Tuesday, August 28, 2007

சிறிலங்காவின் வரலாற்றில் மகிந்தவே மிகவும் கேவலமான அரச தலைவர்: "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்" - இன்னுமொரு ஊடக உத்தி??????

சிறிலங்காவின் வரலாற்றில் மகிந்தவே மிகவும் கேவலமான அரச தலைவர்: "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்"
[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007, 05:52 ஈழம்] [பி.கெளரி]

அரசியல் அதிகாரங்களின் செறிவாக்கம் ராஜபக்ச குடும்பத்திடமே இருப்பதால், சிறிலங்காவின் வரலாற்றில் இந்த ஜனநாயக நாட்டை ஆட்சி செய்த தலைவர்களில் மகிந்த ராஜபக்சவே மிகவும் கேவலமான தலைவராக இருக்கலாம் என்று "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.

அந்த ஏட்டின் பத்தி எழுத்தாளர் ஹென்றி சூ எழுதிய பத்தியின் தமிழ் வடிவம்:

நாட்டில் உள்ள அத்தனை மக்களினது நடவடிக்கைகளும் ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளாக கிட்டத்தட்ட மாறிவிட்டது. ஏனெனில் அவரது குடும்பமே நாட்டை ஆள்வதுடன், உள்நாட்டுப் போரையும் நடத்தி வருகின்றது.

இதன் நடுவே ராஜபக்சவின் நான்கு சகோதரர்கள் ஜனநாயக வழிகளில் தேர்ந்தெடுக்கப்ட்ட சிறீலங்கா அரசின் மிகவும் அதிகாரம் மிக்க பதவிகளில் உள்ளனர். இவர்களில் எல்லாவற்றிற்கும் நாயகனாக உள்ள அரச தலைவரும் அடங்குவார்.

முக்கிய பதவிகளுக்கு தனது சகோதரர்களை நியமித்ததிற்கு அப்பால், நாட்டின் தேசிய வரவு-செலவு திட்டத்தில் 70 விகிதத்தை தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் மகிந்த உறுதி செய்துள்ளார். இது புருவத்தை விரியச் செய்யும் தொகையாகும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மகிந்தவே அரசின் மிகவும் பெரும் பதவிகளான பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களுக்கு தலைவராக உள்ளார். கடந்த வருடம், நாட்டின் தேசிய செலவீனங்களில் பாதுகாப்பு மட்டும் 19 விகிமாக இருந்தது. போர் நிறுத்தம் முறிவடைந்து அரச படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பமாகியதனால் பாதுகாப்பு இவ்வாறு அதிகரித்துள்ளது.

அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்த மோதல்களுக்கான திட்ட வகுப்பாளர் மிகவும் இராணுவ சிந்தனை உள்ள முன்னாள் இராணுவ அதிகாரியான கோத்தபாய ராஜபக்ச ஆவார். பசில் ராஜபக்ச அரச தலைவரின் மூத்த ஆலோசகர், அதாவது அரச தலைவரின் குரலுக்கு பின் உள்ளவர் என இதனை விபரிக்கலாம்.

மகிந்தவின் நான்காவது சகோதரரான சமல் ராஜபக்சவே மகிந்தவைப் போன்று தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் துறைமுகங்கள் வான் போக்குவரத்து அமைச்சராக உள்ளார். சிறிலங்காவின் அரசியல் யாப்பின் படியும், 24 வருட கொடுமையான போரின் படியும் பாதுகாப்பு அமைச்சை அரச தலைவர் தனது பொறுப்பில் வைத்திருப்பது ஒன்றும் புதியன அல்ல.

இருந்தபோதும், ஏனைய துறைகளில் இருந்து பெரும்பாலான அதிகாரங்களை அரச தலைவரும் அவரது சகோதரர்களும் வைத்திருக்கின்றனர். தற்போதைய அரச தலைவர் இரு வருடங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டவர். அவர் தனது அதிகாரங்களை குடும்ப உறுப்பினர்களுக்காக தன்னிச்சையாக பயன்படுத்தியுள்ளதுடன், விதிகளையும் மீறியுள்ளதாக அரசை விமர்சிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகிந்த போருடன் தொடர்புள்ள அமைச்சுக்களையும், திணைக்களங்களையும் நிர்வகிக்கலாம். ஆனால் நிதியை நிர்வகிக்ககூடாது என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பின் பிரகாரம் அவர் எல்லா அமைச்சுக்களையும் தானே நிர்வகிக்கலாம், அது சட்டத்திற்கு முரணானது அல்ல ஆனால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றும் அல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் பெரும்பாலான அதிகாரங்களை அரச தலைவர் தன்வசம் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மகிந்த நிராகரிக்கவில்லை. ஆனால் அதனைப் புறக்கணிப்பதனை தனது தெரிவாக வைத்திருக்கின்றார். இது தொடர்பான பதிலை அரச தலைவர் செயலகத்திடமும், பிரதமரின் காரியாலத்திடமும் நாம் கேட்ட போதும் அதற்கான பதில்கள் தரப்படவில்லை.

மகிந்தவினதும் அவரது சகோதரர்களினதும் கட்டுப்பாட்டில் அரசு உள்ளதை வெளிக்காட்டுவதற்கான குற்றச்சாட்டுக்கள் பல மாதங்களாக சுமத்தப்பட்டு வருகின்றன. அமைச்சரவையில் ஏற்பட்ட விரக்தியினால் அரசின் அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சர்கள் எதிர்த்தரப்பிற்கு இந்த வருடம் தாவியுள்ளனர். இந்த தரப்பு 50-க்கும் மேற்பட்டவர்களை கொண்டுள்ள போதும் அது மகிந்தவினதை விட குறைந்த வலுவுள்ளது.

சிறிலங்காவின் துரதிர்ஸ்டவசமான எதிர்க்கட்சி பெரும் சவால்களை விடுக்க முடியாத நிலையில் உள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரச தலைவரின் வன்முறையான இராணுவ தாக்குதல்கள் அவரை நாடாளுமன்றத்தில் உள்ள தேசியவாத கட்சிகளிடமும், பெரும்பான்மையான சிங்கள மக்களின் சில பிரிவினரிடமும் பிரபலப்படுத்தியுள்ளது.

எனினும் அரசின் எல்லா மட்டத்திலும் உள்ள ஊழல்கள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களின் அதிகாரங்களை தமது சொந்த நலன்களுக்காக மகிந்தவின் சகோதரர்கள் பயன்படுத்துவது தொடர்பான எந்த குற்றச்சாட்டுக்களும் விசாரணை செய்யப்படவில்லை.

இந்த அதிகாரங்களின் செறிவாக்கம் 1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து சிறிலங்கா சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த ஜனநாயக நாட்டை ஆட்சி செய்த தலைவர்களில் மகிந்தவே மிகவும் கேவலமான தலைவராக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

அரச தலைவரும் அவரது சகோதரர்களும் அதிகாரங்களை கொண்டிருப்பது 100 விகித வரவு-செலவு திட்டமும் அவர்களில் தங்கியுள்ளது போன்றது. எனவே அவர்கள் எதனையும் தடுக்க முடியும். இது ஆரோக்கியமானது அல்ல என தேசிய சமாதான சபையின் தலைவரான ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பொதுமக்களும், வர்த்தக சமூகத்தினரும் இதனை ஏற்கவில்லை, அவர்கள் இது தொடர்பாக தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் அவர்களால் அதனை மட்டும் தான் செய்ய முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்களுக்கு இடையிலான தேவையற்ற விவாதங்களை விடுத்து, பொதுமக்களின் கருத்துக்களை ராஜபக்சாக்களுக்கு எதிராக திருப்பி அரசை முடக்க முயல்கின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற அரசிற்கு எதிரான பேரணியில் பல பத்தாயிரம் மக்கள் தலைநகரான கொழும்பில் திரண்டிருந்தனர்.

