாட்டுப்பற்றற்ற ஜனநாயக விரோத சக்திகளிடமிருந்து நாடு விடுதலை பெற வேண்டும் என்பதாலேயே.

பயங்கரவாதத்தை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் உங்கள் பணிக்கு எனது பூரண ஒத்துழைப்பு உண்டு.

அந்தப் பணிக்காக என் உயிரையும் தர நான் தயாராக உள்ளேன்.

ஆனால் வட பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் விடுதலைப் புலிகள் மட்டும்தான் என எண்ணாதீர்கள். கிழக்கு மாகாண மக்களைப் போல் வட பகுதி மக்களும் போதியளவு துன்பப்பட்டு விட்டார்கள். போதியளவு இழந்தும் விட்டார்கள்.

தொடர்ந்து நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழ்கின்றார்கள். அவர்கள் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியிலிருந்து நெருப்புக்குள் பாயும் நிலைமைக்கு தள்ளப்பட கூடாது. எதிர்வரும் ஜூலை 15 இல் எனக்கு 75 வயது பூர்த்தியாகி விடும்.

எனக்கு ஏதாவது நடக்கும் முன்பு நம் நாட்டில் வாழும் ஒவ்வொரு பகுதியினரும் அடிமைத்தனத்திலும், நிரந்தர பயபீதியிலும், பல ஆண்டு காலமாக அனுபவிக்கும் வேதனைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதே.

எனது எதிர்ப்பு விசேட செயலணிக் குழுவின் அமைப்புக்கும் அக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் ஆகிய இரண்டுக்குமே.

ஏற்கனவே அனுபவிக்கும் மந்திரி பதவியோடு இக்குழுவின் தலைவராக தங்களால் தெரிவு செய்யப்பட்ட கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் செயற்பாடுகள் பற்றி நான் பலதடவை தங்களுக்கு புகார் செய்துள்ளேன்.

அவரின் மந்திரி பதவி நாட்டுக்கு ஏற்கனவே பாதகமானதும், அரசுக்கு அவர் ஆற்றும் தொண்டுக்கு அப்பதவி மிகவும் போதுமானதுமாகும் ஏனைய இரு உறுப்பினர்கள் பற்றி அவர்களுக்கு வேலைப்பளு கூடிவிட்டது என்பதைத் தவிர வேறு எந்த எதிர்ப்பும் கிடையாது.

இக் குழுவில் பணியாற்ற போதிய நேரம் இருக்காது. இவ்விருவரும் முதல் கூட்டத்துக்கே சமூகம் கொடுக்காதமை இறுதியில் இதுவொரு தனி மனிதனின் அமைப்பாக விளங்கப் போகின்றது என்ற எனது சந்தேகத்தையும் ஈ.பி.டி.பி இயக்கத்தின் அண்மைக்கால வரலாறு அப்பாவி தமிழ் மக்களுக்கு மாறாக மீண்டும் அரங்கேறப்போகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

சந்தர்ப்பம் கிடைத்தால் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவாகள் என்ன செய்வார் என நானறியேன். வடக்கின் அபிவிருத்திக்கு பதிலாக தன் சொந்த நலனுக்காக இப் பதவியை பாவிக்க மாட்டார் என்று கூற முடியாது. சுயநலன் கருதி செயற்பட இவரைச் சுற்றி ஒரு கூட்டம் உண்டு. ஆனால் இவருடைய பணிக்கு பொது மக்களிடமிருந்து எதுவித ஒத்துழைப்பும் கிடைக்கப் போவதில்லை. தலைவர்களை மக்களே தெரிவு செய்ய வேண்டுமே அன்றி தலைவர்களை மக்கள் மீது திணிக்கக்கூடாது.

அவருடன் 1994ம் ஆண்டு தொடக்கம் 14 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து செயற்பட்டும், அமைச்சரவையில் இருவரும் அங்கத்துவம் வகித்த போதும் இவரைப் பற்றியோ இவரின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியோ நீங்கள் அறியாதிருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. இவர் கட்டுப்படுத்தத் தவறிய இவர்களுடைய போராளிகளுடைய மகிழ்ச்சி தராத நடவடிக்கைகளை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய கடமைப்பாடு எனக்குண்டு.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகள் இவர்களை மிஞ்சி செயற்பட்டமையால் இவர்களுக்கு ஒரேயொரு ஆசனம் மட்டும் கிடைத்தது. ஈ.பி.டி.பி யினருக்கும் எங்களுக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்கின்ற உரிமை மறுக்கப்பட்டது.

ஈ.பி.டி.பி தமது கடந்த கால அனுபவங்களை வைத்து ஓர் ஆசனத்தை எப்படியோ வென்று விட்டது. அதற்கு முன்பு நடைபெற்ற 2001 பொதுத் தேர்தலில் பிரச்சாரத்துக்காக வேலணைக்குச் சென்ற த.வி.கூ. தொண்டர்களை ஈ.பி.டி.பி யினர் வழி மறித்து துவக்குகளாலும், ஆயுதங்களாலும் தாக்கினர்.

இரு தொண்டர்கள் ஸ்தலத்திலேயே வெட்டிக்கொல்லப்பட்டனர். மற்றும் அனேகர் படுகாயமுற்றனர். ஈ.பி.டி.பி யினர் என்னை எங்கே எங்கே எனக்கேட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

திரு.எஸ்.சோனாதிராஜா தலையில் வெட்டுக்காயமும், திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின காலும் முறிக்கப்பட்டது.

அதற்கு முன் 2000ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள தனது ஸ்ரீதர் தியேட்டர் காரியாலயத்தில் கௌரவ டக்ளஸ் தேவானந்தா இருந்து கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அதே வீதியில் அமைந்திருந்த எனது காரியாலயத்துக்கு ஆர்பாட்டம் செய்யுமாறு அனுப்பியிருந்தார்.

பலர் குடிபோதையில் இருந்தனர். எனக்கு எதிரான சுலோகங்களுடன், எனது கொடும்பாவியை எரித்து காரியாலய பெயர் பலகையையும் உடைத்து விட்டுச் சென்றனர்.

இவ்வாறான பயமுறுத்தல், பயமுறுத்தி சம்மதிக்க வைப்பதும் தேர்தல் குற்றங்களாகும். தேர்தல் சட்டத்துக்கும் முரணானதாகும். இருந்தும் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சர் என்ற காரணத்தினால் பொலிசாரும், இராணுவத்தினரும் எதுவும் செய்ய முடியாத நிலையில் செயலற்று நின்றனர். இப்பொழுது விசேட செயலணி குழு தலைவராக செயற்படும் இவ் வேளையில் அரச ஊழியர்கள் அனேகரை தன் தேர்தல் பிரச்சாரத்திற்கு உபயோகிப்பாரேயானால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் அரச ஊழியர்கள் முதல் நாள் மாலையிலிருந்தே இவருக்காக செயற்பட ஆரம்பித்து விட்டனர். ஈ.பி.டி.பி இனருக்கும் அவர்களிடம் பல விடயங்களை கற்றுக்கொண்ட விடுதலைப் புலிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை.

வெளிநாட்டு தூதுவர்களுக்கு 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் திகதி ஈ.பி.டி.பி யினரிடமிருந்து ஊர்காவற்துறை மக்களை விடுவிக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிய கடித்தின் ஒரு பகுதியை கீழே குறிப்பிடுகின்றேன்.

"இன்றைய நிலையில் நான் அறிந்த வரையில் ஒவ்வொருவரினதும் கடமை ஊர்காவற்துறை தொகுதி மக்களை குறிப்பாக நெடுந்தீவு மக்களை விடுவிப்பதே. 4100 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட ஊர்காவற்துறையின் ஒரு பகுதியாகிய நெடுந்தீவு இராணுவம், பொலிஸ், கடற்படை ஆகியோர்; கடமையாற்ற இல்லாத வேளையில் அரச சார்பான ஈ.பி.டி.பி என்ற இயக்கம் அப் பகுதி முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.

கடந்த சில வருடங்களாக அப் பகுதி மக்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகி;ன்றனர். 1999ம் ஆண்டு நடந்தேறிய ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க க்கு வாக்களித்தவர்களை ஈ.பி.டி.பி யினர் கடுமையாக அடித்துத் துன்புறுத்தினர். உதவி அரசாங்க அதிபருடைய பெயர் தற்போது பிரதேச செயலளர் என மாற்றம் பெற்றுள்ளது.

