Tuesday, June 21, 2011

இலங்கை அரசை கலங்க வைத்துள்ள சனல்- 4 வீடியோ

எங்கும் சனல்4 என்பதே பேச்சு இலங்கையின் மானம் காற்றிலே போச்சு. தெருவிலே கேட்ட பாடல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திரும்பவும் பிறந்து வந்துவிட்டாரோ என்ற கேள்வியுடன் தெருவை எட்டிப் பார்த்த போது ஒருவர் இந்தப் பாட்டை ராகம், தாளம் பிசகாமல் பாடிக் கொண்டு வந்தார்.



சற்று வயது முதிர்ந்த அவரின் நடையில் தெரிந்த மெல்லிய தள்ளாட்டம் அவருள் காய் பிரட்டிக் கள்ளு வேலை செய்வதாக ஒரு ஊகத்தை ஏற்படுத்தியது.அவர் கிட்ட வந்ததும் "ஐயா நானும் நீங்களும் கூட இலங்கையர் தானே. எங்கடை மானம் ஏன் போகப் போகுது?'' எனக் கேட்டேன். அவர் பாட்டை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார்.நான் "இப்படிப் பாடினால் நல்லாய் இருக்கும்'' என்று விட்டு "எவரும் சனல் 4 என்பதே பேச்சு, அரச மானம் காற்றிலே போச்சு'' என்று பாடுங்கோ என்றேன்.

"அடியடா சங்கை! நீதான் பாட்டுக்காரன்'' என்று விட்டு நான் கூறியதையே பாடிக்கொண்டு போக ஆரம்பித்தார். அந்த முதியவர் முதலில் பாடிய வரிகளைக் குறைகூறிவிடவும் முடியாது. ஏனெனில் இலங்கையின் ஆட்சியாளர்களாலும், படையினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாகவோ, மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவோ குற்றச்சாட்டுக்கள் எழும் போது அவை இலங்கையின் இறைமைக்கும் நற்பெயருக்கும் எதிராகத் தொடுக்கப்படும் கணைகள் என்றொரு மாயை அரச தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளதுஆனால் குற்றமிழைத்ததாகக் கருதப்படுவது சில அதிகார வெறிபிடித்த தனி நபர்களேயொழிய இலங்கை நாடோ அல்லது இலங்கை மக்களோ அல்ல.

அதைச் சிங்கள மக்கள் புரிந்துகொள்ளும் நாள்கள் வெகுதொலைவில் இல்லை என்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன. ஏனெனில் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்கு முறைகளும் உயிர்ப்பலிகளும் இப்போ மெல்ல மெல்ல சிங்கள மக்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறன.எனினும் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலரும் தங்களுக்கு எதிராக நீட்டப்படும் குற்றச்சாட்டுகளை முழுநாட்டின் மீதும் சுமத்தப்படுவதாக ஒரு மாயையை ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். அப்பணியைப் பல அமைச்சர்களும் அரச சார்பு ஊடகங்களும் அட்சரம் பிசகாமலே தொடர்ந்து வருகின்றன.

எப்படியிருந்த போதிலும் சனல் 4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் என்ற இந்த வீடியோ நாடா உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி ஏற்கனவே இலங்கை அரசு தொடர்பாகக் கண்டனங்களை வெளியிட்டு வந்த மனித உரிமை அமைப்புக்களை மேலும் கோபாவேசமடைய வைத்திருக்கிறது.
இந்தப் படக்காட்சி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் மாநாட்டில் காட்டப்பட்ட போது பல பிரதிநிதிகள் கண்ணீர் விட்டனர். சிலர் காட்சிகள் சிலவற்றைப் பார்க்க முடியாது கண்களை மூடிவிட்டனர்.

காட்சி முடிந்த பின்பும் பலர் திகைத்துப் போய் எதுவும் செய்ய முடியாது உறைந்து போயிருந்ததாகக் கூடக் கூறப்படுகிறது.இதுவரை இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் வெறும் குற்றச்சாட்டுக்களாகவும் அரசின் நிராகரிப்புகளாகவுமே விளங்கி வந்தன. ஆனால் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையோ அப்பிரச்சினையை இன்னொரு கட்டத்துக்கு உயர்த்திவிட்டது.