எனினும், மேலதிக கட்சித் தாவல்களால் ஆளும் கூட்டணி பாதிக்கப்படும் வரைக்கும் அல்லது மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புவது அதிகரிக்கும் வரைக்கும் மாற்றம் என்பது சாத்தியமில்லை. அந்த நேரம் வரும்வரை சிறிலங்கா அரசின் நடைவடிக்கைகள் குடும்ப அரசியலாகவே இருக்கும் என்று அதில் தெரிவித்துள்ளது.

Friday, August 24, 2007

புஷ் நிருவாகத்தின் பார்வையில் பயங்கரவாதிகளாகும் ஈரானிய அரசபடைகள்

புஷ் நிருவாகத்தின் பார்வையில் பயங்கரவாதிகளாகும் ஈரானிய அரசபடைகள்
[24 - August - 2007] [Font Size - A - A - A]
* தெஹ்ரானுக்கு எதிராக புதிய ஆத்திர மூட்டும் செயல்கள்

- பீற்றர் சைமன்ட்ஸ் -

நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டில் அண்மையில் வந்துள்ள கட்டுரைகளின்படி ஈரானிய புரட்சி காவலர் படைகள் (Iranian Revolutionary Guard Corps - IRGC) முழுவதையுமே

"குறிப்பாக அழைக்கப்படவுள்ள உலகந் தழுவிய பயங்கரவாத அமைப்பு" என்று அதன் உட்குறிப்புகள் முழுவதும் அடங்கிய வகையில், புஷ் நிர்வாகம் முத்திரையிட தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு செய்கையில் செப்டம்பர் 11,2001 தாக்குதல்களுக்கு பின்னர் அவர் கையெழுத்திடப்பட்ட ஜனாதிபதி ஆணை ஒன்றின் கீழ் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவார்.

மிகவும் ஆத்திரமூட்டும் இந்த முயற்சி தெஹ்ரான் மீது ஆழ்ந்த பொருளாதார அழுத்தத்தை அளிக்கும் அரங்கை அமைப்பது மட்டுமில்லாமல், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு காரணம் கொடுக்கும் செயல்திறனையும் முறைப்படுத்துகிறது.

ஒரு இறைமை பெற்ற நாட்டின் இராணுவத்தின் முக்கிய கிளையை ஒருதலைப்பட்சமாக குற்றவாளித் தன்மை உடையதாக்கும் முடிவு முன்னோடியில்லாதது ஆகும். 1979 ஈரானிய புரட்சிக்குப் பின்னர் தோற்றுவிக்கப்பட்ட ஐகீஎஇயில் அதன் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படைப் பிரிவுகளில் 125,000 துருப்புகளும் துணையாளர்களும் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இப்படி பெயரிடுவது IRGC அல்-ஹைடா, லெபனானில் ஷியைட் போராளிக் குழு ஹெஸ்போல்லா மற்றும் பாலஸ்தீனிய ஹமாஸ், மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் குழுக்களுடன் சார்ந்த வகையில் சேர்க்கும்; பிந்தியவை அனைத்துமே அமெரிக்க இராணுவத்தாலோ அல்லது அதன் இஸ்ரேலிய நண்பர்களாலோ தாக்கப்படுகின்றன.அவற்றின் உறுப்பினர்கள் காவலில் வைக்கப்பட்டு "பயங்கரவாதிகள்" என்ற சந்தேகத்தின்பேரில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

IRGC ஈராக், ஆப்கானிஸ்தானத்தில் ""தலையிடுகிறது', மற்றும் ஹெஸ்போல்லா, ஹமாஸ் போன்ற ""பயங்கரவாத குழுக்களுக்கு' ஆதரவு கொடுக்கிறது என்று ஆதாரமில்லாமல் அமெரிக்கா கூறுவதுதான் இந்த நடவடிக்கைக்கு போலிக் காரணம் ஆகும். IRGC , குறிப்பாக அதன் உயரடுக்குச் சிறப்புப் பிரிவான Quds Force, ஈராக்கில் இருக்கும் அமெரிக்கப் படைகளை தாக்குவதற்கு ஷியைட் போராளிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்தல், பயிற்சி அளித்தல், இயக்குதல் போன்றவற்றை செய்வதாகக் கூறும் பிரசாரங்களை புஷ் நிர்வாகமும் பென்டகன் அதிகாரிகளும் சமீபத்திய வாரங்களில் முடுக்கியுள்ளன. தலிபான் மற்றும் பிற ஆக்கிரமிப்பை எதிர்க்கும் இயக்கங்களுக்கும் ஆப்கானிஸ்தானத்தில் IRGC உதவி வருவதாகவும் வாஷிங்டன் கூடுதல் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை அப்படியே உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும், புஷ் நிர்வாகத்தின் குண்டர்கள் தெஹ்ரானின் இராணுவத்தின் ஒரு பிரிவை பயங்கரவாதிகள் என்று முத்திரையிட்டு ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தானில் தலையிடுவதற்காக அதைத் தடை செய்வது என்பது பாசாங்குத்தனத்தின் உச்சக் கட்டம் ஆகும். இவ்விரு நாடுகளும் அமெரிக்கத் தலைமையில் வழிநடத்தப்படும் படைகள் ஆக்கிரமித்துள்ள நாட்டின் எல்லைகளில் இருப்பவை. ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்களை அமெரிக்க இராணுவம் கொன்று குவித்துள்ளதுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈராக்கையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. நூறாயிரக் கணக்கான ஈராக்கியர்களை அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் படுகொலை செய்துள்ளதுடன், நாட்டை விட்டு மில்லியன் கணக்கான மக்களை வெளியேறவும் செய்துள்ளது. தவிரவும் நாட்டின் உள்கட்டுமானம், சமூகக்கட்டுக் கோப்பு ஆகியவற்றையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் கைது செய்யப்பட்டு, காலவரையறையற்று சிறையில் குற்றச்சாட்டு ஏதும் இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளதுடன், சித்திரவதைக்கும் ஆட்பட்டுள்ளனர்.

"பயங்கரவாத அமைப்பு" என்ற தகுதிக்கு புஷ் நிர்வாகத்தை விட வேறு எதுவும் கூடுதலான பொருத்தத்தை கொண்டிருக்கவில்லை. தன்னுடைய பரந்த இராணுவ மேன்மையை பயன்படுத்தி, புதிய காலனி வகை ஆக்கிரமிப்பிற்கு முறையான எதிர்ப்பை தகர்க்கும் முறையில் ஆப்கான் மற்றும் ஈராக்கிய மக்களை இந்நிர்வாகம் அச்சுறுத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க பிரசாரம், 2003 ஆம் ஆண்டு நடந்த ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்த முயன்றதற்கு கூறப்பட்ட பொய்களுடன் அச்சம் கலந்த வகையில் ஒத்துள்ளது. இது வெற்றுத்தனமான கூற்றுக்கள் அரைகுறை உண்மைகள், அப்பட்டமான பொய்கள் அனைத்தின் கலவையாகும், சிறிதும் விளக்கப்படாத முரண்பாடுகளை கொண்ட புதிராகவும் உள்ளது. ஈராக்கில் இருக்கும் ஷியைட் போராளிகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று ஈரான் பலமுறை மறுத்தும்கூட, அமெரிக்கர்களால் எவ்விதச் சான்றும் கொடுக்கப்படவில்லை. அனைத்து ஷியைட்டுகள் மற்றும் குறிப்பாக தெஹ்ரான் ஆட்சியை, அடிப்படை மத கருத்துக்குமாறனவர்கள் என்று கருதும் தலிபான் மற்றும் பிற சுன்னித் தீவிரவாதிகளுக்கு எதற்காக ஈரான் ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்பதை விளக்க எம் முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