அப் பகுதி அரசாங்க நிர்வாகத்துக்கு அவரே பொறுப்பாக இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு நெடுந்தீவில் கடமையாற்றிய பிரதேச செயலாளர் ஈ.பி.டி.பி யினரால் அடித்துக் கொல்லப்பட்டார். அரசு இன்றுவரைக்கும் அதற்கொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தக் குடும்பத்தினருக்கு எந்தவித நட்ட ஈடும் வழங்கவில்லை. அடித்துக் கொல்லப்பட்டவரின் பெயர் நிக்லஸ் ஆகும்"

இரு வருடங்களுக்கு முன்பு ஈ.பி.டி.பி யினர் சுருவில் என்ற இடத்தில் மற்றொரு இளைஞரை சுட்டுக்கொன்றனர்.

இது சம்பந்தமாக நான்கு ஈ.பி.டி.பி இனர் மீது ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சந்தேக பேர்வழிகள் நெடுந்தீவுக்கு தப்பிச் சென்ற வேளையில் நீதிபதியினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருநதது. பிடியாணையை அமுல்படுத்த முடியாதவேளை காரைநகர் கடற்படை அதிகாரியை நீதிபதி விசாரணை செய்தபோது தனக்கு நெடுந்தீவுக்கு போக அதிகாரம் இல்லையென ஆதாரத்தோடு கூறியிருந்தார்.

அந்த விடயம் அந்த நீதவானின் இடமாற்றத்தோடு முடிந்து விட்டது. ஜனாதிபதி அவர்களே தாங்கள் உட்பட எவரேனும் நெடுந்தீவுக்கு போவதாக இருப்பின் ஈ.பி.டி.பி யினருடைய அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

ஊர்காவற்துறை தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் ஈ.பி.டி.பி யினருடைய ஆயுதம் தாங்கியோர் பல்வேறு முகாம்களை அமைந்திருந்தனர். அப்பகுதி அப்பாவி மக்கள் அவர்களின் அதிகாரத்துக்குட்பட்டே வாழ்கின்றனர். ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில் அப் பகுதியிலுள்ள கடற்படையினர் புலிகளிடமிருந்து ஈ.பி.டி.பி யினரை பாதுகாப்பதும் ஈ.பி.டி.பி யினரிடருந்து பொதுமக்களை பாதுகாப்பதும் அவர்களுடைய கடமையாக இருந்தது. இருப்பினும் ஈ.பி.டி.பி யினரின் அட்டகாசத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. இதில் வேடிக்கை என்னவெனில் நெடுந்தீவு உட்பட ஈ.பி.டி.பி யினருக்கு ஊர்காவற்துறையில் எந்த வேலையும் இருக்கவில்லை. அவர்களுடைய ஆயுதக்குழுவினர் அப்பாவி மக்களை மிரட்டுவதும், பீதியடையச் செய்வதிலுமே ஈடுபட்டிருந்திருந்தனர்.

அரசாங்கம் மக்களின் ஒரு பகுதியினரை ஒரு ஆயுதக்குழு ஏன் துன்புறுத்த அனுமதிக்கின்றது என கேள்வியை எழுப்பலாம். பதில் மிகவும் இலகுவானதே. ஊர்காவற்துறை தொகுதியில் இவ்வாறு பெற்ற வாக்குகளால்தான் 1994ம் ஆண்டுத் தேர்தலில் ஈ.பி.டி.பி இனர் 9 ஆசனங்களை கைப்பற்ற முடிந்தது. இன விகிதாசார அடிப்படையில் யாழ் தேர்தல் மாவட்டத்தின் 11 தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இந்த 11 தொகுதிகளில் ஊர்காவற்துறை தொகுதி ஈ.பி.டி.பி இன் முழு கட்டுப்பாட்டில் இருந்தது.

ஏனைய 10 தொகுதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகும். அதன் விளைவாக 10 தொகுதிகளில் வாக்கெடுப்பு நடைபெறவில்லை. ஊர்காவற்துறையை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈ.பி.டி.பி 10 ஆசனங்களில் 9 ஐ பெற்றுக்கொண்டது. இதற்கு அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் 10 தொகுதிகளிலும் மொத்தமாக 175 மட்டுமே. ஊர்காவற்துறை தொகுதியில் ஏறக்குறைய 9000 வாக்குகளை பெற்றனர். அதைக்கூட தேர்தல் மோசடி மூலம் பெற்றதாக கண்காணிப்புக்குழு கூறியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லீம் மக்களின் சில ஆயிரம் வாக்குகளால் ஸ்ரீ.ல.மு.கா ஒரு ஆசனத்தை பெற்றது.

இவ்விடயத்தை மீண்டும் பரிசீலிப்பதற்கு போதிய விடயங்களை தந்துள்ளதாக கருதுகிறேன். ஈ.பி.டி.பி இனர் முன்பு செயற்பட்டது போல் இனியும் செய்யமாட்டார்கள் என்று எத்தகைய உத்தரவாதத்தை அரசு கொடுக்கும் என வட பகுதி மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

முன்பு அவர்களிடமிருந்தது ஒரு மாவட்டம். இப்போது அவரிடம் கொடுக்கப்பட்டிருப்பது ஒரு மாகாணமாகும் மற்றும் அனேகரைப் போல் நானும் முற்று முழுதாக இப் பிரச்சினையை மறு பரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்படலாம்.

இந் நடவடிக்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. அதற்கு மாறாக இனப்பிரச்சினையை மேலும் விரிவடையச் செய்து பொது மக்களை விடுதலைப் புலிகளை நோக்கி விரட்டிவிடும் நிலை ஏற்படலாம் என கருதுகிறேன்.

எனது விளக்கத்தால் தாங்கள் திருப்தி அடையாதிருந்தால் மேலும் சில விடயங்களை இக் கடிதத்தின் இரண்டாம் பாகமாக விரைவில் அனுப்பி வைப்பேன்.

இப்படிக்கு

அன்புள்ள
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

பாகம் -02

27-05-2008

மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள்
அலரி மாளிகை
கொழும்பு-03

வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழு

பாகம் -02

இக் கடிதத்திற்கும் இதற்கு முதற் பாகமாக என்னால் அனுப்பப்பட்ட நேற்றைய கடிதத்திற்கும் விளக்கம் தர கடமைப்பட்டுள்ளேன்.

விடயம் அவசரமானதும், முக்கியமானதுமானதும் ஆகையால் அதை படித்துப் பார்க்க சொற்ப நேரம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கு கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது எதுவித விரோதமும் கிடையாது.

ஊர்காவற்துறை மக்களிடம் ஈ.பி.டி.பி போராளிகள் நடந்து கொண்ட கொடூரமான செயல்கள் இன்னும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை.

அவை மீண்டும் எதிர்காலத்தில் மக்கள் மீது பிரயோகிக்கப்பட மாட்டாது என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. நயினாதீவு என அழைக்கப்படும் நாகதீப உட்பட ஊர்காவற்துறை தொகுதி 09 தீவுகளை உள்ளடக்கியதாகும். இக் கடிதம் வேறு இரு கடிதங்களின் சில முக்கிய பகுதிகளை மட்டும் கொண்டுள்ளது.

ஆனால் இத்துடன் இணைக்கபட்டுள்ள கடிதங்களை முழுதாகப் படித்து ஆராய்ந்து பார்ப்பீர்களேயானால் அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களை தலைவராக கொண்டு இயங்கும் விசேட செயலணி குழு எத்தகைய ஆபத்தான முடிவை எதிர்நோக்கும் என்பதை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.

அவ்விரு கடிதங்களும் நான் த.வி.கூ பாராளுமன்றகுழு தலைவராகவும், கட்சியின் சிரேஷ்ட உப தலைவராகவும் செயற்பட்ட காலத்தில் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்களுக்கு கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் செயல்முறை பற்றி முறையிட்ட கடிதமாகும்.

இத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்ற அதன் பிரதி (19-02-2001) இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாக இருக்கும்.

"இத்தகைய சம்பவங்களை நாட்டின் எப்பகுதியிலும் ஏற்றுக்கொள்வார்களா?

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே இதை சிங்கள, முஸ்லீம் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

இவ்வாறு செய்வதற்கு தமிழ் மக்களை மட்டும் ஏன் தெரிவு செய்தீர்கள்.

இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்குண்டு அல்லவா?

ஒரு கௌரவமான குடும்பத்தில் பிறந்த கண்ணியமான ஒரு பெண்மணியை இந்த நாட்டின் தலைவியாக பெற நாடு அதிர்ஷ்டம் பெற்றதாக மக்கள் கருதினர்.