எவ்வளவுதான் இலங்கை அரசு அதற்குத் தனது எதிர்ப்பைக் காட்டியபோதும் அதை நிராகரிப்பதாகச் சவால் விட்டபோதிலும் உலக அளவில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுக்கள், ஆலோசனைகள் இலங்கை அரசினால் கூடப் புறமொதுக்க முடியாத வகையில் வலிமையாக இருந்தன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் போன்ற பல நாடுகள் உடனடியாகச் சர்வதேசத் தரம் கொண்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்த ஆரம்பித்தன. இந்த விடயத்தில் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கூட இலங்கையை ஐ.நா நிபுணர் குழுவுக்கு எதிரான குரல்களை அடக்கி வாசிக்கும் படி எச்சரித்துள்ளன. இலங்கை அரசு அந்த அறிக் கையைத் தாம் நிராகரித்துவிட்டதாகக் கூறியபோதும் ஐ.நா செயலர் பான் கீ மூன் தாம் இந்த அறிக்கை தொடர்பாக இலங்கையின் பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் அதன் பின்பே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ளமையும் இலங்கை அரசைத் திக்குமுக்காட வைத்துள்ளது. இப்படியான நிலையில்தான் இலங்கையின் கொலைக்களம் என்ற சனல்4 வெளியிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த 14 ஆம் நாளன்று அது பகிரங்கமாகவே ஒளிபரப்பப்பட்ட போது உலகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாற்புறமும் சர்வதேச அளவிலான கண்டனங்கள் எழுந்தன.குறிப்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கம்ரூன் இவை தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அதேவேளையில் பிரிட்டன் வெளி விவகார அமைச்சர் அந்த விடயங்கள் தொடர்பாக நேர்மையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இலங்கை அரசோ நாம் இது தொடர்பாகப் பரிசீலனை செய்ததாகவும் அவை போலியானவை எனவும் கூறி நிராகரித்துவிட்டது. ஆனால் சனல் 4 நிகழ்ச்சித் தயாரிப்பாளரோ இதில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு காட்சியையும் ஆறு நிபுணர்கள் மூலம் பரிசோதித்து அவை அத்தனையும் உண்மையானவை எனக் கண்டறிந்ததாகவும் அடித்துக் கூறியுள்ளார்.

இது இலங்கை அரசின் மறுப்புரைகளுக்கு ஆப்பு வைக்கும் வகையிலேயே வலிமையானதாகத் தெரிகிறது. அதேவேளையில் வெளிவிவகார அமைச்சு இதில் காணப்படுபவை உண்மையானால் அது தொடர்பாக இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை செய்யும் எனத் தெரிவித்துள்ளது.எப்படியிருந்த போதிலும் சனல் 4 இலங்கை அரசை ஒரு சர்வதேச நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்பது உண்மை. ஆனால் இலங்கை அரசு உள்ளூரில் நாட்டின் இறைமை, அந்நிய சக்திகளின் சதி போன்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு சிங்கள மக் ளைத் தன் பால் வைத்திருக்கும் அதேவேளையில் ராஜதந்திர ரீதியில் சர்வதேச அழுத்தங்களைத் தவிர்க்கச் சகல முயற்சிகளையும் மேற்கொள்ளும்.தன் பின்னால் இலங்கை மக்கள் அனைவரும் நிற்கிறார்கள் என்பதைச் சர்வதேசத்துக்குக் காட்ட ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையையோ, சனல் 4 வீடியோவையோ தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் எதிர்க்கின்றனர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

விமல் வீரவன்சவும், ஜாதிக ஹெல உறுமயவும் சில அமைச்சர்களும் அரசின் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் சிங்கள மக்கள் மறுக்கிறார்கள் எனவும் அரசுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் எனவும் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த என்ன விலையைக் கொடுக்கவும் தயாராயுள்ளனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமோ சனல் 4 நிறுவனம் மேல் வழக்குத் தொடரப்போவதாகக் கூறித் தன் விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏனைய அரசுடன் இணைந்துள்ள முஸ்லிம் தலைவர்களும் இந்த விடயத்தில் அரசு சார்பாகச் செயற்படுவார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ, பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனோ ஐ.நா நிபுணர் குழுவுக்கு எதிராகவோ, சனல்4 இற்கு எதிராகவோ ஆயிரம் தரம் அறிக்கை விடவும் தயார்.

இன்று இலங்கை மக்கள் அனைவரும் ஐ.நா நிபு ணர்குழு அறிக்கையையும் சனல் 4 வீடியோவையும் எதிர்க்கிறார்கள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தத் தடையாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே. எலும்புத் துண்டுகளை எறிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விலைக்கு வாங்கிவிட முடியாது என்பதையும் அரசு தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறது.

எனவே அடுத்த கட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அடக்கி வைப்பது. அதன் ஆரம்பம் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது இராணுவச் சீருடை அணிந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள். ஏற்கனவே சிவஞானம் ஸ்ரீதரன் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியும், சரவணபவனுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலும் இங்கு கவனிக்கத்தக்கவை. தேர்தல் பிரசாரங்களைத் தடுப்பது, சாதாரண நடமாட்டங்களுக்கு அச்சுறுத்தல் விடுவது, பொதுமக்களை மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளும் தொடரலாம்.

இப்போது அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தேர்தல் நோக்கத்துடன் மட்டுப்படுத்தப்படக் கூடியதல்ல. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தமிழ் மக்களின் குரலை அடக்கி, அரசின் ஏவலாளர்களின் குரலை தமிழ் மக்களின் குரலாகக் காட்டக்கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்தும் ஒரு நீண்ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பிரதியாகும். எனவே இந்த விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் மிகமிக விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.