அமெரிக்க-ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்களான ஈராக்கிலுள்ள ஷியைட் சக்திகளுக்கு ஒரு வேளை ஆயுதங்களை ஈரான் அளித்திருக்கக்கூடும்; ஆனால் ஈராக்கின் எதிர்ப்பிற்கு பின்னணியில் "மூளையாக" தெஹ்ரான் திகழ்கிறது. அமெரிக்காவிற்கு எதிரான ஒரு மாற்றுப் போராக இதைக் கருதுகிறது என்று புஷ் நிர்வாகம் கூறுவது அபத்தமாகும்; ஏனெனில், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் மற்றும் ஈராக்கிய படைகள் மீதான தாக்குதல்களுக்கு முக்கிய ஆதாரம் சுன்னி தீவிரவாத அமைப்பான அல்-ஹைடாதான் என்ற கூற்றிற்கு இவை முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திரித்துக் கூறப்பட்ட தர்க்கத்தின்படி தங்கள் நாட்டில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த ஈராக்கியரையும்,அவர்கள் வெளிப் பயங்கரவாத சக்திகளின் "ஈராக்கி-எதிர்ப்பு" முகவர்கள் என்ற வரையறுக்கப்பட வேண்டும் போலும்.

ஈரானிய உளவுத்துறை ஒற்றர்கள் ஐயத்திற்கு இடமின்றி ஈராக்கில் தீவிர செயற்பாடுகளை கொண்டிருந்தாலும், அதேபோல்தான் சவுதி, ஜோர்தானிய மற்றும் பிற உளவுத்துறை அமைப்புகளும் உள்ளன. ஈராக்கில் நடக்கும் தற்கொலை படைத் தாக்குதல்களுக்கு ஈரானியர்கள் என்று இல்லாமல் சவுதிக் குடிமக்கள்தான் பெரும்பாலும் காரணமாவர். அணுவாயுத் திட்டம் இருப்பதாக கூறப்பட்டு அதற்காக ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் வேண்டும் என்று கோரியுள்ள புஷ் நிர்வாகம், இப்பொழுதுதான் சவுதி அரேபியா, இஸ்ரேல் இன்னும் பல மத்திய கிழக்கு நட்பு நாடுகளுடன் பல பில்லியன் டொலர் மதிப்புடைய ஆயுதங்கள் ஒப்பந்தத்தை முடித்துள்ளது; இது வெடிப்பான பகுதியில் ஆயுதப் போட்டியை முடுக்கிவிடக்கூடும்.

IRGC "" சிறப்பாக அடையாளம் காணப்பட்டுள்ள உலகந்தழுவிய பயங்கரவாதி' என்று முத்திரையிட்டுள்ளதன் உடனடி விளைவு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும், IRGC க்கு தெரிந்து பொருட்கள் உதவியைச் செய்யும் எந்த அமைப்பும் அல்லது தனிநபரும் குற்றப் பிரிவு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர். IRGC இருப்புகளை கண்டறியும் எந்த அமெரிக்க வங்கியும் அவற்றை அமெரிக்க கருவூலத்துறைக்கு கொடுக்கும் கட்டாயம் உண்டு.

இதன் முக்கிய பாதிப்பு அமெரிக்காவிற்குள் இருக்காது; ஏனெனில் 1981 இல் இருந்தே அது ஈரான் மீது பொருளாதார முற்றுகை நடத்தி வருகிறது; இந்த ஆட்சியை 1984 இலேயே அரசு ஆதரவு பயங்கரவாதம் என பெயரிட்டது; ஆனால், IRGC பரந்த வணிக நலன்களுடன் எந்த உறவையும் கொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் பாதிப்பை அடையும்.

வாஷிங்டன் போஸ்டின் கருத்தின்படி, புஷ் நிர்வாகம் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஐ.நா. பொது மன்றத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றிப் பரிசீலித்து வருகிறது. இந்த நேரம் ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய சக்திகளை ஈரானுக்கு எதிரான கடுமையான புதிய பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்பதற்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கும் வகையில் உள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளிடம் ஒரு புதிய ஐ.நா.தீர்மானம் கொண்டுவருவதில் தாமதம் என்ற நிலையில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று கூறியதாகத் தெரிகிறது; இது சீன, ரஷ்ய எதிர்ப்பை ஒட்டிய விளைவு ஆகும். "இம்மக்களுடன் தொடர்பு கொள்ளும் எவரும் தங்கள் நடவடிக்கைகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்" என்று ஒரு அமெரிக்க அதிகாரி வாஷிங்டன் போஸ்டிடம் தெரிவித்தார். "அது ஒன்றுதான் இவர்களுடன் வணிகத் தொடர்பு கொண்டிருப்பதற்கான காரணங்களை அகற்ற முடியும்."

இராணுவ வழி மோதல்

ஆனால், அமெரிக்க நடவடிக்கையின் நோக்கம் பெரும் பொருளாதார நலன்கள் ஆபத்திற்கு உட்படக்கூடிய ஈரான் மற்றும் அமெரிக்காவின் ஐரோப்பிய, ஆசியப் போட்டியாளர்களுக்கு பொருளாதார ரீதியாக தண்டிப்பதற்கும் அப்பால் செல்கிறது. ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்க இராணுவம் புதைசேற்றில் தள்ளப்பட்டுள்ள போதிலும்,ஈரானுடன் ஒரு இராணுவ மோதல் என்ற நிலைக்கு புஷ் நிர்வாகத்தை ஒரு பைத்தியக்காரத்தனமான தர்க்கம் தள்ளிக் கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் அதன் ஆற்றல் இருப்புகள்மீது தடையற்ற ஆதிக்கத்தை நிறுவ வேண்டும் என்ற கருத்துடன் முந்தைய படையெடுப்புகளை தொடக்கிய நிலையில், சதாம்ஹுசைன் பாக்தாத்தில் இருந்தும், தலிபானை காபூலில் இருந்தும் அகற்றிய முறையில், தெஹ்ரானின் இரு முக்கிய போட்டியாளர்களை அகற்றியதன் மூலம் அவ்வட்டாரத்தில் ஈரானிய செல்வாக்கை தான் வலுப்படுத்தி விட்டதாகவே புஷ் நிர்வாகம் கருதுகிறது.

IRGC ""பயங்கரவாத் தன்மை உடையது' என்று சிறப்புப் பெயரிட்டுக் காட்டுவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை கொடுக்கும் திறனைக் கொண்டிருப்பினும்,ஈரானுக்கு எதிரான இராணுவ சாகசத்துக்கு ஆதரவாக வெள்ளை மாளிகையில் உள்விவாதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் மற்றுமொரு அடையாளம் ஆகும். கடந்த ஓராண்டு காலமாக அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு ஈரானை தாழ்ந்து மண்டியிடச் செய்வதற்குக் கொடுக்கப்படும் ரைஸின் தூதரக அழுத்தங்கள் மேலோங்கி நிற்கின்றன. ஆனால் நியூயோர்க் டைம்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது போல், ""சமீபத்திய மாதங்களில்,நிர்வாகத்திற்குள்ளேயே தூதரக நடவடிக்கை செயல்படுகிறதா என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது; துணை ஜனாதிபதி செனியின் ஆலோசகர்கள் இராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றி இன்னும் கூடுதலான கவனம் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

McClatchy செய்தித்தாள்கள் தொகுப்புகள் அனைத்திலும் வெளிவந்த கட்டுரை ஒன்று தெரிவிப்பதாவது;

"ஈரான் கொள்கையுடன் தொடர்பு கொண்டுள்ள இரு அமெரிக்க அதிகாரிகள் ஈரானிய புரட்சிக் காவல் பிரிவின் சிறப்புப் பகுதியான Quds force நடத்தும் சந்தேகத்திற்கு உரிய பயிற்சி முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தலாமா என்று சில வாரங்களுக்கு முன்பு துணை ஜனாதிபதி டிக் செனி திட்டமிட்டார்" அது மேலும் கூறியதாவது, ஈரானுடன் தூதரக நெறி பற்றி சந்தேகத்தையே நீண்டகாலமாகக் கொண்டிருக்கும் செனி, ஈராக்கில் அமெரிக்க எதிர்ப்பு சக்திகளுக்கு ஈரான் ஆதரவும் உடந்தையாகவும் இருப்பது பற்றி புதிய சான்றுகள் கிடைத்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். உதாரணமாக ஈரானில் இருந்து எல்லை கடந்து ஒரு வாகனம் நிறையப் படையினர்களோடோ அல்லது ஆயுதங்களோ வந்தால் அவ்வாறு செய்யலாம் என்று ஒரு அதிகாரி கூறினார்.