தங்கள் கணவர் படுகொலை செய்யப்பட்டவேளை தாங்களும், தங்கள் பிள்ளைகளும் பட்ட துயரை நாமறிவோம். என்னைப் போன்ற பல மக்கள் உங்கள் துயரத்தில் பங்கு கொண்டனர்.

படுகொலை செய்யப்பட்ட உதவி அரசாங்க அதிபர் அவர்களின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஏற்பட்ட உணர்வு தாங்கள் கணவரை இழந்தவேளை ஏற்பட்ட உணர்வுக்கு வேறுபட்டதல்ல. ஒரேயொரு வித்தியாசம் உங்களுக்காக குரல் கொடுக்க பலர் இருந்தார்கள். அவர்களுக்காக பேச அநேகமாக நான் மட்டுமே.

உண்மையாகத்தான் கேட்கிறேன் ஜனாதிபதி அவர்களே உங்களின் ஆட்சிக்கு உட்பட்ட ஒருபகுதி மக்கள் மீது இழைக்கப்படுகின்ற கொடுமைகளை நீங்கள் அறிவீர்களா இல்லையா?.

நீங்கள் அறிவீர்கள் என பெருமளவில் மக்கள் நம்புகின்றார்கள். இவற்றை நீங்கள் அறிந்திருந்தால் ஜனாதிபதி அவர்களே இந்தக் கட்டத்திலேனும் தயவு செய்து தலையிடுங்கள்.

புத்த பகவானின் பேரால் தங்களுக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.

ஈ.பி.டி.பி தலைவர் அவர்களை நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்ல வடகிழக்கு மக்களுக்கு முடிசூடா மன்னராக ஆக்கியுள்ளீர்கள்.

அவரே அரசாங்க அதிபரையும் பிரதேச செயலாளர்களையும் ஏனைய இலாகா தலைவர்களையும் யாழ்ப்பாணத்தில் நியமிக்கின்றார். அவரது சொற்படி நடக்காதவர்கள் புலி ஆதரவாளர்கள் என குறி சுடப்படுகின்றனர்.

விடுதலைப் புலிகளுடன் எதுவித தொடர்பும் இல்லையென ஒரு அரசாங்க ஊழியரையும் கூற முடியாது. யாழ்ப்பாணம், வன்னி ஆகிய பகுதிகள் 1990 ஆண்டிலிருந்து 1995 ம் ஆண்டுவரை விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. மிகத் திறமையான ஒரு பிரதேச செயலாளருக்கு பதவி நீடிப்பு மறுக்கப்பட்டுள்ளது. அந்த செயலாளர் மிகவும் சிறந்தவர் என பொது மக்கள் அபிப்பராயப்படுகின்றனர்.

நியமனங்கள், இடமாற்றங்கள் அத்தனையும் அவர் சொற்படியே நடக்கின்றது. திறமைக்கு அங்கே இடமில்லை. இரு வருடங்களுக்கு முன்பு ஆசியர் நியமனங்கள் ஸ்ரீதர் படமாளிகையில் இயங்கும் அவரது காரியாலயத்தில் வழங்கப்பட்டது. சுருங்கக் கூறின் எல்லா இலாகாக்களுக்கும் மந்திரியாக அவர் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் யாழ் ஒலி என்ற பிரிவு அவரை மேம்படுத்தியே பிரச்சாரங்கள் செய்தது. ஈ.பி.டி.பி இனருக்கென அரசாங்கம் ஒரு தனி அரசு அமைக்கின்றதா என மக்கள் கேட்கின்றார்கள்."

அக்கடிதத்தில் மேலும் கூறப்படுவதாவது:

"பாராளுமன்றத்துக்கு செல்லுகின்ற தார்மீக உரிமையற்ற ஒரு குழுவினர் சரியோ பிழையோ பாராளுமன்றம் புகுந்து விட்டனர்.

அத்துடன் அவர்கள் திருப்தி அடைந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக அக் குழுவினரின் தலைவரை அமைச்சர் பதவி வழங்கி தேர்தல் நடப்பதற்கு முன்பு பல்வேறு வேலைத் திட்டங்களுக்கென வரவு செலவுத் திட்டத்தில் ஒதுப்படாத பெரும் தொகையான பணத்தை எதுவித கணக்கு வழக்கின்றி யாழ்ப்பாணத்தில் செலவிட வைத்தீர்கள்.

கண்டபடி கேட்டதற்கெல்லாம் கொடுக்கப்பட்ட பெருந் தொகையான பணத்தில் ஒரு பகுதி தனியாரிடம் போய் சேர்ந்தது. இவ்வாறு செலவிடப்பட்ட பெருந் தொகையான பணம் வீடு வாசலை இழந்து, இடம்பெயர்ந்த மக்களுடைய புனர்வாழ்வுக்காக நல்ல உள்ளம் படைத்த பிற நாட்டவர்களால் தாராளமாக வழங்கப்பட்டதே அன்றி மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்காத, ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்படும் சமூக விரோத குழு ஒன்றுக்கு அதன் அரசியல் கட்சியை வளர்ப்பதற்கும், தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவிடுவதற்கும் அல்ல.

இத்தகைய குற்றங்களுக்கு பொறுப்பான அதே பேர்வழியை நீங்கள் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக்கியது மட்டுமல்லாமல் வட கிழக்கிற்கு இந்து சமய கலாச்சார அமைச்சுக்களையும் கையளித்துள்ளீர்கள்.

அபிவிருத்திக்கு பொறுப்பான ரான் அமைப்பும் அவரின் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.

பிற நாடுகளால் பெருந்தொகையாக அபிவிருத்திக்காக ரான் அமைப்புக்கு கொடுக்கப்பட்ட பணத்தை ரானில் கடமையாற்றும் சகல உத்தியோகத்தர்களையும் தானே நியமித்து செலவழித்துள்ளார்.

நன்கொடை வழங்கும் நாடுகளில் பணம் மரத்தில் பிடுங்குவதில்லை. பல்வேறு நாடுகளில் வாழும் மக்களின் தியாக உணர்வால் சேர்க்கப்பட்ட பணமே உதவி பணமாக வருகின்றது.

நாம் செலவிடும் ஒவ்வொரு சதத்தையும் நியாயப்படி செலவு செய்ய வேண்டுமேயொழிய பொது நலன் கருதாது தன்னலம் கருதும் ஒரு குழுவினரிடம் ஒப்படைக்க முடியாது.

அண்மையில் ஒரு பத்திரிகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் 400 குடும்பங்களின் புனர்வாழ்வுக்காக 22 மில்லியன் ரூபா ஒதுக்கியிருப்பதாக கூறப்பட்டது.

இதுவொரு நற்செய்தியாக இருந்தாலும் இப் பணத்தைப் பெற்றவர்கள் யார்? எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

கிடைத்த அறிக்கையின்படி நல்லூர், யாழ்ப்பாணம், வலி வடக்கு தெல்லிப்பளை, வலி மேற்கு சுன்னாகம், தீவுப்பகுதி வேலணை கிழக்கு, வலி தெற்கு உடுவில், பருத்தித்துறை ஆகிய பிரதேச சபைகளில் முறையே 110, 95, 69, 11, 04, 80, 33 ஆகிய எண்ணிக்கையானோர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் யாரால் என்ன அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்கள்? இப் பிரதேசங்களில் இவர்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டார்களா?

இன்னுமொரு அறிக்கையின்படி இடம்பெயர்ந்தோரை குடிமயர்த்த காணி வாங்கவும், கட்டிட பொருட்கள் வழங்கவும் ஒரு திட்டத்தை தயாரிக்கும்படி கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் அரசாங்க அதிபருக்கு கட்டளை பிறப்பித்திருந்தார்.

பார்வைக்கு அது நல்ல திட்டமாக இருந்தாலும் இத்திட்டம் மக்களின் பூர்வீக காணிகளை பறித்தெடுக்கின்ற ஒரு சூழ்ச்சியான திட்டமென அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.

இப்பொழுது உண்மை வெளியாகிவிட்டது. உயர் பாதுகாப்பு வலயத்தில் வாழ்ந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் இருந்து அகற்றி வேறு இடங்களில் குடியேற்றும் திட்டம் அம்பலமாகியது.

ஜனாதிபதி அவர்களே ஹொரகல காணி தங்களுக்கு எவ்வாறு முக்கியமோ அதே போல்தான் மக்களின் பூர்வீக காணிகள் அவர்களுக்கு முக்கியமாகும். ஆகவே இத் திட்டத்தை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் நண்பர்கள் வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் பல ஆண்டுகாலமாக பல கஷ்டங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பது என்றைக்கோ ஒரு நாள் தம்முடைய சொந்த நிலத்துக்கு போவோம் என்ற நம்பிக்கையே அன்றி வேறு இடத்தில் குடியேறுவதற்காக அல்ல. இதுதான் அரசின் நோக்கம் எனில் மக்கள் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கத் தேவையில்லை.