கடந்த வியாழன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஜனாதிபதி புஷ் வெளிப்படையாகவே ஈரானை அச்சுறுத்தும் வகையில் நீங்கள் ஆக்கபூர்வமற்ற செயலைச் செய்வதை நாங்கள் பிடித்தோம் என்றால், அதற்குத் தக்க விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.

Tuesday, August 21, 2007

சமீலாவின் இரு கவிதைகள் - நன்றி http://udaru.blogdrive.com/

சமீலாவின் இரு கவிதைகள்

ஒரு புயலும் சில பூக்களும்

உண‌ர்வின் வேர்க‌ள்
தாகிக்கும்
இர‌வுக்க‌ர்ப்ப‌த்தில்
என் மெள‌ன‌ விசும்ப‌ல்!

புத்தகங்களுக்குள்
வசிக்கும்
விழிகளில்...
யுகங்கள் அழுத வலி!

தொண்டைக்குள்
தூண்டில் முள்ளாய்
என் இதயம்!

பொங்கிப்பிரவகிக்கும்
என்
ஞான சமுத்திரம்
தாளில் இறங்குகிறது...
துளித்துளியாய்...

ஒவ்வொரு வரியும்
சமூகத்தின் முள்வேலிகளில்
கிழியாமல் பிறக்கட்டும்!

சில கனவுகளும்
வானுயர்ந்த இலட்சியங்களும்
நினைவுகளில் மட்டும்
நிரந்தரமாய்....

தயவு செய்து
என்னை
சுவாசிக்க விடுங்கள்!

தளைகள் அறுந்த‌
கரங்கள் வேண்டும்
அணு அணுவாய்
என்
இதயம் பெயர்க்க...

நினைக்கும் போது மட்டும்
சாப்பிடும்
சுதந்திரம் வேண்டும்!

நீளும் இரவும்
நானும்
ஒரு தொழுகைப் பாயும்
சில விழி நீர்த்துளிகளும் போதும்
என்
உயிர் பூக்க‌...

ஒவ்வொரு
மொட்டின் ம‌ல‌ர்விலும்
ஒவ்வொரு
இலையின் உதிர்விலும்
தேடல்!தேடல்!

வற்றாத‌ நீர்ச்சுனைக‌ளை
உறிஞ்சிக் கொண்டே
ஓடிக் கொண்டிருக்கும்
என் வேர்க‌ளில்...
தாக‌ம்!தாக‌ம்!

இடையில் இட‌றும்
சில‌`க‌ற்க‌ள்`
`நீ வெறும் வேர் தான்`
உறுத்தும்!

ஓடிக்கொண்டிருக்கும்
வேருக்கு
ஒரு புய‌லும்
சில‌ பூக்க‌ளும் சொந்த‌‌ம்!

வளைந்தோடும்
நதிக்கு...
க‌ரையோர‌ நாண‌ல்க‌ளின்
கேள்விக‌ளுக்கு
ப‌தில‌ளிக்க‌ நேர‌மேது?

இது முடிவிலிப் பாதை!!!

³³³³³³³³³³³³³³³³³³³³³³³³³³³³³³³³³³³³³³

தூங்காத நினைவுகள்
மெல்லிய தாலாட்டாய்....

விம்மி விம்மி
வெளிவராது...
உள்ளுக்குள் அடங்கிப் போகிறது
பெருமூச்சு!!!

விழி கீறி
குபுக்கென வெளிவரப்பார்க்கும்
நீர்த்துளி
தணிக்கை செய்யப்படுகிறது!!!

ஒட்ட வைத்த‌
சிரிப்பு...

உலர்த்திவைத்த
விழியோரங்கள்...

என்ன
வாழ்க்கை இது!

இன்னும்
ஏற‌ வேண்டிய‌
இல‌க்குக‌ள்
இத‌ய‌ம் பிராண்டும்!!!

`நான்`
என‌க்கில்லாத‌ அவ‌ல‌ம்
அவ‌சர‌மாய்
நினைவுக்கு வ‌ரும்!!!

என் நேற்றுக்க‌ள்....
என் இன்றுக‌ள்....
என் நாளைக‌ள்....
யாரிடம்
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???

என்
மெளனமே...
என் செவிக‌ளுக்கு
இரைச்சலாயிருக்கிற‌து!!


இறைவா!!
எனக்கேன்
இத்த‌னை `சிற‌குக‌ள்`
த‌நதாய்
த‌ங்க‌க் கூண்டில்
அடைத்து விட்டு???

தூங்காத நினைவுகள்

Monday, August 20, 2007

பெரு நாட்டை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம

பெரு நாட்டின் மத்திய கடலோரப்பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 337 பேர் பலியாயினர்.ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை அந்நாட்டு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது.

பெரு நாட்டில் மையப்பகுதியிலுள்ள சின்சா நகரிலிருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் சுமார் 25 மைல்கள் தொலைவில் கடற்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, சிறிய அளவில் பல நில நடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டில் கெனடே, சின்சா, ஈக்கா ஆகிய நகரங்களில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. நிலநடுக்கத்தை கடலோரப் பகுதியில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாது மலைப்பகுதி மற்றும் உள்நாட்டுப்பகுதியில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்களும் உணர்ந்தனர். சுமார் 2 நிமிடத்திற்கும் மேலாக ஞிடித்த இந்த நிலநடுக்கத்தின் காரணமாக வீடுகளில் ஜன்னல்கள் உடைந்தன. ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.

பெரு தலைநகர் லிமாவிலிருந்து சுமார் 160 மைல் தொலைவிலுள்ள ஃபிஸ்கோ நகரம் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்நகரில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டதாக ராணுவ ஜெனரல் லூயிஸ் பெலோமினோ தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தையடுத்து பெரு தொலைக்காட்சியில் பேசிய அந்நாட்டு அதிபர் ஆலன் கேர்ஸியா, நிலநடுக்கம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிவாரணப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கத்தால் பெரு தலைநகர் லிமாவின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்ததாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. தொலைத்தொடர்பு மற்றும் மொபைல் போன் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பெருவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தையடுத்து, பெரு, சிலி ஈக்வெட்டார், கொலம்பியா, பனாமா, போஸ்டாரிகா, நிகரகுவா, கௌதமாலா, எல்சல்வடா, மெக்சிகோ, கோன்டரஸ் ஆகிய நாடுகளுக்கு பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. ஹவாய் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. எனினும், பின்னர் இந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. பெரு கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி அலைகள் ஏற்பட்டதாகவும், எனினும் சுனாமி அலைகள் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு பெரிய அளவில் ஏற்படவில்லை என்றும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. பெரு மற்றும் தென் அமெரிக்க கடற்பகுதியின் பெரும்பான்மையான பகுதிகள் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளன. இதனால், அப்பகுதிகளில் அவ்வப்போது சிறிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

Friday, August 17, 2007

கடற்புலித் தளபதி சூசையின் இடத்துக்கு புதியவர் நியமனம் வெளிச்சமாகியது உள் முரண்பாடு

புலிப்பயங்கரவாதிகளின் கடற்புலித் தளபதி சூசையின் இடத்துக்கு புதியவர் நியமனம்! வெளிச்சமாகியது உள்முரண்பாடு இவ்வாறு கூறுகின்றன ஊடகச் செய்திகள்

புலிகள் இயக்க கடற்புலிகளின் புதிய தளபதியாக காலார்த்தன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெடி விபத்தொன்றில் கடற்புலிகளின் தளபதி சூசை மிக மோசமாகக் காயமடைந்ததாகவும், அவரின் மகன் சங்கரன் என்பவர் இறந்ததாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.

புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் சூசை ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திட்டமிடப்பட்டு இவ்வாறு சூசை குண்டுத் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார் என்றும், சூசை படுகாயங்களுடன் நினைவிழந்த நிலையில் உள்ளதாகவும் சில இணையத்தளங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன.

புல்மோட்டை கடற்பரப்பில் சில தினங்களுக்கு முன்னர் கடற்படையிருக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலொன்றின் போது கடற்புலிகளின் மூன்றாம் நிலைத் தளபதி, இணைத் தளபதி மற்றும் உயர் நிலையிலுள்ள ஆறு பேர் பலியாகியிருந்தனர். இவர்களுக்கு நேற்று முன்தினம் முல்லைத்தீவில் புலிகள் நடத்திய அஞ்சலி நிகழ்விலேயே புலிகளின் புதிய கடற்புலித் தளபதியாக காலார்த்தன் என்பவர் கலந்து கொண்டதாய் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சூசைக்கும் புலிகளின் தலைவருக்குமிடையிலான பிரச்சினை வெளிப்படையாகியுள்ளதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் சூசை, புலிகளின் தலைவருடன் முரண்பட்டுக் கொண்டு அவரது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றமை யாவரும் அறிந்ததே. அதன் பிறகு ஏற்பட்ட சமரசங்களின் பின்னர் சூசை கிளிநொச்சி திரும்பியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் புலிகளின் பல முக்கிய தலைவர்கள் உள்முரண்பாடுகள் காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக புலிகளின் முன்னாள் பிரதித் தலைவர் மாத்தையா, புலிகளின் தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சில காலங்களுக்கு 1994)ல் கொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

Sunday, August 12, 2007

உலகமே கைவிட்ட மிக்-27




உலகமே கைவிட்ட மிக்-27 ரக வானூர்தி கொள்வனவில் கோத்தபாயவின் மில்லியன் டொலர் கொள்ளை: "சண்டே லீடர்"
[செவ்வாய்க்கிழமை, 7 ஓகஸ்ட் 2007, 14:56 ஈழம்] [பி.கெளரி]

உலக நாடுகளால் கைவிடப்பட்ட மிக்-27 ரக வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்ததில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச பெருந்தொகையான மில்லியன் டொலரை கொள்ளையடித்தது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஆய்வு அறிக்கையை கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏடு வெளியிட்டுள்ளது.

அதன் தமிழாக்கம்:

கடந்த வருடம் ஒவ்வொன்றும் 2.462 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 4 மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை பாதுகாப்பு அமைச்சு கொள்வனவு செய்திருந்தது.

எனினும் இந்த கொள்வனவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா மில்லியன் டொலர் பணத்தை ஊழல் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தனர். கொள்வனவு செய்யப்பட்ட இந்த வானூர்திகள் பல காலம் சந்தையில் விற்பனை செய்யப்படாது இருந்ததாகவும், அவற்றின் பாவனைக்காலம் முடிவடைந்து விட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா, கசகஸ்த்தான், சிறிலங்கா நாடுகளை தவிர உலகில் ஏனைய நாடுகள் மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை பயன்படுத்துவதில்லை எனவும் இது தொடர்பில் ஆய்வை மேற்கொண்ட ஐ.தே.கவின் தொழில்நுட்பக் குழு தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிறிலங்கா அரசின் சார்பில் 4 மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை கொள்வனவு செய்யவும், ஏற்கனவே உள்ள 4 மிக்-27 ரக வானூர்திகளை மறுசீரமைப்பு செய்யவும் உக்ரேய்ன் நிறுவனம் ஒன்றுடன் உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது.


இந்திய மிக் - 27 ரக வானூர்தி

தரைத் தாக்குதல் தேவைகளுக்கான தகுதிகளை மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி கொண்டிருப்பதாக அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஐ.தே.கவின் இந்த அறிக்கையானது தேசியத்தின் நன்மை கருதி

- தற்போதைய போர்ச்சூழலில் நாட்டின் அவசர படைத்துறை தேவைகளை ஆய்வு செய்தல்

- மிக்-27 வானூர்திக் கொள்வனவில் கடைப்பிடிக்கப்பட்ட முறைகேடுகள், பரிந்துரைகளை ஆய்வு செய்தல்

- சிறிலங்காவின் மக்களுக்கு தவறான தகவல்களை வழங்கி பாதுகாப்பு அமைச்சு போரை தவறாக நடத்துகின்றதா என்பதை ஆராய்தல்

ஆகியவற்றை ஆய்வு செய்தது.

"2006 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 4 மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளும் 1991 ஆம் ஆண்டில் இருந்து நீண்டகாலம் சந்தையில் இருந்தன. இயங்க முடியாது இருந்த அந்த வானூர்திகளை லெவிவ் ஸ்ரேற் வானூர்தி பழுது பார்க்கும் நிறுவனம் திருத்தியமைத்து சிறிலங்காவுக்கு விற்பனை செய்ததாக" 31.12.2006 ஆம் நாள் வெளிவந்த கட்டுரையில் சண்டே ரைம்ஸ் தெரிவித்திருந்தது.

2000 ஆம் ஆண்டு கூட இரு சந்தர்ப்பங்களில் இந்த வானூர்திகளை சிறிலங்கா வான்படையினர் நிராகரித்திருந்தனர்.

2000 ஆம் ஆண்டு மே 25 ஆம் நாள் சிறிலங்கா வான்படையினர் 4 மிக்-27 ரக வானூர்திகளை ஒவ்வொன்றும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிக்கு கொள்வனவு செய்திருந்தனர்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மேலும் இரு மிக்-27 தாக்குதல் வானூர்திகளை ஒவ்வொன்றும் 1.6 மில்லியன் டொலர் பெறுமதிக்கு கொள்வனவு செய்திருந்தனர்.

இந்த சந்தர்ப்பங்களின் போது நிராகரிக்கப்பட்ட அதே வானூர்திகளை 2006 ஆம் ஆண்டு ஒவ்வொன்றும் 2.462 மில்லியன் டொலர்கள் பெறுமதிக்கு சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.

2000 ஆண்டு மிக்-29 UB பயிற்சி வானூர்தி 900,000 டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு அதனை மறுசீரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது, 1.1 மில்லியன் டொலர்களுக்கு மறுசீரமைப்பு பணிக்கான உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது கொள்வனவு விலையை விட அதிகமாகும்.

எனவே தான்,

- ஏன் கடந்த காலத்தில் இருமுறை நிராகரிக்கப்பட்ட வானூர்திகளை வான்படை கொள்வனவு செய்துள்ளது.?

- ஏன் மிக்-29 UB பயிற்சி வானூர்தியின் மறுசீரமைப்பு செலவுகள் கொள்வனவு விலையை விட அதிகமாக உள்ளது.?

- 2000 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டவைகளை விட பழமையான வானூர்திகளுக்கு ஏன் 2006 ஆம் ஆண்டை விட அதிக விலை செலுத்தப்பட்டுள்ளது.?