அரசும் யுத்தத்தை தொடருவதாக இருந்தாலும் அல்லது தமிழ் மக்களை அடக்கி வைத்திருக்கின்ற எண்ணமும் இருந்தாலே அன்றி உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே மக்களை குடியேற்ற வேண்டிய அவசியம் இல்லை.

விரைவாக யுத்தத்தை முடித்து அமைதியை ஏற்படுத்தி மக்கள் விரைவில் தங்கள் இடத்தில் குடியேறவும் வழி செய்வீர்கள் என நம்புகிறேன்.

பண மோசடி, தம் ஆதரவாளருக்கு விசேட சலுகை, எதிரிகளை கண்டித்தல் போன்றவையே ஈ.பி.டி.பி இனரால் கையாளப்படுகின்றன. ஆகவே நான் மிகவும் வன்மையாக வற்புறுத்தி கேட்பது பிற நாடுகள் நன்கொடையாக வழங்கும் பணத்தில் ஒரு சதமேனும் அமைச்சரால் தன் இஷ்டப்படியோ அன்றி தன்னால் தெரிவு செய்யப்பட்டவர் மூலமோ இஷ்டப்படி செலவழிப்பதை அனுமதிக்கக் கூடாது.

மேலும் பிற நாடுகளில் இருந்து வரும் பணம் சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆலோசனையோடு தெரிவு செய்யப்படும் திட்டங்களுக்கே செலவிடப்பட வேண்டும். ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்களை கொண்ட ஓர் ஆலோசனை குழுவை அமைக்கலாம் என ஆலோசனை கூற விரும்புகிறேன்.

என்னால் குறிப்பிடப்பட்ட இந்த விடயங்களை கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு ஊர்காவற்துறை தொகுதியில் வாழும் மக்களை குறிப்பாக நெடுந்தீவு மக்களை அவர்கள் படும் இன்னல்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்"

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்களுக்கு 14-05-2001 இல் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்குழு சம்பந்தமாக எழுதப்பட்ட கடிதம் இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமாக இருப்பதால் அதன் சில பகுதிகளை கீழே குறிப்பிடுகிறேன்.

பிரதி இணைக்கபட்டுள்ளது.

"மோசடி மூலம் பாராளுமன்ற ஆசனங்களில் நான்கை பெற்ற ஈ.பி.டி.பி யின் தலைவரை யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமித்தமை எமக்கு விசனத்தைத் தருகிறது.

ஏனைய ஐந்து உறுப்பினர்களும் 54930 வாக்குகள் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவரை தெரிவு செய்கின்ற உரிமை உறுப்பினர்களிடம் விடப்பட்டிருக்க வேண்டும்.

ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் பிழையான வழியில் தாங்கள் தலைவரை தெரிவு செய்தது, தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய எம்மை குறிப்பாக என்னை அவமதிப்பது போலாகும். கடந்த பாராளுமன்றத்திலும் நீங்கள் அவரையே தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.

அக் கட்சியைச் சேர்ந்த 13 வேட்பாளர்களும் 10 தொகுதிகளில் எடுத்த வாக்குகள் 175 ஆக இருந்தும் அவர்களில் 9 பேர் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

ஊர்காவற்துறை தொகுதியில் அவர்களுக்குக் கிடைத்த 8000 வாக்குகள் கணக்கில் எடுத்திருக்க முடியாதவையாகும். ஏனெனில் அன்று தொட்டு இன்று வரை ஊர்காவற்துறை தொகுதி மக்கள் ஈ.பி.டி.பி இனரின் இரும்புப் பிடியில் அடிமைகளாக வாழ்கின்றார்கள்.

1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஈ.பி.டி.பி இனர் ஒரு மாற்றுக் கட்சி வேட்பாளரரையும் ஊர்காவற்துறை தொகுதிக்குள் போக அனுமதிக்கவில்லை.

நான் மிக ஆர்வத்துடன் ஜனாதிபதியாகிய உங்களை கேட்பது உங்களுக்கோ அல்லது உங்கள் அரசில் வேறு யாருக்குமோ சுதந்திரம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை உண்டா எனக் கேட்க விரும்புகின்றேன்.

வறுமைப்பட்ட எமது நாடு யுத்தத்தினால் மிக வறுமைபட்டுள்ளது. கடந்த வருடம் வேறு எந்த மாவட்டத்திலும் நடைபெறாத வகையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின் அவரை மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு தலைவராக தெரிவு செய்திருக்கிறீர்கள்.

இலங்கை சரித்திரத்தில் இது முன்பு நடைபெறாத ஒன்றாகும். யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய இரண்டு மணிநேர ஒரேயொரு கூட்டத்திற்கு திருகோணமலையிலிருந்து வடகிழக்கு மாகாண சபையின் பிரதான அதிகாரிகள் ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டதால் இந்த அரசுக்கு ஏற்பட்ட செலவை எவ்வளவு என கணக்கிட முடியுமா? இக் கூட்டத்தை கூட்ட வேண்டிய மறைமுக நோக்கம் என்னவெனில் ஊழியர்கள் அனைவரும் அவர்களுக்கு தலை வணங்க வேண்டும் என்பதாலேயே. அவர்களுடைய எண்ணம் பிரயோசனம் அளித்தது. அவருக்காக அரச ஊழியர்கள் தேர்தலுக்கு முதல்நாள் இரவே தமது கடமைகளை செய்யத் துவங்கி விட்டார்கள். திக்கம் வடிச்சாலை அவர்கள் பொறுப்பேற்றிருந்தால் அவர்களின் முயற்சி மிகக் கூடுதலான பலனை தந்திருக்கும்.

யாழ்ப்பாணத்தில் ஏழை வரியிறுப்பாளரின் பணத்தாலும் வடகிழக்கின் தமிழ் பகுதிகளில் தமிழ் அலுவல்கள் அமைச்சர் என்ற பெயரிலும் நீங்கள் மேம்படுத்தி வரும் அக்குழுவினர் தங்களின் உதவியுடன் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியுடன் திருப்தி அடைந்திருக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் அவர்களுக்கு பல பதவிகளை கொடுத்து செலவை கூட்டி வடக்கிலும் கிழக்கிலும் எல்லா விடயங்களிலும் தலையிட வாய்ப்பளித்தீர்கள். தற்போது அமைச்சர் தனது ஸ்ரீதர் படமாளிகை அலுவலகத்துக்கு முன்பாக உள்ள தனது அமைச்சில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை கூட்டுகிறார். பெருமளவில் அவரின் ஆயுதம் தாங்கிய போராளிகள் சூழ்ந்து நிற்கின்றனர். அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நான் 02-09-2001 ஆண்டு உங்களுக்கு அனுப்பிய ஆட்சேபனை கடிதத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன்.

முறைப்படி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எதிர்கால சந்ததியின் நன்மை கருதி ஜனநாயகத்தை பாதுகாக்க என் உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளேன். அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையெனத் தீர்மானித்துள்ளேன்.

ஈற்றில் ஊர்காவற்துறை தொகுதி மக்களை ஈ.பி.டி.பி யினரின் பிடியிலிருந்து விடுவிக்குமாறு வேண்டுகிறேன். அத்துடன் 12000 சீவல் தொழிலாளர்களுக்கு சொந்தமான திக்கம் வடிசாலையை துப்பாக்கி முனையில் எடுத்தனர். அதையும் திரும்ப கொடுக்கவும். அத்துடன் யாழ் மாநகரசபை நிர்வாகத்தில் கை வைக்க வேண்டாமென பணிக்கவும்".

ஜனாதிபதி அவர்களே மிக இக்கட்டான ஓர் காலத்தில் நாட்டின் தலைமை பதவியை வகிக்கின்றீர்கள் என்பதால் ஒவ்வொரு செயற்பாடும் மிகக் கவனத்துடன் நடைபெற வேண்டும். மனித உரிமை மீறல் விடயத்தில் கூட நீங்கள் ஏன் பழியை சுமக்க வேண்டும்?.