போன்ற கேள்விகளை முன்வைத்து ஊழல் தடுப்புப்பிரிவு ஆணைக்குழுவிடம் மங்கள, சிறீபதி ஆகியோர் முறைப்பாடு செய்திருந்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் பொய்யான அறிக்கை

இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் மிக்-27 இன் உள்வீட்டுக் கதை என்னும் தகவல் மார்ச் 22 ஆம் நாள் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் அதில் அமைச்சர்களின் முதல் இரு கேள்விகளுக்கும் மௌனமே பதிலாக இருந்தது.

மேலும் அதில் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் பல பொய்யானவை.

"மிக்-27 வானூர்திகள் முன்னாள் சோவியத் நாடுகள், இந்தியா ஆகிய நாடுகளின் பிரதான வான் தாக்குதல் ஆயுதம்

மிக்-27 Flogger M வகை வானூர்திகள் தற்போதும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன"

அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவை நிலையான மற்றும் நகரும் இலக்குகளையும், கடினமான இலக்குகளையும் தாக்குவதே பிரதான நோக்கம் என்றும்

http://www.globalsecurity.org/military/world/russia/mig-27.htm,

http://www.airforce-technology.com/projects/mig27

ஆகிய இணையத்தளங்களின் தகவல்களை திரித்து வெளியிடப்பட்டிருந்தது.

அதாவது இந்தியா முன்னர் தயாரித்தது என்ற சொல் மாற்றப்பட்டு தற்போதும் தயாரித்து வருகின்றது என்ற சொல் புகுத்தப்பட்டுள்ளது.


சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்தி

ஆனால் இந்த வகை வானூர்திகளை சோவியத்து ஒன்றியமே தயாரித்து வந்தது. எனினும் அதன் உற்பத்தி 1980 களில் நிறுத்தப்பட்டு விட்டது. சோவியத்தின் அனுமதியுடன் "ஹிந்துஸ்தான்" வானூர்தி நிறுவனம் மிக்-27 ரக வானூர்திகளை தயாரித்து வந்தது. தற்போது அதுவும் உற்பத்தியை நிறுத்திவிட்டது.

எனவே உலகில் யாரும் தற்போது மிக்-27 ரக வானூர்திகளை உற்பத்தி செய்வதில்லை.

மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி தரைத் தாக்குதலுக்கு என வடிவமைக்கப்பட்டது. அதாவது மரபுவழி தாக்குதல்களுக்கு ஏற்றது.
ஆப்கானிஸ்த்தான் போரின் போது சோவியத் படைகள் அதனை பயன்படுத்தியிருந்தது. ஆனால் சோவியத் படைகளின் நடைவடிக்கையில் மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி செயற்திறனற்றது என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது ரசியாவின் வான்படை அதனை பின்னிணைப்பு வானூர்தியாகவே பயன்படுத்தி வருகின்றது.

2000 ஆம் ஆண்டில் உலகின் பல நாடுகள் மிக்-27 ரக போர் வானூர்திகளை சேவையில் இருந்து ஒதுக்கியுள்ளன.

இந்தியா, கசகஸ்தான், சிறிலங்கா ஆகிய நாடுகளே இதனை தற்போது பயன்படுத்துகின்றன. எனினும் இந்திய வான்படையிலும் இது நீண்டகாலம் நிலைக்கப்போவதில்லை.

தனது உள்ளுர் தயாரிப்புக்களை அறிமுகம் செய்ததும் இந்தியா மிக் 27 ரக வானூர்திகளை ஒதுக்கிவிடும்.

விடுதலைப் புலிகளினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுக்குழு தனது அறிக்கையை 2006 ஆம் ஆண்டு பெப்ரவரியில் வெளியிட்டிருந்தது.

அதன்படி 4 மேலதிக மிக்-27 ரக வானூர்திகளை கொள்வனவு செய்யும் படியும், தற்போது உள்ளவற்றை மறுசீரமைப்பு செய்யும் படியும் பரிந்துரை செய்தியப்பட்டிருந்தது.

தற்போதைய போரில் தரைத்தாக்குதலுக்கு என சிறப்பான தாக்குதல் வானூர்திகள் தேவை எனவும், அவை தாழ்வாக பறக்கக் கூடியவையாகவும், குறைந்த மற்றும் உயர் வேகங்களில் பறக்கக்கூடியனவாகவும் இருத்தல் வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

ஆனால் சிறிலங்கா ஆயுதப் படைகளின் படைவலு தகமைகளை ஆய்வு செய்ய உதவுமாறு ஐ.தே.க அரசு 2001-2004 காலப்பகுதியில் அமெரிக்க அரசை கேட்டிருந்தது.

அதன் போது அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மேலதிக மிக்-27 ரக வானூர்திகளை கொள்வனவு செய்வதை நிறுத்தும் படியும், அது வான்படையின் வளங்களை வீணடித்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தற்போது உள்ள வானூர்திகளை நவீனமயப்படுத்தும் படியும் குறிப்பாக கிபீர் ரக வானூர்திகளின் ஆயுத மற்றும் பராமரிப்பு பணிகளை மேம்படுத்தும் படியும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

மேலும் இரவு பறப்புக்களை மேம்படுத்துதல், வழிகாட்டிகள் மூலம் இயங்கும் குண்டுகளை பொருத்துதல் போன்ற ஆலோசனைகளும் வழங்கியிருந்தன.

எனவே இந்த பரிந்துரைகளை மீறி ஏன் மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகள் கொள்வனவு செய்யப்பட்டது என்பதற்கு பாதுகாப்பு அமைச்சு பதிலளிக்கவில்லை.

கிபீர் ரக வானூர்தி ஒரு பல்நோக்கு தாக்குதல் வானூர்தி. அது வானில் இருந்து தரைக்கு பாயும் ஏவுகணைகள், கிளஸ்ரர் குண்டுகள், வழிகாட்டிகள் மூலம் இயங்கும் குண்டுகள் என்பவற்றை கொண்டுள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்களுக்கு அது சிறப்பானது.

2006 ஆம் ஆண்டு மிக்-27 ரக வானூர்திகளை கொள்வனவு செய்த போது

வான்படையிடம் 11 கிபீர்,

4 மிக்-27,

1 எஃப்-7 ஆகியன இருந்தன.

பாதுகாப்பு அமைச்சின் தொழில்நுட்ப ஆய்வுக்குழுவில்

ஏயர் மார்சல் றொசான் குணதிலக்க (தலைவர்)

எயர் கொமோடர் ஈ.ஜி.ஜே.பி. டி சில்வா (வானூர்தி பொறியியலாளர்)

கலாநிதி டி.பி.ரி. நாணயக்கார (சிரேஸ்ட்ட விரிவுரையாளர், மொறட்டுவ பல்கலைக்கழகம்)

எச்.டி.வீரசிறீ ( பாதுகாப்பு அமைச்சு கணக்காளர்)

வி.ஜே. பிரேமரத்தின (பொது வானூர்தி சேவை அதிகாரி)

கே.டி.ஆர். ஒல்கா (தேசிய வரவுசெலவுத் திட்ட கணக்காளர்)

ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் யாரும் தாக்குதல் வானூர்திகளின் வானோடிகள் அல்ல. ஒருவர் மட்டுமே உலங்குவானூர்தி ஓட்டுபவர் ஆவார்.

4 பொதுமக்களின் பிரதிநிதிகளுக்கும் வான்படையின் தேவைகள் பற்றிய அறிவு இல்லை.

மூன்றாம் தலைமுறை வானூர்தி கொள்வனவு செய்த ஒரே நாடு

மிக்-29, மிக்-35 ரக வானூர்திகள் பல்நோக்கு தாக்குதல் வலிமை கொண்டவையாக இருந்த போதும் அவை விலை கூடியவை. அதன் தொழில்நுட்பங்கள் தற்போதைய போருக்கு உகந்தது அல்ல.

எனினும் 21 ஆம் நூற்றாண்டில் மிக்-27 ரக வானூர்திகளை கொள்முதல் செய்த ஒரே வான்படை சிறிலங்கா வான்படையாகவே இருக்க முடியும்.

2000 ஆம் ஆண்டு வான்படை 12 கிபீர் வானூர்திகளை வாங்கத் திட்டமிட்டது. எனினும் அவற்றை விநியோகிப்பதில் ஏற்பட்ட கால தாமதம், யாழ். குடாநாட்டில் எழுந்த நெருக்கடிகள் என்பன மிக்-27 ரக வானூர்திகளை கொள்வனவு செய்யும் நிலையை ஏற்படுத்தியிருந்தது.


சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்தி

மிக்-27 ரக வானூர்தி முன்றாவது தலைமுறை வானூர்தியாகும். தற்போது ஐந்தாவது தலைமுறை வானூர்திகளும் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன.

மூன்றாவது தலைமுறை வானூர்திகள் உலக வான்படைகளின் கோப்புக்களில் இருந்து பெரும்பாலும் நீக்கப்பட்டு விட்டன.

இரண்டாம் பாவனை வானூர்திகளுக்கும் உலகில் பெறுமதியில்லை. உக்கிரேய்ன் தன்வசம் உள்ள அவற்றை விற்பனை செய்ய முடியாது விட்டால் அழிப்பது தான் அதற்கு ஒரே வழியாக இருந்திருக்கும்.

ஒரு வானூர்தியின் பாவனைக்காலம் இயந்திரம், இயக்கக்கட்டுப்பாட்டுத் தொகுதி, அதன் கட்டமைப்பு தொகுதி ஆகியவற்றை கொண்டு கணிக்கப்படுவது வழமை.

மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளின் மொத்த வாழ்வுக்காலம் 25 வருடங்களாகும். அதன் பின்னர் அது இறந்தது அல்லது பயனற்றதாகி விடும்.

இந்த வாழ்வுக் காலத்தின் மேலதிக நீடிப்புக்காலம் 30 வருடங்களே ஆகும். இந்த நீடிப்புக்காலம் 25 வருடங்களுக்கு முன்னர் பொறியியலாளர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

"இறந்து" போன வானூர்திகளும் கோத்தபாயவின் ஊழலும்

2000 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் கொள்வனவு செய்யப்பட்ட மிக்-27 வானூர்திகளின் விபரங்கள் வருமாறு:

Aircraft
Serial Nos.

Year of
Manufacture

Age at time
of Purchase (Yrs)

Year of
Purchase
3712531385

1982

18

2000
83712534657

1983

17

2000
83712534709

1983

17

2000
8371253877

1984

16

2000
83712520013

1981

19

2000
83712545237

1984

16

2000
MIG 23 trainer






SN 49065315

1984

16

2000

Aircraft
Serial Nos.

Year of
Manufacture

Age at time
of Purchase (Yrs)

Year of
Purchase
93712534688

1983

23

2006
83712518044

1981

25

2006
83712518022

1980

26

2000
83712518009

1980

26

2000

இந்த வானூர்திகள் 25 வருடங்கள் பழமையானவை. எனவே நாம் அவற்றை அதன் வாழ்வுக்காலம் முடிந்த பின்னரே கொள்வனவு செய்துள்ளோம்.

அதன் வாழ்தகவு நீடிப்பை பொறியியலாளர்களின் மேற்பார்வையில் மேற்கொண்டதற்கான எந்த ஒரு தரவுகளும் ஆவணங்களில் இல்லை.

2006 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டவற்றில் இரு வானூர்திகள் செயலற்ற நிலையில் தரையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதன் கொள்முதல் உறுதி காலத்திலும் அவைகள் சேவையில் ஈடுபட முடியாதவையாக இருந்தன. எனவே அரசு 10.078 மில்லியன் டொலர்களை இறந்த வானூர்திகளுக்கு செலவிட்டுள்ளது.

பூச்சியம் பெறுமதியான இந்த வானூர்திகள் பழைய இரும்புக்கே உகந்தவை.

உக்ரேய்ன் நாடு மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை தயாரிப்பது இல்லை. அதனை ரசியாவின் நிறுவனமே தயாரித்து வருகின்றது.

1991 ஆம் ஆண்டு சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உக்ரேய்ன் நாடளுமன்ற திட்டத்தின் படி பெருமளவான வானூர்திகள் உக்ரேய்னுக்கு கொண்டு வரப்பட்டன.

எனினும் உக்ரேய்ன் வான்படையில் அவை சேர்க்கப்படவில்லை. அவை பயனற்றவையாக கொள்ளப்பட்டதுடன் அவர்கள் மிக்-29 ரக வகை வானூர்திகளையே பயன்படுத்தி வந்தனர்.

மேலும் தன்னிடம் அதிகளவில் இருந்த மிக்-27 வானூர்திகளை காலத்திற்கு காலம் உக்ரேய்ன் அழித்து வந்ததுடன் ஏனைய நாடுகளுக்கு விற்பனையும் செய்யப்பட்டது.

அரசுகளுக்கு இடையிலான கொள்வனவுகளில் பணமானது அரசின் வங்கிக் கணக்குகளில் அல்லது அரச நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தப்படுவது வழமை.

ஆனால் மிக்-27 ரக வானூர்திகளை கொள்வனவு செய்த பணத்தை உக்ரேய்ன் நாட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவில்லை. அது பிரித்தானியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

உக்ரேய்ன் நிறுவனத்தின் பிரதிநிதியாக பிரித்தானியா நிறுவனத்தின் பேரில் மிக்-27 ரக வானூர்திகளின் கொள்வனவுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் அதற்கான பணமானது உக்ரேய்ன் நிறுவனம் சார்பாகவே செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த ஊழலை மறைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்ட வகையில் பொய் சொல்லி மக்களை ஏமாற்றியுள்ளது. பிரித்தானியாவின் நிறுவனம் அங்கு பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அல்ல.

அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள், முதலீடுகள், கணக்குகள் எல்லாம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த உடன்படிக்கையின் பிரதான சூத்திரதாரியான கோத்தபாயா ராஜபக்சவுக்கும் உக்ரேய்னுக்கான சிறிலங்காவின் தூதுவரான உதயங்க வீரதுங்கவிற்கும் இடையில் நெருக்கமான உறவுகளும் உள்ளது.

உக்ரேய்னில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக திட்டமிட்ட வகையில் அவர் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்.

எனவே சிறிலங்கா அரசு பாவனைக்காலம் முடிவடைந்த மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை கொள்முதல் செய்ததனால் 10.078 மில்லியன் டொலர்களை இழந்துள்ளது. சிறிலங்கா வான்படை வானோடிகளின் உயிர்களையும் ஏனையோரின் உயிர்களையும் புறக்கணித்து பாதுகாப்பு அமைச்சு போரை அழிவுப்பாதையில் இட்டுச் சென்றுள்ளது பெரும் குற்றமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, August 11, 2007

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளி

நான்கு நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளி
[11 - August - 2007] [Font Size - A - A - A]
-எம்.எம்.ஏ. முஹியித்தீன்-

சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் கி.பி. 1600 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களின் முதல் குடியேற்றம் அக்கரைப்பற்றில் நிகழ்ந்துள்ளது. குடியேற்றம் நடைபெற்ற உடனேயே அம்மக்கள் தங்களது வணக்க வழிபாடுகளுக்காக கம்புகளையும், கிடுகுகளையும் கொண்டு ஒரு பள்ளியை தமது வசிப்பிடங்களுக்கு மத்தியில் அமைத்தார்கள் அதுவே இன்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகின்றது.