எனது கடிதத்தின் 1ம், 2ம் பாகங்களில் கொடுக்கப்பட்டுள்ள சில பகுதிகள் உண்மையை விளக்குகின்றன. கௌரவ டக்ளஸ் தேவானந்தா போதியளவு அதிகாரத்தையும் பல்வேறு சலுகைகளையும் அவருக்குரியவற்றுக்கு மேலதிகமாக அனுபவித்து விட்டார். தாங்கள் எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போகிறீர்கள் என சர்வதேச சமூகம் அவதானித்துக் கொண்டிருக்கும் போது மற்றவர்களுடைய தவறால் அரசு தனது நாணயத்தை இழக்கக் கூடாது என்பது என் ஆதங்கமாகும். எனது மக்களுக்கும் பொதுவாக என் நாட்டுக்கும் என் கடமையை செய்து விட்டேன் என்ற திருப்தியுடன் நான் போகிறேன். தங்கள் முயற்சிகள் அத்தனையும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு

அன்புள்ள
வீ. ஆனந்தசங்கரி

தலைவர்- த.வி.கூ.

Saturday, May 31, 2008

கிழக்கு இனக்கலவரத்திற்கு மகிந்தவே காரணம்: சோமவன்ச???

கிழக்கு இனக்கலவரத்திற்கு மகிந்தவே காரணம்: சோமவன்ச
[புதன்கிழமை, 28 மே 2008, 06:13 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
நிறைவேற்று அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ள அரச தலைவர் மகந்த ராஜபக்ச, கிழக்கில் இனக்கலவரத்திற்கு தூபமிட்டு மக்களை பலிக்கடாக்களாக்கியுள்ளார் என்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜே.வி.பி. கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஜே.வி.பி. குறித்து இன்று பலரும் பல்வேறு விதமாக செய்திகளை வெளியிடுகின்றனர். ஜே.வி.பி. சவால் நிறைந்த கட்சியாகி விட்டது என்று பலரும் கூறுகின்றனர். இது குறித்து நாம் அலட்ட விரும்பவில்லை.

எனினும் எமக்கு தற்போது எந்தவித சவாலும் இல்லை. ஜே.வி.பி. தலைவர் கொல்லப்பட்ட போது மட்டுமே எமது கட்சி சவாலுக்கு முகம் கொடுத்தது.

தற்போது கட்சியை மீண்டும் கட்டி எழுப்பினோம். கட்சியின் வளர்ச்சி அதிகரிக்கும் நிலை இன்று உள்ளது.

இந்நிலையில் ஜே.வி.பியின் தலைமைப்பதவி குறித்து பலரும் செய்திகளை வெளியிடுகின்றனர். கட்சியின் தலைமைப் பதவி குறித்து நானே அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் இது குறித்து அலட்டித் திரிகின்றனர். அவர்களுக்கு ஏன் இந்த கவலை வந்துள்ளது என்று தெரியவில்லை.

ஜே.வி.பி. குறித்தோ அல்லது அதன் தலைவரான என்னைப் பற்றியோ விமர்சிக்கும் தகுதி கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு இல்லை. அதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை. அதேநேரம் தலைமைப்பதவியைத் துறக்கவும் தயாராக உள்ளேன்.

தலைமைப்பதவியில் தொடர்ந்தும் இருக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. தலைமைப் பதவி பறிபோனால் கட்சியைக் காட்டிக்கொடுக்க மாட்டேன். சாதாரண தொண்டனாக இருந்து கட்சியைக் காப்பாற்றுவேன்.

அதேபோல் எவருடைய அச்சுறுத்தல்களுக்கும் நான் அடிபணியப்போவதில்லை. அஞ்சப்போவதில்லை. நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் மகிந்த அரசு இன்று மக்கள் மீது அளவு கடந்த சுமைகளை சுமத்தியுள்ளது. எப்படி எல்லாம் சுமைகளை சுமத்த முடியுமோ அப்படி எல்லாம் சுமைகளைச் சுமத்துகின்றனர்.

அது மட்டுமின்றி கடத்தல் மற்றும் கப்பம் கறக்கும் செயற்பாடுகளிலும் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. மக்களின் ஜனநாயக உரிமைகளை இந்த அரசாங்கம் மதிக்கவில்லை. நிறைவேற்று அதிகாரத்தை மகிந்த தவறாகப் பயன்படுத்துகிறார். அதன் ஒரு வெளிப்பாடாகவே நாடாளுமன்றம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

சேனாதிபதி போன்று செயற்படும் மகிந்த இன்று கிழக்கில் இனக்கலவரத்திற்கு தூபமிட்டுள்ளார். அங்கு ஒரு தேர்தலை நடத்தி தமிழ் - முஸ்லிம் மக்களிடையே இனக்கலவரத்தை தூண்டிய மகிந்த, அதிகாரத்தை தருவதாகக் கூறி மக்களை பலிக்கடவாக்கி வருகிறார்.

கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது மிஞ்சியிருப்பது நிம்மதியற்ற வாழ்க்கையே ஆகும். இத்தகைய அரசாங்கம் எமது நாட்டுக்கு தேவையில்லை. தேவையான நேரத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.

58 ஆம் ஆண்டு இனப்படுகொலை- ஒருபக்கப்பார்வையும் ஒரேமாதிரியான புலம்பலும்

58 ஆம் ஆண்டு இனப்படுகொலை ஒரு தற்செயல் நிகழ்வல்ல- வரலாற்றின் முரண்பாடே: பா.நடேசன் விளக்கம்
[சனிக்கிழமை, 31 மே 2008, 09:58 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
1958 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல- இலங்கைத் தீவின் வரலாறுகளில் தொடரும் முரண்பாடு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கம் அளித்துள்ளார்.

"58 இனவெறிக்கு அகவை 50" நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்பு உரை

தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக இந்த விடுதலைப் போராட்டத்திற்கு முக்கிய காரணியாக இருக்கின்ற- இருந்து வருகின்ற 1958 ஆம் ஆண்டு இனவெறித் தாக்குதல்கள் தொடர்பான இந்த அரங்க நிகழ்வுகள் உண்மையாக எல்லோரது மனங்களிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது.

எல்லோரினது உள்ளங்களிலும் இன உணர்வு தூண்டப்பெற்று விடுதலைக்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்ற விடுதலை உணர்வில் உந்தப்படுகின்ற சூழலை உருவாக்குகின்ற நிகழ்வாக இது இருந்தது எனலாம்.

1958 ஆம் ஆண்டு இனவெறித்தாக்குதலானது தற்செயலாக நிகழ்ந்த சம்பவம் இல்லை.

இலங்கைத்தீவின் வரலாற்றில்

எந்த தொல்லியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி,

மானிடவியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி,

வரலாற்றியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி,

அல்லது சமூகவியல் ஆய்வாளர்கள் என்றாலும் சரி

அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற ஒரு முக்கியமான விடயம் இலங்கைத்தீவில் இரண்டு தேசிய இனங்கள், வரலாற்று ரீதியாக இருந்து வருகின்றன என்பதுவே.

அந்த இரண்டு தேசிய இனங்களுக்கு இடையில் வரலாற்று ரீதியாக

ஒவ்வொரு தேசிய இனமும்

வெவ்வேறு மொழிகள்,

வெவ்வேறு பண்பாடுகள்,

வெவ்வேறு பொருளாதார வாழ்க்கை முறைகள்

வெவ்வேறு சமூகக் கட்டமைப்புக்களைக்கொண்ட

வெவ்வேறு தேசிய இனங்கள் என்பதை இன்று அனைவருமே உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்கின்றனர்.

இந்த இரண்டு தேசிய இனங்களுக்கும் வரலாற்று ரீதியாக பல முரண்பாடுகள் காலத்திற்குக் காலம் தோன்றுவது உண்டு.

அதன் தொடர்ச்சியாகத் தான் 1958 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்ட இனவெறித்தாக்குதல் நடவடிக்கையாகும்.

இந்த இனவெறித் தாக்குதல் என்பது சிங்களப் பேரினவாதத்தின் தற்செயலாக, உணர்ச்சிகளாக உந்தப்பட்டு அல்லது ஏதாவதொரு காரணிகளுக்காக ஏற்பட்ட விடயமல்ல.

வரலாற்று ரீதியாக சிங்கள ஆட்சியாளர்கள் சிங்களப் பேரினவாதிகள்

திட்டமிட்ட ஒரு கொள்கை வகுப்பின் அடிப்படையில்

திட்டமிட்டு செயற்படுத்திய ஒரு நிகழ்வாகும்.

இந்த இலங்கைத்தீவை முற்று முழுதாக சிங்களப் பேரினவாத அல்லது சிங்கள நாடாக மாற்றி அமைப்பதற்காக, எண்ணிக்கையில் குறைந்த தமிழ்த்தேசிய இனத்தை அழிப்பதற்காக- மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் 1958 ஆம் ஆண்டு இனப்படுகொலை.

வரலாற்று ரீதியாக ஒரு தேசிய இனத்திற்கு அதன் விழுமியங்கள் முக்கியமானவை.

அந்த விழுமியங்களில் மொழி என்பது மிக மிக முக்கியம்.

மொழி, நிலம், பண்பாடு, அவர்களின் வாழ்க்கை முறை எனப்படும் அந்த தேசிய இனத்திற்கான அடையாளங்களில் முக்கியமானது மொழி.

நாம் தமிழ் மொழியைப் பேசுகின்றபடியால் தான் தமிழர்கள்- ஆங்கிலத்தைப் பேசுகின்றவர்கள் ஆங்கிலேயர்கள்- பிரான்சிய மொழியைப் பேசுகின்றவர்கள் பிரான்சியர்கள்.

எந்த எந்த மொழியை எந்த மக்கள் பேசுகின்றார்களோ அவர்கள் அந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த மொழியோடு சேர்ந்த பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை என்று தொடர்ந்து கொண்டே போகும்.

அந்த வகையில் இலங்கைத் தீவில் வரலாற்று ரீதியாக தமிழ்த் தேசிய இனத்தவர் வாழ்ந்து வருகின்ற பிரதேசங்களில் அவர்களை அழிப்பதோடு மட்டுமல்லாது அவர்களின் மொழியை அழிப்பதன் ஊடாக சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளலாம் என்ற நீண்டகால கொள்கை வகுப்பின் ஓர் பகுதியாகத்தான் 1956 ஆம் ஆண்டு அரச கரும மொழியாக தனிச்சிங்கள சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

சிங்கள மொழியினை அரச மொழியாக கொண்டு வந்தது அரச அலுவலகங்களில் வேலை பார்ப்பதற்கு மட்டும் அன்று.

தனிச் சிங்களச் சட்டம் அதாவது சிங்களம் மட்டுமே இலங்கையின் அரச கரும மொழி என்று கொண்டு வந்தமையானது உன்மையில் தமிழ் மக்களை மொழியியல் ரீதியாக படிப்படியாக மாற்றுவது.

மேலும் தமிழ்ப் பிரதேசங்களில் அந்த மொழியைப் புகுத்தி அதன் ஊடாக அங்கே உள்ளவர்கள் சிங்களத்தில் எல்லாவற்றையும் தொடங்கும் பொழுது இயல்பாகவே அந்த இனம் படிப்படிப்படியாக சிங்கள மயப்படுத்தப்படும்.

வரலாற்றில் பல நாடுகளில் இப்படியான எடுத்துக்காட்டுக்களை நாம் சொல்லலாம்.

தமிழர் தாயக பூர்வீக பூமியாக இருந்த நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போன்ற பல பிரதேசங்கள் இன்று சிங்களப் பிரதேசமாக மாற்றப்பட்டு தமிழர்களாக வாழ்ந்த எம் மக்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களை எவ்வாறு சிங்களவர்களாக்கலாம் என்பது நன்றாக சிங்களப் பேரினவாதத்திற்குத் தெரியும்.

இது பண்டாரநாயக்காவிற்கும் நன்றாகத் தெரியும். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கும் தெரியும். அவர்கள் இதனை நன்றாக தெரிந்து கொண்டுதான் 1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்கினர்.

தமிழர்களை அரச தொழில்களுக்கு விருப்பம் கொள்ளச் செய்கின்ற ஒரு முறைதான் அந்தப்பிரதேசத்தில் கல்வி ஊடாக இருந்து வருகின்றது.

அதன் ஊடாக அங்குள்ள மக்கள் அரச உத்தியோகத்தர்களாகப் போகின்ற போது இயல்பாகவே சிங்களம் படிப்பது மட்டுமல்ல தமிழர்கள் தங்களின் பிள்ளைகளையும் அரச தொழில்களுக்கு சேர்ப்பதற்காக பிள்ளைகளுக்குக் கூட சிங்களம் கற்பிக்க தூண்டலாம் என்ற மிகவும் சூழ்ச்சிகரமான நீண்ட காலத்திட்டம்தான் அடிப்படையிலேயே 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதனை ஒரு தற்செயலான நிகழ்வாகப் பார்க்கக்கூடாது. வரலாறு எமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. எமது இனத்தின் முக்கிய அடையாளமான மொழி மீது கை வைத்ததனை எதிர்த்து அன்றைய தமிழ்த் தலைவர்கள் அதற்கு எதிரான போராட்டங்களை அகிம்சை முறையில் தொடங்கிய போதுதான் எமது மக்கள் மீது இந்தப் படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அன்றைய அரசியல் தலைவர்கள் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டன.

1958 ஆம் ஆண்டு படுகொலை என்பது அதாவது ஐரோப்பியர்கள் இங்கிருந்து சென்ற பின்னர் முதன் முதலாக சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நன்கு திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட ரீதியில், சிங்கள அரச படைகளின் உதவியுடன் சிங்களக்குண்டர்களால் எமது மக்கள் மீது படுகொலைகளும் காடைத்தனங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

1958 ஆம் ஆண்டு இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்த் தாயின் கதையை எமது தேசியத் தலைவர் கேட்டு எவ்வாறு விடுதலை உணர்வைப் பெற்றார்கள் என்பதனை இங்கு நடந்த அரங்க நிகழ்வில் அதனை சுட்டிக்காட்டினார்கள்.

1958 ஆம் ஆண்டு இனப்படுகொலை என்பது தமிழ் மக்களின் வரலாற்றில் ஒருவாராலும் மறக்கமுடியாது.

ஏனெனில் அரச பயங்கரவாதம் அதாவது சிங்கள அரச பயங்கரவாதம் முதலாவதாக தலைநகரில் இருந்து தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்ற சிங்களப் பிரதேசங்களில் எல்லாம் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது மட்டுமல்ல அவர்களுக்கு போதுமான அளவு பாதுகாப்புக்கூட கொடுக்கப்படவில்லை.

தமிழ் மக்கள் கொழும்பில் இருந்து அடித்து விரட்டப்பட்ட போது அனைவரும் ஒரு சரஸ்வதி மண்டபத்திற்கு ஓடிச்சென்றனர். அங்கும் பாதுகாப்பு இல்லை என்று றோயல் கல்லூரிக்குச் சென்றனர். அங்கே உள்ள படித்த தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அன்றைய மகா தேசாதிபதியை சந்தித்த போது இங்கு பாதுகாப்பில்லை நீங்கள் கப்பலால் செல்லுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

அப்படியாக அந்த சிங்கள அரசு தனது படைகளை வைத்துக்கொண்டு தமிழ் மக்களை அவர்களின் தாயகப் பிரதேசத்திற்கு கப்பலில் அனுப்பினர்.

அகதிகளாக எமது மக்கள் வந்தனர். அவர்கள் இன்றும் எமது பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது ஒரு முறையல்ல பல முறை நிகழ்ந்திருக்கிறது.

1958 ஆம் ஆண்டில் மட்டுமல்ல 1981 இலும் 1983 இலும் இனப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன.

மலையக மக்களைக் கூட சிங்களவர்கள் அடித்துக் கலைத்தார்கள். மலையகத் தமிழ்மக்கள் தமது இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி மலையகத்தில் உழைத்திருக்கும் வரலாறு இருக்கின்றது.

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகு எலும்பாக இருப்பவர்கள் தமிழர்கள். அவர்கள் அங்கே அடித்து விரட்டப்பட்டார்கள்.

இத்தகைய செயற்பாடுகளை- படுகொலைகளை நாம் தொடர்ந்து இடம்பெற அனுமதிக்கமுடியாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

1983 படுகொலை நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ளனர்.

அப்போது சிங்கள அரச படைகள் அனைத்துமாக சிங்கள இராணுவம், சிங்களக் கடற்படை, வான்படை, சிங்களக் காவல்துறை ஆகியன திட்டமிட்டு தமிழர்களின் உயிர்களைப் பலியெடுத்தது. தமிழர்களது உடமைகள் சூறையாடப்பட்டன.

சிங்கள அரச படைகள் கொழும்பிலும் மற்றும் தமிழர் வாழிடம் அனைத்துக்கும் சென்று நேரடியாகக் குண்டர்களுடன் சேர்ந்து தமிழர்களின் வீடுகளை அழித்தது மட்டுமல்ல இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகித்த தமிழர்களின் தொழிற்சாலைகள் எல்லாம் எரிக்கப்பட்டன.