குடியேற்றம் நடந்ததிலிருந்து சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக இப்பள்ளிவாசல் ஒன்றே இவ்வூர் முஸ்லிம் மக்களின் வணக்க வழிபாடுகளுக்கும் சமூக நடவடிக்கைகளுக்குமான மத்திய நிலையமாக இருந்து வந்துள்ளது. இவ்வூர் முஸ்லிம் மக்களின் சமய, சமூக, தொழில் மற்றும் வாழ்வியல் சம்பந்தமான அனைத்து விவகாரங்களும் இப்பள்ளிவாசல் நிர்வாகத்தின் தீர்மானங்களுக்கமையவே மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக மக்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்றுமை இறைபக்தி என்பன மிகவும மேலோங்கிக் காணப்பட்டன.

இப்பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பெரியார் சங்கைக்குரிய செய்னுலாப்தீன் பலியுல்லாஹ் (ஃபீஸபஃபீல் அவ்லியா) அவர்களது மகத்துவமும், கறாமத்துகளும் இவ்வூர் மக்களிடையேயும். இவ்வூரைச் சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களிலுள்ள மக்களிடையேயும் நீண்ட காலமாக பெரிதும் மதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலஞ் செல்லச்செல்ல ஊரின் குடிப்பரம்பல் அதிகரித்து கொண்டு சென்றது. மக்கள் குடியிருப்புகளின் எல்லைகள் விஸ்தரித்துக் கொண்டு சென்றன. விஸ்தரிப்பின் கடைசி எல்லையிலிருந்து மக்களின் நாளாந்த வணக்க வழிபாட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இப்பள்ளிவாசல் தொலைப்பட்டுப் போய்விட்டது என்று உணரப்பட்டபோது, கணிசமான கால இடைவெளிகளில் மேலும் இரு பள்ளிவாசல்கள் கருத்தொற்றுமையின் அடிப்படையில் அமைக்கப்பட்டன. என்றாலும் வாராந்த ஒன்றுகூடலுக்காக ஜும்ஆ தொழுகை மிகமிக நீண்ட காலமாக இப்பள்ளிவாசலில் மட்டுமே நடைபெற்று வந்துள்ளது. கிராமத்தின் தொன்மையான பள்ளிவாசல் ஒன்றுக்கு அக்கிராமத்தில் வதியும், ஒழுக்க விழுமியங்களிலும் இறை பக்தியிலும் சிறந்து விளங்கிய கண்ணியமிக்க மக்கள் கூட்டத்தினரால் வழங்கப்பட்ட தனித்துவம் நிரம்பிய கௌரவமாக இது கருதப்பட்டது.

ஊர் மக்களிடையே ஏற்படும் முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் சமரசமாகவும் சமாதானமாகவும் தீர்த்துவைக்கக்கூடிய ஊர்ப்பெரியார்கள் அங்கம் வகிக்கும் நீதிச்சபைகள் பள்ளிவாசல் நிர்வாக கட்டமைப்பின் ஓர் அங்கமாக மிக நீண்ட காலம் தொட்டே இருந்து வருகின்றன.

இப்பிரதேசத்திலுள்ள நீதிமன்றங்களினால் தீர்த்து வைக்கப்பட முடியாத பல நூறு கொடுக்கல் வாங்கல் வழக்குகள் சத்தியம் கேட்பதற்காக இப்பள்ளிவாசலுக்கு அனுப்பப்படுவதும், அவை சத்தியம் கேட்காமலேயே சமரசமாகத் தீர்த்து வைக்கப்படுவதும் இன்றுவரையும் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிகழ்வுகளாகும்.

இப்பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் மார்க்க சம்பந்தமான அனைத்து விவகாரங்களிலும் இவ்வூரில் செயற்படும் ஜம்இய்யத்துல் உலமா சபை பள்ளிவாயலுடன் இணைந்து செயற்படுவது ஒரு சிறப்பான அம்சமாகும். எந்த ஒரு விவகாரத்திலாயினும் உலமா சபையும் பள்ளிவாசல் நிர்வாகமும் முரண்பட்ட வரலாறு கிடையாது.

இதற்கு ஓர் உதாரணமாக கடந்த 50 வருடங்களாக ஸஹீஹுல் புஹாரி மஜ்லிஸை அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபையே பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக நடாத்தி வருவதைக் குறிப்பிடலாம். இப்பிரதேசம் சம்பந்தப்பட்ட பல்வேறு அரசியல் நிலைவரங்களிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் மத்திய கேந்திரமாக இப்பள்ளிவாசல் வளாகம் செயலாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வூரில் வாழும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடையே இன ஐக்கியமும் சகஜ நிலையும் பேணக்கூடிய சூழ்நிலைகளைப் பேணிப்பாதுகாத்து வருவதில் இப்பள்ளிவாசல் நிர்வாகம் என்றுமே தன்னை அர்ப்பணித்து வந்துள்ளது. இங்கு முஸ்லிம் மக்கள் குடியேறிய அதே காலப்பகுதியிலேயே தமிழ் மக்களும் இங்கு குடியேறினார்கள் என்பதும், இப்பள்ளிவாசல் கட்டுவதற்கும் தமிழ் மக்களின் சித்தி விநாயகர் ஆலயத்தை கட்டுவதற்குமான வேலை ஒரே நாளிலேயே ஆரம்பிக்கப்பட்டது என்பதும், தமிழ் மக்களின் விழாக்களில் முஸ்லிம் மக்களும் பள்ளிவாசல் கந்தூரி வைபவங்களில் தமிழ் மக்களும் நேசபாவத்துடன் கலந்து சிறப்பித்தார்கள் என்பதும், பள்ளிவாசலில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள `தம்பிக்கண்டுவின் புத்தகம்' என்னும் வரலாற்று ஏட்டின் மூலமாகத் தெரியவரும் செய்திகளாகும். இன்றும் கூட இப்பள்ளிவாசல் நிர்வாகம் முஸ்லிம்- தமிழ் மக்களிடையே நல்லுறவு நிலவக்கூடிய ஆக்கபூர்வமான நட வடிக்கைகளில் அயராது ஈடுபட்டு வருகின்றது என்பதைத் துணிந்து கூறமுடியும்.

சாமான்ய மனிதன் இவ்வுலகில் எவ்வளவுதான் சீரும் சிறப்பும் பெற்றாலும், செல்வ வளத்தை அடைந்தாலும், அவனைப் படைத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தித் தனது அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதற்கான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஒரு வழிபாட்டுத்தலம் அவசியமாகின்றது. அன்றாட வாழ்க்கையின் அவலங்களுக்கும், அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்து, அவதிக்குள்ளான மனிதன் சற்று நேரம் ஆறுதல் பெற்று, மன ஓர்மையுடன், கூடிய இறை வணக்கத்தில் ஒன்றிப் போவதற்கு, அமைதியும், கம்பீர்யமும், பாரம்பரியத்தொன்மைச் சிறப்பும் மிக்க ஒரு பள்ளிவாசலாக அது அமையவும் வேண்டும்.

அந்த வகையில் மிகமிக விசாலமான அமைதி மிக்க ஒரு நிலப்பரப்பிலும், ஓங்கி உயர்ந்த தென்னை மரங்களாற் சூழப்பட்ட நிழற்பரப்பிலும், அமைந்து தொன்மைச் சிறப்புடன் கம்பீரமாகக் காட்சிதரும். அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கடந்த பல நூறு வருடங்களாக இவ்வூரின் ஆத்மீகத் தலைமையகமாகத் திகழ்ந்து வருவதுடன் இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் எண்ணிறைந்த காலங்களுக்கும் இவ்வாறே திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரியப் பிரார்த்திப்போம்.