அன்றைய அரச தலைவராக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தன கூறினார்- "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என்று.

ஓர் நாட்டின் அரச தலைவர் அந்த நாட்டில் இருக்கின்ற மற்றொரு தேசிய இனத்திற்கு எதிராக இப்படியான வசனத்தை வானொலி ஊடாகக் கூறினார். இது எதனை எடுத்துக்காட்டுகின்றது என்றால் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது படையெடுக்கின்ற போதும் அதை ஆக்கிரமிக்கின்ற போதும் அந்நாட்டிற்கு எதிராக விடுக்கின்ற அறைகூவல் போன்றதே.

சிங்களவர்களின் அடிமன உள்ளக்கிடங்கில் இருந்தது வெளிவந்தது என்னவென்றால் தமிழ்த் தேசிய இனம் வேறு - சிங்களத் தேசிய இனம் வேறு என்பதுதான்.

தமிழீழம் வேறு

சிங்கள நாடு வேறு

என்பது தான்.

இனப் படுகொலையின் ஊடாக எமது மக்களை அழிப்பதுடன் நின்றுவிடாது எமது நிலத்தை ஆக்கிரமிக்கவும் விரும்புகின்றார்கள்.

தமிழ் மக்களை அழிப்பதற்காக சிங்களப் பேரினவாதம் ஒரு நீண்ட காலத்திட்டத்தினை வைத்துக்கொண்டிருக்கிறது.

அவர்கள் இனவெறித்தாக்குதல்களை காலத்திற்கு காலம் கட்டவிழ்த்து விடுவது மட்டுமல்ல எமது பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்குக்கூட அவர்களின் திட்டங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

ஒரு பக்கம் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கத்தில் தென் தமிழீழத்தில் துண்டு துண்டாக எமது நிலம் சிங்களக் குடியேற்றமாக மாற்றப்படுகின்றது.

பட்டிப்பளை என்று சொல்லப்படுகின்ற எமது தமிழ்ப்பிரதேசம் இப்பொழுது கல்லோயாவாக மாற்றப்பட்டு முற்று முழுதாக சிங்கள மயப்படுத்தப்பட்டிருக்கிறது.

கொல்லன்வெளி எனச் சொல்லப்படுகின்ற இடங்கள் சிங்களப்பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.

குடியேற்றம் மட்டுமல்ல தமிழர்கள் குடியேற்றங்களில் மக்களை இராணுவத்தினர் துரத்திவிட்டு இரவோடு இரவாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர்.

இது எமது கண்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கிற வரலாறு. காலங்காலமாக பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை கந்தளாயில் இருந்து இரவோடு இரவாக சிங்களக் காவல்துறையினர் கலைத்தனர்.

இதே போல தென்தமிழீழத்தில் ஒவ்வொன்று ஒவ்வொன்றாக சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

அம்பாறையையும் மட்டக்களப்பையும் துண்டு போடுவதும்

திருகோணமலையையும் மட்டக்களப்பையும் துண்டு போடுவதும்

திருகோணமலையையும் வட தமிழீழத்தையும் துண்டு போடுவதும்

என தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள மயமாக்குவதே சிங்களப் பயங்கரவாதத்தின் நீண்ட காலக்கொள்கையாகும்.

இலங்கையின் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உண்மை நிலை இது தான்.

மணலாறு சிலோன் தியேட்டரில் பூர்வீகமாக இருந்த மக்கள் சிங்களக் காடையர்களால் அடித்து விரட்டப்பட்டு தற்போது முள்ளியவளையிலும் தண்ணீரூற்றுப் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

சிங்கள இனவாத அரசானது சிங்களக் குடியேற்றங்களை நிறுவி அதற்குப் பாதுகாப்பாக இராணுவ முகாம்களை நிறுவி நீண்ட கால இன அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது.

வரலாறு எமக்குப் பாடங்களைக் கற்றுத்தருகின்றது. ஒவ்வொரு இன அழிப்புக்கு எதிராக அன்றைய எமது அரசியல் தலைவர்கள் அகிம்சை வழியில் போராடிய போதும் எதுவித பலனும் கிடைக்கவில்லை.

இறுதியாக மக்களிடம் அன்றைய தமிழ்த் தலைவர்கள் கேட்டார்கள், "எமக்கு தமிழீழ தனியரசுதான் தேவை. இதற்கு நீங்கள் சம்மதமா?" என்று.

மக்கள் அப்போது நடந்த ஜனநாயகத் தேர்தலின் ஊடாக தமிழீழத் தனி அரசு தான் எமக்கு தேவை என ஆணையைத் தந்தார்கள்.

அது மட்டுமல்ல தொடர்ந்து நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் ஆணையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.

அதாவது, அகிம்சை வழியில் அபிலாசைகள்- எதிர்ப்பார்ப்புக்களை- சிங்களவர்களிடம் இருந்து ஒருபோதும் பெற முடியாது என்பது கடந்தகால வரலாறு.

அதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலின் கீழ் சுதந்திர தமிழீழ தேசத்தினை அமைப்பதற்காக விடுதலைப் போராட்டத்தினை நடத்தி மிகப்பெரிய அர்ப்பணிப்புக்களையும் சாதனைகளையும் செய்கின்றார்கள், தியாகங்களைப் புரிகிறார்கள்.

தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக சகலவற்றையும் அர்ப்பணிக்கின்ற விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்கிறோம் நாம். இதனை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே யதார்த்தம்.

புலம்பெயர்ந்த வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களும் இங்கு வாழ்கின்ற மக்களும் தனியரசுதான் வேண்டும் என்று சொல்கிறார்கள். சிறிலங்கா அரசிற்கு எத்தனையோ பெரிய வல்லரசுகள் உதவி செய்கிறது.

ஆனாலும் கூட முப்பது வருடங்களாக விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது உள்ளது. சிலவேளைகளில் நாம் சில தந்திரோபாய பின்வாங்குதல்களை மேற்கொண்டு அதன்பின்னர் அதைவிட இரட்டிப்புப் பாய்ச்சல்களை மேற்கொள்வது வழக்கம். இது எமது போரியல் தந்திரோபாயமாகும்.

எமது இயக்கத்தின் வளர்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும் சிங்கள இராணுவத்திற்கு ஏற்படுகின்ற தோல்வியில் தெரிகிறது.

சிங்கள அரசினது திட்டமாக தமிழர் தாயகப்பகுதிகளை முற்று முழுதாக கைப்பற்றி முழு இலங்கைத் தீவினையும் சிங்கள மயப்படுத்துவதேயாகும். இதற்கு எதிராக உலகத்தில் வாழ்கின்ற எட்டுக்கோடி தமிழர்களும் ஒன்றுபட்டு எழ வேண்டும் என்றார் பா. நடேசன்.

Tuesday, May 27, 2008

பால்ராஜ

இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர் புகழாரம்
[வியாழக்கிழமை, 22 மே 2008, 07:36 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
மே 21, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,

விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது.

பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.

தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.

பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
………………
(வே.பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.



நிகழ்கால வீரத்தின் குறியீடு பிரிகேடியர் பால்ராஜ்: யோகி
[புதன்கிழமை, 21 மே 2008, 07:13 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்கால வீரத்தின் குறியீடாக விளங்குகின்றார் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்.

யோ.செ.யோகி வழங்கிய நினைவுப் பகிர்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் போராட்டத்தில் காலத்துக்கு காலம் வீரத்தின் குறியீடாக ஒவ்வொருவர் விளங்குவர். எத்தனை வீரர் இருந்தாலும் குறியீடாக ஒரு சிலரே விளங்குவர்.

இன்றைய காலத்தில் தமிழீழ வீரத்தின் குறியீடாக பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் விளங்குகின்றார். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை எண்ணுவதனை களத்தில் செய்து முடிப்பவராக பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் விளங்கினார்.

வன்னி-முல்லைத்தீவு-மணலாறு களங்களில் மேஜர் பசீலன் அவர்களுடன் இணைந்து எதிரிக்கு எதிராக களமாடிய பால்ராஜின் திறன்களை இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் மணலாறு காட்டுக்குச் சென்ற தமிழீழத் தேசியத் தலைவர் அடையாளம் காண்கின்றார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் உயர்நிலைத் தளபதிகள் எல்லோரும் வியந்து ஏற்கும் திறன் கொண்டவராக செயற்பட்டார்.

தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் எண்ணுவதனை களத்தில் செயற்படுத்துபவராக பிரிகேடியர் பால்ராஜ் விளங்குகின்றார்.

தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நிகழ்கால வீரத்தின் குறியீடாக அவர் விளங்குகின்றார் என்றார் அவர்.


அதியுச்ச உழைப்பு முழுவதையும் விடுதலைப் போராட்டத்துக்கு அளித்த பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ்: கேணல் தீபன்
[வியாழக்கிழமை, 22 மே 2008, 07:58 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ் என்று வட போர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் புகழாரம் சூட்டினார்.

கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் கேணல் தீபன் ஆற்றிய வீரவணக்க உரை:

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் இந்த விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ்.

பிரிகேடியர் பால்ராஜ் களத்தில் நிற்கின்றார் என்றால் சிங்களப் படையினர் ஒவ்வொருவனுக்கும் குருதி உறையும். எதிரிகளுக்கு நடுங்கும். எதிரியை கலங்கவைத்து எதிரியை சிதறடித்து இந்த விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனைகளுக்கு காரணமாக இருந்த முதன்மைத் தளபதியாக தளபதி பால்ராஜ் விளங்குகின்றார்.





தளபதி பால்ராஜ் என்றால் ஒவ்வொரு சிங்களப்படைக்கும் தெரியும். அந்தளவுக்கு எதிரிக்கு சிம்ம சொர்ப்பனமாக தளபதி பால்ராஜ் விளங்கினார்.

ஒவ்வொரு போராளிகளையும் உணர்வூட்டி அவர்களை எந்த எதிரிக்கும் எதிராக கிறங்காது பதற்றம் இல்லாமல் நின்று சண்டையிட வைப்பார். அந்தளவுக்கு போராளிகளுக்கு உறுதியையும் உற்சாகத்தையும் கொடுத்து தானும் களத்தில் உறுதியாகவும் உற்சாகமாகவும் நின்று வெற்றிகளுக்காக உழைப்பார்.

சண்டைக்களங்களில் அவரின் உறுதி- வீரம்- துணிச்சல்- ஆளுமை எல்லாவற்றையும் பார்க்கலாம்.

சாள்ஸ் அன்ரனி படையணியை உருவாக்கும் பொறுப்பு தேசியத் தலைவரால் அவருக்கு வழங்கப்பட்ட போது அதனை உருவாக்க முழுதாக உழைத்தார்.

இன்று எதிரிக்கு சிம்ம சொர்ப்பனமாக சாள்ஸ் அன்ரனி படையணி இருக்கின்றது எனில் அதற்கு தளபதி பால்ராஜ்தான் பின்னணியில் இருக்கின்றார்.





ஆனையிறவு வெற்றிகொள்ளப்பட குடாரப்பில் தரையிறங்கி எதிரியின் வியூகத்துக்குள் 34 நாட்கள் உறுதியாக நின்று வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

34 நாட்களும் அவர் எதிரியின் உச்சபலத்துக்குள் உறுதியாக நின்று எதிரி நியமித்த 5 தளபதிகளையும் தோற்கடித்தார்.

பால்ராஜின் வரலாறு அழிக்கப்பட முடியாதது. ஆழமாக முத்திரையை அவர் பதித்துள்ளார்.

வீரம் என்றால் தளபதி பால்ராஜ் வீரத்துக்கு மறுபெயர்- துணிவுக்கு மறுபெயர் தன்னம்பிக்கைக்கு மறுபெயர்.

அவரின் வரலாறு அவரது வீரம் நம் எல்லோரிடமும் இருக்கவேண்டும்.

"நாம் எப்போதும் வீழ்ந்திடலாம். நம் போராட்டத்தின் வீச்சு- வேகம் ஒவ்வொருவரின் இழப்புக்களிற்குள்ளாகவும் வரவேண்டும்" என்பார் பால்ராஜ்.





போராட்டம் என்றால் இழப்புக்கள் ஏற்படும். இழப்புக்கள் இல்லாமல் போராட்டத்தை வெல்ல முடியாது. தளபதிகள் பலர் தம்மை அர்ப்பணித்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரதும் இழப்புக்களும் எமது போராட்டத்தை வீச்சாக்கித்தான் இருக்கின்றது.

அவர்கள் தமது வீரத்தையும் வரலாற்றையும் தந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

அதனை நாம் உள்ளத்தில் நிறுத்த வேண்டும்.

பிரிகேடியர் பால்ராஜின் கனவு அவரது எதிர்பார்ப்பு எதற்காக அவர் தன்னை ஈய்ந்தாரோ அதனை நாம் உறுதியாக நிறைவேற்றுவோம்.

அவரது வீரத்தையும் வரலாற்றையும் உழைப்பையும் நம் உள்ளத்தில் எடுத்துக்கொண்டு அவரது எண்ணங்களை கனவுகளை நாம் நிறைவேற்ற உழைப்போம். அதற்கு எல்லோரும் தயாராவோம் என்றார் கேணல் தீபன்.

கிளிநொச்சியில் பிரிகேடியர் பால்ராஜின் வீரவணக்க நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பணிமுதல்வர் பொன். தியாகம் ஏற்றினார்.

வித்துடலுக்கான ஈகச்சுடர்களை பிரிகேடியர் பால்ராஜின் உடன்பிறப்புக்களான சந்திரசேகரம், ஞானசேகரம் ஆகியோர் ஏற்றி மலர்மாலைகளைச் சூட்டினர்.

வட போர்முனை கட்டளைத்தளபதி கேணல் தீபன், போர்ப்பயிற்சி ஆசிரியர் தினேஸ், தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலன், நீதி- நிர்வாகப் பிரிவுப் பொறுப்பாளர் பரா, அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன், தளபதி வசந்தன், தளபதி குமணன், தளபதி வீமன், சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணித் துணைத் தளபதி அமுதாப், தளபதி முகுந்தன், மருத்துவப் பிரிவைச் சேர்ந்த தேவா உள்ளிட்டோர் மலர்மாலைகளைச் சூட்டினர்.

மாங்குளம்

பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மல்லாவியிலும் மாங்குளத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு உணர்வுபூர்வமாக வீரவணக்கம் செலுத்தினர்.

பிரிகேடியர் பால்ராஜின் வீரவணக்கக் கூட்டம் மல்லாவி மாவீரர் மண்டபத்தில் மல்லாவிக் கோட்டப் பொறுப்பாளர் செம்மணன் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்சுடரினை வட போர்முனைத் தளபதிகளில் ஒருவரான ஜெரி ஏற்ற, ஈகைச்சுடரேற்றி மலர்மாலையை உடன்பிறப்பு சந்திரன் சூட்டினார்.

அவரைத் தொடர்ந்து மலர்மாலையை உடன்பிறப்பு ஞானம், மருமகன் சதீஸ், தளபதி கேணல் றமேஸ் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன், தளபதி குமரனின் துணைவியார், சாள்ஸ் அன்ரனி துணைத்தளபதி அமுதாப், திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதி வசந்தன், மல்லாவி மத்திய கல்லூரி அதிபர் யேசுதானந்தன், யோகபுரம் மகாவித்தியாலய முதல்வர் யோகானந்தர், பாலிநகர் பாடசாலை முதல்வர் கிருஸ்ணபிள்ளை, மல்லாவி வட்ட தேசியப் பணிக்குழுச் செயலாளர் சுந்தரலிங்கம், கனகராயன்குள கோட்டப் பொறுப்பாளர் ஞானவேல், ஆலங்குள மாவீரர் துயிலும் இல்லப் பொறுப்பாளர் இளம்பிறை ஆகியோர் சூட்டினர்.

வீரவணக்க உரையை தளபதி றமேஸ் ஆற்றினார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.

வித்துடல் மாங்குளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.


சமர்க்களங்களின் சரித்திர நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
[புதன்கிழமை, 21 மே 2008, 05:56 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.

இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.



இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

1990 ஆம் ஆண்டில் கொக்காவில் - மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.

முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் "கடற்காற்று" எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.



வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "வன்னிவிக்கிரம" நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான "ஆகாய- கடல்வெளி"ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.

மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "மின்னல்" நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.

இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.



யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட "யாழ்தேவி" நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.

1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட "முன்னேறிப்பாய்தல்" முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.

யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த "சூரியக்கதிர்" நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.


வாகரையில் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பிரிகேடியர் பால்ராஜ்

வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த "ஜெயசிக்குறு" நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட "ஓயாத அலைகள் - 02" நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.

தொடர்ந்து "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.

2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட "தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.

போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார்.

பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.